அழகான ராட்சசியே -52

52 எதிரெதிர் கரைகளில் இருந்தபோதும்.. எனை மயக்கி உன்பக்கம் இழுத்துக் கொண்ட அழகான ராட்சசி நீ....      "மாணிக்கத் தேர் போல....


52
எதிரெதிர் கரைகளில் இருந்தபோதும்..
எனை மயக்கி உன்பக்கம் இழுத்துக் கொண்ட
அழகான ராட்சசி நீ....


     "மாணிக்கத் தேர் போல..
             மையிட்டு பொட்டிட்டு..
    மகராசன் பிள்ளைகள்..
             விளையாடும்.."
ஊர்மிளாவின் அழகான விழிகளின் சுழற்சியில் நரேந்திரனுக்குள் அவனுக்குப் பிறக்கப் போகும் செல்வங்களைப் பற்றிய கனவு வந்தது..
"கண்ணாடி வளையலும்..
             காகிதப் பூக்களும்..
    கண்ணே உன் மேனியில்
             விளையாடும்..
    இல்லாத உள்ளங்கள் உறவாடும்.."
என்ற சோமசுந்தரத்தின் பாடல் வரிகளில் இனிய கனவின் இடையில் இடறல் ஏற்படுவதைப் போல உணர்ந்தான் நரேந்திரன்..
'இவர் ஒரு சினிக்..' அவனுக்கு கோபம் கோபமாக வந்தது..
இப்படியா ஒரு மனிதர்.. சந்தோசப் பாட்டுக்கு இடையே சம்மட்டியைப் போடுவார்..?
"கண்ணுறங்கு.. கண்ணுறங்கு..
            பொன்னுலகம் கண்ணில் காணும் வரை..
    கண்ணுறங்கு.."
ஊர்மிளாவின் குரல் தழுதழுத்ததில் நரேந்திரன் வெறுத்துப் போய் விட்டான்..
"செல்வர்கள் இல்லத்தில்..
             சீராட்டும் பிள்ளைக்கு..
    பொன்வண்ணக் கிண்ணத்தில்..
             பால் கஞ்சி.."
'நீ யாருடி..?' நரேந்திரனுக்கு வெறி வெறியாக வந்தது..
'தி கிரேட் நரேந்திரனின் பெண்டாட்டி செல்வச் சீமாட்டியில்லையா..? அவள் வாழும் வீடு செல்வர்கள் வாழும் வீடில்லையா..? அவள் பெறும் குழந்தைக்கு.. தங்கக் கிண்ணத்தில்தானே பால்சாதம் ஊட்டுவார்கள்.. '
'வேண்டாம் ஊர்மிளா.. பாட்டை நிறுத்திவிட்டு என்னுடன் வந்துவிடு..'
அவள் கைபிடித்து இழுக்கலாம் போல அவனுக்குள் வேகம் ஏற்பட்டது.. இப்போது பாடும் ஊர்மிளா.. ஒரு வார காலமாக அவனுடன் ஒன்றி வாழ்ந்த ஊர்மிளாவாக இல்லை என்று அவனது உள்மனது கூறியது..
"கண்ணீரில் உப்பிட்டு..
             காவேரி நீரிட்டு..
    கலயங்கள் ஆடுது சோறின்றி..
             இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி.."
சோமசுந்தரத்தின் துயரம் சொல்லுக்குள் அடங்காத தாய் இருந்ததில் பூங்குழலி கைவேலையை போட்டு விட்டு ஹாலுக்கு ஓடி வந்தாள்.. புதுமணத் தம்பதிகளைப் பார்க்க வந்திருந்தவர்கள் ஆங்காங்கே வாகாக உட்கார்ந்து பாட்டுக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்ததைக் கண்டவளுக்கு சுவரில் தலையை 'ணங்..ணங்..'கென்று மோதிக் கொள்ளலாம் போல இருந்தது..
"ஏங்க.. என்னங்க நடக்குது இங்கே..?"
சேலை முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு மருமகளின் எதிரே வராமல் சுவர் மறைவிலிருந்த படியே கணவரை அதட்டிய பூங்குழலியைப் பார்த்த நரேந்திரனுக்கு இறைவன் எப்படியெல்லாம் ஜோடி சேர்த்து வைக்கிறார் என்ற வியப்பு ஏற்ப்பட்டது..
பொதுவுடைமைக் கொள்கையையும்... சமத்து வத்தையும் பற்றிப் பேசும் சோமசுந்தரத்திற்கு இப்படியொரு சாத்வீகமான மனைவி..!
'மனிதர் கெட்டிக்காரர்..' நரேந்திரன் பல்லைக் கடித்தான்..
'இவர் மட்டும் பொறுமையின் பூசணமா இருக்கிற பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்துவாராம்... என் பெண்டாட்டியை மட்டும் கொள்கை.. கொள்கைன்னு உருவேத்தி வைப்பாராம்.. அந்தக் கொள்கையை என் மாமியாருக்கு இவர் சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே..'
பூங்குழலியின் கேள்வியில் பாடலில் இருந்து வெளிவந்த சோமசுந்தரம்... மனைவியைப் பார்த்து புன்னகைத்தார்..
"ஒன்னுமில்லை குழலி.. நாம சின்ன வயசில பாடின பாட்டை ஊர்மிளா ஞாபகப் படுத்திட்டாப்புல.."
"அதுக்கு..? பாட்டுக் கச்சேரி நடத்துவீங்களா..? பெங்களூரில இருந்து காரில வந்திருக்கிறவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு நினைச்சுப் பார்க்க மாட்டிங்களா..?"
"நானாடி வேண்டாம்ன்னு சொன்னேன்..?"
"அதையும் சொல்லிப் பார்த்திருங்களேன்.."
பூங்குழலியின் ஆட்சேபத்தில்... சோமசுந்தரம் பாடத்தையும்.. பாட்டையும் விட்டு வெளியே வந்து ஊர்மிளாவை விடுவித்தார்.. வந்திருந்த விருந்தினரிடம் உபசாரமாக ஓரிரு வார்த்தைகள் பேசி அனுப்பிவைத்தாள் ஊர்மிளா..
"உனக்குத்தான் இது உன் வீடு.. மாப்பிள்ளைக்கு அப்படியா ஊர்மிளா..? இது அவருடைய மாமனார் வீடில்லையா..? நீதானே அவரைக் கவனிச்சுக்கனும்.. வந்தவரை அழைத்துக்கிட்டுப் போய் ரெஸ்ட் எடுக்க வைக்காம நீயும் உன் அப்பாகூடச் சேர்ந்துக்கிட்டு கூத்தடிக்கிற..?"
பூங்குழலி ஊர்மிளாவைக் கடிந்து கொண்டாள்.. சோமசுந்தரத்தின் பிரச்சாரத்தை அவள் 'கூத்தடிப்பது..' என்று சொன்ன ஒரே காரணத்திற்காகவே நரேந்திரனுக்கு அவள்மீது பெற்ற தாயைப் போன்ற பாசம் ஏற்பட்டு விட்டது..
"பாவம்டி உங்கம்மா.. உங்கப்பாகிட்ட மாட்டிக்கிட்டு விழிக்கிறாங்க.."
தனி அறைக்குப் போய் கதவை அடைத்ததும்.. விடுதலை உணர்வுடன் கட்டிலில் சரிந்த நரேந்திரன் கூறினான்..
"எப்படி..? நான் உங்களிடம் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே.. அது போலவா..?" ஊர்மிளா நிதானமாக கேட்டாள்..
"நீ என்னிடம் மாட்டிக்கிட்டு முழிக்கிறயா..?" நரேந்திரன் கடுமையாக கேட்டான்..
"பின்னே..? இல்லையா..?"
அவன் முகம் பார்க்காமல் பெட்டியிலிருந்த அவனுடைய துணிகளை எடுத்து சுவர் அலமாரியில் அடுக்கியபடி சொன்னாள் ஊர்மிளா..
"நானும் அப்போப் பிடிச்சு உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேண்டி.. நீ.. நீயாவே இல்லை.." குற்றம் சாட்டினான் நரேந்திரன்..
"நான் எப்பவுமே நானாத்தான் இருப்பேங்க... அதில உங்களுக்கு எந்தவிதமான டவுட்டும் வேண்டாம்... இங்கே வந்ததில இயல்பான என் குணங்கள் வெளியே வந்திருக்கலாம் இதை மாறிப் போனதா நீங்க சொல்வீங்களா..?"
சுவர் அலமாரியை மூடிவிட்டு அவள் திரும்பினாள்.. ஒட்டாத குரலில் பேசிய மனைவியை கோபத்துடன் இழுத்தான் நரேந்திரன்.. அவன் கை வளைவில்
அவள் விழுந்தாள்... அவன் குனிந்தான்.. அவள் முகத்தோடு முகம் வைத்த அவன் கோபத்தில் அவள் பேச்சிழந்து போனாள்..
"நீ என்னோட பெண்டாட்டி ஊர்மிளா.."
விலகிப் படுத்தவனின் கோபம் தனிந்திருந்தது.. ஊர்மிளா புரண்டு.. ஒருக்களித்துப் படுத்து அவன் முகம் பார்த்தபடி..
"இல்லேன்னு யார் சொன்னது..?" என்று கேட்டாள்..
"உனக்கெதுக்கு இந்தப் பாட்டெல்லாம்..?"
"புரியலை.. இது என் ரத்தத்தில் ஊறினது.. விட முடியாதது.."
"நரேந்திரனோட பெண்டாட்டியோட லெவலே வேற ஊர்மிளா.. இப்படிக் கண்ணாடி வளையலையும்.. கஞ்சியில்லாத கலயங்களையும் நீ பாடக்கூடாது.."
"அதை நீங்க சொல்லக் கூடாது.."
"ஊர்மிளா.."
"அப்பா கொள்கை சொல்கிற விதம் வேணும்னா முரட்டுத்தனமா இருக்கலாம்.. அவர் கொள்கையிலே குறையேதும் இல்லை.. இது வர்க்கப் போராட்டம்..
நீங்க மேல்தட்டு வர்க்கத்தில பிறந்து வளர்ந்தவங்க.. உங்களுக்கு உழைப்பாளிகளின் பட்டினிப் போராட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது.."
"ச்சே..! நாம புதுசாக் கல்யாணமான ஜோடியாடி..?"
நரேந்திரனுக்கு வெறுத்துப் போய்விட்டது.. எல்லாம் தெரிந்துதான் அவன் ஊர்மிளாவைக் காதலித்தான்.. அவள்தான் வேண்டும் என்று உண்மையை மறைத்து திருமணமும் செய்து கொண்டான்.. இருந்தும்.. வாழ்ந்து பார்க்கும்போது எதிர்மறைத் துருவங்களின் மத்தியில் ஈர்ப்பை விட போராட்டமே அதிகமாக இருப்பதைப் போல அவனக்குத் தோன்றியது..
"அதுக்குள்ளே நான் அலுத்துப் போயிட்டேனில்ல..?"
ஊர்மிளா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. அவளைச் சமாதானப் படுத்தி இயல்பாக பேச வைப்பதற்குள் நரேந்திரனுக்கு போதும்.. போதுமென்று ஆகிவிட்டது..
"என்னடி இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிற..? அப்படி அந்தப் பாட்டில என்னதாண்டி இருக்கு..?"
"எவ்வளவோ இருக்கு.. உங்களுக்குத்தான் அந்தப் பாட்டோட சித்தாந்தம் என்னன்னு புரியலை.."
நரேந்திரன் அந்தச் சிந்தாந்தத்தைப் பற்றிய விளக்கம் எதையும் கேட்கவில்லை.. அப்போதைக்கு அவள் வழியில் விட்டுப் பிடிப்பதுதான் போர் நிறுத்தத்திற்கான ஒரே வழி என்று எதுவும் பேசாமல் இருந்து விட்டான்..
பூங்குழலி விதம்.. விதமாக அவர்களுக்கு விருந்து சமைத்துப் போட்டாள்.. நரேந்திரனும்.. ஊர்மிளாவும்.. ஏற்கனெவே அவர்கள் இருவரும் சேர்ந்து சுற்றிய திருச்சியை திரும்பவும் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.. உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குப் போனபோது..
"இங்கதாண்டி உன்னை முதன் முதலா பார்த்தேன்.." என்றான் நரேந்திரன்..
ஊர்மிளாவின் விழிகளிலும் அந்த நினைவு மிதந்தது.. அவளது பார்வை.. அங்கே அவர்கள் அமர்ந்திருந்த ஒவ்வொரு இடத்தையும் வருடிக் கொடுத்தது..
மென்மையாகி விட்ட மனைவியின் முகம் பார்த்தவன்..
"நீ என்னைக் காதலிக்கிறதானே ஊர்மிளா..?" என்று கேட்டு வைத்தான்..
ஊர்மிளா அவனை முறைத்தாள்.. அதில் தெரிந்த உரிமையான கோபத்தில் அவன் மனம் ஊஞ்சலாடியது..
கல்லணையில் அவளுடன் கை கோர்த்து நடந்த போது அவள் அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள்..
"இந்த உலகத்திலேயே நான் அதிகமாக நேசிக்கிறது யாரைன்னு தெரியுமா..?" என்று கேட்டாள்..
"தெரியுமே.. உங்க அப்பா.. அதற்கடுத்து உன் அம்மா.." என்றான் நரேந்திரன்..
"இல்லை.." ஆழ்ந்த குரலில் சொன்னாள் ஊர்மிளா..
"பின்னே..?" நரேந்திரனின் முகத்தில் வெளிச்சம் பரவியது.. அவன் அவளையே ஊன்றிப் பார்த்தான்.. அவள் விழிகளில் தெரிந்த அளவு கடந்த காதல் அவனுக்கு இனிப்பானதாக இருந்தது.. அந்த கொள்கை பேசும் பிடிவாதக்காரியின் மனதில் எந்த அளவுக்கு அவன் இடம் பிடித்திருக்கிறான் என்பதை அவன் அறிய விரும்பினான்..
"இந்த உலகத்திலேயே நான் அதிகமா நேசிக்கிறது உங்களைத்தான் நரேன்.. இந்த பிரபஞ்சத்தை விடப் பெரிதாக நான் நினைப்பது உங்கள் மேல் நான் வைத்திருக்கும் காதலைத்தான்.."
"போடி.. முதலாளி வர்க்கத்தை தொழிலாள வர்க்கம் காதலிக்குதாம்.. இதை என்னை நம்பச் சொல்கிறயா..?"
"நம்பித்தான் ஆகனும்.. நீங்க முதலாளி வர்க்கம்ன்னு தெரியாமல்தான் நான் காதலிச்சேன்.. நீங்க தொழிலாள வர்க்கம்ன்னு நினைச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.. ஆனா நரேன்.. அது பொய்யாய் போன பின்னாலும் உங்களை பொய்காரன்னு என்னால நினைக்க முடியலை.. அதுதான் உங்கள்மேல் நான் வைத்திருக்கும் அளவு கடந்த காதல்.."
அதைச் சொல்லிய போது ஊர்மிளாவின் விழிகளில் மின்னிய அந்த அளவு கடந்த காதலை உணர்ந்தான் நரேந்திரன்..
அவனைவிடவும் அதிகமாக அவளால் காதலிக்க முடியும் என்பதை அந்த நொடியில் அவள் அவனுக்கு உணர்த்தினாள்.. பெங்களூருக்குத் திரும்பிய பின்னால் அவன்மீதான அவளது காதல் அதிகரித்தது..
நரேந்திரன் அவளது ஆழ்ந்த காதலுக்கு அடிமையானான்.. அவள் போட்டு விடும் சட்டையின் பொத்தான்களைத் தொட்டு பார்ப்பதில் உள்ள இன்பத்தை அவனது ஸ்டேட்டஸ் கூடத் தந்து விடவில்லை..
அவள் கலைத்து விடும் தலைமுடியை வாரிவிட அவன் விரும்பியதில்லை.. கலைந்த தலை முடியில் அவனது கவர்ச்சி அதிகமாகி விட்டதாக அவள் சொக்கிப் போகும் போது அவனுக்குள் ஆண்மையின் கர்வம் பிரவாகமெடுத்தது..
அவன் கழுத்தை மாலையாக அவள் கரங்கள் வளைத்து இழுக்கும் போதெல்லாம் அவளிடம் தன்னை ஒப்புக் கொடுத்தான் நரேந்திரன்.. அவளின் காதலில் ஓர் ஆளுமை இருப்பதை உணர்ந்தான்..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -52
அழகான ராட்சசியே -52
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-52.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-52.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy