அழகான ராட்சசியே -48

48 ஏட்டினிலே எழுதிடாமல் எண்ணத்திலே நான் வரைந்துவைத்த.. அழகான ராட்சசி நீ.... "நீயும் , அருணும் சேர்ந்துதான் சாப்பிட்டிங்க...


48
ஏட்டினிலே எழுதிடாமல்
எண்ணத்திலே நான் வரைந்துவைத்த..
அழகான ராட்சசி நீ....


"நீயும், அருணும் சேர்ந்துதான் சாப்பிட்டிங்களா அர்ச்சனா..? தனித்தனியா சாப்பிடலையா..?"
நரேந்திரனின் இந்தக் கேள்வியில் அகல்யாவின் பொய்யான கதை பிணைதலின் அஸ்திவாரம் இருந்தது.. அர்ச்சனாவின் பதிலில் அது ஆட்டம் கண்டது..
"தனித்தனியாவா..? இல்லேயே.. அருணும்... நானும் சேர்ந்துதான் சாப்பிட்டோம்.. வகை தொகையா.. அத்தைதான் பார்த்துப் பார்த்துப் பறிமாறினாங்க... வேணும்னா அத்தையிடமே கேட்டுப் பாருங்க.. அவங்க உண்மையைச் சொல்வாங்க.. நம்ம அம்மா இருக்காங்களே.."
அர்ச்சனா பல்லைக் கடித்த ஓசையை ஸ்பீக்கர் படுதுல்லியமாக அங்கிருந்தவர்களுக்குத் தெரியப் படுத்தியது..
"ஓகே அர்ச்சனா.. லீவ் இட்.."
"ஊஹீம்.. வெறுமனே லீவ் இட்டுன்னு இதை விட்டிங்கன்னா நான் உங்ககூடப் பேசவே மாட்டேன்.. அம்மாவை என்னன்னு கேளுங்க.."
அர்ச்சனாவின் கோபத்தில் இப்படி ஒரு மகளைப் பெற யான் என்ன தவம் செய்து விட்டேன என்று பொருமிப் போனாள் அகல்யா..
'இப்படியும் ஒரு மகள் இருப்பாளா..?'
அவள் வயிற்றில் பிறந்து விட்டு அர்ச்சனாவும்.. அருண்குமாரும் குணக்குன்றாய் இருந்து தொலைத்தால் அவள் தனி மனுசியாக எத்தனையைத்தான் சமாளிப்பாள்..?
"ஆகட்டும் அர்ச்சனா.. அம்மாவை என்னன்னு கேட்கிறேன்.."
தங்கைக்கு வாக்குறுதி அளித்து விட்டு அகல்யாவையே ஊன்றிப் பார்த்தான் நரேந்திரன்..
சோமசுந்தரத்தையும், பூங்குழலியையும், அகல்யா கேட்கச் சொன்ன.. 'என்ன..?' என்ற வார்த்தை... சுழல் காற்றில் சுழன்று அவளை நோக்கித் திரும்பி விட்டதில் மலைத்துப் போனாள் அகல்யா.. தடாலடியாக நரேந்திரன் அருணிடமும்.. அர்ச்சனாவிடமும் போனில் பேசுவா னென்றோ.. அதை ஸ்பீக்கரில் போட்டு விடுவானென்றோ அவள் எதிர்பார்த்திருக்கவில்லை..
"என்னங்கம்மா இதெல்லாம்..?"
நிறுத்தி.. நிதானமாக.. நரேந்திரன் அகல்யாவைப் பார்த்து 'என்ன' வென்று கேட்ட விதத்தை சோமசுந்தரம் ரசித்துப் பார்த்ததில் அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது..
"இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை நரேன்.. பெண் கொடுத்த சம்பந்தகாரங்களை முன்னாலே வைத்துக்கிட்டு என்னை 'என்ன'ன்னா கேள்வி கேட்கிற..?"
"இதே கேள்வியைத்தானே அவங்களைப் பார்த்து நீங்க கேட்கச் சொன்னீங்கம்மா..?"
"அதுக்காகத்தான் இவ்வளவு தூரத்துக்கு நீ வேலை செய்தியா நரேன்..? உன் மாமனாரையும்.. மாமியாரையும் என்னன்னு கேட்டு விடக் கூடாதுன்னுதான் உன் தம்பிக்கும்.. தங்கைக்கும் போன் போட்டு ஸ்பீக்கர்ல இவங்களையெல்லாம் கேட்க வைச்சியா நரேன்..? ஒரே நாளில உன் வொய்பும்.. அவளோட பேரண்ட்ஸீம் உனக்கு உயர்த்தியாப் போயிட்டாங்க.. நான் தாழ்ந்து போயிட்டேனில்ல..? உன் அப்பா இருந்திருந்தா இந்த நிலைமை எனக்கு வந்திருக்குமா..?"
அகல்யாவின் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிய ஆரம்பித்ததில் பூங்குழலி தலையைப் பிடித்துக் கொண்டாள்.. அவளுக்கு ஆயாசமாக இருந்தது.. எங்கே சுற்றினாலும் எதிராளியின் பக்கமே கத்தியைத் திருப்பி விட்டுவிடும் அகல்யாவின் சாகசத்தில் அவள் அதிர்ந்து போயிருந்தாள்.. அகல்யா கெட்டிக்காரியாக இருந்தாள்.. ஒன்று எதிராளியின் மீது குற்றம் சுமத்தி அவர்களை நெஞ்சைப் பிடித்துக் கொள்ள வைத்தாள்.. இல்லையென்றால் கண்ணீர் விட்டு மறுகி.. அவர்களை குற்றஉணர்ச்சிக்கு ஆளாக்கி நெஞ்சைப் பிடித்துக் கொள்ள வைத்தாள்.. எப்படியும் நெஞ்சைப் பிடித்துக் கொள்வது எதிராளியாகவே இருந்தார்கள்.. ஒரு போதும் அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்காரவில்லை..
சோமசுந்தரத்தின் முகத்தில் கடுமை படர்ந்தது.. அவருக்கு இந்த நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை.. இதுபோன்ற செயல்பாடுகளை அவர் ஆதரிக்க மாட்டார்.. அவர் பேச வாய் திறப்பதற்குள் நரேந்திரன் முந்தி விட்டான்..
"என் அப்பா இருந்திருந்தா.. நான் உங்ககிட்ட இப்படிப் பேசிக்கிட்டு இருக்கும் நிலைமை வந்திருக் காதுதான்.." என்றான்..
நிறுத்தி.. நிதானமாக.. அழுத்தம் திருத்தமாக அவன் சொன்னவிதத்தில் அகல்யாவின் முகம் வெளுத்து விட்டது.. அவசரமாக அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரித்த முகமாக மாறினாள்..
"இப்ப என்ன ஆச்சுன்னு சந்தோசமான நேரத்தில நாம மூடை கெடுத்துக்கனும்..? நேற்றைக்குத்தான் கல்யாணமாகியிருக்கு... அதுக்குள்ளே குடும்ப பஞ்சாயத்தை நீ கூட்டிக்கிட்டு இருக்கனுமா..? வாப்பா.. நீயும் மருமகளும் சாப்பிட வாங்க.. அண்ணா.. அண்ணி.. எதையும் மனசில வைச்சுக்காதீங்க.. எனக்கு எந்த நேரம் எதைப் பேசறதுன்னு தெரியாமப் போச்சு.. நீங்க சாப்பிட வாங்க.. வனிதா.. எல்லோருக்கும் தட்டைப் போடு.. வாங்கண்ணி.. இது உங்க வீடு மாதிரி.. நான் சொல்லித்தான் நீங்க வரனுமா..?"
மறந்தும் இது உங்கள் வீடு என்று சொல்லாமல் மாதிரி வீட்டைச் சொல்லி போலியான கலகலப்புடன் முன்னே போனாள் அகல்யா.. பெண்ணைக் கொடுத்து விட்டோமே என்று பின்னால் போனாள் பூங்குழலி.. வாய்ப் பேச்சில் உபசரித்தாலும் முதல் ஆளாக தட்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டாள் அகல்யா..
முகம் மாறாமல் அமைதியாக மற்றவர்களுக்கு தட்டை எடுத்து வைத்தாள் பூங்குழலி..
"நீங்களும் உட்காருங்க.. வனிதா பரிமாறட்டும்.." நரேந்திரன் பிடிவாதமாகச் சொல்லி விட்டான்..
சோமசுந்தரத்தின் வாயிலிருந்து தப்பி விட வேண்டுமென்ற முனைப்பு அவனுக்கு.. அவரும் அவனை முறைத்து.. முறைத்துப் பார்த்துக் கொண்டு சாப்பிட்டாலும்.. அகல்யாவிடம் எதையும் பேசவில்லை..
'அப்பாடி.. தப்பித்தேன்..' ஆசுவாச பெருமூச்சுடன் ஒரு பாட்டில் குளிர் தண்ணீரை ஒருமிக்க தொண்டையில் சரித்தான் அவன்..
ஊரில்.. உலகத்தில்.. மாப்பிள்ளையைக் கண்டு தான்.. மாமனார் பயப்படுவார்.. இங்கே தலைகீழாக இருக்கிறதே என்ற எண்ணம் அவனுக்கு.. சாப்பிட்டபடியே ஊர்மிளாவைப் பார்த்தான்.. அவன் பார்வையில் முகம் சிவந்து தலை கவிழ்ந்தாள்.. அவன் மனதில் பூமழை பெய்தது.. அவளுடைய கள்ளப் பார்வையை அவனுக்குப் பிடித்திருந்தது..
'எல்லாம்.. இவளுக்காக..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்..
சாப்பிட்டு முடிந்ததும் அவர்கள் ஹாலில் அமர்ந்தார்கள்.. அகல்யா வெகு அக்கறையாக சுவர் கடிகாரத்தைப் பார்த்து விட்டு..
"நரேன்.. உனக்கு ஆபிசுக்கு நேரமாகலையா..?" என்று வினவி வைத்தாள்..
'இந்தம்மா அடங்கவே அடங்காதா..?'
சோமசுந்தரம் அகல்யாவை விட்டுவிட்டு நரேந்திரனை முறைத்தார்..
'போச்சுடா..' நரேந்திரன் மானசீகமாக தலையில் கை வைத்தான்..
எது நடக்கக்கூடாது என்று அவன் அரும்பாடு பட்டானோ.. அது நடந்தே விட்டது.. சோமசுந்தரம் தன் அழகுத்திருவாயை திறந்து விட்டார்..
"ஆமாங்க.. நீங்க ஆபிஸ்க்கு கிளம்புங்க.. நாங்க எங்க பெண்ணை அழைச்சுக்கிட்டு திருச்சிக்கு கிளம்பறோம்.."
"என்னது..?!.."
நரேந்திரன் கடுப்பாக.. அகல்யா சந்தோசமாகிப் போனாள்..
"அப்படிங்களா அண்ணா.. உங்க பக்கத்தில அப்படியொரு சம்பிரதாயமிருந்தா தாராளமாக் கூப்பிட்டுக் கிட்டு போங்க.." வாயெல்லாம் பல்லாக அனுமதி வழங்கினாள்..
"உங்க வீட்டில பெண்ணைக் குடுத்திருக்கேனில்ல..? கல்யாணம் பண்ணிக் கொடுத்த கையோடு பெண்ணை பிறந்த வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகிற சம்பிரதாயம் வரத்தான் செய்யும்மா.." என்றார் சோமசுந்தரம்..
"அம்மா.. கொஞ்சம் சும்மா இருக்கீங்களா..?"
நரேந்திரனின் கடுமையில் வாயில் ஒற்றை விரலை வைக்காத குறையாக அடங்கிப் போனாள் அகல்யா.. சோமசுந்தரத்தின் மீது இருந்த மொத்தக் கடுப்பையும் அவள்மீது காட்டினான் நரேந்திரன்..
"உங்களுக்கு என்ன வந்தது..? என் ஆபிஸ்க்கு எப்பப் போகனும்னு எனக்குத் தெரியாதா..? காலையில என்னன்னா ஆறுமணிக்கே நான் எழுந்து வரலைன்னு அழிச்சாட்டியம் பண்றீங்க.. இப்ப என்னடான்னா ஆபிஸ்க்கு நேரமாகலை யாங்கறிங்க.. வாட்'ஸ் ராங் வித் யு..? மேனர்ஸ்ன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்களா..? இப்படியே போய்க் கிட்டு இருந்துச்சு.. நான் அப்பாவைப் பத்திக் கூட யோசிக்க மாட்டேன்.."
அகல்யா பேச்சு.. மூச்சைக் காட்டவில்லை.. ஊர்மிளாவுக்கே அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.. சோமசுந்தரம் அதையெல்லாம் வைத்துக் கொள்ள வில்லை.. அகல்யா போடுவதெல்லாம் வெளிவேசம் என்பதை நன்றாக புரிந்து வைத்திருந்தார் அவர்.. அவள் ஆயிரம் பேருக்கு பாவம் பார்ப்பாள்.. அவளாது.. ஐயோ பாவம் என்ற நிலைக்கு ஆளாகிறதாவது..
"சொல்லுங்க மாமா.." நரேந்திரன் அவரிடம் பேச ஆரம்பித்தான்..
"சொன்னாத் தாங்க மாட்டிங்க மாப்பிள்ளை.." என்று சொல்லி விட்டு பூங்குழலியின் பலத்த கண்டனப் பார்வைக்கு ஆளானார் சோமசுந்தரம்..
"என்னடி.. உங்கப்பா இப்படி வறுத்தெடுக்கிறாரு..?" ஊர்மிளாவிடம் முணுமுணுத்தான் நரேந்திரன்..
"எங்கப்பாவைப் பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு..?" அவள் பதிலுக்கு முணுமுணுத்தபடி சண்டைக்கு வந்தாள்..
மூக்கை விடைத்தபோதும் அழகானவளாக இருந்து வைத்த மனைவியைப் பார்க்க.. பார்க்க அவனுக்குத் தெவிட்டவில்லை..
"உன்னைப் போல அழகான பெண்ணைப் பெத்துட்டாருல்ல.. அந்த தலைக்கனம்தாண்டி அவருக்கு.."
ஊர்மிளாவிடம் முணுமுணுத்துவிட்டு.. சோமசுந்தரத்தின் பக்கம் பவ்யமாக திரும்பி அமர்ந்தான் நரேந்திரன்..
"எதையும் தாங்கற இதயம்தான் மாமா எனக்கு.. ஆனாலும் பாருங்க.. நீங்க என்னோட அன்பான மாமனாராப் போயிட்டிங்க.. நான் தாங்க மாட்டேன்னு நீங்களே முடிவு பண்ணின பின்னாலே அதை நீங்க சொல்லியே ஆகனும்னு நான் அடம் பிடிச்சா அது நல்லாயிருக்காது.. ஸோ.. அதை நாம விட்டு விடலாம்.."
"எதை..?"
"என் மனசு தாங்காதுன்னு நீங்க முடிவு பண்ணினதை.. பை தி வே.. டிரைவர்கிட்டச் சொல்லியிருக்கேன்.."
"எதைப்பத்தி..? பெட்ரோல் விலை கூடிப் போயிருச்சே.. அதைப் பத்தியா..? அதை அவன்கிட்ட சொல்லி என்ன பண்ண..? எங்களை மாதிரி ஆளுககிட்டச் சொன்னா பொதுக்கூட்டம் போட்டு நாட்டையே புரட்டி எடுப்போம்.."
நொந்து போன நரேந்திரன்.. மனைவியை ஒரு மௌனப்பார்வை பார்த்து விட்டு..
"அதெல்லாம் வேணாம் மாமா.. நாடு இருக்கிற நிலைமையிலேயே இருக்கட்டும்.. நான் டிரைவர்கிட்டச் சொன்னது பெட்ரோல் விலையைப் பத்தியில்ல.." என்று சொன்னான்..
"அதானே பார்த்தேன்.. முதலாளித்துவத்திற்கும்.. சமூக அக்கறைக்கும் எத்தனையோ காத துரமாச்சே.. ஆடு நனையுதேன்னு ஓநாய் எங்கேயாவது அழுகுமா..?" என்று கேட்டுவைத்தார் சோமசுந்தரம்..
நரேந்திரன் மனைவியைப் பார்த்த பார்வை..
'நான் ஓநாயாடி..?' என்று கேட்டு வைத்தது..
அடங்கியிருந்த அகல்யா.. மொச்சைக் கொட்டை கண்களை விரித்து வைத்துக் கொண்டு படு சுவராஸ்யமாக மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.. இவர்களைப் பிரிக்கவா அவள் வேலை மெனக்கெட்டாள் என்று தன்னைத்தானே மானசீகமாக குட்டிக்கொள்ளவும் செய்தாள்..
பூங்குழலிக்கு தலை வேதனையாக இருந்தது.. நல்ல வேளையாக ஒற்றைப் பெண்ணுடன் நிறுத்திக் கொண்டோம் என்று நினைத்துக் கொண்டாள்.. சோம சுந்தரம் பண்ணுகிற அராஜகத்துக்கு அவரை நம்பி இரண்டு மூன்று பெண்களைப் பெற்றுத் தொலைத்திருந்தால் அவள் கதி என்ன ஆவது..?
"இப்ப இங்கே மேடையா போட்டிருக்கு..? நீங்க தான் பொதுக்கூட்டத்தில பேச வந்திங்களா..?" காட்டத்துடன் கணவரை முறைத்தாள்..
மனைவியின் முறைப்பில் ஆண்புலி.. ஆண் எலியானது..
"அதில்லைடி குழலி..." என்று சோமசுந்தரம் மனைவிக்கு விளக்கம் சொல்லவும் முயன்றார்...
"மாப்பிள்ளை எதையோ சொல்ல வர்றார்.. அவரைச் சொல்ல விடுவேனான்னு கங்கணம் கட்டிக்கிட்டு பேசித் தள்ளறீங்களே.." பூங்குழலி பல்லைக் கடித்தாள்..
"கேட்டுட்டாப் போச்சு.. நீங்க சொல்லுங்க.." நரேந்திரனிடம் சமாதானத்துக்கு வந்தார் சோமசுந்தரம்..
"உங்களுக்கு பெங்களூரைச் சுற்றிக் காட்டச் சொல்லி டிரைவரிடம் சொல்லியிருக்கேன்.. போயிட்டு வாங்க.."
ஒருவழியாக சொல்ல வந்ததை நரேந்திரன் சொல்லி முடித்தான்..
"புதுசாக் கல்யாணம் கட்டிக்கிட்ட ஜோடி நீங்களா.. இல்லை நாங்களா..?" என்று அதற்கும் விதண்டாவாதமாக கேட்டு வைத்தார் சோமசுந்தரம்..
இவரிடம் எப்படிப் பேசினால்தான் தப்பிக்க முடியும் என்ற ஆயாசத்துக்கு ஆளானான் நரேந்திரன்.. இப்படியா ஒரு மனிதர் முன்னால் போனால் கடிப்பேன்.. பின்னால் போனால் உதைப்பேன் என்று மல்லுக்கட்டுவார்..?
"நாங்கதான் மாமா.." சிரிக்காமல் சொன்னான்..
"அதனால தேநிலவுக்கு எங்களை அனுப்பற வேலையை விட்டுட்டு நீங்களும் ஊர்மிளாவும் எப்பப் போறிங்க.. எங்கே போறிங்கன்னு சொல்லுங்க.." என்று சொல்லி விட்டு மனைவியின் மெச்சும் பார்வையில் சொக்கிப் போனார் சோமசுந்தரம்..
'பரவாயில்லை.. என்புருசன் சமத்துதான்.. இவரை நம்பி நான் இன்னும் இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றுப் போட்டிருக்கலாம் போல..' பூங்குழலி மகிழ்ந்து போனாள்..
அங்கே இருக்கும் நிலைமையை வைத்துப் பார்த்தால்.. அகல்யா.. நரேந்திரனும்.. ஊர்மிளாவும் தேநிலவுக்குப் போவதை தடுக்கப் பார்ப்பாள் என்று பூங்குழலிக்குத் தோன்றியிருந்தது.. அதே கவலை சோமசுந்தரத்தின் மனதிலும் இருக்குமென்றோ..
அவர் அதை உறுதிப் படுத்திக் கொள்ள மருமகனை கிடுக்கிப்பிடி கேள்வி கேட்பார் என்றோ அவள் நினைத்தும் பார்க்கவில்லை..
'என் புருசனா.. பொதுக்கூட்டத்தை மறந்து.. நாட்டு நடப்பை மறந்து.. வீட்டு நடப்பைப் பத்திப் பேசறார்..?'
அவள் விழிகளில் தெரிந்த காதல் அலைகள் சோமசுந்தரத்தை கல்லணைக்கு ஹனிமூன் போகலாம் வா என்று அழைத்தது.. சோமசுந்தரம் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு..
'எப்புடி..?' என்று மனைவியிடம் விழிகளால் வினவ.. அவள்..
'சூப்பர்..' என்று இமை மூடி அவரைப் பாராட்டினாள்.
அதைக் கவனித்த நரேந்திரன்.. 'செமத்தியான மாமனார்' என்று நினைத்துக் கொண்டான்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,6,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,89,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,24,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,6,எண்ணியிருந்தது ஈடேற,229,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,20,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,5,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -48
அழகான ராட்சசியே -48
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-48.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-48.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy