மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-24

24 வீட்டுக்கு வந்த ஆத்மாராம் கோபத்துடன் வாசல் கதவை உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே போனான்.. ஹாலில் நின்று கத்திக் கொண்டிருந்த நித்யாவு...


24

வீட்டுக்கு வந்த ஆத்மாராம் கோபத்துடன் வாசல் கதவை உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே போனான்.. ஹாலில் நின்று கத்திக் கொண்டிருந்த நித்யாவும்.. அவள் பேச்சைக் கவனிக்காதவனைப் போல சோபாவில் சரிந்திருந்த சீத்தாராமையும் உறுத்துப் பார்த்தான்...
"என்னடா..?" சீத்தாராமின் புருவங்கள் முடிச்சிட்டன...
அவனிடம் இதைப்போல ஆத்மாராம் முறைத்துக் கொண்டு நின்றதில்லை.. நித்யாவைக் கண்டாலே விலகிப் போய் விடுவான்...
மருமகள் போடும் சத்தம் காதுக்குக் கேட்கக் கூடாது என்று சமையலறையில் பதுங்கியிருந்த பார்வதியும்.. பூஜையறைக்குள் தஞ்சம் புகுந்திருந்த சங்கரனும் சின்ன மகனின் வருகையை உணர்ந்தவளாக எட்டிப் பார்த்தார்கள்...
'இவன் ஏன் இப்படி நிற்கிறான்..' பார்வதி துணுக்குற்றாள்...
கணவரைப் பார்த்தாள்.. சங்கரனுக்கும் அதே நினைவுதான் என்பதை அவருடைய முகமே சொல்லியது...
"என்னடி பார்வதி.. காதல் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன் முகம் மாதிரியே உன் மகனின் முகமில்லையே.." மனைவியின் காதைக் கடித்தார் சங்கரன்...
"அதைத்தாங்க நானும் யோசிக்கிறேன்..." கவலையுடன் சொன்னாள் பார்வதி...
இருந்திருந்து.. இப்போதுதான் அவளுடைய இளைய மகன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறான்.. குடும்பத்துடன் போய் பெண் பார்த்து திருமணத்தை உறுதி செய்து விட்டு வந்து இரண்டு நாள்கள் கூட ஆகவில்லை.. அதற்குள் இப்படி ஐயனார் கோவில் சிலை போல கண்களை உருட்டி விழித்தபடி அவன் நிற்கிறான் என்றால் பெற்ற வயிறு பதறாதா..?
"ஆத்மா... என்னய்யா ஆச்சு..?" மகனிடம் விசைந்தாள் பார்வதி..
தாயைக் கவனிக்காமல் தமையனைக் கவனித்த ஆத்மாராம்...
"சீத்தா... உன் பெண்டாட்டி சாருகிட்ட என்ன சொன்னாங்கன்னு கேட்டுச் சொல்லு..." என்றான்...
எதிரில் நின்று கொண்டிருப்பவளிடம் நேரடியாகப் பேசாமல் அவன் அலட்சியம் செய்ததில் நித்யாவின் ரத்த அழுத்தம் எகிறியது...
"கேட்கறானில்ல... பதிலைச் சொல்லு..." அழுத்தமான குரலில் மனைவியைக் கேட்டான் சீத்தாராம்...
"வாரவங்க.. போறவங்க எல்லாம் உங்க பெண்டாட்டியைக் கேள்வி கேட்பாங்க... அதை ஏன்னு கேட்காம என்கிட்ட பதிலைச் சொல்லுன்னு சொல்கிறிங்களே... நீங்கள்ளாம் என்ன மாதிரியான மனுசன்..?." என்று கேட்டுவிட்டு.. சீத்தாராமின் கையால் அறை வாங்கினாள் நித்யா...
"சும்மா சவுண்டு விட்டேன்னு வைய்யி.. குரல்வளையைப் பிடிச்சு அமுக்கிருவேன்.. அமுக்கி.. மனுஷியாடி நீ..? என் தம்பியைப் பார்த்தா உனக்கு வாரவன்.. போறவனைப் போலத் தெரியுதா..? அந்தப் பொண்ணைத் தேடி நீ தனியாப் போனப்பவே எனக்குச் சந்தேகம்தாண்டி.. பாத்ரூமுக்குப் போறேன்னு போனவ.. அங்கே போகாம எதுக்காக சாருலதாவோட ரூமைத் தேடிப் போகிறான்னு நினைச்சேன்.. நினைச்சதைப் போல நீ ஏதோ ஒரு வினையை விதைச்சுட்டு வந்திருக்க.. சொல்லுடி.. அந்தப் பொண்ணுகிட்ட என்ன சொன்ன..?"
சீத்தாராமின் ஆவேசத்தில் கதி கலங்கிப் போயிருந்தாள் நித்யா... அவன் அடித்ததைக் கூட அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது.. அந்த அடியை வீட்டில் உள்ள மற்றவர்களின் முன்னால் அடித்ததைத்தான் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...
'என்னைக் கண்டாலே பயந்து நடுங்கிற ஜென்மங்க முன்னாலே இந்த மனுசன் கையை நீட்டி வைக்கிறாரே.. நாள பின்னே இவங்க என்னை சட்டை செய்வாங்களா..?'
"என்னடி வாயைத் திறக்காம நிற்கிற..?"
"நான் வாயைத் திறந்தா.. நீங்கள்ளாம் தாங்க மாட்டிங்க..."
"அடேங்கப்பா.. இத்தனை நாளாய் நீ வாய் திறக்காம குடும்பம் நடத்தின குத்து விளக்குத்தான்.. திறந்த வாயை மூடாம நீ பேசற பேச்சு.. எட்டு திசையிலயும் எதிரொலிக்குமேடி.."
"வேண்டாங்க.. சொல்லிட்டேன்.. புதுசா என்ன கையை நீட்டறிங்க.."
"ஏற்கனெவே கை நீட்டியிருந்தா நீ இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டடி.. அந்தப் பொண்ணுகிட்ட என்ன சொன்ன..?"
"ஊம்..? சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்.. நான் யதார்த்தமா ரெண்டு கேள்வியக் கேட்டுட்டு வந்துட்டேன்... இது தப்பா...?"
"நீ யதர்த்தமா பேசற ஆளா...? உனக்கும் அதுக்கும் காத தூரமேடி..."
சீத்தாராம் மீண்டும் கையை ஓங்க.. வெறுப்புடன் அவனைத் தடுத்து நிறுத்தினான் ஆத்மா...
"விடுடா என்னை..."
"இப்பக் கோபப்பட்டு என்ன பிரயோசனம் சீத்தா..? ஆரம்பத்திலேயே நீ அடக்கி வைச்சிருக்கனும்.. இப்ப தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற.."
ஆத்மா பேசியதில் நித்யாவுக்கு அடக்க முடியாத கோபம் ஏற்பட்டது..
'உருவேத்தி விடறானா..?' என்று வெகுண்டாள் அவள்...
"இதோ பாருங்க.. யாரும் இல்லாததைப் பேசலை.. உங்க தம்பிதான்.. பொய் சொல்லி அந்தப் பெண்ணைக் கட்டப் பார்த்தார்.. இப்ப குட்டு உடைஞ்சிருச்சு.. அந்தப் பொண்ணுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு.. இதுக்கு நான் பிணையா..?"
"என்னடி சொன்ன..?"
"சும்மா எகிறிக்கிட்டு வராதீங்க.. உங்க தம்பி ஏற்கனெவே காதலிச்சு.. காதல் தோல்வியிலே கல்யாணம் வேணாம்ன்னு இருந்தவர்தானே..?"
"அடிப்பாவி.. இதையா அந்தப் பொண்ணுகிட்டச் சொன்ன..?"
"நானா ஒன்னும் சொல்லலை.. அந்தப் பொண்ணு தான் உங்க கொளுந்தன் கூடப்படிச்ச பிரண்டைக் காதலிச்ச பொண்ணு.. அவனை விடப் பணக்காரனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கம்பியை நீட்டிட்டாளாமேன்னு கேட்டா.. அடி அப்பாவிப் பொண்ணே.. கம்பி நீட்டினது இவரோட பிரண்டோட காதலியில்ல.. சாட்சாத் இவரோட காதலிதான்னு சொன்னேன்.. அது தப்பா..?"
தெனாவெட்டாக கேட்டுவிட்டு.. திரும்பவும் ஓர் அறையை வாங்கிக் கட்டிக் கொண்டாள் நித்யா...
"நான் பத்து எண்ணுகிறதுக்குள்ள உன் பெட்டியை நீ கட்டியிருக்கனும்..."
"எதுக்கு.?"
"ஆ.. ஊன்னா உன் அப்பா வீட்டுக்குப் போகப் போகிறேன்னு பூச்சாண்டி காட்டுவியே.. இப்ப அதைச் செய்..."
நித்யா ரோசத்துடன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.. பார்வதி தடுத்தாள்...
"விடுங்கம்மா.. அவ என் கண்ணுக்கு முன்னாலே இருந்தா நான் கொன்று விடுவேன்னு எனக்கே பயமாயிருக்கு.. என் கண்ணில படாம அவ போயிரட்டும்.."
"சீத்தா..."
"முடியலைம்மா.. இத்தனை நாளாய் அடக்கி வைச்சிருந்த கோபத்தை நான் வெளியே கொட்டறதுக்குள்ள இவளை வெளியே அனுப்பிருங்க.."
நித்யா அதற்கு மேலும் அங்கே நிற்கவில்லை.. புயல் வேகத்தில் அவள் வெளியேறிவிட.. சீத்தாராம் தம்பியை நெருங்கினான்...
"ஆத்மா..."
"நீ அவங்களைக் கண்டிச்சு வைக்கனும்னுதான் நான் நினைச்சேன்.. இப்படி வீட்டை விட்டு அனுப்பி வைப்பேன்னு நினைக்கலை..."
"இதுக்கு நீ காரணமில்லைடா.. இவ மனசில எவ்வளவு விசமிருந்தா அந்தப் பொண்ணோட மனசில இடியை இறக்கிவிட்டு வந்திருப்பா..?"
"சீத்தா.."
"பாவம்டா அந்தப் பொண்ணு.. உன்மேல உயிராய் இருக்கிற பொண்ணுடா.. கல்யாணம் கூடி வந்திருச்சுன்னு எவ்வளவு சந்தோசமாய் இருந்திருக்கும்..? அந்த சந்தோசத்தை கலைச்சுட்டு வந்திட்டாளேடா இந்தப் பாவி..."
"விடு சீத்தா.. அவங்க போட்டுக் கொடுத்தாலும் பொய் சொல்லலைல்ல.. உண்மையைத்தானே சொல்லியிருக்காங்க..? அந்த உண்மையை அவங்களுக்கு முன்னாலே நான் அவகிட்டச் சொல்லியிருந்தா இது நடந்திருக்குமா..? அவ முகத்தைப் பார்த்து அதைச் சொல்ல எனக்கு தைரியமில்லாம போயிருச்சுடா.. அதை அவங்க.. அவங்களுக்குச் சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க..."
"இப்ப என்னடா ஆச்சு..?"
"எல்லாம் முடிஞ்சு போச்சு..."
"அப்பக் கல்யாணம்..?"
"அது நடக்காது..."
ஆத்மாராம் யார் முகத்தையும் பார்க்காமல் மாடிப் படியில் ஏறிவிட.. மனம் தாள முடியாமல் பார்வதி பொங்கி அழுதாள்.. மற்ற இருவரும் வாய் விட்டு அழுகாமல் மனதில் பாரத்தை சுமந்தார்கள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-24
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-24
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy