மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-20

20 ஆத்மாராமை ஏற இறங்கப் பார்த்த சக்திவேல்.. நீதான் வீர பாண்டிய கட்டபொம்மனோ என்ற ரீதியில்.. "நீங்கதான் ஆத்மாராமா.. ?" என்ற...


20

ஆத்மாராமை ஏற இறங்கப் பார்த்த சக்திவேல்.. நீதான் வீர பாண்டிய கட்டபொம்மனோ என்ற ரீதியில்..
"நீங்கதான் ஆத்மாராமா..?" என்று கேட்டு வைத்தார்...
"கிழிஞ்சது போ.. வேற யாரை நீ வீடு வரைக்கும் கூப்பிட்டுக்கிட்டு வருவேன்னு டாடி நினைச்சார்..?" சொர்ணலதா சாருலதாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்...
ஆத்மாராம் அப்படியெல்லாம் யோசிக்கவில்லை.. போல கம்பீரம் கலையாமல் கை நீட்டி...
"ஆமாம் சார்.." என்று சக்திவேலுடன் கை குலுக்கினான்...
"உன் ஆள் தூள் கிளப்புகிறார்டி.." அதற்கும் சொர்ணலதாவிடமிருந்து கமெண்ட் வந்தது...
"உட்காருங்க..."
சக்திவேல் சோபாவைக் காட்டி விட்டு தோரணையாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.. அவருக்கு எதிரே அமர்ந்த ஆத்மா கம்பீரம் குறையாதவனாக கால் மேல் கால் போட்டுக் கொள்ளவும் சாருலதா கவலையில் ஆழ்ந்தாள்...
'டாடி தப்பாய் எடுத்துக்குவாரோ...'
ஆத்மா வேண்டுமென்றே செய்கிறானென்றும் அவளால் நினைக்க முடியவில்லை.. அவனுடைய இயல்பே அதுதான்.. எங்கே உட்கார்ந்தாலும்.. அவன் கால்மேல் கால் போட்டுத்தான் உட்காருவான்.. சாருலதாவை கவர்ந்த அம்சங்களில் இதுவும் ஒன்று...
புஷ்பவள்ளி டிபன் காபி வகையறாக்களை அடுக்கிய டிரேயுடன் வந்தாள்.. அவளைக் கண்டதும் ஆத்மா எழுந்து நின்று கை குவித்து வணக்கம் சொன்னான்.. அதில் புஷ்பவள்ளி வெட்கப்பட்டுப் போனாள்...
"அடுத்த சிக்சர் சாரு..." சொர்ணலதாவின் கமெண்ட்...
சக்திவேல் பொதுவாக பேச ஆரம்பித்தார்.. நாட்டு நடப்பைக் குறித்து அவர் கவலைப்பட.. அதற்கு மேல் கவலை கொண்டவனாக ஆத்மா அரசியல் நிலவரம் குறித்து ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தான்...
"என்னடி இது.. இவங்க ரெண்டு பேரும் எலக்சனில நிற்கப் போறாங்களா..?" என்று சந்தேகம் கேட்டாள் சொர்ணலதா..
கிரிக்கெட்டைக் குறித்துத் திரும்பிய பேச்சு.. தண்ணீர் பிரச்னைக்குப் போய்.. வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு வந்து.. சுற்றுப்புற சூழலில் முடிந்தது..
"தொண்டையை நனைச்சுக்கங்க டாடி..." சொர்ணலதா குளிர்பானத்துடன் பிரசன்னமானாள்...
நாக்கு வறள பேசி முடித்திருந்த இருவரும்.. நன்றிப் புன்னகையுடன் அதை எடுத்துக் கொண்டார்கள்...
"என்னவோ போடி சாரு.. இது பெண் பார்க்கும் படலம் மாதிரியும் தெரியலை.. மாப்பிள்ளை பார்க்கும் படலம் மாதிரியும் தெரியலை.. தேர்தல் கூட்டணிக்காக ரெண்டு கட்சித் தலைவர்களும் பேசிக்கிட்டதைப் போல இருக்கு..." என்று சாருலதாவின் காதைக் கடித்தாள் சொர்ணலதா...
சாருலதா அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.. அவள் பார்வை முழுவதும் ஆத்மாவின்மீதே படர்ந்திருந்தது.. அவனின் பேச்சு.. பார்வை.. கம்பீரம்.. என்று அவனிலேயே விழி பதித்து மனதுக்குள் அலைபாய்ந்தாள்...
"அப்போ.. நான் கிளம்பறேன் சார்.." ஆத்மா விடைபெற்றான்..
"போய்.. லெட்டர் போடறேன்னு சொல்லப் போறிங்களா...?"
அதுவரை சாருலதாவின் காதுகளில் ரகசியமாய் பேசிக் கொண்டிருந்த சொர்ணலதா.. நேரடியாகவே ஆத்மாராமிடம் கேட்டாள்...
அவளின் துடுக்குத்தனத்தில் லேசாக சிரித்தான் அவன்...
"ஹப்பா.. சிரிச்சுட்டிங்க.. எங்கே உங்களுக்கு சிரிக்கவே தெரியாதோன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.." என்றாள் சொர்ணலதா..
இப்போது வாய்விட்டுச் சிரித்தான் ஆத்மா...
"அமைதியான சாருவுக்கு இப்படியொரு தங்கையா..? நம்பவே முடியல.." சிலாகித்தான்..
"எனக்கும்தான் நம்ப முடியல..."
"எதை..?"
"அமைதியான சாரு உங்களைப் போய் எப்படி செலக்ட் பண்ணினான்னு..."
சொர்ணலதாவின் பேச்சில் சாருலதாவைப் பார்த்தான் ஆத்மா.. அவள் முகம் சிவந்து போனது...
"என்னாலயும்தான் நம்ப முடியலை..." கனவில் மிதப்பவனைப் போலப் பேசினான் ஆத்மா..
அவன் புருவங்கள் சுளித்தது எதற்காக என்று சாருலதாவிற்குப் பிடிபடவில்லை.. கணப் பொழுதில் இயல்பு நிலைக்கு மாறியவன்.. லேசான தலையசைவுடன் காரில் ஏறிப் போய்விட்டான்...
"என்னடாடி அக்காவோட ஆள் எப்படி..?"
சின்னமகளின் கேள்வியில் புஷ்பவள்ளிக்கு கோபம் வந்துவிட்டது...
"ஏண்டி டாடிகிட்ட பேசற பேச்சா இது..? ஆள் அது இதுன்னு.. கேட்கவே சகிக்கலை.. உன் கூடப்பிறந்தவ தானே அவ.. இப்படியா பேசறா..?"
"தோடா...! அவதான் காதலிச்சு.. அந்தக் காதலனை வீட்டுக்கே கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கா.. அது தப்பில்ல.. நான் சொன்னது மட்டும் தப்பா..? நல்லாயிருக்கும்மா உங்க நியாயம்..."
சக்திவேல் பெரிய மகளைப் பார்த்தார்.. அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற கவலை அவள் கண்களில் தெரிந்தது.. முக்கியமாக ஆத்மா அவர் முன்னால் கால்மேல் கால் போட்டு அமர்ந்ததை விமரிசிப்பாரோ என்று மனதுக்குள் பயந்தாள்...
அவள் நினைத்தது.. சரியாகவே இருந்தது.. சக்திவேல் அதை விமரிசித்தார்.. ஆனால் அவரது விமரிசனம் வேறு கண்ணோட்டத்துடன் இருந்தது...
"இந்தப் பையனிடம் ஒரு நிமிர்வு தெரியுது வள்ளி.. உட்காரும் போதே கால் மேல் கால் போட்டுக்கிறான்.. என்னடா காதலிக்கிற பெண்ணோட அப்பாகிட்டப் பேச வந்திருக்கோம்.. அவர் வேற போலிஸ் ஆபிசரா இருக்கார்ங்கிற எண்ணமில்லாம.. போலியாய் நடிக்காம.. நேச்சரா பிஹேவ் பண்ணினான்... ஐ லைக் இட்... என் மாப்பிள்ளை இப்படித்தான் இருக்கனும்.. யாருக்கும் வளைஞ்சு கொடுக்கக் கூடாது..."
சக்திவேல் அவர் முடிவை மறைமுகமாகச் சொல்லி விட...
"சாரு..." என்று தமக்கையைப் பார்த்துக் கண்சிமிட்டினாள் சொர்ணலதா...
"எம்.ஈ. ... எம்.பி.ஏ.. படிச்சிருக்கார்.. நம்ம பொண்ணுக்கு டீம் லீடர்.. சொந்த வீடு.. கார்ன்னு இருக்கார்.. அந்த வீடு பொதுவாக இருந்தாலும்.. இவர் பேரிலே தனி வீடு வாங்கியிருக்காராம்.. கனடாவிலதான் இத்தனை நாளா இருந்திருக்காரு.. இப்பக்கூட சாருவுக்காகத்தான் கனடா போகிறதா இருந்தவரு போகலையாமே.. எனக்குப் பிடிச்சிருக்குங்க..." புஷ்பவள்ளி ஒரு தாய்க்கே உரிய கவலையோடும்.. அக்கறையோடும்.. அவள் பக்கம் பார்க்க வேண்டியவைகளைப் பார்த்து திருப்திப் பட்டாள்...
"எனக்கும் பிடிச்சிருக்கு டாட்.. அளவாப் பேசறாரு.. அதைவிட அசத்தலாய் பேசறாரு.. அக்கா ஹஸ்பெண்ட் போல இல்லாம அண்ணன் போல இருப்பாருன்னு தோணுது டாட்.." சொர்ணலதாவும் சொல்லி விட்டாள்..
"அதெப்படி அப்படித் தோணும்..?"
சாருலதா தனிமையில் கேட்டபோது.. மீண்டும் கண்சிமிட்டினாள் சொர்ணலதா...
"நானும் உன் ஆள் வந்தது முதலா நோட் பண்ணிக்கிட்டே இருந்தேன் சாரு.. ஒரு தடவைகூட என்னைச் சைட் அடிக்கல..."
"அடிப்பாவி..."
"என் பிரண்டோட அக்காவை பொண்ணு பார்க்க வந்தவன்.. அக்காவை விட்டுட்டு.. தங்கையைப் பார்த்து ஜொள்ளு விட்டானாம்..."
"அடக் கடவுளே.. அப்புறம் என்ன ஆச்சு...?"
"அவன் ஜொள்ளு விட்டதில ஈரமான ஹாலை கழுவிட வேண்டியதாப் போச்சாம்..."
"ஏய்ய்..."
"நிஜம்தான் சாரு.. ஏற்கனெவே அவன் விட்ட ஜொள்ளில கழுவி விட்டதைப் போலத்தான் ஹால் இருந்துச்சாம்.. எதுக்கும் இருக்கட்டுமேன்னு இவங்க திரும்பவும் கழுவி விட்டாங்களாம்..."
சிரிக்காமல் சொர்ணலதா சொல்லிய விதத்தில் பொங்கிச் சிரித்தாள் சாருலதா..
"நீ இருக்கியே சொர்ணா.. வாயைத் திறந்தாலே அணுகுண்டுதான்.. உன்கிட்டக் கூட அவர் குட் செர்டிபிகேட் வாங்கிட்டாரே.... உனக்கு ஒன்று தெரியுமா.. விக்ரம்ங்கிற ஒருத்தன் எங்க ஆபிஸில விடற ஜொள்ளை காவ்யா இப்படித் தான் சொல்லுவாள்..."
"அதைத்தான் சொல்ல வர்றேன்.. அவனவன் மச்சினிச்சிகளை பெண்டாட்டி கூட வர்ற இலவச இணைப்பா நினைச்சு வைக்கிறானுக..."
"ஏய்ய்..."
"மச்சினிச்சிக அதுக்கு இடம் கொடுக்காம வாலை ஒட்ட நறுக்கி விடுவோம்கிறது வேற கதை சாரு.. உன் ஆளு அப்படி இல்லாம என்னைப் பார்த்து பாசப்பறவையை பறக்க விடறாரு சாரு... எனக்கே புல்லரிச்சுப் போச்சுன்னா பார்த்துக்கயேன்.."
"போர்வையைப் போர்த்திக்கடி..."
"சென்னையில மாட்டுக்கு பஞ்சம் வந்திருக்கு.. நலம் அன்புடன்னு.. நம்ம கிராமங்கள்ல இருந்துதான் பால் பாக்கெட் வந்து சேருது.. அதனால புல்லை மேய மாடு வராது.. நீ கவலைப்படாதே.. ஆனா ஒன்னுடி..."
"என்னடி..?"
"நீ பிடிச்சாலும் பிடிச்ச.. செம ஹேண்ட்சம் மேனாப் பார்த்துப் பிடிச்சிருக்க.. உன்னை என்னவோன்னு நினைச்சேன்..."
"என்னன்னு நினைச்ச..?"
"ம்ஹீம்.. இந்தச் சாருவும் காதல் பண்ணுவாளான்னு தான் நினைச்சேன்.. வேற என்ன நினைச்சிருக்கப் போறேன்..? நீ அடிச்சுத் தூள் கிளப்பிட்ட சாரு.. பின்னிப் பெடலெடுத்திட்ட..."
"இன்னும் என்னவெல்லாம் சொல்லுவ...?"
"இப்போதைக்கு இவ்வளவுதான்.. மற்றதை திரையில் காண்க..."
"என்னது...?"
"காலேஜீக்கு நேரமாச்சுடி.. அங்கே போனதும் மெஸேஜ் அனுப்பறேன்.. செல்போன் திரையில் பார்த்துக்கன்னு சொன்னேன்..." சொர்ணலதா ஓடி விட்டாள்...
அந்த வார இறுதியில் ஆத்மாவுடன் மாயாஜாலுக்குள் நுழைந்த போது...
"அப்ப மாமனாருக்கு ஓகேன்னு சொல்ற..." என்றான் ஆத்மா...
"மாமியாருக்கு டபுள் ஓகே..."
"மச்சினிச்சிக்கு எப்படியாம்..? ட்ரிபிள் ஓகேயா..?"
ஆத்மா கண்சிமிட்டினான்.. சாருலதா அவன் கையில் கிள்ளினாள்...
"ஸ் ஆ.. வலிக்குதுடி..." வலிக்காத கையை உதறினாள் ஆத்மா...
"நடிக்க வேணாம்.. அவ உங்களை அண்ணன்கிறா.. நீங்க என்னடான்னா ஒரு மார்க்கமா கண்ணடிக்கறிங்க.. உதை வாங்கப் போறிங்க.. படவா.." சாருலதா படபடத்தாள்..
"அவளைப் பார்த்தா கண்ணடிச்சேன்..? உன்னைப் பார்த்துத்தானே கண்ணடிச்சேன்..?" ஆத்மா நியாயம் கேட்டான்...
"அதையும்.. அவ பேச்சைப் பேசறப்பதான் செய்யனுமா..?" சாருலதாவின் கோபம் அடங்கவில்லை..
"கோவிச்சுக்காதேடி.. அது என்னவோ.. என்ன மாயமோ தெரியல.. உன்னைப் பார்த்தாலே என் இமை துடிக்குதுடி..."
"ஓஹோ..."
"படபடன்னு அடிச்சுக்குது.. இடம்.. பொருள்.. ஏவல்.. சேவலெல்லாம் எனக்குத் தெரியும்.. என் இமைக்குத் தெரியுமா..?"
ஆத்மா புருவங்களை உயர்த்தியபடி அவள் இடுப்பை வளைத்தான்.. அவன் கையைத் தட்டி விட்டாள் சாருலதா..
"என்னைத் தொடாதீங்க..."
"அதைச் சொல்ல நீ யாரு..?"
"நான் யாரா...?"
"ஆமா.. நீ எனக்குச் சொந்தம்டி.. 'நீ'ன்னா.. உன் மனசு.. அப்புறம்..."
அடுத்து ஆத்மாவைப் பேச விடாமல் வாயைப் பொத்தி தடுத்தாள் சாருலதா.. அவள் முகம் லஜ்ஜையினால் சிவந்து போயிருந்தது.. அவன் இதழ்களின் மீது படிந்திருந்த விரல்களைக் கடித்தான் ஆத்மா.. சட்டென்று கையை எடுத்து விட்டாள் சாருலதா...
"சாரு..."
"ம்ம்ம்..."
"எதுக்குடி இந்த கோபம்..? மச்சினிச்சின்னு பேச்சுக்குத் தானே சொன்னேன்...?"
"அதைக்கூட எதுக்குச் சொல்கிறிங்க..? நீங்க எனக்கு மட்டும்தான்..."
சாருலதாவின் கண்கள் கலங்கி விட்டன.. அவளின் உரிமையுணர்வில் ஆத்மாவின் இதயம் இனித்தாலும்.. அவன் நெஞ்சில் ஒர் நெருஞ்சி முள் நிரடியது...
'சாரு..' சொல்லத்துடித்த மனதை அடக்கி அவன் பெருமூச்சு விட்டான்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,124,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,41,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,40,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-20
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்.-20
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvU/ot9Ox_lt3i8FhJ3pv3fUhjLz03NGaYboQCPcBGAYYCw/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy