அழகான ராட்சசியே -47

47 நீ செல்லும் பாதையிலே எனைத் தொடர்ந்து வரவைத்த அழகான ராட்சசி நீ.... பூங்குழலிக்குக் கூடச் சங்கடமாகத்தான் இருந்தது.. அகல்யா ப...


47
நீ செல்லும் பாதையிலே
எனைத் தொடர்ந்து வரவைத்த
அழகான ராட்சசி நீ....


பூங்குழலிக்குக் கூடச் சங்கடமாகத்தான் இருந்தது.. அகல்யா பாவம் என்று அவள் நினைத்தாள்.. இப்படியொரு கேள்வியை நரேந்திரன் கேட்பானென்று அவள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டாள்.. இப்போது அவர்கள் இருக்கிறார்களா.. இல்லை.. திருச்சிக்குப் பெட்டியைக் கட்டிக் கொண்டு போய் விட்டார்களா
என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் அகல்யா இருந்தாள் என்ற விவரம் வெளிப்படும்போது நரேந்திரன் அவர்கள் முன்னிலையிலேயே அகல்யாவைக் கோபித்துக் கொண்டால் அகல்யாவுக்கு துன்பமாக இருக்காதா..? பெண் கொடுத்த சம்பந்தகாரர்களின் முன்னிலையிலேயே மகனிடம் பேச்சுக் கேட்க வேண்டியதாகி விட்டதே என்று அவள் துயரப்பட மாட்டாளா..?
பூங்குழலியின் காருண்ய மனதுதான் இவ்வா றெல்லாம் நினைத்துப் பார்த்துச் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது.. சோமசுந்தரத்துக்கு அந்தக் கவலை யெல்லாம் இல்லை.. அவர் அகல்யாவின் சாதுர்யத்தை தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்.. இந்தக் கேள்விக்கான அகல்யாவின் திரைக்கதை வசனம் எதுவாக இருக்கக்கூடும் என்பது மட்டுமே அவரின் எண்ணமாக இருந்தது.. அதை அவள் இட்டுக்கட்டிச் சொல்லும் நேர்த்தியைக் காணும் ஆவலோடு அவர் இருந்தார்..
அகல்யாவும் வாய் திறந்தாள்.. அடுக்கடுக்காக அவள் வாயிலிருந்து வெளிவந்த பொய்களின் கோர்வையில் பூங்குழலிக்கு நெஞ்சை அடைப்பதைப்போல ஆகி விட்டது..
"என்னத்தைச் சொல்லச் சொல்ற நரேன்..? அண்ணனும்.. அண்ணியும் என்னை ஒரு சொந்தமா நினைச்சாத்தானே ஆச்சு..? அவங்க என்னவோ நீ மட்டும் தான் சொந்தம்.. நான் அன்னியம்ங்கிறதைப்போல இல்ல நடந்துக்கிறாங்க.."
அகல்யாவின் முதல் பேச்சே வெடிகுண்டைப் போல வெடித்து வைத்தது.. அவள் கண்டு கொள்ளாததை கண்டு கொள்ளாமல்.. எதையும் பெரிது பண்ணாமல்.. அவள் பெற்ற பிள்ளைக்கு காலை உணவைப் பரிமாறி வேலைக்கும், கல்லூரிக்கும் அனுப்பி வைத்த பூங்குழலிக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவள் பதட்டத்துடன் சோமசுந்தரத்தைப் பார்த்தாள்.. அவர் பொறுமையாக இருக்கும்படி சைகை செய்தார்..
பூங்குழலி பொறுமையாக இருக்கக் கூடியவள்... சோமசுந்தரம் சொல்லித்தான் அவள் பொறுமையாக இருப்பாள் என்றில்லை... அவள் வழக்கம் போலப் பொறுமையை கடை பிடித்தாள்..
"ம்ப்ச்.. நான் கேட்டது என்ன..? நீங்க பதில் சொல்றது என்ன..?"
சோமசுந்தரத்தின் முகக் கடினத்தில்.. முகம் மாறிப் போன நரேந்திரன்.. கோபப்பட்டான்..
அவனுக்கு சோமசுந்தரத்தின் மீதும்.. பூங்குழலியின் மீதும் மலையளவு மரியாதை உண்டு.. அவன் மட்டும் கோடிஸ்வரன் என்ற உண்மை அடையாளத்தைச் சொல்லிப் பெண் கேட்டிருந்தால் அவர்கள் நிச்சயமாக அவனுக்குப் பெண் கொடுத்திருக்க மாட்டார்கள் என்பதினாலேயே அந்த மரியாதை மலையளவுக்கு அதிகரித்திருந்தது.. சோமசுந்தரத்தின் நேர்மையிலும்.. அவர் வெளிப்படுத்தும் நியாயமான கோபத்திலும்
அவன் தணிந்து போனான்.. அந்த வகையில் அவன் அவரின் ரசிகனாகவே மாறிப் போயிருந்தான்.. அவரது இடக்குப் பேச்சுக்களின் பிண்ணனியில் ஒளிந்திருக்கும் உண்மையின் ஜ்வாலை அவனைக் கவர்ந்திருந்தது..
"என்மேல் ஏன்ப்பா கோவிச்சுக்கற..? காலையிலேயே காபி கலந்ததும் அண்ணனுக்கும்.. அண்ணிக்கும்தான் முதலில் கொடுத்தேன்.."
அகல்யாவின் அசராத பொய்யில், ஊர்மிளா..
"ஸ்ஸ்ஸ்.." என்று பல்லைக் கடித்தாள்..
மனைவியின் அந்த அதிருப்தி ஒலியில் உண்மையைப் புரிந்து கொண்டான் நரேந்திரன்.. அவனுக்கு தலையிறக்க மாக இருந்தது.. இப்படி பொய் சொன்னால் ஊர்மிளாவைப் பெற்றவர்கள் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்..?
"காபி..? நீங்க கலந்தீங்க..?"
நரேந்திரனின் கேள்வியில் எங்கே ஊர்மிளா அவனிடம் உண்மையைச் சொல்லியிருப்பாளோ என்று சுதாரித்தாள் அகல்யா..
"அதை அண்ணிதான் கலந்தாங்கப்பா.. நான் கூடச் சொன்னேன்.. இது திருச்சியில்லை அண்ணி.. பெங்களூர்.. தி பிக் மேன் நரேந்திரனோட வீடு.. இங்கே எல்லா வேலைகளுக்கும் ஆள் இருக்காங்க.. உங்களோட மிடில் கிளாஸ் பழக்கத்தை இங்கே கொண்டு வராதீங்கன்னு சொன்னேன்.. திடிர்ன்னு அந்தப் பழக்கத்தை இவங்களாலே மாத்திக்க முடியுமா என்ன..? பிறந்ததில இருந்து உம்பில ஓடற மிடில் கிளாஸ் ரத்தம் அவ்வளவு சீக்கிரத்தில நம்ம லெவலுக்கு வந்திராது தம்பி.."
காபி கலந்து கொடுத்தது பூங்குழலிதான்.. அகல்யா இல்லை என்ற விவரம் வெளிப்பட்டவுடன்.. அதையும் ஒரு குறையாகச் சொல்லிக் காண்பித்தாள் அகல்யா.. பூங்குழலிக்கு வெறுத்துப் போய் விட்டது.. கணவரைப் பார்த்தாள்.. அவர் இமைகளை மூடி அவளை அமைதிப் படுத்தினார்..
"நம்ம வீட்டு மனுசங்களுக்கு நாம காபி கலந்து கொடுத்தா நம்ம ஸ்டேட்டஸ் குறைஞ்சு போயிராதும்மா.. உடம்பில ஓடற ரத்தத்தை ஓ பாசிடிவ்.., பி நெகடிவ்ன்னு தான் வகை பிரிச்சுருக்காங்க.. இது மிடில் கிளாஸ் ரத்தம், இது ஹை கிளாஸ் ரத்தம்ன்னு வகை பிரிக்கலை.. அதனால அபத்தமா உளருகிறதை விட்டுட்டு நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..."
நரேந்திரனின் கோபச் சிகப்பில் அவன் முகம் இன்னும் அதிகமாக மாறியது.. சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த வனிதா வெளியே வரப் பயந்து போனவளாக சமையலறைக்குள்ளேயே பதுங்கினாள்.. அகல்யாவோ எந்த பயமும் இல்லாமல் சரளமாக பேசிக் கொண்டிருந்தாள்..
"இருக்கட்டும்பா.. அதைப் பத்தி இனிப் பேசி என்ன ஆகப் போகுது.. அண்ணனுக்கும்.. அண்ணிக்கும் காபியைக் கொடுத்திட்டு.. உனக்கும், ஊர்மிளாவுக்கும் காபியை எடுத்துட்டுப் போகச் சொல்லி ஊர்மிளாவை மாடிக்கு அனுப்பி வைச்சேன்.."
அகல்யாவின் அதிரடியில் ஊர்மிளா வெறுத்துப் போய் விட்டாள்.. காலைக் காபியை கணவனுக்கு கொடுக்க அவள் நடத்திய போராட்டத்தை நினைத்து மனம் வெதும்பினாள்.. இப்படிப்பட்ட சின்ன மாமியாருடன் எப்படி அவள் குப்பை கொட்டப் போகிறாள் என்ற அச்சம் அவள் மனதில் எழுந்தது.. அதை அவளின் கண்கள் பிரதிபலித்ததில் சோமசுந்தரம் கண்சிவந்தார்.. பூங்குழலியோ மனம் பதறினாள்..
"ஏம்மா கதாகாலேட்சயம் பண்றீங்க..? ஊர்மிளா வோட அப்பாம்மா பிரேக்பாஸ்ட் சாப்பிட்டாங்களா.. இல்லையா..?"
"அதைத்தானே தம்பி சொல்லிக்கிட்டு இருக்கேன்.. அருண் வந்தான்.. அம்மா ஆபிஸீக்கு நேரமாகுது.. டிபன் எடுத்து வையுங்கன்னு சொன்னான்.. அத்தையும்.. மாமாவும் இன்னும் சாப்பிடலைடா.. அவங்களையும் கூப்பிடு.. உன்கூட சேர்ந்து சாப்பிடட்டும்ன்னு சொன்னேன்.. அவனும் கூப்பிட்டான்.. அண்ணன் பேப்பரில இண்ட்ரெஸ்டா அதைப் படிச்சுக்கிட்டு தலையை நிமிர்த்திக்கூடப் பார்க்கலை.. அண்ணி அதைவிட அதிகமா குனிஞ்சதலை நிமிராம அண்ணன் பக்கத்திலே கோந்து போட்டு ஒட்டினதைப் போல உட்கார்ந்திருக்காங்க.. அண்ணனாவது தலையை அசைத்தாரு.. இவங்க அதையும் செய்யலை.."
'கடவுளே..!' பூங்குழலியின் இமையோரம் கண்ணீர் அரும்பு கட்டி விட்டது..
சோமசுந்தரம் முகம் மாறாமல் அகல்யாவை பேச விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்..
"சரி.. அருண் கூப்பிட்டதுக்குத்தான் இவங்க எழுந்து வரலை.. சின்னப்பையன் கூப்பிடறான்னு நினைச்சுக் கிட்டாங்களோ என்னவோ.. வீட்டுக்கு எஜமானி, நான்தான் கூப்பிடனும்னு நினைக்கிறாங்க போல இருக்குன்னு நானும் போய் கூப்பிட்டேன்.. அண்ணனும்.. திரும்பிக்கூடப் பார்க்கலை.."
'ஈஸ்வரா..' பூங்குழலி மனம் நைந்தாள்..
நரேந்திரன் இதை உண்மையென்று நம்பி விட்டால்.. ஊர்மிளாவைப் பெற்றவர்களைப்பற்றி என்ன வென்று நினைப்பான்..? அவனுடைய சித்தியை அவர்கள் உதாசீனப் படுத்தி விட்டதாக நினைத்து விட மாட்டானா..?
"அருணுக்கு நேரமாகிருச்சுன்னு சாப்பிட்டுட்டுப் போயிட்டான்.. அடுத்து அர்ச்சனா காலேஜீக்கு நேரமாகுதுன்னு காலில சுடுதண்ணியை ஊத்திக்கிட்டு வந்தா.. அவகிட்டயும் அருண்கிட்டச் சொன்னதையே சொன்னேன்.. உன் தங்கை குணம்தான் உனக்குத் தெரியுமே.. சொந்த பந்தம் மேலே பாசத்தைக் கொட்டறவ அவ.. அண்ணியோட கையைப் பிடிச்சு இழுத்து சாப்பிடக் கூப்பிட்டா.. அண்ணனைக் கெஞ்சினா.. ரெண்டு பேரும் அசையலை.. நீங்க கூப்பிடுங்கம்மான்னு அவ சொன்னதில நான் திரும்பவும் இவங்களைக் கூப்பிட்டேன்.. வரலை.. அர்ச்சனாவுக்கு நேரமா கிருச்சேன்னு அவளை சாப்பிட வைத்து அனுப்பி விட்டேன்.."
'ராமா..'
பூங்குழலிக்கு முள்ளின்மேல் நிற்பதைப் போல இருந்தது.. அர்ச்சனா கையைப் பிடித்து இழுத்தும் அசையாத மாமனார் மாமியாரிடம் மருமகனுக்கு எப்படிப் பாசம் வரும் என்ற பயத்தில் அவள் இருந்தாள்..
சோமசுந்தரத்திற்கு அந்த பயமெல்லாம் இல்லை.. அவர் கல்லூளி மங்கனைப் போல தாடையைத் தடவியபடி அகல்யாவின் சொல்லாடலை ரசித்துக் கொண்டிருந்தார்..
"அர்ச்சனா கிளம்பிப் போன பின்னால நொடிக் கொருதரம் நான் அண்ணனையும்.. அண்ணியையும் சாப்பிடக் கூப்பிட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்.. இவங்க தான் பதில் சொல்லாம எங்கேயோ பார்த்துக்கிட்டு இருக்காங்க... நம்ம உபசரிப்பில என்ன குறைன்னும் கேட்டுப் பார்த்துட்டேன்.. பதில் சொல்ல மாட்டேங் கிறாங்க.. என்ன.. ஏதுன்னு தெரியாம இத்தனை மணி நேரமா தவிச்சுக்கிட்டு இருக்கேன் நரேன்.. உன்னிடம் சொல்லலாம்ன்னு பார்த்தா நீ கீழே இறங்கி வரலை.."
பேச்சோடு பேச்சாக நரேந்திரன் விடிந்தவுடன் அறைக் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கி ஓடி வரவில்லையென்ற குற்றச்சாட்டையும் சேர்த்து வைத்தபடி கைகளைப் பிசைந்தாள் அகல்யா..
மறுவீட்டு விருந்துக்கு வரச் சொல்லி திருமண மண்டபத்திலேயே சொல்லி விட்டுத் திருச்சியைப் பார்த்துப் போயிருந்திருக்க வேண்டும் என்று பூங்குழலிக்குத் தோன்றியது.. அவ்வாறு அவளுக்குத் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் அகல்யா அப்படிக் கதை பிணைந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமல் அவள் பரிதவிக்க.. அதை அறிந்து வைத்திருந்த சோம சுந்தரத்தின் விழிகளில் ஏளனப் பார்வை வந்து குடி கொண்டது.. அதில் நரேந்திரனின் புருவங்கள் சுருங்கின..
"நான்தான் உன்கூடச் சேர்ந்து சாப்பிட்டுப் பழகிட்டதாலே.. சாப்பாட்டு வேளை கடந்தாலும் உனக்காக காத்திருக்கேன்.. எட்டு மணிக்கெல்லாம் மாத்திரை போட்டிருக்கனும்.. சாப்பிடாததினாலே அதைப் போட்டுக்க முடியலை.. மயக்கம் வாரதைப் போலதான் இருக்கு.. இருந்தாலும் பல்லைக் கடிச்சுக்கிட்டு மகன் வந்திரட்டும்ன்னு காத்திருக்கேன்.. இவங்களுக்கு அப்படியில்லையே நரேன்.. விருந்தாளியா வந்திருக் கிறவங்க நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா..? நீயே என்னன்னு கேளு.."
அகல்யாவின் பேச்சில் நநேரந்திரன் என்னவென்று எப்படிக் கேட்கப் போகிறான் என்பதைப் போல அவனை பார்த்து வைத்தார் சோமசுந்தரம்.. அகல்யா அவரையும், பூங்குழலியையும் மட்டும் குற்றவாளியாக்கவில்லை.. நரேந்திரனையும் சேர்த்துதான் குற்றவாளி ஆக்கியிருக் கிறாள் என்ற எண்ணத்தில் அவர் இதழ்களில் குறுநகை தவழ்ந்தது.. நரேந்திரன் எட்டு மணிக்கு வந்து அகல்யாவுக்கு டிபனை ஊட்டி விட்டு.. மாத்திரையை விழுங்க வைக்காத குற்றத்தினால் அகல்யா மயக்கமடையும் நிலைக்கத் தள்ளப்பட்டு விட்டாள் என்ற குற்றச்சாட்டை அவன் எப்படி எதிர்நோக்கப் போகிறான் என்பதை வேடிக்கை பார்க்கும் ஆர்வம் அவர் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது..
நரேந்திரன் மாமனாரை அறிந்தவன்.. அவரின் ஒவ்வொரு ஏளனப் பார்வையிலும்.. குறு நகையிலும் சங்கடமடைந்தான்.. அகல்யாவின் சாகசத்தில் பல்லைக் கடித்தான்.. போனை எடுத்தான்.. அருண்குமாருக்கு போனைப் போட்டான்..
"அருண்... காலையிலே அத்தையையும்... மாமாவையும் நீ சாப்பிடக் கூப்பிட்டியா..?"
"இல்லையே அண்ணா.. அத்தைதான் எனக்கும் அர்ச்சனாவுக்கும் பரிமாறினாங்க.. வேணாம்ன்னு நாங்க சொன்னோம்.. அவங்களையும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடச் சொல்லி அப்பத்தான் சொன்னோம்.. வனிதா பறிமாறட்டும்ன்னு சொன்னோம்.. அவங்க சிரிச்சுக்
கிட்டே இருக்கட்டும்மா.. எனக்கு நீயும் ஊர்மிளாவும் ஒன்னுதான்னு அர்ச்சனாகிட்டச் சொன்னாங்க.. ஏண்ணா..? நான் அத்தையையும்.. மாமாவையும் சாப்பிடக் கூப்பிட்டிருக்கனுமா..? அப்படி ஒரு முறை இருக்குன்னு எனக்குத் தெரியாதுண்ணா.. ஐ ஆம் ஸாரி.. அம்மாவும் இதைப்பத்தி என்னிடம் சொல்லலையே.."
மறுமுனையில் அருண்குமார் சொன்ன பதிலை ஸ்பீக்கரில் அங்கிருந்த அனைவருமே கேட்டார்கள்.. அகல்யாவின் முகம் சிறுத்துப் போனது.. ஊர்மிளாவின் முன்னிலையிலும்.. ஊர்மிளாவைப் பெற்றவர்களின் முன்னிலையிலும் நரேந்திரன் அவளை அவமானப் படுத்தி விட்டதாக கொதித்துப போனாள்..
"என்ன செய்கிற நரேன்.. உன் தம்பியின் குணத்தைப் பத்தி உனக்குத் தெரியாதா..? அவன் எப்பவுமே மத்தவங்களை காட்டிக் கொடுக்க மாட்டான்.. பழியைத் தூக்கி தன் தலையிலே போட்டுக்குவான்.. அவன்கிட்டப் போய் அவனோட அண்ணியோட பேரண்ட்ஸைப் பற்றிக் கேட்டால் அவன் இப்படித்தான் பதில் சொல்வான்..?"
அகல்யாவின் பேச்சை லட்சியம் செய்யாமல் நரேந்திரன் அர்ச்சனாவிற்கு போன் போட்டான்..
"அண்ணா.." என்றவளிடம்..
"அம்மாகூட ஏன் சண்டை போட்ட அர்ச்சனா..?" என்று கேட்டான்..
"யாருண்ணா இப்படிப் போட்டுக் கொடுத்தது..? அம்மாவா..? அவங்க பேச்சைக்கூட நீங்க நம்புவீங்களா..? நீங்களே சொல்லுங்கண்ணா.. அருணும்.. நானும் நேரமாச்சுன்னு பறக்கிறோம்.. டிபன் எடுத்து வையுங்கன்னு சொன்னா அம்மா இருந்த இடத்தை விட்டு அசையாம வனிதா.. டிபன் எடுத்து வைன்னு மெதுவாச் செல்கிறாங்க.. அவங்க சொன்னது அவங்க காதிலேயே விழுந்திருக்காது.. வனிதாவின் காதுகளில் எங்கே விழுந்திருக்கப் போகுது..? அதோட அவள் சமையலைக் கவனிப்பாளா.. இல்லை சர்வ் பண்ண வருவாளா..? ஸோ.. நானும், அருணும் செல்ப்-சர்வ் பண்ணிக்கலாம்ன்னு தட்டை எடுத்துப் போட்டுக்கிட்டு உட்கார்ந்தோம்.. அத்தை வந்து பரிமாறினாங்க.. அப்பவும் அம்மா அசையலை.. பட் அண்ணா.. அவங்க வராதது நல்லதுதான் தெரியுமா.. அத்தை நிறைய விசயங்களை கதை போலச் சொல்லிக்கிட்டே பரிமாறினதில நான் கூடுதலாவே சாப்பிட்டேன்.. அவங்களுக்கு வீட்டை உயிர்ப்பா வைத்திருக்கிற வித்தை தெரிஞ்சிருக்கு.. அதை அவங்க எப்படிச் செய்கிறாங்கன்னு கேட்டு அம்மாவையும் கத்துக்கச் சொல்லுங்க.. அதை விட்டுட்டு இப்படித் தேவையில்லாம போட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்கிறது வீட்டுக்குப் பெரியவங்களா இருக்கிற அம்மாவுக்கு அழகில்லை.."
ஸ்பீக்கரில்தான் அர்ச்சனாவின் குரல் ஒலித்தது.. அதைக் கேட்டபடியே நரேந்திரன் அகல்யாவைப் பார்த்தானே ஒரு பார்வை..! அந்தப் பார்வைக்கு மற்றவர்களாக இருந்திருந்தால் குன்றிப் போயிருப்பார்கள்.. ஆனால் அகல்யாவா மனம் குன்றுவாள்..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -47
அழகான ராட்சசியே -47
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-47.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-47.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy