அம்மம்மா.. கேளடி தோழி...! -27

27 உன்கைவிரல்கள் பட்டபோது.. காற்றோடு நான் கலந்தேன்... அன்றைய இரவில் ராதிகா உறக்கத்தை தொலைத்தாள்... நடந்து முடிந்த நிகழ்வை நினைத...


27
உன்கைவிரல்கள் பட்டபோது..
காற்றோடு நான் கலந்தேன்...

அன்றைய இரவில் ராதிகா உறக்கத்தை தொலைத்தாள்...
நடந்து முடிந்த நிகழ்வை நினைத்தபோது... அவளுக்குள் பேரதிர்வு எழுந்தது... இன்னமும்கூட அவன் தொட்டுவிட்டதை அவளால் நம்பவே முடியவில்லை...
கலைந்த தலையுடன்... முகமெல்லாம் சிவக்க... ஓட்டமும்.. நடையுமாக அவள் வீட்டு வாசலை மிதித்த போது... வாசலில் நடை பயின்று கொண்டிருந்த கீதா புருவங்களை உயர்த்தினாள்...
"என்னடி இப்படி ஓடி வருகிற...?"
கீதா சூட்சுமப் புத்தி கொண்டவள் என்ற நினைவில் ராதிகா மனதிற்குள் சுதாரித்துக் கொண்டாள்...
வேக மூச்சுக்களையெடுத்து தன்னை சமனப்படுத்திக் கொள்ள அவளுக்கு ஒரிரு நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டன..
"எப்படி ஓடி வருகிறேன்...?"
"என்னவோ.. பேய் துரத்துகிறதைப் போல ஓடி வருகிற..."
பேய்தான் துரத்துகிறது என்ற நினைவில் ராதிகாவின் முகத்தில் மென்மை பரவியது...
அந்தப்பேய் அவளுக்கு பிடித்தபேய் என்று சொன்னால் கீதா என்ன சொல்வாள் என்ற நினைவில் புன்னகைத்தாள் ராதிகா...
'அலறி விடுவா...'
"ஏண்டி இப்படிச் சிரிச்சு வைக்கிற..?" கீதா அவளை வினோதமாக பார்த்தாள்...
"எப்படிச் சிரிச்சு வைக்கிறேன்...?"
"ஒரு மார்க்கமாய் சிரிச்சு வைக்கிறடி ராதிகா..."
"இந்த மார்க்கமெல்லாம் உனக்குத்தான் வரும்.. எனக்கு வராது..."
"இந்தக் கதையெல்லாம் என்கிட்ட விடாதே.. கொஞ்சநாளாகவே நீ ஒருமார்க்கமாகத்தான் இருக்கிற... நான் கவனிக்கலைன்னு நினைக்காதே..."
"திரும்பவும் இவ ஒருமார்க்கத்தை ஆரம்பிச்சிட்டயா...? கீதா.. பேசாம நீ இதைப்பத்தி பி.எச்.டி பண்ணிரேன்.."
"பார்க்கலாம்..."
"அதுக்கு முதல்ல ப்ளஸ் டூவை முடிக்கிற வழியைப் பாரு... எதிர்த்தவீட்டு தடியனைப் பார்க்காதே..."
"அவனெல்லாம் ஒரு ஆளாடி...?"
"அப்புறம் எதுக்கு அவனைப் பார்க்கிற...?"
"அவனை ஒன்னும் நான் பார்க்கல... அவன் என்னைப் பார்ப்பான்.. அதை நான் அவனுக்குத் தெரியாமல் பார்த்து வைச்சுக்குவேன்..."
"அது எதுக்குடி..."
"என் ரேன்ஜ் என்னன்னு எனக்குத் தெரிய வேணாமா...?"
"இதில் என்ன ரேன்ஜ் வேண்டிக்கிடக்கு..."
"போ... ராது... இந்த வயசில.. நாலுபேர் நம்மள சைட் அடிச்சாத்தான் நமக்கு மதிப்பு..."
இப்படிப்பட்ட வியாக்கினத்தை இவள் ராஜேஸ்வரியின் முன்னால் சொல்லி வைத்தால் என்ன ஆகும் என்ற நினைவில் மீண்டும் சிரித்தாள் ராதிகா...
"பல்லைக் கழட்டி கையில கொடுத்துருவேன்.. ஏண்டி... படிக்கிற படிப்பில உன் ரேங்க் என்னன்னு பாருடின்னா.. நீ பக்கத்து வீட்டுக்காரன் பார்வையிலே உன் ரேன்ஜ் என்னன்னு பார்க்கறியா..? ஊஹீம்.. உனக்கு இந்த வீடு சரிப்படாது.. என்னங்க... மதுரைக்குப் பக்கத்திலே ஒரு ஆசிரம ஸ்கூல் இருக்கில்ல... அங்கே இவளை சேர்த்து... ஹாஸ்டலில் போட்டு விடுங்க... அப்பத்தான் இவ வழிக்கு வருவா..."
ராதிகாவின் மனதில் ராஜேஸ்வரியின் பிம்பம் கத்திக் கொண்டிருப்பதை அறியாதவளாக...
"வரவர... ஏண்டி... இப்படி உனக்குள் நீயாய் பேசி சிரிச்சுக்கிட்டு இருக்க..." என்று வினவினாள் கீதா...
"இல்லை... நீ சொன்னதை அப்படியே நம்ம வீட்டு லேடி ஹிட்லர் கிட்டச் சொன்னால் எப்படியிருக்கும்ன்னு நினைச்சுப் பார்த்தேன்.. சிரிப்பு வந்தது..."
"அடிப்பாவி... கூடப் பிறந்தவளுக்கு எதிராகவே சதி செய்யத் துணிஞ்கிட்டயா...? உனக்கு நான் என்னடி கெடுதல் பண்ணினேன்..?"
"இப்படியெல்லாம் நியாயம் கேட்டால்... நிஜமாகவே லேடி ஹிட்லர்கிட்ட உன்னைப் பத்தி போட்டுக் கொடுத்து... பற்ற வைச்சிடுவேன்.. எப்படி வசதி...?"
"இப்ப நான் என்னதாண்டி செய்யனும்..?"
"அடங்குடி..."
ராதிகா வாயில் ஒற்றை விரலை வைத்து எச்சரித்தபடி... வாசல்படியில் ஏறப் போனாள்...
"ராதிகா..." என்று அழைத்தாள் கீதா...
எரிச்சலுடன் திரும்பினாள்... ராதிகா...
"உன்னைத் துரத்தற பேய் யாருடி...?" கீதா கண்சிமிட்டவும் ராதிகாவுக்கு தூக்கிவாரிப் போட்டது...
"ஏண்டி.. நீ அடங்கவே மாட்டியா...? இப்ப உனக்கு என்ன தெரியனும்...?"
"உன்னைத் துரத்தற பேய் யாருன்னு தெரியனும்..."
"ம்ம்... மோகினிப் பேய்..! போதுமா..."
"ஊஹீம்... போதவே போதாது... மோகினிப் பேய் ஆண்களைத்தான் துரத்தும்.. நீ பெண்ணாச்சே..."
"இது... காட்டான் பேய்..."
பாலமுரளி சொன்ன பட்டிக்காட்டானின் நினைவில் சொல்லி விட்டு வீட்டுக்குள் போய்விட்டாள் ராதிகா...
இரவு கண்மூடிப் படுத்தபோது... அந்த பட்டிக்காட்டானின் முரட்டுக் கரங்கள் அவள்மேல் பரவிப் படர்ந்தன.. அவள் கிளர்ந்து விழித்தாள்... அவனது ஆண்மை ததும்பிய மார்பில் ஒன்றிய அனுபவத்தில் அவள் உடல் சிலிர்த்தது...
'அம்மம்மா... கேளடி தோழி...
             நிலாவினில்  நின்றொரு  நாழி..
    சொல்லாலே உரைத்தது பாதி...
             சொல்லாமல் அறிந்தது மீதி...
                 அம்மம்மா....'
ராஜேஸ்வரிக்கு பிடித்தமான பாடல்... அவளுடன் சேர்ந்து ராதிகாவும் அடிக்கடி ரசிக்கும் பாடல்...
அதுநாள்வரை புரியாத பாடலின் வரிகளை அன்று புரிந்து உணர்ந்தாள் ராதிகா... அதுநாள்வரை அவள் வாயடித்த எதுவுமே இல்லாமல் புரிதான புதிரொன்றை அறிந்து கொள்ளும் முயற்சியின் முதல் படியில் கால் வைத்த அனுபவத்தில் அவள் இன்ப அதிர்வை அடைந்திருந்தாள்...
'பிஞ்சாக நானிருந்தேனே..
             பெண்ணாக மாற்றி விட்டானே..
    அஞ்சாமல் அணைத்து விட்டானே...'
பாலமுரளியின் அஞ்சாமையில் அவளது நெஞ்சம் நிலைகொண்டு விம்மித் தணிந்தது... அவன் மீதான காதல் அலைகடலைப் போல பொங்கி எழுந்தது.. அவன் அவளை குற்றம் சாட்டியதெல்லாம் மறைந்து.. மறந்து போய்.. அவன் செய்த குற்றம் மட்டுமே நினைவில் நின்றது...
'எவ்வளவு தைரியம்...'
இதை நினைக்கும் போது அவள் நெஞ்சம் ஏன் கற்கண்டாக இனிக்கிறது என்ற விந்தை மட்டும் அவளுக்குப் புரியவே இல்லை..
மறுநாள் தெரு முனையைத் தாண்டும் போது... என்றும் இல்லாத வகையில் அவளது விழிகள் அவனைத் தேடித் துழாவி... ஏமாந்தன...
அவளது தேடுதல் யாருக்காக என்று அறியாதவர்களாக... அங்கே நின்றிருந்த மற்றவர்கள் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருக்க... அதற்கு மேலும் தேட முடியாமல் ராதிகா ஸ்கூட்டியின் வேகம் கூட்டிப் பறந்தாள்...
காலேஜில் ஹேமா... ஷோபாவைப் பற்றி எதையோ சொல்லிச் சிரிக்க.. ராதிகா அதைக் கவனிக்காமல் புல்வெளியின் புல்களைக் கிள்ளிக் கொண்டிருந்தாள்...
"என்னடி ஆச்சு..." என்று புருவம் உயர்த்தியவளிடம்...
"தலைவலி..." என்று பொய் சொன்னாள்...
"அது ஷோபாவுக்குத்தானே வரும்..? அவளுக்கு தலைவலியை வர வைக்கிற உனக்கே இன்னைக்கு தலைவலி வந்திருச்சா.. இதைப்பாருங்கடி..."
ஹேமா மற்றவர்களை அழைக்க.. அவர்கள் ஆரவாரித்துச் சிரித்தார்கள்... அடுத்து அவர்களின் பேச்சில் டிவி ஷோக்களும்... சினிமாக்களும் அடிபட ஆரம்பிக்க... ராதிகா.. மெல்ல.. மெல்ல அந்தப் பேச்சில் கலந்து கொள்ள ஆரம்பித்தாள்...
"எப்பொழுதும் உன் அலப்பறையில்ன்னு ஒரு பிளாக்கில பார்த்தேன்... சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போச்சு..."
"இது ஏதோ சினிமாப் படத்தோட டைட்டில் மாதிரி இருக்கே..."
"ஆமாமாம்.. முப்பொழுதும் உன் கற்பனையில்ன்னு... ஒரு சினிமா வந்ததே..."
"தோடா.. அதை வைச்சு... இந்த அலம்பலா..? ஆமாம்... அலப்பறை பண்ணியது யாராம்...?"
"நம்ம நானும்... நீயும்.. கோகுல் நாத்தாம்..."
"அவரை ஏண்டி வம்புக்கு இழுக்கிறாங்க...? அவர் பாட்டுக்கு அவருண்டு.. அவர் கோட்டுண்டுன்னு.. எப்பவும் தனிவழியில் ராஜநடை போட்டு.. போய்கிட்டு இருக்கார்.. இவங்களை அவர் என்ன பண்ணினாராம்...?"
"அவரைப் பற்றிய சின்னச்சின்ன விமரிசனங்கள் ஷீலா... அதைச் சிரிக்க சிரிக்க கொடுத்திருக்காங்க..."
"மத்தவங்களைப் பற்றி கேலி பண்ணினா... அது சிரிப்புத்தான்..."
"விடேண்டி... அவரே மீடியாவில் இருக்கார்.. அவரும் இதைப் போல மற்றவங்களை கிண்டல் கேலியில் விமரிசனம் செய்கிறவர்தானே..."
"அப்புறம் வேற என்ன படிச்சே..."
"நம்ம தலயோட புதுப்படத்தில் மொத்தம் 89 கொலைகள் வருதாம் அதில் 78ஐ நம்ம தலயே பண்ணியிருக்காராம்..."
"ரமணா விஜயகாந்தைவிட.. புள்ளி விவரம் தர்றதில் எக்ஸ்பர்ட்டா இருக்கிறாங்களே..."
"கூகுளில் இருக்கிறவங்க எல்லாம் பண்ணுவாங்க.."
"அதைச் சொல்லு... எதைத் தேடினாலும்... அடுத்த நொடியில் பத்து ஆப்சன்களை கொடுத்து.. இதுவா.. இதுவான்னு கேட்கிறதில கூகுளுக்கு நிகர் கூகுள்தான்..."
ராதிகா பாலமுரளியை மறந்து போனாள்... இரவுகளில் அவனது நினைவு வருகிற போதெல்லாம் பாடங்களை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்து விடுவாள்... அதில் வெற்றியும் கண்டாள்...
பார்க்கிற்கு... கோவிலுக்கு... லைப்ரரிக்கு என்று போகும் போதெல்லாம் அவளது கண்கள் அவனைத் தேடும்.. அவன் தென்படவே இல்லை...
'இவ்வளவுதானா நீ...' அவள் ஏமாற்றமடைந்தாள்..
விட்டுச்செல்கிறவன்... ஏன் அவளைத் தொட்டுச் சென்றான் என்ற கோபம் அவளுக்குள் எழுந்தது...
இனம் புரியாத உணர்வுகளை அவளுக்குள் விதைத்து விட்டுச் சென்றவனின் எண்ணம் எதுவாக இருக்கும் என்று அவளால் அனுமாணிக்கவே முடியவில்லை...
அவனை நேரில் பார்த்து உண்மையை உணர்த்தி விட அவள் மனம் துடித்தது... ஆனால்.. அவனைத்தான் அவளால் பார்க்கவே முடியவில்லையே...
எங்கேயோ... குற்றாலத்துக்கு பக்கத்தில்... தேனூத்தூ கிராமத்தில் இருப்பவனை எப்படி அவள் தேடிக் கண்டு பிடிப்பது..?
ஷோபாவிடம் கேட்க அவளால் முடியுமா...?
அவன் ஷோபாவுக்கு உறவினன்... ஆனால் ஷோபாவிடம் பாலமுரளியைப் பற்றிக் கேட்க ராதிகாவால் முடியாது எனும் போது.. அதனால் அவளுக்கு என்ன ஆகப்போகிறது...?
தினமும் அவள் கண்முன்னால் ஷோபா வந்து போய் கொண்டிருந்தாள்... பாலமுரளியின் இருப்பிடமும்.. முகவரியும் அறிந்தவள் அவள் என்ற நினைவில் ராதிகாவின் இதயம் துடிக்கும்... அவன் எங்கேயிருக்-கிறான் என்ற கேள்வி வாய்வரை வந்து விடும்... அவற்றை உள்ளே தள்ளி... வாயை இறுக மூடி வாய்பூட்டு போட்டுக் கொள்வாள் ராதிகா...
அவளுக்கு ஷோபாவின் குணம் தெரியும்... நிச்சயமாய் அவள் ராதிகாவின் காதலுக்கு உதவப் போவதில்லை... அதற்கு மாறாக ராதிகா பாலமுரளியின் மேல் ஆர்வம் கொண்டு... அவனை தேடி அலைவதாக காலேஜிற்குள் கதையைப் பரப்பி விடுவாள்... அவள்தான் இப்படியொரு வாய்ப்பிற்காக.. எப்போது... எப்போது... என்று காத்துக்கிடக்கிறாளே...
ராதிகா தனி மனுஷியில்லை... அவள் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தின் ஒரு அங்கம்... அவளது சின்னத் தவறுகூட அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த அமைதியையும்... நிம்மதியையும் குலைத்து விடும்...
கட்டுக்கோப்பான மத்திய தர குடும்பங்களில்... காதல் என்பது கத்தி முனையில் நடப்பதைப் போன்றது...
ராதிகா கத்தி முனையில் நின்றாள்... அந்தக் கத்தியின் கூர்மை அவளைக் கிழித்தால் அவளால் தாங்கிக் கொள்ள முடியும்... அது அவளையும் தாண்டி.. அவள் குடும்பத்தை கிழித்து விடுமே... அதை அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்...?
அவள் அந்தரங்கத்தில் தன் காதலை புதைத்தாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -27
அம்மம்மா.. கேளடி தோழி...! -27
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-27.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-27.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy