அம்மம்மா.. கேளடி தோழி...! -23

23 ஆழ்கடலாய் என்மனது... அதன் அந்தரங்கம் அறிவாயோ.. ? ' நல்லா ஏமாந்திருப்பான்... ' ஷோபா மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டா...


23
ஆழ்கடலாய் என்மனது...
அதன் அந்தரங்கம் அறிவாயோ..?

'நல்லா ஏமாந்திருப்பான்...'
ஷோபா மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டாள்...
பூனை கண்ணை மூடிவிட்டால் பூலோகம் இருண்டு விடும் என்பது மாதிரியான சந்தோசம் அது... அவளுக்கு அது புரியவில்லை... அவள் காலேஜில் இல்லாவிட்டால் சங்கரால் எப்படி ராதிகாவை பார்க்க முடியும் என்பது அவளது எண்ணமாக இருந்தது...
'வரட்டும்.. இனி இதைப்போல காரணத்தைச் சொல்லிக் கொண்டு வந்தால் ஏமாந்து விடக்கூடாது..'
அவள் மனது தீர்மானம் போட்டு அவளது ஒப்புதலுடன் ஏக மனதாக அதை நிறைவேற்றியது...
'என்னை காலேஜில் பார்க்க வருகிற சாக்கில்தானே அவளைப் பார்ப்பான்..?'
ஊசி முனையளவு இடைவெளி கிடைத்தால் கூட.. உள்ளே நுழைந்து விடும் வல்லமை படைத்த சங்கரைப் பற்றி அறியாதவளாய் ஷோபா மனதிற்குள் கலுவிக் கொண்டாள்...
அவள் எதிர்பார்த்ததைப் போல மறுநாள் சங்கர் வரவில்லை... மறுநாள் மட்டுமில்லை... அதற்கடுத்த நாள்களிலும் அவன் வராமல் போகவும்...
'என் குணம் தெரிஞ்சதும் அடங்கிட்டான் போல...' என்று மிதப்பாக நினைத்துக் கெண்டாள்...
சங்கராவது... அடங்குகிறதாவது..?
பரந்தாமனிடம் இதைப்பற்றி அவள் பேசியிருந்தால் அவர் அவனது குணாபிசேத்தைப் பற்றி பிட்டுப்பிட்டு வைத்திருப்பார்... ஷோபா அதைச் செய்யவில்லை...
என்னதான் பெற்ற அப்பாவாக இருந்த போதிலும்.. அவரிடம் தான் விரும்பும் ஆண் வேறொரு பெண்ணிடம் பேச விரும்பி... அதற்காக அவளைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றான் என்பதைச் சொல்வதற்கு அவளுக்கு தயக்கமாக இருந்தது...
தோல்வியை ஒப்புக் கொள்வதில்தான் எத்தனை சங்கடங்கள்..?
"என்ன ஷோபா... சங்கரை இந்தப் பக்கமே காணோம்..?"
என்னவோ தினமும் அவன் வந்து ஷோபாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்ததைப் போலவும்... இடையில் சில நாள்கள் அவன் வராமல் போனதால் ஏனென்று கேட்பதைப் போலவும்... பரந்தாமன் கேட்டு வைக்க ஷோபா கடுப்பானாள்...
"என்னைக் கேட்டா.. எனக்கென்ன தெரியும் டாடி..?"
"ம்ஹீம்... இதுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் போதே அதை தக்க வைத்துக் கொள்ளனும்கிறது..."
"நீங்க எதைச் சொல்கிறீங்க..?"
"உனக்கு அது தெரியாதா..? வராதவன் வந்து.. உன்னைக் காலேஜிலேயே டிராப் பண்றேன்னு வருந்தி வருந்தி அழைத்துக்கிட்டு போகிறான்.. நீ என்னடான்னா.. தலைவலிக்குதுன்னு அவனுக்கு டாட்டா சொல்லிட்டு உடனேயே வீட்டுக்கு வந்து சேருகிற... இப்படியிருந்தா எப்படி ஷோபா..?"
'அவன் எதுக்காக என்னை வருந்தி வருந்தி அழைத்துக்கிட்டுப் போனான்னு உங்களுக்குத் தெரிஞ்சா... ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிருவீங்க... டாடி...'
ஷோபா நினைத்ததை வெளியில் சொல்லாமல் காலேஜிற்கு கிளம்பி விட்டாள்...
எதற்கும் இருக்கட்டுமென்று ராதிகாவைப் பின் தொடர்ந்து சென்று அவளை சங்கர் சந்திக்க முயல்கிறானா என்று கண்காணித்தாள்...
சங்கர்தான் ராதிகாவை சந்திக்காமல் ஹேமாவை சந்தித்துக் கொண்டிருந்தானே...
ராதிகா முகத்திலடித்தைப் போல பேசியதும் விலகி விட்டான் என்ற நிச்சயத்துடன் ஷோபா
நிம்மதியான போது... ஹேமாவிடம் வேண்டிய விவரங்களை சேகரித்து விட்ட சங்கர்.. ராதிகாவை பின்தொடர ஆரம்பித்திருந்தான்...
கோவிலின் படிகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்ட ராதிகா பக்திப்பரவசத்துடன் கோவில் பிரகாரத்தில் பிரவேசித்தாள்... மாலை நேரத்தில் கோவிலில் நிலவிய மங்களகரமான சூழ்நிலை
அவள் மனதிற்கு இதத்தைத் தந்தது.. கோபுரங்களில் கூடுகட்டியிருந்த புறாக்களின் சிறகொலியில் தலை நிமிர்ந்து.. அண்ணாந்து கோபுரத்தைப் பார்த்தாள்...
'கோபுரத்தின் மாடங்களில்..
             கூடுகட்டி  வாழ்கின்ற...
    புறாக்களை நின்று பார்க்க..
             பொழுதுண்டோ எந்தனுக்கு...'
அவள் மனம் அவசரக் கவிதையைச் சொன்னது.. அவளுக்கு கோவில் பிடிக்கும்.. அங்கே கொழுவிருக்கும் தெய்வத்தையும் பிடிக்கும்... கோபுரத்தில் கூடு கட்டியிருக்கும் புறாக்களைப் பார்க்கப் பிடிக்கும்... கோவிலுக்குள் ஒலிக்கும் தெய்வீக இசை ததும்பும் பாடல்களைக் கேட்கப் பிடிக்கும்...
பட்டுப் பாவாடை.. சட்டை அணிந்திருந்த இரண்டு சிறுமிகள்... கொழுசு சத்தத்துடன் அவளைக் கடந்து ஓடினார்கள்...
கணுக்காலை மறைக்கும் பாவாடையை லேசாக தூக்கிப் பிடித்தபடி அவர்கள் ஓடிய விதம் ராதிகாவை ரசிக்க வைத்தது...
"ஏய்ய் மாலு... பார்த்துடி.. கீழே விழுந்து வைக்கப் போற..." ஒரு பெண்மணி உரத்த குரலில் எச்சரித்தாள்...
அந்தச் சிறுமிகளில் ஒருத்தியின் அம்மாவாக இருப்பாள் என்று ராதிகா யூகித்தாள்...
இரட்டைப் பின்னலில் வளைவாக மல்லிகைச் சரம் சூடியிருந்த அந்த இரண்டு சிறுமிகளில் யார் மாலுவாக இருப்பார்கள் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போது.. ஒருத்தி திரும்பி...
"போம்மா... உங்களுக்கு வேற வேலையில்லை..." என்றாள்..
இதைப் போலத்தானே தானும் சொல்வோம் என்ற நினைவில் ராதிகாவின் உதடுகளில் இளநகை அரும்பியது...
கடந்து போன குழந்தைப் பிராயத்திற்கு திரும்ப முடியுமா என்ற அவள் ஏக்கப்பட்டுப் போனாள்...
சந்நிதியின் முன்னால் நின்று பெருமாளையும்.. தாயாரையும் சேவித்து விட்டு.. கற்பூர ஆரத்தியை தொட்டு வணங்கி குங்குமத்தைப் பெற்றுக் கொண்டாள்...
மாலை நேரத்தின் குளுமையை ரசித்தபடி கோவிலை வலம் வந்து கொண்டிருந்த போது.. ஒரு திருப்பத்தில் யாரோ அவளை...
"ராதிகா..." என்று அழைத்தார்கள்...
'யார்..?' அவள் திரும்பிப் பார்த்தாள்... திகைத்தாள்..
"என்ன அப்படிப் பார்க்கறிங்க..?" என்ற கேள்வியோடு சங்கர் அவளருகே வந்தான்...
ராதிகாவின் விழிகள் அவசரமாக.. சுற்றுப் புறத்தை துழாவின... தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று கவலை கொண்டாள் அவள்...
"உங்களுக்கு என்ன வேணும்..?" அவள் நிற்காமல் நடந்தாள்...
"உங்க கூடப் பேசனும்..." அவன் கூடவே நடந்தான்..
"என்கூடப் பேச என்ன இருக்கு..?"
"நிறைய இருக்கு..."
"எனக்கு ஒன்னுமில்ல..."
"என்னால அப்படிச் சொல்ல முடியலையே..."
"அது உங்க பிரச்னை..."
"இருக்கட்டுமே.. அது உங்க சம்பந்தப்பட்ட பிரச்சனையாச்சே..."
"எனக்கு அதைப்பத்தி கவலையில்லை..."
"அதெப்படிங்க.. நீங்க அப்படிச் சொல்ல முடியும்..? என்பிரச்னை தீரனுமுன்னா உங்களிடம் பேசித்தானே ஆகனும்..?"
அவள் பார்வையை சுழல விட்டபடி வேகமாக நடந்தாள்.. அடுத்த திருப்பத்தில் அவன் வேகம் கூட்டி.. அவள் வழியை மறித்தான்... அவள் பதறிவிட்டாள்...
"என்ன இது..? யாராவது பார்த்து விடப் போறாங்க..."
"அப்ப நின்று பேசுங்க..."
"வம்பு பண்றீங்களா...?"
"நிச்சயமாய் இல்லை.. எனக்கு உங்களிடம் பேசியாகனும்..."
அவன் பிடிவாதமாக கைகளை ஆட்டி ஆட்டிப் பேசிய விதத்தில் ராதிகாவின் கண்கள் கலங்கிவிட்டன... அதைப் பார்த்த சங்கர் வேகம் தணித்தான்...
"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு கண் கலங்கறிங்க..? உங்க கையைப் பிடித்தா இழுத்தேன்..."
"ஸ்ஸ்... இது கோவில்..."
அவன் என்னவோ பேசத்தகாத வார்த்தைகளை பேசிவிட்டதைப் போல் அவள் ஆட்சேபிக்க.. அவன் அவளை விசித்திரமாகப் பார்த்தான்...
"இப்ப நான் என்னங்க சொல்லிட்டேன்..."
"பாருங்க.. உங்களுக்கு உங்க பேச்சு சாதாரண மானதாக இருக்கலாம்... எனக்கு அப்படியில்லை..."
"ஓகே.. ஓகே.. இனிமேல் அதுபோல் பேசவில்லை... போதுமா...?"
"இப்பப் பேசுகிறதையே தப்புன்னு சொல்கிறேன்... இனிமேலயும் பேசப் போகிறிங்களா..? அதுக்கு வேற ஆளைப் பாருங்க..."
"யாரைப் பார்க்கிறதுன்னு நீங்களே சொல்லிட்டா தேவலை..."
"அதுக்கு எதுக்குங்க ஆளைத் தேடி நீங்க அலையனும்... இருக்கவே இருக்கிறா ஷோபா... உங்களுக்கு அவதான் சரி..."
இப்படிச் சொல்லிவிட்டு விரையப் போன ராதிகாவின் முன்னால் கைநீட்டி தடுத்தான் சங்கர்... அவன் முகம்.. கடுமையாக மாறியிருந்தது...
"அதை நீங்க சொல்லக்கூடாது... நான்தான் முடிவு பண்ணனும்..."
"நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க... என்னை மட்டும் வழியை மறைக்காதீங்க... வழியை விடுங்க... நான் வீட்டுக்குப் போகனும்.. அம்மா தேடுவாங்க..."
"ராதிகா...! என் மனசில என்ன இருக்குன்னு புரிஞ்சுக்கவே மாட்டிங்களா...?"
"அது என்ன தேவைக்கு சார்..? நான் இன்ஜினியரிங் தான் படிக்கிறேன்.. சைக்காலஜி படிக்கவில்லை... உங்க மனசில் புகுந்து ஆராய்ச்சி பண்ணும் உத்தேசமெல்லாம் எனக்கு இல்லை..."
"நீங்க வேணும்ன்னே அடம் பிடிக்கறீங்க...."
"புரிந்தால் சரி..."
அவர்கள் மட்டுமே நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி... கும்பலாய் சில பெண்கள் வரவும்.. சங்கர் விலகி நின்றான்.. சட்டென்று அந்தக் கும்பலில் ஐக்கியமாகி.. அவர்களுடன் பேசியபடியே கோவிலை விட்டு வெளியே நடந்தாள் ராதிகா... கோவில் வாசலில் பாலமுரளி நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் அவள் முகத்தில் வெளிச்சம் பரவியது... அவன் முகத்திலோ இருள் பரவியிருந்தது....
அவனுடன் பேச ஆவலுடன் ராதிகா வாய்திறந்த போது... அவன் இறுக்கமான முகத்துடன்... அவளைப் பாராததைப் போல... காரில் ஏறிச் சென்று விட்டான்...
கார்போன திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவின் கலங்கின கண்கள் மேலும் கலங்கின...
அன்று இரவு... அவள் தூங்க வெகு நேரமானது...
அடர்ந்திருந்த வேப்ப மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் கூட சத்தமில்லாமல் கூவிக் கொண்டிருந்தன.. அந்த லைப்ரரி முழுவதும் ஆள்கள் நடமாடிக் கொண்டிருந்த போதும்.. அமைதி விரவிப் படர்ந்து வியாவித்திருந்தது.. ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்திருந்த வேப்ப மரத்தின் இலைகள் குளிர்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தன... வேப்ப மரத்தின் குயில் பாடுவதைக் கேட்டபடி... அந்த லைப்பரிக்குள் நுழைந்தாள் ராதிகா...
அவளுக்குப் பழக்கமான நூலகர்... லேசாக புன்னகைத்தார்... பதிலுக்கு புன்னகைத்துவிட்டு... அவர் முன்னாலிருந்த பதிவேட்டில் கையொப்பம் இட்டாள்.. நூலக அலமாரிகளைச் சுற்றி வலம் வந்து அவளுக்கு தேவைப்பட்ட புத்தகத்தைத் தேடத் தொடங்கினாள்...
'இதோ இருக்கே...'
அலமாரியின் இந்தப் பக்கமிருந்து அவள் புத்தகத்தை உருவியபோது... அந்தப் பக்கம் ஒருகை
அதை இழுத்துப் பிடித்திருந்தது... ராதிகா பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தாள்.. ஊஹீம்... புத்தகத்தை அசைக்கக் கூட முடியவில்லை...
விட்டுக் கொடுக்கச் சொல்லி... வாய் விட்டே கேட்டு விடலாம் என்ற முடிவோடு... அவள் குனிந்து பார்த்த போது... அலமாரியின் அந்தப் பக்கமாக நின்று கொண்டிருந்த சங்கர் புன்னகைத்தான்...
'இவனா...'
ராதிகா புத்தகத்தை விட்டுவிட்டு... முகத்தைத் திருப்பிக் கொண்டாள்... அவன் புத்தகத்துடன் அலமாரியைச் சுற்றி.. அவளருகில் வந்து நின்றான்...
"இந்தாங்க... உங்க புத்தகம்..." அவளிடம் நீட்டினான்...
"வேண்டாம்..." முகம் இறுக அவள் மறுத்தாள்...
"ஏன் வேண்டாம்..? இதற்காகத்தானே இவ்வளவு நேரமும் என்கூட மல்லுக்கு நின்றீங்க...?"
அவன் குரலில் சிரிப்பிருந்தது... அவள் முகத்தில் கடுப்பிருந்தது...






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,7,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,90,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,25,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,7,எண்ணியிருந்தது ஈடேற,230,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,21,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,6,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -23
அம்மம்மா.. கேளடி தோழி...! -23
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy