அம்மம்மா.. கேளடி தோழி...!, -45

45 உன் தேவதையாய் நானிருக்க.. என்தேவனே..! நீ பிரிந்துசென்றாய்.. சொல்லிவிடலாம்.. உன்னைத்தான் நான் காதலித்தேனென்று ஒரு வார்த்தையில...


45
உன் தேவதையாய் நானிருக்க..
என்தேவனே..! நீ பிரிந்துசென்றாய்..

சொல்லிவிடலாம்.. உன்னைத்தான் நான் காதலித்தேனென்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம்...
அந்த ஒற்றைச் சொல்லை ராதிகா சொன்னால் அவன் அதை நம்புவானா..? அவன் தொட்டு விட்டதால் வேறு வழியின்றி வாழ்க்கைப் பிச்சை கேட்டு பொய் சொல்கிறாள் என்று பதிலுக்குச் சொல்லிவிட மாட்டானா..? அப்படி அவன் சொல்லி விட்டால் அந்த ஒற்றைச் சொல்லில் ராதிகாவின் இதயம் இற்று விடாதா..?
ராதிகாவின் காதல் பொய்யானதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக.. ராதிகா பொய்யானவளாக அவனிடம் நடிக்க ஆரம்பித்தாள்..
"என்னடி சொன்ன..? அவன் உன்னைப் பெண் கேட்டு வந்தானா..? ஏன் வரமாட்டான்..? நீதான் அவன் பல்லைக்காட்டியதும்.. பதிலுக்கு ஈன்னு சிரிச்சு வைச்சியே.. அப்புறமும் உன்னைப் பெண் கேட்டுவராம இருப்பானா..? அதுவே அன்னைக்கு நான் உன்னைத் தொட்டு முத்தம் கொடுத்தப்போ... என்னவோ வில்லன் கிட்டயிருந்து தப்பி ஓடின ஹீரோயினைப் போல என்கிட்டயிருந்து தப்பி ஓடினவதானேடி நீ..."
அன்றைய நாளின் நினைவில் ராதிகாவின் இதயம் பூவாக மலர்ந்தது.. முதல் காதலையும்.. முதல் முத்தத்தையும் மறந்தவர் இந்த உலகில் உண்டா..?
அவள் அவனிடமிருந்து தப்பி ஓடினாளாம்...
"போகிறவ சும்மா போகாம என்னை அரைக் கண்ணாலே பார்த்துக்கிட்டே ஓடினயேடி.. அது ஏண்டி..?"
இதாவது உனக்குத் தெரிகிறதே என்றிருந்தது அவளுக்கு...
"முத்தம் கொடுத்தப்போ உன் முகம் மலர்ந்துச்சுடி.. மாறலையே.. அதுதானே என்னைப் போட்டுக் குத்துது.. அப்படியிருந்தவ எப்படிடீ அவனைக் கட்டிக்கச் சம்மதிச்ச..?"
ராதிகா பெருமூச்சுடன் அசையாமல் அமர்ந்திருந்தாள்...
இவன் மட்டும் மறுநாளே தொலைந்து போசாமல் அவள் கண்ணில் பட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற நினைவில் அவளுக்கு கண்கலங்கியது...
அப்படி அவன் எங்கேதான் போய் தொலைந்தான் என்பதையும் அவனே சொல்லிப் புலம்பினான்...
"அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்குன்னு நடுராத்திரி போன் வருதுடி... அவங்களுக்கு நான் மட்டும்தான்.. அவங்களை மறந்து.. வீட்டைமறந்து.. ஊரைமறந்து.. என் தொழில்களை மறந்து.. என்னவோ ரோட்டோர ரோமியோவைப் போல உன் பின்னாடியே ஜிம்மி போல அலைஞ்சேனேடி.. அந்த அளவுக்கு என்னைக் காதல்ங்கிற மாயப்பிசாசு பிடிச்சுக்கிட்டு ஆட்டி வைச்சதுடி.. அதில அம்மாவை நான் மறந்தே போனேனே.."
ராதிகாவிற்குள் அவனது துக்கம் இறங்கியது.. அவள் துயரம் தாளாமல் உதட்டைக் கடித்துக் கொண்டாள்...
"நான் உன் பின்னாலே பித்துப்பிடிச்சுப் போய் அலைஞ்சேன்.. நீ என்னை விட்டுப்பிரிஞ்சு நழுவி ஓடின.. உன்னை என் கைக்குள்ள அடக்கிக்க நான் போராடிக்கிட்டு இருந்தப்போ அம்மாவுக்கு சீரியஸா ஆகிருச்சு.. ஊருக்கு ஓடினேன்.. அம்மாவைக் காப்பாத்திட்டேன்.. உடனே சென்னைக்கு வரமுடியல.. அதுக்குள்ள நீ இங்கே அத்தனையையும் நடத்தி முடிச்சிட்ட..."
ஏதோ ஒருவகையில் அவனது துயரம்கூட அவளுக்கு ஆறுதலை அளித்தது.. அவளைத் தொட்டவன் விட்டுப் பிரிந்து சென்றதற்கு மிகச்சரியான காரணம் இருக்கிறது என்பதில் அவள் மனம் ஓர்விதமான நிறைவை அடைந்தது..
"கவிதையாய் வரைஞ்சு தள்ளினேன்டி..."
'இவன் கவிதைகூட எழுதுவானா..?'
ஆச்சரியத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்த ராதிகாவைப் பார்த்தவனின் கண்களில் மின்னல் வந்தது.. அந்த மின்னலுடன் அவள் விழிகளை உற்றுப் பார்த்தபடி அவன் கவிதை சொன்னான்...
"விட்டுப் பிரிந்து பின் நழுவியதும்..
             வீதி வழியே போகையிலே...
    பாதிக் கண்கள் பார்த்ததுவும்..
             பார்த்த கண்கள் பேசியதும்..
    கோதிமுடித்த குழற் காட்டில் - உன்
             கோல மதிமுகம் மலர்ந்ததுவும்...
    பேதை வளர்ந்து பெண்ணாகி...
             காதல் வளர்ந்து மணமாகி - நீ
    மாதர் நடுவே தாயாகி...
             அதற்கும் அடுத்து பாட்டியாகி..
    தடியூண்டி நிற்கும்போதும் மலராவாய்...
             உன் ஞாபகம் என்னுள் மணமாகும்..."
ஓர்விதமான உத்வேகத்துடன் அவன் அந்த கவி வரிகளை உச்சரித்தான்... அது உணர்த்திய காதலின் சாரலில் நனைந்தும் அதற்கு உரிமை கொண்டாட முடியாமல் அவள் உரிமையற்றுப் போனாள்...
இது அவளைப் பிடித்திருக்கும் சாபமா..? கடல்நீர் நடுவே குடிநீர்தேட நேரும் அவலம் மிகக் கொடுமையானது... அதை அனுபவித்த ராதிகாவிற்கு வாய்விட்டு அழவேண்டும் போல இருந்தது...
ஒரு முழுமையான ஆண்மகன் அவளைக் காதலிக்கிறான்.. பதிலுக்கு அவளும் அவனைக் காதலிக்கிறாள்... அவனது காதலை அவள் அறிவாள்.. அவளது காதலை அவன் அறியமாட்டான் என்றால்.. இதைவிடக் கொடுமையானது வேறு எதுவும் இல்லை..
அவனது அந்த ஆழ்ந்த காதலுக்குரியவளாக அவளிருப்பதில் ஒர்விதமான கர்வம் அவளுக்குள் உதயமானது...
"என்னைவிட அவன் எந்தவகையில் உசத்திடி..? எதுக்காக அவன் பின்னாலே பித்துப்பிடிச்சு அலையற..? உன்னை நான் தொட்டுவிட்ட பின்னாலேயும் அவனைத் தேடி நீ போகத் துணிஞ்சியின்னா.. எந்த அளவுக்கு உன் மனசில அவன் பதிஞ்சிருக்கனும்..."
அவன் கவிதையை மறந்து பழைய பல்லவியை பாட ஆரம்பிக்க வெறுத்துப் போனாள் ராதிகா...
'உன் தலை...' எரிச்சலுடன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்...
"ஒன்னும் நேரமாகிடல.. மதிய கிளாஸை முழுங்கிட்டு அவனைப் பார்க்கிற திட்டத்தோட காலேஜை விட்டு வெளியே வந்தவதானேடி நீ..? இந்த லட்சணத்திலதான் இத்தனை வருசமும் படிச்சியா..?"
"எதைவேணும்னாலும் பேசுங்க.. என் படிப்பைப் பத்தி மட்டும் பேசாதீங்க.. என்னையென்ன உங்க அத்தைமக ரத்தினத்தைப் போல மக்கு பிளாஸ்திரின்னு நினைச்சுட்டிங்களா...?"
"அத்தைமக ரத்தினமா..? யாருடி அது...?"
பாலமுரளிக்கு உண்மையிலேயே யார் அந்த அத்தை மகள் ரத்தினம் என்று பிடிபடவில்லை.. அவன் முகத்திலிருந்த உண்மையைக் கண்டவளுக்கு ஷோபாவின் மேல் பரிதாபம் ஏற்பட்டது...
"ஷோபாதான்.. வேற யாரு...?"
"அவ என் அத்தை மகன்னு யாரு உனக்குச் சொன்னது..?"
"பின்னே..? அவ உங்களுக்கு சித்தப்பா மகளா..?"
"சேச்சே.. உறவு முறையையே மாத்தாதே... அவ வேற சொந்தம்..."
"சொந்தம்ங்கிறதையாவது ஒப்புக்கறிங்களே.. அந்த மட்டிலும் சந்தோசம்..."
"சொந்தத்தை ஒப்புக்கிறதில் என்ன ஒளிவு மறைவு வேண்டிக்கிடக்கு..?"
"அப்ப அவ என்ன சொந்தம்ங்கிறதையும் சொல்ல வேண்டியது தானே..."
"நான் ஒளிச்சு மறைச்சாடி வைச்சேன்..? அதை எப்படி விளங்கச் சொல்றதுன்னுதான் தெரிய மாட்டேங்குது..."
"அவ உங்களுக்கு அத்தை மகளா..? சித்தப்பா மகளா..? இரண்டில் ஒன்றைச் சொல்லுங்க..."
"அவ வந்து.. என் அக்காவோட மாமியாருக்கு தங்கச்சி மக..."
"அப்படின்னா..?" ராதிகாவிற்கே புரியவில்லை...
"குழம்புதுல்ல.. இதுக்குத்தான் சொன்னேன்.. விட்டுவிடுன்னு... கேட்கறியா..."
"நிஜமாகவே அவ உங்களுக்கு என்ன முறையாகனும்ன்னு எனக்குத் தெரியனும்..." ராதிகாவின் குரலில் பிடிவாதம் தொனித்தது...
அதையறிந்து கொண்ட பாலமுரளியின் கண்களில் மின்னல் வந்தது...
"எதுக்குடி..?" புருவங்களை உயர்த்தினான்...
"தெரியனும்.. அவ்வளவுதான்..." ராதிகா பிடிவாதமாகச் சொன்னாள்...
அவன் எதிர்பார்த்த பதில் கிடைக்காத ஏமாற்றத்தின் சாயல் அவன் முகத்தில் படர்ந்தது...
"தெரிஞ்சு என்னத்தைக் கிழிக்கப் போற.. என் அக்காவுக்கு அவ சின்ன மாமியா மக... போதுமா..."
"உங்களுக்கு அவ யாரு...?"
"ஏண்டி.. என்னவோ உன் படிப்பைப் பத்திப் பேசினாமட்டும் உனக்கு ரோசம் பொத்துக்கிட்டு வருது.. அறிவுக்கடல்ங்கிற பில்ட் அப்பைக் கொடுக்கிறவ இப்படி அடி முட்டாளா இருக்கிற...?"
"ஹலோ.. சான்ஸ் கிடைச்சிருச்சுன்னு என்னை கலாய்க்கிறீங்களா..?"
"அடி என் அறிவுக்களஞ்சியமே..! என் அக்காவுக்கு அவ சின்ன மாமியா மகன்னா எனக்கு மட்டும் அவ சித்தப்பா மகளாகிப் போயிருவாளா... எனக்கும் அதே சின்ன மாமியாமக உறவுதானேடி வரும்..?"
"சின்ன மாமியான்னா என்ன அர்த்தம்...?"
"இதுகூடத் தெரியாத சின்னப் பப்பாவா நீ...? சின்ன மாமியான்னா சின்ன அத்தைன்னு அர்த்தம்..."
"எனக்கொன்னும் அர்த்தத்தைப் பத்தி நீங்க பாடம் எடுக்க வேணாம்.. இப்பச் சொல்லுங்க.. அவ உங்களுக்கு அத்தை மகள்தானே..."
ராதிகா மடக்கி விட.. அவளது கெட்டிக்காரத்தனத்தை மெச்சும் பாவனையில் உதடு பிதுங்கி தோள் குழுக்கினான் பாலமுரளி...
"பிரமாதம்தான் போ.. ஆமாம்.. அவ எனக்கு அத்தை மகதான்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..."
"எதுவும் சொல்லல... கேட்டேன் அவ்வளவுதான்..."
"சோழியன் குடுமி சும்மா ஆடாதே..."
"அந்தப் பழமொழி உங்களுக்குத்தான்.. எனக்கில்ல.. இப்ப என்ன உத்தேசம்..? இப்படியே பேசி நேரத்தை கடத்திட்டு நேரமாச்சுன்னு ஜகா வாங்கிக்கலாம்கிற உத்தேசமா..?"
ராதிகா அவனை ஊடுறிவிப் பார்த்தபடி கேட்ட விதத்தில் பாலமுரளி எழுந்து கொண்டான்.. கையில் பிடித்திருந்த கத்தியுடன் ராதிகாவும் எழுந்து நிற்க.. அவன் பார்வை கத்தியின் மீது படிந்தது...
"இதை நீ தலையைச் சுற்றித் தூக்கியெறிய மாட்டியா..?" முகத்தைச் சுளித்தான் அவன்...
"எதுக்கும் இருக்கட்டும்... இதுதான் எனக்கு கைக்காவல்..." ராதிகா உறுதியான குரலில் சொல்லிவிட்டாள்...
"நீ பண்ற அழிச்சாட்டியத்துக்கு உன்னைச் சாவுடி மகளேன்னு விட்டு ஒழிச்சிருக்கனும்.. மனசு கேட்கலைடி.. அதான் நீ ஆடற ஆட்டத்துக்கு தாளம் போட வேண்டியதாயிருக்கு.. வந்து தொலை..."
அவனை நம்பாமல் அவள் பேசியதைக் கேட்ட பாலமுரளி எரிந்து விழுந்தான்... ராதிகா அசைந்து கொடுக்கவில்லை...
"ஹலோ.. இப்படியெல்லாம் நீங்க சலிச்சுக்கிட்டு.. வேண்டாவெறுப்பாய் என்னைப் பெண்கேட்டு வர வேணாம்...."
"வேற எப்படி வரச் சொல்ற...?"
"சிரிச்ச முகமாய் வாங்க..."
"இந்தச் சிரிப்பு போதுமா...?"
வேண்டுமென்றே பாலமுரளி உதட்டைக் கோணி சிரித்துக்காட்ட...
"இதுக்கு நீங்க சிரிக்காமலே இருந்திருக்கலாம்..." என்றாள் ராதிகா...
"ஏண்டி.. இந்தச் சிரிப்புக்கு என்ன..?" காரில் ஏறுவதற்காக அவளுக்கு கதவைத் திறந்து விட்டபடி அவன் கேட்டான்...
"என் தங்கையும்.. தம்பியும் வில்லங்கம் பிடிச்சவங்க..." காரில் ஏறியபடி அவள் சொன்னாள்...
"உன்னை விடவா..?" என்று கேட்டபடி கார் கதவை மூடியவன் சுற்றிவந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரைக் கிளப்பினான்..
கார் கிளம்பி.. சாலையில் வேகமெடுத்து பறந்தபோது.. 'அப்பாடா..' என்ற விடுதலை உணர்வை அனுபவித்தாள் ராதிகா...
தொலைந்துபோன அவளது வாழ்வை அவள் மீட்டு விட்டாள் என்ற நினைவில் அவளது இமையோரம் கண்ணீர் அரும்பியது..
அதை அவன் கண்டு கொள்ளாமல் இருக்க ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பி இமை கொட்டி சரி செய்து கொண்டாள்..
"என்னடி.. ஈஸி ஆர் ரோட்டையே வெறிச்சுப் பார்க்கிற..? மகாபலிபுரம் போகமுடியாத ஆத்தாமையா..? அப்படியே ஓடிக்கிட்டு இருக்கிற கார் கதவைத் திறந்து குதிச்சு அவனைத் தேடி ஓடிப் போகனும் போல தோணுதா..?" அவன் ஆரம்பித்து விட்டான்...
'ஒரு செகண்ட் உன் முகத்தைப் பார்க்காம வேற திக்கில நான் பார்த்து தொலைக்கக் கூடாதே.. உடனே ஆரம்பிச்சுருவியே...'
அவள் திரும்பி அவனையே இமைக்காமல் பார்த்தாள்...
அவனது வடிவான முகமும்.. அடர்ந்த மீசையும்.. உயரமான தோற்றமும்.. கம்பீரமான உடலமைப்பும் அவளை வசீகரித்தன...
அவளது பார்வையில் அவன் கண்களில் யோசனை வந்தது..
"அப்படியே அள்ளிப் பருகுகிறதைப் போலவே பார்த்து வைக்கறியே... என்ன விசயம்..? இப்படிப் பார்த்துப் பார்த்துத்தானே என்னைக் கவிழ்த்த..? அது எப்படிடீ.. அப்படியே என்மேல ஆசையிருக்கிறவளப் போலவே பார்த்து வைக்கிற..? இந்தப் பார்வையினாலேதானடி உன் பின்னாலே பைத்தியமா அலைஞ்சேன்..?"
அவனைப் பிடித்திருந்ததைப் போல அந்த நொடியில் அவனுடைய அந்தக் கோபத்தையும் அவளுக்கு பிடித்துப் போய் விட்டது.. பிடித்தவன் கையால் சாக நேர்ந்தால் கூட அது வரம்தான்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...!, -45
அம்மம்மா.. கேளடி தோழி...!, -45
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-45.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-45.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy