அழகான ராட்சசியே -65

65 குருதியினை சுவடாக்கி.. குரூரமாய் விலகி விட்ட அழகான ராட்சசி நீ.... ' மெத்தைக்கு அடியில செல்போனின் சவுண்டா.. ?' அந...


65
குருதியினை சுவடாக்கி..
குரூரமாய் விலகி விட்ட
அழகான ராட்சசி நீ....


'மெத்தைக்கு அடியில செல்போனின் சவுண்டா..?'
அந்த ஓசை.. ஊர்மிளாவின் செல்போனின் ஓசையாக இருந்ததில் ஊர்மிளா மெத்தையைத் தூக்கி விட்டுப் பார்த்தாள்.. அங்கே ஊர்மிளாவின் செல்போன் ஒலித்துக் கொண்டிருந்தது..
'நான் நினைச்சதைப் போலதான் நடந்திருக்கு..'
ஊர்மிளா செல்போனை எடுத்ததும் அகல்யாவின் அறையை விட்டு வெளியேறியிருக்க வேண்டும்.. அவளும் அதைச் செய்யத்தான் முனைந்தாள்.. அழைப்பது யார் என்று செல்போனின் திரையைப் பார்த்தவளுக்கு அவள் நின்று கொண்டிருப்பது அகல்யாவின் அறை என்ற விவரமே மறந்து விட்டது..
'நரேந்திரன் அழைக்கிறான்..'
செல்போனில் ஒளிர்ந்த அழைப்பில் அவள் அனைத்தையும் மறந்தாள்.. எவனுடைய குரலைக் கேட்க முடியாமல் அவள் துடித்துக் கொண்டிருந்தாளோ.. அவன் அழைக்கிறான் என்று அறிந்த பின்னால் அவளுக்கு சுற்றுப்புறமும், சூழலும் எப்படி நினைவிருக்கும்..?
அவள் போனை காதுக்குக் கொடுத்து..
"நரேன்.." என்று பரபரத்த போது போன் கட்டாகி விட்டது..
ஊர்மிளா விக்கித்துப் போனாள்.. மெத்தைக்கு அடியிலிருக்கும் போனை அவள் தேடி எடுக்க நேர்ந்ததில் நேரம் கடந்து விட்டதா..?
அப்போதாவது அவள் அறையை விட்டு வெளியேறித் தொலைத்திருக்கலாம்.. அந்த எண்ணமே வராமல் நரேந்திரனின் பித்துப் பிடித்தவளாக முட்டாளைப் போல அங்கேயே நின்றபடி நரேந்திரனின் போன் நம்பர்களை அழுத்த ஆரம்பித்தாள்.. அதற்குள் செல்போன் மறுபடியும் ஒலிக்க ஆரம்பித்து விட்டது..
'நரேன் கூப்பிடறாரா..?'
ஆவலுடன் போனைப் பார்த்தவளுக்கு ராதா அழைக்கிறாள் என்ற எழுத்துக்கள் ஏமாற்றத்தைத் தந்தன.. போனை காதுக்கு கொடுத்து..
"சொல்லு ராதா.." என்றாள் சுரத்தில்லாமல்..
மறுமுனையில் பேசிய ராதா ஊர்மிளா எப்படியிருக் கிறாள் என்று கேட்டாள்..
"உன் முகமே சோர்ந்து இருந்தது ஊர்மிளா..  உன்னோட தைரியமெல்லாம் எங்கே போச்சு..? இப்படிப் பட்ட குணம் படைத்தவங்க மத்தியில இருக்கிறவ
சோர்ந்து நிற்கலாமா..? தைரியமா அவங்களை பேஸ் பண்ணுடி.."
ராதா தொடர்ந்து சொன்ன ஆறுதல் வார்த்தைகள் எதுவுமே ஊர்மிளாவின் காதுகளில் நுழையவில்லை.. அவ்வளவு நெருக்கமான ஆருயிர் தோழியின்
ஆறுதல் வார்த்தைகளை அந்த நொடியில் அவள் இடைஞ்சலாக உணர்ந்தாள்.. எப்போது ராதா பேச்சை முடிப்பாள் என்று தவித்தாள்.. ஊடே வந்து போன நரேந்திரனின் அழைப்புக்களில் அவளின் உயிர் துடித்தது.. ராதாவின் போனை கட் பண்ணவும் முடியாமல்... நரேந்திரனிடம் பேசவும் முடியாமல்.. நரேந்திரனின் அழைப்புக்கள் வந்து போகும் போதெல்லாம் அவள் தவித்தாள்..
"ஓகே ஊர்மி.. டேக் கேர்.. நாளைக்கு மீட் பண்ணலாம்.. பை.."
ஒரு வழியாக ராதா பேச்சை முடித்ததும்.. ஊர்மிளா பதட்டத்துடன் நரேந்திரனை அழைப்பதற்குள் அவனே அழைத்து விட்டான்..
"நரேன்.."
அவளது அழைப்பில் எதை உணர்ந்தானோ.. மறுமுனையில் ஓர்நொடி அவன் மௌனம் சாதித்தான்..
"நரேன்.." அவள் தவிப்புடன் அழைத்ததும் பேசினான்..
"எப்பப் பார்த்தாலும் உன் செல்போன் ஸ்விட்ச் ஆஃபில் இருக்கு.. இப்பக் கூப்பிட்டா என்கேஜ்டா இருக்கு.."
"ஸாரிங்க ராதாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.."
"ராதான்னா..?" நரேன் இழுத்தான்..
"ராதா.. என் பிரண்ட்.. நேத்து சாயங்காலம் கூட நீங்க போன் பண்ணினப்ப நான் பேசிக்கிட்டிருந்தேன்.. அர்ச்சனா வந்து சொன்னதும் நான் வரனும்னு நினைச்சேன்.." ஊர்மிளா பதட்டத்துடன் தொடர்ந்தாள்..
"ஏன் வரலை..?" கடினமான குரலில் நரேந்திரன் கேட்டான்..
"அது.. வந்துங்க.."
தொடர்ந்து நடந்த விவரங்களை அவள் கொட்ட முனைவதற்குள் அவள் கையிலிருந்த செல்போன் பறிக்கப்பட்டது.. அதிர்ச்சியுடன் ஊர்மிளா நிமிர்ந்து பார்த்தபோது அங்கே ஆவேசத்துடன் அகல்யா நின்றிருந்தாள்.. ஊர்மிளா பேச வாய் திறப்பதற்குள் பாத்ரூமுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டாள்..
அதிர்ச்சியிலிருந்து மீண்ட ஊர்மிளாவுக்கு அடுத்து அதிர்ச்சி வந்தது.. கைக்கு எட்டிய நரேந்திரனின் குரலை பறிகொடுத்த துயரத்துடன் அவள் பாத்ரூமின் கதவை ஓங்கித் தட்டினாள்.. கதவு திறக்கப்படவே இல்லை.. வெகு நேரம் தட்டித்தட்டி ஊர்மிளாவுக்கு கைவலி வந்து சோர்ந்து சுவரில் சாய்ந்தபோது பாத்ரூமின் கதவு திறந்தது.. அகல்யா வெளிவந்தாள்.. அவள் கையில் ஊர்மிளாவின் செல்போன் இல்லை.. ஊர்மிளா தவித்தாள்..
"என் செல்போன் எங்கே..?"
"ஊம்..? உடைஞ்சு சுக்குச்சுக்கா ஆகிருச்சு... அது இருந்தாத்தானே.. எங்கேயிருக்குன்னு மோப்பம் பிடிச்சுக்கிட்டு நீ தேடி அலைஞ்சு கண்டுபிடிப்ப.. இனி என்ன செய்வன்னு பார்க்கலாம்.."
அகல்யா அலட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக பதிலளித்தாள்.. அவளின் அசாத்திய துணிச்சலில் ஊர்மிளா பத்ரகாளியானாள்..
"உனக்கு இவ்வளவுதான் மரியாதை.. ச்சே..! நீயெல்லாம் மனிதப் பிறவியா..? புருசன் பெண்டாட்டிக் குள்ள ஊடே வர பார்க்கறியே.. சுத்த நாகரிகமில்லாத ஜென்மம்.."
"ஆமாம்.. நான் அப்படித்தான்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?"
நிதானமான பதிலால் ஊர்மிளாவுக்கு நெஞ்சுவலியை வர வைத்தாள் அகல்யா.. நரேந்திரனுடன் பேச முடியாத துயரத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஊர்மிளாவுக்கு.. அப்படியே அவள் தலையில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு விட்டால் என்ன என்ற ஆத்திரம் ஏற்பட்டது..
"சீப்பை ஒளிச்சு வைச்சுட்டா கல்யாணம் நின்று போயிரும்ங்கிற கதையாய் உன் கதை இருக்கு.. நீ செல்போனை உடைச்சு நொறுக்கிட்டா என்னால என் நரேனோட பேச முடியாம போயிருமா...?"
அகல்யாவை விட நிதானமாக ஊர்மிளா கேட்டதில் அகல்யாவின் கண்கள் இடுங்கின.. இடுங்கின கண்களின் குரூர வீச்சுப் பார்வையை ஊர்மிளாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.. அவள் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..
"அப்படியா..? உன் புருசன்கிட்ட நீ போனில் பேசிருவியா..?" குரூரம் மாறாமல் அகல்யா கேட்டாள்..
"ஷ்யூர்.. நிச்சயமா அவர்கூட நான் பேசுவேன்.. இது பெங்களூர்.. நினைவிருக்கட்டும்.. ஆயிரம் செல்போன் கடை இங்கே இருக்கு.. புதிதாய் ஒரு செல்போனை வாங்கிப் பேச எத்தனை நேரமாகும்..? ஒவ்வொரு தெரு முனையிலும் டெலிபோன் பூத் இருக்கு.. நரேனுக்கு ஐ.எஸ்.டி கால் போட்டுப் பேச எத்தனை நேரமாகும்..? இதே வீட்டிலேயே அருண்குமாரும், அர்ச்சனாவும் இருக்காங்க.. என் செல்போன் தொலைஞ்சிருச்சு.. இம்மீடியட்டா உங்க அண்ணன் கூடப் பேசனும்னு சொன்னா இந்தாங்கண்ணின்னு அவங்க செல்போனை கொடுத்துட்டு திருப்பிக் கேட்கக் கூட மாட்டாங்க.. அதைச் செய்ய எனக்கு எத்தனை நேரமாகும்..? ராதா வருவா.. அவளோட செல் போனை கொடுத்திட்டுப் போடின்னு சொல்ல எத்தனை நேரமாகும்..?" ஊர்மிளா கேள்விகளை அடுக்கினாள்..
"சொடக்குப் போடற நேரம்கூட ஆகாதுதான்.. ஆனா பாரு கண்ணு.. நீ ஆசையாய் பேசினாலும் உன் ஆசை புருசுன் உன் கிட்டக் கேட்பான் பாரு ஒரு கேள்வி.. அந்தக் கேள்விக்கு நீ பதில் சொன்ன பின்னாலதான் எந்த ஆசை வார்த்தையையும் அவன் காது கொடுத்துக் கேட்பான் கண்ணு.. ஏன்னா அவன் புத்தி அப்பேற்பட்ட குறுகின புத்தி.." விகாரமாக சிரித்தாள் அகல்யா..
ஊர்மிளாவின் இதயம் அதிர்ந்தது.. நரேந்திரன் ஊர்மிளாவைப் பார்த்துக் கேள்வி கேட்பானா..? என்ன கேட்பான்..? அவன் கேள்வி கேட்க என்ன இருக்கிறது..?
"என்னைப் பத்திக் கேள்வி கேட்க என்ன இருக்கு..?"
"இருக்குன்னு கேட்காதே மருமகளே.. இருக்கான்னு கேளு.."
"இருக்கானா..? என்ன உளற்றீங்க..?"
"உளரலா..? இல்லை மருமகளே... இந்த அகல்யாவுக்கு உளரத் தெரியாது.. என்னைப் பத்தி உனக்குத் தெரியாது.. ஆணானப்பட்ட நரேந்திரனையே என்னை அம்மான்னு கூப்பிட வைச்சவ நானு.. என் வீட்டை அவன் வீடா மாத்திக் காட்டினவ நானு.. அப்பேற்பட்ட கோடிஸ்வர தாத்தா பாட்டியையே.. தூக்கி எறிய வைத்தவ நானு.."
"சும்மா.. நான், நான்னு பீற்றிக்காதீங்க.. நரேன் உங்களை அம்மான்னு கூப்பிடறது மத்தவங்க உங்களை குறைவா நினைச்சிரக் கூடாதுங்கிறதுக்காக.."
"யார் குறைவா நினைச்சது..? அப்படி நான் நாடகம் போட்டேன்.. அவன் முன்னால் நீலிக்கண்ணீர் வடிச்சேன்.."
"நீங்க எதையும் செய்வீங்க.."
"தெரிஞ்சுக்கிட்டாச் சரி.."
"இந்த வீட்டில அவர் இருக்கிறது உங்க பிள்ளைகள் மேலே இருக்கிற பரிதாபத்துக்காக.."
"அதையே பாசமா நான் மாத்திக்காட்டுவேன்.. அவன் சொத்தில பங்கைக் கொடுக்க வைப்பேன்.."
"அது உங்க பிரச்னை.. எனக்கு அதைப்பத்தி எந்த அக்கறையுமில்லை.. எனக்கு முக்கியம் நரேன் மட்டும் தான்.. அவரோட சொத்தில்லை..."
"பிழைக்கத் தெரியாதவ..."
"அப்படியே இருந்துட்டுப் போறேன்.. உங்களைப் போல நான் பிழைக்க வேண்டாம்.. அப்புறம் என்ன சொன்னீங்க.. நரேனின் தாத்தா பாட்டியை அவர்
தூக்கி எறிஞ்சுட்டாரா..? கனவு காணாதீங்க.. அவரை வளர்த்தவங்களை அவர் ஒருநாளும் தூக்கி எறிய மாட்டார்.."
"முதலில அவன் உன்னைத் தூக்கி எறியாம இருக்கனுமேன்னு கவலைப்படு.. மத்ததை அப்புறம் யோசிக்கலாம்.. இங்கே உன்பாடே திண்டாட்டமா இருக்கு.. இதில கிழடு கட்டையைப் பத்தி உனக்கேன் கவலை..?"
"என்னை நரேன் தூக்கி எறிவாரா..? குட் ஜோக்.. உங்களைப் போலன்னு நினைத்தீங்களா..? நாங்க வாழ்கிற வாழ்க்கையே வேறு.. என் நரேன் என்மேல உயிரையே வைத்திருக்கார்.."
"நம்பிக்கையை வைச்சிருக்கானா..?"
அகல்யா உரக்கச் சிரித்தாள்.. அந்தச் சிரிப்பில் ஊர்மிளாவின் இதயம் துடித்தது.. அந்தக் கேள்வி.. நரேனுக்கும்.. அவளுக்குமான வாழ்வின் மீதான நம்பிக்கையை ஆட்டிப் பார்த்தது..
'ஏன் இப்படிக் கேட்கிறா..?' ஊர்மிளாவால் கண்டு பிடிக்க முடியவில்லை.. அகல்யாவின் பேச்சில் ஒளிந்திருக்கும் மர்மம் எதுவாக இருந்தாலும் ஊர்மிளாவின் நரேந்திரன் ஊர்மிளாவை சந்தேகிப்பானா..? எதற்காக..?
"என்மேல நம்பிக்கை வைக்காம அவர் யார்மேல நம்பிக்கை வைக்கப் போகிறாரு..?"
"என்மேல நம்பிக்கை வைச்சிருக்கான் மருமகளே.."
"உங்க மேலயா..?"
அகல்யா சுயநினைவுடன் தான் பேசுகிறாளா என்ற யோசனையுடன் அவளை மேலும் கீழும் பார்த்தாள் ஊர்மிளா..
அகல்யாவின் மீதான நரேந்திரனின் அபிப்ராயம் எத்தகையது என்பதை இவள் அறிவாளா என்ற இகழ்ச்சிக் கீற்று அவளது இதழோரமாக உதித்தது..
அதை படு அலட்சியமாகப் பார்த்தாள் அகல்யா..
"ஊஹீம்.. வீன் கனவு காணாதேடி பெண்ணே.. உன் புருசன் உன் கிட்ட ஒரேயொரு கேள்வி கேட்பான்.. அதுக்கான பதிலை நீ சொன்னால்தான் அவன் வாழ்க்கையிலே உனக்கு இடம்.. இல்லைன்னா சந்த மடம் தான்.. அதனால உச்சானிக் கொம்பு மேலே இன்னும் நீ உட்கார்ந்திருக்கேங்கிற மெதப்பான நினைப்பை இத்தோட கைகழுவி விட்டிரு.. உன் புருசன் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லி.. அவன் சந்தேகத்தைத் தீர்த்து.. அவன் கூட பழையபடி குடும்பம் நடத்த ஆரம்பிச்ச பின்னால திரும்பவும் உன்னால உச்சாணிக் கொம்பில ஏற முடிஞ்சா ஏறலாம்.. அதுவரைக்கும் உன்னால அண்ணாந்து பார்க்கக்கூட முடியாது.. அதுக்கு நீ அவன் கையைக் காலப் பிடிச்சு.. உன்னை நம்பச் சொல்லி கதறி அழுதாகனும்.. அவன் கேட்கிற கேள்விக்குப் பதிலைச் சொல்லியாகனும்.. ஹா.. ஹா..."
ஓ.ஏ.கே.. தேவரைப் போல அகல்யா சிரித்த சிரிப்பில் இவள் மெச வில்லி என்று நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா..
இந்த வில்லி சும்மா.. சும்மா.. நரேந்திரன் ஒற்றைக் கேள்வியைக் கேட்டு ஊர்மிளாவை ஊரை விட்டுத் துரத்துவான் என்று சொல்கிறாளே..
அது என்ன கேள்வி..?
"அப்படி அவர் என்னை என்ன கேள்வி கேட்பாருங்கறிங்க..?"
"ராதாகிருஷ்ணன் யார்..? அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்பான்.."
"ராதாகிருஷ்ணனா..?" ஊர்மிளா விழித்தாள்..
"யார் அந்த ராதாகிருஷ்ணன்..?" அகல்யாவிடமே கேட்டாள்..
"என்னடி இது.. இரண்டு நாளா அவன் கூடத்தானே நீ கொஞ்சிக் குழாவிக்கிட்டு இருக்க.. அவன் யாருன்னு உனக்குத் தெரியாதா..?" அகல்யா குண்டைத் தூக்கிப் போட்டாள்..
"இரண்டு நாளா கொஞ்சிக் குழாவிக்கிட்டு இருக்கேனா..?"
யார் அது..? என்று ஊர்மிளா மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தாள்.. இரண்டு தினங்களாய் அவள் வெளியே எங்கும் போகவேயில்லை.. அவளைப் பார்க்க வந்தது ராதா மட்டும்தானே.. ஊர்மிளா ராதாவுடன் மட்டும்தானே பேசிக் கொண்டிருந்தாள்..
'ஒருவேளை..'
அடிப்பாவியென்று அனல் பறக்கும் பார்வையுடன் நிமிர்ந்தாள் ஊர்மிளா.. இப்படியும் ஒருத்தி இருப்பாளா என்று அவள் பொருமவில்லை.. அதுதான் கல்லுக் குண்டைப் போல அவளுக்கெதிரே சட்டமாக அகல்யா நின்று கொண்டிருக்கிறாளே..
"ராதாவையா.. ராதாகிருஷ்ணன்னு சொன்ன..?" கொதிப்புடன் அவள் கேட்டபோது..
"ஆமாம்.. அப்படித்தான் சொன்னேன்.." என்று அச்சமில்லாமல் ஒப்புக்கொண்டாள் அகல்யா..
"நீ சொன்னா.. என் நரேன் கேட்டுக்குவாரா..?"
"கேட்டுக்கிட்டானே.. அவன் அந்தப் பக்கம் பிளைட்டில ஏறினதுமே இந்தப் பக்கம் உன் செல்போனை கைப்பத்தினேனே.. எதுக்குன்னு நினைக்கிற.. இதைப் போல ஒரு விளையாட்டை ஆரம்பிக்கலாம்ன்னுதான்.. உன் பெண்டாட்டியைப் பார்க்க ராதாகிருஷ்ணன்னு அவளோட பிரண்டுன்னு சொல்லிக்கிட்டு ஒருத்தன் வந்திருக்கிறான்.. அவன்கூட உன் பெண்டாட்டி நடு வீட்டில உட்கார்ந்து சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டு இருக்கா.. வீடே அதை வேடிக்கை பார்க்குதுன்னு சொன்னேன்.. நிஜம்தானே.. உன் பிரண்டோட நீ நடு வீட்டில் உட்கார்ந்துதானே பேசிக்கிட்டு இருக்கிற..? வீட்டில இருக்கிறவங்க அத்தனை பேரும் உங்க ரெண்டு பேரையும் வேடிக்கை பார்த்தாங்கதானே.."
சொல்வதெல்லாம் உண்மை என்ற ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டு அறியாத பாப்பாவைப் போல உண்மைகளை பிட்டுப்பிட்டு வைத்த அந்த உண்மை விளம்பியை என்ன செய்தால் தேவலாம் என்ற கொலை வெறிக்கு ஆளானாள் ஊர்மிளா..
இப்படிப்பட்ட பிறவிகள் மண்ணில் வாழ்வதால் மண்ணுக்குத்தான் கேடு..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -65
அழகான ராட்சசியே -65
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-65.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-65.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy