மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-1

முத்துலட்சுமி ராகவன் எழுதிய மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... 1 சாருலதா...! அழகு தேவதை..! இருபத்தியொராவது வயதைத் தொட்டுக் கொ...


முத்துலட்சுமி ராகவன் எழுதிய
மழைச்சாரலாய்
மனம் நனைத்தாய்...


1

சாருலதா...!
அழகு தேவதை..! இருபத்தியொராவது வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் பருவக்கொடி.. எம்சிஏவைப் படித்து விட்டு கம்யூட்டர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் ஐடி மக்களில் இவளும் ஒரு பிரதிநிதி... இயந்திரமயமான வாழ்வில் மனதில் ஈரத்துடன் இருக்கும் பெண்...!
'சோ'வென்று மழை கொட்டிக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்...?
சிலர் குடையைத் தேடலாம்.. சிலர் நனையாமல் ஒதுங்க இடம் தேடலாம்... சிலர் வீட்டின் ஜன்னல்களை சாரல் உள்ளே தெறித்துவிடக் கூடாது என்பதற்காக இழுத்து மூடலாம்.. சிலர் குளிருக்கு இதமாக சால்வையைப் போர்த்திக் கொண்டு சூடான 'டீ'யைப் பருகலாம்..
இவள் என்ன செய்வாள் தெரியுமா..?
இருகைகளையும் விரித்து மழை நீரில் நனைந்து தலையைச் சிலுப்பி மகிழ்வாள்... மற்றவர்களைப் போல ஓடி ஒதுங்க மாட்டாள்.. இவள் நனையாமலிருக்க குடை கொடுத்து இவள் அம்மா அனுப்பி வைத்தால்.. அந்தக் குடையை மழையில் நனையும் நாய்க்கு கொடுத்து அதைப் பாதுகாப்பாய் குடையடியில் தங்க வைத்துவிட்டு வீடு வந்து சேர்வாள்...
இவள் அழகான கவிதை...! உணர்ந்து படித்தால் இவளிடமுள்ள புதுப்புது பரிணாமங்கள் தெரியும்...
வானவில்லின் ஏழு வர்ணங்கள் சேர்ந்த வர்ணஜாலம் இவள்.. மனித மனங்களில் தோழமையை விதைக்கும் இரக்க தேவதை இவள்...
இவளின் உணர்வுகள் மெலிதானவை.. இவளின் ரசனைகள் அற்புதமானவை...
நிலவை ரசிப்பாள்.. இரவின் மெல்லிய அமைதியில் பழைய பாடல்களை ஒலிக்க விட்டு கண்மூடி கேட்பாள்.. மல்லிகையின் நறுமணம் பிடிக்கும்.. மாலை நேரக் காற்று பிடிக்கும்.. சந்தோசமோ.. துக்கமோ.. அதைத் தாயிடம் பகிர்ந்து கொள்ளப் பிடிக்கும்.. அவள் மடியில் கண்ணுறங்கப் பிடிக்கும்...
அழகைக் குறித்த கர்வமில்லாமல் இருக்க இவளால் முடிகிறது.. வேலையில் ஈடுபாடுடையவள்.. தெய்வீகத்தில் நம்பிக்கை உடையவள்.. உறவுகளை நேசிப்பவள்...
இவளை நேசிப்பவர்களுக்கு இவள் ஒரு வரம்.. இப்பேற்பட்ட சாருலதா.. ஒரு சுபயோக சுவதினத்தில்.. நெரிசலான போக்குவரத்தில் சிக்னலுக்காக காத்திருந்த வேளையில் ஆத்மாராமைச் சந்தித்தாள்..
சாருலதா நீரென்றால்... ஆத்மாராம் நெருப்பு...
"ஏழு கழுதை வயசாகுது.. இன்னும் கல்யாணம் கட்டிக்க மாட்டேன்னு என் உயிரை குறைக்கிறான்.. இவன் வயசில எல்லாம்.. நான் பிள்ளைகளைப் பெத்து முடிச்சிட்டேன்..."
இவன் தலையைக் கண்டதும் கையிலிருக்கும் பேப்பரில் முகம் மறைத்துக் கொள்ளும் சங்கரன் இவன் காதில் விழ வேண்டும் என்பதற்காகவே உரத்த குரலில் அவரின் மனக் குறையைச் சொல்லுவார்...
இவன் அவரைப் பொசுக்குவதைப் போல ஒர்பார்வை பார்த்து விட்டு...
"அதைத் தவிர வேறு என்னத்தைச் சாதிச்சிங்க..?" என்று கேட்பான்...
"கேட்டியாடி பார்வதி..." என்று இவன் வெளியேறிய பின்னால் அவர் மனைவியிடம் சொல்லிப் புலம்புவார்...
"அவனோட குணத்தைத்தான் தெரியுமில்ல..? அப்புறமும் எதுக்காக அவன்கூட மல்லுக்கு நிற்கறிங்க..?"
ஆறுதல் சொல்லாமல் அவரைத்தான் திட்டுவாள் பார்வதி...
"நீதானேடி அவன்கிட்டச் சொல்லச் சொன்ன...?"
"சொன்னேன்தான்.. இந்த லட்சணமாவா சொல்லச் சொன்னேன்..?" அவள் முகவாயை தோள் பட்டையில் இடித்துக் கொள்வாள்...
'ஏன்.. நான் கேட்ட லட்சணத்துக்கு என்ன குறைச்சல்...?'
அவருக்கு விளங்கவே விளங்காது.. இந்த லட்சணத்தில் கேட்காமல்.. வேறு எந்த லட்சணத்தில் கேட்பது என்று அவருக்கு அவருடைய சகதர்மிணி சொல்லிக் கொடுக்கவும் முன்வரவில்லை...
இப்படியாகப்பட்ட குணாதிசியம் உடைய ஆத்மாராம் 'முசுட்டு மூஞ்சி...' என்று அவனுடன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்களால் அழைக்கப் படுபவன்...
மருந்துக்குக் கூட அவனிடம் சிரிப்பு இருக்காது என்பது அந்த மங்கையர் குலத்தின் கணிப்பு... இவனும் அதைப் பொய்யாக்காமல்.. மெய்யாக்கிக் கொண்டிருந்தான்...
"ஏண்டா.. நானென்ன உனக்கு பகையாளியா...? மத்தவங்களைத்தான் முறைக்கிறன்னா.. சின்னவயசில இருந்து உன்கூடச் சுத்திக்கிட்டு இருக்கிற என்னையுமா நீ முறைக்கனும்...?"
இவனுக்கென்று இருக்கும் ஒரேயொரு நண்பனான சுதாகரன் அங்கலாய்ப்பான்...
பாவம்.. அவனும்தான் என்ன செய்வான்.. அவனவன் ஊருக்குள் ஆயிரம் நண்பர்களுடன் அளவளாவினாலும் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போய்விட.. அவன் மட்டும் ஒரேயொரு நண்பனுடன் அல்லாடிக் கண்ணுறக்கத்தை தினமும் தொலைத்தால் அவன் அங்கலாய்க்க மாட்டானா..?
இப்படிப் பெற்றவர்களையும்.. கூடப் பழகும் நண்பனையும் தலையால் தண்ணீர் குடிக்க வைக்கும் ஆத்மாராமின் காரை உரசியபடி நின்றது சாருலதாவின் ஸ்கூட்டி...
'சீக்கிரமா சிக்னலப் போடறானுங்களா...'
எரிச்சலுடன் பல்லைக் கடித்துக் கொண்டிருந்த ஆத்மாராமுக்கு... சாருலதாவின் ஸ்கூட்டி அவனுடைய காரை உராய்ந்து நின்றதில் ரத்த அழுத்தம் எகிறியது...
ஜன்னலின் கண்ணாடிக் கதவுகளை இறக்கி விட்டவன்...
"ஏய்ய்.." என்று விரலைச் சொடுக்கி அழைத்தான்..
சாருலதா அதைக் கவனிக்கவில்லை.. அதற்குள் சிக்னல் விழுந்துவிட.. அவள் ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு பறந்தாள்...
'என்ன திமிர்..!' கண் சிவந்த ஆத்மாராம் காரைக் கிளப்பி அவளுடைய ஸ்கூட்டியைத் துரத்திப் பிடித்தான்...
'கிறிச்'சென்ற சப்தத்துடன் அவளுடைய ஸ்கூட்டியை மடக்கி.. வழி மறித்து நின்ற காரை பயத்துடன் பார்த்தாள் சாருலதா...
'இது புது வகையான கிட்னாப்பிங்கா...?'
கத்துவதற்கு தயாரானவள் எதற்கும் இருக்கட்டு மென்று அவள் ஹேண்ட் பேகில் வைத்திருக்கும் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டாள்...
கார் கதவைத் திறந்து இறங்கியவனின் உயரத்தையும்.. கம்பீரத்தையும் பார்த்தவளுக்கு
இவன் ஆள் கடத்துகிறவனாக இருக்க முடியாது என்று தோன்றியது...
அதற்கு ஏற்றபடி அவன் கத்த ஆரம்பித்துவிட்டான்..
"வண்டி ஓட்டத் தெரிஞ்சா ஓட்டனும்.. இல்லைன்னா வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கனும்..."
'இவன் யாரைச் சொல்கிறான்..?'
சாருலதா சுற்று முற்றும் பார்த்தாள்.. யாரையும் காணவில்லை.. அவனுக்கோ அதற்கும் கோபம் வந்தது...
"இங்கே ஒருத்தன் நின்னு கத்திக்கிட்டு இருக்கேன்.. நீ எங்கே பராக்குப் பார்க்கிற..?"
'பராக்கா..?'
அவன் உச்சரித்த அந்த வார்த்தைக்கான அர்த்தம் எதுவென்று தெரியாமல் அவள் திருதிருத்தாள்...
'ஒருவேளை பான் பராக்கைச் சொல்கிறானோ.. அதை எதுக்காக என்னிடம் சொல்கிறான்...?'
அவள் புரியாமல் விழிக்க.. அவனுடைய கோபம் அதிகரித்தது...
"லுக் அட் மி..." கத்தினான்...
சாருலதா உடனே அவன் முகம் பார்த்து விட்டாள்...
"ஓஹோ.. இங்கிலிஷீல் பேசினாத்தான் அம்மணிக்குப் புரியுமோ..? தமிழ் புரியாதோ..? ஆத்தா.. வெள்ளைக்காரனை விரட்டியடிச்சு பல வருசமாச்சு.. இன்னும் இங்கிலிஷைப் பிடிச்சுக்கிட்டு தொங்க வேணாம்.. கொஞ்சம் தமிழையும் பேசிப் பழகு..."
இதைச் சொல்லத்தான் அவளைத் துரத்தி வந்து வண்டியை மறித்து கத்திக் கொண்டிருக்கிறானா...?
'ஆனா இவன் கேட்கிறதைப் போல.. நான் எப்போ.. எந்த இடத்திலே இங்கிலிஷில் பேசினேன்...?'
அவளுக்குள் கேள்வி முளைத்தது.. அவனிடம் அதைக் கேட்கலாமென்றால் அவனோ உறுமிக் கொண்டிருந்தான்..
சாருலதா இயல்பாகவே சண்டையைத் தவிர்த்து விடும் வழக்கமுள்ளவள்.. அதனால் எதற்கு வம்பு என்று..
"ஆகட்டும் சார்.." என்றாள்..
"என்ன ஆகட்டும்..?"
"இனிமேல் தமிழில் பேசிப் பழகுகிறேன்..."
'இவள் என்ன என்னைக் கிண்டல் செய்கிறாளா..?' அவன் ரௌத்ரமானான்..
அவனுக்கென்ன தெரியும்..? சாருலதா சாத்வீகமானவள்.. சண்டை போட்டாலும் பதிலுக்கு சண்டைக்கு வரமாட்டாள் என்பது...
"என்ன...?" என்றான்...
"என்ன.. என்ன..?" சாருலதா பாவம்.. புரியாமல் தான் கேட்டாள்...
"கிண்டலா...?"
"என்ன கிண்டலா..?" இப்போதும் அவளுக்குப் புரியவில்லை...
"விளையாடறியா..?"
"என்ன விளையாடறியா..?" சாருலதா பாவம்.. வேறு எப்படித்தான் அவன் கேள்விகளைத் தெளிவுபடுத்திக் கொள்வாள்..?
என்ன.. என்றுதானே அவள் கேட்டு வைப்பாள்..?
"கொழுப்பா..?"
"என்ன.. கொழுப்பா..?"
பயத்துடன் வார்த்தைகளை மென்று விழுங்கியபடி அடுத்த 'என்ன'வை அவள் வெளிவிட.. ஆத்மாராம் மலையேறி விட்டான்...

2

"ஏய்ய்ய்ய்ய்ய்ய்....!"
இத்தனை அமுத்தமான 'ஏய்..' யை தன் வாழ்நாளில் அப்போதுதான் சாருலதா கேட்டிருக்கிறாள்.. வீட்டை விட்டுக் கிளம்பும் போது அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.. இப்படி வழியில் ஒருவன் அவளை வழிமறித்து சுட்டு விரலை உயர்த்தி 'ஏய்..' என்று கர்ஜிப்பான் என்று...
"வாட்'ஸ் ராங் வித் யு சார்...?"
ஆங்கிலத்துக்கும் அவனுக்கும் ஆகவே ஆகாது என்பதை மறந்தவளாக அவள் ஆங்கிலத்தில் கேட்டுவிட்டாள்...
"இவ்வளவு நேரமும் கே.பிசுந்தராம்பாளைப் போல என்ன.. என்னன்னு தமிழிலதானே பேசின..? இப்ப எதுக்காக இங்கிலிஷை துணைக்குக் கூப்பிடுகிற...?"
'இங்கிலிஷைத் துணைக்குக் கூப்பிட்டாலும்..' அவளுக்கு ஆயாசமாக இருந்தாள்..
"ஏன் சார்..? இங்கிலீஷால் என்ன செய்ய முடியும்..? உங்ககூட மல்லுக்கு நிற்க முடியுமா..? விசயம் என்னன்னு சொல்லுங்க சார்..."
"திமிரா...?"
"இல்லை..."
சாருலதா கவனமாக 'என்ன..' என்ற கேள்வியைத் தவிர்த்தாள்.. 'என்ன' என்ற கேள்வியினால் இத்தனை 'இன்னா..'க்கள் வருமானால்.. அந்தக் கேள்வியினைப் பிடித்துக் கொண்டு ஏன் தொங்க வேண்டும்..?
"கொழுப்பா..?"
"இல்லை..."
அவள் பொறுமையாக இல்லையில்லை என்று மறுத்ததினால் அவன் கொஞ்சமாக மலையிறங்கினான்..
"இது ரெண்டும் இல்லைன்னா எதுக்காக என் காரை ஃபாலோ பண்ணி.. உன் ஓட்டை ஸ்கூட்டியாலே என் காரில் கோடு போட்டு வைச்ச..?"
'இவன் காரை நான் ஃபாலோ பண்ணினேனா...' சாருலதா இமை கொட்டினாள்..
"சார்.. உங்க காரை நான் ஃபாலோ பண்ணலை... என் ஸ்கூட்டியைத்தான் நீங்க ஃபாலோ பண்ணினீங்க..."
"தேவைதான் எனக்கு.. இதுவரைக்கும் எந்தப் பொம்பளையையும் நான் தொடுத்ததா சரித்திரமே இல்லை.."
'தொடுத்து..' என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா என்ற ஆவல் மேலிட்டது சாருலதாவிற்கு.. ஏற்கனெவே அவன் வாய்மொழி உதிர்த்த 'பராக்கு..' என்ற அதி அற்புதமான வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் அவள் விழித்துக் கொண்டிருந்தாள்.. இதில் 'பராக்கை'த் 'தொடுத்து' என்ற வார்த்தை தொடர்ந்தால்.. அவளும்தான் என்ன பண்ணுவாள்..?
"தொடுத்துன்னா என்ன சார்...?"
"என்ன..? கிண்டலா...?"
'இவன் மட்டும்.. 'என்ன'ன்னு கேட்கலாமாக்கும்.. இது எந்த ஊர் நியாயமாம்..?'
அவனிடம் நியாயம் கேட்பதெல்லாம் ஆகாத ஒன்று என்பதினால் கவனமாக வார்த்தைகளைச் சேகரித்துக் கோர்த்து அதை விடக் கவனமாக அதை உச்சரித்தாள் சாருலதா..
"ஐயையோ.. கிண்டலெல்லாம் இல்லை சார்.. நிஜமாகவே நான் உங்க காரை ஃபாலோ பண்ணலை.. நான் பாட்டுக்கு ரோட்டில வண்டியை ஓட்டினேன்.. என் வண்டிக்கு முன்னாலே உங்க கார் போயிருக்கலாம்..."
"அதைத் தப்புன்னு சொல்கிறயா...?"
"ஐயையோ.. நான் அப்படியெல்லாம் சொல்லுவேனா சார்..?"
"ஏன்..? சொல்லித்தான் பாரேன்..."
'இது ஏதுடா வம்பாப் போச்சு...'
சாருலதாவிற்கு அவன் மனநிலை குறித்தான ஐயம் எழுந்து.. வந்த வேகத்திலேயே அது அழிந்தது.. ஆத்மாராமின் கம்பீரம் அவளை ஈர்த்திருந்தது.. அப்பேர்பட்ட 'ஹி மேனி'டம் மனநிலை சரியானதாகத்தான் இருக்கும் என்று அவள் ஐயம் தெளிந்தாள்..
"நான் ஏன் சார் அதையெல்லாம் சொல்லிப் பார்க்கப் போறேன்..? எதுக்காக என்மேல் உங்களுக்கு இத்தனை காண்டு..?"
"காண்டா...?"
அவன் விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு.. அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான்..
'என்னடா இது..! இவன் இப்படிப் பார்த்துத் தொலைக்கிறான்...' சாருலதாவிற்கு என்னவோ போல ஆகிவிட்டது...
இதுவரை இதைப் போன்ற ஒர் பார்வையை அவள் சந்தித்ததில்லை.. அலுவலகத்தில் பல விதமான பார்வைகளை அவள் சந்தித்திருக்கிறாள்தான்.. ஒவ்வொரு பார்வையையும் இனம் கண்டு ஒதுங்கிப் போக அவளுக்குத் தெரியும்தான்.. ஆனால் இது போன்ற நையாண்டியும்.. ஆண்மையும் கலந்த அலட்சியப் பார்வையை இதற்கு முன் அவள் சந்தித்ததில்லை...
"கோபம்ன்னு ஒழுங்காத் தமிழ் பேச உனக்கு வராதா...?"
'ஓ.. இதுக்குத்தான் இவனுக்கு இத்தனை காண்டா..?'
அவன் பேசிய 'பராக்கு..' 'தொடுத்து..' என்ற வார்த்தைகளுக்கு எந்த வகையில் காண்டு குறைந்து விட்டது.. என்று அவனிடம் கேட்டறியத்தான் ஆசைப்பட்டாள் சாருலதா.. ஆனால்.. அவனுடைய சிவந்த விழிகளைக் கண்டதும் அவசரமாக அந்த ஆசையைக் கைவிட்டாள்...
"தெரியாமச் சொல்லிட்டேன் சார்..." என்று வெளியில் சொன்னவள்...
'ஆளை விடுடா சாமி..' என்று மனதில் சொல்லிக் கொண்டாள்...
எவ்வளவு அடித்தாலும் தாங்கித்தான் தீருவேன் என்று அடம் பிடிப்பவளாய்.. அவன் என்னதான் சண்டைக்கு இழுத்தாலும் சண்டைக்கு வரமாட்டேனென்று வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தவளிடம் அவனும் எவ்வளவு நேரத்துக்குத் தான் முறைத்துக் கொண்டிருக்க முடியும்..?
"சிக்னல் ஞாபகம் இருக்கா..?"
"இருக்கு சார்..."
"இந்த ரோடு என்ன உன் தாத்தா போட்ட ரோடா..?"
'ஆமாம்..' என்று சொன்னால் என்ன என்ற அதீத ஆசை மனதுக்குள் குமிழிட அவசரமாக அதைக் கலைத்தாள் சாருலதா...
'மகளே..! நேருத்தாத்தா.. காந்தித்தாத்தா.. காமராஜர் தாத்தான்னு கதை விட்டுக்கிட்டு இவனிடம் ஆமாம்சாமி போட நினைச்சே.. கொன்னுடுவேன்.. கொன்னு...'
மனதிடம் வீரலட்சுமியானவள்.. அவனிடம் புன்னகை அரசியானாள்.. அகலமான புன்னகையுடன்...
"இல்லவே.. இல்லை சார்..." என்று சொன்னாள்...
'அஃது...' என்ற பார்வையுடன்..
"அப்புறம் எதுக்காக சிக்னலில் என் கார் மேல கோடு போட்ட..?" என்ற கேள்வியினை அவன் விட்டான்..
"யாரு..? நானா..?" அவள் இமைக்க மறந்தாள்..
"நீயேதான்..  பாரு.. என் காரில பெயிண்டெல்லாம் உதிர்ந்து போச்சு.. இதுக்கு பெயிண்ட் அடிக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா..? அந்தப் பணத்தை யாரு கொடுப்பா...? உன் அப்பனா வந்து கொடுப்பான்..?"
'என் அப்பனைப் பற்றி உனக்குத் தெரியாதுடா மலையேறி மகாதேவா.. நீ கேட்டதும் அவர் கொடுத்துட்டுத் தான் மறுவேலை பார்ப்பாரா...?'
சாருலதா அவளுடைய அப்பனான சக்திவேல் என்னவாக இருக்கிறார் என்று இவனுக்குத் தெரியுமா என்று யோசித்தாள்..
"ஐ ஆம் சௌத்ரி..." என்று சொல்ல ஆசைப்பட்டு அது முடியாமல் கான்ஸ்டபிளாகவே காலம் கழித்த சாருலதாவின் தாத்தா.. மகனை ஐ.பி.எஸ் ஆக்கினார்.. 'வால்டர் வெற்றிவேல்..' என்று மீசை முறுக்க வேண்டும் என்ற ஆசையுடன் மகனுக்கு 'சக்திவேல்..' என்றும் பெயர் வைத்தார்...
தகப்பன் எட்டடி பாய நினைத்ததை சக்திவேல் எண்ணூறு அடிகளுக்கு பாய்ந்து அவர் கனவை நனவாக்கினார்.. குற்வாளிகளுக்கு 'சக்திவேல்..' என்றால் சிம்ம சொப்பனம்.. எப்போதும் துப்பாக்கியும் கையுமாக அலையும் அவருக்கு.. குற்றவாளிகளின் மத்தியில் வைக்கப் பட்டிருக்கும் புனைபெயர் என்கவுண்டர் ஏகாம்பரம்..
அந்த சக்திவேலைத்தான் உன் அப்பனா கொடுப்பான் என்கிறான் அவன்...







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-1
மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...-1
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvQ/5CYfR5999ZU1bN1toE6tWVmz1pdohv6KQCLcBGAsYHQ/s320/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
https://1.bp.blogspot.com/-c6APMdqNONk/XeZmoBDQD9I/AAAAAAAAAvQ/5CYfR5999ZU1bN1toE6tWVmz1pdohv6KQCLcBGAsYHQ/s72-c/Malaisaralai%2Bmanam%2Bnanaithai.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/malaisaaralaaimanamnanaiththaai-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy