மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.. -21

21 நெரிசல் மிகுந்த தி.நகரில் ஆத்மாவின் கார் அங்குலம் அங்குலமாக முன்னேறியது... "இங்கே கார் ஓட்டறதுக்குப் பதிலா.. சர்க்கஸில் கார...


21

நெரிசல் மிகுந்த தி.நகரில் ஆத்மாவின் கார் அங்குலம் அங்குலமாக முன்னேறியது...
"இங்கே கார் ஓட்டறதுக்குப் பதிலா.. சர்க்கஸில் கார் ஓட்டிரலாம்..." அலுத்துக் கொண்டான் ஆத்மா...
கொஞ்சமாக இடைவெளி கிடைத்த இடத்தில் வளைத்து ஒடித்து.. காரை விடுவித்து சாலைக்குள் வந்தவன்.. 'உப்ப்..' என்று வாயைக் குவித்துச் சொன்னான்...
"ஒரு வழியா வெளியே வந்திட்டேண்டி.. இந்த நெரிசல்ல போய் ஷாப்பிங் பண்ணனும்னு எப்படித்தான் இந்த லேடிஸீக்கு ஆசை வருதோ..."
"லேடிஸா..?" சாரு லதாவின் கண்களில் தீப்பொறி பறந்தது...
"மை லேடி சாரு.. தப்பா வார்த்தையை விட்டுட்டேன்... ஒரு எழுத்து கூடிப் போச்சு... அதுக்கு இத்தனை கோபமா..?"
"உங்களுக்கு கொலஸ்ட்ரால் கூடிப் போச்சு..."
"அதாவது கொழுப்பு கூடிப் போச்சுன்னு சொல்ற..."
"தெரிஞ்சாச் சரி..."
'இவ முன்னாலே பேச்சுக்குக் கூட எதையும் பேசிற முடியாது...' என்று நினைத்தபடி வேகம் கூட்டிய ஆத்மா காரை "க்றீச்.." என்ற சப்தத்துடன் நிறுத்தினான்...
அத்தனை நேரமும் சும்மா இருந்துவிட்டு.. ஆத்மாவின்கார் வருகிற நேரமாகப் பார்த்து சாலையைக் கடக்கிறேன் பேர்வழியென்று காருக்கு குறுக்கே விழப் போனவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் ஆத்மா...
"ஏம்ப்பா.. நான் உனக்கு என்ன கெடுதல் பண்ணினேன்னு என் காருக்கு குறுக்கே வந்து விழற...?"
"ஸாரி சார்..."
"நீ ஒரு ஸாரியோட ஓடிப் போயிருவ.. நானில்ல நிறைய ஸாரிகளை சுமக்கனும்..."
ஆத்மா வண்டியைக் கிளப்பியபடி சாருலதாவை நோட்டம் விட்டான்.. அவளோ பதிலுக்கு நோட்டம் விடாமல் முறைத்துக் கொண்டிருந்தாள்..
"என்னடி..?"
இப்போது என்னத்தைப் பேசித் தொலைத்தோம் என்று புரியாமல் திருதிருத்தான் ஆத்மா..
"ஸாரிகளச் சுமப்பீங்களா..? இந்த வேலை எத்தனை நாளா நடக்குது...? "
'இவ எந்த ஸாரியைச் சொல்றா...'
நினைத்துப் பார்த்தவனுக்கு சற்று முன்னால் சொன்ன  ஸாரிகளின் நினைவு வந்தது...
"ஏண்டி.. இதைக்கூட நீ விட்டு வைக்க மாட்டியா..? அந்த ஸாரி வேற.. இந்த ஸாரி வேறடி..." பரிதாபமாகச் சொன்னான் ஆத்மா...
"எனக்கு எல்லாம் ஒன்னுதான்.." சாருலதா மனமிரங்கவில்லை..
அவளின் அதீத உரிமையுணர்வில் மனம் நனைந்தாலும் ஆத்மாவுக்குள் லேசான பயம் எழுந்தது...
'இந்த அளவுக்கு பொஸஸிவ்வா இருக்காளே...'
பேச்சை மாற்ற நினைத்தவன் முன்னால் போன காரைக் காட்டினான்...
"அதை முந்தலாமா..?"
"த்ச்சு.. வேகத்தைக் குறைங்கன்னு எத்தனை தரம் சொல்றது..?"
"எந்த வேகத்தைச் சொல்ற..?"
ஆத்மா கண்சிமிட்ட.. அவன் குறிப்பிட்ட வேகத்தை புரிந்து கொண்ட சாருலதாவின் முகம் சிவந்தது...
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு முகம் திருப்பிக் கொண்டாள்..
'ஹப்பாடி.. டிராக் மாறிட்டா...' ஆத்மா நிம்மதியானவனாய் அவளின் வெட்கத்தை ரசிக்க ஆரம்பித்தான்...
"எப்ப பெண் பார்க்க வருகிறீங்கன்னு டாடி கேட்கச் சொன்னார்..."
"பெண்ணைத்தான் தினம்தினம் பார்த்துக்கிட்டு இருக்கேனே..."
"என்னது..?"
"பெண்ணுன்னுதானே சொன்னேன்..? பொண்ணுகன்னு சொன்னேனா..? அப்படிச் சொன்னாத்தான் நீ முறைக்கனும்.."
"பெண்ணுன்னு மொட்டையாச் சொல்லலாமா..?"
"என் பெண்டாட்டின்னு வேனும்னா சொல்லிக்கவா..?"
திரும்பவும் சாருலதாவின் முகம் குங்குமமாக.. இந்த வெட்கத்தை ரசிப்பதற்காகவே இவளிடம் வம்பிழுக்கலாம் போல இருக்கே என்று போதையானான் ஆத்மா.. அந்தப் போதையை சாலையின் நெரிசல் துரத்தியது..
"இந்த சுதா இருக்கானே.. என்னைச் சுத்த விடறதிலேயே குறியாய் இருக்கான்.." அலுத்துக் கொண்டான் அவன்..
"அண்ணனைத் திட்டாதீங்க..." பாசத்துடன் சொன்னாள் சாருலதா...
"அடேங்கப்பா... அவன் உன் அண்ணனாக்கும்..."
"பின்னே..? இல்லையாக்கும்..?"
"உன் அண்ணானாகிறதுக்கு முன்னாடியே அவன் எனக்கு பிரண்டாகிட்டான்.."
"அதுக்கு..?" சிலுப்பிக் கொண்டாள் சாருலதா..
"அடக்கி வாசி.. செண்டிமென்டை பிழிஞ்சு ஊத்தி.. பாசப்பயிரை வளர்க்காதே.." பொறாமையுடன் சொன்னான் ஆத்மா...
'அது என்ன.. இவளுக்கு அவன்மேல இத்தனை பாசம்..?'
அவனது மனதைப் படித்தவளைப் போல.. அவன் கை வளைவில் கை கொடுத்து அணைத்து அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டாள் சாருலதா.. அவளின் அந்தச் செய்கையில் கிறங்கிப்போனான் ஆத்மா...
"ஆத்மா..." காதலுடன் அழைத்தாள் சாருலதா..
"சொல்லுடி.." போதையுடன் கேட்டான் ஆத்மா...
"சுதா அண்ணனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் தான்..."
'இந்த நேரத்தில் இவளுக்கு இந்தப் பேச்சு தேவையா..?' ஆத்மாவுக்கு கோபம் வந்தது..
"எதனாலன்னு தெரியுமா..?"
"எதனால.." எரிச்சல்பட்டான் ஆத்மா...
"அவர் உங்களுக்கு பிரண்டுங்கிறதால.. அவர்ன்னு இல்ல ஆத்மா.. உங்க சம்பந்தப் பட்ட எல்லோரையுமே... ஏன்.. எல்லாத்தையுமே எனக்குப் பிடிக்கும்.. உங்க வீடு.. உங்க பேரண்ட்ஸ்.. உங்க அண்ணன்.. அண்ணி.. அவங்க குழந்தைன்னு அவங்க எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்.. ஏன்னா அவங்க உங்களைச் சேர்ந்தவங்க.. இவ்வளவு ஏன்..? உங்க கார்.. உங்க பேனா.. நீங்க தொட்ட ஃபைல்ன்னு அத்தனை மேலயும் நான் பைத்தியமாக இருக்கேன் ஆத்மா.. ஏன்னா நான் உங்க மேல பைத்தியமா இருக்கேன்..."
சாருலதாவின் கண்கள் பொங்கி.. கண்ணீரை உகுத்தன.. ஆத்மாவின் சட்டையைத் தொட்ட அந்தக் கண்ணீர் சாருலதாவின் காதலைச் சொல்லியது.. அவளின் அந்தக் காதலில் உருகிப் போனவனாக.. சாலையோர மர நிழலில் காரை நிறுத்திவிட்டான் ஆத்மா.. சாருலதாவின் முகத்தை கைகளில் ஏந்தி உற்றுப் பார்த்தவனுக்கு இந்த தேவதைப் பெண்ணின் காதலுக்கு தான் அருகதையானவன் தானா என்ற எண்ணம் எழுந்தது...
காதல்..! அதை உணர்த்த வார்த்தைகள் ஏது..? உணர்வினால் மட்டுமே உணரக் கூடியதுதான் காதல்.. அங்கே இதயங்கள் மட்டும் தான் பேசும்.. மனம் பேசுவதை மனம் அறியும் விந்தைக்குப் பெயர்தான் காதல்...! அது காதலிக்கப் படுபவரைச் சேர்ந்த அனைத்தையும் நேசிக்க வைக்கும்.. ஊர்.. பெயர்.. உற்றார்.. உறவினர்.. நண்பர்கள்.. என்று அவர்களது விலாசத்தை இவர்களின் விலாசமாக்கிக் கொள்ள வைப்பது காதல்..! அந்தக் காதலில் மூழ்கியவர்களுக்கு காதலிப்பவர் மட்டுமே பெரிதாகத் தெரிவார்கள்.. அவர்களுக்காக உயிரையும் கொடுக்க இவர்கள் சித்தமாக இருப்பார்கள்...
சாருலதாவும் அப்படித்தான்.. ஆத்மாவின் மீது அத்தகைய காதலைத்தான் அவள் வைத்திருந்தாள்.. அதை உணர்ந்தவனுக்கு அவள் மீதான காதல் பெருகியது.. அவள் முகம் நோக்கிக் குனிந்தான்.. சாருலதாவின் இமைகள் தானாக மூடிக் கொண்டன.. மூடிய அவளின் இமைகளின் மீது முத்தமிட்டான் ஆத்மா...
அவனது உதடுகளின் ஈரத்தை உணர்ந்தாள் சாருலதா.. அவளால் இமை திறக்க முடியவில்லை.. தொய்ந்து போனவளாக அவன் தோள்மீது சாய்ந்தாள்.. அவளைக் கட்டிக் கொண்டவனுக்கு வாழ்வின் மீதான காதல் அதிகரித்தது...
"எதுக்காகடி உன் அப்பா நாளைக் கடத்தறாரு.. என்னைப் பிடிச்சிருக்குள்ல..? "
"பிடிக்காமத்தான் உங்க கைக்குள்ள இருக்கிறேனா..?"
"உன்னைச் சொல்லலைடி... உன் அப்பனைச் சொன்னேன்..."
"அப்பனா..? டாடியைத் திட்டாதீங்க..."
"திட்டாம கொஞ்சவா செய்வாங்க..? நேரில வரச் சொன்னாரு.. வந்தேனா இல்லியா..? பொண்ணு கேட்டு வந்தவன்கிட்ட பின் லேடனைப் பத்திப் பேசின ஒரே அப்பன்.. உன் அப்பனாத்தான் இருப்பாருடி.. அவர் போட்ட அத்தனை மொட்டை ரம்பத்தையும் பொறுமையாக் கேட்டு.. பதிலுக்கு ரம்பம் போட்டேனா இல்லையா..? எதுக்காக..? உன்னை எனக்குக் கட்டிக் கொடுப்பாருன்னு தானே.. அந்த வேலையை உடனே செய்யாம மனுசனைச் சோதிச்சா எப்படிடீ..?"
"எதுக்கும் ஒரு முறையிருக்குன்னு டாடி சொல்கிறாரு..."
"இதுக்கு வரைமுறையெல்லாம் தெரியாதுடி..."
அவளை இறுக்கிக் கொண்ட ஆத்மா.. காதோரமாக பாடினான்..
"சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா..
             சாத்திரம் ஏதுக்கடி..?
    ஆத்திரம் கொண்டவர்க்கே - கண்ணம்மா..
             சாத்திரம் உண்டோடி..?"
அவன் கைகள் அவள் மேனியில் பரவி வேறு சாஸ்திரங்களைச் சொல்லியதில் சாருலதா கிளர்ந்தாள்...
"மூத்தவர் சன்னதியில் - வதுவை
             முறைகள் பின்பு செய்வோம்..
    காத்திருப்பேனோடி...?"
அவனால் காத்திருக்க முடியாததை அவனது ஆவேசமான அணைப்பு சொல்லியது.. அவனின் ரோமம் படர்ந்த கைகளின் வலுவில் சாருலதா தன் வசத்தை இழந்து கொண்டிருந்தாள்.. அவளை வசமாக்கத் துடித்தவனின் மீசை அவள் கன்னத்தில் உராய்ந்ததில் இன்பமான இம்சைக்கு அவள் ஆளானாள்...
"காத்திருப்பேனோடி - இதோபார்
             கன்னத்தில் முத்தமொன்று..."
அவள் கன்னத்தில் அழுத்தமாக அவன் முத்தமிட்டான்.. அவனது மீசையின் முடிகள் குத்தியதில் உண்டான கிறக்கத்தில் சாருலதா கண் மூடிக் கிடந்தாள்.. அவளின் நெற்றியில் முத்தமிட்ட ஆத்மா அவளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்...
"சுட்டும விழிச்சுடர்தான் - கண்ணம்மா..
             சூரிய சந்திரரோ...!
    வட்டக் கரியவழி - கண்ணம்மா..
             வானக் கருமை கொள்ளும்..
    பட்டுக் கருநீலப் புடவை
             பதித்த நல்வயிரம்
    நட்டநடு நிசியில் - தெரியும்
             நட்சத்திரங்களடி..."
பாரதியின் பாடல் வரிகளில் சாருலதாவின் காதல் உயிர்த்துக் கொண்டிருந்தது.. பாரதிதாசன் எப்பேற்பட்டக் காதலனாக இருந்திருக்கிறான் என்று அவர்கள் இருவருமே நினைத்துக் கொண்டார்கள்..
அவர்களைக் கடந்து சென்ற காரைக் கண்டவர்கள் அவர்கள் எதற்காக போய் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைவு வந்து அவசரமாக பிரிந்து அமர்ந்தார்கள்..
"சாரு..."
"ம்ம்ம்..."
"உன் அப்பன்கிட்டப் பேசேண்டி.."
"பேசிட்டேன்.. அவர் ஸ்டிரிக்டா உங்க வீட்டில வந்து பெண் கேட்கனும்னு சொல்லிட்டார்..."
"இல்லைன்னா பெண் கொடுக்க மாட்டாரா..?" ஆத்மா கோபப் பட்டான்..
"அப்படி அவர் சொன்னாரா..?"
"பெண் என்ன சொல்கிறாள்..?"
"இதுக்கு எதுக்காக இத்தனை கோபப் படனும்னு கேட்கிறா..."
சாருலதா அவன் தலைமுடியில் விரல் விட்டுக் கோதினாள்.. அவள் கையில் முத்தமிட்டான் ஆத்மா...
"உங்களுக்கு எதுக்காக இத்தனை கோபம் வரனும்..? உங்க அப்பா அம்மாதான் உங்க கல்யாணத்துக்காக காத்திருக்காங்கன்னு சொல்கிறிங்களே...?"
"அவங்களும் உன் அப்பா அம்மாவும் சம்மதிக்கலைன்னா என்னடி பண்ணியிருப்ப...?"
இது சாதாரணக் கேள்வியல்ல.. இந்தக் கேள்வியில் ஆத்மாவின் இதயத்துடிப்பு அடங்கியிருந்தது.. ஒருவேளை இரு வீட்டாரில் ஒரு வீட்டார் சம்மதிக்காமலிருந்-
திருந்தால்.. அல்லது இரு வீடுமே அவர்களின் காதலை எதிர்த்திருந்தால்.. அவள் என்ன பண்ணியிருப்பாள்..?
இதற்கான விடையைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அவன் தலையே வெடித்து விடும் போல இருந்தது...
"உங்க கூட ஓடி வந்திருப்பேன்..."
சாருலதா அவன்மீதான அவளது காதலை நிருபித்தாள்.. அவன் மனம் எதை நாடியதோ.. அதை அவள் சொன்னாள்.. எந்தப் பதிலில் அவனது ஆண்மை கர்வப் படுமோ.. அந்தப் பதிலை அவள் சொன்னாள்.. எதைச் சொன்னால் யாருக்கும் அடங்காத அந்த முரட்டு மனிதனை வசியப் படுத்த முடியுமோ.. அந்த வசிய மருந்துடன் கூடிய பதிலை அவள் சொன்னாள்...
"ஏய்ய்..."
ஆவேசத்துடன் இறுக்கித் தழுவிக் கொண்டவனின் மனதில் எரிந்து கொண்டிருந்த தீ அன்றுதான் அணைந்தது என்பதைப் பாவம் சாருலதா அறியமாட்டாள்...
அது முன்னம் இட்ட தீயல்ல.. முப்புறத்தை எரித்த தீயல்ல.. ஒரு கன்னி இட்ட தீ.. அவன் மனதை கனலாக மாற்றிய தீ....
அந்தத் தீயைப் பற்றி அறியாமல் அதை அணைக்கும் நீரானாள் சாருலதா..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.. -21
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.. -21
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-21.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-21.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy