அம்மம்மா.. கேளடி தோழி...! -28

28 அவளோடு நானிருந்த... அந்த ம ணி த்துளிகள் போதும்... ஆற்றங்கரையின் மணலினில் கால் புதைய நடந்து கொண்டிருந்தான் பாலமுரளி... நதிநீரின...


28
அவளோடு நானிருந்த...
அந்த மணித்துளிகள் போதும்...

ஆற்றங்கரையின் மணலினில் கால் புதைய நடந்து கொண்டிருந்தான் பாலமுரளி... நதிநீரின் அலைகள் சிறுசிறு வளைவுகளாக கரையில் மோதித் திரும்பும் போது உண்டான நீர் குமிழிகளில் அவன் மனம் லேசாக மறுத்தது... நதிநீரின் நுரையினில் பாதம் படிய நின்றவனுக்கு... அந்த முன்னிரவுப் பொழுதில்... பூங்காவின் இருளில் அவன் பாதம்மீது பட்ட அவள் பாதத்தின் மென்மை நினைவுக்கு வந்தது...
முன்னிரவிற்கும் அவனுக்குமான சம்பந்தத்தின் ஆணிவேரை அவனால் அடையாளம் காண முடியவில்லை...
அவளை அவன் முதன் முதலாக சந்தித்ததும் முன்னிரவுப் பொழுதில்தான்...
அவளை முதன்முதலில் அவன் தொட்டு முத்தமிட்டதும் ஒரு முன்னிரவுப் பொழுதில்தான்...
அவளைப் பற்றிய நினைவுகள் அசுர வேகத்தில் சுழன்றெழுத்து அவனை ஆக்ரமிப்பதை அவனால் தடுக்க முடியவில்லை...
பாதி இரவுகளில்... கனவில் அவளுடன் கலப்பதான நினைவில் அவன் உடலில் பரவசம் ஊற்றாகப் பெருவிப் படர்கிறது... அந்த சந்தோசத்தில் கண் விழிப்பவனின் கைப்பிடியில் அவள் இருக்காமல் தலையணை இருக்கும் போது... மீதி இரவுகள் நரகமாகக் கழிகின்றன...
அவளை சிறையெடுக்காமல் சென்னையை விட்டு திரும்பக் கூடாது என்ற உறுதியுடன்தான் அவன் இருந்தான்... அன்று அவளைத் தொட்டுத் தழுவிய நினைவுகளுடன்.. மறுநாளிலிருந்து... எவ்வாறெல்லாம் அவளை முற்றுகையிட வேண்டும் என்ற வியூகங்களை அவன் வகுத்துக் கொண்டிருந்தபோது... அவனது செல்போன் அலறியது...
"முரளி..." மேகலாவின் குரலில் சோர்வும்... அவனைத் தேடும் பதட்டமும் இருந்தது...
தீனமாக ஒலித்த அந்தக்குரலில்... அவன் உடலில் இருந்த காதல் கிளர்ச்சியுணர்வுகள் பறந்தோட.. அவன் பதட்டமாக எழுந்து அமர்ந்தான்...
"அம்மா...! என்னம்மா ஆச்சு..ஏன் இப்படிப் பேசறிங்க..."
"எனக்கு நெஞ்சு வலிக்குதுடா தம்பி..."
அந்த நொடியில் தன்னை அற்பமானவனாக உணர்ந்தான் முரளி...
அவனைப் பெற்ற தாய்... மரண பயத்துடன் அவனை அழைக்கிறாள்... அவளுக்கு கணவனில்லை... மகளும் அருகில்லை... அவளுடைய வாழ்க்கையின் ஆதாரம் அவளுடைய பிள்ளைதான்... பாதுகாக்க வேண்டிய முரளியோ நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கிறான்... இருந்தபோதும் அந்தத்தாய் அந்த அவலக் குரலை அவனிடம் தான் எழுப்புகிறாள்..
பதினைந்து தினங்களாக கடமையை மறந்து காதலில் மூழ்கி விட்ட தன்னைத்தானே நொந்து கொண்டான் பாலமுரளி...
"பயப்படாதீங்கம்மா... நான் உடனே புறப்பட்டுவர்றேன்.."
"நீ வருகிற வரைக்கும் நான் பிழைத்திருப்பேனாடா முரளி..."
"உங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா... நானிருக்கேன்.. கடவுள் இருக்கார்... அவர் நம்மைக் கைவிடமாட்டார்..."
"எனக்கு ஒன்னும் இல்லைடா தம்பி... உங்க அப்பா போனபின்னாலே... எனக்கு என்ன இருக்கு..நீயும்.. உன் அக்காவும் தான் இருக்கீங்க... உங்களுக்காக இருந்தேண்டா தம்பி... அக்காவுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி அவள வாழவைச்சிட்ட.. உன் கல்யாணத்தையும் கண்குளிற கண்டுப்புட்டா போதும்டா முரளி... அதுவரைக்கும் என் ஜீவன் இருக்குமாடா..?"
திக்கித் திணறி மேகலா பேசுவதைக் கேட்கச் சகிக்கவில்லை முரளிக்கு... அவன் போனை அணைத்து விட்டான்... உடனடியாக அவனது மேனேஜரை போனில் அழைத்தான்...
"சதீஷ்..."
"சார்..." தூக்கக் கலக்கத்துடன் குரல் கேட்டது...
"உடனே எங்க வீட்டுக்கு ஆம்புலன்ஸீடன் போங்க... அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்..." காட்டுத் தீயின் வேகத்துடன் பேசினான் பாலமுரளி...
"என்ன சார் சொல்கிறீங்க..." தூக்கம் கலைந்த சதீஷின் குரலில் பரபரப்பிருந்தது...
பரபரவென்று அவனுக்கு ஆணைகளை பிறப்பித்து விட்டு.. தென்காசியிலிருந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு மேகலாவின் உடல்நிலையைப் பற்றிக் கூறி.. ஆம்புலன்ஸிற்கு ஏற்பாடு பண்ணி விட்டு.. புயல் வேகத்தில் ஹோட்டல் ரூமை காலி செய்துவிட்டு காரில் பாய்ந்தான் பாலமுரளி..
கார் விரைந்து கொண்டிருக்க.. ஆங்காங்கே காரை நிறுத்தி போனில் சதிஷை அழைத்தான் பாலமுரளி...
மேகலாவின் உடல்நிலையைப் பற்றி விசாரித்துக் கொண்டே.. விடிவதற்குள் தென்காசியை அடைந்து விட்டான்...
"சரியான நேரத்தில் கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டிங்க... கொஞ்ச லேட்டாகியிருந்தாலும்... உயிர் பிழைக்கிறது கஷ்டம்தான்..."
டாக்டர் சொன்னபோது முரளி இடிந்தே போய் விட்டான்...
மேகலா மட்டும் அவனுக்கு போன் பண்ணாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்...?
அவசர சிகிச்சைப் பிரிவில்... மாத்திரையின் உதவியுடன் கண்மூடிப் படுத்திருந்தவளின் சோர்ந்த முகத்தைக் கண்டவனின் கண்களில் கண்ணீர் பெருகியது...
"அம்மா..."
அவளது கையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு... அவள் பக்கத்தில் அமர்ந்து விட்டான் பாலமுரளி...
அன்னைக்கும்... பிள்ளைகளுக்குமான சொந்தம் ஆத்மார்த்தமானதல்லவா...பெற்ற பிள்ளையின் ஸ்பரிசத்தை உணராத தாய் உண்டா...?
மகனின் ஸ்பரிசத்தில் கண் விழித்தாள் மேகலா..
"முரளி... வந்துட்டியாடா மகனே..." அவள் விழிகளில் ஜீவன் திரும்ப ஆரம்பித்தது...
"வந்துட்டேன்ம்மா..." குற்ற உணர்வுடன் சொன்னான் பாலமுரளி...
"கடைசியா உன்கிட்டப் பேசனும்னு தோணிருச்சுடா தம்பி..." தழுதழுத்தாள் மேகலா...
"அப்படிச் சொல்லாதீங்கம்மா..." அவள் வாயை இறுக மூடினான் பாலமுரளி...
"போனதும் திரும்பிருவேன்னு சொல்லிட்டுப் போனயே.. ஏண்டா முரளி அத்தனை நாளா அங்கேயே தங்கிட்ட...?"
இந்தக் கேள்விக்கு அவன் என்ன பதிலைச் சொல்லுவான்...?
பெண் என்னும் மாயப்பிசாசு என்னைப் பிடித்து ஆட்டி விட்டதம்மா என்றா சொல்ல முடியும்...?
தாயை.. தமக்கையை... தொழில்களை.. ஊரை.. உறவை.. அவனது உயரத்தை என்று அனைத்தையும் மறக்க வைத்து... ஒரு பெண் அவனை அவள் பின்னால் சுற்றி வர வைத்திருந்தாள் என்ற உண்மையைச் சொன்னால் அந்த தாய் மனம் தாங்குமா..?
"அம்மாவுக்கு உடம்பு சரியில்லைங்களா தம்பி... பார்த்துட்டுப் போக வந்தோம்..."
ஊரே திரண்டு வந்தது... மேகலாவின் உடல் நிலையைப் பற்றிக் கவலையுடன் விசாரித்தது... அந்த நெருக்கடியான நேரத்தில் அவன் தாயின் அருகில் இல்லாமல் போனதற்கு ஆயிரம் காரணங்களை.. அதுவே சொல்லியது...
"தம்பிக்கு ஆயிரம் வேலை இருக்கும்... ஏதாச்சும் புதுசாய் தொழில் ஆரம்பிக்க திட்டம் தீட்டியிருப்பாங்க... இல்லைன்னா.. ஒவ்வொரு நிமிசத்தையும் அளந்து செலவளிக்கும் தம்பி.. அத்தனை நாளா சென்னையில இருந்திருப்பாங்களா...?"
"அதைச் சொல்லுமய்யா.. பணம் காசுக்கு பஞ்சமில்லாத குடும்பத்தில பிறந்த பெரிய மனுசனில்ல... நம்மதம்பி... அவர் காசு பணத்தை கணக்குப் பார்க்காம செலவளிப்பாரு.. நேரத்தை மட்டும் வீணாக்கவே மாட்டாரே... அந்தக் கணக்கில நம்ம தம்பி மன்னனில்ல... என்னய்யா நான் சொல்றது..?"
எதிரே இருப்பவர் அதை இல்லையென்றா சொல்வார்..?
"அதானே..." என்று அவர் ஆமோதித்தாள்...
அவன் அந்த ஊருக்கு பெரிய மனிதன்... இளம் வயதில் பல உயரங்களை தொட்டவன்.. அந்த ஊருக்கே பெருமை தேடித்தந்தவன்... அவன் காரணமில்லாமல் சென்னையில் முகாமிட்டிருக்க மாட்டான் என்றே அனைவரும் நினைத்தார்கள்...
ஆனால்.. அவன் கூடப்பிறந்த பாலசரஸ்வதி மட்டும்.. அப்படி நினைக்கவில்லை...
"அந்தப் பெண் யாரு முரளி...?"
"அக்கா..."
"டேய்.. நான் உன் வயசைத் தாண்டி வந்தவ.. பெண்ணாகப் பிறந்ததாலே இருபது வயதைத் தாண்டியதுமே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து அனுப்பி வைச்சிட்ட.. நானும் ரெண்டு பிள்ளைகளுக்கு தாயாகிட்டேன்... எனக்கு விவரம் ஜாஸ்தி... அம்மாவையும்.. ஊர்காரங்களையும் தான் உன்னால் ஏமாற்ற முடியும்.. என்னை ஏமாற்ற முடியாது.. சொல்லு.. யாரு அந்தப் பொண்ணு...?"
பொறுப்பான அக்காவாக தம்பியை குறுக்கு விசாரணை செய்தாள் பாலசரஸ்வதி.. அவன் முகம் இறுகியது... ராதிகாவைப் பற்றிய விவரங்களை பாலசரஸ்வதியுடன் பகிர்ந்து கொள்ள அவன் விரும்பவில்லை...
"நீ புத்திசாலிதான்.. ஒப்புக்கிறேன்.. அதுக்காக எதையெதையோ கற்பனை பண்ணிக்காதே..."
"டேய்.. நீ ஷோபா வீட்டுக்குப் போனப்ப.. மறுநாளே ஊருக்கு கிளம்பப் போகிறதா சொல்லியிருக்க..."
"ஆமாம்.. அது ஒரு பெரிய குத்தமா..?"
"அப்புறமும் ஏண்டா.. ரெண்டு வாரத்துக்கு அங்கேயே டேரா போட்ட..?"
"இங்கே பார்... எனக்கு கரும்பு மில்லில் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கு.. அதைச் சொன்னால் உனக்குப் புரியுமா..ஒரேநாளில் சரி பண்ணிப் புடலாம்ன்னு தான் போனேன்... போன இடத்தில் வேலை முடியல.. வாரக் கணக்கில வேலை இழுவையாய் இழுத்திருச்சு... என்ன பண்ணச் சொல்ற...?"
தம்பி காட்டிய கண்டிப்பில் பால சரஸ்வதி பின்னடைந்து விட்டாள்... அவளுக்கு கரும்பு மில்iயும் தெரியாது.. அது பற்றிய கணக்கு வழக்கையும் தெரியாது.. அப்படியிருக்கையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவள் தம்பியுடன் மோத முடியும்..?
"அப்புறம் என் சின்ன மாமியா அப்படிச் சொன்னாங்களே..."
"நான் பார்க்கிற வேலைகளையெல்லாம் உன் சின்ன மாமியாரிடம் ஒப்பிக்கனும்னு எனக்கென்ன தலையெழுத்தா..?"
"டேய்.. அவங்க என் சின்ன மாமியாடா.."
"உனக்குத்தான் சின்ன மாமியா.. எனக்கில்லை.."
அந்தப் பேச்சில் பாலசரஸ்வதி அடங்கி விட்டாள்.. அதுவரை சந்தேகப்படும் படியான எந்த காதல் விவரங்களிலும் பாலமுரளி சிக்கிக் கொண்டதாக சரித்திரம் சொல்லாததால்.. அவள் ஷோபா சொன்ன வார்த்தைகளை... பெரிது படுத்தவில்லை..
"அண்ணி... உங்க தம்பி எங்க வீட்டு பார்ட்டிக்கு வந்திருந்தப்போ என் பிரண்டு ஒருத்தியை மீட் பண்ணினார்..."
ராதிகாவை பாலமுரளியுடன் அனுப்பி வைத்தும் விட்டு... அதைப் பற்றி பாலசரஸ்வதியின் காதினில் போட்டும் வைக்கும் திறமை ஷோபாவிற்கு மட்டுமே சொந்தமானது...
அதுவரை அதுபோன்ற விவரங்களை தம்பியைப் பற்றிய விவரங்களாக கேட்டறியாத பாலசரஸ்வதி... ஆச்சரியப்பட்டுப் போனாள்...
"மீட் பண்ணினாருன்னா.. என்ன ஷோபா அர்த்தம்..?"
"அவ என் கிளாஸ் மேட் அண்ணி.. பங்சனுக்கு வந்திருந்தா.. உங்க தம்பிக்கு இன்ட்ரொடுயூஸ் பண்ணி வைச்சேன்.. ஹலோன்னு சொல்லிட்டுப் போயிடுவாருன்னு பார்த்தா.. அந்தப் பொண்ணு பின்னாலேயே பார்ட்டி முடிகிற வரைக்கும் சுற்றினார்.. போதாக்குறைக்கு..
நைட் நேரத்தில அவளைக் காரில் கொண்டு போய் வீட்டில் விடுகிறேன்னு கூடவே கூப்பிட்டுக்கிட்டும் போயிட்டார்..."
மறந்தும்.. ஹேமாவையும் சேர்த்துத்தான் பாலமுரளி கூப்பிட்டுக் கொண்டு போனான் என்பதை அவள் சொல்லவில்லை...
"ஓ..." பாலசரஸ்வதியின் குரலில் தோன்றிய யோசனையில் ஷோபாவின் மனதில் சந்தோச ஊற்றெடுத்தது...
"அண்ணி.. அந்தப் பொண்ணு மிடில் கிளாஸ் பொண்ணு... இதையும் நீங்க நினைவில் வைச்சுக்கங்க.."
"அப்படியா...?"
"அவகூடல்லாம் நான் சமதையா பேசிப் பழக மாட்டேன்.. அண்ணி... என் திக் பிரண்ட்ஸை இன்வைட் பண்ணின இடத்தில இவ இருந்தா... என்னையும் கூப்பிட மாட்டயான்னு ஏக்கமாய் கேட்டா.. நீயும் வான்னு ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன் அண்ணி... நிஜமாகவே வந்து தொலைச்சிட்டா.. வந்தவளுக்கு திரும்பிப் போக முடியலையாம்... வரும்போது பஸ்ஸில் வந்துட்டேன்.. திரும்பிப்போக ஆட்டோவை ஏற்பாடு பண்ணிக் கொடுன்னு என்னை டிஸ்டர்ப் பண்ண ஆரம்பிச்சுட்டா.. தலையெழுத்தேன்னு.. எங்க வீட்டு கார் டிரைவரைக் கூப்பிட்டு அவளை டிராப் பண்ணச் சொன்னா.. உங்க தம்பி முந்திக்கிட்டு தான் கொண்டு போய் விடறேன்னு சொல்லிட்டார்..."






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -28
அம்மம்மா.. கேளடி தோழி...! -28
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy