அழகான ராட்சசியே -53

53 உன் காதலால் எனைக் கட்டிப் போட்ட.. அழகான ராட்சசி நீ.... வெளிச்சமில்லாத வெளிச்சம்.. இருட்டில்லாத இருட்டு... ஆங்காங்கே ஏற்றி ...


53
உன் காதலால் எனைக்
கட்டிப் போட்ட..
அழகான ராட்சசி நீ....


வெளிச்சமில்லாத வெளிச்சம்.. இருட்டில்லாத இருட்டு... ஆங்காங்கே ஏற்றி வைக்கப்பட்டிருந்த மெழுகு வர்த்தியின் ஒளியில்.. கண்ட அந்த நீண்ட குகையை பலமுறை தன் கனவுகளில் கண்டிருக்கிறாள் ஊர்மிளா..
ஆழ்ந்த தூக்கத்தில் அடிக்கடி அந்தக் கனவு அவளுக்கு வரும்.. நீண்டு செல்லும் குகைப்பாதையில் அவள் போய் கொண்டிருப்பதைப் போல உணர்வாள்.. சட்டென்று விழிப்பு வந்து விடும்..
வெகுநாள்கள்வரை அந்தக் கனவுக்கான பொருள் புரியாமல் மனதைப் போட்டு உழட்டிக் கொண்டாள் ஊர்மிளா.. தத்ரூபமாக.. கண்ணுக்கு முன்னால் நடப்பதைப் போல அவள் கண்ட குகையின் நீண்ட பாதை திரும்பத் திரும்ப அவள் மனதுக்குள் சுற்றிச் சுற்றி வந்தது.. எதற்காக அந்தக் கனவு திரும்பத்திரும்ப அவளுக்கு வருகிறது என்று தெரியாமல் சில சமயங்களில் மிரண்டிருக் கிறாள்..
சோமசுந்தரத்திடம் கனவைப் பற்றிய விளக்கம் கேட்க முற்பட்டால், அவர் அதனுடன் தொடர்புடைய பொதுவுடைமைக் கொள்கைகளையும், கோட்பாடு களையும் விளக்க முற்படுவார் என்பதினால் அவரிடம் அதைக் கேட்காமல் தவிர்த்தாள்..
பூங்குழலியிடம் கேட்டால், அவள் புராணங்களில் இருந்தும்.. ஆண்மீகத்தில் இருந்தும் அந்தக் கனவைப் பற்றிச் சொல்லப் படுவது என்ன என்று ஆய்ந்து அறிய முற்பட்டு விடுவாள் என்பதால் தாயிடமும் அதை மறைத்தாள்..
அப்படி அவள் தூக்கத்தின் கனவில் மீண்டும்.. மீண்டும் வந்த குகைப்பாதையை நேரில் கண்டபோது அவள் பிரமித்தாள்..
'இது எப்படி சாத்தியம்..??!!!...'
கனவு என்பது வருங்கால நிகழ்வுகளின் அறிவுறுத்தலா..?
ஊர்மிளாவிற்குத் தெரியவில்லை.. நரேந்திரனிடம் விழி விரித்து அதைக் கூறிய போது.. அவன்..
"ஈஸீட்..?" என்று கேட்டபடி அகன்ற அவளின் நீள்விழிகள் விரிந்த அழகை ரசித்தபடி அவள் தோளில் கைபோட்டு அருகே இழுத்துக் கொண்டான்..
"இதுதான் நீங்க என் ஃபீலீங்கை ஷேர் பண்ணிக்கிற லட்சணமா..?" ஊர்மிளா சிணுங்கியபடி அவன் மார்பில் செல்லமாக குத்திவிட்டு முகத்தைப் புதைத்துக் கொண்டாள்..
மங்கிய வெளிச்சத்துடனிருந்த அந்தக் குகையில் அங்கொருவரும் இங்கொருவருமாக இருந்த ஆஸ்திரேலியவாசிகள் அவர்களை விட அதிகமான நெருக்கத்தில் இருந்ததினால்.. அவர்களுடைய அந்தத் தழுவலை யாரும் கண்டு கொள்ளவில்லை..
'ஜெனலோன் குகைகள்..'
ஆஸ்திரேலியாவில் இருந்த அந்தக் குகைகளுக்குப் பெயர் இதுதானாம்.. எப்படி ஆஸ்திரேலியாவின் 'ஜெனலோன் குகை'.. திருச்சியில் காவிரியின் ஒரு கரையில் உச்சிப் பிள்ளையார் கோவிலும்... மறுகரையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கோவிலுமாக இருந்த ஊரில்.. ஆன்மீகமும்.. பகுத்தறிவும்.. தாய்.. தந்தையராக வாய்த்து.. அவர்களின் நிழலிலும்.. தெய்வங்களின் பாதுகாப்பிலும் வாழ்ந்த ஊர்மிளாவின் கனவில் தோன்றியது என்ற மர்மத்தின் முடிச்சு ஊர்மிளாவிற்கு பிடிபடவே இல்லை..
"விடுடி.."
நரேந்திரன் நெருக்கத்தை அதிகப்படுத்துவதிலேயே குறியாக இருந்தான்.. கட்டவிழ்ந்த சுதந்திரம் போல.. அன்னிய தேசத்தில் தேநிலவு கொண்டாடிக் கொண்டிருக்கும் உல்லாசம் ஊர்மிளாவை ஆக்ரமித் திருந்ததில் அவள் நரேந்திரனின் விருப்பங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்ததில் அவனுக்குள் கள்ளுண்ட போதை கிளர்ந்து விட்டிருந்தது..
"உஷ்.. அத்தை.. அர்ச்சனா.. அருண்.."
பெங்களூரில் தனியறையைத் தவிர மற்ற இடங்களில் அவனை அடிக்கடி எச்சரித்துக் கொண்டே விலகிக் கொண்டே இருப்பாள் ஊர்மிளா.. தோட்டத்தில் அவளைத் தொட்டு இழுத்துக் கொண்டால்.. அவன் கைகளுக்குள் புகுந்து கொள்பவள்.. யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று விழிகளைச் சுழல் விட்டுக் கொண்டே இருப்பாள்..
திருச்சியில் கேட்கவே வேண்டாம்.. பகுத்தறிவு சிங்கம் சோமசுந்தரத்தின் மகளாக எட்ட நின்று வெட்டி விடுவதைப் போல முறைத்துக் கொண்டே இருப்பாள்.. பூங்குழலி அழைத்து அறிவுரை சொன்னால்.. மாதர்குல மாணிக்கமாக.. பால் சாப்பிடுகிறீர்களா.. பழம் சாப்பிடு கிறீர்களா என்று அவன் வயிற்றுக்குள் பூங்குழலி கொடுத்தனுப்பும் பதார்த்தங்களைக் கொட்டி விடுவதிலேயே குறியாக இருப்பாள்..
'என்னடா இது..! இதுக்கா இவளிடம் பொய்வேடம் போட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..'
நரேந்திரனுக்கு முட்டிக்கொள்ள வேண்டும் போல இருக்கும்.. படுக்கையறைக்குள் வருகிறவள்.. பாரதி தாசனின் 'குடும்ப விளக்கு'  புத்தகத்துடன் வந்து.. அதன்படி வாழ வேண்டும் என்று.. சோமசுந்தரமும்.. பூங்குழலியும் அவளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பியிருக் கிறார்கள் என்று சொல்லி.. அதற்கான தெளிவுரை.. பொழிவுரை.. என்று எல்லா உரைகளையும் கையில் மைக் இல்லாமலேயே உரைக்க முற்பட்டபோது.. அவன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்..
"முதல்ல நாம குடும்பம் நடத்த ஆரம்பிக்கலாம்.. வாடி.. குடும்ப விளக்கைப் பற்றி அப்புறமா தெரிஞ்சுக் கலாம்.."
அவன் அவளை ஆக்ரமித்தபோது அவளுக்கு கோபம் வந்து விட்டது.. நரேந்திரன்.. ஊர்மிளாவைப் பெற்ற அப்பா சோமசுந்தரம் சொன்னதைப் போல முதலாளித்துவ சிந்தனை கொண்டவன் என்று அவள் சாடினாள்..
"ஏய்ய்..! பெண்டாட்டி கூட சந்தோசமா இருக்கனும்ன்னு தொழிலாளியும் நினைப்பாண்டி.."
நரேந்திரன் அவளுக்குப் புரிய வைக்கப் போராடிக் களைத்து விடுவான்..
அப்படிப்பட்ட இக்கட்டுகளும்.. இடையூறுகளும் இல்லாமல் ஊர்மிளா அவனை அணுகியதில்.. அவளை அணுகவிட்டதில், நரேந்திரனுக்குள் மடைதிறந்த உற்சாகம் பெருக்கெடுத்தது..
அதைவிட.. அவன்மீது அவள் காட்டிய உரிமையுணர்வும்.. ஆளுமையும்.. ஆழ்ந்த காதலும்.. வெறித்தனமான நேசமும்.. அவனைக் கட்டிப் போட்டன..  ஆஸ்திரேலியாவின் அழகிகளை அவன் திரும்பிப் பார்த்தால்கூட அவள் போர்கொடியை உயர்த்தினாள்..
"என்னடி இது... உங்கப்பா எல்லாத்திலயும் பொதுவுடமை பேசறாரு.. அவரு பெத்த பொண்ணு நீ.. இப்படி தனி உடைமை பேசற.." நரேந்திரன் சீண்டினான்..
ஊர்மிளாவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ.. அவள் முகம் கோவைப்பழமாய் கோபத்தில் சிவந்து விட்டது..
"என்ன சொன்னீங்க..?" ஆக்ரோசமாய் சீறினாள்..
நரேந்திரனே அவளுடைய அந்த கோபத்தில் அரண்டு விட்டான்..
"ஹி.. ஹி.. ஒரு ஆர்வக்கோளாறில சந்தேகம் கேட்டுட்டேண்டி.." விளையாட்டைப் போல பேசி சமாளிக்க முயன்றான்..
"கேட்பீங்க.. கேட்பீங்க.. ஏன் கேட்க மாட்டிங்க..? 'பொய்..'ன்னாலே பிடிக்காதவ.. நீங்க பொய் சொல்லி என்னைக் காதலிச்சு கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தினீங்கன்னு தெரிஞ்ச பின்னாலும் உங்களை வெறுக்க முடியாம.. மறக்க முடியாம.. கட்டினா உங்களைத்தான் கட்டுவேன்னு பிடிவாதமாய் உங்களுக்கு கழுத்தை நீட்டினேனில்ல..? நீங்க இதையும் சொல்வீங்க.. இதுக்கு மேலேயும் சொல்வீங்க.."
"இல்லைடி.."
"பேசாதீங்க.. நீங்க பொதுவுடைமையா..? கொன்னு போட்டிருவேன்.."
"யாரைடி..?" நரேந்திரன் மிரண்டு விட்டான்..
கொலையும் செய்வாள் பத்தினியென்று இதைத்தான் சொல்லி வைத்தார்களா..?
"உங்களை திரும்பிப் பாக்கறவளை.."
"அப்பாடி.." நரேந்திரன் நிம்மதியாக மூச்சுவிட்டான்..
அவன் தப்பித்தான்.. ஆக.. திரும்பிப் பார்த்த அவனை விட்டு விட்டு.. அவன் திரும்பிப் பார்த்ததினால் திரும்பிப் பார்க்கும் காரிகைகளைத்தான் அவன் மனைவி போட்டுத் தாக்குவாள்..
'உத்தமம்..'
அப்படியெல்லாமில்லை என்பதை அடுத்து வந்த ஊர்மிளாவின் வார்த்தைகள் அவன் செவிகளில் சொல்லிப் போயின..
"அடுத்து உங்களைப் போட்டுத் தள்ளிட்டு நானும் உங்க கூடவே செத்துப் போயிருவேன்.."
தேம்பி அழுதவளை இழுத்து இறுக்கிக் கொண்ட நரேந்திரனுக்கு ஆச்சரியமாக இருந்தது..
காதல் எப்பேற்பட்ட புத்திசாலியையும்.. முட்டாளாக்கி.. தேம்பி அழ வைக்குமா..?
ஊர்மிளா முட்டாளாகத்தான் இருந்தாள்.. நரேந்திரனின் முன்னிலையில் அவளுடைய அத்தனை புத்திசாலித்தனங்களையும் மறந்து போனாள்.. எதுவும் அறியாத அறியாமையை விழிகளில் தேக்கியவளாய்.. அவனை மட்டுமே அறிந்த வெளிச்சத்தை விழிகளில் பிரதிபலித்தவளாய் அவனை அவள் ஆரத்தழுவிக் கொள்ளும்போது.. இந்த உலகில் உள்ள அத்தனையையும் வென்று அவள் காலடியில் போட்டுவிட அவன் சித்தமானான்..
ஊர்மிளா நரேந்திரனின்மீது பைத்தியமாக இருந்தாள்.. அதை உணர்ந்திருந்த நரேந்திரன்.. அந்த
ஒரு காரணத்தினாலேயே அவள்மீது பைத்தியமாகிப் போனான்..
நீண்டிருந்த ஜெனலோன் குகையை விட்டு வெளியே வந்து ஆஸ்திரேலியாவின் அழகிய தெருவில் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்..
இதமான குளிர்காற்று அவர்களைத் தீண்டிக் கொண்டிருந்தது.. கனமான பட்டுப் போன்ற பருத்திச் சேலையைக் கட்டி.. ஓவர்கோட்டைப் போட்டிருந்த ஊர்மிளாவின் பின்னல் ஓவர் கோட்டுக்கு வெளியே அசைந்து ஆடியது..
அவள் நெற்றியிலிருந்த வட்டப் பொட்டில் மனம் லயித்தான் நரேந்திரன்.. அவளிடம் ததும்பிய தமிழகத்தின் பெண்மை மிளிரும் அழகில் சொக்கிப் போனான்..
அவன் பார்வையை உணர்ந்தவள் புருவங்களை வினவும் பாவனையில் உயர்த்திய விதத்தில் வசீகரிக்கப் பட்டான்..
எல்லையற்ற பிரபஞ்ச வெளியினைப் போல.. எல்லையற்ற வசீகரம் அவளிடம் பொங்கித் ததும்பியது.. அவளது பேச்சில்.. சிரிப்பில்.. காதலான பார்வையில்.. நடையுடை பாவனைகளில் என்று அனைத்து வகைகளிலும் அவள் அவனை வசீகரித்தாள்.. அவளிடம் ததும்பிய வசீகரத்தில் அவன் மயங்கிப் போயிருந்தான்..
"அழகா இருக்கேடி.." ஜொள்ளினான்..
"உங்களை விடவா..?" அவள் மீண்டும் புருவங்களை உயத்தி அவனை வசீகரித்தாள்..
"ஊர்மிளா.." போதையுடன் அழைத்தான்..
"ம்ம்ம்.." அவளது முணுமுணுப்பு கூட அழகான சங்கீதமாக இருந்தது..
"ஐ லவ் யு டி.." கிறக்கத்துடன் அவன் சொன்னான்..
"என்னை விடவா..?" இதிலும் அவள் அவனை வீழ்த்தினாள்..
இரு மலை முகடுகளின் இடையினிலும் சென்ற கேபிள் கார் பயணத்தில் ஊர்மிளா நடுங்கிப் போனாள்.. கீழே பார்த்தால் அகன்ற.. மிகப் பெரிய பள்ளத்தாக்கு..
அவளது நடுங்கிய உடலை வளைத்து தன் மடியில் அடக்கிக் கொண்ட நரேந்திரனின் கரங்கள் அவளைத் தனக்குள் பொருத்திக் கொண்டன.. அவனது கரங்கள் அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டதில் அவனுக்குள் அவள் புதைந்து போனாள்.. கங்காருவின் மடியிலிருக்கும் குட்டியைப் போல தன்னை பாதுகாப்பாய் உணர்ந்தவள்.. அவன் தோளில் தலை சாய்த்து.. சுற்றுப்புறத்தைப் பார்த்தாள்..
கேபிள் காரில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள்.. தொங்கும் ஊஞ்சலில் இருப்பதைப் போல தன்னை உணர்ந்தாள் ஊர்மிளா.. கேபிள்காரின் கண்ணாடிக் கதவுகளின் வழியாக வானத்தைப் பார்த்தவளுக்கு.. தானும் ஒரு மேகமாக அதில் மிதப்பதைப் போல இருந்தது.. தொலைவில் தெரிந்த பனி படர்ந்த மலைச்சிகரங்கள் அவள் கைக்கு எட்டும் தூரத்தில் வா.. வா.. என்று அருகே அழைத்தன..
"கீழே மட்டும் பார்க்காதே.." அவள் காதோரமாக குனிந்து காதுக்குள் கிசுகிசுத்தான் நரேந்திரன்..
"ஏன்..?" அவனது உதடுகள் பட்ட காது மடல்கள் உணர்ந்த வெப்பத்தின் ஸ்பரிசத்தில் கிளர்ச்சி கொண்டவளாக அவனுக்குள் இன்னும் அதிகமாக ஒன்றியபடி கேட்டாள் ஊர்மிளா..
"பயப்படுவடி.."
அவளுடைய ஒன்றுதலை உணர்ந்த இறுக்கிப் பிணைத்தலுடன் சொன்னான் நரேந்திரன்.. அவனது அதீத அக்கறையில் அவளது பயம் பறந்து போனது.. அவனது கைகளுக்குள் இருக்கும் போத பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாக இருப்பதைப் போல உணர்ந்தாள் ஊர்மிளா..
"இப்ப பயமாயில்லை.."
கீழே பார்த்தாள்.. அகன்ற பள்ளத்தாக்கு இப்போது அவளை அச்சுத்தவில்லை.. வளைந்து நெளிந்து ஓடும் நதிகளின் வெள்ளி மின்னல் கோடுகள்.. திருச்சியில்.. அவள் வீட்டு வாசலில்.. தினந்தோறும் பூங்குழலி போடும் கோலத்தில் வளைந்து.. நெளிந்து பின்னும்.. வெள்ளி மின்னல் கோடுகளைப் போலவே இருந்தன..
"ஹை நைஸ்.." ஊர்மிளா கண்கிறங்கச் சொன்னாள்..
அதுபோன்ற பனிபடர்ந்த மலை முகடுக்களுக் கிடையே.. கேபிள் காரின் மூடிய கண்ணாடிக் கதவு களுக்குள்ளே.. வசதியான இருக்கையில் சாய்ந்து அமர்ந்து அதைவிட வசதியான இருக்கையாக.. தனது மடியையும்.. கதகதப்பான உடல் வெப்பத்தையும் தந்து.. தனக்குள் அவளை பொதிந்து கொண்ட காதலனின் அருகாமை அவளைக் கிறங்கடித்ததில் பயம் அத்தனையும் பஞ்சாகப் பறந்து விட்டன..
"எது..?"
அவளது முகத்தைத் திருப்பி.. அவள் உதடுகளில் தனது உதடுகளைப் பொருத்திக் கொண்ட நரேந்திரன் கிசுகிசுத்தபோது பதில் சொல்ல விடை கிடைக்காமல் தடுமாறிப்போனாள் ஊர்மிளா..
தேகமெங்கும் தீப்பற்றியதைப் போன்ற தித்திப்பான அந்த அனுபவத்தில் திளைத்து மூழ்கி எழுந்தவளுக்கு.. கேபிள் காரில் பயணித்ததைக் குறித்த அச்சமே எழவில்லை...
அங்கிருந்த புளு மவுண்டெயின் கல்ச்சுரல் செண்டரில் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்த போது நரேந்திரனின் கை வளைவுக்குள் தன் கையைப் பிணைத்து அவன் தோளில் தலை சாய்த்திருந்தாள் ஊர்மிளா..
இயல்பாக அவள் காட்டிய நெருக்கத்தில் நரேந்திரனின் மனதுக்குள் இதம் பரவியது.. மேடையில் நடந்த நடன நிகழ்ச்சியில் ஆழ்ந்து போயிருந்தவளின் ரசிப்பைக் கலைக்க மனமில்லாமல்.. அவளுக்கு மிக நெருக்கமாக நகர்ந்து அமர்ந்து.. அவளுக்குள் தன்னைப் பிணைத்தபடி கலை நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்தான்..
நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் ட்ரெசர்டு டீ பாட்டுக்கு வந்தார்கள்.. ஆஸ்திரேலியா முழுவதும் அதுபோன்ற உணவகங்கள் நிறைந்திருப்பதைக் கவனித்த ஊர்மிளா..
"நம்ம ஊர் டீ ஷாப்புகளைப் போல இருக்குதில்ல.." என்று கேட்டாள்..
"எனக்குத் தெரியலை.." நரேந்திரன் தோளைக் குலுக்கினான்..
"உங்களுக்கு எப்படித் தெரியும்..? நீங்கதான் ஸ்டார் ஹோட்டல்களில வாசம் செய்கிற ஆளாச்சே.. எனக்குத் தெரியும்.." என்றாள் ஊர்மிளா..
"ஆரம்பிச்சுட்டியா..?" அரண்டு போனான் நரேந்திரன்..
"எதை..?"
ஊர்மிளாவின் கண்களில் இருந்த அறியாமையில் ஈர்க்கப் பட்டான் நரேந்திரன்.. அவள் இப்போதெல்லாம் அவனிடம் கொள்கை.. கோட்பாடுகளைக் குறித்து விவாதிப்பதில்லை என்ற உண்மை அவனுக்குப் புலப்பட்டது..
அவளிடம் இருந்ததெல்லாம் அவன் மீதான மயக்கம் மட்டுமே..
"ஒன்னைக் கவனிச்சீங்களா நரேன்.. இந்த கல்ச்சுரல் டான்ஸில.. ஆஸ்திரேலியாவோட கல்ச்சர் அப்படியே தெரிஞ்சது.. ஒரு நாட்டோட கல்ச்சரை உலகத்துக்கு தெரியப்படுத்தறது.. இலக்கியங்களும்.. நடனங்களும்.. நாடகங்களும்.. சினிமாக்களும்தான்.. அந்தந்த வட்டாரத்தின் பேச்சுவழக்கு.. வாழ்க்கை முறை அத்தனையையும் இவைகள் சொல்லி விடும்.."
இதைச் சொல்லிய ஊர்மிளாவிடம் பகிர்வுதான் இருந்தது.. சொற்பொழிவு இல்லை.. நரேந்திரனின் அருகில் அவள் முற்றிலும் மாறுபட்டவளாக இருந்தாள்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -53
அழகான ராட்சசியே -53
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-53.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-53.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy