மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-23

23 நித்யா கொலை வெறியுடன் இருந்தாள்.. அவள் பெண் கேட்டுப் போக வேண்டுமாம்.. யாருக்கு.. ? அவளை மதிக்காத திமிர் பிடித்த ஆத்மாவிற்கு... ம...


23

நித்யா கொலை வெறியுடன் இருந்தாள்.. அவள் பெண் கேட்டுப் போக வேண்டுமாம்.. யாருக்கு..? அவளை மதிக்காத திமிர் பிடித்த ஆத்மாவிற்கு...
முடியாது என்றுதான் அவள் சொன்னாள்.. ஆனால்.. எதிலும் எளிதாக வெற்றிக் கொடியை நாட்டுகிறவளால் இந்த ஒன்றில் மட்டும் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது...
'இந்த ஆளுக்குள்ள இம்புட்டு வீரம் இருக்கா..?'
அவள் திகைத்திருந்தாள்.. என்றுமே அவள் பேசினால் எதிர் பேச்சுப் பேசாத சீத்தாராம்.. தம்பி விசயத்தில் மட்டும் ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்து விட்டான்...
"ஏய்ய்.. கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்ன என் தம்பி மனசு மாறி கல்யாணம் பண்ணிக்கப் போறான்.. மகளே.. இதில மட்டும் விளையாட நினைச்ச.. நான் மனுசனாவே இருக்க மாட்டேன்.. மரியாதையா குடும்பத்தோட கிளம்பி வந்து மூத்தமருமகளா லட்சணமா சபையில முன்னால நிக்கற.. இல்லைன்னா வெட்டிப் பொலி போட்டிருவேன்.. பாத்துக்க.. குடும்பம் அமைதியா இருக்கனும்னு அடங்கிப் போனா.. நீ எந்தம்பி கல்யாணத்தையே தள்ளி வைப்பியா..?"
'எவ்வளவு தைரியம்...'
கொதித்துப் போன நித்யா உடனடியாக அவளின் பிறந்த வீட்டிற்குப் போனைப் போட்டு படை திரட்டிக் கொண்டு வரும்படி சொன்னாள்.. அவர்களோ இந்த யுத்தத்தை செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள்..
"பாரும்மா.. உங்கொழுந்தன் கல்யாணத்தில.. உன்னை முன்னால வைக்கலன்னா நான் வந்து ஏன்னு கேக்கலாம்.. இங்க அப்படியில்லையே.. உன்னைத்தானே உன் புருசன் முன்னால தள்ளறாரு..."
"அப்பா.. அவனுக்கும் எனக்கும் ஆகாது..."
"அதெல்லாம் குடும்பத்துக்குள்ள நடக்கிற விசயம்.. அதுக்காக கல்யாணத்தை நீ தள்ளி வைச்சா ஊரு உலகத்தில எங்களைப் பத்தி என்ன பேசுவாங்க..?"
"என்ன பேசுவாங்க..?"
"நானு பொண்ண வளர்த்த லட்சணம் சரியில்லன்னு பேசுவாங்க.."
நித்யாவின் தந்தை பட்டுக் கத்தரித்து விட.. எந்தப் பக்கம் போனாலும் கதவு மூடியதில் நித்யா கொதிகலனாக ஆகிப் போனாள்.. இருந்திருந்து அவளை மதிக்காதவனுக்காக அவள் பெண் கேட்டுப் போவதா..?
மனதில் வன்மத்துடன் கிளம்பிய நித்யாவின் மூளையில் மின்னலடித்தது..
'இது காதல் கல்யாணம்..!'
இதை எப்படி அவள் மறந்து போனாள்.. ஆத்மாவின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை குரூரத்துடன் பார்த்தாள் அவள்.. அந்த சந்தோசத்தை அழிப்பதற்கான துருப்புச்சீட்டு அவள் மனதில் தோன்றிவிட்டது...
சாருலதாவின் அழகையும்.. படிப்பையும்.. அந்தஸ்தையும் பார்க்கப் பார்க்க நித்யாவின் வயிறு எரிந்தது.. சாருலதா மட்டும் ஆத்மாவின் மனைவியாக சங்கரன் வீட்டில் நுழைந்து விட்டால் நித்யாவின் அதிகாரம் சரிந்துவிடும் என்பதை திட்டவட்டமாக உணர்ந்தாள் நித்யா...
'எஸ்.பி.யோட மகளா..? எம்.சி.ஏ. படிச்சிருக்காளா..?'
நித்யாவின் அப்பா.. கமிசன் மண்டி வைத்திருந்தார்.. நித்யா வெறும் பிளஸ் டூவோடு படிப்பை நிறுத்தியிருந்தாள்.. அவர்கள் வீட்டில் பெண்களை அதிகமாக படிக்க வைக்க மாட்டார்கள் என்று நித்யாவின் அப்பா பெருமை பேசினாலும்... உண்மை அதுவாக இல்லாமல் நித்யாவின் மண்டையில் படிப்பு ஏறாது என்பதில் இருந்தது.. அவள் பிளஸ் டூவரை சேலையின் முனையில் இருக்கும் பார்டரின் அளவில் மதிப்பெண்களை வாங்கிக் கடலைக் கடந்தவள்.. கல்லூரி வாசலை மிதிக்க அவள் தயாராக இல்லை...
'சம்பாதிக்க வேறு செய்யறாளே...'
அந்தச் சம்பளமும் அதிக அளவில் இருந்ததை நித்யாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. ஒற்றை மருமகளாக புகுந்த வீட்டில் இருந்தவர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருப்பவளை... சின்னமருமகள் வந்து மூலையில் உட்கார வைத்து விடுவதை அனுமதிக்க அவள் தயாராக இல்லை...
சக்திவேலின் முகத்தில் திருப்தி நிலவியது.. அவர் திருமண ஏற்பாடுகளைப் பற்றி சங்கரனிடம் பேச ஆரம்பித்தார்.. சாருலதாவை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.. நித்யா எழுந்து கொண்டாள்.. நிமிர்ந்து பார்த்த கணவனிடம்..
"பாத்ரூமுக்கு போயிட்டு வரேன்.." என்று ரகசியமாக சொன்னாள்..
அதை வேண்டாமென்று எப்படி அவன் சொல்லுவான்..? நித்யா பாத்ரூம் பக்கமாக போகாமல் சாருலதா இருந்த அறைக்குள் போனாள்.. சாருலதா மரியாதையுடன் சிரித்தாள்.. கூட இருந்த சொர்ணலதா புஷ்பவள்ளி அழைத்ததும் ஏனென்று கேட்கப் போய் விட்டாள்.. தனித்து விடப் பட்ட சாருலதாவைப் பார்த்தாள் நித்யா..
"உன்னிடம் பேசனும்..."
"பேசுங்க.." வியப்புடன் சொன்னாள் சாருலதா...
திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவளுடன் நித்யா எதைப் பேச விரும்புகிறாள்...?
"ஆத்மாவை நீ காதலிக்கிறயா..?"
இது என்ன அபத்தம் என்று சாருலதாவிற்கு தோன்றியது...
இதுகூடத் தெரியாமலா இவள் பெண் பார்க்க வந்திருப்பாள்..?
'பார்த்தா அப்படித் தெரியலையே...' சிந்தனை ஓட சாருலதா தலையை ஆமாம் என்ற பாவனையில் மேலும் கீழுமாக அசைத்தாள்...
"அவரும் உன்னைக் காதலிக்கிறாரா..?"
கோபமே வராத சாருலதாவிற்கே கோபம் வந்து விட்டது.. இவள் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாளா...?
"யெஸ்..."
"ஆச்சரியமாயிருக்கே..."
"இதில ஆச்சரியப்பட என்ன இருக்கு..?"
"அவர் ஏன் கல்யாணம் வேணாம்ன்னு இருந்தார்ன்னு உனக்குத் தெரியுமா..?"
உன்னால்தான் என்று சொல்லத் தோன்றியது சாருலதாவிற்கு.. இருந்தாலும் எதிர்காலத்தில் இவளுடன் தான் ஒரே குடும்பத்தில் குப்பை கொட்டியாக வேண்டும் என்ற நினைவில் அதைச் சொல்லாமல் மற்றதைச் சொன்னாள்...
"அவர் படிக்கறப்ப இவரோட பிரண்டைக் காதலிச்ச பொண்ணு அவரை ஏமாத்திட்டுப் போயிட்டாளாம்.. அதனால இவருக்கு பொண்ணுகன்னா ஆகாதாம்.."
"என்னது...? இவரோட பிரண்டைக் காதலித்தவளா..? உனக்கு விசயமே தெரியாதா..?" எகத்தாளமாக நித்யா கேட்ட விதம் சரியாக இல்லையென்று சாருலதாவின் உள்மனது சொல்லியது..
"என்னது..?"
"காதலிச்சுட்டு கை கழுவி ஓடினது இவரோட காதலி.. இவரோட பிரண்டோட காதலியில்ல..." குரூரச் சிரிப்புடன் சொன்னாள் நித்யா..
"வாட்..?!..." சாருலதாவின் முகம் பேயறைந்ததைப் போல மாறிப்போனது...
"நீ என்ன நினைச்ச..? என் கொழுந்தன் உன்னைத்தான் முதன் முதலா காதலிச்சாருன்னா..? ஊஹீம்.. அவரு உயிருக்குயிரா காதலிச்சது அந்தப் பொண்ணைத்தான்.. அவளக் கல்யாணம் பண்ணிக்க முடியாத ஏக்கத்தில கல்யாணமே வேணாம்ன்னு இருந்தாரு.. காலம் போன கடைசியில பெயருக்காவது கல்யாணம் பண்ணிக்கன்னு என் மாமனாரும்.. மாமியாரும்.. வீட்டுக்காரரும் கூட்டாச் சேர்ந்து வற்புறுத்தினாங்க.. பொண்ணு தேட ஆரம்பிச்சப்ப.. நீயாய் வந்து மாட்டியிருக்க.. சிக்கிக்கிட்டவளை விட்டுக் கொடுக்கிறதுக்கு அவரென்ன முட்டாளா..? என்னவோ போ.. நீ அவரு வாழ்க்கையில ரெண்டாவதா வந்தாலும்.. எதையும் மனசில வைச்சுக்காம வாழப் பாரு.. என்ன.. அவரு அப்பப்ப.. அந்தப் பொண்ணோட போட்டாவை எடுத்து வைச்சு பார்த்துக்கிட்டு இருப்பாரு.. கண்டுக்காதே.. நாளைக்கு உனக்கு பொண்ணு பொறந்தா அவளோட பேரை வைக்கனும்னு பிடிவாதம் பிடிப்பாரு.. நீ மாட்டேன்னு சொல்லாதே... பேய்க்கு வாழ்க்கைப் பட்டா முருங்கை மரத்தில ஏறித்தானே ஆகனும்..?"
நித்யாவின் கழுத்தில் தாலியைக் கட்டி விட்ட சீத்தாராமிடம் கேட்க வேண்டிய கேள்வியை சாருலதாவிடம்   கேட்டு வைத்தாள் நித்யா .. சாருலதா இடிந்து போய் உட்கார்ந்து விட.. அதை ரசித்தபடி நல்ல பெண்ணாக வெளியேறி ஹாலில் அமர்ந்திருந்தவர்களுடன் சங்கமித்தாள்..
"வர்ற ஆவணி மாசம் பதினைஞ்சாம் தேதி முகூர்த்தம் நல்லாயிருக்கு.." சங்கரன் சொல்ல..
"ஆமாமாம்.. அது நல்ல நாள்தான்.." என்று கூட்டுச் சேர்ந்து கொண்டார் சக்திவேல்..
'எந்த நாளா இருந்தாலும்.. அந்த நாளில் உன் மக கல்யாணம் நடக்கனுமே...' இகழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டாள் நித்யா...
கிளம்பும்போது ஆத்மாவின் கண்கள் சாருலதாவைத் தேடின...
"சாரு எங்கே..? மாப்பிள்ளையும்.. சம்பந்தி வீடும் கிளம்பறாங்க பாரு.." சக்திவேல் சொர்ணலதாவிடம் கேட்டார்...
"அவளுக்கு தலைவலியாம்பா...." என்றாள் சொர்ணலதா...
நித்யாவின் உதட்டில் தோன்றிய ஏளனப் புன்னகையில் ஆத்மா துணுக்குற்றான்.. அவன் சந்தேகப் பட்டதைப் போல.. மறுநாளும்.. அதற்கடுத்த நாளும் சாருலதா அலுவலகத்திற்கு வரவில்லை.. மாறாக.. சக்திவேலிடமிருந்து அவனுக்குப் போன் வந்தது...
"சாரு கல்யாணம் வேணாம்ன்னு சொல்றா மாப்பிள்ளை.. உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன சண்டை...?"
"எதுவும் இல்லையே மாமா..."
குழம்பிப் போன ஆத்மா சாருலதாவைத் தேடி அவளுடைய வீட்டிற்கே போய் விட்டான்...
"சாரு மாடியில இருக்கிறா.." என்றார் சக்திவேல்...
மாடி பால்கனியில் சோகச் சித்திரம் போல நின்றிருந்தாள் சாருலதா.. ஆத்மாவின் மனதில் சஞ்சலம் வந்தது.. காதல் கைகூடி கல்யாணத்தில் முடிந்திருக்கும் இந்தப் பொன்னான தருணத்தில் இவள் ஏன் இப்படி நிற்க வேண்டும்...?
"சாரு..."
திரும்பிப் பார்த்தவளின் கண்களில் வெறுப்புத் தெரிந்தது.. தீயை மிதித்தவனைப் போலப் பதறிப் போனான் ஆத்மா...
அவனுடைய சாருலதாவின் கண்களில் அவனைக் கண்டதும் மின்னுகிற அந்தக் காதல் போன தெங்கே..?
"என்னடி ஆச்சு..?"
"நீங்க படிக்கறப்ப லவ் பண்ணினீங்களா...?"
ஒரு நொடியில் புதிர் விடுபட்டு விட்டது.. ஆத்மா செய்வதியாதவனாக நின்றான்.. இதோ அவன் முன்னால் கற்பின் கனலாக.. காதலை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறாளே.. அவன் காதலி...! அவளுடைய இந்தக் கேள்விக்கு என்னபதிலை அவன் சொல்லப் போகிறான்..? பொய் சொல்ல அவனால் முடியுமா...?
"ஆமாம்..."
அவள் நெஞ்சில் தீக்கங்குகளை அள்ளி போடப் போகிறான் என்பதைத் தெரிந்திருந்தும் அவன் உண்மையைச் சொல்லி விட்டான்...
"அம்மா.." சாருலதா கண்மூடி ...தீனமாக அரற்றினாள்...
"சாரு.." ஆத்மா ஓரடி எடுந்து முன்னே வைத்த போது..
"கிட்டவராதீங்க... அங்கேயே நில்லுங்க.. என்மேல் ஆணை.." என்று சொல்லிவிட்டாள் அவள்...
"சாருலதா.." ஆத்மா ஸ்தம்பித்து விட்டான்..
"என்னை நினைச்ச உங்க மனசில எனக்கு முன்னாலேயே இன்னொருத்தி குடியிருந்திருக்கா.. இதை ஏன் எங்கிட்டயிருந்து மறைச்சீங்க..?"
"ஏய்ய்.. நான் விலகிப் போனேனா.. இல்லையா..?"
ஆத்மா சொல்லிய தந்நிலை விளக்கத்தில் இன்னும் அதிகமாகக் காயப்பட்டுப் போனாள் சாருலதா...
"யெஸ்.. நீங்க விலகிப் போனிங்க.. உங்க மனசில அவ ஒருத்திக்குத்தான் இடமிருக்குன்னு விலகிப் போனிங்க.. அவளை நினைச்ச மனசில என்னை நினைக்கக் கூடாதுன்னு விலகிப் போனிங்க.. அவளைத் தொட்ட உங்க விரல் என்மேலப் படக்கூடாதுன்னு விலகிப் போனிங்க.."
"சாரு..."
"ப்ளீஸ்.. அப்ப நான் உங்க விலகலை அனுமதிக்கல.. இப்ப அனுமதிக்கறேன்.. விலகிப் போயிடுங்க..."
"ஏய்ய்.. என்னடி சொல்ற...?"
"வேணாம்.. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை முழுக்க நீங்க என்மேல் இரக்கப்பட்டுத்தான் என் காதலை ஏத்துக்கிட்டிங்கங்கிற நினைப்பு என்னைத் துரத்தும்..."
"இரக்கப்பட்டு உன் காதலை ஏத்துக்கிட்டேனா.. பேத்தாதே..."
"பேத்தலில்லை.. உண்மை.. நீங்க என்னைக் காதலிக்கறிங்க.. என்மேல் உயிராய் இருக்கீங்கன்னு நான் நினைச்சேன் பாருங்க.. அதுதான் பேத்தல்..."
"உன் மேல உயிரைத்தாண்டி வைச்சிருக்கேன்.."
"அவமேல உயிரை வைக்கலையா..? அந்தக் காதல் பொய்யா..?"
"சொல்லிக் காட்டறியா..?"
"ம்ப்ச்.. என் மனசால நான் நினைச்சது உங்களைத்தான்.. ஆனா நீங்க...?"
"ஒதுக்கி வைக்கறியா..? இல்ல.. ஒதுங்கிப் போகறியா..?"
"ரெண்டும்தான்..."
சாருலதாவின் முகத்தில் தெரிந்த வெறுப்பையே ஊன்றிக் கவனித்தான் ஆத்மா.. அவன் மீது பித்தாக இருந்த சாருலதா எங்கே தொலைந்து போனாள்..? அதைத் துழாவுபனைப் போல அவள் முகத்தில் காதலைத் துழாவி ஏமாந்து போனான் ஆத்மா...
எந்த அளவுக்கு அவன்மேல் அன்பையும்.. பிரியத்தையும்.. காதலையும் காட்டினாளோ.. அதே அளவுக்கு வெறுப்பையும் அவளால் காட்ட முடிகிறது என்றால் இதை என்னவென்று அவன் சொல்லுவான்..?
சாருலதாவின் உரிமை உணர்வை அவன் அறிவான்தான்.. அந்த உரிமை உணர்வே அவனை வெறுத்து விலக்கி வைக்கும் என்பதை அவன் அறியாமல் போனானே...
"முடிவா என்னதாண்டி சொல்ற...?"
"என்றைக்கு உங்க வாழ்க்கையில நான் இரண்டாவதா ஆகிப் போனேனோ.. அதுக்கு மேல உங்க வாழ்க்கைக்குள்ள நான் வரக்கூடாது..."
ஆத்மாவின் முகம் மெல்ல.. மெல்ல மாறியது.. ரௌத்ரம் குடிகொண்ட அவன் முகத்தை அச்சத்துடன் பார்த்தாள் சாருலதா.. விழிகள் சிவக்க அவளைப் பார்த்து உறுமினான் அவன்..
"புத்தியைக் காட்டிட்டயேடி.. பொண்ணுங்கிறவ மாயப்பிசாசு..!. அந்த நம்பிக்கையோட இருந்தவன் கிட்ட தேவதை வேசம் போட்டு ஏமாத்திட்டியேடி.. வாழனும்னு நான் நினைச்சேனா..? ஆசை காட்டி மோசம் பண்ணிட்டியேடி... இந்த ஆத்மாவை என்னன்னு நினைச்ச..? இனி நீயே என்னைத் தேடிவந்தாலும்.. நான் உன்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேண்டி.. நீ என்னடி என்னை விலக்கி வைக்கிறது..? நான் உன்னை விலக்கி வைக்கிறேன்டி.. எனக்கு நீ வேணாம்டி.. போடி.. எப்ப என்னைத் தூக்கியெறியனும்னு நீ முடிவு பண்ணிட்டயோ.. அதுக்கு மேல உன் முகத்தில முழிச்சாலும் பாவம்டி.. என் அண்ணன் பெண்டாட்டிய நீ நல்லவள் ஆக்கிட்டயேடி.. அடிச்சாலும்.. பிடிச்சாலும் அவங்க என் அண்ணன் கூடத்தான் குடும்பம் நடத்தறாங்க.. உன்னைப் போல விட்டுட்டு ஓடலை..."
ஆத்மா அவளைத் திரும்பிப் பார்க்காமல் வேகத்துடன் போய்விட்டான்.. சாருலதா ஓடிப் போய் பால்கனியில் எட்டிப் பார்த்தபோது அவன்கார் வெளியேறிக் கொண்டிருந்தது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-23
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-23
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/saathakapparavai-23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/saathakapparavai-23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy