அழகான ராட்சசியே -45

45 நீ சிரித்தால் நான் சிரிக்கும் நிலையில் என்னைத் தள்ளிவிட்ட அழகான ராட்சசி நீ.... ஊர்மிளா அசையாமல் நின்றாள்... அவள் செவிகளில் வ...


45
நீ சிரித்தால் நான் சிரிக்கும்
நிலையில் என்னைத் தள்ளிவிட்ட
அழகான ராட்சசி நீ....

ஊர்மிளா அசையாமல் நின்றாள்... அவள் செவிகளில் விழுந்த வார்த்தைகளை அவளால் நம்பவே முடியவில்லை.. இப்படிப்பட்ட அநாகரிக வார்த்தைகளைக் கூட ஒருவரால் பேச முடியுமா..? அதுவும்.. ஒரு மருமகளைப் பார்த்து மாமியார் பேசுகிற வார்த்தைகளா இவை..?
'ச்சீ..' மனதுக்குள் அருவெறுத்தாள் ஊர்மிளா..
முதலிரவு முடிந்து வெளியே வருகின்ற புது மருமகளிடம் இந்த ஒரு இரவில் கோட்டையைப் பிடித்து கொடியை நாட்டி விட்டதாக சந்தோசப் படாதே என்று பேசும் இவள் எந்த மாதிரியான பெண்மணி..?
"அண்ணி..."
மாடிப்படிகளில் குதித்து இறங்கி வந்த அர்ச்சனாவின் குரலில் அகல்யாவின் முகபாவம் மாறியது..
"குட்மார்னிங் அண்ணி.. ஹேவ் எ ஸ்வீட் டே.." சிரித்த முகமாக சொன்னாள் அர்ச்சனா..
அகல்யாவின் அநாகரிகமான வார்த்தைகளினால் காயப் பட்டிருந்த மனதிற்கு அர்ச்சனாவின் வார்த்தைகள் மருந்தைத் தடவியதைப் போல இதமாக இருந்தன..
"குட் மார்னிங் அர்ச்சனா.." மலர்ந்த முகமாக சொன்னாள்..
"என்ன.. இங்கே நின்றுக்கிட்டு மாமியாரும் மருமகளும் என்ன ரகசியம் பேசறிங்க..?" என்று கேட்டாள் அர்ச்சனா..
"ம்ம்ம்.. கோட்டையைப் பிடித்து கொடியை நாட்டறதைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்..." அகல்யாவின் முக பாவத்தை அளவிட்டபடி சொன்னாள் ஊர்மிளா..
அகல்யாவின் முகம் வெளுத்தது.. எங்கே ஊர்மிளா அர்ச்சனாவிடம் அகல்யா பேசியதைச் சொல்லி விடுவாளோ என்று அவள் பயந்த பயம்.. அவள் விழிகளில் தெரிந்தது..
'அஃது..' பல்லைக் கடித்தாள் ஊர்மிளா..
"எந்த ஊர் கோட்டையை அண்ணி..?" அர்ச்சனா ஆவலுடன் வினவினாள்..
"எல்லாம் உன் சொந்த ஊர் கோட்டையைத்தான்.." என்றாள் ஊர்மிளா..
"சொந்த ஊர்ன்னா.. இந்த ஊரையா சொல்கிறிங்க.. இங்கே எந்தக் கோட்டையை சொல்கிறீங்க...?" குழப்பத்துடன் வினவினாள் அர்ச்சனா..
"எந்தக் கோட்டையைன்னு சொல்லிரட்டுமா அத்த்த்தை.."
அத்த்த்தையில் அழுத்தம் கொடுத்து அகல்யாவிடம் வெகு வினயமாக அனுமதி கேட்டாள் ஊர்மிளா..
அவளின் மறைமுக மிரட்டலில் அகல்யாவுக்குள் வன்மம் வந்தது.. 'நேத்து வந்தது.. என்னமா போட்டுத் தாக்கறா..' அவள் பல்லைக் கடித்தாள்..
"என்னம்மா..?" அர்ச்சனா அகல்யாவின் பக்கம் திரும்ப..
"உன் அண்ணி உன்னைக் கேலி பண்றா.. இது கூடத் தெரியாம அப்பாவியாய் இருக்கிறயே.. என் வயிற்றில் பிறந்ததுக்கு சூதுவாது தெரியாதுங்கிறதை அப்பப்ப நீரூபிச்சுக்கிட்டு இருக்க.." என்று அலுத்துக் கொண்டாள் அகல்யா..
"அப்படியா அண்ணி..?" என்று கேட்ட அர்ச்சனா விடம் லேசாக கண்சிமிட்டி சிரித்தாள் ஊர்மிளா..
"கேலிதான்.. ஆனால் முழுவதும் கேலியில்லை.. நீ அருமையான பெண் அர்ச்சனா.. கள்ளம்.. கபடம் இல்லாத தேவதை.. இதெல்லாம் கடவுள் உனக்குக் கொடுத்த வரம்.. அத்தையின் வயிற்றில் பிறந்ததால் வந்த வரமில்லை.."
நாத்தனாரைப் புகழ்வதைப் போல அகல்யாவைச் சாடி விட்டாள் ஊர்மிளா.. அதில் அர்ச்சனாவின் முகம் மலர்ந்தது.. அகல்யாவின் முகம் சிறுத்தது..
அதற்கு மேலும் அங்கே நின்று அகல்யாவின் முகத்தைப் பார்க்க விருப்பமில்லாததினால்..
"வா அர்ச்சனா.. காபி சாப்பிடலாம்.." என்று நாத்தனாரை கூட அழைத்தபடி சமையலறையைத் தேடிப் போய்விட்டாள் ஊர்மிளா..
அதில் அடுத்த அடி அகல்யாவுக்கு விழுந்தது.. முதல் நாள்தான் திருமணமாகி வந்த மணப்பெண்ணைப் போல இல்லாமல் என்னவோ காலம்.. காலமாய்.. அந்த வீட்டில் புழங்கிக் கொண்டிருக்கும் எஜமானியைப் போல ஊர்மிளா வெகு அதிகாரமாக சமையலறைக்குப் போவதாக அவள் நினைத்தாள்..
ஊர்மிளாவுக்கு அந்த நினைவெல்லாம் இல்லை.. அவள் என்னவோ அந்த இடத்தைவிட்டு அகன்றால் போதும்.. அகல்யாவின் முன்னால் நிற்கும் கொடுமை யிலிருந்து தப்பித்தால் போதும் என்ற நினைவுடன்தான் அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு போனாள்..
பொதுவுடைமை பேசுகிறவரின் மகளுக்கு அதிகாரத்தின் மீது என்ன நாட்டம் இருக்கப் போகிறது..?
பூஜையறையின் முன்னால் தேங்கி நின்ற ஊர்மிளா உள்ளே போனாள்.. விளக்கேற்றி வணங்கினாள்.. அவளின் தீபாதரனை காட்டிய மணியின் ஒலியில் மாடியிலிருந்து வந்த அருண்குமார் ஆச்சரியப்பட்டான்..
"எங்க வீடா இது..?"
கணவரின் தம்பி என்பதினால் மரியாதையுடன் முறுவலித்த ஊர்மிளா.. தீபாதரனை ஒளியைத் தொட்டு வணங்கி.. நெற்றியில் குங்கும் இட்டுக் கொண்டு வெளியே வந்தாள்..
"ஏன் அப்படிச் சொல்கிறிங்க..?" என்று கேட்கவும் செய்தாள்..
"அம்மாவுக்கு இந்தப் பழக்கமெல்லாம் இல்லை அண்ணி.. வீட்டில வேலை செய்கிறவங்கதான் விளக்கேற்றி வைப்பாங்க.." அருண்குமார் குட்டை உடைத்தான்..
சற்றுமுன் அகல்யா பேசிய பேச்சை நினைவு கூர்ந்த ஊர்மிளா 'இப்படிப்பட்ட.. பேச்சைப் பேசுகிறவர்களிடம் இதுபோன்ற வளமைதானே இருக்கும்..?' என்று நினைத்துக் கொண்டாள்..
"நீங்க காபி சாப்பிட்டிங்களா..?"
பேச்சை மாற்ற நினைத்து அவள் கேட்டகேள்வியில் அகல்யா பொங்கினாள்..
"மாடியை விட்டு கீழே இறங்கி வந்ததில இருந்து எல்லாத்தையும் பார்த்து இந்த ஒரு கேள்வியைத்தான் நீயும் கேட்கிற.. எல்லாரும் இல்லைங்கிற பதிலைத்தான் சொல்கிறாங்க.. நீயும் காபி கலந்து கொடுத்த பாடா இல்லை.. நாங்களும் காபி குடிச்ச பாடாய் இல்லை.. எப்படி.. வெறும் வாய் பந்தலிலேயே தோரணம் கட்டி விடலாம்ங்கிற உத்தேசமா..?"
அகல்யாவின் பொங்கலுக்கு அர்ச்சனாவிடமிருந்து பதில் வந்ததுதான் ஆச்சரியம்..
"ஏம்மா.. எந்தக் காலத்திலே நீங்க காபி கலந்து கொடுத்தீங்க.. உங்களுக்கே பெட்காபி ரூமைத் தேடி வரனும்.. இன்னைக்கு என்னவோ அதிசயமா காலையி லேயே கண்விழிச்சு வந்து நிற்கறிங்க.. இல்லைன்னா உச்சிப் பொழுது வரைக்கும் தூங்கிக்கிட்டு இருப்பீங்களே.. நம்ம வீட்டிலே காபி கலந்து கொடுக்கத்தான் வனிதா இருக்காளே.. எதுக்காக நம்ம அண்ணி காபி கலந்து கொடுக்கனும்..?"
"அதானே.." அருண்குமாரும் சேர்ந்து கொண்டான்..
'இதுக ரெண்டும் என் வயித்திலே பிறந்ததுகளா..?' அகல்யா வெறுத்துப் போனாள்..
"ஆயிரம் தான் வீட்டிலே வேலையாளுக இருந்தாலும்.. நமக்கும் சமைக்கத் தெரிஞ்சிருக்கனுமில்ல.. உங்க அண்ணி அருமையா சமைப்பா.. காபி கலக்கிறது என்ன.. விருந்தையே ரெடி பண்ணிக் கொடுக்கிறதா இருந்தாலும் அயர மாட்டா.." என்றபடி காபிக் கோப்பைகள்  அடங்கிய டிரேயுடன் சமையலறையை விட்டு வெளியே வந்தாள் பூங்குழலி..
"ஆண்ட்டி.. நீங்க எதுக்கு இதையெல்லாம் செய்கறிங்க..?" அவசரமாக ஒரு கோப்பையை எடுத்துக கொண்டாள் அர்ச்சனா..
"நம்ம வீட்டில செய்கிறதுக்கு கணக்குப் பார்க்கனுமா..?" இன்முகத்துடன் அருண்குமாரிடம் டிரேயை நீட்டினாள் பூங்குழலி.. அவனும் எடுத்துக் கொண்டான்..
"நம்ம வீடா..?" அகல்யா முகம் சுளித்தாள்..
"இது எங்க வீடுங்க.. நீங்க உங்க பெண்ணை நேற்றுக் காலையில என் மூத்தமகனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கீங்க.. விருந்தாளிகளெல்லாம் நம்ம வீடுன்னு சொன்னா வீடு தாங்காது.."
அகல்யாவின் பேச்சில் அருண்குமார் முகம் சுளித்தான்..
"அம்மா.. அவங்க ஒன்னும் இந்த வீட்டை விலை பேசி விற்கிறதுக்காக நம்ம வீடுன்னு சொல்லலை.. வேலை செய்கிறதுக்குத்தான் நம்ம வீடுன்னு சொன்னாங்க.. எல்லாத்தையும் குதர்க்கமாவே எடுத்துக்குவீங்களா..?" தாயை கடிந்து கொண்டவன் பூங்குழலியிடம்..
"சாரி ஆண்ட்டி.. அம்மாவுக்கு பேசத் தெரியலை.." என்று மன்னிப்புக் கேட்டான்..
'இதுக்கா பேசத் தெரியாது..?'
பூங்குழலிக்கும்.. ஊர்மிளாவுக்கும் ஒரே நேரத்தில் இந்தக் கேள்வி மனதில் எழுந்தது... தாயும்... மகளும் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள்..
"இருக்கட்டும் தம்பி.. நான் இதையெல்லாம் மனசில வைச்சுக்க மாட்டேன்.." என்றாள் பூங்குழலி..
'என்னது.. இத்தனை பெரிய பேச்சைக் கூட இவ மனசில வைச்சுக்க மாட்டாளா..? இதை மனசில வைச்சுக் கலைன்னா வேற எதைத்தான் மனசில வைச்சுக்கப் போறா..? பேச்சுப் பொறுக்காம ஒதுங்கி ஓடிப் போயிருவான்னு பாத்தா இவ அசர மாட்டேங்கிறாளே.. பேசற பேச்சில பெங்களூர் பக்கமே தலைகாட்டனும்கிற எண்ணம் இவளுக்கு வந்துரக் கூடாதுன்னு பார்த்தா இவ எதையும் மனசில வைச்சுக்க மாட்டேன்னு எந்தலையில கல்லைத் தூக்கிப் போடறாளே..'
அகல்யாவிற்கு தலை வலிக்க ஆரம்பித்தது.. அதை போக்கக் கொடுக்கும் அரு மருந்தாய் காபிக் கோப்பையை அவளிடம் நீட்டினாள் பூங்குழலி..
"காபி சாப்பிடுங்க அண்ணி.. முகமே வெடுவெடுன்னு இருக்கு.." பரிவாகச் சொல்லியவளை..
'இவ என்னைக் கிண்டல் பண்றாளோ..' என்று உற்றுப் பார்த்தாள் அகல்யா..
சலனமில்லாத பூங்குழலியின் சாத்வீகமான முகத்திலிருந்து அவளால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை..
'இது முகமே முள்ளைக் கட்டி விட்டதைப் போல வெடுவெடுன்னுதான் இருக்குது... இதைப் புதிசா சொல்லிட்டதைப் போல இந்தப் பார்வை பார்க்குதே..'
அங்கே வந்த சோமசுந்தரம் நினைத்துக் கொண்டார்.. அவர் கையிலும் காபிக் கப்பைக் கொடுத்த பூங்குழலி.. மீதமிருந்த இரண்டு கப் காபிக் கோப்பைகளுடன் டிரேயை மகளின் கையில் திணித்தாள்..
"மாப்பிள்ளைக்கு காபியைக் கொடுத்துட்டு... அப்படியே நீயும் குடிச்சிரும்மா.. மாப்பிள்ளையைக் கவனிச்சுக்க.. காபி குடிக்கிறப்ப பேப்பர் படிச்சாலும் படிக்கலாம்.. எதுக்கும் பேப்பரையும் எடுத்துக்கிட்டுப் போ.."
பூங்குழலியின் சாதுர்யத்தில் அகல்யா முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பதைப் போலத் தவித்துப் போனாள்..
'இந்தப் பொம்பளை மகளுக்கு என்னமா சொல்லிக் கொடுக்குது.. சும்மாவே இந்த ஊர்மிளா ஆட்டி வைக்கிறபடி நரேன் ஆட ஆரம்பிச்சிருக்கான்.. இதில அவனுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து செய்யவும் ஆரம்பிச் சுட்டான்னா.. வேற வினையே வேண்டாம்..'
அவசரமாக ஊர்மிளாவை தடுத்து நிறுத்தப் பார்த்தாள் அவள்.. "நரேனுக்கு ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா பிடிக்காது.. அவன் காலைக் காபியைக் குடிச்சுக்கிட்டே பேப்பர் பார்க்க கீழே ஹாலுக்குத்தான் வருவான்.."
அவள் பேச்சில் ஊர்மிளா தயங்கி நிற்க.. ஒரு கணவனுக்கு காலைக் காப்பியைக் குடுக்கக்கூட மனைவியாகப் பட்டவளுக்கு இத்தனை தடைகள் வர வேண்டுமா என்று நொந்து போனாள் பூங்குழலி..
"இல்லையே அம்மா.."
எதிர்பாராத விதமாக அருண்குமாரிடமிருந்து அவளுக்கு உதவி கிடைத்தது..
"அண்ணனுக்கு ரூமைவிட்டு வெளியே வரவே பிடிக்காதே.. அவர் ரொம்பவும் பிரைவஸி மெயின்டெயின் பண்ணுகிறவராச்சே.. இந்நேரத்துக்கு காபியும்.. பேப்பரும் அவர் ரூமுக்குப் போயிருக்கனுமே.. சமயங்களில டிபனைக் கூட அவர் ரூமுக்கு கொண்டு வரச் சொல்லிருவாரே.. டைனிங் ஹாலுக்கு ரொம்ப ரேராத்தானே வருவார்..?"
அருண்குமாரின் கண்டிப்பான பேச்சில் விடுதலை உணர்வுடன் அந்த இடத்தை விட்டு அகன்று மாடிப் படிகளில் தாவி ஏறினாள் ஊர்மிளா.. தாமதித்தால் அவள் கையில் இருக்கும் காபிக் கோப்பையை அகல்யா பறிமுதல் பண்ணி விடுவாளோ என்ற பயத்துடன் மாடியேறும் மகளைப் பார்த்த பூங்குழலியின் மனம் வலித்தது..
இனி தினந்தோறும் இந்தப் போராட்டத்தை அவளின் மகள் அனுபவிக்க வேண்டுமா..? கட்டிய கணவனுக்கு காபி கொண்டு போகக்கூட போராட வேண்டுமென்றால் அவள் மகளின் நிலை என்ன ஆவது..?
ஊர்மிளா கதவைத் திறந்து கொண்டு உள்ளே போன போது நரேன் எழுந்திருந்தான்.. குளியலறைக்குள் கேட்ட தண்ணீர் சப்தத்தில் ஊர்மிளா கையிலிருந்த காபி டிரேயை அங்கிருந்த டீப்பாயில வைத்து விட்டு கதவை அடைத்துத் தாழிட்டாள்..
யார் கண்டது..? அகல்யா பின் தொடர்ந்து வந்து அந்த அறைக்குள் பிரவேசித்தாலும் பிரவேசிக்கலா மல்லவா..? அவள் எதையும் செய்வாளே..
மாடியை விட்டு கீழே இறங்கிப் போய் திரும்பி வருவதற்குள் மனதளவில் களைத்துப் போயிருந்தாள் ஊர்மிளா.. சோர்வுடன் கண்களை மூடியிருந்தவளின் கன்னம் தொட்டு தடவின இரண்டு கரங்கள்..
'நரேன்..!'
ஊர்மிளாவின் சோர்வெல்லாம் பறந்து விட்டது.. புத்துணர்வுடன் அவள் கண்திறந்தாள்..
"என்னடி.. நைட் தூக்கமில்லையா..?"
நரேந்திரன் கண் சிமிட்டியதில் முகம் சிவந்தாள் அவள்..
"இதை நாங்களும் கேட்போமில்ல.." என்றபடி காபியையும் பேப்பரையும் அவனிடம் நீட்டினாள்..
"குட்.. அருமையான பெண்டாட்டிடீ நீ.. எனக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு வந்திருக்கிற.." மனைவியை மெச்சியபடி அவற்றை வாங்கிக் கொண்டான் நரேந்திரன்..
பூங்குழலியின் வழி காட்டுதலால்தான் இந்தப் பாராட்டு கிடைத்திருக்கிறது என்ற நன்றியுணர்வு ஊர்மிளாவின் மனதில் எழுந்தது.. இதையெல்லாம் அவல்யாதான் சொல்லியிருக்க வேண்டும்.. எங்கே.. அவள்தான் முதலிரவை கணவனுடன் கழித்ததிற்கே கோட்டையைப் பிடித்து கொடியை நாட்டி விட்டாயா என்று கேட்டு வைக்கிறாளே.. இந்த வளமையையெல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பாள்..
"ஆனா.. நீ வர லேட்டாகிருச்சே.. ஏன்..?" பேப்பரில் இருந்து பார்வையை விலக்காமல் கேட்டான் நரேந்திரன்..
"ஊம்..? ஏழு கடலையும்.. ஏழு மலையையும் தாண்டி வரனுமில்ல.. அதுதான் லேட்.." அலுப்புடன் சொன்னாள் ஊர்மிளா..
"புரியலை.." பேப்பரிலிருந்து பார்வையை விலக்கி அவள் முகத்தில் பார்வையைப் பதித்தான் நரேந்திரன்..
ஊர்மிளா பெருமூச்சு விட்டாள்.. திருமணமாகி ஒருநாள் தான் ஆகியிருக்கிறது.. அதற்குள் கணவனின் சித்தியைப் பற்றி புகார் சொன்னால் அவள் கணவன் அவளை என்னவென்று நினைப்பான்..?
அவனுக்கும்.. அவளுக்கும் இடையே மாபெரும் அகழியாக அகல்யா இருக்கிறாள் என்ற உண்மையைச் சொல்ல முடியாமல்..
"ஒன்றுமில்லை.." என்று சொன்னாள் ஊர்மிளா..
அதுதான் அவள் செய்த மிகப்பெரிய தவறு.. அவள் சொல்லியிருக்க வேண்டும்.. அப்படிச் சொல்லியிருந்தால் ஒருவேளை அவள் நரேந்திரனைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்காதோ என்னவோ....



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -45
அழகான ராட்சசியே -45
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-45.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-45.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy