அழகான ராட்சசியே -50

50 நீயில்லாத வாழ்வு... நிலவில்லாத வானமென்ற அழகான ராட்சசி நீ.... மதிய உணவுக்கான மெனுவை அகல்யாவிடம் கேட்க வந்தாள் வனிதா.. அவளுக...


50
நீயில்லாத வாழ்வு...
நிலவில்லாத வானமென்ற
அழகான ராட்சசி நீ....


மதிய உணவுக்கான மெனுவை அகல்யாவிடம் கேட்க வந்தாள் வனிதா.. அவளுக்கு முகம் காட்டி.. ஹாலில் இருந்த அகன்று நீண்ட ஜன்னலின் திரையை விலக்கி தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா.. அதை பொருட்படுத்தாமல் இயல்பாக அவளருகில் போய் பேச வாய்திறந்த வனிதா பயந்து போனாள்..
'வீல்..'
தொண்டைக்கு வந்து விட்ட அலறலை தொண்டைக் குழியிலியே விரல் வைத்து.. திருநீலகண்டம் போல நிறுத்தி வைத்து விட்ட வனிதாவின் உடல் நடுங்கியது..
தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவின் முகம் அந்த அளவுக்கு பயங்கரமாக மாறியிருந்தது.. வனிதாவின் முதுகுத் தண்டு சில்லிட்டது.. அந்த நிலையில் அகல்யாவிடம் பேச்சுக் கொடுப்பது தவறு என்ற ஞானோதயத்துடன் அவள் சத்தமில்லாமல் பின் வாங்கினாள்.. அதே மனநிலையுடன் அடுக்களையில் அவளால் வேலை செய்ய முடியாது என்று தோன்றி விட.. பின்பக்க வாசலுக்குப் போய் படிக்கட்டில் உட்கார்ந்து நீண்ட மூச்சுக்களை விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்..
அந்த வீட்டில் அகல்யா வந்து போகாத இடம் அது..
வீட்டில் வேலை செய்பவர்களின் அறைகள்.. சமையலறையை ஒட்டிய பின்பக்க வாசலின் அருகில்தான் இருந்தன.. அங்கே வந்து நிற்பதினால் அவளது கௌரவம் குறையுமென்று நினைக்கும் ஆணவம் பிடித்தவள் அகல்யா..
"என்ன வனிதா.. இங்கே உட்கார்ந்திருக்கிற..?"
டிரைவர் ரமேஷ் ஆர்வமாக அவளை உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை பார்வையிட்டபடி கேட்டான்.. வனிதா நிமிர்ந்து பார்த்தாள்.. லேசர் போல அவளைத் துளைத்த அவனது பார்வையில் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டாள்.. மேயும் அவனது பார்வையில் அவளுக்கு விருப்பம்தான் என்றாலும்... அதை வெளிக்காட்டிக் கொண்டால் ரமேஷிற்கு அவளால் போக்குக் காட்ட முடியாது என்பதினால் அதில் விருப்பமில்லாதவளைப் போலக் காட்டிக் கொள்வாள்..
'இவனுக்கெல்லாம் உடனே 'ஊம்'ன்னு தலையை ஆட்டி கழுத்தை நீட்டிட்டா இளக்காரமா போயிடும்.. சுத்த விடனும்.. இந்த வனிதாதான் வேணும்னு ஏங்க விடனும்.. இவ கிடைக்கிறது பெரிய வரம்ன்னு நினைக்க வைக்கனும்.. அதுக்கப்புறம்தான் சம்மதம் சொல்லனும்.. அப்பத்தான் காலத்துக்கும் இவன்.. என் பொண்டாட்டியப் போல உண்டுமான்னு என்னைக் கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துக்குவான்..'
வனிதா கெட்டிக்காரி.. மனிதர்களை எடை போட்டு காய் நகர்த்துவதில் வல்லவள்.. அந்த வகையில் அவள் அகல்யாவைவிட திறமைசாலி.. ஒரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் வனிதா தன் வாழ்க்கையில் மட்டுமே காய் நகர்த்துவாள்.. அதுவும் அடுத்தவரின் நலனைப் பாதிக்காமல்.. அவளது நலனை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு காய் நகர்த்துவாள்.. அகல்யா அப்படியல்ல.. அவளது நலனே பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை.. அடுத்தவரை வாழ விடக் கூடாது என்ற ஆங்காரத்தோடு காய் நகர்த்துவாள்..
வனிதாவுக்கு நல்ல மனது.. அகல்யாவோ.. அதை கிலோ என்ன விலை என்று கேட்பவள்..
ரமேஷின் ஆசைப் பார்வையை விரும்பாதவளைப் போல முகத்தில் முள்ளைக் கட்டிக் கொண்டு..
"ஏனாம்..? இங்கே வந்து உட்காரக் கூடாதுன்னு சட்டம் போட்டிருக்கியா..?" என்று கேட்டாள்..
"நீ வந்து உட்கார இந்த வாசப்படி கொடுத்து வைச்சிருக்கனும் வனிதா.. அது கூடாதுன்னு சட்டம் போட்டிருந்தா.. உனக்காக அதை உடைக்கிற முத
ஆள் நானாத்தான் இருப்பேன்.. இதில நான் சட்டம் போட்டுட்டேன்னு ஒரு வார்த்தய சொல்லிட்டயே வனிதா.. என் மனசே தாங்கலை.." ரமேஷ் நெஞ்சைப் பிடித்துக் கொள்வதைப் போல நடித்தான்..
"போதும் போ.."
வனிதா மனதிற்குள் அவன் நடிப்பை ரசித்தபடி.. வெளியே சிடுசிடுத்தாள்.. அவன் அதை கண்டு கொள்ளாமல் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.. வனிதா நகர்ந்து உட்காருவதைப் போல உடலை அசைத்தாள்.. கடுகளவு இடம் கூட அவள் நகரவில்லை என்பதே உண்மை.. ஆனாலும் ரமேஷ் ஏக்கப்பட்டுப் போனான்..
"ஏன் வனிதா தள்ளி உட்காருகிற..?"
"பின்னே.. உன்கூட ஒட்டி உரசியா உட்கார முடியும்..?"
"உட்கார்ந்தாத்தான் என்ன..?"
"உனக்கு ஒன்னுமில்லேய்யா.. எனக்குத்தான் எல்லாம்.."
"எல்லாம்ன்னா..?"
"சேலையில முள்ளுப் பட்டாலும்.. முள்ளு மேலே சேலை பட்டாலும் சேதம் சேலைக்குத்தான்ய்யா.."
"கருப்பு.. வெள்ளை சினிமாவை அதிகமா பார்க்காதேன்னா கேட்கறியா வனிதா.."
"ஓஹோ..! ஐயா என்னை ஓட்டறிங்களாக்கும்.. இப்ப என்ன சொல்ல வர்ற..? என்னைப் பாத்தா பாட்டி மாதிரி இருக்குன்னு சொல்ல வர்றியா..?"
உஷ்ணமாக கேட்ட வனிதாவை ஊன்றிப் பார்த்தான் ரமேஷ்...
அவளின் தளதளப்பான தக்காளிப்பழம் போன்ற செழுமையான மேனியழகில் இஞ்சிதின்ற குரங்கைப் போல பல்லைக் கடித்தான்..
"உன்னப் பாத்தா பாட்டி போல இருக்குன்னு பாட்டன் கூடச் சொல்ல மாட்டான்.. அப்படியே தக்காளிப்பழம் போல செவசெவன்னு இருக்கே கண்ணு.."
"கண்ணு மூக்குன்ன.. எனக்கு கெட்ட கோபம் வரும்.. இதையெல்லாம் வேற எங்கேயாச்சும் வைச்சுக்க.."
"உன்கிட்ட வைச்சுக்காம வேற யாருகிட்ட வைச்சுக்குவேன் வனிதா..? நம்ம ஐயாவைப் பாரு.. காதல் கல்யாணம்.. தோட்டத்திலே சரசம் பேசிக்கிட்டு இருக்காரு.. ம்ஹீம்.. நீயும் இருக்கியே.. ஒரு வார்த்தை பேச விடறியா..?"
"இரு.. இரு.. இப்ப என்ன சொன்ன..?"
ரமேஷ் சொன்னதை திரும்பச் சொன்னான்.. வனிதா அவசரமாக எழுந்து போய் மறைவாக நின்று தோட்டத்தைப் பார்த்தாள்.. அங்கேயிருந்த சோபா ஊஞ்சலில் ஊர்மிளாவின் விரல்களைப் பற்றிச் சொடுக்கெடுத்து விட்டபடி தாழ்நத குரலில் பேசிக் கொண்டிருந்தான் நரேந்திரன்..
'இவங்களைத்தான் அந்தம்மா பாத்துக்கிட்டு இருந்துச்சா..?'
வனிதாவிற்கு 'திக்' கென்று இருந்தது.. அகல்யாவின் பயங்கரமான பார்வையை அவள் நினைத்துப் பார்த்தாள்... அவள் சும்மா பார்த்தாலே எதிராளியின் கதி அதோகதியாகிவிடும்.. அந்த அளவுக்கு வன்மத்துடன் பார்த்தால்..?
"பாவம்.. ஊர்மிளாம்மா..?"
வனிதாவின் இதழ்கள் தன்னிச்சையாக முணு முணுத்தன.. அவளை விசித்திரமாகப் பார்த்தான் ரமேஷ்..
"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு வனிதா.."
"இந்த வீட்டில வேலை செஞ்சா இன்னும் கொஞ்ச நாளில அதுதான் பிடிக்கப் போகுதுய்யா.."
"உளராதே.. நல்ல சம்பளம்.. நிலையான வேலை.. இதைப் போய் குறைச்சுப் பேசறியே.."
"சம்பளம் கிடைச்சாப் போதுமா..?"
"வேறென்ன கிடைக்கனும்..?"
"நிம்மதி கிடைக்கனும்.."
வனிதாவின் கண்கள் லேசாக கலங்கின.. ரமேஷ் உருகிவிட்டான்.. அதுநாள்வரை வனிதா அவனிடம் அந்த அளவுக்கு மனம் விட்டுப் பேசியதில்லை.. அவனைக் கண்டாலே சிடுசிடுப்பாள்..
"உன் மனசில என்னதான் இருக்கு வனிதா..? ஊர்மிளாம்மா இப்பத்தான் கல்யாணமாகி புதுப்பெண்ணா இந்த வீட்டுக்குள்ள காலடி வைச்சிருக்காங்க..
காதல் கல்யாணம்.. நம்ம ஐயா அவங்கமேலே உசிரா இருக்கிறாரு.. இப்பக்கூடப் பாரு.. ரெண்டுபேரும் தோட்டத்திலே டூயட் பாடிக்கிட்டு இருக்காங்க.. நீ என்னடான்னா ஊர்மிளாம்மாவை பாவம்ன்னு சொல்கிற.. அவங்க இந்த வீட்டுக்கு முதலாளியம்மா வனிதா.. நீ சமையல் வேலையை செய்கிறவ.. நீ போய் அவங்களைப் பாவம்ன்னு சொன்னா.. சிரிக்கிறதா.. இல்லை அழுகிறதான்னு தெரியலை வனிதா.. உன்னைக் குறைச்சுப் பேசறேன்னு நினைக்காதே.. உண்மை நிலைமையைச் சொன்னேன்.. அவங்க சம்பளம் கொடுக்கிறவங்க.. நாம அவங்ககிட்ட சம்பளம் வாங்கறவங்க.. இதில யார் மேல யார் பரிதாபப் படறது..?"
"போய்யா.. நீ வேற.."
வனிதா உதட்டைச் சுழித்து ஒரு விதமாக சிரித்தாள்.. அதில் சிருங்காரம் வெளிப்படவில்லை.. மாறாக.. பெண் சித்தர் போன்ற ஞானம்தான் வெளிப்பட்டது..
'என்ன இவ.. இப்படிச் சிரிச்சு வைக்கிறா..?'
ரமேஷீக்குள் பயம் தோன்றியது.. ஏதோ ஒரு திரைப்படத்தில் விவேக்.. கோவை சரளாவை திருமணம் செய்து கொண்டு.. கடவுள்.. விரதம்.. பக்தி மார்க்கம் என்று.. புது மனைவியின்மீது விரல் கூடப் படமுடியாமல்.. முதலிரவு காணாமல் படும் பாட்டைச் சொல்லும் படக்காட்சிகள் அவன் மனதில் வரிசைகட்டிக் கொண்டு ஓடின..
'இவ கழுத்தில தாலியைக் கட்டினா எனக்கும் அந்தக் கதிதானா..?' ரமேஷ் அரண்டு போனான்..
"வேணாம் வனிதா.. இப்படிச் சிரிச்சு வைக்காதே.. இதுக்கு நீ முறைக்கிறதே நல்லா இருக்கு.." அவன் இறைஞ்சினான்..
"யோவ்..! ஊர்மிளாம்மா நமக்கு சம்பளம் கொடுக்கிற முதலாளியம்மாவா இன்னைக்கு இருக்கலாம்.. என்னைக்கும் அவங்க இதே நிலைமையிலேயே இருக்கனுமில்ல.. அது சந்தேகம்தான்.. அதே சமயம்.. அவங்ககிட்ட கைநீட்டிச் சம்பளம் வாங்கற நீயும்.. நானும் இதே வேலையிலே நிலைச்சு நிற்போம்.." வனிதா எங்கோ பார்த்தபடி சொன்னாள்..
"என்ன வனிதா.. என்னென்னவோ சொல்கிற..?"
"ஆமாய்யா.. உன்கிட்டேயும்.. என்கிட்டேயும்.. தொழில்திறமை இருக்கு.. நாம எங்கே போனாலும் பிழைச்சுக்குவோம்.. இவங்களைப் போல சம்பளம் கொடுக்கிற முதலாளிகள் ஆயிரம் பேரு நமக்குக் கிடைப்பாங்க.. ஆனா நம்மளைப் போல வேலை
தெரிஞ்ச திறமைசாலிக இவங்களுக்கு கிடைக்க மாட்டாங்க.. அதனால.. உனக்கும் எனக்கும்.. வேலை நிலைச்சிருக்கும்.. ஆனா.. ஊர்மிளாம்மா..?"
"அவங்களுக்கென்னடி.. அவங்க ஐயாவோட பெண்டாட்டி.."
"அதனாலதான்ய்யா சொல்றேன்.. அவங்களை இந்த வீட்டில முதலாளியம்மாவா நிலைச்சு வாழ அகல்யாம்மா விடுவாங்களா..?"
"வனிதா..!"
ரமேஷ் உறைந்து போனான்.. வனிதா சொன்னதைப் போல அந்த வீட்டில் எந்த வேலையாளும் நிலைத்து வேலை செய்ததில்லை.. ஏதாவது ஒரு காரணத்தால் அகல்யாவின் கோபத்துக்கு ஆளாகி விலக்கப்பட்டு விடுவார்கள்.. மற்ற வேலைகளுக்கு மாதத்திற்கு ஒரு ஆள் வர.. சமையலுக்கும்.. டிரைவர் வேலைக்கும் ஆள் மாற்றப்படாமல் வனிதாவும்.. ரமேஷீம் நிலைத் திருந்தார்கள்..
அவர்கள்மீது அகல்யாவிற்கு கோபம் வராமல் இருந்ததில்லை.. அவள் யார்மீதும் அன்பு கொள்ள மாட்டாள்.. பாசம் காட்ட மாட்டாள்.. வனிதாவின் சேவையையும்.. ரமேஷின் விசுவாசத்தையும் மெச்சி அவள் அவர்களை வேலையில் நீடிக்க விடவில்லை.. அவர்களின் வேலைத் திறமை அப்படிப்பட்டது..
வனிதாவின் சமையல் ருசியை வேறு எவராலும் கொடுத்து விட முடியாது.. ஒரே நேரத்தில் நூறு பதார்த்தாங்களைச் சமைக்கச் சொன்னாலும் முகம் சுளிக்காமல் சமைப்பாள்.. திடிரென்று வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு பண்ணினாலும் மலைக்காமல் சமாளிப்பாள்.. அப்படிப்பட்ட சமையல்காரியை கை நழுவ விட அகல்யா என்ன முட்டாளா..?
ரமேஷ் திறமையான காரோட்டி.. பெங்களூரின் போக்குவரத்து நெரிசலிலும் சரி.. சென்னையின் போக்கு வரத்து நெருக்கடியிலும் சரி.. திறமையாக வளைந்து.. நெளிந்து விரைவாக காரை ஓட்டுவதில் வல்லவன்.. இரவு பகல் பார்க்காமல்.. இரண்டுநாள்கள் கூட தொடர்ந்து காரை ஓட்ட வேண்டி வந்தாலும் ஓட்டுவான்.. அப்பேற்பட்ட காரோட்டியை கழட்டி விட அகல்யாவுக்கு என்ன மறை கழண்டு விட்டதா..?
அவள் அவர்களை வேலையிலிருந்து ஒரு நாளும் தூக்க மாட்டாள்..
"என்னவோ போய்யா.. இவங்க செய்கிறதைப் பார்க்கப்பார்க்க மனுசங்க மேலேயே எனக்கு நம்பிக்கை அத்துப் போச்சு.."
"நீயும் மனுசிதான் வனிதா.."
"நானும் மாறிப் போயிருவேனோன்னு பயமாய் இருக்குய்யா.. காதிருந்தும் செவிடா.. வாயிருந்தும் ஊமையா.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் காலம் கழிக்கிறது..? என் மனசும் ஈரமில்லாம வறண்டு போச்சுண்ணா.. நான் பொழைக்கிற பொழைப்புக்கே அர்த்தமில்லாம போயிரும்ய்யா.."
வனிதாவின் குரல் தழதழத்தது.. ரமேஷிற்கு
அவளது மன நெகிழ்வை பார்க்கும் போது நெகிழ்வாக இருந்தது.. அவளை மார்பில் சாய்த்து ஆறுதல் சொல்ல அவன் ஆசைப்பட்டான்.. அவள் காதோரமாக தேறுதல் மொழிகளைக் கூற வேண்டுமென்று எண்ணம் கொண்டான்.. அவள் முடிகோதி அமைதிப்படுத்த வேண்டும்.. உன் மனதில் ஈரம் வற்றி விடாது என்று சொல்ல வேண்டும்.. என்னென்னவோ எண்ணம் கொண்டு அவளை நெருங்க முனைந்தபோது அவள் சுதாரித்துக் கொண்டு விலகி நின்றாள்..
"கொஞ்சம் நின்னு பேசிட்டாப் போதுமே.. சந்தடி சாக்கிலே சந்துக்குள்ள சிந்து பாட வந்துருவியே.."
"பாடினாத்தான் என்னவாம்..?"
"இதுக்குப் பதிலை அப்பவே சொல்லியாச்சு.. நகரு.. நான் போகனும்.."
"எங்கே வனிதா..?"
"ஊம்..? பெங்களூரில இருக்கோமில்ல.. பார்க்குக்குப் போகப் போறேன்.. ஆளைப்பாரு.. சமையல்காரி எங்கே போவா..? சமையல் ரூமுக்குத்தான் போவா.."
"இப்பவே போய் என்ன செய்யப் போற..?"
"சமையலைத்தான் செய்யப் போறேன்.."
வனிதா பின்னலை விசிறியபடி படிகளில் ஏறினாள்.. அவள் மனம் அவளை அங்கேயே தேங்கச் சொன்னது.. 'அவனுடன் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிரு' என்றது.. அவள் மனதை உணர்ந்தவனைப் போல.. அவன்..
"இன்னும் கொஞ்சநேரம்..
             இருந்தாத்தான் என்ன..?
    என்ன அவசரம்..? என்ன அவசரம்..?
             சொல்லு புள்ள..?"
என்று பாடினான்.. வனிதாவின் மனதில் சாரல் அடித்தது.. அவள் இதழ்களில் உதித்த கள்ளச்சிரிப்பை அவன் அறிய மாட்டான்.. உல்லாசமாய் அவள் முகம் மாறியதை அவன் உணரா வண்ணம் முகம் திருப்பியபடி சமையலறைக்குள் சென்றவளின் மனதில் உற்சாகம் நிரம்பியிருந்தது..
ஏதோ ஒரு பாடலை வாய் முணுமுணுக்க.. தன் போக்கில் மதிய உணவை செய்து முடித்தவள்.. சமையலறையை விட்டு வெளியே வந்தபோது.. அகல்யா அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்..
'இன்னுமா ஐயாவும்.. ஊர்மிளாம்மாவும் தோட்டத்தில இருக்காங்க..?'
வனிதா நினைத்து முடிக்கவில்லை.. நரேந்திரனும்.. ஊர்மிளாவும் இனைந்து பேசிச் சிரித்தபடி உள்ளே வந்தார்கள்.. அங்கே அகல்யா நின்று கொண்டிருப்பதைக் கவனிக்காமல் மாடிப் படிகளில் ஏறினார்கள்.. வனிதா கண்களை இறுக மூடிக் கொண்டாள்.. அவள் மனதில் துயரம் வந்தது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,97,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,32,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,237,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -50
அழகான ராட்சசியே -50
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-50.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-50.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy