அழகான ராட்சசியே - 61

61 உன் பார்வை வரமென்ற பக்தனான எனைப் பிரிந்த அழகான ராட்சசி நீ.... சில நிமிடங்களுக்குள் சொல்லி விட முடிந்த விவரங்களா அவை.. ? அதைச...


61
உன் பார்வை வரமென்ற
பக்தனான எனைப் பிரிந்த
அழகான ராட்சசி நீ....

சில நிமிடங்களுக்குள் சொல்லி விட முடிந்த விவரங்களா அவை..? அதைச் சொல்ல அரை நாளாவது வேண்டாமா..? அப்படியே அவள் சில நிமிடங்களில் சொல்லியிருந்தாலும்.. அதைக் கேட்ட பின்பு.. 'அப்படியா..?' என்ற ஒற்றைக் கேள்வியுடன் நரேந்திரன் வெளிநாட்டிற்குக் கிளம்பிப் போய் விடுவானா..? வெளிநாட்டுப் பயணத்தையே கேன்சல் பண்ணிவிட்டு அகல்யாவை உண்டு, இல்லையென்று பண்ணி விட மாட்டானா..?
ஊர்மிளா அது போன்ற அதிரடி நடவடிக்கைகளுக்குப் பழக்கப் படாதவள்.. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பேச்சுமாக பாரதியின் புதுமைப் பெண்ணாக சோமசுந்தரத்தால் வளர்க்கப்பட்டவள்..
அதே தருணத்தில்.. உதடு அசையாத சப்தமில்லாத பேச்சையும், அமெரிக்கையான அமைதியான சுபாவத்தையும், காருண்யத்தையும், சாத்வீகத்தையும் பூங்குழலியின் மகளாக அவளிடமிருநது போதனையின்றிப் பெற்றவள்..
ஒரு கண்ணில் சூர்யனும்.. மறுகண்ணில் வெந்நிலவும் குடி கொண்டிருந்தது ஊர்மிளாவிடம் மட்டும் தான்..
அவள் புயல்..! அவளே தென்றல்..! அவள் வெயில்..! அவளே பனி..! அவள் அருவி..! அவளே நதி..!
அவளின் இந்த மாறுபட்ட இருவேறு குணங்களை சரியாக கணித்து வைத்திருந்தான் நரேந்திரன்.. அவள் மீதான அவனது காதல் ஆலமரமாக அகன்று விரிந்து வேரூன்றி நின்று விட்டதற்குக் காரணம் அவளது இந்த அதிசயத்தக்க குணாதியம்தான்..
அவனுக்கும் அவளுக்குமான காதல் ஆழமானது.. அதன் உன்னதத்தைப் பற்றி அகல்யாவைப் போன்ற ஆள்களுக்கு எப்படித் தெரியும்..?
நரேந்திரன் கிளம்பிப் போகும் வரையில் சாதுப்பூனை வேடம் தரித்திருந்த அகல்யா அவன் போனபின்பு அவளது சுயரூபத்தைக் காண்பித்தாள்.. ஊர்மிளாவைப் பார்த்த அவளின் முகம் சூன்யக்காரியின் முகமாக இருந்தது.. அதில் பயங்கொள்ளாமல் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஊர்மிளா.. 'என்ன திமிர்..' அகல்யா கோபம் கொண்டாள்..
நரேந்திரன் சொன்ன கடந்த காலக் கதைகளால் அகல்யாவை ஊர்மிளா துச்சமாக நினைப்பதாக அகல்யா நினைத்தாள்..
நரேந்திரன் திரும்பி வரும்வரைக்கும் அகல்யாவிடம் எந்தவிதமான வம்பையும் வைத்துக் கொள்ளாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற நினைவில் கூடுமானவரை அகல்யாவின் கண்களில் படாமல், அவள் இருக்கும் இடத்தில் நிற்காமல் ஒதுங்கிப் போக ஆரம்பித்தாள் ஊர்மிளா.. அதற்கும் உனக்கெல்லாம் என்ன கணக்கு என்று கண்டு கொள்ளாமல் அலட்சியமாக ஊர்மிளா இருக்கிறாளோ என்று ஆத்திரம் பட்டாள் அகல்யா..
அகல்யாவின் அடி மனதில் கஜேந்திரனைக் குறித்த பயம் எப்போதுமே உண்டு.. அவளைக் கண்டாலே முகம் சுளித்து கடுமையாக பேசும் மனிதர் அவர்.. அகல்யாவை விரட்ட நினைக்கும் அவர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று ஊர்மிளா சொல்வதா என்ற கோபம் அகல்யாவின் மனதுக்குள் கனன்று கொண்டே இருந்தது..
என்னதான் ஊர்மிளா விலகி விலகிப் போனாலும் அவளுக்கான சோதனைகள் அவளை விட்டு விலக வில்லை..
நரேந்திரன் வெளிநாட்டிற்குக் கிளம்பிப் போன மறுநாளில் ஊர்மிளாவின் செல்போன் காணாமல் போய் விட்டது.. ஊர்மிளா தவித்துப் போனாள்.. எல்லா இடங்களிலும் தேடினாள்.. அவளுக்கும் நரேந்திரனுக்கும்  இடையிலான பாலம் அது.. அந்தப் பாலம் இல்லாமல் அவன் வரும் வரை வரும் நாள்களை எப்படி அவள் கழிப்பாள்..?
வீட்டிலிருந்த லேண்ட் லைன் போனின் ஞாபகம் வந்தது.. ஓடிப் போய் எடுத்து நரேந்திரனின் போன் நம்பர்களை அழுத்தினாள்.. அந்த வசதி அந்த தொலை பேசியில் இல்லையென்ற பதில் வந்தது.. திகைத்துப் போய் போனை வைத்தவளிடம் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அர்ச்சனா காரணம் கேட்டாள்..
"ஒன்னுமில்லை.. லேண்ட்லைனில் ஒரு கால் பண்ணினேன்.. கிடைக்க மாட்டேங்குது.."
"அது கிடைக்காது அண்ணி.. போனை அம்மா லாக் பண்ணி வைச்சிருக்காங்க.. இல்லைன்னா வீட்டில் வேலை செய்கிறவங்க போனை எடுத்துப் பேசி எக்கச்சக்கமா சார்ஜை ஏத்தி விடுவாங்களாம்.. இப்பத்தான் இந்தக் கூத்து.. அண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்காது.. அவர் வந்தவுடனே இதையெல்லாம் கட் பண்ணிடுவாரு பாருங்க.. லாக் கோட் நம்பர்ஸ் அம்மாவுக்குத்தான் தெரியும்.. பை அண்ணி.."
அர்ச்சனா போய் விட்டாள்.. கணவனுக்குப் போன் பண்ண முடியாமல் தவிப்பதை அவளிடம் எப்படிச் சொல்வது என்ற சங்கடத்துடன் ஊர்மிளா திரும்பினாள்.. கூண்டில் மாட்டிக் கொண்ட புலியை வேடன் பார்ப்பதைப் போல ஓர் பார்வை பார்த்தபடி இகழ்ச்சிச் சிரிப்புடன் அங்கே நின்றிருந்தாள் அகல்யா..
'இவளிடம் என்ன பேச்சு..'
கொதிப்புடன் ஊர்மிளா உள்ளே செல்லப் போன போது.. ஹாலில் இருந்த டீப்பாயில் இருந்த தூசி அவள் கண்ணில் பட்டது.. அதனடியில் பேப்பர் துண்டுகளும் கிடந்தன..
வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண்ணிடம் ஊர்மிளா அதைக் காட்டினாள்..
"வீட்டைச் சுத்தமா வைத்துக்கிறதுதான் உன் வேலை.. குப்பையை ஒழுங்காப் பெருக்கலைன்னா அது வீட்டுக்குள்ளேதானே கிடக்கும்..? தூசியைத் தட்டிச் சுத்தம் பண்ணலைன்னா.. இன்னும் கொஞ்சம் தூசியும், தும்பும் வந்து அடைத்துக் கொள்ளத்தானே செய்யும்..? குப்பையையும், தூசியையும் பெருக்கி அள்ளி வெளியே கொண்டு போய் கொட்டுறதுக்குத்தானே நீ சம்பளம் வாங்கற..? செய்கிற வேலையைச் சரியாச் செய்ய வேணாமா..?"
அதட்டாமல் மென்மையாக வேலைக்காரப் பெண்ணின் கவனக்குறைபாடை ஊர்மிளா சுட்டிக் காட்டிய விதத்தில் அந்தப் பெண் மன்னிப்புக் கேட்டு விட்டு உடனடியாக ஹாலை திரும்பவும் பெருக்கிக்கித் துசியைத் தட்டிச் சுத்தம் செய்தாள்..
ஊர்மிளா மாடிப்படிகளில் சோர்வாக ஏறினாள்.. நரேந்திரனுக்குப் போன் பண்ண என்ன செய்வது என்ற யோசனையுடன் மாடி ஹாலில் அவள் கால் வைத்த போது..
"நில்லுடி.." என்ற அகல்யாவின் அகங்காரக் குரல் கேட்டது..
'இது வேறயா..?' ஊர்மிளாவுக்கு அலுப்பாக இருந்தது..
பேசாமல் போய்விடவும் மனம் வரவில்லை... கணவனின் சித்தியாயிற்றே என்ற நினைவுடன் நின்றாள்..
"என்னடி... ஜாடை பேசறயா...?" அகல்யா சண்டைக்கு வந்தாள்..
"ஜாடையா..?" ஊர்மிளாவிற்குப் புரியவில்லை..
அவள் நேருக்கு நேராகப் பேசிப் பழக்கப்பட்டவள்.. இந்த ஜாடைப் பேச்செல்லாம் அவளுக்கு சரிவராது..
"அது எதுக்கு..?" நேரடியாகவே கேட்டாள்..
"அது எதுக்குன்னா.. என்ன அர்த்தத்திலே கேட்கிற..?" அகல்யாவின் முகம் கோபத்தில் கோணியிருந்தது..
"எனக்கு எந்த அர்த்தமும் தெரியலைங்க.. உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா சொல்லுங்க..?"
"என்ன..? உன் புருசன் சொன்னதில குளிர் விட்டுப் போச்சா..? அந்தக் கிழவன் சொன்னதை மனதில வைச்சுக்கிட்டுப் பேசிப் பார்க்கிறயா..?"
"எந்தக் கிழவன்..?"
"அதாண்டி.. உன் புருசனோட தாத்தா.. அவன் கிழவனில்லாம குமரனா..?"
'இந்தம்மா நரேனோட தாத்தாவைச் சொல்லுதா..?'
ஊர்மிளாவுக்கு கோபம் வந்துவிட்டது... அவளைப் பேசினால் அவள் பொறுத்துக் கொள்வாள்... நரேந்திரனையும்.. அவனுடைய தாத்தா, பாட்டியையும் பேசினால் எப்படி பொறுத்துக் கொள்வாள்..?
"பார்த்துப் பேசுங்க.. யாரை என்ன வார்த்தை சொல்கிறிங்க..? வயசில பெரியவர்ங்கிற மட்டு மரியாதை வேண்டாம்..?"
"உனக்கு அது இருக்கில்ல..? அதை நீயே வைச்சுக்க.. எனக்கு அது வேணாம்.."
"உங்களுக்குக்கூட நான் மரியாதை கொடுத்துத்தான் பேசறேன்.. நினைவிருக்கட்டும்.."
"திமிராடி..?"
"உண்மையைச் சொல்ல திமிர் வேணுமா..? ஆமாம்.. அதென்ன புதிதா வாடி.. போடின்னு பேசியாகிறது.. மரியாதை கொடுத்து மரியாதையை வாங்கனும்.."
"இல்லேன்னா..?"
"இதே வாடி போடியை உங்களைப் பார்த்து நான் சொல்லுவேன்.. வசதி எப்படி..?"
ஊர்மிளாவின் நிமிர்வான பேச்சில் நிலைகுலைந்து போனாள் அகல்யா.. அவளின் வன்மம் அதிகரித்தது..
"நேத்து வந்தவ நீ.. என்னைத் தூக்கி வெளியில போடனும்னு ஜாடை பேசற.. எல்லாம் அந்தக் கிழவன் என்னை விரட்டச் சொன்னதை தெரிஞ்சுக்கிட்டதால வந்த தைரியம்.. நீ என்னைத் தூக்கி வெளியில போடுறயா.. இல்லை.. நான் உன்னைத் தூக்கி வெளியில போடறேனான்னு போகப் போகப் பார்க்கலாம்.."
அகல்யா திட்டிக் கொண்டே இருந்தாள்.. அங்கே நின்றால் வார்த்iதான் வளரும் என்பதால் ஊர்மிளா அவளுடைய அறைக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டாள்.. அதை அகல்யாவின் முகத்தில் ஊர்மிளா அடித்து விட்டதைப் போல அவள் கொதித்துப் போனாள்..
'அன்னைக்கு இவ புருசன் என் முகத்தில அடிச்சதைப் போலக் கதவைச் சாத்தினான்.. இன்னைக்கு இவ அதையே செய்து வைக்கிறா.. என்னை முன்னால வைச்சுக்கிட்டு வேலைக்காரிகிட்ட வீட்டில இருக்கிற குப்பையைத் தூக்கி வெளியிட போடனும்ன்னு சொல்லறா.. இதை வளரவிட்டா இவ சொன்னதை செஞ்சு காட்டிருவா..'
ஊர்மிளா ஆபத்தானவள் என்று ஆபத்தின் மறு அவதாரமான அகல்யா முடிவு கட்டினாள்..
'இவளைத் தொலைச்சுக் கட்டிரனும்..'
அவள் இடுப்பில் செருகியிருந்த ஊர்மிளாவின் செல்போனை எடுத்துப் பார்த்தாள்.. அவள் முகத்தில் குரூரம் வழிந்தது..
'இருடி.. இந்த போனை வைச்சே உனக்கும், உன் புருசனுக்கும் இடையில பள்ளம் வெட்டறேன்.. இந்த அகல்யா யாருன்னு இப்ப உனக்குத் தெரியாதுடி.. தோத்துப் போய் இந்த வீட்டை விட்டு வெளியில ஓடுவ பாரு.. அப்பத் தெரியும் உனக்கு..'
அகல்யா கருவியபடி படி இறங்கிப் போனாள்.. அறைக்குள் அடைந்து கிடந்த ஊர்மிளா... மதிய உணவுக்காக கீழே இறங்கிப் போனாள்.. ஹாலில் கால்மேல் கால் போட்டு உட்கார்த்தபடி யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்த அகல்யாவை, அப்படி ஒருத்தி அங்கே இல்லாததைப் போன்ற கண்டு கொள்ளாத முகபாவனையுடன் கடந்து போனாள்..
அகல்யாவுக்கு தாளவில்லை... அவள் முகம் கோணியது..
"ஊம்.. ஒன்னுமில்ல சியாமி.. இங்கே ஒரு சுண்டெலி.. ரொம்பத்தான் துள்ளிக் குதிக்குது.. தடியெடுத்து அடிச்சுப் போட நாளைக் குறிச்சுக்கிட்டு இருக்கேன்.."
அவள் போனில் சத்தமாகப் பேச.. ஊர்மிளா அவளை சுண்டெலியைப் பார்ப்பதைப் போல பார்த்து வைத்து அகல்யாவின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள்..
'என்ன ஜாடை பேச்சைப் பேசினாலும் எனக்கென்னன்னு அசையா மரமாய் நிற்கிறாளே...'
அகல்யா பல்லைக் கடித்தாள்.. ஊர்மிளா சாப்பிடத் தட்டைப் போட்டுக் கொண்டு பரிமாற ஆரம்பித்தாள்.. பக்கத்தில் நின்ற வனிதாவிடம்..
"தினமும் அசைவம் சமைக்கனுமா வனிதா..? இதைச் சாப்பிட்டா கொலஸ்ட்ரால் கூடும்.. அது உடம்புக்கு நல்லதில்லை.. வாரத்துக்கு ரெண்டு தடவையோ.. மூணு தடவையோ சமைச்சா போதாதா..?" என்று கேட்டு வைத்தாள்..
"அதுவாம்மா.." வனிதா தயங்கியபடி அகல்யாவை பார்த்தாள் அதைக் கவனிக்காத ஊர்மிளா சாப்பிட்டபடி..
"கொலஸ்ட்ரால் குறையனுமுன்னா அசைவச் சாப்பாட்டையும் குறைக்கனும் வனிதா.." என்று சொல்லி வைத்தாள்..
வனிதா சமையலறைக்குள் ஓடி விட்டாள்.. ஊர்மிளா இயல்பாக சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள்... நரேந்திரன் இல்லாத தனிமை அவளை அச்சுறுத்தியது... தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டு பிடிக்கும் சின்ன மாமியாரிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வளிடம்..
"கொழுப்பு.. எனக்கா.. இல்லை உனக்கா..?" என்று கேட்டபடி வந்து நின்றாள் அகல்யா..
'இப்ப என்ன..?' ஊர்மிளாவுக்கு ஒன்றும் புரிய வில்லை..
"என்ன..?" என்று கேட்டாள்..
"ஆஹா.. இவளுக்கு ஒன்னுமே தெரியாதாம்.. இந்த வித்தாரத்தனத்தை உன் புருசன்கிட்டக் காட்டு.. அவன் நம்புவான்.. என்கிட்டப் பசப்பாதே.."
"இங்கே பாருங்க.. இந்தப் பசப்பற வேலையெல்லாம் உங்களுக்குத்தான் வரும்.. எனக்குச் சுட்டுப் போட்டாலும் அது வராது.."
"ஆமாமா.. நம்பிட்டேன்.. உனக்கு ஒன்னுமே வராதுதான்.. அதைத்தான் மொட்டை மாடியில பார்த்தேனே... என்னமா சிலுக்கிக்கிட்டுப் பேசின.. இந்த மயக்கற மேனாமினுக்கி வேலையெல்லாம் எனக்குத் தெரியாமப் போச்சே.."
அகல்யாவின் பேச்சில் அதிர்ந்து போனாள் ஊர்மிளா..
"நிறுத்துங்க.."
அவள் உடல் கோபத்தில் ஆடியது.. ஒற்றைவிரலை உயர்த்தி அகல்யாவிடம் எச்சரிக்கை செய்தாள்..
"ஜாக்கிரதை.. நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.."
"அதைத்தான் அன்னைக்கு ரத்திரி பார்த்தேனே.."
"ச்ச்சீ.. நீங்கள்ளாம் ஒரு மனுசப்பிறவி..? புருசனும் பெண்டாட்டியும் தனிச்சு பேசறதை ஒளிஞ்சிருந்து பார்த்துட்டு அதைப் பத்தி வெட்கமில்லாம வெளியில பேசவும் செய்கிறீங்களே.. உங்களுக்கு வெட்கமா யில்லை..? அதுசரி.. நீங்கதான் வெட்கம், மானம், சூடு, சொரணைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்களே.."
"ஊர்மிளா.." அகல்யா அலறினாள்..
"பேசாதீங்க.. என் பெயரைச் சொல்லக் கூட உங்களுக்கு அருகதை கிடையாது.. சின்ன மாமியாராச்சேன்னு பொறுமையாப் போனேன்.. இல்லேன்னா நீங்க செஞ்சு வைச்ச காரியத்தை அன்னைக்கே நரேனிடம் சொல்லியிருப்பேன்.. அப்படிச் செய்யாமல் விட்டதுதான் தப்பாப் போச்சு.."
ஊர்மிளாவின் கோபத்தில் அகல்யா ஆடிப் போய் விட்டாள்..
'சொல்லி விடுவாளோ..' அவள் மனதில் பயம் எழுந்தது..
ஊர்மிளா மட்டும் அகல்யா ஒளிந்திருந்து பார்த்ததை நரேந்திரனிடம் சொல்லி விட்டால் அவன் ஆயுளுக்கும் அகல்யா இருக்கும் திசைப்பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டான் என்பது நிச்சயம்...
"போனாப் போகுதுன்னு பார்த்தா நீங்க தலைமேல ஏறுகிறீங்க.. இப்ப என்னத்துக்காக கொழுப்பு.. அது.. இதுன்னு வந்து நிற்கறிங்க..?"
"எனக்கு கொழுப்பு கூடிருச்சுன்னு வனிதாகிட்ட நீ சொல்லலை..? என் கொழுப்பைக் குறைக்கனும்னு ஜாடை பேசலை..?"
அகல்யாவின் வியாக்கினத்தில்
'அட ராமா..' என்று ஆகி விட்டது ஊர்மிளாவிற்கு.. ஊர்மிளா வாயைத்திறந்து எதைப் பேசினாலும் அதில் அகல்யா குற்றம் கண்டு பிடித்து சண்டைக்கு வருவாளா..?






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே - 61
அழகான ராட்சசியே - 61
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-61.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-61.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy