அழகான ராட்சசியே -68

68 ஓர் வார்த்தை கேட்டுவிட ஓடோடி வந்து நின்ற அழகான ராட்சசி நீ.... நரேந்திரன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.. இன்னும் இரண்டு மணி ...


68
ஓர் வார்த்தை கேட்டுவிட
ஓடோடி வந்து நின்ற
அழகான ராட்சசி நீ....


நரேந்திரன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.. இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவன் அமர்ந்திருக்கும் விமானம் பெங்களூரைத் தொட்டு விடும்.. நீண்ட நாள்களுக்குப் பின்னால் ஊர்மிளாவைச் சந்திக்கப் போகும் நினைவு அவன் மனதில் எழுந்தது..
"உன் போன் வந்திருக்குன்னு அர்ச்சனா வந்து சொல்கிறாப்பா.. அவருக்கென்ன வேலை.. அப்புறமா பேசிக்கறேன்னு அந்த ராதாகிருஷ்ணன் முன்னாலேயே சொல்லிட்டு அவன்கூடச் சிரித்துப் பேசிக்கிட்டு இருக்காப்பா உன் பெண்டாட்டி.."
அகல்யாவின் வார்த்தைகள் அவன் காதுகளில் ரீங்காரமிட்டன.. புருவங்களின் மத்தியில் சுளிப்பு வந்தது.. அதை நீவி விட ஊர்மிளா அருகில் இல்லையென்ற தாபம் அவனுக்குள் வந்தது..
நோயே மருந்தாகும் மாயம் அவளிடம் தான் இருந்தது.. அவனது புருவச் சுளிப்பிற்கு காரணம் அவள்தான்.. அதைப் போக்கும் மாய மருந்தும் அவள்தான்.
'ராதா கிருஷ்ணன்..!'
நரேந்திரன் சீட்டில் சாய்ந்து கண்மூடினான்.. மனதில் ஊர்மிளா வந்து சிரித்தாள்.. அவன் கிளம்பி வந்த நாள் முதலாக போனில் அவனிடம் பேசாமல் இருக்க முடிந்த அவனது அன்புக் காதலி..!
'எப்படி அவளால் என்கூடப் பேசாமல் இருக்க முடிந்தது..?'
இந்தக் கேள்விதான் அவன் மனதை அலைக் கழித்தது..
அவன்மீது ஊர்மிளா காட்டிய ஆவேசமான.. அதீதக் காதலை அனுபவித்தவன் அவன்.. திருமணமான நாளிலிருந்து அவனுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தவளை முதன் முதலாக நீண்ட நாள்கள் பிரிந்திருக்கிறான் அவன்.. இப்படிப்பட்ட சூழலில்
காதலே இல்லாத மனைவிகூட கணவனைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பாள்..
'என்னத்தைச் செஞ்சுக்கிட்டு இருக்கிற..?' என்ற லட்சணத்தில் போன் பண்ணிக் கேள்வி கேட்டு வைப்பாள்..
இங்கே காதல் கடல் போல பொங்கித் ததும்பிக் கொண்டிருக்கிறது என்றுதான் பெயர்.. ஒரு போனைக் காணோம்.. அவள் தான் போன் பண்ணவில்லை யென்றால்.. அவன் போன் பண்ணும் போதாவது எடுத்துப் பேசியிருக்கலாம் அல்லவா..?
ஒன்று.. போன் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. இல்லையென்றால் சுவிட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது.. இவை இரண்டும் இல்லையென்றால் அகல்யா போனை எடுத்தாள்.. அவன் மனைவி அவன் இல்லாதபோது கூடப் படித்த சிநேகிதனை வீட்டுக்கே வரவழைத்து கூத்தடித்துக் கொண்டிருக்கிறாள் என்ற குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தாள்.. அதை வீட்டிலுள்ள வேலையாள்கள் வேடிக்கை பார்த்தார்கள் என்று போட்டுக் கொடுத்தாள்.. அர்ச்சனாவைப் போன்ற வயதுப் பெண் இருக்கும் இடத்தில் ஊர்மிளா சிநேகிதன் என்ற பெயரில் கண்ட தடிமாட்டுத் தாண்டவராயன்களையெல்லாம் வீட்டுக்குள் விடலாமா என்ற கேள்வியை எழுப்பினாள்.. அதனால் அருண்குமார் முகம் சுளிக்கிறான் என்று விசனம் கொண்டாள்..
'இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கு..?'
நரேந்திரனுக்கு தலையை வலித்தது.. அகல்யா சொன்ன நிகழ்வுகள் யாவும் அவன் வீட்டில் நடந்ததாகவே இருந்தன.. அதில் அர்ச்சனாவையும்.. அருண்குமாரையும்.. வீட்டில் வேலை செய்யும் வேலையாள்களையும் அவள் சம்பந்தப் படுத்தினாள்..
எதுவும் இல்லாமல் நரேந்திரனிடம் அவள் அவ்வாறு கூறத் துணிவாளா..?
நரேந்திரன் ஊர்மிளாவுக்கு போன் பண்ணிய போது அவளது போன் என்கேஜ்டாக இருந்தது.. அடுத்து அவன் பேசியபோது ராதாவிடம் பேசிக் கொண்டிருந்ததாக அவள் சொன்னாள்.. பேசிக் கொண்டிருக்கும் போதே போனைப் போட்டு விட்டு போய் விட்டாள்.. அதை எடுத்துப் பேசிய அகல்யா.. ராதாகிருஷ்ணன் வந்து விட்டதால் ஊர்மிளா போனைத் தூக்கிப் போட்டுவிட்டு ஓடி விட்டாள் என்று சொன்னாள்..
அன்று முழுவதும் நரேந்திரனுக்கு அது உறுத்தலாகவே இருந்தது..
ஏதாவது வேலையென்று அவள் போனை கீழே போட்டு விட்டுப் போயிருந்தாள் என்றால் சற்று நேரத்தில் வந்து அவனுக்குப் போன் பண்ணிப் பேசியிருக்கலாம் அல்லவா..?
இருந்தும் அவன் போன் பண்ணினான்.. அதற்குப் பின்னால் ஊர்மிளாவின் போன் ஸ்விட்ச் ஆஃபிலேயே இருந்தது..
தாள முடியாமல் லேண்ட் லைனில் அழைத்தான்.. அதிலும் அவள் பேச வர மறுத்து விட்டாள்..
ராதா என்று ஊர்மிளா சொன்னதும்.. ராதாகிருஷ்ணன் என்று அகல்யா சொன்னதும் ஒரே நபரைத்தானா என்று நரேந்திரனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை..
ராதாகிருஷ்ணன் என்ற அவளின் தோழனை ராதா என்றே ஊர்மிளா அழைத்துப் பேசினாள் என்று அகல்யா சொல்லியிருந்ததில் நரேந்திரன் ஊர்மிளாவைச் சந்திக்க வந்தது அவளது தோழன்தான் என்றே நினைத்து விட்டான்..
அவனில்லாத தருணத்தில் வீட்டுக்கு வந்த தோழனிடம் அவள் பேசிச் சிரித்திருக்கிறாள்.. அதை கண்.. காது.. மூக்கு வைத்து அகல்யா சொல்லுகிறாள் என்று
தான் அவன்..
"நான் வந்து விசாரிக்கும் வரை நீங்க அவளை எதுவுமே கேட்கக் கூடாது.." என்று அகல்யாவை மிரட்டி வைத்தான்..
இருந்தாலும் அவனுக்கு சில விளக்கங்கள் தேவைப் பட்டன.. ஏன் அவனுக்கு ஊர்மிளா போன் பண்ணவில்லை..? அவன் அழைத்த போதும் அவன் அழைப்பை ஏற்று எடுத்துப் பேசாமல் ஏன் அமைதி காத்தாள்..? பெரும்பாலான நேரங்களில் அவளது போன் 'ஸ்விட்ச் ஆஃப்' ஆகியிருந்ததின் காரணம் என்ன..? அவன்  அழைப்பை எடுத்துப் பேசாதவள் அந்த ராதா என்ற ராதாகிருஷ்ணனின் அழைப்பை மட்டும் எப்படி எடுத்துப் பேசினாள்..? அவனுடன் அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தவள்.. நரேந்திரன் பேசும் போது மட்டும் ஏன் ஓரிரு வார்த்தைகளுடன் ஓடிவிட்டாள்..? அதற்குப் பின்னால் ஒட்டு மொத்தமாக ஏன் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து தூக்கிக் கடாசினாள்..? அவன் லேண்ட் லைனில் அழைத்த போது ஏன் பேச வர மறுத்தாள்..?
லேண்ட் லைன் போனை அகல்யா எடுத்துப் பேசியிருந்தால் அவள் ஊர்மிளாவிடம் போய் சொல்லாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.. அப்படியில்லாமல் போனை எடுத்தது அர்ச்சனா.. அவள் கட்டாயம் ஊர்மிளாவிடம் தகவலைச் சொல்லியிருப்பாள்.. இருந்தும் ஏன் ஊர்மிளா பேச வரவில்லை..?
இத்தனை விளக்கங்களையும்.. கோபங்களையும்.. அவளிடம் தனிமையில் கேட்கத்தான் அவன் உத்தே சித்திருந்தான்..
அவையெல்லாம் கணவனுக்கும்.. மனைவிக்கும் இடையினில் நடக்கும் அந்தரங்க உரையாடல்கள்..
அவை இல்லாமல்.. அனைவரின் முன்னாலும் அவன் ஊர்மிளாவிடம் கேட்க வேண்டிய விளக்கம் ஒன்று இருந்தது..
அது அகல்யா சொன்னது உண்மையா என்று கேட்பது..
அதை நரேந்திரன் கேட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான.. அகல்யா சொன்ன அத்தனை நிகழ்வுகளும் அவன் வீட்டுக்குள் நடந்ததாக இருந்தன.. வேலையாள்களும்.. அருணும்.. அர்ச்சனாவும்.. ஊர்மிளாவின் தோழனைப் பற்றி நல்ல விதமாக நினைக்க வில்லை என்று அகல்யா சொல்லியிருந்தாள்.. அதை அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து.. ஊர்மிளாவிடம் விளக்கம் கேட்டு.. இல்லையென்று ஊர்ஜிதப் படுத்த வேண்டுமல்லவா..?
அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் ஆயிரம் ஊடல்கள் இருக்கலாம்.. அது அவர்களுக்குச் சொந்தமானவை..
அகல்யா எப்படி அவ்வளவு துணிச்சலாக அவனிடமே அவன் மனைவியை குறை சொல்லிப் போட்டுக் கொடுக்கலாம்..?
அவள் அப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியத்தைச் செய்தாள் என்று அனைவரின் முன்னிலையிலும் நிரூபித்து விட்டு அவளை என்னவென்ற ஒரு கேள்வியைக் கேட்டு விட வேண்டாமா..? இனிமேலும் என் மனைவியைப் பற்றி நீ எதையாவது பேசினால் நடப்பது வேறு என்று எச்சரிக்கை விடுத்து கண்டித்து வைக்க வேண்டாமா..? அகல்யா இருக்க வேண்டிய இடம் எது என்று கோடிட்டுக் காட்ட வேண்டாமா..?
"வேண்டாம் நரேன்.."
கஜேந்திரன் திருமண மண்டபத்தில் சொன்னது அவன் மனதில் வந்தது..
"வயசானவன்.. வாழ்ந்து பார்த்தவன்ங்கிற முறையில சொல்லுகிறேன்.. அந்த வீட்டுக்கு உன் மனைவியை அழைத்துக் கொண்டு போகாதே.. அந்த அகல்யா சரியான பெண்ணல்ல.. அவள் உன் மனைவியை நிம்மதியாக வாழ விட மாட்டாள்.."
தாத்தா சொன்னதைப் கேட்டிருக்க வேண்டுமோ என்று அவனுக்குள் சஞ்சலம் வந்தது.. அவர் வீட்டில் ஊர்மிளா இருந்திருந்தால்.. இதுபோன்ற பழிச் சொற்களுக்கு ஆளாகி இருக்க மாட்டாளே..
'இதை சும்மா விடக்கூடாது..'
அவன் மனதில் கோபம் எழுந்தது.. அது எப்படி அகல்யா நரேந்திரனின் மனைவியைப் பற்றிய அவ்வளவு பெரிய பழிச்சொல்லை அவனிடமே தைரியமாக சொல்லுவாள்..?
'இதை அம்பலப் படுத்தியே ஆகனும்..' நரேந்திரன் தீவிரமாக இருந்தான்..
அவனது திருமண தினத்தன்று சோமசுந்தரமும்.. பூங்குழலியும் அவனுடைய வீட்டில் தங்கியிருந்த போது இதுபோன்ற ஒரு பொய்யை அகல்யா உண்மை போல திரித்துச் சொன்னாள்.. அருணும், அர்ச்சனாவும் அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்ததாகவும்.. அவர்கள் அதை மறுத்து விட்டார்கள் என்று சொன்னாள்.. நரேந்திரன் அதை நம்பி விடாமல் அருணையும்.. அர்ச்சனாவையும் அழைத்து வீட்டில் இருந்த அனைவரின் முன்னாலும் அகய்லா சொன்னது உண்மையா.. பொய்யா என்று விசாரித்தான்.. அதை உண்மையில்லை என்று ஊர்ஜிதம் செய்து விட்டு அகல்யாவை கண்டித்தான்.. அதையும் வீட்டிலிருந்த அனைவரின் முன்னிலையிலும்தான் செய்தான்..
அதைப் போலதான் அப்போதும் செய்ய நினைத்திருந்தான் நரேந்திரன்.. ஊர்மிளாவிடம் விளக்கம் கேட்பது.. அவள் விளக்கம் சொன்னதும் அகல்யாவை உண்டு.. இல்லையென்று ஆக்கி விடுவது..
அவன் மனைவியிடம் சரியான விளக்கம் இருக்கும் என்று அவன் நம்பினான்.. அவள் அதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தான்..
ஊர்மிளாவின் மீது நரேந்திரன் குற்றம் காணவில்லை.. அவன் மனைவியை குற்றமற்றவள் என்று அனைவரின் முன்னிலையிலும் நிருபிக்கத்தான் அவன் நினைத்தான்..
சோமசுந்தரம் தெளிவானவர்.. அவன் வீட்டுக்கு அவர் வந்திருந்த போது அகல்யாவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஆட்டி வைத்து விட்டுப் போனதை நரேந்திரன் மறக்கவில்லை.. அகல்யா சொன்ன பொய் வார்த்தைகளை நரேந்திரனின் முன்னிலையில் அம்பலப்படுத்த அவர் தயங்கவில்லை.. அதே தைரியத்தை ஊர்மிளாவிடமும் நரேந்திரன் எதிர்பார்த்தான்..
சோமசுந்தரத்தின் மகள்.. நரேந்திரனின் மனைவி.. எப்படிப்பட்ட போர் குணம் கொண்டவளாக இருக்க வேண்டும்..?
'என்னிடமே இப்படிப் போட்டுக் கொடுக்கிறவங்க வீட்டில் அவளிடம் வாய் விடாம சும்மாவா இருந்திருப்பாங்க..? ஒரு போனைப் போட்டு அதையெல்லாம் என்னிடம் சொல்லனும்னு இவளுக்குத் தோணவே இல்லையா..?'
நரேந்திரனுக்கு அதுதான் மிகப் பெரும் குறையாக இருந்தது.. அருகிலிருந்தாலும்.. தொலைவிலிருந்தாலும்.. சாய்ந்து கொள்ள அவன் தோளை அவள் தேடியிருக்க வேண்டாமா..?
விமானம் பெங்களூரில் தரையிறங்கியது.. விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் தரையிறங்கினார்கள்..
காத்திருந்த அருண்குமாரை நோக்கி நடந்தான் நரேந்திரன்.. காரில் வரும்போது வீட்டில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி விசாரித்தான்.. புதிதாக எதுவும் இல்லையே என்றான் அருண்.. அகல்யா சொன்னதற்கு நேர் எதிர்மாறாக இருந்த அவன் பதிலில்..
'நினைத்தேன்..' என்று பல்லைக் கடித்தான் நரேந்திரன்..
அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் அகல்யா ஓடி வந்தாள்..
"நரேன் வாப்பா.. என்னப்பா.. இளைச்சிட்ட.. சாப்பாடு சரியில்லையா..?" என்று வராத கண்ணீரைத் துடைத்தாள்..
"அண்ணா.." அர்ச்சனா குதித்துக் கொண்டு வந்தாள்..
நரேந்திரனின் விழிகள் ஊர்மிளாவைத் தேடின.. அவன் வந்திருக்கிறான்.. அவனைத் தேடி வராமல் அவள் எங்கிருக்கிறாள்..?
ஊர்மிளா அங்கேதான் இருந்தாள்.. நரேந்திரனின் கார் வீட்டுக் காம்பவுண்டுக்குள் வருவதை விழியோரம் அரும்புக் கட்டியிருந்த கண்ணீருடன் யாரோ ஒருத்தியைப் போல மாடி பால்கனியிலிருந்து பார்த்தபடி அந்த வீட்டில்தான் இருந்தாள்.. அவளுடைய இதயம் துடித்தது.. நடுங்கியது... அந்த நடுக்கம் இடம் பெயர்ந்து வைவிரல்களுக்கு மாறியதில் அவள் கண்மூடி அவர்களின் அறையிலேயே உட்கார்ந்து விட்டாள்..
"அருண்.. காலையிலே சீக்கிரமாவே எழுந்திருச்சுருடா.."
ஊர்மிளாவை கடைக் கண்ணால் பார்த்தபடி முதல் நாள் மாலையில் அகல்யா ஆர்ப்பரித்தபோது அதை சட்டை செய்யாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஊர்மிளா..
வாந்தியும்.. தலை சுற்றலுமாக படுக்கையில் படுத்திருக்க அவளது உடல் கெஞ்சினாலும்.. அவ்வபோது அவள் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தாள்..
அகல்யாவின் அச்சுறுத்தலுக்குப் பயந்து போய் ஊர்மிளா அறைக்குள்ளேயே முடங்கி விட்டாள் என்று அகல்யா மகிழ்ந்து போய் விடக்கூடாது என்பது முதல் காரணம்..
அப்படி அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் தேவையற்ற பயங்கள் வந்து ஊர்மிளாவை அழுத்தி மீளமுடியாத இருள் புதை குழியில் தள்ளுவதைப்
போல ஊர்மிளா உணர ஆரம்பித்திருந்தது இரண்டாவது காரணம்..
தாய்மை அடைந்திருக்கும் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் நூதன உணர்வு அது.. உறக்கமும்.. விழிப்பும் இல்லாத 'மசக்கை'யை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது ஏற்படும் மனபயம் அது..
ஊர்மிளா தாயின் அரவணைப்பாக நரேந்திரனின் அரவணைப்பைத் தேடினாள்.. மயக்கம் தரும் நிலையை அவன் மார்பில் சாய்ந்து கண்மூடி அவனிடம் சொல்லி விடத் துடித்தாள்..
கேள்.. உன் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. அதனால் எனக்கு மயக்கம் வருகிறது.. வாந்தி வருகிறது.. பயம் வருகிறது.. நீ என் அருகிலேயே இருப்பாயா..?
என் பயத்தைப் போக்கி.. என் மனதுக்கு தைரியம் அளிப்பாயா..?
இப்படியெல்லாம் விரல் கோர்த்து.. முகம் பார்த்துப் பேசி விட தவித்தாள்.. அந்தத் தவிப்பையும்.. துடிப்பையும் தீர்க்கக் கூடியவன் அந்த வீட்டுக்குள் வந்து விட்டான்.. அவனை எதிர்கொள்ள அவகாசம் தேடி அந்த ஏந்திழை தனிமையின் கும்மிருட்டில் அனாதரவாக அமர்ந்திருந்தாள்..
"எனக்குத் தெரியும்மா.." எரிச்சலுடன் சொன்னான் அருண்குமார்..
அங்கே உட்கார்ந்திருந்த ஊர்மிளாவின் முன்னால் அகல்யா ஆர்ப்பரித்ததை அவன் விரும்பவில்லை..
இப்போதெல்லாம் ஊர்மிளா யாருடனும் அதிகமாகப் பேசுவதில்லை என்பதை அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.. அவள் முகம் வாடியிருந்தது.. என்னவென்று கேட்கலாம்தான்... அது இயல்பான ஒன்றுதான்.. அகல்யா அதை இயல்பாக இருக்க விடுவாளா..? அவள்தான் ஏதாவது ஒன்றைச் சொல்லி ஊர்மிளாவை தனிமைப் புதைகுழிக்குள் தள்ளி விடுவதையே குறிக்கோளாக வைத்திருக்கிறாளே..
அந்த வீட்டில் இருப்பதை அத்துவானக் காட்டுக்குள் இருப்பதைப் போல ஊர்மிளாவுக்கு அகல்யா உணர்த்திக் கொண்டிருக்கிறாள் என்பது அவனது அனுமானமாக இருந்தது.. அதை அவனால் கண்டிக்கவும் முடியவில்லை.. நரேந்திரனின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியவில்லை..
என்னதான் அருண்குமார் நியாயமானவனாக.. நல்ல குணங்களைக் கொண்டவனாக இருந்தபோதும்.. நரேந்திரனிடம் இந்த விவரத்தை எடுத்துச் சொல்லத் தயங்கினான்..
அவன் நரேந்திரனைப் பற்றி நன்கு அறிவான்.. அகல்யாவிடம் நரேந்திரனுக்கு பாசமோ.. ஒட்டுதலோ.. மதிப்பு மரியாதையோ அறவே கிடையாது என்பதையும் நன்கு அறிவான்.. எந்த நொடியிலும் நரேந்திரன்.. அந்தக் குடும்பத்துடனான உறவை முறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடக்கூடும் என்பதையும் நன்கு அறிவான்..
அப்படியொரு சூழ்நிலை வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமே அருண்குமாரின் வாயைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது.. நரேந்திரனைச் சார்ந்திருக்கும் அந்தக் குடும்பம்.. அவனைப் பிரிந்து விட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்துடன் அவன் வாயிருந்தும் ஊமையாகிப் போனான்..
"உனக்குத் தெரியும்டா அருண்.. எனக்கும் தெரியும்.. அது மத்தவங்களுக்குத் தெரியனுமே.."
ஊர்மிளாவை ஜாடையாகப் பார்த்தபடி சொன்னாள் அகல்யா.. ஊர்மிளாவின் புருவங்கள் முடிச்சிட்டன.. அகல்யா ஏதோ ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லப் போகிறாள் என்று அவளுடைய உள்ளுணர்வு சொல்லியது.. அது எந்தச் செய்தியாக இருக்கக் கூடும்..?
"மத்தவங்கன்னா யாரைச் சொல்கிறீங்கம்மா.. அர்ச்சனாவுக்கு அண்ணன் வரப் போகிறார்ன்னு தெரியும்.." என்றான் அருண்குமார்..
'என்னது..? நரேந்திரன் வரப் போகிறானா..?'
ஊர்மிளா ஆவலுடன் நிமிர்ந்தாள்.. அவளுடைய ஆவலை ஆவலுடன் வேடிக்கை பார்த்த அகல்யாவின் விழிகளில் குரூரம் மின்னியது.. அவள் உதடுகளில் இகழ்ச்சிச் சிரிப்புத் தவழ்ந்தது..
'பார்.. உன் புருசன் ஊருக்குத் திரும்பப் போகிறான்.. அந்த விசயம் உன்னைத் தவிர.. எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது..' அகல்யாவின் விழிகள் இகழ்ச்சியுடன் சொல்லின..
'கடவுளே..' ஊர்மிளா கண்களை மூடிக் கொண்டாள்.
அவளுடைய காதல் கணவன் வீடு திரும்பப் போகிறான்.. அது அவளுக்குத் தெரியவில்லை.. அவளைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.. இந்தக் கொடுமையை அவள் எங்கே போய் சொல்லுவாள்..?
"உங்கண்ணன் நாளைக்குக் காலை பிளைட்டில வரப்போகிறான்... நீ ஏர் போர்ட்டுக்குப் போக வேண்டியிருக்கும்.. சீக்கிரமா எழுந்திருச்சுருடா.." அகல்யா அக்கறையுடன் சொன்னாள்..
"நீங்க சொல்லித்தான் அதை நான் செய்யனுமா..?" அருண்குமார் கோபத்துடன் மாடிக்குப் போய் விட்டான்..
அகல்யா ஊர்மிளாவை எகத்தாளமாக பார்த்தாள்..
'ஊர்மிளா.. ஓடி விடு.. இந்தப் பாதகி எதையோ சொல்லப் போகிறாள்..' ஊர்மிளாவின் மனம் எச்சரித்தது..
ஊர்மிளா தோட்டத்துப் பக்கம் போய் விடலாமென்று எழுந்தாள்..
"என்ன..? நாளைக்குக் காலையிலேதானே நீ வீட்டைவிட்டு ஓடப் போகிற..? இப்ப அதுக்கு ஒத்திகை பார்த்து வைச்சுக்கறியா..?"
இரக்கமில்லாமல் கேட்டாள் அகல்யா.. அவளுடைய கபடம் தகம்பிய விழிகளில் தெரிந்த இறுமாப்பில் மனம் நைந்தாள் ஊர்மிளா..
அகல்யாவைப் போன்ற வஞ்சகிகள் எல்லாம் பேச அவள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலை வந்து விட்டதே என்று மனதுக்குள் குமைந்தாள்..
பதில் சொல்லாமல் தோட்டதுக்குப் போய் விட்டவளின் மனது ஒரு நிலையில் இல்லை.. அமைதியாக இரு மனமே என்ற அவளின் ஆக்iனுக்குக் கட்டுப்
படாமல் அலைகடலாக அவள் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது..
'ஒருவேளை.. நரேன் இந்தம்மா சொல்கிறதைப் போல என்னைக் கேட்டு வைத்துட்டா..?'
நெஞ்சம் நடுங்க கண்களை மூடிக் கொண்டாள் ஊர்மிளா.. பொய்யும், புரட்டலும், தந்திரமும் ஒன்று சேர்ந்த அகல்யாவின் வார்த்தை பலிக்குமானால் இந்த உலகில் நீதிக்கும், நேர்மைக்கும் இடமிருக்கிறதா..? அவள் மனம் திகில் கொண்டது..
தூக்கமின்றி அவள் கழித்த இரவுகளில் மற்றுமொரு இரவாக அந்த இரவு அவளுக்கு அமைந்திருந்தது.. கட்டிலில் ஒருக்களித்துப் படுத்து.. தலை மாட்டிலிருந்த நரேந்திரனின் புகைப்படத்தையே இமைக்காமல் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவள் தொட்ட.. முத்தமிட்ட.. முடிகோதிவிட்ட.. கட்டியணைத்த.. கலவியில் கலந்த.. அவளுடையவன் போட்டோவுக்குள் அசையாமல் சிரித்த வண்ணம் இருந்தான்..
'என் நரேன்..' ஏனோ அவள் மனம் பதைத்தது..
மறுநாள் காலையில் அவனை வரவேற்கப் போகும் உற்சாகமின்றி அவள் எழுந்து தயாரானாள்.. அவன் வந்து விட்ட செய்தியை அறிந்தும் அறைக்குள்ளேயே முடங்கி உட்கார்ந்திருந்தாள்.. அவன் மாடிக்கு வருவானா என்று எதிர்பார்த்தாள்.. அவன் வரவில்லை.. அவள் வரவை எதிர்பார்த்து அவன் ஹாலிலேயே நின்று விட்டான்..
ஊர்மிளா வந்தாள்.. மாடிப்படிகளில் இறங்கி வந்தவளின் விழிகளில் இருந்த தவிப்பும்.. துடிப்பும்.. நரேந்திரனை பேச்சிழக்கச் செய்தன.. மனைவியை ஊன்றிப் பார்த்தான்.. தவிப்போடு அவன் பார்வையோடு பின்னிப் பிணைந்தது அவளின் பார்வை.. அவள் விழிகளில் இருந்த வேதனையில் அவன் துடித்துப் போனான்.. சுற்றிலும் பார்த்தான்.. வீட்டிலிருந்த அனைவரும்.. வேலையாள்கள் உட்பட அங்கே இருந்ததை அவன் பார்வை கணக்கெடுத்தது.. செக்யூரிட்டி கூட அங்கேதான் இருந்தான்..
நரேந்திரன் மனைவியைப் பார்த்தான்.. அவளது உயிர் துடித்தது..
'கேட்டு விடுவானோ..' அவள் மனம் பதறினாள்..
"ராதாகிருஷ்ணன்ங்கிறது யாருடி..? உன்னுடன் படித்த கிளாஸ் மேட்டா..? உன் பிரண்டா..? நான் இல்லாதப்ப நம்ம வீட்டுக்கு கெஸ்டா வந்திருந்தாரா..?"
நரேந்திரன் என்னவோ இதமாகத்தான் கேட்டான்.. ஊர்மிளா விக்கித்துப் போய் நின்று விட்டாள்.. அகல்யா அவளைப் பார்த்த பார்வையில் தெரிந்த சாகச வெற்றிச் சிரிப்பு ஊர்மிளாவின் தோல்வியைச் சொன்னது... ஆயுளுக்கும் அந்த பார்வையை மறக்க முடியாது என்ற துக்கத்துடன் நரேந்திரனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஊர்மிளா விலகி நடந்தாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -68
அழகான ராட்சசியே -68
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-68.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-68.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy