தஞ்சமென வந்தவளே -26

26 கொட்டிக் கொண்டிருந்த ஐந்தருவியின் முன்னால் கூட்டம் அதிகமில்லை.. வழிந்தோடிய நீர்.. நதிபோல ஓடிக் கொண்டிருக்க.. அதன் கரையோரமாக.. அடர்...


26

கொட்டிக் கொண்டிருந்த ஐந்தருவியின் முன்னால் கூட்டம் அதிகமில்லை.. வழிந்தோடிய நீர்.. நதிபோல ஓடிக் கொண்டிருக்க.. அதன் கரையோரமாக.. அடர்ந்த மரங்களின் நிழலில் காரை நிறுத்தி.. அதன் மேல் சாய்ந்து நின்றிருந்த பிரதாபனுக்கு அதை ரசிக்கும் மனமுமில்லை.. அவன் எண்ணம் முழுவதும் எதிரேயிருந்த மரத்தினடியில் நின்று கொண்டிருந்த சாரதாவை எப்படிக் கடுப்படிப்பது என்பதிலேயே இருந்தது..
"நீ அழகிதான்.." என்றான்..
சாரதா நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் விழிகளில் வந்து போன லேசான தடுமாற்றத்தை அவன் இனம் கண்டு கொண்டதில் பார்வையை விலக்கிக் கொண்டாள்.. அவள் முகத்தில் நாணத்தின் சிகப்பு படர்ந்தது...
"இதைச் சொல்லவா இங்கே வரச் சொன்னீங்க..?" என்று கேட்டாள்...
"அப்படியும் வைத்துக்கலாம்.. ஏன்..? நான் இந்த வார்த்தையைச் சொன்னால் உனக்குப் பிடிக்கலையா..? இதையே சுகுமாரனும்.. உன் கூடப் படித்த அந்த விக்ரமும் சொல்லியிருந்தா பிடித்திருக்குமா..?" கண்கள் இடுங்கக் கேட்டான் பிரதாபன்..
'ஸ்ஸ்ஸ்..' சாரதாவுக்கு ஆயாசமாக இருந்தது..
தெரியாத்தனமாய் ஒருவார்த்தையை விட்டுத் தொலைத்து விட்டாள்.. அவன் அதைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேனென்று இந்தத் தொங்கல் தொங்குகினால் அவள்தான் பாவம் என்ன செய்வாள்..?
"ஓ.. இதைச் சொல்லத்தான் வரச் சொன்னீங்களா.. நான் என்னவோன்னு நினைச்சேன்.." எரிச்சலுடன் அவனைக் கடுப்பேற்றினாள்..
"என்னன்னு நினைத்த..?" அவன் கண்கள் மீண்டும் இடுங்கின..
"அம்மா சொன்னாங்க.. முக்கியமாய் நீங்க எதையோ பேசப் போறிங்கன்னு.. அதை நம்பி நானும் வந்தேன்.. இப்பத்தானே உங்களுக்கு எது முக்கியம்ன்னு எனக்குத் தெரியுது..? இது அம்மாவுக்குத் தெரியாமப் போச்சே.." அவள் போலியாக வருத்தப்பட்டாள்..
"ஏன் நீதான் போய் சொல்லிக்குடேன்.." துளைக்கும் பார்வையுடன் அவன் சொன்னான்..
"அதாவது போட்டுக் கொடுக்கச் சொல்கிறிங்க..?" அவள் சந்தேகம் கேட்டாள்..
"புரிஞ்சுக்கிட்டாச் சரி.." அவன் உதட்டைச் சுழித்தான்..
"அடடா.. எனக்கு அந்தமாதிரி வேலையெல்லாம் தெரியாதே.. நான் வளர்ந்த ஆசிரமத்தில் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கலையே.." ஏகத்துக்கும் வருத்தப்பட்டுப் போனாள் சாரதா..
"ஏன்..? நீ படித்த காலேஜில் இதையெல்லாம் கற்று வைத்திருப்பியே.." விடாமல் அவனும் கேட்டான்..
"அதுவா சார்.. அங்கேயெல்லாம் சார்.. இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க சார்.. நான் படித்த படிப்பு சார்.. எம்.பி.பி.எஸ். சார் அந்தப் படிப்புக்கும்.. போட்டுக் கொடுக்கிறதுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை சார்.." இமை கொட்டினாள் சாரதா..
வார்த்தைக்கு வார்த்தை அவள் சார் போட்டதில் ஏகப்பட்ட கடுப்புக்கு ஆளாகிப் போனான் பிரதாபவர்மன்..
"சாரா..?" விளக்கெண்ணையைக் குடித்தவனைப் போல அவன் முகம் மாறியது..
"அந்த சுகுமாரன் உனக்கு மாமன்.. நான் மட்டும் சாரா..?"
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் தொற்றப் போனது.. வினையே என்று தலையில் கை வைத்தாள் சாரதா..
அதிகாலையில் அவளை அழைத்து அருவிக்கரையில் நிற்க வைத்து அவன் பேச்சு வார்த்தை நடத்துவது எதற்காக..? இதற்காகவா..?
விதியை நொந்து கொண்டு அவள் ஓடும் நதி நீரை வெறித்தாள்..
"என்ன பதிலைக் காணோம்..?"
"என்னத்தைப் பதிலை சொல்லி.. என்னத்தை நீங்க கேட்டு.. என்னத்தை ஆகப் போகுது..? நீங்க என்ன பேசனும்னு நினைக்கறிங்களோ.. அத்தனையையும் பேசி முடிங்க.. நான் எதையும் சொல்லப் போறதில்லை.. வாயைத் திறந்தால்தானே வம்பு..?"
"ஆஹாஹா.. என் அக்கா மகள் வம்புக்கு அஞ்சினவள்தான்.."
"அப்படி எத்தனை வம்பை இழுத்துக் கொண்டு வந்து உங்க முன்னாலே நிப்பாட்டியிருக்கேன்..?"
"அவன் எதுக்கு உன்னை சாருன்னு கூப்பிட்டான்..?"
"எவன்..?"
உண்மையிலேயே சாருவுக்கு பிரதாபன் யாரைக் குறிப்பிடுகிறான் என்று தெரியவில்லை.. இப்படி மொட்டைக் காத்தான் குட்டையிலே விழுந்தான் என்று பேசிவைத்தால் அவளும்தான் என்ன செய்வாள்..?
"அது கூடத் தெரியலையா..? விளங்கினாப்புலதான்.. அப்ப.. அந்தச் சுகுமாரனும் உன்னை சாருன்னு தான் கொஞ்சினானா..?"
'கடவுளே' என்றிருந்தது சாரதாவுக்கு..
பிரதாப வர்மனுக்கு எதனால் இந்த அளவுக்கு கோபம் வந்திருக்கிறது என்று அவளுக்குப் புரியவில்லை.. என்றோ வந்து போன சுகுமாரனை அவள் 'மாமா' என்று சொல்லி விட்டதற்காகவா அவன் இன்றைக்கு அவளை அருவிக் கரைக்கு வரவைத்து காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறான்..?
"உங்களுக்கு கோடி கோடியாய் புண்ணியம் கிடைக்கும்..."
"அதை நீ சொல்லி நான் தெரிந்துக்க வேண்டிய தில்லை.. எனக்கே அது தெரியும்.."
"தெரியுதில்ல.. சந்தோசம்.. அந்தக் கோடி கோடி புண்ணியத்தோட இன்னும் கொஞ்சம் சேர்த்தே கிடைக்கட்டும்.. என்னை எதுக்காக வரச் சொன்னீங்கன்னு சீக்கிரமா சொல்லிருங்க.."
"ஏன்.. வேற எவனாவது உன் கூடப் படிச்சவன்னு சொல்லிக்கிட்டு வந்து காத்திருக்கிறானா..?"
இவன் அதை விட்டுத் தொலைக்கவே மாட்டானா என்ற கோபம் சாரதாவுக்குள் கிளர்ந்தது.. கூடப் படித்த தோழன் அவளைப் பார்க்க வந்தது கூடத் தவறா..?
அதைச் சொல்ல இவன் யார் என்ற கேள்வி அவள் நெஞ்சில் எழவில்லை.. அது ஏனென்றும் அவளுக்குத் தெரியவில்லை.. அதுநாள்வரை அதுபோன்ற கேள்விகளை மற்றவர்கள் கேட்கும் உரிமையை அவள் கொடுத்த தில்லை.. இவன் எப்போது அந்த உரிமையை எடுத்துக் கொண்டான் என்ற விவரமும் அவளுக்கு பிடிபடவில்லை..
"யாரும் வரலை மாமா.. நானாத்தான் கேட்கிறேன் மாமா... பதிலைச் சொல்லுங்க மாமா... அம்மா காத்திருப்பாங்க மாமா.. நான் சீக்கிரமா வீட்டுக்குப் போகனும் மாமா.."
இந்த முறை சர்வஜாக்கிரதையாக அவள் ஒவ்வொரு வார்த்தைக்கும் மாமா போட்டதில் அவன் அவளை கூர்ந்து பார்த்தான்..
"என்ன..? உறவு முறை மறந்து போகும்ன்னு மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிறயா..? மாமா.. மாமான்னு ஏலம் போடற..? உனக்கு அவனைப் பார்த்தாத்தானே மாமான்னு கூப்பிட வாய் வரும்..? என்னைப் பார்த்தா 'சார்' தானே உன்வாயில் வரும்..?"
இப்படி முன்னாடி போனால் கடித்து பின்னாடி போனால் உதைப்பவனிடம் விடிகின்ற அந்த அதிகாலையில் பேச்சு வார்த்தை நடத்த வந்திருக்கும் தன் நிலையை எண்ணி.. தனக்குத் தானே நொந்து கொண்டாள் சாரதா..
"மாமாவும் வாயில் வரும்.. இப்ப இதுதான் உங்க பிரச்னையா..?"
"ஊஹீம்.. என் அக்காதான் என் பிரச்னை..."
அவன் அமர்த்தலாக சொல்லியதில் வில் போன்ற அவள் புருவங்கள் வளைந்து மேலேறின.. அதன் அழகில் அவன் முகம் சுளித்தான்..
'இவ இத்தனை அழகாய் இருந்து தொலைக்கக் கூடாது..'
"உங்க அக்காதான் பிரச்னைன்னா அதைப்பத்தி அவங்ககிட்டத்தான பேசனும்..? என்னை எதுக்காக விட்ட விடிகாலையில அருவிக்கரைக்கு வரச் சொல்லனும்..?"
"நானா வரச் சொன்னேன்..?"
"வரச்சொல்லாமலா எனக்கு முன்னாலே இங்க வந்து நின்னுக்கிட்டு இருந்தீங்க..? நீங்க வரச் சொன்னதாகத்தான அம்மா சொன்னாங்க.."
"இப்பப் புரியுதா என் பிரச்னை எதுன்னு..?"
"ஒரு மண்ணும் புரியலை..."
"கொடுத்து வைத்தவ.. சில சமயங்களில எதையும் புரிஞ்சுக்காம இருக்கிறவங்கதான் நிம்மதியா இருக்காங்க.."
"ஸோ.. எனக்கிருக்கிற நிம்மதி உங்களுக்கு இல்லைங்கறிங்க.."
"ஆமாண்டி.." எரிச்சலுடன் அவன் சொன்னான்..
"என்னது.. 'டீ' யா..?" சாரதாவின் முகம் மாறியது..
அதுவரையில் அதைப் போன்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரதாபன் மேற்கொண்டதில்லை.. சாரதாவிடம் வம்பிழுப்பான்.. அதிகாரம் பண்ணுவான்.. ஆனால் 'வாடி.. போடி..' என்ற அளவில் இறங்கியதில்லை..
"வாட் இஸ் திஸ்..? எனக்கு இது பிடிக்கலை.. இதென்ன பேச்சுன்னு பேசறிங்க..? என் அம்மாவின் தம்பின்னா.. எப்படி வேணும்னாலும் நீங்க பேசிக்கலாமா..? என்னால இதை அலோவ் பண்ண முடியாது.."
அவள் படபடத்தாள்.. அவனோ அவளது அந்தப் படபடப்பை மதிக்காமல் அலட்சியம் செய்தான்..
"அடங்குடி.. இப்ப எதுக்காக எண்ணையில போட்ட மீனைப் போல கொதிக்கிற..? உனக்கே இப்படியிருந்தா எனக்கு எப்படியிருக்கும்..? ஏய்ய்.. நீ அழகிதாண்டி.. பேரழகிதான்.. எங்க சுத்து வட்டாரத்திலேயே... என் அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மாமா.. பந்தன வாசல் ஜமீன்தாரான ஜெயசிம்மன்தான் பேரழகு... நீ அவரோட பேரழகை அப்படியே கொள்ளையடிச்சு பிறந்து தொலைச்சிருக்கே.. ஒப்புக்கிறேண்டி.. நீ அழகிதான்.. பேரழகிதான்.. இந்த சுத்து வட்டாரத்திலே உன் அழகுக்கு நிகரா யாருமில்லைதான்.. அதுக்காக உன்னைப் பிடிச்சுத் தொலைக்கனும்ங்கிற அவசியம் எதுவும் இருக்கா..?"
அவனது கேள்வியில் உதட்டைக் கடித்தாள் சாரதா.. அவளைப் பற்றி புகழ்ச்சியாக அவன் பேசியதில் அவள் மனதில் சில்லிப்பான குளிர்மழை பெய்ததென்னவோ உண்மைதான்.. அந்த ஜில்லிப்பின் திவலைகள் அவள் மனதில் படிந்திருக்கும் போதே அவன் அனல்காற்றாய் அவளைச் சுட்டதில் அந்தத் திவலைகள் வந்த வேகத்தில் மறைந்து போய் விட்டன...
"இல்லைதான்.." துயரத்துடன் சொன்னாள் சாரதா..
எதற்காக அந்தத் துயரம் என்று அவளுக்கே தெரிய வில்லை.. அவள் அழகென்று ஒர்நாளும் அவள் நினைத்த தில்லை.. நிலைக் கண்ணாடியின் முன்னால் நின்றதில்லை.. மனதில் கர்வம் கொண்டதில்லை.. அதைப் பற்றிய உணர்வே அவளுக்குள் ஏற்பட்டதில்லை..
அவன்தான் அவளை அழகியென்றான்.. சொன்னவன் உடனே தீயைப் போல் சுடுகிறான்.. அதற்கான காரணம் இன்னதென்று அவளால் இனம் காண முடியவில்லை..
"இல்லைல்ல.. அப்புறம் எதுக்காகடி என் அக்கா உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஃபோர்ஸ் பண்றாங்க..?" அவன் சீறினான்..
"என்னது..?!" தன் காதுகளில் விழுந்த செய்தியில் அவள் பிரமித்தாள்..
அவளது திருமணத்தைப் பற்றி அவள் நினைத்தும் பார்த்ததில்லை.. ஆசிரமத்தில் இருந்த போது மனதெல்லாம் படிப்பின் மீது இருந்தது.. பந்தனவாசல் வந்த பின்போ.. மனமெல்hம் பிரபாவதியின் அன்பைப் பெருவதில் இருந்தது..
பிரதாபவர்மனை அவளுக்குப் பிடிக்கும்தான்.. அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவள் மனதில் தென்றலடிப்பதென்னவோ உண்மைதான்.. ஆனால்.. அவனைத் திருமணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்ற பேராசையெல்லாம் அவள் மனதில் எழுந்ததில்லை..
அவளுக்குத் தெரியும்.. அவன் எட்டாக்கனி என்பது..
என்னதான் பந்தனவசால் ஜமீன்தாரின் வாரிசாக அவள் இருந்தாலும் அவளைப் பெற்ற சரயு ஒரு அநாதை என்பதுதானே உண்மை..?
பிரதாபவர்மனைப் பெற்ற மிருதுளா ஜமீன் குடும்ப பாரம்பர்யத்தில் பிறந்தவள் என்று சாரதாவுக்குத் தெரியும்.. பிரபாவதியும் அப்படித்தான்.. நிலைமை இவ்வாறிருக்க.. அவள் எட்டாத பழத்தின் மீது ஆசை வைத்து விடக் கூடாதே..
இந்த நினைவினால்தான் அவள் பிரதாபவர்மனின் மீது மனதுக்குள் தோன்றிய ஆசையையும் பிடித்தத்தையும் வெளியில் சொல்லாமல் இருந்தாள்... பிரபாவதி... கம்பெனிகள்.. வேலை.. வீடு.. என்று ஒரே சுற்றுக்குள் சுற்றி வர தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டிருந்த வளைப் பார்த்துத்தான் பிரதாபன் இந்தக் கேள்வியைக் கேட்கிறான்..
"எனக்கு இது தெரியாது.." நலிந்த குரலில் முணுமுணுத்தாள்..
"கொடுத்து வைத்த பிறவி..! உனக்காக யோசிக்கத்தான் என் ஏமாளி அக்கா இருக்காங்கல்ல.. அப்புறம் எதுக்காக நீ இதைப் பற்றி யோசிக்கப் போற..?" அவன் காய்ந்தான்..
"உங்களுக்கு விருப்பமில்லைன்னா அம்மாகிட்ட முடியாதுன்னு சொல்லிவிட வேண்டியதுதானே..?" ரோசத்துடன் அவள் கேட்டாள்..
"எப்படிச் சொல்றது..? உங்கப்பாதான் அநியாயம் செய்து விட்டுப் போயிருக்கிறாரே.." வெறுப்புடன் அவன் சொன்னான்..
"எங்கப்பா அநியாயம் செய்தாரா..? யாருக்கு..? உங்களுக்கா..?"
"எனக்குச் செய்திருந்தால் நான் யாரென்று அவருக்குப் புரிய வைத்திருப்பேனே.. என் அக்காவுக்கில்ல செய்திருக்கார்.."
"அதை அவங்க சொல்லனும்.."
"எப்படிச் சொல்வாங்க..? அவங்கதான் பத்தினித் தங்கமாச்சே.. புருசனை விட்டுக் கொடுப்பாங்களா..? ம்ஹீம்.. போன மகராஜன் சொத்தை இரண்டு பாகமாப் போட்டு ஒரு பங்கை உனக்கும்.. இன்னொரு பங்கை அக்காவுக்கும் கொடுத்திட்டுப் போயிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. நியாயப்படி அவர் அப்படித்தான் செய்திருக்கனும்.. செய்யலை.. எல்லாச் சொத்தையும் உன் பேரில எழுதி வைத்து உன்னை அண்டி என் அக்கா வாழனும்னு எழுதிவைத்துட்டுப் போயிட்டாரு.. இப்போ என் தலையிலதான் எல்லாம் விடியுது.."
அவள் அந்த அளவுக்கு அவனுக்குப் பாரமாக போய் விட்டாளா..?
சாரதா மனம் அதிர்ந்தாள்.. அத்தனை மாதப் பார்வைகளில்.. பேச்சுக்களில்.. அவன் கண்களில் வந்து போகும் மின்னலில் அவளுக்கென்று துளியளவு கூட இடம் இருந்ததே இல்லையா..?
"இல்லை.." என்று நிர்தாட்சண்யமாக மறுத்தான் பிரதாபன்..
"ஓர் நாளும் உன்னை நினைத்ததில்லை.. நீ எனக்கு வேம்புடி.. என் அக்காவின் உரிமைகளை ஒரே நாளில் தட்டிப் பறித்த ராட்சசி.. உன்னைப் போய் நான் கல்யாணம் பண்ணிக்கிறதா..?"
இதைக் கேட்பதற்குப் பதில் அநாதையாக ஆசிரமத்திலேயே இருந்திருக்கலாமே என்று சாரதாவுக்கு தோன்றியது..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,131,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,47,எண்ணியிருந்தது ஈடேற,250,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,30,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,16,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,5,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,10,ஜனனி... ஜெகம் நீ..,6,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -26
தஞ்சமென வந்தவளே -26
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale26.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale26.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy