அம்மம்மா.. கேளடி தோழி...! -31

31 எங்கேயோ கேட்ட குரல்.. உன் மனதில் வரவில்லையா.. ? சங்கர் எதிலும் வேகமான.. தீர்க்கமான.. தீர்மானமான முடிவுகளை எடுப்பவன்... அவனது இ...


31
எங்கேயோ கேட்ட குரல்..
உன் மனதில் வரவில்லையா..?

சங்கர் எதிலும் வேகமான.. தீர்க்கமான.. தீர்மானமான முடிவுகளை எடுப்பவன்... அவனது இந்தக் குணத்தை அவனைப் பெற்றவர்கள் எப்போதுமே ஆராதித்து பெருமைப் பட்டுக் கொள்வார்கள்...
அப்போது அந்த குணத்தை எண்ணி அவர்கள் நொந்து நூலாகப் போனார்கள்.. இப்படி எடுத்த எடுப்பில் திருமண நாளைக் குறிக்கும் பேச்சிற்கு சங்கர் போய் விடுவான் என்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை...
ஏதோ காதல் அது.. இது என்று சொல்கிறானே... அது யார்வீடாக இருக்கும் என்று போய்த்தான் பார்ப்போமே என்ற நினைவுடன் கூட வந்தவர்கள்.. அவனது உறுதியான முடிவைக்கண்டு அரண்டு விட்டார்கள்...
எப்படி இவன் பேச்சை நிறுத்துவது என்று அவர்கள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையிலே.. அவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உடனடியாக உதவிவந்தது...
சங்கர் சொன்னதைக் கேட்டதும்... ஆயிரம் வாட்ஸ் பல்புகள் முகத்தில் ஒளிர.. ஆனந்தமாக கணவனைப் பார்த்த ராஜேஸ்வரிக்கு.. அவர் முகத்திலும் அந்த வெளிச்சமில்லாதது அப்போதுதான் உறைத்தது...
'இந்த மனுசன் ஏன் இப்படி இருக்கிறாரு..?' அவள் கவலைக்கு ஆளானாள்...
அதற்கேற்றாற்போல... அவ்வளவு நேரமும் வாயை மூடிக் கொண்டிருந்த அந்த மனிதர்.. அப்போது பார்த்து வாயைத் திறந்தார்...
"அவசரப்பட வேணாம் ராஜி... இது கல்யாண விசயம்... எடுத்தேன்.. கவிழ்த்தேன்னு முடிவெடுக்கக் கூடாது... ஆற.. அமர... நாலையும் யோசிச்சுத்தான் முடிவெடுக்கனும்..."
அவரது பேச்சில் 'அப்பாடா...' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் ராமாமிர்தமும்.. வனஜாவும்...
"ஐ அக்ரி வித் யுவர் வெர்டுஸ் மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி..."
உடனடியாக தனது ஒப்புதலை அளித்தார் ராமாமிர்தம்...
அது நேரம்வரை யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்திருந்த சங்கரைப் பெற்றவர் அப்போது மட்டும் காட்டிய சுறுசுறுப்பைக் கண்டதும் ராஜேஸ்வரியின் புருவங்கள் முடிச்சிட்டன...
"ஷ்யூர்.. ஷ்யூர்.. சங்கர்.. டாடி சொல்கிறதைக் கேட்டாயில்லையா...? நாம் இதை யோசித்து ஒரு முடிவிற்கு வரலாம்..."
சட்டென்று எழுந்து விட்டாள் வனஜா... அதற்கு மேலேயும் அங்கே அமர்ந்திருந்தால் மகன் திருமண நாளை உறுதி பண்ணாமல் கிளம்ப மாட்டான் என்ற பயம் அவளைப் பிடித்துக் கொண்டது...
எழுந்து கொண்ட வனஜாவை பின்பற்றி ராமாமிர்தமும் எழுந்து கொள்ள முயன்றபோது.. சங்கர் அவரை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தான்... எழுந்து கொள்வதை மறந்து அவர் அப்படியே ஆணியடித்ததைப் போல சோபாவில் அசையாமல் அமர்ந்து விட்டார்..
அடுத்ததாக அவன் பார்வை தன் மேல்தான் பாயக்கூடும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்த வனஜா.. அவன் பார்க்கும் முன்னாலேயே அவசரமாக உட்கார்ந்தாள்...
அவளைப் பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் போக.. சங்கர் ராஜேஸ்வரியைப் பார்த்தான்...
"இதில யோசிக்க என்ன இருக்கு ஆண்ட்டி... எதையும் இப்போதே தெளிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்து விடலாம்தானே..." என்று கோரிக்கையொன்றையும் வைத்தான்...
கணவரின் கடுமையான கண்டனப் பார்வைக்கு ஆளானபின்... தானாக வார்த்தைகளை விடுவது உசிதமாகாது என்ற உணர்வுடன் கிருஷ்ணமூர்த்தியை ஏறிட்டாள் ராஜேஸ்வரி...
"தம்பி சொல்கிறதைக் கேட்டிங்கள்ல... இவருக்கு என்ன பதிலைச் சொல்லலாம்..."
அவளது கேள்வியைத் தொடர்ந்து... சங்கரின் விழிகளும் அவரிடம் அதே கேள்வியைக் கேட்க... நிதானத்தை கைவிடாதவராக பேசினார் கிருஷ்ணமூர்த்தி..
"அதான் சொன்னேனில்ல.. நாலையும் யோசிக்கனுமுன்னு..."
"அந்த நாலும் என்ன அங்கிள்... அதைப்பற்றி இப்போதே யோசித்து விடலாமே..." சங்கர் நேரடியாக கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டான்...
அவன் ராஜேஸ்வரியை விட்டுவிட்டு.. அவரிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததில் கிருஷ்ணமூர்த்திக்கு மகிழ்ச்சிதான்... ஒருவழியாக அவரை குடும்பத்தலைவன் என்று அவன் கணக்கில் எடுத்துக் கொண்டதில் அவருக்கு திருப்திதான்... அவரோடு பேச்சுவார்த்தைக்கு அவன் தயாரானதில் அவருக்கு பெருத்த வெற்றிதான்...
ஆனாலும்... அவருக்கு யோசிக்க வேண்டியிருந்தது...
சங்கர் மிகமிக அழகாகவும்... கவர்ச்சியாகவும் இருந்தான்... பெரிய கோடிஸ்வரனாகவும்... அந்த இளம் வயதில் மிகப்பெரிய தொழிலதிபனாகவும் இருந்தான்...
அப்படிப்பட்டவன் பெண் கேட்டு வந்திருக்கிறான்... அதைக் கேட்ட ராதிகாவின் முகத்தில் துளிக்கூட மகிழ்வின் சாயல் தெரியவில்லை...
இதைப்பற்றி அவர் யோசிக்க வேண்டியிருந்தது...
சங்கருக்குத்தான் ராதிகாவைப் பிடித்திருந்தது.. அவனைப் பெற்றவர்கள் அவனுக்காகவே அந்த வீட்டில் காலடி வைத்ததாக வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்கள்.. அத்தோடு... அவர்களிடம் அலட்சிய பார்வை குடிகொண்டிருந்தது... ராஜேஸ்வரி குடுத்த காபி... டிபனை மரியாதைக்குக் கூட அவர்கள் ருசி பார்க்கவில்லை... லேசான புருவச் சுளிப்புடன் அவற்றைத் தொடாமல் அப்படியே டீப்பாயின் மேல் வைத்துவிட்டார்கள்...
அவர்களின் பார்வை... அந்த வீட்டின்மீது அதிருப்தியுடன் படிந்து சுழன்றது... கீதாவையும்.. சுந்தரையும் ஏதோ வேற்றுக்கிரக வாசிகளைப் பார்ப்பதைப் போல பார்த்து வைத்தார்கள்... ராஜேஸ்வரியின் பேச்சுக்கு அவர்கள் பதில் பேச்சு பேச முனையவில்லை... நீயெல்லாம் எனக்கு இணையாக நின்று பேசுவதா என்ற தலைக்கனம் அப்பட்டமாக அதில் வெளிப்பட்டது...
கிருஷ்ணமூர்த்திக்கும்... ராஜேஸ்வரிக்கும் ராதிகா ஒற்றைப் பெண்ணில்லை... அவளுக்கு அடுத்து கீதாவும்.. சுந்தரும் இருந்தார்கள்... ராதிகாவுக்கு வரப்போகும் கணவனின் வீட்டார் இந்த மாதிரி மதிப்பு.. மரியாதையைக் காட்டினால்.. அடுத்து வரும் சம்பந்திகளின் வீடுகளிலும் அதே தானே தொடரும்...?
இதைப் பற்றியும் அவர் யோசிக்க வேண்டியிருந்தது..
ஒரு வீட்டில் மருமகளாக வாழப் போகும் பெண்ணிற்கு கணவன் மட்டும் சரியானவனாக அமைந்து விட்டால் போதுமா...? தனிக் குடித்தனமாக இருந்தால் அது போதும் தான்... இங்கே கதையே வேறு... சங்கர் அவனுடைய பெற்றவர்களுக்கு ஒரே மகன்.. கடைசி
வரை மாமனார்.. மாமியாருடன்தான் அவனது மனைவி குப்பை கொட்டியாக வேண்டும்.. அவ்வாறு குப்பை கொட்ட வைப்பதில் கிருஷ்ணமூர்த்திக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை... அது நியாயம் என்றுதான் அவர் நினைத்தார்.. அப்படி குப்பை கொட்டும் பொறுமை.. பொறுப்பு.. குணத்துடன்தான்... ராதிகாவையும் அவர் வளர்த்திருந்தார்...
அப்படிக் குப்பை கொட்ட வேண்டிய சூழ்நிலையில் ராதிகாவை சங்கரைப் பெற்றவர்கள் வேண்டாத மருமகளாக நடத்தினால் ராதிகாவால் அதை எதிர் கொள்ள முடியுமா..? அவர்களின் உதாசீனத்திற்கு வாழ்க்கை முழுவதும்... ராதிகா ஆளாகிக் கொண்டிருக்க வேண்டி நேர்ந்தால்... அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா...?
இதையும் அவர் யோசிக்க வேண்டியிருந்தது...
அவரோ நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்.. சங்கரோ கோடிஸ்வரன்.. மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவன்... இன.. மொழி.. வேறுபாட்டைப் போல... இந்த வர்க்க பேதமும் யோசிக்கப் படக் கூடிய ஒன்றுதான்...
'இந்த மிடில்கிளாஸ் பழக்கத்தை மாத்திக்கவே மாட்டியா...'
'இன்னும் ஹை கொஸைட்டி பழக்க வழக்கத்துக்கு நீ கன்வர்ட் ஆகவே இல்லியா...'
'இது மிடில்கிளாஸ் யோசனை...'
'நாங்கள்ளாம் இப்படித்தான்...'
இதுபோன்ற பேச்சுக்கள் வாழ்நாள் முழுவதும் ராதிகாவை தொடர்ந்து வரும் அபாய அறிகுறிகள் உள்ளனவே.. அந்தப் போராட்டத்தை ராதிகாவால் கடைசிவரை போராடிக் கொண்டிருக்க முடியுமா..?
இதைத்தான் அவர் முக்கியமாக யோசிக்க வேண்டியிருந்தது...
இந்த நான்கில் ஒன்றைக்கூட.. சங்கரையும்.. அவனைப் பெற்றவர்களையும் வைத்துக் கொண்டு அவரால் வெளியே சொல்ல முடியாது எனும் போது.. நான்கையும் சொன்னால்தான் ஆயிற்று என்று சங்கர் அடம் பிடித்தால்... அவர் பாவம்.. என்ன செய்வார்...?
"இல்லை.. நாம் இன்னொரு முறை சந்திக்கும் போது மேற்கொண்டு என்ன செய்யலாமுன்னு யோசிக்கலாம்.." அவர் பட்டுக்கத்தரித்தார்...
"ஓகே..."
அதற்கு மேலும் அவரை சோதிக்க விரும்பாமல் சங்கர் எழுந்து கொண்டான்.. அதற்காகவே காத்திருந்ததைப் போல ராமாமிர்தமும்.. வனஜாவும் எழுந்து கொண்டதைக் கவனித்த கிருஷ்ணமூர்த்திக்கு என்னவோ போல இருந்தது...
'இதுக்கு இவங்க இந்த இடத்தில பெண் கேட்க வேணாம்ன்னு மகனிடம் சொல்லிட்டு வராமலேயே இருந்திருக்கலாமே...'
வந்தவர்களை வழியனுப்ப ராஜேஸ்வரி வாசலுக்குப் போக.. கிருஷ்ணமூர்த்திக்கு அவளுடன் போக மனமில்லை... அவர் தேங்கி நின்று.. ராதிகாவின் முகத்தைப் பார்த்தார்... அதில் தெரிந்த கலவரம் அவரை பாதித்தது...
'பாவம்.. என் குழந்தை... இப்படிப் புயலைப் போல அவங்க வந்து போனா... இவளுக்கு அதிர்ச்சியாத்தானே இருக்கும்...?'
"போம்மா... போய் முகத்தை கழுவி.. டிரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு ரிலாக்ஸாய் காபி சாப்பிடு..." பரிவுடன் மகளைப் பார்த்துச் சொன்னார்...
ராதிகாவிற்கு அவரின் அந்த வார்த்தைகள் இதமாக இருந்தன... அவளுக்கு உடனடியாக தனிமை வேண்டியிருந்தது... சங்கரின் இந்த அதிரடித் தாக்குதலில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்திக்க வேண்டியிருந்தது...
"தேங்க்ஸ்ப்பா..." ராதிகா அவளுடைய அறைக்கு விரைந்தாள்...
வந்தவர்களை வழியனுப்பி விட்டுவந்த ராஜேஸ்வரி மகளைக் காணாமல் புருவங்களை உயர்த்தினாள்...
"ராதிகா எங்கே..?"
"அவரூமுக்கு போயிட்டா..."
"எதுக்காம்..?"
"இது என்னடி கேள்வின்னு கேட்டு வைக்கிற... காலையில காலேஜீக்கு கிளம்பிப் போனவ.. இப்பத்தான் வீடு வந்து சேர்ந்திருக்கா.. வந்தவளுக்கு சூடாய் ஒரு கப் காப்பியக் கொடுக்கனுமுன்னு உனக்கு தோணுச்சா..."
"அதைத்தான் தினமும் கொடுக்கறேனே.. இன்னைக்கும் அதேதானா..?"
"இப்பவும் கொடு... அவ முகம் கழுவி.. டிரஸ் சேன்ஜ் பண்ணப் போயிருக்கா..."
"இப்ப அதுதான் ரொம்ப முக்கியம்..."
"வேற எதுடி முக்கியம்...?"
"ஏங்க... நீங்க விவரத்தோடதான் பேசறிங்களா..?"
"ஆமாண்டி.. இந்த வீட்டில் நீ ஒருத்தி மட்டும்தான் விவரம்... மத்தவங்க எல்லாம் சைபர்தான்.."
"இந்த வீதுபோட இதுவா நேரம்...?"
"சும்மா... இதுவா.. இப்பவான்னு தாண்டிக் குதிக்காதே.. இப்ப என்ன நடந்து போச்சுன்னு நீ ஆகாயத்துக்கும்... பூமிக்குமா தாண்டிக் குதிக்கற...?"
இப்படிக் கேட்ட கணவரை விசித்திரமாகப் பார்த்தாள் ராஜேஸ்வரி...
'எப்படிப்பட்ட சம்பந்தம் தேடி வந்திருக்கு.. இந்த மனுசன் என்னன்னா... இப்படி... எனக்கென்னன்னு ஒரு பார்வை பார்த்துக்கிட்டு நின்னு வைக்கிறாரே...' அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது...
"எனக்கு நல்லா வந்திரும் வாயிலே..." என்று அவள் ஆரம்பிக்க... அதுநேரம் வரை அவர் காட்டிய அனு சரணையான தோற்றத்தில்... வீடு மாறி வந்து விட்டோமோ என்ற பலத்த சந்தேகத்துடன் இருந்த கீதாவும்.. சுந்தரும்.. இது அவர்களுடைய வீடுதான்... ராஜேஸ்வரி அவர்களின் அன்புக்குரிய அம்மாதான் என்று உறுதியானவர்களாக.. ஒருவரையொருர் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டார்கள்...
"உனக்கு எப்படி வேணும்னாலும் வந்திட்டுப் போகட்டும்.. இப்போதைக்கு தொன தொணக்காம காபியை கலந்து கொடு..."
"இப்பத்தானே குடிச்சீங்க..?"
"வந்திருந்த ஜீவராசிகளின் முன்னாலே... மனுசனுக்கு தொண்டையில பச்சைத் தண்ணி இறங்குமாடி..?"
இப்படிக் கேள்வி கேட்டவரிடம்...
"பச்சைத் தண்ணிதானே இறங்காது.. காபி இறங்கியிருக்குமில்ல..?" என்று எதிர் கேள்வி கேட்டாள் ராஜேஸ்வரி...
"ஏண்டி கேட்க மாட்டே... வம்பாடு பட்டு இந்தக் குடும்பத்துக்காக உழைச்சுக் கொட்டறேனில்ல... நீ இதுவும் கேட்ப... இன்னமும் கேட்பே.."
சாதுவான கிருஷ்ணமூர்த்திக்கே கோபம் வந்து விட்டது...
அதற்கெல்லாம் அலட்டிக் கொள்கிறவளில்லை ராஜேஸ்வரி... அவள் அவரது கோபத்தை கண்டு கொள்ளவேயில்லை...
"இந்தக் குடும்பத்துக்கு உழைச்சுக் கொட்டாம வேற எந்தக் குடும்பத்துக்கு உழைச்சுக் கொட்டப் போறிங்க..? இந்த ரெண்டு மாசமா சம்பளக் கவரில பணம் குறையுதே.. என்ன விவகாரம்ன்னு விசாரிக்கனும்னு நினைச்சேன்.. இதுதானா அது..?"
இப்படியெல்லாம் பேசி வைக்க ராஜேஸ்வரியால் மட்டும் தான் முடியும்...
"அம்மா... பாவம்.. நம்ம அப்பாவுக்கு அவ்வளவுக்கெல்லாம் தைரியம் பத்தாதும்மா...," கீதா தகப்பனாருக்காக பரிந்து பேசி விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டாள்...
"அவருக்கு தைரியம் பத்தாதுன்னு நீ தூண்டிவிடறயா..? வயசுப் பெண் பேசற பேச்சா இது..?"
'நீங்க மட்டும் வயசுப் பெண்ணுக்கு முன்னாலே இன்னொரு குடும்பத்தைப் பத்திப் பேசலாமா..?'
ஆனானப்பட்ட குடும்பத் தலைவரான கிருஷ்ணமூர்த்தியையே வாயைத் திறக்க விடாமல்.. எனக்கு நல்லா வந்திரும் வாயிலே என்று வார்த்தைக்கு வார்த்தை பேசி மிரட்டி வைத்திருக்கும் ராஜேஸ்வரியின் முன்னால் வாய்விட்டு கீதா மட்டும் பேசிவிட முடியுமா என்ன..?
அவள் மனதிற்குள் பேசியபடி வெற்றிகரமாக பின் வாங்கினாள்...
"எல்லாம் இவர் கொடுக்கிற இடம்டி... பேச வேண்டியவள ரூமுக்குள் துரத்தி விட்டுட்டு.. உன்னைப் பேசவிட்டு அழகு பார்க்கிறாரே.. இந்த மகராசன்.. இவரைச் சொல்லனும்டி.. உன்னைச் சொல்லக் கூடாது.."
கிருஷ்ணமூர்த்திக்கான மண்டகப்படி தொடர்ந்து கொண்டிருந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -31
அம்மம்மா.. கேளடி தோழி...! -31
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy