அழகான ராட்சசியே -42

42 உன்னிரு விழிகளிலே - என் மனதை கட்டிப் போடும்.. அழகான ராட்சசி நீ.... ஊர்மிளாவைப் பார்த்தாள் அகல்யா.. அவள் முகம் சுருங்கியது....


42
உன்னிரு விழிகளிலே - என்
மனதை கட்டிப் போடும்..
அழகான ராட்சசி நீ....


ஊர்மிளாவைப் பார்த்தாள் அகல்யா.. அவள் முகம் சுருங்கியது.. புருவங்கள் சுளித்தன... நரேந்திரன் ஊர்மிளாவையே பார்த்துக் கொண்டிருந்ததை அகல்யாவும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. அதை உடைக்க வேண்டும்.. ஊர்மிளாவின் முன்னால் நரேந்திரனிடம் அகல்யாவுக்கு இருக்கும் செல்வாக்கை உணர்த்த வேண்டும்.. பார்.. உன் கணவன் என் காலடியில்.. என்பதை சொல்லாமல் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அவள் அப்படிச் சொன்னாள்..
அதை ஒரே பார்வையில் ஊர்மிளா தகர்த்து விட்டாளே...
அகல்யாவின் மனதில் வெஞ்சினம் உருவானது அப்போதுதான்.. அதுவரை ஆட்டம் காணாத அவளது அதிகாரம் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டதோ என்ற பதட்டம் அவள் மனதில் எழுந்தது.. அவளுக்குத் தெரியாமல் நரேந்திரன் திருமணத்தை முடிவு செய்து அதை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தியும் காண்பித்து விட்டதில் அவள் மனதில் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது..
'எப்படி இது நடந்தது..?'
திருமணத்திற்கு முந்தைய நாள்வரை.. அதே ஊரில்.. மிகப்பெரிய திருமண மண்டபத்தில்.. ஊர், உலகத்தை யெல்லாம் அழைத்து.. அவர்களுக்கு மூன்று நாள்கள் விருந்து வைத்து நரேந்திரன் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்று அகல்யாவுக்குத் தெரியவே தெரியாது..
வெளிநாடுகளுக்கு அழைப்பிதழ்கள் போயிருக்கின்றன.. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.. உள்ளூரில் இருப்பவர்களை நரேந்திரன் நேரடியாகவே போய் அழைத்திருக்கிறான்..
ஆனால்.. அகல்யாவின் கையில் மட்டும் திருமணத்திற்கு முதல்நாள்தான் அழைப்பிதழைக் கொடுத்தான்..
"லவ் மேரேஜ்.. டிசைட் பண்ணிட்டேன்.. நாளைக்கு மேரேஜ் நடக்கப் போகுது.. உங்களுக்கும்.. தம்பி, தங்கைக்கும் டிரஸ், ஜ்வல்ஸ் எடுத்திருக்கேன்.. நீங்க ரெடியாகிக்கங்க.."
இப்படிச் சொன்னவனிடம் எப்படி நீ இதை எங்களிடமிருந்து மறைக்கலாம் என்று கேட்க முடியாமல் வாயடைத்து நிற்க நேர்ந்ததில் அகல்யாவின் மனதுக்குள் புயலடிக்க ஆரம்பித்து விட்டது..
"கல்யாண மண்டபத்தை ஆறுமாதத்துக்கு முன்னாடியே ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க மேம்.."
திருமணமண்டபத்தின் மேனேஜருக்கு யாரோ போல போன் போட்டுக் கேட்டதில் கிடைத்த தகவலில் அவளின் கொதிப்பு அதிகமாகியது..
'ஊர், உலகத்துக்கே தெரிஞ்சிருக்கு, எனக்குத் தெரியலை..'
நரேந்திரன் எப்போதுமே கெட்டிக்காரன்தான்.. அவனுடைய திருமண நிகழ்வில் அவன் காட்டி விட்ட அதீத கெட்டிக்காரத்தில் அவள் மனம் புழுங்கினாள்..
'இவனோட அப்பனுக்கும் எனக்கும் கோவிலில் கல்யாணம் நடந்துச்சு.. இவனுக்கு மட்டும் இப்படி ஆடம்பரமான மஹாலில் கல்யாணம் நடக்கனுமா..?'
மனதுக்குள் வெந்து போனவளுக்கு.. நரேந்திரனின் தாயான நளினிக்கும்.. அவனுடைய தந்தையான செழியனுக்கும் நடந்த திருமணம் இதைப் போல உலகத்தையே கலக்கிய மிகப் பிரம்மாண்டமான திருமணமாகத்தான் இருந்தது என்ற உண்மை வெகு வசதியாக மறந்து போனது..
அந்தப் புழுக்கத்துடனே இருந்தவளுக்கு ஊர்மிளாவைப் பார்த்த முதல் நொடியிலேயே மிளகாயை அரைத்து உடல் முழுவதும் அப்பிவிட்டதைப் போல எரிந்து வைத்தது..
ஊர்மிளா அழகானவளாக இருந்தாள்.. பேரழகோடு இருந்தாள்.. அவளது பார்வையும்.. சிரிப்பும்.. நரேந்திரனைக் கட்டிப் போட்டு வசியம் பண்ணி வைத்திருந்தன.. இமைக்கும் ஒவ்வொரு நொடியிலும்.. அவளுடைய விழிகள் நரேந்திரனின் பக்கமே வேலி போட்டுக் கொண்டிருந்தன..
அவனும் அந்த வேலியை மீறவில்லை என்பதுதான் அகல்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.. யாராலும் கட்டுப் படுத்த முடியாத காற்றைப் போன்றவன் அவன்.. அவனையும் கட்டுப்படுத்தி ஒரிடத்தில் அசையாமல் உட்கார வைத்துவிடும் வல்லமை படைத்தவளாக ஊர்மிளா இருந்தாள்..
அகல்யாவினால் என்றுமே நரேந்திரனைக் கட்டுப் படுத்த முடிந்ததில்லை.. அவன்தான் அவளை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான்.. அதையும் உடைத்து தன் சாகத்தினால் அந்த வீட்டில் எஜமானியாக கோலோச்சிக் கொண்டிருந்தாள் அகல்யா..
அந்தப் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று முதன் முதலாக அஞ்ச வைத்து விட்டாள் ஊர்மிளா..
ஒரே ஒரு பார்வையில் அகல்யாவின் சதித்திட்டத்தை முறியடிக்கச் சொல்லி நரேந்திரனுக்கு ஊர்மிளா கட்டளையிட முடியுமானால்.. அவள் எவ்வளவு சக்தி வாய்ந்தவளாக இருக்க வேண்டும்..? நரேந்திரனின் மீதான அவளுடைய ஆளுமை எந்த அளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்..?
உதட்டைக் கடித்தபடி எதுவுமே நடக்காததைப் போல அகல்யா திருமண வரவேற்பிற்கு கிளம்பி விட்டாள்.. அதில் பூங்குழலி அதிகமாக பயந்தாள்..
"எப்படிங்க இப்படி இருக்காங்க.. நாமளா இருந்தா இப்படி ஆகிருச்சேன்னு இடிஞ்சு போய் உட்கார்ந்துருவோமே.."
"அதுதான் அவங்களுக்கும், நமக்கும் இருக்கிற வித்தியாசம்.. எது நடந்தாலும் தூசைத் தட்டுகிறதைப் போல தட்டி விட்டுட்டு போய்கிட்டே இருக்கிறாங்க எதையும் ஜெயிச்சிருவாங்கடி.. ஐயோன்னு உட்காருகிறோம் பாரு.. அந்த இடத்திலதான் நாம தோற்க ஆரம்பிக்கிறோம்.."
"இப்படியாப்பட்ட வெற்றி நமக்கு வேணாம்.."
"அவங்களுக்கு வேண்டியிருக்கே.."
காத்திருந்த கார்களில் ஏறும் போது.. கவனமாக அகல்யா விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரில் ஏறிக் கொண்டாள்.. அர்ச்சனாவையும், அருண்குமாரையும் அவளுடன் அழைத்துக் கொண்டாள்..
புருவங்கள் முடிச்சிட நரேந்திரன் தடுத்து நிறுத்த முனைந்தபோது சோமசுந்தரம் அவனை தடுத்து விட்டார்..
"நாங்க இந்தக் காரில் வந்துக்கிறோம்.. காரில் சிறிசு என்ன.. பெரிசு என்ன..? எல்லாமே நாலு சக்கரத்தில்தான் ஓடப்போகுது.. ஆட்டோவில் போகிறதே ஆடம்பரம்ன்னு நினைக்கிறவங்க நானு.. உங்கம்மா என் கொள்கையை புரிஞ்சு வைச்சிருக்காங்க.. அதுக்கு அவங்களுக்கு நன்றியில்ல சொல்லனும்..?"
இலகுவாக பேசிவிட்டு வேறு ஒரு காரில் பூங்குழலியுடன் அவர் ஏறி அமர்ந்தார்.. ஊர்மிளா நிம்மதியான மனதுடன் நரேந்திரனை பின்பற்றினாள்..
கார்கதவை அவளுக்காக திறந்து விட்ட நரேந்திரனின் விழிகளில் காதல் மின்னியது.. ஊர்மிளாவின் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்தவன் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக் கொண்டான்.. காதலித்த காலங்களில் அவன் அதுபோல செய்ததுண்டுதான்.. அப்போதெல்லாம் சிரித்தபடியே ஊர்மிளா நகர்ந்து அமர்ந்து கொள்வாள்.. அப்போது அப்படிச் செய்யாமல் வெட்கப் புன்னகையுடன் முகம் சிவந்தவளை ரசனையுடன் அவன் பார்த்தான்..
அவள் தோளைச் சுற்றியிருந்த அவன் கரம் அழுந்தியதில் ஊர்மிளாவின் அடிவயிற்றில் உணர்வுகள் கிளர்ந்தன.. பட்டாம்பூச்சிகள் ஒன்று சேர்ந்து பறக்கும் படபடப்பை அவளுக்குள் உலர்ந்தவளுக்கு நா வறண்டு போனது.. லஜ்ஜையில் அவள் முகம் முன்னிலும் அதிகமாக சிவந்தது..
"என்னடி.. இப்பத் தள்ளி ஓட மாட்டேங்கிற..?" நரேந்திரன் அவள் காதில் கிசுகிசுத்தான்..
காருக்குள் டிரைவரும் இருக்கும் நினைவில் பேச்சு வராமல் தவித்தாள் ஊர்மிளா.. அவனுடைய கள்ளத்தனத்தில் அவன் மீதான காதல் அவளுக்குப் பெருகியது..
"என்ன.. பதிலைக் காணோம்.." அவன் சீண்டினான்..
"ஸ்ஸ்ஸ்.. டிரைவர்.." அவள் முணுமுணுத்தாள்..
"டிரைவர் இருந்தா என்ன..? வெறும் பேச்சுத்தானே.. அதுக்குக் கூட தடாவா..?"
அவன் விழிகள் அவளை மேய்ந்ததில் பேச்சுக்கு அடுத்தபடியான செயல்முறைகளின் வழிமுறைகள் தெரிந்தன..
தாள முடியாத தவிப்புடன் அவன் கையைப் பிடித்துக் கிள்ளினாள் ஊர்மிளா.. நரேந்திரனின் விழிகள் வெளிச்சம் காட்டின..
இதுபோன்ற அணுகுமுறைகளினால்தான் அவனை அவள் வீழ்த்தினாள்.. அவன் பிறந்து.. வளர்ந்து.. பழகிய சூழலில் இதுபோன்ற அணுகுமுறைகள் இருந்ததில்லை..
நேரடியான.. ஆளை வெறுக்க வைக்கும் அணுகுமுறைகள் அவை..
இதுபோன்ற காதலும், ரகசியமும்.. குழைந்தெடுத்தக் கலவையில் ரகசியமாக விரல் தொடும் ஸ்பரிசத்தில் விதிர்த்து நாணும் பெண்மையின் மிளிர்வு பொங்கும் நாணத்துடன் விரல் தொட்டுக் கிள்ளும் இன்ப சுகானுபவங்களுக்கு அவனுலகில் இடமிருந்ததில்லை..
ஊர்மிளாவின் ஓரவிழிப் பார்வையில் அவன் சொக்கிப் போனான்.. இன்னும் அதிகமாக அவளை நெருங்கி அமர்ந்தான்.. அவனது உராய்வை உணர்ந்த அவள் முகத்தின் வெட்கச் சிகப்பில் அவளைக் கடித்துத் தின்று விடும் ஆசை அவனுக்குள் மிகுந்தது..
"ஹோட்டல் வந்தாச்சு.. சார்.."
காரை நிறுத்திய பின்னாலும்.. இறங்க மனமில்லாமல் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து டிரைவர் சொன்னான்..
"உங்களாலேதான்.."
ஊர்மிளா அதற்கும் ஒரு சொல்லச் சிணுங்கலோடு அவன் கையைக் கிள்ளினாள்.. கிள்ளிய விரலுடன் அவன் விரல் பிணைய முனைய.. அவள்விரல் தயங்கிப் பின் வாங்கியது..
"இறங்க வேணாமா..?" ஏக்கத்துடன் சொன்னாள்..
அவன் காட்டிய நெருக்கம் அவளுக்குள் தாபத்தீயை மூட்டி விட்டிருந்தது.. அவனுக்கோ அந்த தாபம் தகிக்க ஆரம்பித்திருந்தது.. கட்டுப்பாடு காத்த கண்ணியமான காதலில் அத்தனை நாள்களாக சிறை பட்டிருந்தவன்.. அன்று அந்தக் கட்டுப்பாட்டை தகர்த்து எறியும் வேளை நெருங்கி விட்டதில் துடிப்போடு இருந்தான்.. அவனுக்கே.. அவனுக்கான.. அந்தப் பேரழகியை ஆண்டுவிடும் வேட்கையோடு இருந்தான்.. அதற்கும் இடைவெளி கொடுத்த திருமண வரவேற்பில் அவனுக்கு கோபம் வந்தது..
"இப்ப ரிசப்சன் வேணும்னு யார் கேட்டது..?"
கோபமான அவனது கேள்வியில் வாய்மூடி 'களுக்' கென்று சிரித்தாள் ஊர்மிளா..
"நிச்சயமாய் நான் கேட்கலை.. இது உங்க ஊர்.."
இப்படிச் சொன்னவளை அவன் எரித்து விடுவதைப் போல பார்த்ததில் அவள் திகைத்துப் போனாள்.. அவனே முதலிரவு வேளை தள்ளிப் போய் கொண்டிருக்கிறதே என்ற கோபத்துடன் இருந்தான்.. அதில் அவள் வேறு கேள்வி கேட்டு வைத்து.. கோபம் காட்ட வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்தவனுக்கு வாய்ப்பை அளித்து விட்டாள்..
"என் ஊரா..? அப்ப உன் ஊர் எதுடி..? திருச்சியா..?"
ஒரு மாதிரியான ஆழ்ந்த குரலில் அவன் வினவியதில் ஊர்மிளாவுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவளுடைய ஊர் திருச்சிதானே.. அதை அவனிடம் சொன்னபோது இல்லையென்றான் அவன்..
"இனிமே உன் ஊர் பெங்களூர்தான்.."
'ஓ.. இவன் இப்படி வருகிறானா..?'
அவன் கண்டிப்பில் அவள் முகம் மலர்ந்து போனாள்.. அவனுடைய உரிமையான கோபம் அவளைத் தாலாட்டியது..
"போதுமே.. பயந்தே போனேன்.."
அவளின் கொஞ்சலான சிணுங்கலில் அவன் கோபம் பறந்தது.. காரை விட்டு இறங்கி.. சுற்றி வந்து ஊர்மிளாவுக்காக கார் கதவைத் திறந்து விட்டு வரவேற்பதைப் போல கைவிரித்தான்..
ஒருவழியாக முதலாளி காரை விட்டு இறங்கி விட்டார் என்று காரைக் கிளப்பப் போன டிரைவர்.. அதை மறந்து போனவனாக '' வென்று வாய் பிளந்து நரேந்திரனின் செய்கையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்..
வெட்கத்துடன் அவனை சிரிக்கும் கண்களால் கடிந்து கொண்ட ஊர்மிளாவின் கைவிரல்களோடு விரல் கோர்த்துக் கொண்டவன் உலகையே வென்றுவிட்ட பெருமிதத்துடன் ஹோட்டலின் படிகளில் ஏறினான்.. அதை உள்ளேயிருந்து கண்ணாடி சுவரின் மூலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அகல்யாவின் முகம் தீப்பிழம்பானது..
ரிசப்சன் நடந்த ஹாலுக்குள் உலகில் உள்ள அத்தனை பிரபலங்களும் வந்திருந்தார்கள்.. திரைப் படத்துறையின் அத்தனை பிரமுகர்களும்.. முன்னனி நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.. அவர்களுக்கு மத்தியில் நரேந்திரனுடன் இணையாக நடந்து அவன் அறிமுகப் படுத்தியவர்களிடம் லேசாக சிரித்து.. கை குவித்து ஒரிரு வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா..
அவர்களை அணுக முடியாமல் கூட்டம் சூழ்ந்து கொண்டதில் அர்ச்சனாவும்.. அருண்குமாரும்.. மூலைக் கொருவராக அடையாளம் தெரியாமல் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்கே அப்படியென்றால் அகல்யாவின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. அவளை யாரோ எவரோ என்று மற்றவர்கள் பார்க்கும் அளவிற்கு அவள் தள்ளி நின்று கொண்டிருந்தாள்..
சோமசுந்தரமும்.. பூங்குழலியும் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களின் கதையே வேறு..
அவர்கள் இயல்பாகவே ஆரவாரத்திலிருந்து ஒதுங்கி நிற்கும் எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்கள்.. ரிசப்சன் ஹாலுக்குள் நுழைந்ததுமே அவர்கள் ஓரமாக ஒதுங்கி நின்று நிகழ்வுகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்..
அகல்யா அப்படியல்ல.. அவள் ஆரவாரத்தின் மத்தியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவள்.. செழியன் இருந்த வரையில் அது அவளுக்குக் கிடைத்ததில்லை.. அவர் போன பின்பு.. நரேந்திரனின் மூலமாக அவள் விரும்பிய ஆரவாரமும்.. ஆடம்பரவாழ்வும் அவளுக்கு கிடைத்து விட்டன.. அதைத் தக்க வைத்துக் கொள்ளும் சாதுர்யத்தை அவள் கற்று வைத்திருந்தாள்..
அன்றும் அதுபோலவே நரேந்திரனின் அருகே நிற்கும் முயற்சியில் அவள் ஈடுபட்டிருந்தாள்.. அருண் குமாரையும்.. அர்ச்சனாவையும் இழுத்து விட்டாள்.. அவர்கள்தான் நரேந்திரனின் குடும்பம் என்ற பிம்பம் மீடியாவின் பார்வையில் விழ வேண்டும் என்று பாடுபட்டாள்.. அது கலைந்து விட்டது..










Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -42
அழகான ராட்சசியே -42
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-42.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-42.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy