எண்ணியிருந்தது ஈடேற -150

150 அதைச் சொல்ல நீ யார் என்ற கேள்வி வாய்வரை வந்து விட்டது.. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தாள் நந்தினி.. இதுபோல அவள் பொறுத்து...


150


அதைச் சொல்ல நீ யார் என்ற கேள்வி வாய்வரை வந்து விட்டது.. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தாள் நந்தினி.. இதுபோல அவள் பொறுத்துப் போகிறவளல்ல.. மனதில் நினைப்பதை வெளிப்படையாக பேசி விடுபவள்.. வயநாட்டுக்கு வந்த பின்னர்தான் பேச நினைப்பதை பேச முடியாமல் மௌனம் காக்கிறாள்..
'இங்கே வந்திருக்கவே கூடாது..'
புருவச் சுளிப்புடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த நந்தினியின் பாராமுகத்தில் ரவிச்சந்திரன் ஆத்திரம் கொண்டான்.. அவன் கூறும் எதையும் அவள் காதில் போட்டுக் கொள்வதில்லை என்று குற்றம் சாட்டினான்.. என்ன கழுதைக்கு என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.. அவன் அதிகாரம் காட்டிக் கொண்டே இருப்பான்..  அவள் அடங்கி அடங்கி போக வேண்டுமா..?
ஆத்திரம் தீரும் மட்டும் அவளைத் திட்டித் தீர்த்து விட்டுக் கிளம்பினான் ரவிச்சந்திரன்.. அவன் சென்றதும் கதவை அடைத்து விட்டுக் கட்டிலில் விழுந்தவளுக்குத் தூக்கம் வரவில்லை.. துக்கம்தான் வந்தது.. அவளுடைய சுதந்திரம் கேள்விக் குறியாகியிருப்பதை உணர்ந்தாள்.. எப்படி அதை மீட்டெடுத்துப் பாதுகாப்பது என்றுதான் புரியவில்லை.. மலைப்பாக இருந்தது..
ஆயிரம் சிந்தனைகளுடன் அமர்ந்திருந்தவள் நேரம் ஓடுவதைக் கவனிக்கவில்லை.. செல்போனில் உத்ரா சாப்பிட அழைத்த போதுதான் திடுக்கிட்டு மணி பார்த்தாள்..
"தூங்கறயா நந்தினி..?"
உத்ரா வினவியபோது அவளுக்கு சிரிப்பதா.. அழுவதா என்று தெரியவில்லை.. தூங்கத்தான் ஆசைப்பட்டாள்.. தூங்க முடிந்ததா..?
"நான் செம தூக்கம் தூங்கினேன்.. வினித் என்னை தூங்குமூஞ்சின்னு சொல்லி ஒரே கிண்டல்.. அவரும்தான் தூங்கினார்.. அதைச் சொன்னா என்னளவுக்குத் தூங்கலைங்கிறார்.. ஓகே.. டின்னர் சாப்பிட நாங்க வந்தாச்சு.. ரவிசார் மட்டும் உட்கார்ந்திருக்கார்.. உன்னைக் காணோமேன்னுதான் போன் பண்ணினேன்.. கமான்.. க்விக்.. ரெண்டே நிமிசத்தில டைனிங் ஹாலுக்கு வந்து சேரனும்.. என்ன..?"
உத்ராவின் குரலில் இருந்த உற்சாகத்தில் ஏக்கம் கொண்டாள் நந்தினி.. அவளும்தான் அன்று முழுவதும் உற்சாகமாக இருந்தாள்.. அவையனைத்தையும் சில நொடிகளில் அழித்து விட்டுப் போய் விட்டானே..
நந்தினி தளர்வாக எழுந்து அறைக் கதவைத் திறந்து லிப்டை நோக்கி நடந்தாள்.. டைனிங் ஹாலுக்கு அவள் போனபோது அவள் வரும் திசையை உறுத்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் ரவிச்சந்திரன்.. அவன் பார்வையில் இவளது கால்கள் பின்னின.. வினித்திடம் ரகசியம் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த உத்ரா குளித்து முடித்து மாற்றுடையில் புத்துணர்வோடு இருந்தாள்.. நந்தினியைப் பார்த்ததும்..
"இவளைப் பாருங்களேன்.. டிரஸ்ஸைக் கூடச் சேன்ஜ் பண்ணாம அப்படியே தூங்கி எழுந்து வந்து சேர்ந்திருக்கா.." என்று சிரித்தாள்..
'உனக்குத் தெரியுமாடி..?' தோழியை வெறித்தாள் நந்தினி..
நந்தினியின் வெறித்த பார்வையில் துணுக்குற்றாள் உத்ரா.. எதையோ பறிகொடுத்தவளைப் போல நந்தினி சோர்ந்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கக்
கூடும் என்று ஆராய்வதைப் போல தோழியின் முகத்தில் படிந்தது அவள் பார்வை..""
நந்தினியின் கலங்கிச் சிவந்திருந்த விழிகள் அவள் தூங்கவில்லை என்பதை உணர்த்தின..
"உன் முகமே சரியில்லை நந்தினி.. ரெஸ்ட் எடுத்தியா.. இல்லையா..?" தூண்டித் துருவினாள் உத்ரா.
நந்தினி எதையோ சொல்ல முயன்று.. தோற்றுப் போனவளாக சோகையுடன் புன்முறுவல் செய்ய முயன்று அதிலும் தோற்றாள்..
'இது என் பிரண்ட் நந்தினிதானா..?' உத்ராவின் புருவங்கள் சுருங்கின..
அன்று முழுவதும் நந்தினி உத்ராவுடன்தான் இருந்தாள்.. சிரிப்பும் சந்தோசமுமாக இருந்தவள் மூன்று மணி நேரத்துக்குள் வாடிப் போய் வந்து சேர்ந்திருக்கிறாளே.. ஹோட்டலுக்குத் திரும்பியவள் தூங்காமல் அறையில் அழுது கொண்டிருந்தாளா..? ஏன்..? வீட்டு நினைவு வந்து விட்டதா..? அன்று முழுவதும் வராத வீட்டு நினைவு அயர்ந்து களைத்துத் தூங்கும் போது வந்து நிற்குமா..?
"என்னடி.. எதுவும் சொல்ல மாட்டேங்கிற..? தூங்கினியா இல்லையா..?"
நந்தினி பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.. தூங்காத தூக்கத்தைத் தூங்கியதாக எப்படிச் சொல்வது..?
"உங்க பிரண்ட் தூங்கலை.."
ரவிச்சந்திரன் சொன்னதில் நந்தினிக்குள் ஓர் விடுதலையுணர்வு வந்தது.. எதைச் சொல்வதாக இருந்தாலும் அவனே சொல்லிக் கொள்ளட்டும்.. பொய் சொல்லும் கொடுமையிலிருந்து அவள் தப்பித்தால் போதும்.. சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தடுமாற வேண்டாம்..
அது உங்களுக்கு எப்படித் தெரியும் என்ற வினா விழிகளில் தொக்கியிருக்க ரவிச்சந்திரனை மௌனப் பார்வை பார்த்தாள் உத்ரா.. அதில் நந்தினிக்குள் சற்றுத் தெம்பு வந்தது.. ஏனென்று கேள்வி கேட்க எவரும் இல்லையென்று நினைத்தானா இந்த ரவிச்சந்திரன்..? நந்தினிக்காக கேள்வி கேட்க உத்ரா இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.. ஹ..!
"நான்தான் சம் இம்பார்டண்ட் பிஸினெஸ் டீடெயில் வேணும்னு நந்தினியை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. நான் கேட்ட டீடெயில்ஸை லேப்-டாப்பில் கேதர் பண்ணி பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்தா.. ரெஸ்ட் எடுக்க டயமில்லை.."
கோர்வையாகப் பிணைந்து அவன் சொன்ன பொய்யில் அயர்ந்து போனாள் நந்தினி.. அவன் டீடெயில் கேட்டது உண்மைதான்.. என்ன டீடையில் கேட்டான்..? பினினெஸ் டீடெயிலையா கேட்டான்..?
'பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்கிறானே..'
"நீ ஏன் நிற்கிற..?" ரவிச்சந்திரன் அவளை அதட்டினான்..
'இங்கேயும் அதட்டனுமா..?' தான் என்ன சிறுகுழந்தையா என்ற சினம் துளிர்த்தது நந்தினிக்கு..
'பப்பா மாதிரியே ட்ரீட் பண்றான்..'
"நிற்கனும்னு நேர்த்திக்கடன் வைத்திருக்காளோ என்னவோ.."
தோழிக்கு எதுவுமில்லையென்ற நிம்மதியோடு சிரித்தாள் உத்ரா.. ரவிச்சந்திரனின் அதட்டும் பார்வையில் பல்லைக் கடித்தபடி அவன் பக்கத்தில் கடனேயென்று உட்கார்ந்து வைத்தாள் நந்தினி.. இரவு உணவுக்கு வந்திருந்த உணவுவகைகள் மதியம் அவர்கள் உண்ட உணவு வகைகளாக இருந்தன..
"இதே ஃபுட் வெரைட்டிஸைத்தான் லன்சில சாப்பிட்டோம்.." என்று உத்ரா சொன்ன பின்புதான் அவற்றைக் கவனித்தாள் நந்தினி..
யதேச்சையாக ரவிச்சந்திரனின் முகத்தைப் பார்த்து விட்டாள்.. அவன் முகத்தைப் பார்க்கக்கூடாது என்ற வைராக்கியத்தோடு குனிந்திருந்தவளின் பார்வை
உயர்ந்து அவன்மீது படிவதற்காகவே காத்திருந்ததைப் போல ஆழ்ந்து பார்த்தான் ரவிச்சந்திரன்.. நந்தினிக்குள் ஜிவ்வென்று ஒரு விதமான ரசாயன மாற்றம் நிகழ்ந்து வைத்தது.. அவனது பார்வை எதையோ சொல்வதைப் போல இருந்தது.. அது என்னவாக இருக்கக்கூடும் என்று குழம்பித் தவித்தாள் நந்தினி..
'இதுக்குத்தான் இவனைப் பார்த்துத் தொலைக்கக் கூடாதுங்கிறது.. மனசுக்குள்ள என்னத்தை நினைச்சுத் தொலைச்சிருக்கான்னு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது..'
ரவிச்சந்திரன் அவள் பக்கமாக நகர்த்தி வைத்த தட்டுக்களை வேண்டாவெறுப்பாக இழுத்து சாப்பிட ஆரம்பித்த நந்தினி அவளையுமறியாமல்..
"வாவ்..!" என்றாள்..
நாவிலிருந்த உணவு வகைகளின் ருசியில் ஞுஅவளது விழிகள் விரிந்தன.. உணவின் மீதான அவளது ஆராதனையில் கல்போலக் கடினப்பட்டிருந்த ரவிச்சந்திரனின் முக இறுக்கம் தளர்ந்து சிரிப்பு எட்டிப் பார்த்தது..
"செம டேஸ்ட் சார்.. லன்ச்சில நாங்க சாப்பிட்ட ஃபுட் இந்த அளவுக்கு டேஸ்டாய் இல்லை.." மனம் விட்டுப் பாராட்டினாள் உத்ரா..
"இந்த உண்மையை உரக்க உங்க பிரண்டோட காதுகளில விழுகிற மாதிரி சொல்லுங்க.."
நந்தினியை துளைக்கும் பார்வை பார்த்தபடி அவன் சொன்னான்.. எதற்காக மதிய உணவில் அவள் சாப்பிட்ட உணவு வகைகளை இரவு உணவாக கொண்டு வரச் சொல்லியிருக்கிறான் என்று நந்தினிக்கு புரிந்து விட்டது..
"எங்க யாழ் ஹோட்டல் எல்லாவகையிலும் ஃபெண்டாஸ்டிக்கான ஹோட்டல்ங்க.. அக்காமடேசனில மட்டுமில்லை.. ஃபுட் அயிட்டத்திலயும் இதை அடிச்சுக்க முடியாது.."
'என்னைப் பார்த்துத்தான் ஜாடை பேசறான்..'
அவனுடைய ஹோட்டல் உணவுகளை விட வேறு ஒரு ஹோட்டலின் உணவு வகைகள் எந்த வகையிலும் மேம்பட்டதில்லையாம்.. பசி ருசியில் யாழ் ஹோட்டலின் உணவு வகைகளை அடித்துக் கொள்ள முடியாதாம்.. மதிய உணவின் போது நாக்கைச் சப்புக் கொட்டி.. நொட்டை விட்டு.. அவள் 'பெண்டாஸ்டிக்..' என்று ரசித்துச் சாப்பிட்டது தவறாம்.. அதை அவளுக்கு மறைமுகமாக உணர்த்துகிறாணாம்..
'போடா..' என்றிருந்தது அவளுக்கு..
'உண்ணும் உணவை ரசித்து ஒரு சொல் சொல்லி விட்டது தப்பாடா சாமி..? இப்படித் தொட்டதெற்கெல்லாம் குத்தம் கண்டு பிடிச்சுக்கிட்டு இருந்தின்னா உன்னோடு எப்படிக் குப்பை கொட்டறதுன்னு மலைப்பா இருக்குடா..'
சிந்தனை போன திசையில் திகைத்துப் போனாள் நந்தினி.. அவனுடன் அவள் எதற்காக குப்பை கொட்ட வேண்டும்..? பெல்ட் மன்னனுடனான அவளது திருமணத்தை நிறுத்தி விட்டதாக மேகநாதன் செய்தி அனுப்பிய மறுநிமிடம் அவள்..
'எஸ்கேப்..' என்று தஞ்சைக்குச் சிறகடித்துப் பறந்து விடப் போகிறாள்.. அந்த கிரேட் எஸ்கேப்பிற்காக அவள் காத்திருக்கும் போது தேவையற்ற வீண் நினைவுகள் எதற்காக வந்து தொலைக்க வேண்டும்..?
இரவு உணவு முடிந்து அவரவர் அறைகளுக்குப் பிரிந்து சென்ற போது "குட் நைட்.." சொன்ன உத்ராவின் முகத்தில் எதுவோ இருந்தது.. நந்தினியிடம் அவள் எதையோ சொல்ல முயன்றாள்.. சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டு கையாட்டி விட்டு நகர்ந்து விட்டாள்..
அவள் என்ன சொல்ல விரும்பினாள் என்று புரியாமல் உதட்டைக் கடித்தபடி அசையாமல் நின்றாள் நந்தினி..
"யாரைப் பார்க்கிற..?"
அவளது பார்வை சென்ற திக்கில் துழாவினான் ரவிச்சந்திரன்.. அந்த நேரம் பார்த்தா வினித் திரும்பிப் பார்த்துத் தொலைக்க வேண்டும்..? உத்ராவுடன் எதையோ பேசிச் சிரித்தபடி திரும்பியவன் நந்தினியைக் கண்டதும் இயல்பாக தலையை அசைத்துத் தொலைத்து விட்டான்..
'கடவுளே..! இவன் பார்க்கிற சமயத்திலா வினித் அண்ணா திரும்பித் தொலைக்கனும்..?'
கோழிக்கோடின் குளிரையும் மீறி அவளுக்கு வியர்த்துத் தொலைத்தது..
'இவனைப் போல குயுக்தி மூளை படைத்த குதர்க்கவாதி பக்கத்தில நின்றுக்கிட்டு இருந்தா பனி பிரதேசத்தில கூட வியர்த்துக் கொட்டத்தான் செய்யும்..'
"வொய்ப் கூட ஹனிமூன் என்ஜாய் பண்ணத்தானே வந்திருக்கார்..?"
வினித்தைத்தான் குறிப்பிடுகிறான் என்பது புரிந்து போனதில் விதியை நொந்து கொண்டு மௌனம் சாதித்தாள் நந்தினி.. இந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்லித் தொலைப்பாள் என்ற கோபம் அவள் மனதில் துளிர்த்தது..
"பக்கத்தில வொய்பை வைத்துக்கிட்டு உன்னைத் திரும்பிப் பார்த்துத் தலையை ஆட்டறாரே.. என்ன..? பிரியா விடையா..?"
ஏதேனும் கட்டை மட்டும் நந்தினியின் கைகளுக்கு அகப்பட்டிருக்க வேண்டும்.. வருவது வரட்டும் என்று ரவிச்சந்திரனின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டிருப்பாள்..
'மனிதனா இவன்..? எதில்தான் சந்தேகப்படுவதுன்னு ஒரு வரைமுறை வேண்டாமா..? அண்ணனைப் போல நினைக்கும் மனிதனைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கலாமா..?'
வழவழப்பான யாழ் ஹோட்டலில் அவனை அடிக்கச் சரியான ஆயுதம் அகப்படாது என்பதால் சுட்டு விழிப் பார்வையால் அவனைச் சுட்டெரிப்பதைப் போல பார்த்து வைத்தாள்..
"இப்பத்தான் நீ தமிழ்நாட்டுப் பெண்ங்கிறதைப் புரூவ் பண்ற.. ஹப்பா.. அனல் பறக்குது.. கண்ணகி மதுரையைப் பார்க்கிறதைப் போலவே பார்க்கிறயே..
ஹா.. ஹா.."
எதுவும் நடக்காததைப் போல சிரித்தான் ரவிச்சந்திரன்..
'எப்படி இவனால் எதுவும் நடக்காததைப் போல பிஹேவ் பண்ண முடியுது..?' முறைத்தபடி அவளுக்கான அறையை நோக்கி விரைந்து விட்டாள் நந்தினி..
அதை இதையென்று ஆயிரம் யோசனைகளுடன் படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் அலுப்பு மேலிட்டால் அயர்ந்து உறங்கி விட்டாள்.. காலையில் அவள் காதருகே ஒலித்த செல்போன் ஒலியில் கண்விழித்தவள் தூக்கம் கலையாமல் இமைகளை இறுக்கி மூடியபடி செல்போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்து..
"ஹல்லோவ்.." என்றாள்..
"என்னடி நீ.. இப்படியிருக்க.. நானும் வினித்தும் ரெடியாகி பிரேக்பாஸ்ட் சாப்பிட டைனிங் ஹாலுக்கு வந்துட்டோம்.. ரவிசார் மட்டும் தனியா உட்கார்ந்திருக்கார்.. நீ எங்கேன்னு கேட்டா இன்னும் வரலைங்கிறார்.. சீக்கிரமா வந்து சேரு.." மறுமுனையில் சப்தம் போட்டாள் உத்ரா..
"இல்லை.. உத்ரா.. நான் வரலை.." உறுதியாக மறுத்தாள் நந்தினி..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எண்ணியிருந்தது ஈடேற -150
எண்ணியிருந்தது ஈடேற -150
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s320/8_Part%2B-%2B2.jpg
https://1.bp.blogspot.com/-Ru6KiNUnm88/XUe2y54LpAI/AAAAAAAAArU/sz3RLdc7PQYg1ApQA3-vfOKHPEIX2U1MQCPcBGAYYCw/s72-c/8_Part%2B-%2B2.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-150.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-150.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy