அழகான ராட்சசியே -49

49 என் நெஞ்சில் குடியிருந்து என் ராத்தூக்கத்தை விரட்டிவிடும் அழகான ராட்சசி நீ.... "ஹனி மூனுக்கா.. ? நரேந்திரனா.. ? நோ சா...


49
என் நெஞ்சில் குடியிருந்து
என் ராத்தூக்கத்தை விரட்டிவிடும்
அழகான ராட்சசி நீ....


"ஹனி மூனுக்கா..? நரேந்திரனா..? நோ சான்ஸ்.." என்றாள் அகல்யா..
இவள் வாயிலிருந்த ஒற்றை விரலை எப்போது எடுத்தாள் என்ற கேள்வியை கண்களில் தேக்கி முகச் சுளிப்புடன் அவளை ஓர் பார்வை பார்த்து வைத்தார் சோமசுந்தரம்..
'இப்படியா ஒரு மகராசி.. புதிதாக கல்யாணமான இளம் ஜோடியை சந்தோசமாக இருக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டுவாள்..?'
அதை அகல்யா வெளிப்படையாக காட்டிக் கொண்டதுதான் சோமசுந்தரத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.. அந்த வகையில் அவள் நடிக்கவில்லை.. அவளுடைய அசாத்திய தைரியத்தை மனதுக்குள் மெச்சாமல் அவரால் இருக்க முடியவில்லை..
"நோ சான்ஸ்ன்னு நான் உங்களிடம் சொன்னேனா..?" நரேந்திரன் நிதானமாக அகல்யாவிடம் வினவினான்..
"இல்லேப்பா.. உனக்கே மூச்சு விடக்கூட நேரமில்லாத வேலை.."
"எப்பவும் அப்படியே இருக்க முடியாதும்மா.. நான் மேரேஜீக்கு டேட் பிக்ஸ் பண்ணி மண்டபத்தை புக் பண்ணிய போதே ஹனிமூனுக்கும் டேட் பிக்ஸ் பண்ணி ஆஸ்திரேலியாவில் ஹனிமூன் சூட்டை புக் பண்ணிட்டேன்.."
'ஆஸ்திரேலியாவா..?'
அகல்யா பொறாமையுடன் ஊர்மிளாவை பார்த்தாள்.. அவள் மனதில் பொறாமையின் தீ சுழன்று கனன்றது.. அவளுக்குக் கிடைக்காத வெளிநாட்டுப் பயணம் ஊர்மிளாவுக்கு கிடைப்பதா..?
அகல்யா அதுநாள்வரை வெளிநாட்டிற்குப் போனதே இல்லை..
பூங்குழலி பெருமையுடன் மகளைப் பார்த்தாள்.. ஊர்மிளா லஜ்ஜையுடன் கைவிரல் நகங்களை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தாள்.. ஆஸ்திரேலிய பயணம் என்பது அரிதான ஒன்று என்றாலும் அதற்காக அவள் சந்தோசப்பட்டு விடவில்லை.. நரேந்திரனுடன் எங்கே யிருந்தாலும் அவள் சந்தோசமாகவே இருப்பாள்.. அது தமிழ்நாட்டிலுள்ள ஒரு குக்கிராமமாக இருந்தாலும் சரி..
அதைப்பற்றியெல்லாம் அகல்யாவுக்கு என்ன தெரியும்..? அவள் வாழ்க்கையை வசதிகளைக் கொண்டு அளவிடுபவள்.. ஊர்மிளாவின் மனதை அவள் எப்படி அறிவாள்..?
"பரவாயில்லை.. நான்கூட உங்களை என்னவோன்னு நினைச்சேன்.." என்றார் சோமசுந்தரம்..
'இப்படியொரு பாராட்டை நான் கேட்டேனா..?'
மனைவியைப் பார்த்து விழிகளால் கேட்ட நரேந்திரன்..
'இந்த மனிதர் என்னை எப்படின்னு நினைத்தார்..?' என்று குழம்பிப் போனான்..
அதை அவரிடம் நேரடியாகக் கேட்டு விடலா மென்றால் அவர் எக்குத்தப்பாக எதையாவது சொல்லி வைத்து விடும் அபாயம் இருந்ததால் மௌனமாக இருப்பதே சாலச்சிறந்தது என்று மௌனமாக அவன் பேச்சைக் கவனிப்பதைப் போல பாவனை செய்தான்..
"ஹனிமூனுக்கு நீங்க போகிறதில ரொம்ப சந்தோசம்.."
"நான் மட்டும் போகலைங்க.. உங்க மகளையும் கூட அழைத்துக்கிட்டுத்தான் போகிறேன்.."
"நீங்க மட்டும் தனியாப் போனா அது ஹனிமூன் இல்லைங்க.. அது பிஸினெஸ் டிரிப்... என் மககூடப் போனாத்தான் அது ஹனிமூன்.. என்ன குழலி நான் சொல்கிறது..?"
இதிலும் நரேந்திரனை வாரிவிட்டு சோமசுந்தரம் மனைவியிடம் அபிப்ராயம் கேட்க.. அவள் திருச்சிக்கு வாங்க.. அங்கே இருக்கு உங்களுக்கு என்று ஜாடை செய்தாள்..
பூங்குழலியின் ஜாடையில் சோமசுந்தரம் தற்காலிகமாக வாருதலை நிறத்தினார்.. இப்படிப்பட்ட மாமனாருடன் இன்னும் எவ்வளவு நேரத்துக்குத்தான் கலந்துரையாட வேண்டி வருமோ என்ற கவலையுடன் கட்டிக் கொண்ட மனைவியை நரேந்திரன் பார்த்தான்.. அவளோ.. 'மூச்..' என்ற விழிகளால் அரட்டி அவனை இருந்த இடத்திலேயே அமர வைத்தாள்..
"ஆனாலும் பாருங்க.. நம்ம ஊரிலயே அழகழகா இடங்கள் இருக்க.. நீங்க எதுக்காக ஆஸ்திரேலியாவுக்கு போகனும்ங்கறேன்ன.. இதுதான் முதலாளித்துவ சிந்தனைங்கிறது.."
சோமசுந்தரம் ஆரம்பிக்க.. பூங்குழலி போச்சுடா என்று தலையில் கை வைத்தாள்..
'ஆரம்பிச்சுட்டாரா..?'
"இதிலே கூடவா முதலாளித்துவ சிந்தனையை தோண்டியெடுத்துப் பார்ப்பீங்க..?" முகம் மாறாமல் கேட்டு வைத்தான் நரேந்திரன்..
"பின்னே..? இதில பார்க்காம அண்ணன் வேற எதில பார்ப்பாரு..? இந்த விசயத்தில நான் அண்ணன் கட்சிதான்.. பெங்களூரில் இல்லாத எது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது..? என்ன அண்ணா நான் சொல்கிறது..?"
உற்சாகமாக உறவு கொண்டாடி சோமசுந்தரத்துடன் சகோதரத்துவ கூட்டணியைப் போட்டாள் அகல்யா..
"இங்கே இல்லாத எது ஆஸ்திரேலியாவில் இருக்குன்னு எனக்குத் தெரியாதுங்கம்மா.. ஆனா.. இங்கே இருக்கிற நீங்க.. அங்கே இருக்க மாட்டிங்க.. அது மட்டும் நிச்சயமாத் தெரியும்.." நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் சோமசுந்தரம்..
'இந்த ஆளுக்கு இருக்கிற நையாண்டியைப் பாரேன்.. இதான் நரிக்கு நாட்டாண்மை பதவி கிடைச்சா... கிடைக்கு ரெண்டு ஆடை கேட்கும்ங்கிறது..' அகல்யா பொருமினாள்..
"ஏங்க.. ஆஸ்திரேலியாவுக்குப் போனாலும்.. அமிஞ்சிக்கரைக்குப் போனாலும்.. அவங்கவங்க இஷ்டத்துக்கு போகிறாங்க.. இதில நாம தலையிடலாமா..? நீங்க வந்த வேலையைக் கவனிங்க.." எரிச்சலுடன் எடுத்துச் சொன்னாள் பூங்குழலி..
"அதைச் சொல்லு.. நான் சொன்னா மட்டும் கேட்டுக்கவா போறாங்க..? இதெல்லாம் வர்க்க பேதம் செய்கிற வேலை பூங்குழலி.. தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டி சேர்த்த பணத்தை முதலாளிவர்க்கம் எப்படி கரைக்கும்..? இப்படித்தான் கரைக்கும்.."
"வேணும்னா ஒரு மைக் செட்டைக் கொண்டு வரச் சொல்லட்டுமா..?"
"வேணாம்.. வேணாம்.. அது எதுக்கு தேவை யில்லாம.. என்னதான் உடம்பெல்லாம் எண்ணையைப் பூசிக்கிட்டு.. மணல் மேலே விழுந்து உருண்டு புரண்டாலும்.. ஒட்டுகிற மண்தான் ஒட்டும் பூங்குழலி.."
"இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க..?"
"மைக் பிடிச்சுப் பேசினாலும்.. அது இல்லாம பேசினாலும் ஏத்துக்கிற மனுசங்கதான் என் கருத்தை ஏத்துக்குவாங்க.."
"ஏன்..? அண்ணிதான் உங்க கருத்தை ஏத்துக் கறாங்களே.. அவங்ககிட்டே உங்க கருத்தைச் சொல்லிப் பார்க்கிறதுதானே..?"
சோமசுந்தரம் பண்ணிக் கொண்டிருந்த அழிச் சாட்டியத்தில் பூங்குழலி பல்லைக் கடித்தபடி அகல்யாவை கோர்த்து விட.. சோமசுந்தரம்
"ஏண்டி..?" என்றார்..
இதற்குப் பதிலாக என் முதுகில் நான்காயிரம் மொத்துக்களை மொத்தியிருக்கலாமே பூங்குழலி என்ற ஆற்றாமை அந்த ஒற்றை வார்த்தையான 'ஏண்டி'யில் ஒளிந்திருந்தது..
பூங்குழலி கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. அதற்கு மேலும் கொள்கைப் பேச்சைப் பேசிக் கொண்டிருக்க முடியாது என்பதை கண்டு கொண்ட சோமசுந்தரம்.. நரேந்திரனைப் பார்த்து..
"எப்ப வர்றீங்க..?" என்று கேட்டார்..
அந்தக் கேள்வியில் நரேந்திரன் திகைத்துப் போனான்.. அவர் எப்போது வருவீர்கள் என்று கேட்பதற்கு.. அவன் எங்கே கிளம்பிப் போனான்..?
அவன்தான் அவர் பண்ணுகிற அழும்புக்கெல்லாம் ஈடுகொடுத்தபடி ஆணியடித்ததைப் போல அவர் முன்னால் அசையாமல் உட்கார்ந்திருக்கிறானே..
"புரியலை.." என்றான் அவன்..
"உங்களுக்குப் புரியாதுதான்.. ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் கொண்டாடப் போகனும்னு புரிஞ்சிருக்கு.. கல்யாணம் ஆனவுடனே மறுவீட்டு விருந்துக்கு மாமனார் வீட்டுக்கு வரனும்கிறது மட்டும் புரியலை.. இதுக்குத்தான் முதலாளி வர்க்கத்துக்கு, தொழிலாளர் வர்க்கம் பெண் கொடுக்க கூடாதுங்கிறது.."
"ஏண்டி.. உங்க அப்பா இந்த வர்க்க பேத போராட்டத்தை ஏறக்கட்ட மாட்டாரா..?" ஊர்மிளாவின் பக்கமாக சரிந்து முணுமுணுத்தான் நரேந்திரன்..
அவள் முறைத்தாள்..
"அதுசரி.. யாரு நீ..? கொள்கைக்காக கொடிபிடிக்கிற சோமசுந்தரத்தோட மகளாச்சே.. இப்படித்தான் முறைப்ப.. ஏண்டி.. யாராவது மருமகனை மறுவீட்டு விருந்துக்கு இந்த லட்சணத்தில் அழைப்பாங்களா..?" நரேந்திரன் சன்னக் குரலில் கேட்டான்..
"எங்கப்பா அழைப்பார்..." அதே குரலில் முணுமுணுத்தாள் ஊர்மிளா..
மகளும்.. மருமகனும் கலந்துரையாடியதில் சோம சுந்தரம் தாடையைத் தடவியபடி அவர்களைப் பார்த்து விட்டு..
"என்னம்மா சொல்கிறாரு..?" என்று மகளிடம் விசாரித்தார்..
"நீங்க எப்ப வரச் சொல்றீங்களோ.. அப்பவே வந்து விடுகிறோம்ன்னு உங்களிடம் சொல்லச் சொல்லி சொல்லிக்கிட்டு இருக்காருப்பா.." என்றாள் அவரின் அருமை மகள்..
"ஏன்..? அதை அவர் சொல்ல மாட்டாரா..?"
"ஏன்ப்பா..? அதை நான் சொன்னா நீங்க கேட்டுக்க மாட்டிங்களா..?"
ஊர்மிளா மடக்கியதில் சோமசுந்தரம் மடங்கி விட்டார்..
"ஏன் கேட்டுக்க மாட்டேன்..? தாராளமா கேட்டுக்கு வேன்.. நாங்க திருச்சிக்கு கிளம்பிப் போகிறோம்.. நாளைக்கு மறுநாள் நீயும் மாப்பிள்ளையும் மறுவீட்டு விருந்துக்கு கிளம்பி வந்துருங்க.. அங்கே ஒரு வாரம் இருந்தாகனும்... உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லி வைச்சிரு... அப்புறமா அங்கேவந்து எனக்கு அங்கே வேலையிருக்க.. இங்கே வேலையிருக்குன்னு முதலாளித்துவ பேச்சையெல்லாம் பேசக்கூடாது.. ஆமாம்.. சொல்லிட்டேன்.."
"வாயே திறக்க மாட்டார்ப்பா.. அதுக்கு நான் கேரண்டி.."
ஊர்மிளா அளித்த உத்திரவாதத்தில் திருப்தியுற்றவர் களாக சோமசுந்தரமும்... பூங்குழலியும் கிளம்பிப் போனார்கள்.. அவர்கள் கிளம்பிப் போய் விட்ட திருப்தியில் அகல்யாவும் அவளுடைய அறையைத் தேடிக் கிளம்பிப் போனாள்.. ஊர்மிளா வாசல் பக்கமிருந்த தோட்டத்திற்கு நகர்ந்தாள் நரேந்திரன் அவளைத் தொடர்ந்து போனான்.. பூங்காவைப் போல அழகாக அமைக்கப் பட்டிருந்த தோட்டத்தில் நின்றிருந்தவளின் பின்னால் போய் வாசம் பிடித்தபடி..
"எந்த தைரியத்திலடி என் பேச்சுக்கு நீ கேரண்டி கொடுத்த..?" என்று கேட்டான்..
"நீங்க என் புருசன்ங்கிற தைரியத்திலதான்.." ஊர்மிளா அவனுடைய சட்டைக் காலரைப் பிடித்து தன் பக்கம் அவனை இழுத்தபடி அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள்..
அழகான அவள் முகத்தின் நீள் வடிவக் கண்களிலும் அதன் மேலிருந்த அடர்ந்த குடை போன்ற இமைகளிலும் மனம் மயங்கிப் போனான் நரேந்திரன்..
அவனைக் கட்டி இழுக்கும் அந்த பேரழகியிடம் தன்னை ஒப்புக் கொடுத்தான் அவன்.. ஊர்மிளாவின் கைகள் அவன் கழுத்தை வளைத்தன.. அவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..
அவளது ஈர இதழ்களின் ஸ்பரிசத்தில் நரேந்திரன் கிளர்ந்தான்.. அவளைச் சுற்றி வளைத்து தன்னருகில் இழுத்துக் கொண்டு பிணைந்தான்..
"அழகிடி.. நீ.." அவள் காதருகில் முணுமுணுத்தான்..
"உங்களை விடவா..?" அவள் மயங்கும் குரலில் வினவினாள்.. அவளது மயக்கத்தை அவளது விழிகள் பிரதிபலித்ததில் நரேந்திரனுக்குள் அந்த மயக்கம் உற்பத்தி ஆனது..
"நான் அழகனா..?"
"ஆமாம்.. பேரழகன்.."
"ஊர்மி.."
"ம்ம்ம்..."
"உண்மையாவே என்னை உனக்குப் பிடிச்சிருக்காடி..?"
"பிடிக்காமலா என் அப்பா பேச்சை மீறி உங்களுக்கு கழுத்தை நீட்டியிருக்கிறேன்..?"
"ஏய்ய்.."
"ம்ம்ம்.."
"ஐ லவ் யு.."
"ஐ லவ் யு டூ.."
அவன் மார்பில் முகம் புதைத்து அவள் அவனுடன் பின்னிக் கொண்டாள்.. அவன் முதுகில் படிந்திருந்த அவளின் கரங்கள் பரவிப் படர்ந்து இறுக்கிக் கொண்டன.. நரேந்திரன் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு.. தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.. அவள் தோள் தடவிய கைகள் இறங்கி அவள் முதுகின் வழவழப்பில் படிந்து பரவி நிலைத்து இறுகின.. அந்த தொடு உணர்வில் ஊர்மிளா சிலிர்த்தாள்..
"ஸ்ஸ்ஸ்.." அவள் முணுமுணுக்க..
"என்னடி..?" அவன் ஏதும் அறியாதவனைப் போல வினவி வைத்தான்..
ஊர்மிளா தன் பின்னலின் நுனியால் அவனைச் செல்லமாக அடித்தாள்.. நரேந்திரன் அதை ரசித்து வாய் விட்டுச் சிரித்தான்.. அவள் விலக முயன்றாள்.. அவன் விடவில்லை.. அவள் நழுவியபோது அவளது முந்தானைச் சேலையை இழுத்துப் பிடித்து நிறுத்தினான்.. அவள் அடி உதட்டைக் கடித்தபடி கண்கள் மின்ன அவனை ஏறிட்டுப் பார்த்து...
"சேலை கட்டும் பெண்ணுக்கொரு..
             வாசமுண்டு..
    கண்டதுண்டா..? கண்டவர்கள்..
             சொன்னதுண்டா..?"
என்று மெல்லிய குரலில் பாடினாள்..
"மத்தவங்க பேசறதை வைத்து எதையும் நான் முடிவு செய்கிறதில்லைடி.. நானே அதை உணரனும்.. அது தான் நரேந்திரன்.."
அவன் முரட்டுத்தனமாக அந்தச் சேலை கட்டிய பெண்ணை இழுத்து அழைத்து வாசம் பிடித்து.. அந்த வாசனையை உணர்ந்தான்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -49
அழகான ராட்சசியே -49
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-49.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-49.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy