அழகான ராட்சசியே - 62

62 நீ சிரிக்க நான் சிரித்தும்.. என் நிழலைவிட்டு நீங்கிவிட்ட அழகான ராட்சசி நீ.... நரேந்திரன் அருகில் இல்லாமல் ஊர்மிளாவுக்கு பை...


62
நீ சிரிக்க நான் சிரித்தும்..
என் நிழலைவிட்டு நீங்கிவிட்ட
அழகான ராட்சசி நீ....


நரேந்திரன் அருகில் இல்லாமல் ஊர்மிளாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதைப் போல இருந்தது.. திருமணமான தினத்திலிருந்து அவளை விட்டு அவன் பிரிந்ததில்லை.. குட்டி போட்ட பூனையாக அவளையே சுற்றிச்சுற்றி வருவான்... மறுவீட்டு விருந்துக்கென திருச்சியில் இருவாரங்கள்... தேநிலவு பயணத்துக்கு என் ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்கள் என்று இமைப்பொழுதும் அவளைவிட்டு அகலாமல் கூடவே இருந்தான்.. இரண்டு மாதங்கள் முடிந்த பின்பும் ஆஸ்திரேலியாவை விட்டு அவன் கிளம்பவில்லை.. பிஸினெஸ் மீட்டிங் அது.. இது என்று வேலையை நீடித்துக் கொண்டு மேலும் ஒரு மாதம் அங்கேயே இருக்க வைத்தான்.. திரும்பி வந்ததும் தேநிலவு பயணத்தைப் பற்றிச் சொல்ல திருச்சிக்குப் பயணம்..
நரேந்திரனுடன் அவள் கழித்த நாள்களை ஆனந்த மயமாக்கி காட்டியவன் இன்று அவளை ஆதரவில்லாத நடுக்காட்டிற்குள் விட்டு விட்டுப் போனதைப் போல அல்லவா அந்த வீட்டில் விட்டு விட்டுப் போயிருக்கிறான்..
அவன் திரும்பி வரும்வரை அகல்யாவை எதிர் கொள்ளும் தைரியத்தைக் கொடு கடவுளே என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள் ஊர்மிளா..
நரேந்திரனுடன் போனில் கூட பேச முடியாமல் போனதில் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.. விடியும் வரை ஏதேதோ யோசனைகள்.. மன உளைச்சல் களுடன் போராடியவள் விடியும் போதுதான் தூங்கவே ஆரம்பித்தாள்.. அவள் விழித்து எழுந்த போது மணி பத்துக்கு மேல் ஆகி விட்டிருந்தது..
அன்று அவள் அர்ச்சனாவிடம் போனை வாங்கி நரேந்திரனிடம் பேசலாம் என்றிருந்தாள்.. அதற்கு வழியில்லாமல் அவள் கல்லூரிக்குக் கிளம்பிப் போயிருப்பாளே..
சோர்வுடன் குளித்து உடைமாற்றி கீழே இறங்கி வந்தவள் ஹாலில் நின்றிருந்த அருண்குமாரை பார்த்தாள்.. அவன் கையில் செல்போன் இருந்தது..
'இந்த போனை வாங்கி பேசலாமா..?'
மனது ஏங்கியது.. அடுத்த கணம் அதை வேண்டா மென்று அழித்தாள்.. அகல்யா அதற்கும் எதையாவது சொல்லி வைப்பாள்.. எதற்கு வம்பு..? அர்ச்சனாவாக இருந்தால் பரவாயில்லை.. அதுவே அருண்குமார் என்றால் வேண்டுமென்றே எதையாவது சொல்லி வைத்து விட மாட்டாளா..?
அகல்யா எதையும் சொல்வாள் என்பதில் ஊர்மிளாவின் தேகம் நடுங்கியது.. ஏதோ நடக்கப் போகிறது என்று அவள் மனம் சொல்லியது.. அதுநாள்வரை அவளின் ஆழ்மனதின் அச்சுறுத்தல்கள் பொய்யாகிப் போனதாக சரித்திரம் இல்லை..
ஊர்மிளாவைக் கண்டதும் அருண்குமார் மரியாதையாக சிரித்தான்.. பதிலுக்கு சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் ஊர்மிளா லேசாக தலையை மட்டும் அசைத்து வைத்தாள்..
அருண்குமாரிடம் அவள் சகஜமாக நின்று பேசிய தில்லை.. எப்போதும் நரேந்திரனின் பின்னாலே ஆட்டுக் குட்டியைப் போல தொடர்ந்து கொண்டே இருப்பவள்.. மற்ற நேரங்களில் அர்ச்சனாவுடன் சிரித்துப் பேசுவாள்.. தோட்டத்தில் செடி நடுவாள்.. வீட்டுக்குள் இருக்கும் பொருள்களை அழகாக அடுக்கி வைப்பாள்.. சமையலறையில் புகுந்து வனிதாவின் உதவியோடு எதையாவது சமைப்பாள்.. வேலையாள்களின் வேலையைக் கண்காணிப்பாள்..
மறந்தும் அகல்யாவுடன் பேச மாட்டாள்.. அருண் குமாரைக் கண்டால் லேசான தலையசைவுடன் நகர்ந்து விடுவாள்..
அருண்குமாரும் அவளிடம் பேச நினைக்க மாட்டான்.. அண்ணி என்ற மரியாதை அவன் கண்களில் மின்னும்.. நரேந்திரனிடம் தள்ளி நின்றே பேசிப் பழகுபவன்.. நரேந்திரனின் மனைவியிடம் அதே இடைவெளியை கடைபிடித்தான்..
அவன் கையிலிருந்த செல்போனை ஏக்கத்துடன் பார்த்தபடி அவனைக் கடந்தாள் ஊர்மிளா..
"என்னங்க அண்ணி..?" புரியாமல் வினவினான் அருண்குமார்..
"ஒன்றுமில்லை.." ஊர்மிளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே..
"ஏண்டா அருண்.. உங்க அண்ணன் இல்லாதப்ப நம்ம கம்பெனியை நீதானே பொறுப்பாக் கவனிச் சுக்கனும்..? அதை விட்டுட்டு இங்கே நின்னு இவகூட அரட்டையடிச்சுக்கிட்டு இருக்கிற..?" என்று சத்தமாக நான்கு தெருக்களுக்கு கேட்கும்படி கூவிக் கொண்டே வந்து சேர்ந்தாள் அகல்யா..
'தேவையா எனக்கு..?'
ஊர்மிளாவின் முகம் கன்றி விட்டது.. அவள் டைனிங் ஹாலுக்கு போய் விட்டாள்.. அருண்குமார் கோபத்துடன் தாயை கடிந்து கொண்டான்..
"அறிவோடதான் பேசறிங்களா..? இங்கே யாரு, யாருகிட்ட அரட்டையடிச்சாங்க..? நாங்க அரட்டையடிக் கிறதை நீங்க பார்த்தீங்களா..? இனியொரு முறை
இப்படிப் பேசினா நான் ரொம்ப பொல்லாதவனா இருப்பேன்ம்மா.."
"இல்லேடா அருண்.. நான் என்ன சொல்ல வந்தேன்னா..."
"ஒரு விளக்கமும் வேணாம்.. ச்சை..! காலையிலேயே மூட்அவுட் பண்றீங்க.. வீடா இது..?"
அருண் கோபமாக கிளம்பிப் போய் விட்டான்.. அவனிடமிருந்து செல்போனை வாங்கிப் பேசும் யோசனையை அறவே துறந்து விட்டாள் ஊர்மிளா.. அதற்கும் ஏதாவது கதை பிணைந்து விடுவாள் அகல்யா..
யாராவது கொள்ளிக்கட்டையை வைத்துத் தலையை சிக்கல் எடுப்பார்களா என்ன..?
'என்ன செய்யலாம்..?'
பலத்த யோசனையுடன் சாப்பிட்டு முடித்தவளின் மனதில் ஐடியா ஒன்று உதயமானது..
'பேசாம புது செல்போன் ஒன்னை வாங்கிட்டா என்ன..?'
இந்த நினைவு வந்ததுமே அவள் முகத்தில் மலர்ச்சி வந்து விட்டது.. 'ஓசி வாங்கனும்னு நினைச்சவளுக்கு புதிதா ஒன்னை வாங்கிக்கலாம்ன்னு தோணாம போச்சே..'
தெளிந்த முகத்துடன் அவசரமாக தட்டைக் காலி பண்ணி விட்டுக் கிளம்பியவளை அகல்யாவின் குரல் தடுத்து நிறுத்தியது..
"எங்கே போற..?"
இவளுக்கு ஏன் நாம் பதில் சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும்.. ஊர்மிளாவால் பதில் சொல்லாமல் அசட்டையாக நகர முடியவில்லை..
"வெளியே போறேன்.."
"ஊர் சுத்தப் போறியா..?"
"அதை நீங்க செய்வீங்க.. நான் ஷாப்பிங் போறேன்.."
"உன் அப்பன் வீட்டுப் பணம் குவிந்து கிடக்குது பாரு.. அதைக் கரைக்க ஷாப்பிங் போக கிளம்பிட்ட.."
"உங்க அப்பா வீட்டுப் பணமும் குவிந்து கிடக்கலை.. ஷாப்பிங் போய் அதைக் கரைத்துருவேன்னு நீங்க ஒன்னும் பயப்பட வேணாம்.."
பதிலுக்குப் பதில் சலனமில்லாத முகத்துடன் ஊர்மிளா போட்டுத் தாக்கியதில், சமையலறையில் இருந்த வனிதா மனதிற்குள் 'சபாஷ்' என்று சொல்லிக் கொண்டாள்..
'சின்னம்மா அமைதியா இருந்தாலும் படு புத்திசாலியா இருக்காங்க.. யோசிக்காம பதிலடி கொடுக் கிறாங்களே..'
அகல்யாவின் முகம் சிறுத்துப் போனது.. அவளுடைய பேச்சில் ஊர்மிளா சங்கடப்பட்டுப் போவாள் என்று அவள் நினைத்தால் ஊர்மிளாவோ அகல்யாவை சங்கடப்பட வைத்து விட்டாள்..
'இவளை வெளியே போக விடக்கூடாதே..'
அகல்யா அடுத்து எதைப் பேசி அவளைத் தேக்கி வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது.. வாசலில் இருந்து செக்யூரிட்டியின் போன் வந்தது..
"சின்னம்மாவைப் பார்க்க அவங்களோட சிநேகிதி வந்திருக்காங்க.."
போனை எடுத்துப் பேசிய அகல்யா திமிராக..
"சின்னம்மாவா..? யாரைச் சொல்கிற..? நம்ம அர்ச்சனாதான் காலேஜீக்குப் போயிட்டாளே.." என்றாள்..
ஊர்மிளா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. சின்னம்மா என்று அர்ச்சனாவைத்தான் அழைக்க வேண்டுமாம்.. ஊர்மிளாவை அழைக்கக் கூடாதாம்..
'யாருக்கு வேணும் இந்த சின்னம்மா பட்டம்..?'
போனில் பேசிய செக்யூரிட்டியோ படு தெளிவாக பேசினான்..
"இல்லைங்கம்மா.. நான் சொல்கிறது நம்ம அம்மாவைம்மா... நீங்க போனை எடுத்ததாலே சின்னம்மான்னு சொன்னேன்.."
அகல்யாவின் காதுகளில் இடி இறங்கியது.. அந்த வீட்டிற்கான எஜமானியாக ஊர்மிளாவைத்தான் வேலையாள்கள் நினைக்கிறார்கள் என்பதில் அவள் ஆடிப் போய் விட்டாள்.. அவளுடைய ராஜாங்கம் காணாமல் போய் விட்டதை அதிர்ச்சியுடன் அவள் உணர்ந்தாள்..
'இவ அம்மான்னா.. இந்த வீட்டில நான் யாரு..?'
அன்று வரை அவளுக்குச் சொந்தமாக இருந்த வீட்டில் ஊர்மிளாவின் வரவுக்குப் பின்னால் அவள் அன்னியமாகி விட்டாளா..?
அகல்யாவை போன் பேச விட்டால்தானே வம்பு என்று ஊர்மிளா வந்திருப்பது யாரென்று பார்க்க வாசலுக்குப் போய் விட்டாள்..
முரட்டு ஜீன்ஜீம்.. தொள தொள வென்ற முழுக்கை சட்டையும்.. அகன்ற கூலிங்கிளாஸீம்.. விரிந்த கூந்தலுமாக.. உடலில் ஒரு பொட்டு நகையில்லாமல் நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும்..
"ஹேய்.. ராதா.." என்று குதூகலித்தாள்..
"ஊர்மிளா.." அவள் விரித்த கைகளுடன் சிநேகிதியின் அருகே வந்தாள்..
"எப்படி.. நியுயார்க்கில இருந்து வந்த..?" ஊர்மிளா சிநேகிதியை அணைத்துக் கொண்டாள்..
"லாஸ்ட் வீக் வந்தேன்.. தஞ்சாவூருக்குப் போயிருந்தேன்.. உனக்கு மேரேஜாகிருச்சுன்னு அமிர்தா சொன்னா.. ஸோ.. உன் அட்ரஸை அவகிட்ட கேதர் பண்ணிக்கிட்டு பறந்து வந்திட்டேன்.." ராதா கைகளை விரித்துத் தோள்களைக் குலுக்கினாள்..
பலமாதங்கள் கழித்து சந்தித்த தோழியின் வரவில் புதிதாக போன் வாங்க வேண்டும் என்பதை மறந்து போனாள் ஊர்மிளா.. ராதாவை வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.. வனிதாவிடம் ஸ்பெசலாக சமைக்கச் சொல்லி விட்டு ராதாவை அழைத்துக் கொண்டு மாடிக்குப் போய் விட்டாள்..
ஹாலில் குத்துக்கல்லைப் போல உட்கார்ந்திருந்த அகல்யாவிடம் ராதாவை அவள் அறிமுகம் செய்து வைக்கவில்லை..
அவளுக்குத் தெரியும்.. அறிமுகம் செய்து வைத்தால் வேண்டுமென்றே அநாகரிகமாக எதையாவது அகல்யா பேசி வைப்பாள்.. ராதா படு புத்திசாலி.. அந்த
வீட்டில் ஊர்மிளாவுக்கு இருக்கிற பிரச்னையை கண்டுபிடித்து விடுவாள்.. அது எதற்கு என்ற எண்ணம் ஊர்மிளாவுக்கு..
அதை உணராத அகல்யாவோ.. இவளுக்கெல்லாம் என்ன கணக்கு என்று அகல்யாவிடம் ராதாவை அறிமுகப் படுத்தாமல் திமிராக ஊர்மிளா அழைத்துக் கொண்டு போய் விட்டாள் என்று கொந்தளித்தாள்..
'எவளோ வருகிறா.. இவ அவளை கட்டியணைச்சு வீட்டுக்குள்ள கூப்பிட்டுக்கிட்டு வர்றா.. ஹாலில் குத்துக் கல்லாட்டம் வீட்டுக்கு பெரிய மனுசி உட்கார்ந்திருக்கேன்.. கொஞ்சம் கூட என்னை மதிக்காம அவளுக்கு ஸ்பெசலா சமைக்கச் சொல்லிட்டு மாடிக்கு அழைசசுக்கிட்டுப் போறா.. இவ மனசில என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கிறா..?'
கொதிப்புடன் அவளுடைய அறைக்குப் போன போது அங்கே செல்போன் அலறிக் கொண்டிருந்தது..
அந்த போன்.. காணாமல் போய் விட்டதாக ஊர்மிளா நினைத்துக் கொண்டிருக்கும் அவளுடைய செல்போன்..!
'இந்த போனில சிரிச்சுச் சிரிச்சுப் பேசித்தானே உன் புருசனுடன் குடும்பம் நடத்துவ..? போனை ஒளிச்சு வைச்சுட்டா என்ன பண்ணுவ..?'
இந்த குரூரத்துடன்தான் அவள் ஊர்மிளாவின் போனைக் கைப்பற்றி ஒளித்து வைத்தாள்.. போனில் பேச முடியாமல் ஊர்மிளா படும் பாட்டில் அவளுக்கு ஊட்டிக் குளிரில் இருப்பதைப் போல சில்லென்று இருந்தது.. ஊர்மிளாவின் தவிப்பில் இன்பம் கண்டு கொண்டிருந்தவளுக்கு ஊர்மிளாவின் போனில் 'நரேந்திரன் அழைக்கிறான்..' என்ற எழுத்துக்களைக் கண்டதும் குறுக்குவழியில் புத்தி போனது..
அகல்யா ஊர்மிளாவின் போனை சுவிட்ச் ஆப் தான் செய்து வைத்தாள்.. அன்று யதேச்சையாக அதை உயிர்ப்பித்து அந்த போனில் யார்யாரின் பெயர்கள் இருக்கின்றன.. யாருடன் அவள் பேசுகிறாள்.. நரேந்திரனுடன் பேசும் போது எத்தனை மணித்துளிகள் வரை பேசியிருக்கிறாள் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்தாள்.. மற்ற கால்கள் சில நொடிகளுடன் முடிவடைந்து.. நரேந்திரனுடனான கால் மட்டும் மணித் துளிகளைக் கடந்து மணிக்கணக்கில் நீண்டிருந்ததைக் கண்டவளின் கண் சிவந்தது..
'கைகரி.. என்ன மாய்மாலம் பண்ணி அவனைக் கைக்குள்ள போட்டுக்கிட்டாளோ.. தெரியலையே..'
மனதுக்குள் புலம்பியவள் செல்போனை அணைக்க மறந்து அப்படியே விட்டு விட்டு ஹாலுக்குப் போய் விட்டாள்..
திரும்பி வந்த போது ஒலித்த போனைப் பார்த்தவள்.. கண்கள் பளீரிட அதை எடுத்துக் காதில் வைத்தாள்..
"என்ன நரேன்.. எப்படிப்பா இருக்க..? ஊர்மிளாவா..? இப்பத்தானே இங்கேயிருந்தா.. எங்கே போனான்னு தெரியலையே.. செல்போனை வேற வீட்டில் தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்கா.. இங்கே பகல்ன்னாலும் நீ போயிருக்கிற இடத்திலே நைட்டாகியிருக்குமே நரேன்.. கொஞ்சமாவது நீ போன் பண்ணுவன்னு அவ நினைச்சுப் பார்க்க வேணாமா..? உன்கிட்டச் சொல்ல யோசனையாய் இருக்கு நரேன்.. அடிக்கடி ஊர்சுத்தப் போயிடறா..." என்று பற்ற வைத்தாள்..
அடுத்து அவன் பேசியபோது...
"யாரு..? நரேந்திரனாப்பா.. உன் பெண்டாட்டி செய்கிறது கொஞ்சம் கூட சரியில்லைப்பா.. செல்போனைக் கூடக் கவனிக்காம ஓட்டமா ஓடிப் போயிட்டா.. யாரோ பேசுகிறாங்கன்னு பார்த்தா நீ பேசற.. கண்றாவிப்பா.. வெளியே தலைகாட்ட முடியலை.." என்ற ரீதியில் எதையெதையோ பேசிவிட்டு போனை அணைத்து விட்டாள்..
அறையை விட்டு வெளியே வந்தாள்.. டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஊர்மிளாவும்.. ராதாவும் பால்யகால நினைவுகளில் வாய் விட்டுச் சிரித்தார்கள்.. அதில் அகல்யாவின் முகம் கடுத்தது.. அவள் மனம் வஞ்சம் கொண்டது..
'சிரிக்கிறயாடி.. சிரி.. இந்தச் சிரிப்பு எத்தனை நாளைக்கு நிலைக்குதுன்னு பார்க்கலாம்..'





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,125,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,42,எண்ணியிருந்தது ஈடேற,243,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,24,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,10,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,4,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே - 62
அழகான ராட்சசியே - 62
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-62.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-62.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy