தஞ்சமென வந்தவளே -31

31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...


31

காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அருகிலிருந்த பிரபாவதிக்கு பார்வை மூலம் கடத்திவிட்டாள் அவள்.. அவர்களின் மனம் நிம்மதியடைந்தது..
மறுவீட்டு விருந்து என்று தனியே எதுவும் வேண்டாமென்றும்.. முறைப்படி கொடுக்க வேண்டிய பலகாரவகைகளை அன்றே அரண்மனையிலிருந்து பிரபாவதி அனுப்பி வைத்து விட வேண்டுமென்றும் பேசி முடிவு எடுக்கப்பட்டது..
மறுநாள் மொத்தக் குடும்பமும் அரண்மனைக்கு குடிபெயர்வதாக இருந்ததால்.. வீட்டில் இருந்த பொருள்களை பாதுகாப்பாய் வைக்கும் வேலைகளில் வேலையாள்களை இறக்கி விட்டாள் மிருதுளா.. மறு நாளிலிருந்து அவர்கள் அரண்மனைக்கே வேலைக்கு வந்துவிட வேண்டுமென்று அவர்களிடம் சொல்லப்பட்டது..
பூஜையறையில் இருந்த வெள்ளிக் குத்துவிளக்குகளைத் துடைத்து அட்டைப் பெட்டிகளில் பாதுகாப்பான பருத்தித் துணிகளால் அவற்றைச் சுற்றி அடுக்கி பீரோவில் வைத்து பூட்டி முடித்த சாரதா.. ஓய்வாக மாடிபால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தாள்..
அங்கே பிரதாபவர்மனும் சுகந்தியும் நின்று பேசிக் கொண்டிருந்தது அவள் பார்வையில் பட்டது..
சுகந்தி பிரதாபவர்மனிடமிருந்து தள்ளி நிற்கவில்லை.. மிக அருகில் நின்று கொண்டிருந்தாள்.. அவள் பேசப்பேச.. அதை கவனமாக காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரதாபன்..
'என்ன பேசிக்கிறாங்க..?'
எதுவாக இருந்தாலும் அதை தோட்டத்துச் செடிகளின் மறைவில் வெகு அருகில் நின்று ரகசியமாகப் பேசிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற கோபம் அவள் மனதில் எழுந்தது..
அந்தக் காட்சியைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் அவளுக்கும் பிரதாபனுக்குமான அறைக்குள் அவள் போய் விட்டாள்.. சற்றுப் பொறுத்து அவளைத் தேடிக் கொண்டு அறைக்கு வந்த பிரதாபனின் முகத்தில் தோட்டத்தில் நடந்த நிகழ்வுகளின் சாயலைத்தேடி ஏமாந்தாள் சாரதா.. எதுவும் நடக்காததைப் போன்ற முகபாவனையுடன் அவளைப் பார்த்தவன்..
"இங்கே என்னடி பண்ணிக்கிட்டு இருக்க..?" என்று கேட்டபடி அவளை நெருங்கினான்..
"ஒன்னுமில்ல.." அவள் முணுமுணுத்தபடி விலகி வெளியே போகப் போனாள்..
"ஏய்ய்.. நில்லு.."
அவள் கைபற்றித் தடுத்தவனின் முகத்தில் கோபம் இருந்தது.. அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தவனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது..
"இப்ப என்ன..?" அதட்டினான்..
"என்னன்னு கேட்டா.. நான் என்னத்தச் சொல்றது..?"
"உன் மண்டைக்குள்ளே குடையறது என்னன்னு சொல்லு.."
"ஒன்னா.. ரெண்டா.. சொல்கிறதுக்கு..? அது இருக்கு ஆயிரம்.."
அவள் அலுத்துக் கொண்ட அந்த நேரம் பார்த்தா.. அவனது செல்போனின் அழைப்பு ஒலியாக அந்தப் பாடல் ஒலிக்க வேண்டும்..?
"ஒன்றா.. இரண்டா.. ஆசைகள்..?"
கேள்வி கேட்ட செல்போனை எடுத்துப் பேசியவனின் முகம் இறுக்கத்துக்குப் போய் கொண்டிருந்தது.. மறுமுனையின் பேச்சுக்குப் பதில் சொல்லாமல் இவன் முகம் இறுக 'ம்ம்ம்' என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.. பேசி முடித்ததும் செல்போனை கட்டிலில் விட்டெறிந்து விட்டு குளியலறைக்குள் புகுந்து விட்டான்..
'யார்..?'
அப்படியொரு பாடலை ரிங்டோனாக அவன் வைத்திருக்கும் அந்த நபர் யாராக இருக்கும் என்று அறியும் ஆவல் அவளுக்குள் ஏற்பட்டது..
அதை அறிய வேண்டுமானால் அவனது செல்போனை அவள் எடுத்துப்பார்க்க வேண்டும்.. கணவனின் போனாக இருந்தாலும்.. அதைச் செய்ய அவளுக்கு மனம் வரவில்லை..
சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தாள்.. அவளுக்குப் பக்கத்திலிருந்த செல்போன் மீண்டும்.. "ஒன்றா.. இரண்டா.. ஆசைகள்..?" என்று பாட ஆரம்பித்தது..
யதேச்சையாகத்தான் அவள் திரும்பிப் பார்த்தாள்.. அதில் ஒளிர்ந்த பெயரில்.. அவளது மனம் இருண்டது..
'ஊர்மிளா அழைக்கிறாள்..' என்றது அவனது செல்போன்..
'இவளா..?'
அவள் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் செல்போனின் ஒலியில் அவசரமாக குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் பிரதாபன்.. போனை எடுத்தவன் சாரதாவைக் கவனிக்காமல் அதைக் காதுக்கு கொடுத்தான்..
"அதான் வர்றேன்னு சொன்னேனில்ல.. அதுக்கப்புறமும் எதுக்காக திருப்பித் திருப்பி போன் பண்ற..?" போனில் சீறினான்..
"......"
"தெரியுது.. தெரியுது.. அங்கதான் வந்துக்கிட்டு இருக்கேன்.. நீ திரும்பவும் போன் பண்ணாதே..."
போனை அணைத்து சட்டைப் பைக்குள் போட்டவன் சாரதாவை மறந்து போனவனாக அறையை விட்டு வெளியேறி விட்டான்..
அவளிடம் சொல்லிக் கொண்டு போக வேண்டு மென்று சாரதா நினைக்கவில்லைதான்.. அவனுக்கும்.. அவளுக்கும் திருமணம் முடிந்து முழுதாக ஒரு நாள்தான் ஆகியிருந்தது.. அதற்குள் இதையெல்லாம் அவள் எதிர்பார்க்கக் கூடாதுதான்.. இருந்தும் அவளுக்கு மனம் வலித்தது..
தனியாக இருந்தால் அந்த நினைவுப் புதைகுழிக்குள் அமிழ்ந்து மூச்சுத் திணறி விடுவாளென்ற பயம் மேலிட.. சாரதா மிருதுளாவின் அறைக்குப் போனாள்.. கட்டிலில் படுத்திருந்த மிருதுளா அவளைக் கண்டதும் பிரியத்துடன்..
"வாம்மா.. பிரதாப் எங்கே..?" என்று கேட்டாள்...
அவளின் அந்தக் கேள்வியை சாரதாவுக்குப் பிடித்திருந்தது.. பிரதாபன் மிருதுளாவின் மகன்.. ஆனாலும் அவனைப் பற்றிய விவரங்களை அவள் சாரதாவிடம் தான் கேட்கிறாள்...
ஏனென்றால்.. பிரதாபன் சாரதாவின் கணவன்..!
அந்த நினைவே சாரதாவுக்கு இனித்தது.. அந்தப் புதுஉரிமையில் அவள் மனம் திளைத்தாள்.. அவள் மனதிலிருந்த புளுக்கம் லேசாக விலகியது...
"வெளியே போயிருக்கார் அத்தை.." என்று பதில் சொன்னாள்..
"எங்கேன்னு சொன்னான்..?" அடுத்த கேள்வி மிருதுளாவிடமிருந்து வந்தது..
அவன் எங்கே போயிருக்கிறான் என்ற நினைவில் விலகியிருந்த அவளின் மனப்புழுக்கம் ஓடோடி வந்து அவளை ஆட்கொண்டு மூச்சுத் திணறவைத்தது...
"சொல்லலை அத்தை..."
பொய் இல்லாத பதிலைச் சொன்னாள் சாரதா.. அவளின் முகவாடலைக் கவனித்த மிருதுளா...
"எப்படி அவன் உன்னிடம் சொல்லாம போகலாம்..?" என்று கோபப்பட்டாள்..
"அவசர வேலையாய் இருக்கலாம்.." ஒட்டாத குரலில் பேசினாள் சாரதா..
"என்னதான் அவசரமா இருந்தாலும் கட்டின பெண்டாட்டியிடம் சொல்லாம எப்படி அவன் வெளியே போகலாம்..? வரட்டும்.. பேசிக்கறேன்..."
மிருதுளா கோபப் பட்டுக் கொண்டிருந்த போது அந்த அறையில் இருந்த சுகந்தி..
"அவர் அருவிக்கரைக்கு போயிருக்காரும்மா.." என்று சொன்னாள்...
சாரதாவின் முகம் மாறியது.. வீட்டின் எஜமானன் எங்கே போயிருக்கிறான் என்ற கேள்விக்கு அவன் தாலி கட்டிய மனையினால் பதிலைச் சொல்ல முடியவில்லை.. அங்கே வேலை பார்ப்பவள் அந்தப் பதிலைத் தெள்ளத் தெளிவாக கூறுகிறாள் என்றால் அவள் அதை என்னவென்று சொல்லித் தொலைப்பாள்..?
ஒரு திரைப்படத்தில் இதே போல வரும் காட்சியில் சொல்லப் பட்டிருப்பதைப் போல பேசாமல் வீட்டுச் சாவியை சுகந்தியிடம் கொடுத்துவிட்டு.. அவள் கையில் இருந்த மருந்து மாத்திரைப் பாட்டிலை தான் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசித்தாள் சாரதா...
அதற்குள் மருமகளின் மனநிலையை அவதானித்து விட்ட மிருதுளா..
"உனக்கு எப்படித் தெரியும்..?" என்று கடுமையாக கேட்டாள்..
"ஐயாதான் சொன்னாரும்மா..."
அடிக்கண்ணால் சாரதாவைப் பார்த்தபடி பதில் சொன்ன சுகந்தியின் விழிகளில் தெரிந்த மகிழ்வில் கொதித்துப் போனாள் சாரதா..
"சரி.. நீ வெளியே போ..."
"நீங்கம்மா..?"
"சாரதா பார்த்துக்குவா.."
அந்த ஒரு சொல்லில் சுகந்தியின் முகம் விழுந்து விட்டது.. ஏதோ ஒரு வகையான ஆறுதல் மனதுக்குள் படிவதை உணர்ந்தாள் சாரதா.. யோசனையுடன் கண்மூடிப் படுத்திருந்த மிருதுளாவின் நெற்றியை அவள் இதமாக பிடித்து விட்டுக் கொண்டிருந்த போது ரவிவர்மன் உள்ளே வந்தார்.. சாரதாவைக் கண்டதும் புன்னகைத்தார்..
"சாப்பிட்டியாம்மா.." இதமாக வினவினாள்..
"இல்லை மாமா.." சாரதா எழுந்து நின்றாள்...
"உட்காரும்மா.. மரியாதை மனசில இருந்தாப் போதும்.. ஒரே குடும்பமாய் ஆகியாச்சு.. அரண்மனையில எல்லோருமே சேர்ந்து இருக்கனும்னு முடிவு பண்ணியாச்சு.. இதில எத்தனை தடவைதான் நீ எழுந்து.. எழுந்து நிற்ப..? உன் அப்பாவைக் கண்டால் பாசம் காட்டுவியா..? எழுந்து நிற்பியா..?" உரிமையுடன் கடிந்து கொண்டார் ரவிவர்மன்..
சாரதாவின் முகம் மலர்ந்தது.. தகப்பனைப் போல பாசம் காட்டும் மாமனார்.. தாயைவிட கனிவு காட்டும் மாமியார்..
இந்த சொந்தங்கள் கிடைக்க அவள் கொடுத்து வைத்திருக்கிறாள் அல்லவா..?
அந்த நினைவு தந்த மலர்ச்சியோடு நின்றவளிடம்..
"சாரும்மா.. ஹாலில் இருந்த வெண்கலச் சிலைகள் மேலே வெள்ளைத் துணிகளை போர்த்தி வைக்கச் சொல்லியிருந்தேனே.. தாமரை அதைச் செய்து விட்டாளான்னு பார்த்துட்டு வர்றியா..?" என்று உத்தரவிட்டாள் மிருதுளா..
"இதோ அத்தை..."
சாரதா வேகமாக அறையை விட்டு வெளியேறினாள்.. தாமரை செய்து வைத்திருந்த வேலைகளின் திருத்தத்தில் மனத்திருப்தியுற்று அவளை மனதாரப் பாராட்டியவள்.. அதைப் பற்றிச் சொல்வதற்காக மிருதுளாவின் அறைக்குள் போனபோது...
"சுகந்திக்கான பணத்தை செட்டில் பண்ணிருங்க.." என்று ரவிவர்மனிடம் மிருதுளா சொல்லிக் கொண்டிருந்தாள்..
"ஆகட்டும்.." மனைவியின் பேச்சுக்கு தலையாட்டியபடி மருமகளைப் பார்த்த ரவிவர்மன் புன்னகைத்தார்..
"இதைப் போலவே தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையா பிரதாபனையும் நீ மாற்றிக் காட்டனும்.. செய்வியா..?"
கணவரின் கேலியில் மிருதுளாவின் கண்கள் மின்னின..
"அடேங்கப்பா.. அப்பாவுக்கும்.. மகனுக்கும்.. எதுவும் தெரியாதாம்.. இவங்க தலையாட்டி பொம்மைகளாம்.. அதை நாம் நம்பிடனுமாம்.. கேட்டியா சாரதா..?"
மருமகளுடன் அவள் கூட்டுச் சேர்ந்து கொண்டாள்.. சாரதாவுக்கு சந்தோசமாக இருந்தது.. அந்தப் பிணைப்பில் அவள் தன்னைப் பிணைத்து கொண்டாள்... மதிய உணவுக்கு வீடு திரும்பிய பிரதாபனிடம் மருமகளிடம் சொல்லாமல் எங்கே அவன் போனானென்று மிருதுளா கோபித்துக் கொண்டாள்..
"அம்மாகிட்டக் கம்ப்ளெயிண்ட் பண்ணினியா..?"
அவர்களுடைய அறையில் ஒரு மாதிரியான குரலில் முகம் இறுக அவளைக் குற்றம் சாட்டினான் பிரதாபன்..
'உனக்கு இதுதானே தெரியும்..? வேறென்ன தெரியும்..?' எரிச்சலுடன் அவனை முறைத்தாள் சாரதா..
"என்னடி முறைக்கிற..?"
"முறைக்கலை.. பார்க்கிறேன்.."
"வெரிகுட்.. நேத்துக் காலையிலதான் நமக்குக் கல்யாணமாகியிருக்கு.. நைட்டுத்தான் நம்மோட பர்ஸ்ட் நைட்.. இன்னைக்கு நீ பார்க்கிற பார்வை இப்படியாப்பட்ட பார்வையா இருந்தா நான் கொடுத்து வைத்த புருசன்தான்."
அவன் பேச்சில் அவள் முகம் சிவந்து விட்டது.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்திலிருந்த கோபம் வடிய.. அவன் அவளை நெருங்கினான்.. தோளைத் தொட்டான்.. திகைத்து அவன் கையை விலக்கி விட முயன்றவளை இழுத்து இறுக்கிக் கொண்டான்.. வேட்கையுடன் குனிந்து அவள் இதழ்களை ஆக்ரமித்தான்.
சாரதாவின் மனதில் இருந்த எரிச்சல் சொல்லாமல் கொள்ளாமல் இடத்தைக் காலி செய்தது.. அவன் மீதிருந்து வந்த வியர்வை கலந்த நறுமணத்தில் அவள் கிறங்கிப் போனாள்.. அவளையுமறியாமல் அவளது கைகள் அவன் முதுகில் பரவிப் படர்ந்த போது.. அவன் வெற்றியாளனாக.. முகம் விலக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.. மயங்கிப் போன அவள் முகத்தில் முத்தத்தின் ஈரத்தைப் படிய விட்டவன் அவள் இடுப்பில் கை கொடுத்து அவளைத் தூக்கிக் கொண்டு கட்டிலை அடைந்தான்..
"இது மதியம்.."
கட்டிலில் விழுந்தவளின் போலியான ஆட்சேபத்தில் அவன் கடகடவென்று சிரித்தான்...
"மதியமா இருந்தா புருசன் பெண்டாட்டியைத் தொடக் கூடாதுன்னு ஏதும் சட்டமிருக்கா..?"
'இல்லைதான்..
உதட்டைக் கடித்துக் கொண்டு அதைச் சொல்ல முடியாதவளாக.. அவளால் செய்ய முடிந்த ஒரே செயலாக முகத்தை விரல்களால் மூடிக் கொண்டாள் சாரதா..
"ஏய்ய்.." அவன் மயங்கிப் போனான்...
அவள் மீது பரவிப் படர்ந்தபடி.. அவள் விரல் விலக்கி முகத்தில் முகம் பதித்த அவன் குரல் அவள் காதோரமாக பேச ஆரம்பித்த ரகசிய வார்த்தைகளில் அவள் கிளர்ந்து தவித்தாள்...
அவளுக்குள் உருவான அந்த அலைகளை கண்டு கொண்டவனின் கண்கள் மின்னின.. அவன் கரங்கள் அவள் உடலில் பரவிப் படர்ந்து பிரவேசிக்க ஆரம்பித்த போது இதமான அந்த இம்சையில் பாகாய் கரைந்து குழைந்து போனாள் சாரதா...
நினைத்ததை நடத்தியே முடித்தவனின் கைகளுக்குள் அடங்கிப் போனவளுக்கு அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் மறந்து போனது.. அப்படியே அவன் உறங்கிப்போக அவளும் உறங்கிப் போனாள்..
மாலை அணுகும் வேளையில் கண் விழித்தவளுக்கு.. மறந்து போன கேள்விகள் நினைவுக்கு வந்தன..
அருகில் அயர்வாகப் படுத்திருந்தவனை எழுப்பி அந்தக் கேள்விகளைக் கேட்க மனமில்லாமல் அவள் கட்டிலை விட்டு இறங்கப் போனாள்.. அவள் இடுப்பை அவன் கரம் வளைத்தது..
'இவன் எப்பக் கண் விழிச்சான்..?'
அவள் திகைத்து விழிக்கையிலே அவள் மடியில் புரண்டு படுத்து அண்ணாந்து அவள் முகம் பார்த்த பிரதாபன்..
"என்ன..?" என்று புருவங்களை உயர்த்தினான்..
"என்ன.. என்ன..?" அவளுக்குப் புரியவில்லை..
"உன் தலைக்குள்ளே ஏதோ குடையுதே.. அதைத்தான் என்னன்னு நான் கேட்டேன்.."
"ஒன்ணுமில்லை.."
"எதுக்கெடுத்தாலும் இதைச் சொல்லிரு.. நீ ஏண்டி என்னைப் போல வெளிப்படையா பேச மாட்டேன்கிற..?"
அவன் கேள்வியில் அவனையே இமைக்காமல் பார்த்தாள் சாரதா...
'மனதில் நினைக்கிறதையெல்லாம் பேசி விடுகிற வரம்.. எங்களுக்கு கிடைக்கலியே.. ஆண்குலத்துக்கில்ல அந்த வரம் கிடைச்சிருக்கு..' அவள் மனம் கேட்டது..
"என்னவோ போ.. உன்னை முதன் முதலா பார்த்தப்போ இருந்த தைரியமும் தெனாவெட்டும் இப்ப மிஸ்ஸிங்தான்.. எனக்கென்னவோ அந்த சாரதாவைத்தான் பிடித்திருந்தது..."
இயல்பாக அவன் சொல்லிய வார்த்தைகளில் அவள் மனம் பூவாக மலர்ந்தது..
"என்ன சொன்னீங்க..?" விழி விரிய கேட்டாள்..
அவனோ அவளை விசித்திரமாக பார்த்தான்...
"உன்னைப் பிடிச்சிருக்குன்னுதான சொன்னேன்..? அதுக்கு எதுக்கு இப்படிப் பார்த்து வைக்கிற..?"
ஒன்றுமில்லை என்று சொல்ல வாய் வரை வந்த வார்த்தையை உள்ளே தள்ளினாள் சாரதா.. அவள் மடியிலிருந்து எழுந்து கொண்ட பிரதாபன்.. தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தான்..
"என்ன ஆச்சுன்னு தெரியலை... திடிர்ன்னு சுகந்தியை வேலையை விட்டு நிறுத்துன்னு அப்பா சொல்லிட்டார்.. இனி புதிதாய் ஒரு நர்ஸைத் தேடனும்.. ம்ஹீம்..."




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -31
தஞ்சமென வந்தவளே -31
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy