அழகான ராட்சசியே -60

60 என் நிழலாக நீயிருந்தும்.. நினைவிலிருந்து ஒதுக்கி வைத்த அழகான ராட்சசி நீ.... நல்லவர்களின் வாக்குத்தான் பலிக்கும் என்று பெரி...


60
என் நிழலாக நீயிருந்தும்..
நினைவிலிருந்து ஒதுக்கி வைத்த
அழகான ராட்சசி நீ....


நல்லவர்களின் வாக்குத்தான் பலிக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. அதை விடுத்து.. தீயவர்கள் சொல்லும் வாக்கும்.. நினைவும் பலிக்குமென்றால் இந்த உலகில் நல்லவர்கள் வாழ்வது எவ்வாறு..?
அகல்யா சொன்ன வார்த்தைகள் பலித்து விடும் என்று ஊர்மிளா நினைத்தும் பார்க்கவில்லை.. அது ஒருநாள் பலிக்கும்.. ஊர்மிளா தானாகவே அந்த வீட்டை விட்டு வெளியேறுவாள் என்று அறியாத பேதையாய் ஊர்மிளா அந்த இடத்தை விட்டு அகன்று நரேந்திரனுக்கும் அவளுக்குமான அவர்களின் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டு விட்டாள்..
அகல்யாவின் முகத்தில் தீயின் ஜ்வாலை தெரிந்தது.. அவள் ஆங்காரத்துடன் அப்படியே நின்றாள்.. அவள் முன்னால் மூடிய நரேந்திரனின் அறைக்கதவு தெரிந்தது..
மொட்டை மாடியில் தன்னந்தனிமையில் ஊர்மிளாவும் நரேந்திரனும் 'நிலாச்சோறு' சாப்பிடப் போவதாகச் சொன்னதும் தானும் அங்கே இருக்க வேண்டுமென பற்பல பிரயத்தனங்களை செய்து பார்த்தாள்.. பலன்தான் கிடைக்காமல் போய் விட்டது.. அருண்குமாரும்.. அர்ச்சனாவும் கலந்து கொள்ளாத நிலா விருந்திற்கு அகல்யாவும் வரவேண்டாம் என்று நரேந்திரன் சொல்லி விட்டான்.. அதில் அகல்யாவின் மனதில் பிரளயம் உண்டானது..
எப்போதுமே நரேந்திரன் அகல்யாவிடம் முகம் கொடுத்துப் பேசமாட்டான்.. அருண் குமாரையும்.. அர்ச்சனாவையும் முன்னிருத்தியே அவர்களுக்குள் பேச்சு நடக்கும்.. அவளுக்கென்ற தனி மரியாதையையோ.. அங்கீகாரத்தையோ நரேந்திரன் அவளுக்குத் தந்ததில்லை..
நரேந்திரன் ஊர்மிளாவுடன் உல்லாசமாக பேசியபடி மாடிப்படிகளில் ஏறியதை மறைந்திருந்து பார்த்த அகல்யாவின் மனம் பதைத்தது.. அவன் அப்படி உல்லாசமாக பேசும் பேர்வழியல்ல.. கண்டிப்பை மட்டுமே காட்டும் அவன் கண்களில் ஊர்மிளாவைக் கண்டதும் காதல் பெருக்கெடுப்பதில் அகல்யாவுக்கு சம்மதமில்லை.. ஊர்மிளாவிடம் அவன் இமைசிமிட்டும் போது.. அவன் ஊர்மிளாவுக்குச் சொந்தமானவனாக மாறிக் கொண்டிருப்பதை அகல்யா இனம் கண்டு கொண்டாள்..
ஊர்மிளாவின் ஒரு வசீகரப் பார்வையில் நரேந்திரன் மயங்கிப் போய் விடுவதையும்.. அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அவள் சொன்னதை செய்து விடுவதையும் ஊன்றிக் கவனித்த அகல்யாவுக்கு குளிர் காய்ச்சலே வந்தது..
தன் கண்பார்வையில் நரேந்திரனை வசியம் பண்ணி வைத்திருந்தாள் ஊர்மிளா.. அதை கண்டு கொண்ட நாள் முதலாய் அகல்யாவுக்கு உணவும் பிடிக்க வில்லை.. உறக்கமும் வரவில்லை.. ஊன் கரைய அவள் ஊர்மிளாவை அந்த வீட்டிலிருந்து விரட்டுவதற்கு என்ன மார்க்கம் அகப்படும் என்பதை யோசிக்க ஆரம்பித்து விட்டாள்..
நரேந்திரன் ஊர்மிளாவிடம் உதடுகளைச் சுழித்துச் சிரித்து விட்டு.. அகல்யாவிடம் மட்டும் கனலாய் கோபத்தைக் காட்டும் போதெல்லாம் அகல்யாவின் மனதில் ஊர்மிளாவின் மீதான வன்மத்தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது..
அவளுடைய சொல் கேட்டு நடக்கும் வேலையாள்கள்.. ஊர்மிளாவின் சொல் கேட்டு நடக்க ஆரம்பித்ததில் ஊர்மிளா அந்த வீட்டின் எஜமானியாக ஆகி விட்டாளோ என்ற கலவரம் அகல்யாவின் மனதுக்குள் வந்தது..
மொட்டை மாடியில் நிலா விருந்தை உண்ணப் போன நரேந்திரன், ஊர்மிளாவின் பின்னாலேயே சப்தம் எழுப்பாமல் போனாள் அகல்யா.. படிக்கட்டுக்களில் நின்றபடி மறைந்திருந்து நரேந்திரனும், ஊர்மிளாவும் பேசிக் கொள்வதை ஒட்டுக் கேட்டு, வேவு பார்க்க ஆரம்பித்தாள்..
ஊர்மிளா நரேந்திரனின் தாத்தா, பாட்டியைப் பற்றிக் கேட்டதும் அவளுக்குள் கோபம் கொந்தளித்தது..
'அவனே சும்மாயிருக்கிறான்.. இவ என்னத்துக்கு தூண்டி விடறா..' என்று வெகுண்டாள்..
நரேந்திரன் ஊர்மிளாவிடம் அகல்யாவை பிடிக்காது என்றும்.. வேறு வழியில்லாமல்.. அம்மா என்று அழைக்க நேர்வதையும் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு பற்றி எரிந்தது..
'இவன் அம்மான்னு கூப்பிடனும்னு நான் தவமா கிடக்கிறேன்..? இவன் மட்டும் கோடிஸ்வரனா இல்லாம இருந்திருந்தா.. இவனை திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேனே..' வெறுப்பினால் அவள் முகம் கோணியது..
அகல்யாவைப் பற்றிய அத்தனை செய்திகளையும் ஊர்மிளாவிடம் நரேந்திரன் பிட்டுப் பிட்டு வைத்ததும்..
'அடப்பாவி..! எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சுக் கிட்டே ஏதும் தெரியாததைப் போல இருந்தியா..?' என்று மனதுக்குள் புழுங்கினாள் அகல்யா..
அது தெரியாமல் அவனிடம் அன்பான அன்னையின் வேடம் போட முயன்றதை நினைத்துப் பார்த்தவளுக்கு ஆற்றாமையாக இருந்தது.. அது அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரா..?
நரேந்திரனின் தாத்தா பாட்டியிடம் ஆசி வாங்க வேண்டுமென்று ஊர்மிளா கேட்டுக் கொண்டதும் நரேந்திரன் சரியென்று சொல்லி விட்டதில் அகல்யாவுக்கு வெறி பிடித்து விட்டது..
நரேந்திரனின் எல்லாச் சொத்துக்களும் அவன் தாய் வழி அவனுக்கு வந்த சொத்துக்கள் என்ற உண்மையை அவன் ஊர்மிளாவுக்குத் தெரியப்படுத்தி விட்டதில் அகல்யாவின் மனக் கோட்டை சரிந்து விட்டது..
'கடைசியில் என் மகனையும்.. என் புருசனைப் போல வேலைக்காரனாத்தான் இவன் வைச்சிருக்கப் போகிறானா..? இவன் சொத்தில என் மகனுக்கும், மகளுக்கும், எனக்கும் பங்கு கிடைக்காதாமா..?' நினைத்து நினைத்து புலம்பினாள்..
அதை ஊர்மிளாவிடம் நரேந்திரன் சொன்னதில் அகல்யாவுக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது..
'இவ ஏற்கனெவே என்னை ஒத்த ரூபாய்க்கு கூட மதிக்க மாட்டா.. இதில இந்த விவரமும் தெரிஞ்சிருச் சுன்னா எப்படி என்னை மதிப்பா..? இவ அப்பன் சும்மாவே லா பாயிண்டா பேசுவான்.. இந்த விவரத்தை இவ அப்பன் காதிலே போட்டு வைச்சா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டுதானே அந்த ஆள் வேறு வேலை பார்ப்பான்..'
ஊர்மிளா புத்திசாலி என்பதில் அகல்யாவுக்கு தாள மாட்டாத துன்பம் இருந்தது.. இதில் நரேந்திரனை அவள் கஜேந்திரனின் வீட்டுக்குப் பிரித்து அழைத்துப் போய் விட்டால் அங்கேயே நரேந்திரனை ஒட்ட வைத்து விடுவாள் என்பதில் அகல்யாவுக்கு கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை..
அவர்கள் பேசிய அனைத்துப் பேச்சுக்களையும் ஒட்டுக் கேட்டபடி.. மறைந்திருந்து வேவு பார்த்தவளை ஊர்மிளா பார்த்து விட்டாள் என்பதில் அகல்யா பயப்படவே இல்லை...
'பார்த்தா பார்க்கட்டுமே.. எனக்கென்ன இவகிட்ட பயம்..? இவதான் என்னைப் பார்த்து பயப்படனும்..'
ஊர்மிளாவிடம் நேருக்கு நேராக சவால் விட்ட அவளின் அசாத்திய தைரியத்தில் ஊர்மிளா அரண்டு போயிருப்பாள் என்று நினைத்துக் கொண்டாள் அகல்யா..
அறைக்குள் போன ஊர்மிளாவிற்கு மிரட்சியாகத் தான் இருந்தது.. அவள் மனதில் பாரதியாரின் பாடல் வந்தது..
 'பாதம் செய்பவரைக் கண்டால் -நீ
             பயம் கொள்ளலாகாது பாப்பா..
    மோதி மிதித்து விடு பாப்பா - அவர்
             முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா..'
ஊர்மிளாவின் மனதில் உறுதி வந்தது.. அந்த உறுதிவந்த பின்னால் நரேந்திரனின் அணைப்பில் அடங்குவதில் அவளுக்குத் தயக்கம் வரவில்லை.. அவள் அவன் கைகளுக்குள் புகுந்து ஒட்டிக் கொண்டதில் நரேந்திரனிடமிருந்து விலகிப் போயிருந்த வேட்கை வந்து ஒட்டிக் கொண்டது..
"ஏண்டி என்னவோ போல இருந்தே..?"
நரேந்திரன் மீண்டும், மீண்டும் கேட்டான்.. ஊர்மிளா  அவனிடம் சொல்லியிருக்கலாம்.. நடந்ததைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாரிடம் அவள் பகிர்ந்து கொள்வாள்..?
'வேண்டாம்.. இப்ப எதையும் சொல்ல வேண்டாம்..'
ஊர்மிளா முடிவு செய்தாள்.. மறுநாள் வெளி நாட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் கணவனிடம் எதைப் பற்றியும் பேச வேண்டாம் என்று அவளது அறிவு சொல்லியது.. அந்த நேரம் அகல்யாவைப் பற்றிப் பேசுவதற்கான நேரமல்ல..
'பிஸினெஸ் டிரிப்பை முடித்து விட்டு வரட்டும்.. மொத்தமாக எல்லாத்தையும் சொல்லி.. இதுக்கொரு முடிவு கட்டறேன்..'
கணவனின் மனநிலை உற்சாகமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் வலிய வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் அவன் முகத்தில் இழைந்தாள்..
"என்னவோ போலன்னா..? என்னவாம்..?"
அவளது ரகசியக் கேள்வியில் அவன் புலன் விசாரனையை மறந்தான்.. அவளை ஆக்ரமித்தான்.. அவனிடம் தன்னை ஒப்புக் கொடுத்த ஊர்மிளா அப்போதைக்கு நடந்ததை கொஞ்சம் மறந்தாள்.. கணவன் ஆசைப்பட்டதைக் கொடுக்க ஆரம்பித்தாள்.. அன்றைய இரவு.. மற்றுமொரு முதலிரவாக அவர்களுக்கு இருந்தது..
மறுநாள் காலையில் அவன் அவளிடம் விடைபெற்று வெளிநாட்டிற்குக் கிளம்பிய போது ஏனோ அவள் மனம் பதைத்தது.. மனதுக்குள் இனம் புரியாத பயம் உண்டானது..
கண்ணாடியின் முன்னால் நின்று கோட்டை சரி செய்து கொண்டிருந்த நரேந்திரன் கண்ணாடியின் வழியே தெரிந்த மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான்..
முதல் நாள் இரவின் நிகழ்வுகள் அவன் விழிகளில் முத்திரையாக வெளிவந்தன.. அந்த இமை சிமிட்டல் சொல்லிய சங்கேத மொழியில் ஊர்மிளாவுக்குள் 'குப்' பென்ற ஒரு உணர்வு பரவியது.. அவள் தடுமாறினாள்.. அவனை அணைத்துக் கொள்ளும் வேகம் பிரவாகமாக அவளுக்குள் எழுந்ததில் மூச்சுத் திணறினாள்.. அவளது போராட்டத்தை நரேந்திரன் கண்டு கொண்டான்..
கண்ணாடியிலிருந்து திரும்பியவன் ஒரே எட்டில் அவளை நெருங்கி முத்தங்களால் அவளை குளிப் பாட்டினான்..
"நரேன்.. என் நரேன்.."
அவன் முகத்தை இரு கைகளாலும் பிடித்து பரிதவித்த ஊர்மிளாவின் மனதுக்குள் சஞ்சலம் காடாக வளர்ந்து பயமுறுத்தியது.. வர வழைத்துக் கொண்ட தைரியத்தை அது ஆட்டிப் பார்த்தது..
பிரிவுத்துயரும், சஞ்சலமும் சேர்ந்து கொண்டதில் கலக்கம் விஸ்வரூபமெடுத்து அவள் விழிகளில் மண்டியது..
"என்னடி..?" நரேந்திரன் தவித்துப் போனான்..
"நரேன்.." சொல்ல முடியாமல் ஊர்மிளா விம்மினாள்..
மனைவியை மார்போடு அணைத்துக் கொண்ட நரேந்திரனுக்கு அந்த வெளிநாட்டுப் பயணத்தை கேன்சல் செய்து விடலாமா என்று கூடத் தோன்றியது.. அதைச் சொல்லவும் செய்தான்..
"வேண்டாம்.." பலவீனமான குரலில் மறுத்தாள் ஊர்மிளா..
"உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு எப்படிடி நான் ப்ளைட்டில ஏறுவேன்..?" நரேந்திரன் அவள் விழி நீரைத் துடைத்து விட்டான்..
"நம்ம கல்யாணத்துக்குப் பின்னாலே நீங்க போடப் போகிற முதல் வெளிநாட்டு ஒப்பந்தம் இதுதான்.. இதைக் கேன்சல் பண்ணினா செண்டிமெண்டா நான் ஃபீல் பண்ணுவேன்.. என்னாலே நீங்க முன்னேறின தாகத்தான் இருக்கனும்.." ஊர்மிளா அவனது மனைவியாக பொறுப்புணர்வுடன் பேசினாள்..
நரேந்திரனுக்கு கிளம்பவும் முடியவில்லை.. இருக்கவும் முடியவில்லை.. பயணத்தை கேன்சல் பண்ணுவதை ஊர்மிளா தடுத்தாள்.. அதே சமயத்தில் நடுங்கும் கரங்களால் அவன் முகத்தைத் தடவித்தடவி பரிதவித்தாள்.. அந்த பரிதவிப்பு அவன் மனதைக் கசக்கிப் பிழிந்தது..
பின்னாளில் அவள் அவனைப் பிரிந்து சென்ற பின்னால் அந்தக் கண்ணீர் முகம்தான் அவன் கனவிலும், நனவிலும் வந்து அவனை வாட்டியது..
'என்ன சொல்ல நினைத்தா..? அவ மனசில என்ன இருந்தது..?' எதையும் சொல்லாமல் ஒரு கேள்வியில் அனைத்து சொந்தத்தையும் பந்தத்தையும் அறுத்துக் கொண்டவளாக அவனைவிட்டு விலகிச் சென்று விட்டவளை நினைத்து நினைத்து மனம் குமுறியிருக் கிறான்..
ஊர்மிளா அவனுக்கு அநியாயம் செய்து விட்டதாகத் தான் அவன் நினைத்தான்.. அன்னையில்லாமல்.. தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவனுக்கு யாதுமாக வந்தாளே.. வந்தவள் அவனுடன் வாழ்ந்த ஒரு வருடத்திற்குள் வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அவனுக்கு அடையாளம் காட்டி விட்டு பிரிந்து சென்றால் அது நியாயமாகுமா..?
நதிநீர் கானல் நீரானால் வாழ்வின் அனைத்து நம்பிக்கைகளும் அர்த்தமற்றுப் போய் விடாதா..?
ஊர்மிளா நரேந்திரனின் நம்பிக்கையை உடைத்து விட்டதாக பிற்காலத்தில் அவன் நினைக்கப் போகிறான் என்பதை அறியாதவளாக அவன் மார்பில் ஒன்றிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா..
வெடவெடத்த அவளின் தளிருடலை தழுவிக் கொண்டவன்.. அவள் முகம் நிமிர்த்தி அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.. அதில் தெரிந்த கடலளவு கலக்கத்தில் அவன் கண்களில் கேள்வி வந்தது..
"ஏதோ இருக்கு.. அது என்னன்னு சொல்லு ஊர்மிளா.."
ஊர்மிளா சொல்லவில்லை.. அவன் வெளி நாட்டிற்குப் போய் விட்டுத் திரும்பி வந்ததும் சொல்லிக் கொள்ளலாம் என்று அதைத் தள்ளிப் போட்டு அகல்யாவின் சதுரங்க விளையாட்டிற்கான அவகாசத்தை அளித்து விட்டாள்..
'அன்னைக்கு மட்டும் அவர் கேட்டபோது நான் அத்தனையையும் சொல்லியிருந்தா..?'
பெருமூச்சுடன் அவள் நினைக்காத நாளில்லை.. அவனை விட்டுப் பிரிந்து வந்த பின்னால் இந்த எண்ணம் தான் அவளைத் துரத்தியது.. அவளுக்கு உயிரானவனைப் பிரிந்து வந்துவிட நேர்ந்த கொடுமையில் அழுது புலம்பியது..
'சொல்லியிருக்கனும்.. அவனிடம் அத்தனையையும் சொல்லியிருக்கனும்.. பர்ஸ்ட் நைட் முடிந்து வந்த காலையிலேயே அந்த அகல்யா கேட்ட அநாகரிகமான கேள்வியையும், விட்ட சவாலையும் சொல்லியிருக்கனும்.. மொட்டைமாடியிலே நாங்க புருசனும், பெண்டாட்டியுமா பேசிக்கிட்டு இருந்த பேச்சுக்களை அந்த அகல்யா ஒளிந்திருந்து ஒட்டுக்கேட்டு, வேடிக்கை பார்த்ததைச் சொல்லியிருக்கனும்.. அதைப் பார்த்து விட்ட என்னைப் பார்த்து வீட்டை விட்டு விரட்டப் போறேன்னு ஆங்காரப் பட்டதையும் சொல்லியிருக்கனும்..'
 எதையும் சொல்லாமல் நரேந்திரனை வழியனுப்பி வைத்தாள் ஊர்மிளா.. எதுவந்தாலும் எதிர்கொள்ள வேண்டுமென்று மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டாள்.




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -60
அழகான ராட்சசியே -60
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-60.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-60.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy