அழகான ராட்சசியே -44

44 உன்னோடு இருந்த மணித்துளிகளை உயிருள்ள வரை நினைக்க வைக்கும்.. அழகான ராட்சசி நீ.... பூக்கள் பரப்பப் பட்டிருந்த கட்டிலில் உட்கார...


44
உன்னோடு இருந்த மணித்துளிகளை
உயிருள்ள வரை நினைக்க வைக்கும்..
அழகான ராட்சசி நீ....

பூக்கள் பரப்பப் பட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்திருந்த நரேந்திரன் எழுந்து வந்தான்.. அறைக்குள் வந்து நின்ற ஊர்மிளாவின் கால்கள் நடுநடுங்கின..
திரும்பி ஓடிப்போய் விடலாமா என்று கூட நினைத்தாள்.. பூங்குழலி.. அவள் கை பிடித்துச் சொன்ன இதமான அறிவுரைகளே அவளை நிறுத்தி வைத்தன..
"நாளைக்குக் காலையிலே நானும், உன் அப்பாவும் ஊருக்குக் கிளம்பிப் போய் விடுவோம் ஊர்மிளா.. இனி உன் வாழ்க்கை உன் புருசனோடுதான்.. அதனால அவர் மனதைப் புரிஞ்சு நடந்துக்கம்மா.."
"நான் அவர் மனதைப் புரிந்துக்கிட்டவதான்ம்மா.."
ஊர்மிளாவின் வார்த்தைகளை இதமான சிரிப்போடு தலையாட்டி மறுத்தாள் பூங்குழலி..
"இல்லைடா கண்ணம்மா.. ஆண்களின் மனசு ஒன்று போல இருக்காது.. இது நாள்வரை காதலனங்கிற முறையில நீ கண்டு வைத்திருக்கும் மனசே வேற.. இனிப் புருசன்ங்கிற முறையில நீ காணப்போகிற மனசுதான் உண்மையான அவரின் மனசு.."
"என்னம்மா இப்படிச் சொல்றீங்க..? மனசில ரெண்டு வகை இருக்குமா..?"
"இருக்கும்... கல்யாணத்துக்கு முன்னாலே எதையெல்லாம் மனசு ரசிச்சுச்சோ.. விரும்புச்சோ.. அதையே.. கல்யாணத்துக்கு அப்புறமா வெறுத்து ஒதுங்க வைக்கிற மனசு நம்ம மனசு.."
"அம்மா.."
ஊர்மிளாவின் கைவிரல்கள் நடுங்குவதை உணர்ந்து கொண்ட பூங்குழலி மகளுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் அவளின் கை விரல்களைத் தட்டிக் கொடுத்தாள்...
"பயப்படாதேடா.. அவர் யார்..? உன் புருசன்.. நீ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவர்.. அவரைத் தவிர வேற யாருக்கும் கழுத்தை நீட்ட முடியாதுன்னு நீதானே சொன்ன..?"
"ஆனா அம்மா.. இந்தப் பணம்.. பகட்டு.."
"இதையெல்லாம் நீ ஏன் கண்டுக்கிற..? தாமரையிலைத் தண்ணீராய் இருக்க உனக்கு நான் சொல்லிக் கொடுக்கனுமா..? இதெல்லாம் இல்லாத ஒருத்தராத்தானே உன் புருசனை நீ நினைச்சுக் காதலிச்ச..? அதை மட்டும் அவருக்கு உணர்த்து.. போதும்.. உன் வாழ்க்கையிலே ஜெயிச்சுருவ.."
"நீங்க நாளைக்கே ஊருக்குப் போயாகனுமா..?"
"ஆமாண்டா செல்லம்.. இந்த ஒரு நாள் உன்கூட நாங்க இருந்ததே பெரிய விசயம்.. உனக்காக இருந்தோம்.. உனக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லி உன் புருசனிடம் அனுப்பி வைச்சு.. நீ வாழ்க்கையை வாழத் தொடங் கிட்டன்னு தெரிஞ்சபின்னாலேதானே என்னால கிளம்பிப் போக முடியும்..? அந்த ஒன்னுக்காகத்தான் ஒட்டாத இந்த சூழலிலே நாங்க இருந்தோம்.."
"அம்மா..."
"பயப்படாதே ஊர்மிளா... தாய்க்குத் தாயா... தகப்பனுக்குத் தகப்பனா உனக்கு உன் புருசன் இருப்பாரு.. எங்களை நீ மறந்திரனும்.. உன் புருசனை மட்டும் தான் நினைக்கனும்.."
பூங்குழலி எடுத்துச் சொன்னாள்.. மகளை குளிக்க வைத்து.. மெலிதான ஒரு செயினை மட்டும் அணிவித்து.. சன்ன ஜரிகையிட்ட சந்தன நிற பட்டுப்புடவையை உடுத்த வைத்து.. தலை முடியை தளர்வாகப் பின்னலிட்டு.. அதில் மல்லிகைச் சரத்தை தோளின் இருபக்கமும் வழியுமாறு வைத்து விட்டு.. கையில் பால் தம்பளரைக் குடுத்து அழைத்துக் கொண்டு போனாள்.. நரேந்திரனின் அறைவாசலை நெருங்கும்போது ஊர்மிளாவின் கால்கள் பின்னியதை உணர்ந்தவள் மெல்லிய சிரிப்புடன் மகளுக்கு தைரியம் சொல்லி அறைக்குள் அனுப்பி வைத்தாள்..
உள்ளே போன ஊர்மிளா அவளைக் கண்டதும் கட்டிலில் இருந்து எழுந்து வந்த நரேந்திரனைக் கண்டதும் வெடவெடத்தாள்.. பூங்குழலி சொல்லிய அறிவுரைகள் அவளை நிறுத்தி வைத்தாலும் அவள் விழிகளில் தெரிந்த மிரட்சி அவளைக் காட்டிக் கொடுத்தது..
அந்த மிரட்சியில் நரேந்திரனின் புருவங்கள் முடிச்சிட்டன.. யோசனையுடன் அவளையே பார்த்தபடி அசையாமல் நின்றவன் அறைக் கதவை தாழிட்டு விட்டு அவளருகில் வந்தான்.. ஊர்மிளா நகர முனைந்தாள்.. கண்களில் அதட்டலுடன் அவள் கைபற்றி அவன் தடுத்தான்..
"ஏன் இப்படி சில்லியா பிஹேவ் பண்ற..?"
அவனுடைய கோபத்தில் அவள் உதட்டைக் கடித்தபடி தலை குனிந்தாள்.. அவள் கைவிரல்களைப் பிடித்து நீவி விட்டவனின் கைவிரல்கள் மெதுவாக உயர்ந்து அவள் தோள் தொட்டு தழுவிக் கொண்டன.. அவன் மார்பில் ஊர்மிளாவை அவன் சாய்த்துக் கொண்டான்.. அவளது தளிருடல் நடுங்கியதில் முதுகில் தட்டிக் கொடுத்து அமைதி படுத்தினான்..
"வாட் ஹேப்பன்..?" அவள் காதோரமாக அதட்டினான்..
என்னவென்று அவள் சொல்வாள்..? எதையும் சொல்ல முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தவளைக் கட்டிலுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தான்.. அவள் பக்கத்தில் உட்கார்ந்தவன் அவள் விரல்களைப் பிடித்து நீவ ஆரம்பித்தான்.. அதில் அவளின் நடுக்கம் கொஞ்சமாக குறைந்தது..
"நீ இவ்வளவு சாப்ட்டானவளா..?" வியப்புடன் கேட்டான்..
ஊர்மிளா பதில் சொல்லவில்லை.. அத்தனை தினங்களாக அவளைக் காதலித்தவன்.. அவளால் காதலிக்கப் பட்டவன்.. கணவன் என்ற உறவில் இணைந்த பின்பு உரிமையுடன் அவளைத் தொடுகிறான்.. அதை அனுமதிப்பதில் அவளுக்கு ஏன் அத்தனை நடுக்கம்..?
"மோப்பக் குழையும் அனிச்சம்ன்னு அனிச்ச மலரின் மென்மையைப் பற்றி படிச்சிருக்கேன்.. அதுகூட முகர்ந்து பார்த்தால்தான் வாடுமாம்.. உன்னை இன்னும் முகரக்கூட இல்லையேடி.. நீ அதுக்குள்ள இந்த நடுங்கு நடுங்கிற..?"
விளையாட்டாய் கேட்ட வண்ணம் அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான்.. அவனது கரம் அவள் தோள் சுற்றியது.. குனிந்தவன் அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைச் சரத்தை முகர்ந்தான்..
"ஹ.." என்று கிறங்கினான்..
"மயக்கறடி.."
கட்டிலில் சரிந்து படுத்து அவளை இழுத்து மார்பில் போட்டுக் கொண்டான்.. பூமாலையாய் அவன் மார்பில் கிடந்தவளின் தோள் தடவியபடி காதோரமாக பேசினான்..
"உன் விருப்பமில்லாமல் எதுவும் நடக்காது ஊர்மிளா.. பயப்படாமல் இரு.. நான் யாருடி.. உன்னோட நரேன்.. என்கூட இருக்க உனக்கு இத்தனை பயமா..?"
'அதானே...'
தன் தயக்கம் தளர்வதை வியப்புடன் உணர்ந்தாள் ஊர்மிளா.. அவன் மார்பின் இதமான வெப்பம் அவனுடைய நெருக்கத்தை அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.. அவள் தோள் தடவிய அவன் கரங்களின் வலிமையான இறுக்கம் கலந்த ஸ்பரிசம் அவளுக்குள் கிளர்ச்சியை உண்டு பண்ணியது..
"நாம பேசிக்கிட்டு இருக்கலாம்.. சரியா..?"
அவள் காதோரமாக கிசுகிசுத்த நரேந்திரன் பேசிய பேச்சுக்கள் அவளை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றன.. சிவந்த அவளது காது மடல்களை தன் பற்களால் நெருடிய அந்தக் கள்வன் கண்சிமிட்டிச் சிரித்தான்..
ஊர்மிளா அவனிடம் ஒன்றிக் கொண்டாள்.. அவளது நெருக்கம் அதிகரித்ததில் அவனது வேட்கை அதிகரித்தது.. அவளை முழுவதுமாக இழுத்து தன மேல் கிடத்திக் கொண்டான் அவன்.. பஞ்சனை போல அவன்மீது படுத்திருந்த ஊர்மிளா மலர்பொதி போல கனமின்றி இருந்ததில்..
"காற்றைச் சாப்பிடறியாடி.." என்று அவள் காதோரமாக கேட்டு வைத்தான் நரேந்திரன்..
ஊர்மிளா வெட்கிச் சிவந்தாள்... அவள் மீது சுற்றியிருந்த நரேந்திரனின் கரங்கள் ஊர்ந்து அவள் மேனியெங்கும் பரவிப் படர்ந்ததில் அவளது உடல் கொதி கலனாக ஆனது..
காற்றுக் கூடப் புக முடியாத இடைவெளியில் அவளைத் தழுவியிருந்தவனின் உடலோடு உடல் பிணைந்து கிடந்த அந்த நிலையில் அவள் காதோரமாக அவன் சொன்ன..
"உனக்குப் பிடிக்கலைன்னா வேணாம்.. நாம சும்மா பிரண்ட்லியா பேசிக்கிட்டு இருப்போம்.." என்ற வாக்குறுதி அபத்தமாக தோன்றி வைத்தது..
"ம்ப்ச்.." அவள் அதிருப்தியுடன் முணுமுணுத்தாள்..
"என்னடி..? கன்வினியண்டா இல்லையா..? இப்படிப் படுத்துக்க.."
அவளை அக்கறையுடன் விலக்கி படுக்க வைத்தவன் அவளை நெருக்கி அணைத்துக் கொண்டதில் அவளுடைய வசதியைப் பற்றிய அவனது அதீத அக்கறை புலப்பட்டது..
ஊர்மிளா கிளர்ந்தாள்.. அவள் கன்னம் தொட்ட அவன் கையை அவள் விலக்கவில்லை... அவள் கன்னத்திலே அவன் முத்தமிட்டபோது தடுக்கவில்லை.. அவளது இதழோடு அவன் இதழ் சேர்த்த போது உராய்ந்த அவனது மீசையின் ஸ்பரிசத்தில் அவளது நடுக்கம் முற்றிலுமாக விலகி விட்டது..
"ஊர்மிளா.." அவள் காதோரமாக அவன் முணுமுணுத்த போது..
"ம்ம்ம்.." என்ற முணுமுணுப்பை பதிலாக அவள் தந்தாள்..
அந்த முணுமுணுப்பில் ஒளிந்திருந்த அனுமதிப்பில் நரேந்திரன் மனதுக்குள் நகைத்துக் கொண்டபடி அவளை ஆக்ரமித்தான்.. அவள்மீது சரிந்து அவன் படர்ந்து பரவிய போது.. அவளது உணர்வுகள் கரை உடைந்தன..
ஊர்மிளா கண்களை மூடிக் கொண்டாள்..
அதிகாலையில் அவள் கண் விழித்த போது அவளது சேலை கட்டிலுக்கு அடியில் சுருண்டு கிடந்தது.. நரேந்திரனின் வலிமையான கரங்கள் அவளை வளைத்திருந்தன.. வெகு அருகாமையில் தெரிந்த அவன் முகத்தில் அவள் மயங்கிப் போனாள்.. ராத்திரிப் பொழுதில் நடந்தவைகளை மனம் நினைவு கூர்ந்ததில் வெட்கத்துடன் அவன் கைகளை விலக்கப் போனாள்..
"ம்ம்ம்.."
அவன் புரண்டு படுத்தான்.. விழித்து அவள் முகம் பார்த்தான்.. கண்சிமிட்டினான். ஊர்மிளாவின் முகத்தில் லஜ்ஜை வந்தது.. அவள் உதட்டைக் கடித்தபடி எழுந்து கொள்ளப் போனாள்.. அவள் கை பிடித்து அவன் நிறுத்தினான்..
"எங்க போற..?"
அவன் கேள்வியில் அவளது வெட்கச் சிகப்பு அதிகமானது..
"விடிஞ்சிருச்சு.." முணுமுணுத்தாள்..
"ஸோ.. வாட்..?" அவள் மேல் அவன் கைவிழுந்தது..
"ஸோ வாட்டுன்னா என்ன அர்த்தம்..? எழுந்துக்க வேணாமா..?" அவன் கரத்தை விலக்க முடியாத தவிப்புடன் அவள் சொன்னாள்..
"விடிஞ்சா எழுந்துக்கணும்னு ஏதும் சட்டமிருக்கா..?" அவளை விடாமல் அவள் காதோரமாக அவன் கேள்வி கேட்டான்..
அவன் பிடித்த அந்த அடத்தை அவளுக்குப் பிடித்திருந்தது.. முதல் நாள் இரவின் இனிமையான நினைவுகள்.. அவன் முற்றிலுமாக அவளுடையவனாகி விட்டதை அறிவுறுத்தின...
அவன் முகத்தில் பிடிவாதமாக படிந்த முரட்டு முடிக்கற்றைக்குள் விரல் விட்டு கோதினாள் ஊர்மிளா.. அவள் பக்கமாக நகர்ந்து படுத்த நரேந்திரன் முற்றிலுமாக அவனை அவள் கைக்குள் ஒப்படைத்தான்..
ஒரு பெண்ணின் ஸ்பரிசத்திற்கு இவ்வளவு சக்தியா..?
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. அவன் முடிமீது அலைந்த அவள் கைகளுக்கு முடியை கொடுத்தவன்..
"உனக்கு தைரியம்டி.." என்றான்..
"எதுக்காம்..?" என்றாள் அவள்..
"தி கிரேட் நரேந்திரனின் முடியைப் பிடிச்சு ஆட்டறயே.."
"ஹலோ.. நானொன்னும் தி கிரேட் நரேந்திரனின் முடியைப் பிடிச்சு ஆட்டலை.. எனக்கு மட்டும் சொந்தமான என் புருசன் நரேந்திரனின் முடியைப் பிடிச்சுத்தான் ஆட்டறேன்.."
ஒற்றை விரலை உயர்த்தி அவனை மிரட்டுவதைப் போல சொன்னாள் ஊர்மிளா.. நரேந்திரன் அதை ரசித்தான்..
அவள் மீதான மயக்கம் அதிகரித்ததில் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் அவன்.. விடுபட முடியாமல்.. விடுபட விரும்பாமல்.. விருப்பத்துடன் அவளும் அவனிடம் சிக்கிக் கொண்டாள்.. அவன் தெரிய வைத்திருந்த அனைத்தையும் திரும்பவும் அவளுக்கு தெரிய வைக்க ஆரம்பித்தான்..
ஊர்மிளாவின் இமைகள் மூடிக் கொண்டன..
திருப்தியுடன் நரேந்திரன் விலகிப் படுத்தபின்பு விலகி எழுந்து குளியலறைக்குள் புகுந்தவளின் மனம் முழுவதும் சந்தோசம் நிரம்பியிருந்தது.. குளித்து முடித்து.. உடைமாற்றி.. ஈரக்கூந்தலை தளர்வாக பின்னலிட்டு.. கீழே இறங்கிச் செல்லும் வரை அந்த சந்தோசம் அவள் மனதில் நிலை கொண்டிருந்தது..
"பிஞ்சாக நானிருந்தேனே..
             பெண்ணாக மாற்றி விட்டானே..
    அஞ்சாமல் அணைத்து விட்டானே..
             அச்சாரம் கொடுத்து விட்டானே..
    அம்மம்மா.. ஏனடி தோழி..
             சொன்னானே ஆயிரம் சேதி..
    கண்ணாலே கண்டது பாதி..
             தன்னாலே வந்தது மீதி..
    அம்மம்மமா......."
அவளையறியாமல் ஆழ்ந்து பாடியபடி படிகளில் இறங்கியவள் யதேச்சையாக நிமிர்ந்து பார்த்து விட்டு அப்படியே நின்று விட்டாள்..
படிகளின் முடிவிலிருந்த ஹாலில் அவளையே துவேசமாக பார்த்தபடி நின்றிருந்தாள் அகல்யா.. அவள் கண்களில் தெரிந்த வெறுப்பில் ஊர்மிளாவின் பாடல் பாதியிலேயே 'டாட்டா' சொல்லி விட்டு காணாமல் போய் விட்டது..
மனதுக்குள் பயம் எட்டிப் பார்க்க.. சோமசுந்தரம் வந்து அங்கு நின்று அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே என்று முண்டாசுக் கவிஞன் போல மீசையை முறுக்கிக் கொண்டு பாடி அவளுடைய அச்சத்தை துரத்தி விட்டார்..
தந்தை சொல்லிக் கொடுத்த பாரதியின் கவி வரிகளை இறுக்கிப் பிடித்தபடி படியிறங்கிய ஊர்மிளா எதிரில் நிற்பது மாமியாராயிற்றே என்ற மரியாதையுடன் தயங்கி நின்றாள்.. அகல்யா சீறினாள்..
"என்ன..? ஒருநாள் ராத்திரியிலேயே கோட்டையைப் பிடித்து கொடியை நாட்டி விட்டதா மனதுக்குள்ள நினைப்பா..? இந்த ஒரு நாளைக்குள்ள எல்லாம் முடிஞ்சிராது.. இன்னும் நிறைய நாளிருக்கு.. எல்லா நாள்களும் உன்னோட நாள்களாக இருக்காது.."









Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -44
அழகான ராட்சசியே -44
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-44.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-44.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy