அழகான ராட்சசியே -46

46 கனி கொய்ய வந்தவனின் மனம் கொய்து மயக்கிவிட்ட... அழகான ராட்சசி நீ.... "ஒன்றுமேயில்லையா.. ?" ஊர்மிளாவை அருகே இழுத...


46
கனி கொய்ய வந்தவனின்
மனம் கொய்து மயக்கிவிட்ட...
அழகான ராட்சசி நீ....


"ஒன்றுமேயில்லையா..?"
ஊர்மிளாவை அருகே இழுத்து அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்து ரகசியக் குரலில் நரேந்திரன் கேட்ட போது ஊர்மிளாவுக்கு அனைத்தும் மறந்து விட்டது.. அவன் மட்டுமே நினைவிலிருக்க.. அவள் கிறங்கிப் போனவளாக அவன் தோள் சாய்ந்தாள்.. அவள் கண்களில் தெரிந்த அந்தக் கிறக்கத்தில் அவன் கிறங்கிப் போனான்... அவளுடைய அமுதவாயில் இதழ் பதித்தவனின் அருகாமையில் ஊர்மிளாவின் மனதிலிருந்த சஞ்சலங்கள் அகன்று ஓடி விட்டன..
அவன் தோள்மீது சாய்ந்திருந்தவளின் ஈரக் கூந்தல்.. அவன் தோள் தழுவி அவன் கைமீது புரண்டது.. அந்த ஈர ஸ்பரிசத்தில் நரேந்திரனுக்குள் நூதனமான உணர்வுகள் ஏற்பட்டன.. அவள் கூந்தலின் மென்மையில் முகம் பதித்து புரட்டினான்.. அவள் தோள்மீது அவன் கரம் விழுந்து சுற்றிக் கொண்டது..
ஊர்மிளா உரிமையுடன் அவன் விரல்களோடு தன் விரல்களைப் பிணைத்தாள்.. சொல்ல அவளுக்கு ஏராளமான கதைகள் இருந்தன.. கேட்க அவனுக்குப் பிடித்திருந்தது.. நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தவர்கள் மணியைப் பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே எழுந்தார்கள்..
"இந்நேரம் நான் என் கம்பெனியில் இருந்திருக்கனும்.." என்றான் நரேந்திரன்..
"கிளம்பியிருக்க வேண்டியதுதானே... நானா வேண்டாம்ன்னு சொன்னேன்.." ஊர்மிளா மேல் பார்வையாய் அவனைப் பார்த்தபடி அவன் மார்பில் செல்லமாக குத்தினாள்..
"போக மனசில்லைடி.." நரேந்திரனின் விரல்கள் அவளுடைய ஈரக் கூந்தலுக்குள் நுழைந்து அதன் இழைகளுக்குள் அளைந்து விளையாடின.. ஊர்மிளா கண்மூடி அவன் மார்பில் சாய்ந்தாள்..
அந்த நொடிகளில் அவர்கள் உணர்ந்த நெருக்கத்தை நீடிக்க அவர்கள் விரும்பினார்கள்.. நரேந்திரன் ஊர்மிளாவின் காதுகளில் ரகசியமாக கிசுகிசுக்க.. அவள் முகம் சிவந்து அவனை செல்லமாகக் கிள்ள என்று அவர்களுக்கேயுரிய பிரத்யேகமான நொடிகளாக அவை அமைந்து கொண்டிருந்தன..
ஒரு வழியாக நரேந்திரன் குளியலறைக்குள் புகுந்தான்.. அவன் பண்ணிய அழிச்சாட்டியத்தை மனதுக்குள் நினைத்து ரசித்தபடி தன்னிச்சையாக தலையை ஆட்டிய ஊர்மிளா உடைமாற்றும் அறையிலிருந்த அலமாரியைத் திறந்து.. அவனுக்கான உடைகளைத் தேர்ந்தெடுத்து வைத்தாள்..
குளியலறை கதவு திறந்தது.. ஈரத் தலையுடன் வெளியே வந்தான் நரேந்திரன்..
"என்ன இது..? இப்படியா சின்னப் புள்ளையாட்டம் தலையை நனைச்சுக்கிட்டு வருவீங்க..?"
செல்லமாக கடிந்தபடி.. துவாலையை எடுத்து அவன் தலையைத் துவட்டி விட ஆரம்பித்தாள் ஊர்மிளா.. இயல்பான அந்தச் செய்கையில் நரேந்திரன் நெகிழ்ந்து போனான்.. அவன் தலையைத் துவட்டி விட்ட அவளின் கனிவு அவனைக் கட்டிப் போட்டது..
அவனுக்காக அவள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த உடைகளை அவன் போட்டுக் கொண்டபோது மையலாக உதட்டைச் சுழித்தபடி சட்டையின் பொத்தான்களை அவள் போட்டு விடத் தொடங்கினாள்.. அவன் கழுத்தில் டையை மாலையாக அவள் போட்டு விட்டபோது..
"நான் உனக்குத் தாலி கட்டினேன்னு நீ எனக்கு டை கட்டி விடப் பார்க்கறியா..?" என்று கண்சிமிட்டினான் நரேந்திரன்..
"ஆஹா..! இவர் கட்டுக்குள் அடங்கிற ஆள்தான்.." அவள் அழகு காட்டினாள்..
நரேந்திரன் ஊர்மிளாவின் இரு கைகளையும் பிடித்து இழுத்து.. அவன் இடுப்பைச் சுற்றி வளைக்க வைத்தான்.. என்னவென்று தெரியாதபோதும் அவன் இடுப்பைச் சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டாள் ஊர்மிளா..
"இப்பச் சொல்லு.. உன் கட்டுக்குள் நான் அடங்கியிருக்கிறேனா.. இல்லையா..?" நரேந்திரன் மீண்டும் கண்சிமிட்டினான்..
"பெரிய ஆளுதான்.."
சிருங்காரமாய் அவனைப் பார்த்தபடி விலக மனமில்லாமல் விலகினாள் ஊர்மிளா.. அவள் பார்வையில் நரேந்திரனின் மனம் நிலை கொண்டிருந்தது.. அவனைக் கண்டதும் அவள் கண்களில் தெரிகின்ற மயக்கத்தில் அவன் மயங்கினான்..
"இனியாவது சாப்பிடப் போயிரலாம்.. இல்லேன்னா.. பிரேக் பாஸ்ட்.. லன்ச்சா மாறிடும்.." நரேந்திரன் சிரித்தான்..
அவன் சிரிக்கும் போது தெரிந்த வரிசையான பல்வரிசையில் அவள் பார்வை பதிந்தது..
"என்னவாம்.. என் அழகில் மயங்கிட்டயா..?" அவன் உல்லாசமாக கேட்டான்..
"அடேங்கப்பா.. என்ன ஒரு ஹெட்வெயிட்.."
கழுத்தைச் சாய்த்து அவனிடம் கேட்டபடி ஒய்யாரமாக பார்வையை சுழற்றினாள் ஊர்மிளா.. அதற்கு அவன் ரகசியமாக அவள் காதில் முணுமுணுக்க.. அவள் உதட்டைக் கடித்தபடி அவனைச் செல்லமாக அடித்தாள்..
மாடிப்படிகளில் இறங்கியபடி அவர்கள் இழைந்த இழைதலைப் பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
அவளும் ஊர்மிளா காபியைக் கொண்டு போன வினாடியிலிருந்து மாடிப்படிகளை உற்று.. உற்று பாத்துக் கொண்டிருந்தாள்.. அருண்குமார் வந்தான்.. அர்ச்சனா வந்தாள்.. நரேந்திரனும், ஊர்மிளாவும் மட்டும் வருகின்ற சுவடே தெரியவில்லை..
"அம்மா.. கம்பெனிக்கு நேரமாச்சு.."
"ம்மா.. காலேஜிக்கு போக வேண்டாமா..?"
பிள்ளைகளின் குரலில் அகல்யா டைனிங் ஹாலுக்கு ஓடோடிப் போய்விடவில்லை.. மனதெல்லாம் மாடிப் படிகளில் இருக்க அவள் எப்படிப் பறிமாறப் போவாள்..?
"வனிதா.. அருணுக்கும்.. அர்ச்சனாவுக்கும் டிபன் எடுத்து வை.." சத்தமாக உத்தரவிட்டாள்..
"அதை நாங்க செய்துக்க மாட்டோமா..?"
அருண் கோபத்துடன் தட்டை எடுத்துப் போட்டு பூரிக்கிழங்கை எடுத்து வைத்துக் கொள்ள முனைந்த போது பூங்குழலி அவனுக்குப் பரிமாறினாள்..
"நீங்களா ஆண்ட்டி..?"
அவன் திகைத்து போனான்.. அண்ணியின் அம்மா.. விருந்தாளியாக வீட்டுக்கு வந்திருப்பவள்.. அவள் பறிமாற அவன் சாப்பிடுவதா..?
"உங்களுக்கு எதுக்கு சிரமம் ஆண்ட்டி..?"
சங்கடத்துடன் அவன் தடுத்தான்.. அர்ச்சனாவும் அதை ஆமோதித்தாள்..
"நீங்களும் உட்காருங்க ஆண்ட்டி.. நாம சேர்ந்தே சாப்பிடலாம் வனிதா பரிமாற வருவா.."
"ஏன்ம்மா.. நான் பரிமாறினா என்ன..? எனக்கு நீயும் ஊர்மிளாவும் ஒன்னுதான்.."
பரிவாகப் பேசியபடி பறிமாறிய பூங்குழலியின் பாந்தமான சேவையில் அருணும்.. அர்ச்சனாவும் நெகிழ்ந்து போனார்கள்..
இதுபோன்ற பரிவை அகல்யாவிடம் அவர்களால் காண முடியவில்லையே.. அது ஏன்..?
பூங்குழலி அவர்கள் இருவரின் வேலையைப் பற்றியும் படிப்பைப் பற்றியும் விசாரித்தாள்.. கூடவே திருச்சியைப் பற்றிச் சொன்னாள்.. சோமசுந்தரத்தின் கொள்கையைப் பற்றிப் பேசினாள்.. ஊர்மிளாவின் திறமைகளையும்.. ரசனைகளையும் பட்டியலிட்டாள்..
அவளுடைய குடும்பத்தைப் பற்றிய அனைத்தையும் அவள் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டவர்களுக்கு.. அவர்களைப்பற்றி அவர்களைப் பெற்ற தாயான அகல்யாவிற்கு என்ன தெரியும் என்ற கேள்வி நெஞ்சில் எழுந்தது.. ஊர்மிளா கொடுத்து வைத்தவள் என்ற ஒரே விதமான பொறாமை அவர்கள் இருவருக்குமே வந்தது..
"தேங்க்யூ ஆண்ட்டி.. பை.."
"தேங்க்ஸ் ஆண்ட்டி.. நீங்க சொன்ன கதையிலே ரெண்டு பூரி சேர்த்தே சாப்பிட்டுட்டேன்.. பை.."
அருணும்.. அர்ச்சனாவும் பூங்குழலியிடம் சொல்லி விட்டு அகல்யாவை மறந்து போனவர்களாக கிளம்பிப் போய் விட்டார்கள்..
அவர்கள் போனதைக் கூடக் கவனிக்காமல் மாடிப் படிகளையே கவனித்துக் கொண்டிருந்தாள் அகல்யா..
'இன்னும் என்ன பண்ணுதுக..?' கையைப் பிசைந்தாள்..
மாடிப்படிகளில் விரைந்து ஏறி.. நரேந்திரனின் அறைக் கதவைத் தட்டி அவனை அதட்டி வெளியே வர வைக்க அவளுக்கு விருப்பம்தான்..
ஆனால் நரேந்திரன் அதை அனுமதித்ததில்லை.. அவன் அறைக்கு அகல்யா வருவதை அவன் விரும்பிய தில்லை.. ஓர் முறை அகல்யா அவன் அறைக்கதவை தட்டியபோது..
"இதுவே லாஸ்டா இருக்கட்டும்.. இனிமே என் ரூம் கதவைத் தட்டாதீங்க.. ஐ டோன்ட் லைக் இட்.." என்று கண்டிப்பாக சொல்லி விட்டான்..
"இல்லேப்பா.. அது வந்து.." அகல்யா தடுமாறிய போது அவன் கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்கவில்லை..
"லிஸன்.. அப்பாவுக்காக நான் இங்கேயிருக்கேன்.. மத்தபடி எனக்கு என் பிரைவஸி ரொம்ப.. ரொம்ப.. முக்கியம்.. அதில் சின்னக்குறை வந்தாக்கூட என் வழியைப் பார்த்துக்கிட்டு நான் போய்கிட்டே இருப்பேன்.."
நரேந்திரனின் சீற்றத்தில் அரண்டு போனவள்தான் அகல்யா..
அன்றிலிருந்து இன்றுவரை அவனிருக்கும் அறைப் பக்கம் கூட அவள் போனதில்லை.. கூடுமானவரை மாடியேறுவதை தவிர்த்து விடுவாள்.. இயல்பாக அவள் மாடிக்குப் போகப்போய்.. அதை நரேந்திரன் வில்லங்கமாக எடுத்துக் கொண்டு எதையாவது பேசிவிட்டால்..?
'எதுக்கு வம்பு..?'
அகல்யா நரேந்திரனின் அறை இருக்கும் திசையில் தலை வைத்துக்கூடப் படுப்பதில்லை..
அன்றும் அதைப் போல அவன் அறைப்பக்கம் போகாமல் நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்த வளை வினோதமாக பார்த்தார் சோமசுந்தரம்.. கையிலிருந்த பேப்பரில் ஒற்றை எழுத்தைக்கூட விடாமல் முழுமையாக பேப்பரில் இருந்த செய்திகளைத் திரும்பத் திரும்ப படித்துக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தவருக்கு.. பேப்பர் படிக்கும் சுவராஸ்யம் போய் விட்டது..
படித்தையே திரும்பத்திரும்ப எத்தனை முறைதான் படிப்பது..?
பேப்பரைக் கடாசிவிட்டு அகல்யாவைப் பார்த்த வருக்கு.. அவளது பரபரப்பில் புருவங்கள் ஏறின..
"ஏண்டி.. பெத்த புள்ளைகளைக் கூட கவனிக்காம இந்தம்மா எதுக்காக இவ்வளவு டென்சனா இருக்குது..?" மனைவியிடம் கேட்டார்..
"யாருக்குத் தெரியும்..?" என்றாள் பூங்குழலி..
"இந்தம்மாவுக்கு கூட பதட்டம் வருமா..? ஆச்சரியமா இருக்குடி பூங்குழலி.."
சோமசுந்தரம் சுவராஸ்யமாக அகல்யாவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்.. பூங்குழலிக்கு அகல்யாவின் பதட்டத்தில் பயம் வந்தது.. புதிதாய் திருமணமானவர்கள் மாடியைவிட்டு இறங்கி வரத் தாமதமாவது இயற்கை தானே.. அதில் எதற்காக அகல்யா பதட்டம் கொள்ள வேண்டும்..?
பூங்குழலியின் மனம் எழுப்பிய வினாவிற்கு கிடைத்த விடையில் அவள் அதிர்ந்திருந்தாள்.. பூப்போன்ற மனது கொண்ட ஊர்மிளாவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று அவள்மனம் கடவுளை வேண்டிக் கொண்டது..
மாடிப்படிகளில் காலடியோசையும்.. பேச்சுக் குரல்களும் கேட்டவுடன் அகல்யாவின் பார்வை ஆங்காரத்துடன் மாடிப் படிகளுக்கு தாவுவதைப் பார்த்த சோமசுந்தரம் முகம் மாறினார்..
"என்னடி கருமம் இது..? இந்தம்மா இவங்களைக் கானோம்ன்னுதான் இவ்வளவு டென்சனா இருந்ததா..?" என்று பூங்குழலியிடம் கேட்டார்..
அவள் யாருக்குத் தெரியும் என்று கேட்கவில்லை.. துயரத்துடன் மௌனம் சாதித்தாள்.. அர்த்தமுள்ள மௌனம் அது.. காலம் காலமாக இந்தியப் பெண்களைப் பெற்ற தாயார்கள் அனுஷ்டித்து வரும் மௌனம் அது.. பூமா தேவியின் பொறுமையையும்.. சகிப்புத்தன்மை யையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் தாய்மார்களின் மௌனம் அது..
"வாப்பா.. நரேந்திரா.."
என்னவோ வெளியூருக்குப் போய்விட்டு வீடு திரும்பியிருப்பவனை வரவேற்பதைப் போல பரபரத்தாள் அகல்யா..
"பாருடி இந்தம்மாவ.. இவங்க வயித்தில பிறந்த பிள்ளைக சாப்பாடு போடச் சொல்லிக் கேட்டதுக்கு இந்தம்மா அசைஞ்சுகூட கொடுக்கலை.. இப்ப என்னடான்னா.. பெறாத மகனைக் கண்டதும் பாசத்திலே வழுக்கறாங்க.. காலக் கொடுமைடி.." முகம் சுளித்தார் சோமசுந்தரம்..
அதே முகச்சுளிப்பை நரேந்திரனும் சுளித்தான்..
"அவுட்டிங் போயிட்டு வருகிறவனை ரிஸீவ் பண்ணுகிறதைப் போல பேசாதீங்கம்மா.. அருணும்.. அர்ச்சனாவும் எங்கே..?"
"இவ்வளவு நேரமும் அவங்க கிளம்பிப் போகாம இருந்தா என்ன ஆகிறது நரேன்..? மணியைப் பாரு.. பத்துக்கு மேலாகுது.."
அவன் தாமதமாக வந்திருப்பதை நாசுக்காக சுட்டிக் காட்டினாள் அகல்யா.. நரேந்திரனின் முகம் சினத்தில் சிவந்தது..
"பத்துக்கு மேலே ஆனா என்ன..? எரிச்சலைக் கிளப்பாதீங்க.. அத்தையும்.. மாமாவும் சாப்பிட்டாங்களா..?"
அவனது கேள்வியில் பூங்குழலியும் சோமசுந்தரமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.. அவர்கள் மனதில் வேடிக்கைபார்க்கும் ஆவல் எழுந்தது..
அதுநேரம் வரை.. ஊர்மிளாவைப் பெற்றவர்கள் விருந்தினராக அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்ற நினைவே இல்லாமல் அலட்சியமாக இருந்த அகல்யா அந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறாள்..?





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தேரில் வந்த திருமகள்..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -46
அழகான ராட்சசியே -46
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-46.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-46.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy