அம்மம்மா.. கேளடி தோழி...! -35

35 உன்னைத் தொட்ட கைகள் குளிராமல் சுடுவதும் ஏன்... ? பௌர்ணமி நிலவின் ஒளியில் ஓங்கியெழுந்த பேரலைகள் ஓசையுடன் கரையின் மேல் ஆவேசத்துட...


35
உன்னைத் தொட்ட கைகள்
குளிராமல் சுடுவதும் ஏன்...?

பௌர்ணமி நிலவின் ஒளியில் ஓங்கியெழுந்த பேரலைகள் ஓசையுடன் கரையின் மேல் ஆவேசத்துடன் பாலமுரளியை அடிப்பதைப்போல விழுந்து... சரிந்து... மீண்டும் கடலுக்குள் சென்றன.... இதமான கடல்காற்று பாலமுரளியின் உடலைத் தழுவிச் சென்றது.. அதன் இதம் பாலமுரளியின் மன வெம்மையை தணிக்கவில்லை... சற்று முன் நிகழ்ந்து விட்ட நிகழ்விலேயே அவன் மனம் நிலை கொண்டிருந்தது...
'கடைசியில வில்லனைப் போல ஆகிட்டேனே...' மனம் குமுறினான் பாலமுரளி....
அவனின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் தவித்த உறவினர் வட்டாரத்துப் பெண்களைப் பற்றிய நினைவு அவன் மனதில் எழுந்தது...
'ஒருத்தியைக் கூட எனக்குப் பிடிக்காம போயிருச்சே... ஏன்...?'
அவனுக்கு விடை தெரியவில்லை... ராதிகாவை விட அழகான பல பெண்கள் அவனின் உறவினர் வட்டாரத்தில் உண்டு... அவர்களில் சிலரைப் பெண் பார்க்கவென்று மேகலாவே அழைத்துச் சென்றிருக்கிறாள்...  அவர்களில் ஒருவரால் கூட பாலமுரளியின் மனக் கதவைத் தட்ட முடியவில்லை...
'அப்படி இவகிட்ட என்னதான் இருக்குன்னு இவ நினைப்பில நான் விழுந்தேன்...?'
அவனால் இனம் பிரித்துச் சொல்ல முடியவில்லை... ஆனால்... ராதிகாவின் வசீகர முகத்தின் நினைவின் முன்னே.. மற்ற எந்தப் பெண்ணின் முகமும் நிற்க முடியவில்லை என்பதை மட்டும் நிதரிசனமாக அவன் உணர்ந்தான்...
அலைகடலின் மேலே எழுந்து நின்ற முழுநிலவின் மீது அவன் பார்வை படிந்தது...
'நாளை இந்த வேளைபார்த்து
             ஓடி வா நிலா...
         இன்று எந்தன் தலைவன் இல்லை
             சென்று வா நிலா...'
அலைகடலின் மீது ராதிகா எழுந்து நின்று பாடுவதைப் போல முரளியின் முன்னால் காட்சி தோன்றி மறைந்தது... ஒர் கணம் அது ராதிகாதானோ என்ற நினைவில் மனம் பேதலித்தான் முரளி... அவளைப் பிடிக்க முயன்றவனாக ஒர் அடி எடுத்து வைத்தும் விட்டான்... ஒங்கி விழுந்த பேரலை அவன் பாதம் நனைத்ததில் உணர்வு மீண்டவனாக கரைக்கு பின் வாங்கினான்...
"ராதிகா..." தாள முடியாமல் கூவினான்...
இருள் சூழ்ந்த அந்த இரவு நேரத்தில் சற்றுத் தொலைவிலிருந்த காரின் அருகில் குழுமியிருந்த நான்கைந்து இளைஞர்கள் இவனைத் திரும்பிப் பார்த்தனர்...
"யாருடா அது..?"
"தெரியலைடா.."
"தனியா நின்னுக்கிட்டு ஒரு பொண்ணோட பேரைச் சொல்லிக் கத்தறானே..."
"காதல் தோல்வியா இருக்கும்..."
"அதுக்கு கத்தினா சரியாப் போச்சா..."
"வேற என்ன செய்யலாம்னு சொல்ற.."
"தண்ணியடிக்கலாம்.."
"அனுபவம் பேசுது..? ம்ம்ம்..?"
மற்ற நண்பர்கள் உரத்துச் சிரிக்க.. சொன்னவன் முரளியை உற்றுப் பார்த்து விட்டு அவனருகே போகப் போனான்...
"எதுக்குடா அங்கே போற...?"
"அட்வைஸ் பண்ணாமுன்னுதான்..."
"நீ போடற மொக்கையை அட்வைஸ்ன்னு பீலா விடாதே... சரக்குன்னா அட்வைஸ் பண்ணக் கிளம்பிருவியே... நீயென்ன கருத்து கந்தசாமியாடா..? இப்படி அட்வைஸங்கிற பேரில மொட்டை ரம்பம் போட்டுத்தானே.. அபூர்வமா கிடைச்ச உன் ஆருயிர் காதலியை ஓட்டி விட்ட... இப்ப இந்த நடுராத்திரியில போயி அவன்கிட்ட அதே ரம்பத்தை ஆரம்பிக்கிறேன்னு சொல்றியே.. உனக்கே இது ஓவராத் தெரியலையா..?"
"ஒருத்தன் நல்லது செய்ய நினைச்சா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே... அவனே பாவம்... தனியா நின்னு புலம்பிக்கிட்டு இருக்கான்.. அவனுக்கு ஆறுதல் சொல்லனம்னு நினைச்சா.. ஆளாளுக்கு என்னை ஓட்டறிங்களா..?"
"அதுக்கப்புறம் உன் தலைவிதி... போறதுன்னா போ... எதுக்கும் அவன்கிட்டப் போய் பேசாம தள்ளி நின்னே மொக்கை போடு... அவன் பாட்டுக்கு கடுப்பில உன் செவிலிலே நாலு அறையை விட்டு கடலுக்குள்ள தூக்கிக் கடாசிரப் போறான்..."
நண்பர்கள் சொன்னதை அலட்சியம் செய்துவிட்டு அந்தக் கருத்து கந்தசாமியாகப் பட்டவன் கடலை வெறித்துக் கொண்டிருந்த பாலமுரளியின் அருகில் சென்றான்...
"சார்...!"
அவன் அழைப்புச் சத்தம் செவியை எட்டாதவனா பாலமுரளி.. கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்...
'சொல்ல நினைத்த ஆசைகள்...
             சொல்லாமல்  போனதேன்...?'
ராதிகா கடலலையின் மீது முகம் காட்டிப் பாடிக் கொண்டிருந்தாள்...
அவள் மீது கொண்ட பேராசையின் அளவைச் சொல்ல முடியாமல் போன துயரத்தில் பாலமுரளியின் இதயம் வெடித்து விடும் போல இருந்தது...
'என்னை விட்டுவிடுங்க...'
சற்று முன் கைகூப்பி கதறியழுது மன்றாடிய ராதிகா அவன் மனக் கண்ணில் நினைவுக்கு வந்தாள்...
பூவாக கையாள வேண்டிய காதலியை கசக்கி முகர்ந்து விட்ட நினைவில் மனம் கசந்தான் பாலமுரளி...
"பாவி..." வாய் விட்டுக் குமுறினான்...
"என்னை இந்த நிலைமையில கொண்டாந்து நிறுத்திட்டியேடி..."
ஒரு கீழ்தரமான காரியத்தை செய்ய நேர்ந்து விட்ட துயரத்தில் அவன் புலம்பிக் கொண்டிருந்ததை அனுதாபத்துடன் கேட்ட அந்த கருத்து கந்தசாமியாகப் பட்டவன் பரிதாபப் பட்டான்...
"ஐயோ பாவம்... உங்க காதலியும் உங்களை நட்டாத்தில விட்டுட்டு ஓடிப் போயிட்டாளா சார்...?"
மனதில் சுமந்திருந்த துயரச் சுமையின் கனம் தாங்காமல் தனிமையை நாடி வந்திருந்த பாலமுரளி... தனிமை கலைந்ததில் கோபம் கொண்டவனாக... அருகில் நின்றவனை முறைத்தான்...
"இதைப் பார்த்தா ஆறு மாதிரி தெரியுதா..?" கடலைக் காட்டிக் கேள்வி கேட்டான்...
"இதைப் போய் யாராச்சும் ஆறுன்னு சொல்வாங்களா சார்...?"
அனுதாபப்பட்டவன் மனதில் பாலமுரளியின் மனநிலை குறித்தான ஐயம் எழுந்தது...
'என்னடா இது..? இந்த ஆள் பாட்டுக்கு கடலைக் காட்டி ஆறான்னு கேட்கிறானே... மறை கழண்ட கேஸோ...'
பாலமுரளியின் சிவந்த கண்கள் அந்த இருளிலும் தீக்கங்குகளாக ஜொலித்ததில் எதற்கும் இருக்கட்டுமென்று நண்பர்கள் சொல்லியனுப்பியதைப் போல தள்ளி நின்று கொண்டான்...
"தெரியுதில்ல..? இது ஆறில்ல... கடல்ன்னு தெரியுதில்ல...? அப்புறம் என்ன வேலைக் கழுதைக்கு என்னைப் பார்த்து... எவளாவது நட்டாத்தில விட்டுட்டுப் போயிட்டாளான்னு கேள்வி கேட்ட..?" பாலமுரளி உஷ்ணமானான்...
"அதில்ல சார்... தனியே நின்னு புலம்பிக்கிட்டு இருந்தீங்களேன்னு கேட்டேன்..."
"உன் வீட்டுக்கு வந்து உன்கிட்டப் புலம்பினேனா..?"
"அதில்லசார்.. கடல்கிட்ட புலம்பினீங்களேன்னு வந்தேன்..."
"அதுக்கு கடலில்ல கேள்வி கேட்கனும்..? நீயேண்டா கேட்ட..?"
கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் ஆன கதையாய்.. அனுதாபிக்கான மரியாதை தேய்ந்து.. காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போனதில் அனுதாபி அரண்டே போனான்...
"அதில்ல சார்..." அவன் மேலும் விளக்கம் கூற முற்பட... பாலமுரளி... அவன் கழுத்தில் ஒற்றைக் கையை வைத்து இறுக்கினான்...
"சும்மா... கீறல் விழுந்த ரிகார்டைப் போல.. அதில்ல.. அதில்லன்னு ராகம் போட்ட.. அடிச்சுத் தூக்கி.. கடல்லே வீசிருவேன்.. ஏண்டா.. நானே நிம்மதியைத் தேடி கடலுப் பக்கம் வந்திருக்கேன்... நீ இங்கேயும் வந்து ரம்பம் போடறியா.. மகனே! உன்னைப் பொலி போட்டாத்தாண்டா அடங்குவ...."
பாலமுரளியின் ஒற்றைக்கையை இரண்டு கைகளாலும் விலக்கப் பார்த்து முடியாதவனாக.. அனுதாபி... 'லபோ.. திபோ...' என்று அலறிவைக்க.. அவனின் அலறல் சப்தம் கேட்ட நண்பர்கள் திரும்பிப் பார்த்துவிட்டு உதவிக்கு ஓடி வந்தார்கள்...
"என்னசார்... என்ன ஆச்சு...?"
"இவன் யாரு..?"
"எங்க பிரண்ட்தான் சார்.."
"மனுசனுக்கு டென்சன் ஏத்தற மாதிரியே வாயை விடறான்..."
"தெரியாம பேசிட்டான் சார்... விட்டுருங்க..."
அவர்கள் ஏகத்துக்கும் கெஞ்சியதில் போனால் போகிறதென்று கையை விலக்கினான் பாலமுரளி... சுவாசிக்க காற்று கிடைத்ததில் அனுதாபி... லொக்கு.. லொக்கென்று இறுமி... வாய்வழியே அவசரமாகக் காற்றை இழுத்து மூச்சு வாங்கினான்...
"வாடா.. டேய்..."
அவனுடைய நண்பர்கள் அவனை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு அகன்றார்கள்...
"சொன்னாக் கேட்டியாடா.. அவனே வெறி பிடிச்சாப்புல நிக்குறான்... அவன்கிட்டப் போயி மொக்கை போட ஆரம்பிச்சிருக்கியே... நாங்க வரப்போயி ஆச்சு... இல்லைன்னா... நீ போட்ட மொக்கைக்கு... அடிச்சு நடுக்கடல்ல வீசிட்டுப் போயிருப்பான்..."
"போடா டேய்... நல்லது சொல்லப் போனவன அவன் கொல்லப் பாக்குறான்.. அவனை ஏன்னு ஒரு வார்த்தை கேட்காம வந்து நிக்கறிங்களே... நீங்கள்ளாம் பிரண்ட்ஸாடா...?"
"உன் கழுத்தை ஒற்றைக் கையில பிடிச்சுத் திருகிக்கிட்டு இருக்கான்.. நீ ரெண்டு கையாலயும் விலக்கப் பாக்கிற.. முடியலை.. அவன்கிட்டப் போயி.. ஒருவார்த்தை கேட்டு வைச்சோம்ன்னு வைய்யி.. அந்த ஒற்றைக்கை.. எங்க கழுத்தைத் திருக வந்துரும்.. தேவையாடா எங்களுக்கு...?"
"அதுக்கு...?"
"வாயைப் பொத்திக்கிட்டு காரில் ஏறு... நாம மீட்டிங் போட வேற இடம் கிடைக்குதான்னு பாப்போம்... அவனைப் பார்த்தா ஒற்றைக் கையில நூறு பேரோட மென்னியைத் திருகிருவான் போல இருக்கு... உன்மேல இருக்கிற காண்டை எங்க பக்கம் திருப்பினா என்னாகிறது..."
அவர்கள் அனுதாபியை காரில் இழுத்துப் போட்டுக் கொண்டு... காரைக் கிளப்பிச் சென்றுவிட... பாலமுரளியை அவன் தேடிய தனிமை சூழ்ந்து கொண்டது...
'வண்ண வெளியின் வாசலில்..
             என் தேவன் தோன்றினான்...'
விழிகளைச் சுழற்றி அவனைப் பார்த்த வண்ணம் ராதிகா ஆகாயத்தில் தோன்றிப் பாடினாள்...
'என்னைப் பார்த்துத்தான் உன் தேவன்னு சொன்னேன்னு நான் நினைச்சேனேடி.. அவனைப் பார்த்தில்ல நீ சொல்லியிருக்க...'
பாலமுரளி கடற்கரை மணலில் மல்லாந்து படுத்து கைகளை மடித்துத் தலைக்குக் கொடுத்து.. வானத்தைப் பார்த்துக் கேட்டான்...
'மன்னன் நடந்த பாதையில்
             உன் கால்கள் செல்வதேன்..?
    மங்கையே உன் கண்கள் இன்று
             மயக்கம் கொள்வதேன்...?'
ராதிகாவின் மயக்கும் பார்வை நிலவில் தோன்ற... பாலமுரளிக்கு உன் மத்தம் பிடித்தது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -35
அம்மம்மா.. கேளடி தோழி...! -35
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-35.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-35.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy