அழகான ராட்சசியே -66

66 பொய்தன்னை எதிர்த்து நின்று.. மெய்தன்னை பற்றிப் பிரிந்த அழகான ராட்சசி நீ.... ஊர்மிளாவுக்கு பொய் பிடிக்காது.. அவள் பொய் சொல்ல ...


66
பொய்தன்னை எதிர்த்து நின்று..
மெய்தன்னை பற்றிப் பிரிந்த
அழகான ராட்சசி நீ....

ஊர்மிளாவுக்கு பொய் பிடிக்காது.. அவள் பொய் சொல்ல விரும்பாதவள்.. பொய் சொல்கிறவர்களை விரும்பாதவள்..
அப்படிப்பட்டவளிடம் வந்து உன் தோழி ராதாவை.. உன் தோழன் ராதாகிருஷ்ணன் என்று உன் கணவனிடம் சொல்லியிருக்கிறேன்.. அவனும் அதை நம்பி விட்டான்.. நீ அவனிடம் பேச முயன்றால் அவன் முதல் கேள்வியாக யார் அந்த ராதாகிருஷ்ணன் என்றுதான் கேட்பான்... நீ அதற்கான விளக்கத்தைச் சொல்லி.. அது ராதாகிருஷ்ணன் அல்ல.. உன் தோழி ராதாதான் என்பதை நிருபித்தாக வேண்டும்.. அதன் பின்னால்தான் நீ பேசும் எந்தப் பேச்சையும் அவன் காது கொடுத்துக் கேட்பான் என்று அகல்யா சவால் விடுகிறாள்..
இந்த சவாலை எதிர்கொள்ளாவிட்டால் அவள் ஊர்மிளா அல்லவே..
"நீ சொல்லிட்டா என் நரேன் நம்பிடுவாரா..?"
"நம்பிட்டான்.."
"இல்லை.. அவர் நம்ப மாட்டார்.."
"நினைத்துக்கிட்டே இரு... அவன் நிச்சயமாக உன்னை அந்தக் கேள்வியைக் கேட்பான்.. நீயும் அழுது புரண்டு அவன் காலில் விழுந்து.. இல்லைங்க.. அது ராதாதான், ராதாகிருஷ்ணனில்லைன்னு சொல்லி.. சாட்சி சொல்ல என் பிள்ளைகளையும்.. வேலைக்காரங்களையும் கூப்பிடத்தான் போற.."
"ஒரு நாளும் அது நடக்காது.."
"நடக்கும்.."
அகல்யாவின் உறுதியில் அவளைவிட உறுதியாக ஊர்மிளா நிமிர்ந்து நின்றாள்.. நேர்கொண்ட அவளின் பார்வை.. கயமை நிறைந்த அகல்யாவின் பார்வையை வெட்டுவதைப் போல சந்தித்தது..
"இன்றைக்கு நான் சொல்கிறேன்... எழுதி வைத்துக்க.. என் நரேன் ஒரு நாளும் என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியை கேட்க மாட்டார்.. அப்படி அவர் கேட்டு விட்டால்.."
"கேட்டுட்டா..?"
"நான் அவருக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு நிற்க மாட்டேன்.. அந்தக் கணமே அவரை விட்டுப் பிரிந்து போய் விடுவேன்.."
ஊர்மிளா சபதம் செய்தாள்.. நேர்மையின் மறு வடிவமாக.. அக்கினியின் திருவுருமாக பொய்மையை எதிர்த்து சூளுரைத்தாள்..
அவளுடைய காதலின் மீது இருந்த நம்பிக்கையில்.. அவள் காதலன் அவள் மீதான நம்பிக்கையை ஒருநாளும் இழக்க மாட்டான் என்ற நம்பிக்கையில்.. அவள் வாழ்வை பணயம் வைத்த அந்த சபதத்தை அவள் செய்தாள்..
அகல்யாவின் இடுங்கிய கண்கள் பிரகாசித்தன.. எதை அவள் மனதில் வைத்து சதுரங்க வேட்டையை ஆரம்பித்தாளோ.. அது நன்றாகவே முடிந்ததில் அவள் முகத்தில் பரமதிருப்தி நிலவியது.. அடுத்துச் செய்ய வேண்டியதை அவள் மனம் அறிவுறுத்த.. அவள் இகழ்ச்சியாக சிரித்து வைத்தாள்..
"இப்ப எதுக்கு சிரிக்கிற..?" வெறுப்புடன் கேட்டாள் ஊர்மிளா..
"சிரிக்காம என்ன செய்யச் சொல்ற..? உன் புருசனை கைக்குள்ள போட்டுக்க நீ எப்படியெல்லாம் குழைஞ்சு பேசுவன்னு அந்த மொட்டை மாடி நிலாராத்திரியில பார்த்தவதானே நானு.."
"ச்சீ..! வெட்கம் கெட்ட உன் செயலை வெளியில் சொல்ல உனக்கு வெட்கமாயில்ல..? இப்படி அடுத்தவங்க வாழ்க்கையை ஒட்டுக்கேட்டு.. கேமரா வைச்சு கண்காணிக்கிறயே.. நீயெல்லாம் மனுசப் பிறவிதானா..? த்தூ.. மிருக ஜென்மம்..! உனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது.. இந்த வேலையை உன்மகன் வீட்டிலும்
மகள் வீட்டிலும் நடத்திப் பார்ப்பயா..? கேவலப்பட்ட ஜென்மமே..!"
"நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க.. எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை.."
"அதெல்லாம் மானம், மரியாதை, ரோசம், சூடு, சொரணை இருக்கிறவங்களுக்குத்தான் வரும்.. உனக்கு வராது.. நீதான் தட்டிவிட்டுப் போகிற ஜென்மமாச்சே.."
"இங்கே பாரு ஊர்மிளா... இது உனக்கும்... எனக்குமான சவால்... என்கிட்ட இந்தப் பக்கம் சபதம் போட்டுட்டு... அந்தப் பக்கம் நீ திருட்டுத்தனமாக அவனுக்குப் போன் பண்ணி.. ராதா கிருஷ்ணன்ங்கிறது வேற யாருமில்ல.. ராதாதான்னு குழைஞ்சு பதில் சொல்லி அவனைத் திரும்பவும் கைக்குள்ளே போட்டுக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்..?"
"நிச்சயமா செய்ய மாட்டேன்.."
அடுத்த சபதத்தை செய்தாள் ஊர்மிளா.. அவள் முகத்தில் எஃகின் உறுதி இருந்தது.. இரும்பின் வலிமை கொண்ட வாக்குறுதியை அந்த வஞ்சகிக்கு அளித்தாள் ஊர்மிளா..
"நரேனிடம் நான் போனில் பேச மாட்டேன்.. அவர் திரும்பி வரட்டும்.. இதே வீட்டில் உன் கண் முன்னாடியே அவரிடம் நான் பேசுகிறேன்.. அதுவரைக்கும் நான் பேசமாட்டேன்.."
"பார்க்கலாம்.."
"பார்க்கலாம்.."
"உன் புருசன் உன்னைக் கேள்வி கேட்க மாட்டான்னு சொல்ற.."
"அப்படிக் கேள்வி கேட்டால் அவரை விட்டு பிரிந்து போய் விடுவேன்னும் சொல்றேன்.. அதைத்தானே நீ எதிர்பார்க்கிற..? உன்னைப் போல ஒருத்தியின் பேச்சைக் கேட்டு என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியை என் நரேன் கேட்டு விட்டால்.. அதற்குப் பின்னாலே அவர்கூட வாழ்கிற வாழ்க்கை வாழ்க்கையாய் இருக்காது.."
ஊர்மிளா அகல்யாவின் அறைக்கதவை தடாலென திறந்து விட்டுவிட்டு புயல்போல வெளியேறிவிட்டாள்..
"அப்பாடி.."
நிம்மதியாய் மூச்சு விட்டு கட்டிலில் படுத்த அகல்யாவிற்கு படுநிம்மதியான தூக்கம் வந்தது.. நரேந்திரனுக்குத் திருமணம் ஆன நாள் முதலாய் அவள் மனதுக்குள் பரவியிருந்த பாதுகாப்பில்லாத உணர்வு மறைந்து போய் வெகு பாதுகாப்பாக தன்னை உணர்ந்தவள் அயர்ந்து உறங்க ஆரம்பித்தாள்..
ஊர்மிளா நிம்மதியைத் தொலைத்தாள்.. அவளையும் நரேந்திரனையும் பிரித்து வைத்திருப்பது கடலும்.. இடையில் உள்ள தொலைவும் மட்டும்தானா என்று குமுறினாள்..
இப்படிப்பட்ட பேச்சை அகல்யா பேசியிருக்கிறாள்.. அதை நரேந்திரன் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான் என்பதை நம்ப மறுத்தது அவள் மனம்..
எப்படி என் மனைவியை நீ அப்படிப் பேசலாம் என்று அகல்யாவை கிழிகிழியென்று கிழித்து தோரணம் கட்டியிருந்தால் அவள் இப்படியொரு சவாலை ஊர்மிளாவின் முன் வைப்பாளா..?
ஊர்மிளாவின் விழிகள் சிவந்தன..
சற்று நேரத்தில் அவளைக் காண வந்த ராதாவின் புருவங்கள் கேள்வியுடன் உயர்ந்தன..
"இங்கே எதையும் பேச வேணாம்.." வறண்ட குரலில் சொன்னாள்.. ஊர்மிளா.. அவள் தோற்றத்தில் உயிர்ப் பில்லை.. விழிகளில் நிராசை நிறைந்திருந்தது..
அந்த நிலையில் தோழியைக் கண்ட ராதாவிற்கு அங்கே ஏதோ சரியில்லை என்பது புரிந்து விட்டது.. அவள்தான் முதல் நாளிலேயே அதை உணர்ந்து விட்டாளே..
"வெளியே கிளம்பிப் போயிடலாம் ராதா.. இந்த வீட்டில் எனக்கு மூச்சு முட்டுது.." ஊர்மிளாவின் குரலில் அவளது மனதின் வலி தெரிந்தது..
ராதாவினால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
"ஓகே.. ஓகே.. நாம கிளம்பலாம்.. வா.."
அவள் காரில் வந்திருந்தாள்... அவளுடைய அத்தையின் வீட்டுக் காராம்..
"எனக்கு டிரைவிங் தெரியுமில்ல.. ஓட்டிக்கிட்டு வந்துட்டேன்.."
இலகுவான குரலில் தோழியையும் அழைத்துக் கொண்டாள்.. அது தேவலையென்று ஊர்மிளாவிற்கும் தோன்றியது.. மனம் விட்டுப் பேசும் போது டிரைவர் இருக்கிறானே என்று சங்கடமடைய தேவையில்லை..
"ஆமாம்ப்பா.. உன் பெண்டாட்டிதான்.. அந்த ராதாகிருஷ்ணன்கூட ஊர் சுற்றக் கிளம்பிட்டா.."
அகல்யாவின் சத்தமான குரல் தோட்டத்துப் பக்கமிருந்து கேட்டது..
"யாருடி அந்த ராதாகிருஷ்ணன்..?"
ராதா காரை ஓட்டியபடி கேட்டபோது ஊர்மிளாவுக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது..
"இந்தக் கேள்வியைத்தான் நரேன் கேட்டிருவார்ன்னு இந்தம்மா சவால் விடுதுடி.." என்றாள்..
"புரியலை.."
"உன்னைத்தான் ராதாகிருஷ்ணன்னு இந்தம்மா நரேன்கிட்டச் சொல்லி வைச்சிருக்குடி.."
"வாட்..?"
ராதா காரின் பிரேக்கில் கால் வைத்ததில் சாலையின் ஓரமாக கார் நின்றது..
"என்னைப் போய் ராதாகிருஷ்ணன்னு சொல்லி யிருக்காங்களா..?"
"ம்ம்ம்.."
ஊர்மிளா கண்கள் கலங்க.. நரேந்திரன் வெளி நாட்டிற்குக் கிளம்பியது முதல் நடந்த அத்தனை சம்பவங்களையும் தோழியிடம் விவரித்தாள்.. முதல் நாள் இரவில் மொட்டை மாடியில் அகல்யா ஒளிந்து மறைந்திருந்ததை அவள் சொன்னபோது..
"இன்டீஸன்ட் வுமன்.." என்று அருவெறுப்புடன் முகம் சுளித்தாள் ராதா..
"இப்ப இந்த நிலையில் என்னைக் கொண்டு வந்து நிறுத்திருச்சுடி.."
"ஐ ஸீ.. இந்த மாதிரியான மெண்டாலிட்டி இருக்கிற வங்களுக்கு இன்செக்யூர் ஃபீல் அதிகமா இருக்கும் ஊர்மிளா... இந்த லேடி ஒரு ஒட்டுண்ணி... உன் ஹஸ்பெண்டோட புராப்பர்டியை உறிஞ்சி வாழ நினைக்கிற ரகம்.. அதுக்கு உரிமை கொண்டாடிக்கிட்டு வேறு யார் வந்தாலும் இவங்க அவங்களை கிட்டே அண்ட விட மாட்டாங்க.. ஒருவகையில் இந்தம்மா 'யாமிருக்க பயமே..'ங்கிற சினிமாவில வருகிற பேய்.."
"என் நரேனிடம் என்னால அண்ட முடியாதா..?"
ஊர்மிளா அழுது விட்டாள்.. தோழியின் தவிப்பில் ராதாவிற்கு வருத்தமாக இருந்தது.. அவள் தேறுதல் சொல்லி.. அவளை அழைத்துக் கொண்டு அன்று முழுவதும் ஊரைச் சுற்றிப் பார்த்தாள்.. அகல்யாவை நினைக்க விடாமல் பழைய கதைகளைப் பேசி ஊர்மிளாவின் மனதை திசை திருப்பினாள்.. மாலையில் ஒரு ஹோட்டலில் அவர்கள் காபி டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது.. ஊர்மிளாவுக்கு வயிற்றைப் பிரட்டியது.. அவள் பாத்ரூமுக்கு ஓடினாள்.. திரும்பி வந்தவளின் சோர்ந்த முகத்தில் ராதா கவலை
கொண்டாள்..
"நீ சரியாவே இல்லைடி.. முகம் வெளுத்துப் போய் தெரியுது.. வா.. டாக்டரைப் பார்த்துரலாம்.."
அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவர்கள் போனார்கள்.. ஊர்மிளாவை பரிசோதித்த லேடி டாக்டர் அவள் கருவுற்றிருப்பதை உறுதி செய்தாள்..
"கங்கிராஜீலேசன்ஸ்.." சந்தோசமாக தோழிக்கு கை கொடுத்தாள் ராதா..
ஊர்மிளா எதுவும் பேசவில்லை.. மௌனமாக காரில் ஏறியவள் அதிகமாக சோர்ந்தாள்..
"இப்ப என்னடி..?" ராதா அதட்டினாள்..
"குழந்தைக்கு அப்பா அவரு.. இந்த சந்தோசமான சமாச்சாரத்தை அவர்கிட்டச் சொல்ல முடியலை பார்த்தியா.."
"ஏன் சொல்லாம இருக்கனும்..? இந்தா.. என் செல்போனைப் பிடி.. அவர்கிட்டப் பேசு.. விவரத்தைச் சொல்லு.. போகும்போது புதிதாய் ஒரு செல்போனை வாங்கிக்கலாம்.. விடிகிறதுக்குள்ள அது ஆக்டிவேட் ஆகிடும்.. நோ பிராப்ளம்.."
ராதா சொல்வதைப் போல எல்லாமே எளிதாக இருந்து விட்டால் எப்படியிருக்கும் என்று மனம் ஏங்கினாள் ஊர்மிளா..
அவளுக்கு அது எளிதில்லையே..
"வேண்டாம் ராதா.." உறுதியுடன் மறுத்தாள்..
"முட்டாளாடி நீ.. யாரிடம் நேர்மையா.. இருக்கனும் தெரியுமா...? நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையுமா இருக்கிறவங்ககிட்ட நேர்மையா இருக்கனும்.. உன் ஹஸ்பெண்டின் சித்தி போல இருக்கிறவங்ககிட்ட அவங்க பாணியிலேதான் மோதனும்.."
"என்னால வார்த்தை மாற முடியாது ராதா..?"
ஊர்மிளா உறுதியாக சொல்லி விட்டாள்.. அவர்கள் வீட்டை அடைந்த போது இருட்டி வெகு நேரமாகி யிருந்தது.. ராதா காரை விட்டு இறங்கி ஊர்மிளாவை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனாள்..
ஊர்மிளா சோர்வுடன் மாடிப்படிகளில் ஏறப் போனாள்.. இரவு உணவுக்காக மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் அருண்குமார்.. அவனைக் கண்டதும் ஊர்மிளா தயங்கி நின்றாள்.. அவனும் தேங்கி நின்று..
"இப்பத்தான் வர்றீங்களா அண்ணி..?" என்று கேட்டான்..
"ம்ம்ம்.." என்றபடி மாடியேறப் போனாள் ஊர்மிளா..
"இப்பத்தான் வர்றா.. இவ்வளவு நேரமும் அந்த ராதாகிருஷ்ணன்கூட ஊர்சுற்றிட்டு வந்து சேருகிறா.." உரக்கச் சொன்னாள் அகல்யா..
ஹாலில் இருந்த சோபாவில் அவளும் அர்ச்சனாவும் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.. வனிதா இரவு உணவு தயாராக இருக்கிறது என்று அவளிடம் சொல்ல வந்தாள்.. ரமேஷ் வீட்டிற்கு கிளம்பப் போவதைச் சொல்லி விட்டுப் போக வந்து நின்றிருந்தான்.. வாசலை காவல் காக்கும் செக்யூரிட்டி... தண்ணீர் வாங்கிப் போவதற்காக தண்ணீர் பாட்டிலுடன் வனிதாவைத் தேடியபடி அங்கே வந்திருந்தான்..
இவர்கள் அத்தனை பேரின் காதிலும் அகல்யா சொன்னது அட்சர சுத்தமாக விழுந்தது.. அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டவர்களின் பார்வையில் ஊர்மிளாவின் மீதான பரிதாபம் இருந்தது..
ஊர்மிளா பல்லைக் கடித்தபடி கண்களை இறுக மூடித் திறந்தாள்.. மாடியின் கைப்பிடி வளைவின் குழிழைப் பிடித்திருந்தவளின் விரல்களின் இறுக்கத்தில் அருண்குமார் கோபம் கொண்டான்..
"அம்மா.. என்ன இது..? என்ன பேச்சுப் பேசறிங்க..?" முகம் சுளித்தபடி தாயை அதட்டினான்..
"த்ப்ச்..! ஏம்மா இப்படி பேசி வைக்கறிங்க..? தெரியாதவங்க யாராவது இதைக் கேட்டு வைச்சா என்ன நினைப்பாங்க..? அண்ணி அவங்க பிரண்டு ராதாவோட வெளியில் போயிட்டு வந்திருக்காங்க.. நீங்க என்னடான்னா.. ராதாவை ராதாகிருஷ்ணன்னு மாத்திட்டிங்களே.. சேச்சே.." அர்ச்சனா எரிச்சல் பட்டாள்..
"இதென்னடி வம்பாப் போச்சு.. இப்ப நான் என்னத்தைச் சொல்லிட்டேன்னு அண்ணனும்.. தங்கையும்.. வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறீங்க..? உங்கண்ணியோட பிரண்டு ராதாதான்னு எனக்குத் தெரியாதா..? ஒரு விளையாட்டுக்கு ராதா கிருஷ்ணன்னு சொன்னா அதைப் பெரிசா எடுத்துக்கிட்டு பேச வந்துட்டிங்க.. மருமகளை மாமியார் கிண்டல் பண்ணக் கூடாதா..?" அகல்யாவின் விழிகளில் விசமம் சொட்டியது..
"நீங்க பண்ணியது கிண்டலில் சேர்த்தியில்லை.."
அருண்குமார் வெறுப்புடன் டைனிங் ஹாலுக்குப் போய் விட்டான்.. அர்ச்சனா அகல்யாவின் பக்கத்திலிருந்து எழுந்து வந்து ஊர்மிளாவிடம் பேச ஆரம்பித்தாள்.. அகல்யா தனியானதைப் போல உணர்ந்தாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -66
அழகான ராட்சசியே -66
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-66.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-66.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy