தஞ்சமென வந்தவளே -23

23 பச்சைப் பசேலென்ற வயல்வெளியில் வரிசையாக நடப்பட்டிருந்த நாற்றுக்கள் காற்றில் ஆடிய காட்சியை காணக் கண்கோடி வேண்டும் என்று நினைத்துக் க...


23

பச்சைப் பசேலென்ற வயல்வெளியில் வரிசையாக நடப்பட்டிருந்த நாற்றுக்கள் காற்றில் ஆடிய காட்சியை காணக் கண்கோடி வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் பிரதாபன்.. நீர் நிறைந்திருந்த அந்த வயல்வெளியில் நாற்றுக்களின் இடையே வந்து சிறகுகளை விரித்து நீண்ட அலகுகளால் நீருக்குள் மறைந்திருந்த இரையைத் தேடிக் கண்டு பிடித்துக் கவ்விக் கொண்டிருந்த நாரைகளை 'உப்ப்' என்ற குரல் கொடுத்து ஓட்டி விட்டால் என்ன என்ற ஆசை அவனுக்குள் தோன்றியது.. அவனுடைய ஆசையைப் பற்றி அறியாமல் நீண்ட கால்களில் ஒரு காலை நிலத்தில் ஊன்றி.. மறுகாலை மடித்து வைத்து.. பறப்பதற்கு வாகாக நின்று கொண்டிருந்தன அந்த நாரைகள்..
'இன்னும் அக்காவைக் காணோமே..'
இடது கையின் மணிக்கட்டில் கட்டப் பட்டிருந்த வாட்ச்சில் மணி பார்த்தான்.. அவனை அந்த இடத்திற்கு வரச் சொல்லியிருந்த பிரபாவதி இன்னும் வந்து சேரவில்லை.. அவள் வரச் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்து அங்கு நின்று விட்டான் பிரதாபன்.. ஒருவேளை அவனுக்கு முன்னால் அவள் வந்திருந்தால் காக்க வைத்து விட வேண்டாமே என்ற எண்ணம் அவனுக்கு.. அவளோ.. அவனை வரச் சொன்ன நேரத்திலும் வந்து சேராமல் அவனை வயல் வெளியில் தவம் செய்து கொண்டிருக்கும் நாரைகளை ரசிக்க வைத்துக் கொண்டிருந்தாள்..
அரண்மனை போல வீடிருக்கு என்று பெரிய அளவில் இருக்கும் வீடுகளைச் சொல்வார்கள்.. ஆனால் பிரபாவதியின் வீடே அரண்மனைதான்.. அங்கு பேச இடம் கிடைக்காமல் அவனை வயல்வெளிக்கு ஏன் வரச் சொன்னாள் என்று அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது..
தூரத்தில் கார் வரும் சப்தம் கேட்டது.. திரும்பிப் பார்த்தான்.. பிரபாவதியின் கார்தான் வந்து கொண்டிருந்தது.. அவன் காருக்கு அருகே வந்து நின்றது.. காரை ஓட்டி வந்தது யார் என்று கவனித்தான்.. சபாபதிதான் ஓட்டி வந்திருந்தார்..
'நினைச்சேன்..' அவன் நினைத்துக் கொண்டான்..
சபாபதி ஜெயசிம்மனின் கார் டிரைவர்.. அவர் மட்டுமே சரயுவைப் பற்றி அறிந்தவர் என்று மார்த்தாண்டவர்மனின் வீட்டில் பேசிக் கொள்வார்கள்.. சரயுவைப் பார்த்தவரும் அவர்தான்.. என்பார்கள்.. மற்ற யாருக்கும் அவளைப் பற்றி எதுவும் தெரியாதே..
ஜெயசிம்மனின் கார் டிரைவர் என்பதோடு.. அவரின் அந்தரங்கத்தை அறிந்த ஒரே மனிதர் சபாபாதிதான்.. அவரிடம் கெஞ்சி.. கொஞ்சி.. மிஞ்சி.. என்று பல வகைகளிலும் சரயுவைப்பற்றி மார்த்தாண்டவர்மனின் கையாள்கள் விசாரித்துப் பார்த்து விட்டார்கள்..
அவர் அசைந்து கொடுத்ததில்லை.. அடிக்கிறாயா அடி.. கொல்கிறாயா கொன்று கொள்.. என் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராது என்று கல்லுளி மங்கனாக அசையாமல் நின்று சாதித்துக் காட்டியவர்.. அதற்கு மேலும் அவரைக் குடைந்தால் மார்த்தாண்ட வர்மனின் ஆள்களை ஜெயசிம்மன் மேலுலகத்திற்கே அனுப்பி வைத்து விடும் அபாயம் இருந்ததால் அவர்கள் எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொண்டார்கள்..
ஜெயசிம்மனின் மறைவுக்குப் பின்னால்.. அவருடைய வாரிசாக சாரதா வளர்ந்து வருவதைப் பற்றிய விவரம் வெளியானபோது.. அனைவரும் '' வென்று வாய் பிளந்து நின்றபோது எந்தவிதமான ஆச்சரியக் குறியையும் முகத்தில் காட்டாமல் செய்து வைத்த சிலையாக நின்றது சபாபதி மட்டும்தான்..
 "பயபுள்ளைக்கு முதல்லேயே விவரம் தெரிஞ்சிருக்குடா.." மார்த்தாண்டவர்மன் கொதித்தாலும் சபாபதியின் கிட்டக்கூட அவரால் நெருங்க முடியவில்லை.
அப்பேற்பட்ட பாதுகாப்பு வளையத்துடன் இருந்தவர் சபாபதி..
"அவனைப் போல ஒரு ஆளு கிடைச்சாப் போதும்டா.. எட்டூரை ஜெயித்துட்டு வரலாம்.. கழுத்தை அறுத்துப் போட்டாலும் ரகசியத்தைக் கக்க மாட்டேன்கிறான் பாரு.. நமக்கும் வாய்த்திருக்குதுகளே.. அடிக்கக் கூட வேணாம்.. லேசா கையை அசைச்சாலே போதும்.. அடிக்கத்தான் வர்றானுகன்னு இவனுகளா அலறியடிச்சுக்கிட்டு பூரா விவரத்தையும் கக்கிட்டு வந்திருவானுக.."
மார்த்தாண்டவர்மன் பொருமாத நாளே இல்லை எனலாம்.. அப்படிப்பட்ட சபாபதியைத்தான் ஜெயசிம்மனின் மறைவுக்குப் பின்னால் தன் காரை ஓட்டும் பணியில் வைத்திருந்தாள் பிரபாவதி.. சாரதாவை வெளியில் அனுப்ப வேண்டுமானால் ஒன்று பிரதாபவர்மனின் துணையோடு அனுப்பி வைப்பாள்.. இல்லையென்றால் சபாபதியின் துணையோடுதான் அனுப்புவாள்..
அந்த சபாபதியை இன்று காணவும் விவரம் முக்கியமானதுதான் என்று நினைத்துக் கொண்டான் பிரதாபன்.. இல்லாவிட்டால் சபாபதியைக் காரோட்டச் சொல்லி பிரபாவதி கிளம்பி வந்திருக்க மாட்டாள்.. நம்பகமான கார் டிரைவரோடு.. ஊருக்கு வெளியில் இருக்கும் வயல்வெளிக்கு அவளுடைய தம்பியை வரச் சொல்லி அவள் சந்திக்க வந்திருப்பதன் காரணம் என்ன..?
"வந்து ரொம்ப நேரமாச்சா பிரதாப்..?"
பிரபாவதியின் கேள்விக்கு ஆமாம் என்ற உண்மையான பதிலைச் சொன்னால் என்னதான் செய்வாள் என்று நினைத்துக் கொண்டான் பிரதாபவர்மன்..
அவன் காத்திருந்த மணித்துளிகளை திருப்பிக் கொடுக்கப் போகிறாளா என்ன..?
"என்ன விசயம்க்கா..?"
அவன் நேரத்தைப் பற்றிப் பேசாமல் நேரடியாக விவரத்திற்கு வந்தான்.. பிரபாவதி கைகளை முன்னால் மடித்துக் கட்டி நின்று வயல்வெளியின் நாரைகளைப் பார்த்தாள்..
'இதுக தவம் செய்கிறதைப் பார்க்கிறதுக்காகவா.. வேலை மெனக்கெட்டு என்னையும் வரச் சொல்லிட்டு அக்காவும் வந்திருக்காங்க..?'
பிரதாபவர்மன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான்.. அன்றைய முக்கியமான அலுவல்கள் பல அவன் மனக்கண்ணில் வரிசை கட்டி நின்றன.. அவனுக்கு அசைவதற்குக் கூட நேரமில்லை.. ஆனால்.. அதைப் பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் அவனை வளர்த்த அக்கா அவனை அந்த நேரத்தில் அங்கு வரவைத்துவிட்டு ஒற்றைக் காலில் நிற்கும் நாரைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்..
பிரதாபவர்மன் பொறுமையாக காத்திருந்தான்... எந்த அவசர அலுவலாக இருந்தாலும்.. அவனுக்கு அது பெரிதல்ல.. அவனுடைய அக்கா அவனை வரச்சொல்லி-யிருக்கிறாள்.. அது மட்டும் தான் அவனுக்குப் பெரிது.. அவனுடைய பொறுமையை சோதிக்கும் வரை சோதித்துக் கொண்டிருந்த பிரபாவதி.. வயல்வெளியைப் பார்த்தவண்ணம்..
"மனிதராப் பிறக்கிறதுக்குப் பதிலா பறவையாய் பிறந்திருக்கலாம்.. இல்லையா பிரதாப்.." என்று கேட்டாள்.
'இல்லை' மனதுக்குள் சொல்லிக் கொண்டான் பிரதாபன்..
பறவையாக பிறந்து அவன் என்ன சாதிக்கப் போகிறான்..? இது போன்ற வயல் வெளியில் ஒற்றைக் காலில் தவம் செய்து கொண்டு நிற்கப் போகிறான்.. தேவைதானா அவனுக்கு..?
"அதுகளோட உலகத்தில கவலையில்லை பிரதாப்.. எந்தவித பாரமும் இல்லாமல் விட்டுச் சிறகடிக்கலாம்.. நினைச்ச இடத்தில் கூடு கட்டலாம்.." பிரபாவதி பேசிக் கொண்டே போனாள்..
அரண்மனையில் வாழ்பவளுக்கு மரக்கிளையில் வாசம் செய்யும் பறவைகளின் கூடுகளின் மீது எதற்காக பற்று வருகிறது என்று புரியாமல் திகைத்தான் பிரதாபன்..
"உங்க மனதில் என்ன பாரமிருக்குக்கா..? மாமாவோட மகள்தானே உங்க பாரத்துக்கு காரணம்..? அவளெல்லாம் ஒரு ஆளா..? அவபிரச்னையை என்னிடம் விடுங்கக்கா.. இன்னும் கொஞ்ச நாளில் சொத்தும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்ன்னு அவளை ஊரைவிட்டு ஓட வைக்கிறேன்." கோபத்துடன் சொன்னான் அவன்..
அவன் கோபத்துக்கான காரணம் அவனது அக்கா கணவரின் முதல்மனைவியின் மகளாக அவள் இருப்பது மட்டும்தானா.. இல்லை.. சில தினங்களுக்கு முன்னால் ஜெயசிம்மனுக்கு துரத்து உறவு முறையில் தங்கையின் மகனென்று சொல்லிக் கொண்டு அரண்மனைக்கு வந்திருந்த சுகுமாரனை பிரதாபவர்மனின் காதுபட அவள் 'மாமா' என்று அழைத்ததா என்று அவன் மனச்சாட்சி பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தது..
அன்று அவன் அவளைத் தனிமையில் நிறுத்தி.. அவனை மாமா என்று ஏன் அழைக்கிறாய் என்று கோபப் பட்டான்.. அவளோ உங்களையும் தான் அப்படி அழைக்கிறேன்.. மாமா முறையில் இருந்தால் மாமா என்று தானே அழைக்க வேண்டும் என்று கேட்டு வைத்தாள்.. அவனுக்கு வந்த கோபத்தில்..
"என்ன சொன்ன..? அவனும் மாமன்.. நானும் மாமனா..? அவனும் நானும் ஒன்றா..?" என்று கேட்டு விட்டு பட்டென்று அவள் கன்னத்தில் அடித்து விட்டான்..
அடிபட்ட கன்னத்தைப் பிடித்தபடி அவள் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்த பார்வை இன்னும் அவன் மனதில் அழியாத ஓவியமாக நிலைத்து நிற்கிறது..
அன்றிலிருந்து இன்று வரை அவன் அவளுடன் பேசுவதில்லை.. வழியில் அவள் எதிர்பட்டாலும் கவனிக்காததைப் போல நகர்ந்து விடுவான்..
அந்தக் கோபத்தையும் சேர்த்து வைத்து அவன் சாரதாவைத் திட்டிக் கொண்டிருந்த போது.. பிரபாவதி அவனை ஆழ்ந்து பார்த்தாள்.. அந்த பார்வையில் தெரிந்த வித்தியாசத்தில் திகைத்துப் போய் விட்டான் பிரதாபன்..
"அக்கா..?"
"அப்படி நீ அவளைத் துன்பப் படுத்தனும்னு நினைச்சேன்னு வைய்யி.. உனக்கு முதல் எதிரியா நான் தான் இருப்பேன்.."
"அக்கா..!"
"நினைத்தும் பார்க்கலை பிரதாப்.. எனக்கு முன்னால் அவருடன் வாழ்ந்தவள் பெற்றடுத்த பெண்ணின் மேல் நான் இந்த அளவுக்கு பாசம் வைப்பேன்னு.. என்னைச் சுற்றிச்சுற்றி வந்தாள்டா.. அம்மா.. அம்மா.. அம்மாதான்.. அந்த வார்த்தையை மனதிலிருந்து சொன்னாள்டா.. பல ராத்திரிகள்ல தனியாப் படுக்க பயமாயிருக்குன்னு என் ரூம் கதவைத்தட்டி.. அங்கே வந்து படுத்துத் தூங்கியிருக்கா.. சும்மாவும் தூங்கமாட்டா.. என் கழுத்தைக் கட்டிக்கிட்டு சின்னக் குழந்தை போலத் தூங்குவா... அப்போல்லாம் என் மனசில இருந்த துயரம் வடிஞ்சு அங்கே தாய்ப்பாசம் குடியேறிரும்.."
"அவ திட்டம் போட்டு உங்களை பாசத்துக்கு அடிமையாக்கி இருக்காக்கா.."
"அதைச் செய்கிறதாலே அவளுக்கு என்ன லாபம் சொல்லு..? இன்னும் அவ பொறுப்பில் இருக்கிற வைரப் பெட்டகத்தை அவ திறந்து பார்க்கலை.. கம்பெனிகளுக்கு போய் வர்றா.. வரவு செலவைப் பார்க்கிறா.. கணக்கை என்னிடம் சொல்லிட்டு.. பணத்தை என் பெயரில் முதலீடு பண்றா.."
'இது எப்போதிருந்து..'
பிரதாபனுக்கு இது புதிய செய்தி.. அவன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை..
"நேற்று வந்தா.. சொத்துப் பத்திரங்களை என் கையில் தந்தா.. என்னைப் பெத்த தாயை நான் பார்த்த தில்லை.. பெற்ற அப்பாவைப் பார்த்திருந்தும்.. அவர் கொடுத்த உதவிப் பணத்தில் படித்திருந்தும் அவர்தான் என் அப்பான்னு தெரியாமலே இருந்திட்டேன்.. இப்ப அப்பான்னு கூப்பிட அவரும் உயிரோட இல்லை.. என் அம்மாவின் உரிமைக்குரலா நான் இந்த அரண்மனைக்கு அப்பாவின் வாரிசா வந்து வாழனும்னு அப்பா கடிதத்தில் சொல்லியிருந்தார்.. அதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. கொஞ்சநாள் வாழ்ந்தும் காண்பிச்சுட்டேன்.. எனக்கும்.. அம்மா.. அப்பாவுக்கும் இது போதும்மா.. இந்த சொத்துக்களை நீங்களே வைத்துக்கங்க.. நீங்க சொன்ன இடத்தில் நான் கையெழுத்தும் போடறேன்னு சொல்றா.. நான் ஆடிப் போயிட்டேண்டா.."
பிரதாபவர்மன் பேசவில்லை.. ஒர்நாள் இல்லை யெனில் ஓர்நாளில் சாரதா இதைத்தான் செய்வாள் என்று அவன் நிச்சயமாக கணித்து வைத்திருந்தான்.. அதை இவ்வளவு விரைவில் செய்வாள் என்றுதான் நினைத்துப் பார்க்கவில்லை..
அவனுக்குத் தெரியும்.. அவள் அவளைப்பெற்ற தாயின் உரிமைக்காக அந்த அரண்மனையில் கால் வைத்தவள் என்று.. மற்றபடி சாரதாவாவது.. சொத்து சுகத்தை ஆள வேண்டும் என்று நினைப்பதாவது..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -23
தஞ்சமென வந்தவளே -23
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy