அம்மம்மா.. கேளடி தோழி...! -26

26 ராத்திரி கனவின் நாயகன் நீ - என்ற ரகசியம் தெரியாத வில்லனும் நீ... கண்கள் விரிய... பிரமிப்புடன் பாலமுரளியின் முகத்தையே பார்த்தபடி ...


26
ராத்திரி கனவின் நாயகன் நீ - என்ற
ரகசியம் தெரியாத வில்லனும் நீ...
கண்கள் விரிய... பிரமிப்புடன் பாலமுரளியின் முகத்தையே பார்த்தபடி அசைவற்று அமர்ந்து விட்டாள் ராதிகா...
இப்படியெல்லாம்கூட ஒரு ஆண்மகனால் பேச முடியும் என்று அது நாள்வரை அவளுக்குத் தெரியாது...
மரியாதையான பார்வைகளுக்கும்.. வார்த்தைகளுக்கும் பழக்கப்பட்டவள் அவள்.. அவளை 'வாடி... போடி...' என்று எந்த ஆண்மகனும் அழைத்துக் கேட்டறியாதவள் அவள்...
அப்படிப்பட்டவளைப் பார்த்து... ஆயிரம் 'டீ' போட்டான் பாலமுரளி...
'எந்த உரிமையில் இவன் இப்படிப் பேசுகிறான்...' அவள் நெஞ்சம் கொதித்தாள்...
அவளது அதிர்ந்து போன பார்வையை அவன் லட்சியமே பண்ணவில்லை...
"என் தரத்துக்கு செய்யக் கூடாத வேலைகளை யெல்லாம் உனக்காக நான் செய்தேண்டி... ரோட்டோர ரோமியோவைப் போல... உன் தெரு முக்கில் காத்திருந்தேண்டி... காரை விட்டு விட்டு... உன் பின்னால் நடந்தேண்டி.. ஒரு தடவை கூட என்னை நீ திரும்பிப் பார்க்கலையே... அதுவே.. அவன் காரைப் போட்டுக்கிட்டு உன் காலேஜீக்குள்ளேயே வந்து நின்னதும்.. ''ன்னு சிரிச்சுக்கிட்டு... அவன அப்படிப் பார்த்தியே... அப்பவே உன் புத்தி என்னன்னு எனக்கு புரிஞ்சு போச்சுடி..."
அவளை அவன் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தான் என்று அவளது புத்திக்கு உறைத்த போதே... அவளுக்காக அவன் தெரு முனையில் காத்துக்கிடந்திருக்கிறான் என்ற செய்தியும் சேர்ந்து உறைக்க.. அவனைப் பார்க்காமல் போய் விட்டோமே என்று பரிதவித்தாள் ராதிகா...
'உன்னைப் பார்த்து தொலைக்காத என்னை நீ என்ன திட்டினாலும்  கேட்டுக்க வேண்டியது தான்... அவனைப் பார்க்கிறதுக்கு முன்னாலே உன்னை நான் பார்த்திருந்தால்... இந்த வினை எனக்கு வந்திருக்காதே...'
"கோவில்ல வைச்சு.. தெய்வ சந்நிதானத்தில் என் காதலை உன்கிட்ட சொல்லிடனும்னு
தேடி வந்தேண்டி.. பார்த்தேனே... அங்கேயும் அவனை உன்கூடப் பார்த்தேனே... அது கோவில்ங்கிறதையும் மறந்து என்னமாய் சரஸம் பண்ணினீங்கடி... அவன் வழியை மறைக்கிறான்.. நீ சிணுங்கறே.. அவன் கையை நீட்டறான்.. நீ செல்லமாய் முறைக்கிற... அப்படியே சினிமாப் படம் காட்டிட்டேங்களேடி.. அப்பவே எனக்கு மனசு வெறுத்துப் போச்சுடி..."
'இவன் கோவிலுக்குள் வந்திருந்தானா..?'
"லைப்ரரியில வைச்சாவது உன்னை என்னன்னு கேட்டுப்புடனும்னு வந்தேண்டி.. அங்கேயும் எனக்கு முந்தி அவன் வந்து நின்னுட்டானே... சும்மா சொல்லக்கூடாதுடி... சத்தமே வராம.. கிசுகிசுப்பா நீங்க ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டிங்களே... அதை லைப்ரரியே வேடிக்கை பார்த்துச்சேடி... தூத்தேறி... அக்கம்.. பக்கம் பார்க்காம அப்படி என்னடி ரகசியப் பேச்சு வேண்டிக்கிடக்கு..?"
'அடப்பாவி... நீயே அதை ரகசியப் பேச்சுன்னு சொல்கிறியே... அப்புறம் எப்படி.. அதை கொஞ்சல் பேச்சுன்னு நீயாய் ஒரு முடிவுக்கு வந்த...? அவனைத் திட்டினாலும்.. அது ரகசியப் பேச்சாத்தானேடா இருக்கும்..?'
"நான் ஒரு கிறுக்கண்டி.. காதல்கிறுக்கன்.. உன்மேல பைத்தியம் பிடிச்சுப் போனதால என்நிலைமையை மறந்து.. உன் பின்னாலே சுத்திக்கிட்டிருக்க கேணயன்... இவ்வளவுக்குப் பின்னாலேயும்.. கடைசியா என் மனசை உன்கிட்ட சொல்லப்புடலாமுன்னு நினைச்சேன் பாரு... என்னைப் போல பைத்தியக்காரன் எவன் இருப்பாண்டி..?"
'ஏன் சாமி... நானில்லையா...? இரண்டு வாரமா.. என்வீட்டு ஆளுக.. எனக்கு வேப்பிலை அடிக்காத குறையாய் விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க.. அது தெரியுமா உனக்கு..? என்னவோ உனக்கு மட்டும்தான் பித்துப் பிடித்ததைப் போல பேசுகிறாயே... எனக்கும்தான் பித்துப் பிடிச்சிருக்கு.. உன்னால் மட்டுமா... அதை என்னிடம் சொல்ல முடியல..? என்னாலேயும்தான் உன்னிடம் சொல்ல முடியல.. விதிடா மச்சான்...'
ராதிகா விதியை நொந்து கொள்ள... அதை அறியாமல் பாலமுரளியும் விதியின் மேல்தான் பழியைப் போட்டான்...
"என்னவோ திருவாரூர் தேரைப்போல... ஆடி அசைஞ்சுக்கிட்டு பார்க்குக்கு வந்த... உன் பின்னாலேயே தொடுத்துக்கிட்டு நானும் வந்தேன்.. விதியைப் பாரு... இங்கேயும் அவன் உன் பக்கத்திலே உட்கார்ந்து காதல் வசனம் பேச... நான் அதை தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கனும்ன்னு என் தலையில எழுதி வைச்சிருக்கு.."
'உனக்கு மட்டுமா எழுதிவைச்சிருக்கு..? எனக்கும் சேர்த்துத்தான் எழுதி வைச்சிருக்கு...'
"இப்ப எனக்கு ஒன்னே ஒன்னுதான் தெரியனும்டி.."
'என்ன..?' என்பதைப் போல ராதிகா அவனைப் பார்க்க... அவன் முகத்தில்... கேட்டது கிடைக்காத கோபம் படர்ந்தது...
"நீதான் ஒரு முடிவோட இருந்திருக்கிறயே... அப்புறமும் ஏண்டி என்னை அந்தப் பார்வை பார்த்த...?"
'கடவுளே...' கண்மூடித்திறந்த ராதிகா...
"போதும்.. இதுக்கு மேலே பேசாதீங்க..." என்றாள்...
"ஓ.. அவன் பேசினா இனிக்கும்.. நான் பேசினா கசக்குமாக்கும்.." அவன் குரூரமாக சிரித்தான்...
அவளும்தான் எத்தனை வார்த்தைகளை பொறுத்துக் கொள்வாள்...?
ஆயிரம்தான் அவன்மேல் அவளுக்கு எண்ணமிருந்தாலும்... இருவரும் ஒரே... ஒருதடவைதான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்... வெறும் பார்வை பரிமாற்றங்களை வைத்து ஒருவன் இந்த அளவுக்கு உரிமையெடுத்துக் கொண்டு அவளை இழிவு படுத்திப் பேசலாமா...?
அந்த கோபத்தில் அவள்...
"ஆமாம்.. அப்படித்தான்..." என்று சொல்லிவிட்டாள்...
அவனது சிரிப்பு நின்றுவிட்டது... கண்கள் இடுங்க... அவளையே இமைக்காமல் அவன் பார்த்த பார்வையில் அவளது உயிர் ஆடியது...
"அப்படியேதானா...? நினைச்சேன்... உனக்கு என்னைவிட அவனைத்தான் பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும்... வெள்ளைத் தோலாய் இருக்கிறானில்ல... அந்த மயக்கம் உனக்கு... இது திராவிட நிறம்டி... மாநிறம்ன்னா உனக்கு அத்தனை இளக்காரமா...?"
ராதிகா உதட்டைக் கடித்துக் கொண்டு வேறுதிசையில் பார்த்தாள்... கம்பீரமே வடிவாக அமைந்திருந்தவனின் உருவம் அவளை மயக்கியது... ஒரு ரோமானிய சிற்பத்தைப் போல... செதுக்கி வைத்ததைப் போன்ற வடிவமைப்புடன் இருந்தவனின் மார்பில் சாய்ந்து கொள்ள அவள் மனம் ஏங்கியது...
அதை உணராதவனாக... அவன் அவளால் புறக்கணிக்கப்பட்டு விட்டதான நினைவில் ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருந்தான்...
"நானும் பணக்காரன்தாண்டி... பரம்பரையாய் பெரிய வீட்டுக்காரன்... ஆனா... உனக்கு நான் வேண்டாம்... பட்டிக்காட்டில் இருக்கிறேனில்ல... அது உனக்கு குறைவாய் போயிருச்சு... அவன் சென்னையில இருக்கான்.. பத்தாக்குறைக்கு.. வெளிநாட்டுப் பக்கம் பறந்துக்கிட்டே இருப்பான்... உனக்கு அந்தப் பகட்டு தேவைப் பட்டுருச்சுடி..."
அமைதியான மனம் வருடும் பாடல்களை... இதமான பௌர்ணமி நிலவின் ஒளியில்... மொட்டை மாடியில் அமர்ந்து... தனிமையில் கேட்டு ரசிக்கும் ராதிகா... அவனது கொடுமையான வார்த்தைகளை ஜீரணித்துக் கொள்ள சிரமப்பட்டாள்...
"ஏமாந்துட்டேண்டி... என்னடா.. இந்தப் பொண்ணு நிலாவைப்பத்தி பாட்டுப்பாடறாளேன்னு நினைச்சுட்டேன்.. நீ அந்த நிலாவையே பிடிக்க ஆசைப்படற பேராசைக்காரின்னு எனக்கு தெரியாம போயிருச்சு..."
விட்டால்... அவன் அன்று முழுவதும் நிறுத்தாமல் வசைபாடிக் கொண்டிருப்பான் என்று ராதிகாவுக்கு புரிந்து விட்டது...
மாலை மயங்கி இருள் சூழ ஆரம்பித்து விட்டது... பூங்காவில் மனிதர் நடமாட்டம் குறையத் தொடங்கியது.. ராஜேஸ்வரி தேட ஆரம்பித்து விடுவாள் என்ற நினைவில் ராதிகா எழுந்து கொள்ளப் போனாள்...
"எங்கே... எழுந்திருக்கப் பார்க்கிற..?"
அவன் சட்டென்று அவள் கையைப் பிடித்து விட்டான்... ராதிகா வெலவெலத்து விட்டாள்... இருள் போர்வை அவர்களைச் சுற்றி மூடியிருக்க... சந்தடியில்லாத பூங்காவில்... அவர்களை யாரும் பார்க்கவில்லை...
"கையை விடுங்க..."
முதன் முதலாக... ஒரு ஆணின் ஸ்பரிசம் பட்டதில் மின்சாரம் பாய்ந்தவளாக... அவள் நடுக்கத்துடன் கையை உருவிக் கொள்ளமுயன்றாள்... அவன் பிடி இறுகியது... அவளால் கையை உறுவிக்கொள்ள முடியவில்லை...
"விட முடியாது... என்ன பண்ணுவ...?" அவன் குரலில் சவால் இருந்தது...
என்ன பண்ணுவாள்...? அவளால் என்ன பண்ண முடியும்...?
அவள் பெண்... பிடிக்காதவனின் சிறு தொடுகையைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல்... போராடி தற்காத்துக் கொள்ள அவளால் முடியும்... அவனோ... அவளுக்குப் பிடித்தவன்... அவளை பெண்ணென்று முதன் முதலாக உணர வைத்தான்.. அவனை அவளுக்கு பிடித்து தொலைக்கிறது... அவன் தொட்டால் அவளது உடல் அனலில் பட்ட மெழுகாய் உருகிக் கரைந்து அவனுடன் சேரத் தவிக்கிறது... அவனுடன் அவளால் சேரத்தான் முடியும்... எப்படி போராட முடியும்...?
இருந்தும் அவள் போராடினாள்... பிடித்தவனின் பிடியிலிருந்து விலக மனமும்... உடலும் விரும்பாத போது... போராடி என்ன பயன்...?
பாலமுரளி மிக எளிதாக அவளை தன் கரங்களுக்குள் சிறை பிடித்தான்...
அவளது கையைப் பிடித்திருந்த கரங்கள் அவளை சுண்டியிழுக்க.. அவள் அவன் மார்பில் மோதி... தடுமாறி கீழே விழப் போனாள்... அவளை விழுந்து விடாமல் சுற்றி வளைத்து அவனுடன் அவன் கரங்கள் இறுக்கிக் கொண்டன... அவள் மேனி முழுவதும் அவன் மேல் உராய்ந்திருக்க.. ராதிகாவின் மனதில் சூறாவளிக் காற்று சுழன்றடிக்க ஆரம்பித்தது... கண்ணுக்குத் தெரியாத சுழலில் சிக்கி... மூச்சுத் திணற ஆரம்பித்த அந்த நொடியில் போராட்டத்தை அவள் மறந்து போனாள்... போராட அவள் மறந்து போனாள்...
ராதிகாவின் முதுகின் மீது படர்ந்திருந்த பால முரளியின் கைகள் பரவி முன்னேற ஆரம்பித்த போது... அவள் கிளர்ச்சியுற்று மயங்கி நின்றாள்... பாலமுரளி அவள் முகம் நோக்கிக் குனிந்தான்... ஆவேசத்தோடு அவள் இதழ்களில் அழுத்தமான முத்தத்தை பதித்தே விட்டான்...
ராதிகா தொய்ந்து அவன்மீது சரிந்தாள்... அவனது ஆவேச அணைப்பில் சிக்குண்டாள்... பதினைந்து தினங்களாக அடக்கிவைத்திருந்த கோபத்தையும்... ஏமாற்றத்தையும்... தாகத்தையும்... பாலமுரளி அவள்மேல் பிரயோகித்துக் கொண்டிருந்தான்...
அவள் முகம் முழுவதும் படர்ந்த முத்தங்களின் ஈரம் நடந்து கொண்டிருப்பதை அவளுக்கு அறிவுறுத்தியும்.. அதைத் தடுக்க வழியின்றி செயலற்றுப் போனாள் ராதிகா...
அவனது இறுக்கமான அணைப்பு மேலும் இறுகிக் கொண்டிருக்க எழும்புகள் நொறுங்குமளவிற்கு இன்ப அவஸ்தைக்கு ஆளானால் ராதிகா... ஆணின் ஆக்ரமிப்பு உணர்த்திய இனம் புரியா உணர்வுகளின் ஆக்ரமிப்பில் அவள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த போது... பேச்சுக் குரல்கள் அவர்களுக்கு வெகு அருகாமையில் கேட்டன..
"அப்ப அந்த வீட்டை நீங்க சொன்ன விலைக்கே பேசி முடிச்சுடலாங்கறிங்க..."
"முடியுமா...?"
"கொஞ்சம் முன்னே பின்னே வரும்..."
"பரவாயில்லை..."
"அப்பச் சரி... நான் நாளைக்கே பேசி முடிச்சிடறேன்.. நம்ம கமிசன் தொகையை மறந்துராதீங்க..."
"அதை மறப்பேனாய்யா.. மறந்தால் நீயும் விட்டு விடுவியா.."
யாரோ இருவர் பேசியபடி அவர்களை சமீபிக்க.. சட்டென்று பாலமுரளி அவளை விட்டு விட்டான்..
ஒரு நொடி தடுமாறி நின்றாலும்.. மறுநொடியில் தண்ணுணர்விற்கு மீண்டு விட்ட ராதிகா.. அங்கே நிற்காமல் சிட்டாகப் பறந்து விட்டாள்...
பேசியவர்கள் பாலமுரளியைக் கடந்து போனார்கள் அவளைத் தொட்ட நினைவுகள் தந்த சுகத்தில் பாலமுரளி அங்கிருந்து வெளியேற மனமில்லாதவனாக... அங்கேயே அமர்ந்து விட்டான்...
சற்றுமுன் உணர்ந்த... அவளின் உடலின் மென்மை அவன் உடலை சூடேற்றியது.. அவன் தொட்டவுடன் அவள் உடலில் ஏற்பட்ட நடுக்கத்தை உணர்ந்த அந்த நொடிகளை விட்டு பிரிய மனமில்லாமல் அதிலேயே நிலை கொள்ள விரும்பினான் பாலமுரளி...
அவனின் கோபத்தைக் காட்ட நினைத்தவன்... தாபத்தை காட்டி விட்ட நினைவில் அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது...
துடித்த அவளது இதழ்களைத் தொட்ட தனது இதழ்களை விரல்களால் வருடிக் கொண்டவனுக்குள் அவளை விட்டுவிடக் கூடாதென்ற வெறிகிளர்ந்து எழுந்தது...
'என்ன நடந்தாலும் சரி.. அவ என்னுடையவளா ஆகனும்...'
அவன் மனம் சூளூரைத்தது...







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -26
அம்மம்மா.. கேளடி தோழி...! -26
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-26.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-26.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy