புதிதாக ஒரு பூபாளம். -9

9 அபிஷேக் கள்ளுண்ட வண்டானான்.. இரவு.. பகல் தெரியாமல் அவனை சந்தியாவின் அண்ணன் தூங்க வைத்து விட்ட கொடுமையினை சந்தியாவின் அந்த ஒற்றைப் ப...


9

அபிஷேக் கள்ளுண்ட வண்டானான்.. இரவு.. பகல் தெரியாமல் அவனை சந்தியாவின் அண்ணன் தூங்க வைத்து விட்ட கொடுமையினை சந்தியாவின் அந்த ஒற்றைப் புன்னகை நிவர்த்தி செய்து விட்டது.. அவன் வாயெல்லாம் பல்லானான்..
"என்ன மச்சான்.. இவ்வளவு அகலமாச் சிரிக்கறிங்க..? என் தங்கை வந்து விட்டாளா..?"
திரும்பிப் பார்க்காமலே அவன் முதுகுக்குப் பின்னால் சந்தியா தான் வந்து கொண்டிருக்கிறாள் என்பதைத் தெளிவாக கணித்து விட்ட சுதர்சனத்தின் முதுகில் நான்கு மொத்து மொத்தினால் என்ன என்ற பேராசை அபிஷேக்கின் மனதில் எழுந்தது.. குடும்பத்தினர் அனைவரும் அங்கே இருந்ததால் அந்தப் பேராசையை ரப்பர் இல்லாமல் மனதில் அழித்து விட்டு..
"ஹி.. ஹி.. உங்களுக்கு எப்பவுமே கேலிதான்.. மாப்பிள்ளை.." என்று சமாளித்தான்...
'ஆமடா.. உன் தங்கையை ஊரானுக்கு கட்டிக் கொடுத்து விட்டு.. என் தங்கையை கட்டிக்கனும்கிறதுக்காக என்கிட்ட மாப்பிள்ள உறவு கொண்டாடுவ.. அதைக் கேணயனப் போல நான் கேட்டுக்கிட்டு மகிழ்ந்து போகனும்.. டேய் மச்சான்.. வைக்கிறேண்டா உனக்கு வேட்டு.. யாருக்கு யார் மாப்பிள்ளை..?'
அவன் மனதுக்குள் உக்கிரமாக வசனம் பேசிக் கொண்டிருக்க.. அவன் தங்கையோ.. அபிஷேக்கின் விழியோடு விழி கலக்க.. ஒயிலாக நடை போட்டு உள்ளே வந்தாள்.. அதைப் பார்த்த சுதர்சனத்திற்கு பற்றிக் கொண்டு வந்தது..
'இங்கேயென்ன ஃபேசன் பரேட நடக்குது..? இவ இப்படி பூனை நடை நடந்து உள்ளே வர்றா...'
அந்தக் கோபத்துடன் தங்கையை லெப்ட் அன்ட் ரைட் வாங்கத் தீர்மானித்தவன்.. பல்லைக் கடித்தபடி சுவர் கடிகாரத்தைப் பார்த்தான்.. கல்யாண ராமனை பார்த்தான்.. மீண்டும் சுவர் கடிகாரத்தை அவன் பார்த்து வைக்க.. அதில் என்ன இருக்கிறது என்று குழம்பிப் போனவராக கல்யாண ராமனும் சுவர் கடிகாரத்தை பார்த்து வைத்தார்..
"என்னடா..?"
"மணி என்னன்னு பார்த்தீங்களாப்பா..?"
"ஆறாகப் போகுது.. அதுக்கு என்ன..?"
"அதுக்கு என்னவா..? காலேஜ் எப்ப விட்டுச்சு... இவ எப்ப வீடு வந்து சேர்றா.. இவளுக்கு மூத்தவன்.. இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறவன்.. நானே வீட்டுக்கு வந்து யாரோ எவரோன்னு உக்காந்துட்டேன்.. இவ என்னடான்னா ஆறு மணிக்கு ஆடி அசைஞ்சு வர்றா.. இதை ஏன்னு கேட்க மாட்டிங்களா..?"
பெற்ற மகன் பொங்கிய பொங்கலில் வேறு வழியில்லாமல் விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விட்ட கல்யாணராமன்.. மகளைக் கருணையோடு பார்த்து..
"ஏன்ம்மா..?" என்ற ஒற்றை வார்த்தையை கேள்வியாகக் கேட்டார்...
'ஹைய்யோ.. ஹைய்யோ..'
சுவரில் முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது சுதர்சனத்திற்கு..
அபிஷேக் வேறு அவனைப் போட்டுக் கொடுத்தாயே.. உன் அப்பா விசாரிக்கிற லட்சணத்தைப் பார்த்தாயா என்று கேலிப் பார்வையை பார்த்ததில் அவன் ஏகப்பட்ட மனப்பாதிப்புக்கு ஆளானான்...
"லேட்டாகிருச்சுப்பா.."
தகப்பனாரின் ஒற்றை வார்த்தை கேள்விக்கு.. ஒற்றை வார்த்தையையே பதிலாகத்தந்தாள் சந்தியா..
"அப்படியாம்மா.." அந்தப் பதிலில் சமாதானமானவர் மகனைப் பார்த்து..
"போதுமாடா..?" என்று கேட்டு வைக்க.. அவனோ
"போதாது..?" என்று வெடித்தான்...
"என்னடா இப்படிச் சொல்ற..?"
"வேற எப்படிப்பா சொல்றது..? லேட்டா வர்றா.. விசாரிங்கப்பான்னு சொன்னா நீங்க ஏன் லேட்டாச்சுன்னு கேட்காம.. ஏன்னு ஒத்தை வார்த்தையில கேக்கறிங்க.. அந்தச் செல்லம் அதுக்கேத்ததைப் போல லேட்டா கிருச்சுப்பான்னு ஒத்தை வார்த்தையில பதில் சொல்றா.. இங்கே என்னதாம்பா நடக்குது..?"
"பாவம்.. அவளே களைச்சுப் போய் வந்திருக்கிறா.. ஒரு காபியைக் குடிக்கட்டுமேடா..."
"அதுக்குப் பின்னாலே டிபனைச் சாப்பிடட்டும்பீங்க.. அதுக்கப்புறமா தூங்கப் போகட்டும்பீங்க.. இவ அதுதான் சாக்குன்னு மாடிக்கு ஓடிப் போயிருவா.. ஊஹீம்.. அந்தக் கதையே இங்கே வேண்டாம்..."
அதுவரை சுதர்சனம் பேசியதை அரைகுறையாய் கேட்டபடி சந்தியாவை ரகசியப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அபிஷேக்.. அவன் பேசிய கடைசி வார்த்தைகளை மட்டும் ஆட்சேபித்தான்..
"மாடிக்குப் போகிறதா..? சந்தியா ஏன் மாடிக்குப் போகனும்..?"
'நீ அதிலேயே இரு...' பல்லைக் கடித்த சுதர்சனம்...
"அங்கே தான் அவ ரூம் இருக்க மச்சான்.." என்றான்
"அங்கேதானே என் ரூமும் இருக்கு..?"
"அது கெஸ்ட் ரூம்.. உங்க ரூமில்லை.. அதுக்குப் பக்கத்திலேயே என் ரூமும் இருக்கு.. நினைவிருக்கில்ல.."
"அதுக்குச் சொல்லலை மாப்பிள்ளை.."
"இந்த மாப்பிள்ளையைக் கட்பண்ணிட்டு சுதர்சனான்னே கூப்பிடுங்க மச்சான்.. கேட்கவே நாராசமாய் இருக்கு..."
"சந்தியா இப்பத்தான் வந்திருக்கிறா.."
"எங்களுக்கும் அது தெரியுது... அதைத்தான் விசாரிக்கச் சொல்லி அப்பாவிடம் சொல்லிக்கிட்டு இருக்கேன்.."
"அதை விடுங்க.. வந்தவ நம்ம கூட உட்கார்ந்து பேசாம உடனடியா மாடிக்குப் போகனுமா..?"
அபிஷேக் சந்தியாவைப் பார்த்தபடி கேட்க.. அதன் பொருள் புரிந்தவளாக அங்கேயே உட்கார்ந்து விட்டாள் சந்தியா...
சுதர்னத்திற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"நீ அப்பா விசாரிக்கிறதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்ட.. நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு..."
"என்னடா அண்ணா சொல்லனும்..?"
"ஆறுமணி வரைக்கும் வீட்டுக்கு வராம நீ வெளியில என்னத்தை வெட்டி முறிச்ச..?"
விட்டிருந்தா அந்த ரகுநந்தனை வெட்டி முறித்திருப்பேன் என்று சொல்ல முடியாமல் தாயைப் பார்த்து...
"பாருங்கம்மா.. என்னை நிற்க வைச்சுக் கேள்வி கேட்கிறான்.." என்று சிணுங்கினாள் சந்தியா...
"அதெல்லாம் அப்பவே நீ உட்கார்ந்திட்ட.. கேட்டதுக்கு பதில் சொல்லு காலேஜ் எப்ப விட்டுச்சு..?"
"நாலு மணிக்கு.."
"இந்த இரண்டு மணி நேரமா.. எங்கே போன..?"
"கல்பனா வீட்டுக்குப் போயிருந்தேன்.. அது ஒரு குற்றமாடா..?"
கல்பானவின் பேச்சு வந்ததும் ஜானகி கவலையானாள்.. இந்தப் பெண் கூடப் படிக்கிறவளின் பிரச்னைகளை இழுத்து தலையில் விட்டுக் கொள்ளுமே என்ற கவலையுடன்..
"அவங்க பிரச்னை நமக்கெதுக்குடி.." என்றாள்..
"அதெல்லாம் எப்பவோ ஃசால்வாகிருச்சாம்மா.." சந்தியா சொன்னாள்...
"எப்படிம்மா..?" ஆவலுடன் வினவினார் கல்யாண ராமன்...
"அதுவாப்பா..."
சந்தியா விவரிக்க ஆரம்பிக்க.. அவள் இதழ்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் அபிஷேக்.. குவிந்து மடியும் அந்த இதழ்கள் பூவின் இதழ்களைப் போல அவனுக்குத் தோன்ற...
'இதை வைத்து ஒரு கவிதை எழுதிவிடவேண்டும்..' என்று தீர்மானித்தான்...
அவன் மனதை படித்துக் கொண்டிருந்த சுதர்சனம் முகம் கடுத்தான்..
'அவ என்ன பேசறான்னு கவனிக்க மாட்டான்.. எப்படிப் பேசறான்னு கவனிப்பான்.. இந்த வித்தை யெல்லாம் எனக்குத் தெரியாமப் போயிருச்சே...'
"நான் சொல்லலை..? பெரிய மனிதன்னா அந்த ரகுநந்தன்தான் பெரிய மனிதன்.. சும்மாவா.. இந்த சின்ன வயதில் அவ்வளவு பெரிய உயரத்தில் அவர் இருக்கிறார்..?"
கல்யாணராமன் ரகுநந்தனைப் புகழ்ந்ததில் சந்தியாவுக்கும் உடன் பாடில்லை.. அபிஷேக்கிற்கும் உடன்பாடில்லை...
'நான் ஸ்டேசன் மாஸ்டர்தான்ங்கிறதை இந்த மாமா சொல்லாம சொல்லிக் காண்பிக்கிறாரோ.. இவர் வழியில் சந்தியாவுக்கு தோதான மாப்பிள்ளை இருக்கானா..? அதுக்குத்தான் இப்படி பிட்டைப் போட்டு வைக்கிறாரா..? எதுக்கும் அத்தையிடம் விசாரிச்சு வைத்துக்கனும்..'
அவன் முகக் குறிப்பிலிருந்து அவன் மனதைக் கணித்துவிட்ட சுதர்சனத்திற்கு 'ஆஹா..' என்று இருந்தது..
'மச்சானுக்கு காண்டு வருதா..? அப்ப அந்த ரகுநந்தனின் புகழ் பாடிற வேண்டியதுதான்...'
"ஆமாம்ப்பா.. நானும் அந்த ரகுநந்தனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. கொடை வள்ளல்ன்னா அவர் தான் கொடைவள்ளலாமே.."
அபிஷேக்கை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொன்ன சுதர்சனத்தை நேர்கண்ணால் முறைத்தாள் சந்தியா...
"நீ..? ரகுநந்தனைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்க..? ஏண்டா புளுகற...?"
சந்தியாவின் கேள்வியில் அபிஷேக்கின் முகத்தில் வெளிச்சம் பரவியது..
அதில் சுதர்சனத்தின் முகத்தில் கோபம் பரவியது..
"யார் புளுகுனது..?"
"நீதான்.. வேற யாரு..? ஒரு வாரத்துக்கு முன்னால தானே அப்பா அந்த ரகுநந்தனைப் பத்திச் சொன்னாரு..?"
"ஆமா.. அதுக்கென்ன..?"
"அப்பல்லாம் ''ன்னு வாய் திறந்து கேட்டுட்டு.. இப்ப வந்து அந்த ஆளைப் பற்றி எல்லாம் தெரிந்ததைப் போலப் புளுகறயே.. உனக்கே இது அநியாயம்ன்னு தோணலையா..?"
"தோணலை.. எப்படித் தோணும்..? இந்த ஒரு வாரத்தில் அந்த ரகுநந்தனைப் பத்தின அத்தனை டீடெயிலையும் கேதர் பண்ணிட்டேன்..."
"எதுக்குடா..? அந்த ஆளைப் பற்றி பி.எச்.டி பண்ணப் போறயா..?"
"பண்ணினாலும் தப்பில்லை.. இருந்தா அவரைப் போல இருக்கனும்.. வாட் எ ஹேண்ட்சம் பெர்ஸனாலிட்டி யு நோ.. என்ன ஒரு கம்பீரம்.. என்ன ஒரு பவர்.. அட.. அட.. அடா.. ஆண்களுக்கே அவரைப் பார்த்தா காதல் வரும்ன்னா பார்த்துக்கயேன்..."
சுதர்சனம் அள்ளி விட்டதில் சந்தியா அவனை முறைக்க ஆரம்பித்தாள்.. அபிஷேக்கோ சிரிக்க ஆரம்பித்தான்...
"அப்ப மாப்பிள்ளைக்கு அந்த ரகுநந்தன் மேல காதல் வந்துருச்சுன்னு சொல்லுங்க..."
இதைக் கேட்டதும் சந்தியாவும் சிரிக்க ஆரம்பிக்க.. கல்யாணராமன் கோபத்துடன் ஒரு அதட்டல் போட்டார்..
"இப்ப எதுக்காக உன் அண்ணனைக் கேலி பண்ணிச் சிரிக்கிற..? அவன் என்ன தப்பாச் சொல்லிட்டான்..? அவர் அப்பேற்பட்ட மனிதர்தான்.. போய் பாரு.. அவர்கிட்டப் பேசிப் பழக எத்தனை பெரிய மனுசங்க போட்டி போடறாங்கன்னு அப்ப உனக்குப் புரியும்..."
அந்த அளவு கோபத்துடன் கல்யாணராமன் அதற்கு முன்னால் பேசியதே இல்லை.. அதில் சந்தியாவின் சிரிப்பு நின்றுவிட்டது...
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு.. முகம் வாட..
"ஸாரிப்பா.." என்றாள்..
"இப்ப ஸாரி சொல்லி என்ன பிரயோசனம்..? பேசற வார்த்தையை யோசிச்சுப் பேசனும்.. யாரைப் பற்றியும் பேசறதுக்கு முன்னாலே.. அவர் யாரு.. எப்படிப்பட்டவருன்னு தெரிந்த பின்னாலே பேசனும்.. வாயிருக்குங்கிறதுக்காக எதை வேணும்ன்னாலும்.. எப்படி வேணும்னாலும் பேசிருவியா..?"
இப்போது அவள் என்ன சொல்லி விட்டாளென்று கல்யாண ராமன் இந்த அளவுக்கு கோபப்படுகிறார் என்ற துக்கம் அவள் மனதில் பொங்கியது.. அபிஷேக்கின் முன்னிலையில் தந்தையிடம் திட்டு வாங்க நேர்ந்ததில் அவளுக்குள் வருத்தம் ஏற்பட்டது...
'இந்த அப்பா திட்டறதுதான் திட்டறாரு.. தனியா இருக்கிறப்ப திட்டக்கூடாதா.. இருந்திருந்து அத்தான் வந்திருக்கிற சமயத்தில அவன் முன்னாலேய திட்டனும்.'
இப்படிக் கோபம் வராத குணக்குன்றுக்கே கோபம் வர வைத்துவிட்ட அந்த ரகுநந்தனின் மீது அவள் மனதில் வன்மம் பொங்கியது...
"இனிமே பேசலைப்பா.."
தலை குனிந்து சொன்னவள் விறு விறுவென்று மாடிப்படிகளில் ஏறிவிட்டாள்.. கோபம் தனிய ஒரு குளியலைப் போட்டுவிட்டு உடைமாற்றி அறையை விட்டு வெளியே வந்தவளை ஹாலில் வழி மறித்தான் அபிஷேக்.
வாசல் பக்கம் போவதாக சுதர்சனத்திற்கு போக்கு காட்டி விட்டு.. அவன் கண்ணில் படாமல் மாடிப்பக்கம் ஓடி வந்திருந்தான் அவன்...
"சந்தியா.."
"ம்ம்ம்..."
"மாமா பேசினதை மனதில் வைத்துக்காதே..."
"அப்படியெல்லாம் இல்லை அத்தான்.."
"உன் முகம் வாடிப் போயிருச்சே.."
"நாள் பூராவும் செம அலைச்சல்.. அதான்.."
"இப்ப பழையபடி இன்னைக்குத்தான் பூத்த பூவைப் போல மாறிருச்சு..."
சந்தியா பதில் சொல்லாமல் மெதுவாக சிரித்தாள்.. சற்று முன்பு கல்யாணராமன் பேசியதில் அவள் மனதில் ஏற்பட்டிருந்த சுணக்கம் மாறி.. இறகைப் போல அவள் மனம் லேசானது..
"ஆமாம்.. யார் அந்த ரகுநந்தன்..?"
இயல்பாக கேட்பதைப் போலக் கேட்டான் அபிஷேக்... அவன் நாமக்கல்லில் இருப்பவன்.. சென்னையில் கோலோச்சும் ரகுநந்தனைப் பற்றி அவனறிய வாய்ப்பில்லை...
எதற்காக கல்யாணராமன் தன் செல்ல மகளைத் திட்டும் அளவிற்கு அந்த ரகுநந்தனைக் கொண்டாடுகிறார் என்ற விவரத்தை அவன் அறிய வேண்டியிருந்தது..
"அவன் ஒரு வில்லன்.." வெறுப்புடன் சொன்னாள் சந்தியா...
'அப்பாடி..' அபிஷேக்கின் சுவாசம் சீரானது...
'அப்பனுக்கும்.. மகனுக்கும்தான் அந்த ரகுநந்தன் உயர்த்தி.. பெண்ணுக்கு அப்படியில்லை..'
அவனுக்கு இது போதும் என்றிருந்தது.. மனதில் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அசட்டையாக முகத்தை வைத்தபடி...
"வில்லனா..?" என்று ஆச்சரியப் படுவதைப் போல கேட்டான்...
"வெறும் வில்லனில்லை அத்தான்.. பக்கா வில்லன்."
"மாமாவும்.. மாப்பிள்ளையும் வேறு மாதிரி சொல்கிறாங்களே..."
"அவங்களுக்கென்ன... அவங்க அப்படித்தான் பேசுவாங்க.. பணம் இருந்தா மட்டும் அவன் பெரிய மனுசனா ஆகிருவானா..? குணம் இருக்க வேணாமா..? அவன் பெரிய பிஸினெஸ் மேக்னெட்டாம்.. அதனால அவனைப் பத்தி நான் எதுவும் சொல்லக் கூடாதாம்.."
"இட்'ஸ் டூ பேட்.. மாமா கூட இப்படியிருக்கிறாரே.."
"அவன் அப்படி மயக்கி வைச்சிருக்கான்.."
சந்தியா சொன்னதில் இருந்த உண்மையில் அபிஷேக்கிற்கு 'திக்' என்று ஆகிவிட்டது...
'இந்த சுதர்சனம் கூட அப்படித்தானே சொன்னான்.. ஆண்களே மயங்குகிற அளவுக்கு பேரழகன்.. அப்படி.. இப்படின்னு.. இவளும் மயங்கிருவாளோ...'
சந்தியாவின் முகத்தைப் பார்த்தால் அப்படி அந்த ரகுநந்தனின் அழகில் மயங்கிப் போகிறவளாகத் தெரியவில்லை என்பதினாலும்.. அவ்வளவு பெரிய கோடிஸ்வரன்.. ஒரு அப்பர் மிடில்கிளாஸ் குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டான் என்பதினாலும்.. அவன் அச்சத்தை கைவிட்டான்...
'இருந்தாலும் அவனைப் பத்தி அதிகம் பேசக்கூடாது.'
இயல்பான ஜாக்கிரதை உணர்வுடன் ரகுநந்தனைப் பற்றிய பேச்சை அவன் கத்தரித்து விட்டான்..
"ஓகே.. லீவ் தட் மேட்டர் சந்தியா.. நான் வேற ஒன்றைப் பேச வேண்டியிருக்கு..." அவன் கண்கள் ரகசிய செய்தியைச் சொல்லியது...
"சொல்லுங்க அத்தான்.." மனம் படபடக்க கேட்டாள் சந்தியா...
"இந்த முறை நான் வந்திருக்கிற நோக்கமே வேற சந்தியா.. உன்னிடம் மனம் விட்டுப் பேசனும்கிற எண்ணத்தோட வந்திருக்கேன்.. நீயும் டிகிரியை முடிக்கப் போகிற.. நானும் சென்ட்ரல் கவர்ண்மென்ட் வேலையில உட்கார்ந்திட்டேன்.. இனிமேலயும் கல்யாணத்தை தள்ளிப் போடனுமா என்ன..?"
அவன் கேள்வியில்.. சந்தியாவின் விரல்கள் தந்தியடிக்க ஆரம்பித்தன.. அவள் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புதிதாக ஒரு பூபாளம். -9
புதிதாக ஒரு பூபாளம். -9
https://1.bp.blogspot.com/-HOZdBMvEcP0/Xd_Yju0TJjI/AAAAAAAAAvE/Z4voyaw3iso4pbHQmiTP3NrbJNYUxAH6ACPcBGAYYCw/s320/Puthithaga%2Boru%2Bboobalam.jpg
https://1.bp.blogspot.com/-HOZdBMvEcP0/Xd_Yju0TJjI/AAAAAAAAAvE/Z4voyaw3iso4pbHQmiTP3NrbJNYUxAH6ACPcBGAYYCw/s72-c/Puthithaga%2Boru%2Bboobalam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/puthithaakaoruboopaalam-9.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/puthithaakaoruboopaalam-9.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy