அம்மம்மா.. கேளடி தோழி...! -32

32 என்னென்னவோ மனதில் நினைத்தேன்.. சொல்லிடத்தான் வார்த்தையில்லை... சப்தம் செய்யாமல் மாடியேறி வந்தாள் கீதா... அங்கே.. மொட்டை மாடியி...


32
என்னென்னவோ மனதில் நினைத்தேன்..
சொல்லிடத்தான் வார்த்தையில்லை...

சப்தம் செய்யாமல் மாடியேறி வந்தாள் கீதா... அங்கே.. மொட்டை மாடியின் கைப்பிடி சுவரில் சாய்ந்து அமர்ந்து வானிலிருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தாள் ராதிகா...
'ஏன்.. இவ எப்பப் பார்த்தாலும்.. ஒரு மார்க்கமாகவே இருந்து வைக்கிறா...?'
மனதில் கேள்வி எழ... சந்தடி செய்யாமல் ராதிகாவின் முன்னால் போய் நின்றாள் கீதா...
வான்வெளியில் சூன்யவெளியை வெறித்துக் கொண்டிருந்த ராதிகாவுக்கு தூக்கிவாரிப் போட்டது...
"ஏண்டி பிசாசே... சொல்லிட்டு வரமாட்டியா..? இப்படியா திடுதிப்புன்னு இருட்டுக்குள்ள வந்து நின்று பயமுறுத்துவ...?"
"பயமா..? உனக்கா..? இதை என்னை நம்பச் சொல்றியா..?"
"ஏண்டி..? நான் பயப்படமாட்டேனா..?"
"அது அப்போ.."
"இப்போ மட்டும் என்ன வந்து தொலைச்சுச்சாம்.."
"பயமே உன்னைப் பார்த்து பயப்படுதோன்னு எனக்கொரு சந்தேகம் வந்து தொலைச்சிருக்கடி ராது..."
"ப்ச்ச்..."
ராதிகா எரிச்சலுடன் 'உச்' கொட்டிவிட்டு முகம் திருப்பிக் கொள்ள.. அவளருகில்.. அவளைப் போல கைப்பிடி சுவரில் முதுகை சாய்த்து.. சாய்ந்து உட்காராமல் கைப்பிடி சுவரிலேயே அமர்ந்தாள் கீதா..
"ஏண்டி அங்கே உட்கார்ந்து தொலைக்கிற..?"
"எல்லாம் உன் முடி கோதிவிட வசதியாய் இருக்குமேன்னுதான்..."
கீதாவின் பேச்சு இங்கேயிருக்க.. பார்வை எங்கோ இருப்பதை கவனித்த ராதிகா கடுப்பானாள்...
"உனக்கு எதுக்கு வசதியாய் இருக்கும்ன்னு எனக்குத் தெரியாதா..? அங்கே யாரு நிக்கிறது..? எதிர் வீட்டுத் தடியனா..?"
"ஊஹீம்... பக்கத்து வீட்டு முரடன்..."
"ஏண்டி.. இப்படி எங்க உயிரைப்போட்டு வாங்கற..?"
"இந்த டயலாக்கை உன்னை நினைச்சுத்தான் இவ்வளவு நேரமா கீழே லேடிஹிட்லர் கத்திக்கிட்டு இருந்தாங்க..."
"ம்ச்ச்..."
மீண்டும் 'உச்' கொட்டிவிட்டு ராதிகா அடங்கிப் போக.. அவளை யோசனையோடு பார்த்தாள் கீதா...
"உனக்கு என்னதான் பிரச்னை ராது.. என்கிட்டக் கூட சொல்ல மாட்டியா...?"
தங்கையின் அனுசரணையான பேச்சில் கண் கலங்கி விட்டாள் ராதிகா... ஒரு வினாடி.. தன் மனதிலிருப்பதை இவளிடம் கொட்டிவிட்டால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது.. மறுநொடியில் அந்த எண்ணத்தை மனதிலிருந்து அழித்தாள்...
எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவள் மனதிலிருப்பதை வெளியில் சொல்லுவாள்..?
பாலமுரளி அவளிடம் காதல் சொன்னான்தான்.. அதோடு சேர்த்து அவள் சங்கரைக் காதலிக்கிறாள் என்ற குற்றச்சாட்டையும் சேர்த்துச் சொன்னான்.. அவளை முதன் முதலாக தொட்டுத் தழுவி.. முத்தமிட்டவன்.. மறுநாளே.. காற்றில் கலந்த புகைபோல மாயமாய் மறைந்து விட்டான்.. அவளுக்காக தினந்தோறும்.. தெருமுனையில் காத்திருந்ததாக கூறியவன்.. அவளை தொட்டபின்னால்.. எந்த முனையிலும் கண்களுக்கு தென்படாமல் சென்று விட்டான்...
இப்படிப் பட்டவனுடன் நடந்த காதல் நிகழ்வுகளைப் பற்றி எப்படி அவளால் வெளியில் சொல்ல முடியும்...?
அவன் அவளுடைய காதலை அறியவில்லை.. அவள் மனதில் அவனைக் கண்டதும் பற்றிக் கொண்ட மோகத் தீயைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை... மாறாக.. சங்கரின் கவர்ச்சியைக் கண்டு அவள் மோகித்து விட்டதாக அவளைக் குற்றம் சாட்டினான்.. பட்டிக் காட்டை வெறுத்து.. பட்டணத்தின் நாகரிகத்தில் அவள் மூழ்கிவிட்டதாக தீர்ப்புக் கூறினான்... சங்கரும் அவளும் காதலித்துக் கொண்டிருப்பதாக முடிவே எடுத்து விட்டான்...
அவனைத் தேடிப்பிடித்து உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவன் இருக்குமிடத்திற்கு அவள் போக வேண்டும்... தென்காசியின் அருகிலிருக்கும் தேனூத்தூ கிராமம் என்ற ஒரே அடையாளத்தை வைத்துக் கொண்டு... அவன் ஊர் தேடி அவள் செல்ல முடியுமா..? அப்படியே சென்றாலும்.. அடுத்தவனை அவள் காதலித்து விட்டதாக அவன் முடிவே கட்டிவிட்ட பின்பு... அவன் முன்னால் எதைச் சொல்லிக் கொண்டு அவளால் நிற்க முடியும்...?
எதைச் சொன்னாலும்.. அவன் நம்புவானா...? அவள் சொல்வதை காது கொடுத்துத்தான் கேட்பானா..?
அவன் தொட்டதைச் சொல்லலாம்.. அதனால் உன் கற்பு பறிபோய் விட்டதா என்று அவன் கேட்டுவிட்டால்.. அந்த நொடியில் அவள் குற்றுயிராய் ஆகிவிட மாட்டாளா..?
அவன்தான் முதன் முதலாய் அவளைத் தொட்ட ஆண்மகன் என்று அவள் எடுத்துச் சொன்னால் அவன் சிரிக்க மாட்டானா...?
காலேஜிலும்.. லைப்ரரியிலும்.. கோவிலிலும்... பார்க்கிலும்.. அந்த சங்கர்கூடச் சுற்றினாயே... அவன் உன்னைத் தொடவில்லையா..? யாரிடம் காது குத்தப் பார்க்கிறாய் என்று கேட்க மாட்டானா...?
எந்தப் பக்கம் போனாலும்.. அங்கே வழி அடைத்திருக்க.. மூச்சுத்திணறிப் போனாள் ராதிகா... அவளது அந்தரங்க மனதில் அவன் முகம் பதிந்திருப்பதை எப்படி இந்த உலகத்தின் முன்னால் சொல்வது என்ற வழி தெரியாமல் திகைத்துப் போனாள்...
அவனின் கோப முகத்தைக் காட்டாமல்... அவன் மட்டும் கொஞ்சமேனும் சாந்த முகத்தைக் காட்டிச் சென்றிருந்தால்.. ராதிகாவிற்கு சிறிதளவாவது நம்பிக்கைக் கீற்றின் வெளிச்சம் பரவியிருக்கக் கூடும்...
அப்படியில்லாமல்.. அவன் கோபத்தை மட்டுமே காட்டி.. அவளை குற்றவாளியென்று அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டான்.. அவனது குண இயல்புகளைப் பற்றிய ஒருவிவரமும் அறியாத ராதிகா பயந்து போய் விட்டாள்..
"ராது.. என்னடி.. ஏதும் பேச மாட்டேன்கிற... என்னன்னுதான் சொல்லுடி..."
கீதா அவள் தோள் தொட்டு அசைத்தாள்...
'என்னவென்று சொல்லுவது..? ஒரு நாளின் பின் மாலைப் பொழுதும்.. முன்னிரவுப் பொழுதும் சந்தித்துக் கொண்ட அற்புதமான ஒரு பொழுதில் அவனைச் சந்தித்தேன்... அவன் பார்வையும்.. பேச்சும்.. என்னைப் போலவே இயல்பான குணம் கொண்டவனாக.. அவனிருப்பதை எனக்கு அறிவுறுத்தின... அவன் பாடலும்... என்பாடலும்.. ஒன்றோடொன்று தொடர்ந்து வெளிப்பட்டு எங்களுக்கிடையே சொல்லத் தெரியாத ஒரு சொந்தத்தை ஏற்படுத்தின... நம்வீடு வரை
அவன் வந்ததுதான் உனக்குத் தெரியும்.. என் அந்தரங்க மனதின் அடி ஆழத்திலும் அவன் வந்து விட்டதை நீ அறிய மாட்டாய்.. இத்தனை காதலும் அவன்மீது என் அந்தரங்கத்தில் இருக்க.. அவன் வேறொருவனுடன் எனை இணைத்துப் பேசி பழி சுமத்தி விட்டான்.. பேசியவன் சும்மாவும் போகாமல் எனைத் தொட்டுத்தழுவி.. பின் விட்டு விலகிச் சென்றான்.. அவன் சென்ற திசை அறியாமல் பித்துப் பிடித்து நான் அலைந்து கொண்டிருக்கும் போது.. எவனுடன் எனை இணைத்து அவன் பழி போட்டானோ.. அந்த சங்கரே என்னைப் பெண் கேட்டு.. என் எதிரில் வந்து நிற்கிறான்.. இந்த வினையை நான் எங்கு போய் சொல்ல..?'
"ராது..."
மௌனத்தில் புதைந்து நின்ற ராதிகாவை பயத்துடன் பார்த்தாள் கீதா... இப்படி அவளிருந்து கீதா பார்த்ததேயில்லை.. ராதிகா இருக்குமிடத்தில் மௌனம் இருக்காது.. கலகலப்பு மட்டுமே குடியிருக்கும்...
"என்னைப் பாருடி..."
பக்கத்து வீட்டு மாடியை மறந்து.. ராதிகாவின் அருகே தரையில் சரிந்து அமர்ந்தாள் கீதா...
"என்னன்னு சொல்லுடி..."
இதமான அவளது பேச்சில் ராதிகா குழுங்கி அழுது விட்டாள்.. அதற்கு முன்னால்.. அவள் அழுது பார்த்திராத கீதா பதறிப் போனாள்...
"என்னராது... ஏன் இப்படி குழந்தை போல அழுகிற..?"
"எனக்கு அவனைப் பிடிக்கலைடி..."
"எவனை..?"
"அந்த சங்கரை..."
இதைக் கேட்ட கீதாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை... அப்பேற்பட்ட அழகன்.. கோடிஸ்வரன்.. வெளிநாட்டுக் காரில் வந்து இறங்கி.. ராதிகாவை பிடித்திருப்பதாகக் கூறி.. பெண் கேட்கிறான்.. அதைக் கேட்டதும்.. அதிர்ஷ்டம் வந்து விட்டதாக மகிழ்ந்து போகாமல்.. அவனைப் பிடிக்கவில்லையென்று இவள் அழுது வைக்கிறாளே...
"ராதிகா.." மெதுவான குரலில் அவள் அழைத்தாள்..
"ம்ம்ம்..." ராதிகாவின் விசும்பல் அடங்கவில்லை...
"யாரையாவது நீ காதலிக்கிறாயா..?" ஆழ்ந்த குரலில் கீதா கேட்கவும்.. ராதிகாவிற்கு திக்கென்று ஆகிவிட்டது...
கீதா விவரமானவள்தான்.. ஆனால்.. ராதிகாவின் அந்தரங்க மனதைப் பற்றி அறிந்து கொள்ளும் அளவிற்கு விவரமானவளா...?
அவளது கேள்விக்கு இல்லையென்று பதில் சொல்ல ராதிகாவினால் முடியவில்லை.. அதே சமயம்.. ஆமாம் என்று பதிலைச் சொல்ல வழியுமில்லை... அதனால்..
"உளராதேடி.." என்று எரிந்து விழுந்தாள்...
"இதோ பார்.. எதுவாக இருந்தாலும்.. என்னிடம் சொல்லு.. அதை விட்டுவிட்டு.. ஓங்கிப் பேசி.. என்வாயை அடைக்கப் பார்க்காதே..."
"அவனைப் பிடிக்கலைன்னா.. வேற ஒருத்தனை காதலித்துத்தான் ஆகனும்கிற கட்டாயம் எதுவும் இருக்கா கீதா...?"
"அப்படியில்லைதான்.. ஆனாலும்.. வந்திருக்கும் மாப்பிள்ளையை இந்த அளவுக்கு நீ வெறுக்க காரணம் எதுவும் இல்லையேடி.."
"காரணம் இருந்தால்தான் பிடிக்காமப் போகனுமா..? அவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலைடி..."
"இதுதானே இடிக்குது... அந்த சங்கரைப் பார்த்தா... எனக்கே உன்மேல் பொறாமை.. பொறாமையாய் வருது.. அழகுன்னா.. அழகு.. அப்படியொரு அழகு.. அவனைப் பிடிக்கலைன்னு எந்தப் பெண்ணாவது சொல்லுவாளா..?"
"நான் சொல்லுவேன்..."
"உன்னை அறிவாளின்னு நினைச்சேன்.. கடைசியில் நீ இவ்வளவுதானா..? அவன்கிட்ட
அழகு மட்டுமா இருக்கு..? அறிவும் சேர்ந்திருக்கு... திறமைசாலியா இருக்கான்.. கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கிடக்குது... இவனைக் கட்டிக்க உனக்கு கசக்குதா..?"
கசந்ததுதான்.. எட்டிக்காயாய் கசந்ததுதான்.. மாலை மயங்கிய கருக்கல் வேளையில்.. அவளைத் தொட்டு அணைத்து.. அவள் இதழில் முத்தமிட்டுச் சென்றவனின் நினைப்பு மட்டும் அவளது அந்தரங்க மனதில் கரும்பாக இனித்ததுதான்...
இதை எப்படி அவளால் கீதாவிடம் சொல்ல முடியும்..? சொல்லிவிட்டு அவளை ஒரு தமக்கையாக கண்டித்து வைக்க அவளால் முடியுமா..? நீ மட்டும் ஒருவனுடன் ஒட்டி உறவாடலாம்.. அதை உன் அந்தரங்கத்தில் புதைத்து வைத்து.. வேண்டிய பொழுதுகளில் அதை தோண்டியெடுத்து நினைத்து மகிழலாம்.. நான் மட்டும் சைவப் பட்சிணியாக இருக்க வேண்டுமா என்று அவள் கேட்டாலும்.. கேட்டு வைப்பாளே.. அவள் பயமறியாத இளங்கன்றுதானே...
ராதிகா அந்தரங்கத்தை மறைத்தாள்.. கீதாவிடம் சங்கரை மறுத்துச் சொல்லக் காரணம் தேடினாள்... அதையேதான் கீதாவும் அவளிடம் வினவினாள்...
"ஒரு காரணம் சொல்லு... ஒரேயொரு காரணத்தை ஸ்ட்ராங்காகச் சொல்லு.. நான் உன்பக்கம் நிற்கிறேன்.. உன்னால் அதைச் சொல்ல முடியுமா..?"
ராதிகாவினால் அது முடிந்தது.. அவளுக்கு ஒருகாரணம் கிடைத்துவிட்டது...
"நமக்கு நம்வீடு உசத்தி கீது..."
"இதென்னடி பேச்சு.. நம்ம வீடு நமக்கு உசத்தியாத்தானே இருக்கும்... வேற எப்படி இருக்கும்..?"
"சங்கரோட அம்மாவும்.. அப்பாவும்.. நம்ம வீட்டில் உட்காரக்கூட முகம் சுளிச்சாங்களே.. அதை நீ கவனிச்சயா...?"
"அட.. ஆமாம்..."
கீதாவின் முகத்தில் யோசனை படர்வதை.. நிலவின் மெல்லிய ஒளியிலும் ராதிகாவினால் கணிக்க முடிந்தது...
"நம்ம அம்மா போடற காபி எப்படி டீ இருக்கும்..?"
"கள்ளிச் கொட்டைப் போலவே இருக்கும்.."
"அதைக் கையால் கூட அவங்க ரெண்டு பேரும் தொட்டுப் பார்த்தாங்களா..?"
"நானும் அதை நினைச்சேண்டி.. அதென்னடி அதுக ரெண்டுக்கும் அவ்வளவு மண்டைக் கனம்...?"
"இப்போச் சொல்லு.. அந்த வீட்டுக்கு மருமகளாய் நான போனா எனக்கு என்ன மதிப்பிருக்கும்..?"
"நீ சொல்றதையும் யோசிக்கனும்தான்.. ஆனா ராது.. நீ வாழப் போகிறது சங்கர்கூட.. அவங்களைப் பத்தி நீயேன் கவலைப்படனும்..? ஒற்றை மகனுக்கு பெண்டாட்டியாய் வந்தவளை அனுசரித்து வைத்துக் கலைன்னா அவ மகனைப் பிரிச்சு.. தனிக்குடித்தனம் கூப்பிட்டுக்கிட்டு போயிடுவான்னு அவங்க இல்ல.. உன்னை நினைச்சுக் கவலைப்படனும்...?"
இவள் இத்தனை விவரமானவளாக இருந்து தொலைக்கக் கூடாது என்று ராதிகாவின் மனதிற்குள் எரிச்சல் மண்டியது...
'இவளுக்கு மட்டும் புத்தி எப்படியெல்லாம் வேலை செய்து வைக்குது...'
அதீத புத்திசாலியான தங்கையை முறைத்துப் பார்த்தாள் ராதிகா...
"உனக்கேண்டி புத்தி இப்படிப் போகுது...?"
"எப்படிப் போகுது..?"
"அந்த சங்கரே... அவனைப் பெத்தவங்களுக்கு ஒற்றைமகன்..."
"அதைத்தானே நானும் சொல்றேன்..?"
"அவன் எப்படிடீ.. பெத்தவங்களை விட்டுவிட்டு தனிக்குடித்தனமாய் வருவான்...? அதை நீ யோசிக்கவே மாட்டியா..?"
"நீ சொல்லுகிற விதமாய் சொன்னால் அவன் கேட்டுக்க மாட்டானா..?"
கீதாவின் கேள்வி போகும் திசையை உணர்ந்தவளுக்கு கோபம் வந்துவிட்டது..
"ச்சீ.. என்ன பேச்சுன்னு.. இப்படியெல்லாம் பேசற..?"
"நாலையும் தெரிஞ்சு வைச்சுக்கனும்னு நம்ம லேடி ஹிட்லர் அடிக்கடி சொல்லுவாங்க ராது.. நான் அதைத்தான் தெரிஞ்சு வைச்சிருக்கேன்.. அது உனக்குத் தப்பாத் தோணினா.. நான் என்ன பண்ண...?"
"கீது... ப்ளீஸ்... எனக்கு அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதில் இஷ்டமில்லை... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவனைப் பெத்தவங்களும்.. சொந்தக்காரங்களும் என் வீட்டை மதிக்கனும்.. என்னைப் பெத்தவங்களை மதிக்கனும்.. என் கூடப் பிறந்தவங்க கிட்ட பாசமா இருக்கனும்.. அப்படிப்பட்ட இடத்தில்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்..."
"நீ சொல்கிறதும் சரியாத்தான் இருக்கு... எதுக்கும் இதைப் பத்தி லேடி ஹிட்லர் காதில போட்டு வைக்கிறேன்.."
செய்தியைக் கேட்ட ராஜேஸ்வரி மலையேறி விட்டாள்.. ராதிகாவிற்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா என்று கேட்டாள்.. துரும்பைக் கிள்ளிப் போட்டு.. அதை மாப்பிள்ளையென்று அழைத்து வைத்தால்.. அதுகூட தெனாவெட்டுக் காட்டும் என்று எடுத்துவைத்தாள்.. ஒன்றும் இல்லாதவர்களே (இதைச் சொல்லும் போது.. சுவரில் மாட்டியிருந்த மாமனார்... மாமியாரின் மாலை சூட்டப்பட்ட புகைப்படங்களை பார்த்துக் கொண்டாள்..) ஆட்டம் போடுகிறபோது அப்பேற்பட்ட கோடிஸ்வரர்கள் ஆடமாட்டார்களா  ? என்ற வினாவை முன்னால் வைத்தாள்...
மொத்தத்தில் ராதிகாவின் மறுப்பை ராஜேஸ்வரி அலட்சியம் செய்தாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -32
அம்மம்மா.. கேளடி தோழி...! -32
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-32.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-32.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy