அம்மம்மா.. கேளடி தோழி...! -24

24 யார்   மனதில்   யாரோ... யார்தான்   அதை அறிவாரோ.. ? ராதிகா கோவிலில் செய்ததைப் போலவே.. இங்கும் பார்வையை தன்னைச் சுற்றிப்படற விட்...


24
யார்  மனதில்  யாரோ...
யார்தான்  அதை அறிவாரோ..?

ராதிகா கோவிலில் செய்ததைப் போலவே.. இங்கும் பார்வையை தன்னைச் சுற்றிப்படற விட்டாள்... ஏறக்குறைய அனைவருமே படிப்பில் ஆழ்ந்திருப்பதைப் போல தென்பட்டாலும்... அதில் ஒரு சிலரின் பார்வை அவள் மேல் படர்ந்திருப்பதை அவளால் உணர முடிந்தது...
அது இயல்பான ரசிகர் கூட்டம்.. ராதிகா அந்த லைப்ரரிக்கு வரும் நாளில்... கண நேரம் அவள் பார்வையை சந்தித்து விட்டால் என்னவோ இமயத்தை தொட்டு... வெற்றிக் கொடியை நாட்டி விட்டதைப் போல சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் கூட்டம்...
"ஏய்ய்... அவ என்னை பார்த்துட்டாடா..."
"என்னையும்தான் பார்த்தா..."
"உன்னைப் பார்த்த பார்வை வேற.. என்னைப் பார்த்த பார்வை வேற..."
"எனக்கு அது தெரியாதாடா மச்சான்... உன்னை பாசமலர் பார்வை பார்த்தா... என்னை காதல் கோட்டை பார்வை பார்த்தா..."
"இது நான் சொல்ல வேண்டிய டயலாக்குடா..."
"டேய்... டேய்.. நீ அவளுக்கு சீர் கொடுத்து அனுப்புற முறைடா..."
தங்களுக்குள் அவர்கள் இப்படி வழக்கடித்துக் கொள்வதை ஒருநாள் ராதிகா கேட்க நேரிட்டது... ஆனாலும்... அவள் அதை கண்டு கொள்ளவில்லை... இதற்காகவெல்லாம் பயந்து வீட்டுக்குள் சிறையிருக்க ஆரம்பித்தால்... பெண்கள்... வாசல்படியைத் தாண்டி வெளியே வரவே முடியாது என்ற எண்ணம் அவளுக்கு...
எதற்கு வம்பு என்று அதற்குப் பின்னால் அவள் தற்செயலாய்கூட யாரையும் பார்த்து வைப்பதில்லை...
யதார்த்தமாக பார்த்து வைத்தால்கூட அவர்கள் அந்தப் பார்வையை வைத்து... அது பாசமலர் பார்வையா... இல்லை... காதல் கோட்டை பார்வையா என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்ததால்... இவள் கல்லையும்... மண்ணையும் பார்ப்பதைப் போல.. அவர்களையும் பார்த்து விட்டு.. தேவையான புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் விடுவாள்...
கீதாவிடம் இதைப்பற்றி அவள் பகிர்ந்து கொண்ட போது....
"ஏண்டி இப்படிப் பண்றே..? அம்மாவே பார்த்து நடந்துக்க... பார்த்து நடந்துக்கன்னு அடிக்கடி சொல்றபோது.. நீ அவங்களை பார்க்க மாட்டேன்னு அடம் பிடிச்சால் எப்படிடீ..?" என்று நியாயம் கேட்டாள்...
"ஏய்ய்.. நம்ம வீட்டு லேடி ஹிட்லர் சொல்ற டயலாக்குக்கு அர்த்தமே வேற.. வீட்டை விட்டு வெளியே போனா நாலும் நடக்கும்.. அதை எதிர்பார்த்து... அதை எப்படி அவாய்டு பண்றதுன்னு பார்த்து நடந்துக்கனும்கிறது தான் அதோட அர்த்தம்..."
"இது ஏதோ பழைய பாட்டைப் போல இருக்கே..."
"லேடி ஹிட்லர் இப்போச் சொல்கிறதைத்தான்.. அப்போதிருந்து பழைய பாட்டுக்களில் சொல்லிக்கிட்டு இருக்காங்க..."
"ஆக அத்தனை அட்வைஸ் பாட்டும்.. பொண்ணுக்குத்தான்.. ஆணுக்கு இல்லைங்கிற..."
கீதாவின் கேள்வியில் ராதிகாவுக்கு சிரிப்புத்தான் வந்தது..
"பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்கிறதில நீ கில்லாடி டீ..."
"பின்னே..? நீயே சொல்லேன்..." என்ற கீதா...
    "புருசன் வீட்டில் வாழப் போற பெண்ணே...
             தங்கச்சி கண்ணே...
     சில புத்திமதிகள் சொல்கிறன் கேளு முன்னே.."
என்று பாடிக் காட்டினாள்...
"போதும்டி..."
"இதையே.. பெண்டாட்டிகூட வாழப் போகிற புருசனுக்கு புத்திமதியைச் சொல்லியிருக்காங்களா ராது..?"
"நாமள்லாம் தங்கம்டி... அது தெரிஞ்சுதான் சொல்லலை..."
"என்னவோ போடி.. நாளைக்கு நீ லைப்ரரிக்கு போகிற போது என்னையும் மறக்காம கூப்பிட்டுக் கிட்டுப் போ...."
"அது எதுக்குடி...?"
"நெல்லுக்கு இறைக்கிற தண்ணியில கொஞ்சம் புல்லுக்குப் பாயட்டுமே.. உன்னைப் பார்க்கிற பார்வையில கொஞ்சம் என்னையும் பார்க்கட்டுமே..."
"அடிதாண்டி வாங்கப் போகிற.. ப்ளஸ்டூ படிக்கிறவ பேசற பேச்சாடி இது..?"
"நான்தாண்டி பேசனும்... எதிர்த்த வீட்டுப் பாட்டியா வந்து இப்படிப் பேச முடியும்...?"
"இதை அப்படியே நம்ம வீட்டு லேடி ஹட்லர் காதில போட்டு வைக்கவா...?"
"நீ செய்தாலும் செய்வேடி.. லேடி ஹிட்லர்கிட்ட பேச்சு வாங்க என்னால் ஆகாது... நீயே லைப்ரரிக்குப் போ..."
"அஃது... அந்த பயம் இருக்கட்டும்..."
அப்படிப்பட்ட பார்வையாளர்களின் பார்வை தங்களை மொய்த்துக் கொண்டிருக்கும் என்ற நிச்சயமான ஜாக்கிரதை உணர்வுடன் ராதிகா... சங்கரை முறைத்தாள்...
"இது எங்க ஏரியா..."
"எனக்கும் தெரியுங்க..."
"என்ன தெரியும்...?"
"கரையைத் தாண்டாத அலைகள்ங்கிறதைப் போல.. நீங்களும் ஏரியா தாண்டா சமர்த்துப் பொண்ணுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..."
இப்படிச் சொன்னவனின் முகத்தை ஊடுறிவிப் பார்த்தாள் ராதிகா... அவன் சொன்னதன் பிண்ணணியிலிருந்த பொருள் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக புரிந்தது...
அவன் அவளைப் பற்றிய அனைத்து விபரங்களையும் சேகரித்திருக்கிறான்... அவள் போகுமிடமெல்லாம் பின் தொடர ஆரம்பித்திருக்கிறான் என்பதே அது..
"நீங்க பெரிய பிஸினெஸ் மேன்னு ஷோபா பீலா விட்டுக்கிட்டு இருந்தாளே.. அதெல்லாம் பொய்யா..?"
லைப்ரரியின் அமைதியை நினைவில் கொண்டு.. அடிக்குரலில் கிசுகிசுப்பாக வினவினாள்...
"ஷோபா பீலா விடுகிறவள்தான்.. பட்.. என்னைப் பற்றி அவள் சொன்னதில் பீலா எதுவுமில்லை... உண்மைதான்..."
"அப்புறமும் எதுக்காக சார் வெட்டியா பெண்கள் பின்னாலே சுற்றிக்கிட்டு இருக்கீங்க...?"
"ஒரு சின்னத் திருத்தம்... நான் பெண்கள் பின்னாலே சுற்றலை... ஒரே ஒரு பெண்ணின் பின்னால்தான் சுத்தறேன்.."
"அதுதான் ஏன்..?"
"ஏன்னா... ஐ லவ் ஹெர்..."
சங்கர் சொல்லியே விட்டான்... ராதிகா அதிர்ந்து விட்டாள்.. அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை... பட்டென்று புத்தகத்தை மறந்து லைப்ரரியை விட்டு வெளியேறினாள்...
புயலைப் போல வெளியே வந்தவள்.. வேப்ப மரத்துக்கு அடியில் நின்று கொண்டிருந்தவனின் மீது மோதிவிட்டு... அவசரமாக...
"ஸாரி..." என்றபடி தலையை நிமிர்ந்து பார்த்தாள்...
கண்கள் இடுங்க.. அவளையே கூர்மையாகப் பார்த்தபடி... பாலமுரளி நின்று கொண்டிருந்தான்...
'நீங்களா..?!' ஆனந்தத்துடன் சொல்லப் போன ராதிகாவின் தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டன...
வார்த்தைகளைத் தேடி அவள் திணறிக் கொண்டிருக்கையில் அவன் வேப்ப மரத்துக்கடியில் நின்றிருந்த காரில் ஏறி.. போயே... போய் விட்டான்... ராதிகா விக்கித்துப் போய் நின்று விட்டாள்...
"ராதிகா..."
அவளது முதுகிற்குப் பின்னால் சங்கரின் குரல் கேட்டது... ராதிகா ஓட்டமும்.. நடையுமாக வீட்டை நோக்கிப் பறந்தாள்...
"ஊய்..."
குழந்தைகளுக்கான சறுக்கு பாதையில் சறுக்கிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கூவினான்...
ராதிகா அவனைப் பார்த்தபடி.. புல்வெளியின் மையத்திலிருந்த சாய்வான சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து.. முழங்கால்களை கட்டிக் கொண்டு... முகத்தை அதில் பதித்தாள்...
அவள் மனதில்... பாலமுரளியின் கோபமுகம் மட்டுமே நிழலாடிக் கொண்டிருந்தது...
'என்மேல் அவனுக்கென்ன கோபம்..?'
இந்தக் கேள்வியே.. இரவும் பகலும்... அவள் மனதை பிறாண்டிக் கொண்டிருந்தது...
அவனுடன் தனிப்பட்ட முறையில் அவள் ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை... ஒரு பின்மாலையும்... முன்னிரவும் கலந்த.. இதமான இரவின் ஆரம்பத்தில்.. அவனைச் சந்தித்தாள்... அவன் அவளின் வீடுவரை அவளுக்கு துணையாக வந்தான்... அதைத் தவிர அவர்களுக்கு மத்தியில் என்ன சொந்தம் இருக்கிறது..?
அவன் யாரோ... அவள் யாரோ...
ஆனாலும்.. அவனது கோபமுகம் அவளை இந்த அளவுக்கு பாடாய் படுத்துகிறதே...
அவளது இதயத்தை வேதனை பிழிந்தெடுத்தது... சொல்லத் தெரியாத துயரத்துடன்... அவள் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
'பிள்ளைப் பிராயம் என்பது எத்தனை இனிமையான தருணம்...' அவள் பெருமூச்சு விட்டாள்...
திரும்பவும் குழந்தையாகி விட வேண்டும்.. அப்போது... இதுபோன்ற ஊமைத் துயரங்கள் மனதில் சுமையாக ஏறி அமராது இல்லையா...?
அவளுக்கு தனிமை வேண்டியிருந்தது.. இதுபோன்ற  புலம்பல்களை மனதில் புலம்பிக் கொள்ள தனிமை அவளுக்கு அவசியமாக தேவைப்பட்டது... அதை வீட்டினர் அவளுக்கு கொடுக்கவில்லை...
"என்னடி... காபியை கையில வைச்சுக்கிட்டு.. பித்து பிடிச்சவளைப் போல அதைக் குடிக்காம வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கியே... என்ன விசயம்..? எந்தப் பிசாசு உன்னைப் பிடிச்சுக்கிட்டு ஆட்டுது...?"
ராஜேஸ்வரி அதட்டிய போது... உலுக்கி விட்டதைப் போல தன்னுணர்விற்கு மீண்டவளுக்கு...
'காதல் பிசாசு...' என்று சொல்லத் தோன்றியது...
எந்த அடிப்படையில் அவள் அதைச் சொல்லுவாள்..? அவளுக்கும் பாலமுரளிக்கும் இடையே... சில பார்வைகள் உணர்த்திய உணர்வுகளைத் தவிர.. வேறு எதுவும் இல்லையே...
"ஒன்றுமில்லைம்மா..."
"ஒன்றுமில்லாததிற்கு நீ இப்படி உட்காருகிற ஆள் இல்லையே..."
சந்தேகத்துடன் பார்த்த ராஜேஸ்வரியிட மிருந்து தப்பித்து வாசல் பக்கம் போனால்...
"உனக்கு என்னக்கா ஆச்சு..?" என்று கேட்டான் சுந்தர்...
"ஏண்டா..?"
"இந்து பத்து நாளா... என் பேனா.. பத்திரமா என்கிட்டயே இருக்குதே... ஆர் யு ஆல்ரைட்..?"
"ஏண்டா... உன் பேனா தொலையாம இருந்தா.. எனக்கு ஏதோ ஆகிருச்சுன்னு அர்த்தமாகிடுமா...?"
"இல்லையா பின்னே...? நீ நார்மலாய் இருந்தா.. என் பேனாவை கை வைக்காம இருக்க மாட்டயே..."
"இன்னைக்கு கை வைச்சிட்டாப் போச்சு..."
சொன்னவள் அதைச் செய்ய மறந்து.. சிலையாக அமர்ந்து விட.. அவளை விசித்திரமாக பார்த்தபடி உதட்டைப் பிதுக்கினான் சுந்தர்...
"என்னடா... ராதிகா இப்படி உட்கார்ந்திருக்கா..?"
"அக்காவுக்கு உடம்பு சரியில்லை போலப்பா..."
"ராது... டாக்டர்கிட்டப் போகலாமா...?"
"அது எதுக்குப்பா...?"
"உனக்கு உடம்பு சரியில்லையேம்மா..."
"அப்படி நான் சொன்னேனா..?"
"நீ சொன்னால்தானா..? பார்த்தாலே தெரியுதே..."
'என்னத்தை தெரியுது...'
அலுப்புடன் அங்கிருந்து அகன்று.. இவர்கள் கண்ணில் பட்டால்தானே பிரச்னை.. என்று மொட்டை மாடிக்குச் சென்றால்... அங்கே கையில் புத்தகத்துடன் படிக்கிறேன் பேர்வழியென்று... எதிர் வீட்டு மாடியைப் பார்த்துப் கொண்டிருந்த கீதாவின் கண்களில் பட்டு விட்டாள்...
"ஏண்டி... உன் வழியில் நான் வருகிறேனா..? என் வழியில் நீ ஏன் கிராஸ் பண்ற..?"
"எதைடி சொல்கிற..?"
அசுவராய்மாய் கேட்டுவிட்டு.. மொட்டை மாடியின் கைப்பிடி சுவரில் சாய்ந்து அமர்ந்து... வானத்தை வெறித்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள் கீதா...
'இவளுக்கு என்ன ஆச்சு..?'
வீட்டிலிருந்த மற்றவர்களின் கவலை.. அவள் மனதிலும் எதிரொலித்தது...
வழக்கமான ராதிகாவாக இருந்தால்... இந்நேரத்திற்கு.. எதிர்வீட்டு தடியனும்... எதிர் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருப்பாளே...
'நினைச்சேண்டி.. இதுதான் நீ படிக்கிற லட்சணமா...? இரு.. நம்ம வீட்டு லேடி ஹிட்லர்கிட்ட போட்டுக் கொடுக்கிறேன்...' என்று மிரட்டியிருப்பாளே...
அதை விட்டுவிட்டு.. கல்லுக்குண்டைப் போல நிற்கும் எதிர் வீட்டு தடியனைப் பார்க்காமல்... வானத்தில்  தெரிகிற... வெண்பஞ்சு மேகப்பொதியைப் பார்க்கிறாள் என்றால்... நம்ப முடியவில்லையே...
"ராதிகா.. ஆர் யு ஆல்ரைட்..."
'இவளும் கேட்டு விட்டாளா...'
அந்தக் கேள்விகள் துரத்திய துரத்தலில் இருந்து தப்பிக்க.. தனிமையை தேடித்தான் ராதிகா... அந்தப் பூங்காவிற்கு வந்திருந்தாள்...






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -24
அம்மம்மா.. கேளடி தோழி...! -24
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy