தஞ்சமென வந்தவளே -20

20 "அது நம்ம வீடுதான் சாரதா.. அவ்வளவு தூரம் போயிட்டு நீ சாப்பிடாம வந்தா சித்தப்பாவும்.. சித்தியும் சங்கடப் படுவாங்கம்மா.. அதனால ...


20

"அது நம்ம வீடுதான் சாரதா.. அவ்வளவு தூரம் போயிட்டு நீ சாப்பிடாம வந்தா சித்தப்பாவும்.. சித்தியும் சங்கடப் படுவாங்கம்மா.. அதனால நீ சாப்பிட்டுட்டு வந்துரு.. ஆனா நேரத்தோட வந்திரனும்..."
"ஆகட்டும்மா.. நீங்களும் நேரத்தோட சாப்பிட்டு நைட் சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரையை மறக்காமல் சாப்பிடறனும்.."
"சரி.." சிரித்தபடியே பதில் சொன்னாள் பிரபாவதி..
போனை அணைத்து ரவிவர்மனிடம் சாரதா நீட்டிய போது தந்தையின் கண்களும்.. மகனின் கண்களும் சங்கேதமாய் சந்தித்து மீள்வதைக் கண்டாள்.. அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும்.. அது எதற்கு நமக்கு என்ற நினைவுடன் அதைப் பார்க்காததைப் போல பாவனை செய்தாள்..
"பேசிட்டியாம்மா..."
கணப்பொழுதில் இயல்பான முகபாவனைக்கு திரும்பி விட்ட ரவிவர்மன் போனை வாங்கிக் கொண்டார்..
"நைட் டின்னருக்கு சொல்லிருங்கப்பா.. பந்தன வாசல் ஜமீன்தாரோட வாரிசு நம்ம வீட்டில சாப்பிடப் போகுது.. எல்லாமே ஸ்பெசல் அயிட்டங்களாய் இருக்கனு முன்னு சொல்லிருங்க.. டின்னர் ரெடியாகிறதுக்குள்ள நாங்க அம்மாவைப் பார்த்துட்டு வந்திடறோம்..."
"தட்ஸ் குட்.. முதலில் அதைச் செய்.."
ரவிவர்மன் வேலையாளை அழைத்து சமையல்காரம் மாவை வரச்சொல்லிக் கொண்டிருந்தார்.. பிரதாபவர்மனின்  கண்ணசைவில் அவனோடு சேர்ந்து எழுந்தாள் சாரதா.. அவளுக்கு மட்டும் தெரியும்படியாக கண்சமிக்ஞையில் அவன் அழைத்தவிதம் அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது...
பிரதாபவர்மன் முன்னால் ஏற.. அவனைத் தொடர்ந்து மாடிப்படிகளில் ஏறினாள் சாரதா.. படிகளின் முடிவிலிருந்த அகன்ற பிரம்மாண்டமான ஹாலில் ஆங்காங்கே சோபா செட்கள் போடப்பட்டிருந்தன.. பக்கவாட்டில் இருந்த பெரிய அறையின் அழைப்பு மணியை அழுத்தினான் பிரதாபன்..
கதவைத் திறந்த பெண் வெண்மை நிற நர்ஸின் உடையுடன் இருந்தாள்.. பிரதாப வர்மனைப் பார்த்ததும் அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் சாரதாவின் மனம் கூம்பியது..
'இவ எதுக்கு இவனை இப்படி பருகு.. பருகுன்னு பார்க்கிறா...'
எதிரியைப் பார்ப்பதைப் போல அந்த நர்ஸைப் பார்த்தவளை சாரதாவின் ஆழ்மனம் அதட்டி வைத்தது...
'இவ அவனைப் பருகு.. பருகுன்னு பார்த்தா உனக்கெதுக்கு பற்றிக்கிட்டு வருது..?'
அதுதானே என்ற நினைவுடன் அடங்கிப் போனாள் சாரதா.. யாரை.. யார் எப்படிப் பார்த்து வைத்தால் எனக்கென்ன வந்தது என்ற ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டு முன்பக்கமாக இருந்த வரவேற்பறையைக் கடந்து உள்ளே போனவளை அந்தப் பழைய பாடல் வரவேற்றது...
"திருமகள் தேடி வந்தாள் - இந்தப்
             புதுமனை குடி புகுந்தாள்..
    குலமகள் குங்குமத்தில் - தேவி
             கோவில் கொண்டாடி வந்தாள்.."
இனிமையான அந்த இன்னிசை அறை முழுவதும் பரவிப் படர்ந்திருக்க.. கண்மூடிக் கட்டிலில் படுத்திருந்தாள் பிரதாபனின் தாய் மிருதுளா.. அவளின் அழகான.. பொழிவான முகத்தைப் பார்த்ததும் பிரதாபனின் தாய் என்ற நினைவில் மனதுக்குள் ஓர் உரிமை கலந்த சொந்தம் பெருகுவதை சாரதாவினால் தடுத்து நிறுத்த முடிய வில்லை..
விசாலமான அந்தப் பெரிய அறையில் ஏஸி இருந்தும் அதை ஓட விடாமல் அறையின் நான்கு புறமும் இருந்த பெரிய ஜன்னல்களைத் திறந்து வைத்திருந்ததுதான் சாரதாவின் கவனத்தை முதலில் கவர்ந்தது..
அவனைப் போலவே பிரதாபவர்மனின் தாயும் இயற்கையை விரும்புகிறவள் என்ற நினைவில் மிருதுளாவிடம் அவளுக்கு சிநேகித உணர்வு உண்டானது.
"அம்மா..."
வார்த்தைக்கு வலிக்குமோ என்று நினைக்கிறவனைப் போல அதிமென்மையாக பிரதாபவர்மன் அவனது அம்மாவை அழைத்த விதம் சாரதாவை ஈர்த்தது..
கண் விழித்துப் பார்த்த மிருதுளா பிரதாபனைக் கண்டதும் வாஞ்சையுடன் புன்முறுவல் செய்தாள்.. அவள் பார்வை அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த சாரதாவின் மீது படிந்தது.. மெலிதான வியப்புடன் கூடிய பார்வையை சாரதாவின் மீது வீசியவள் எழுந்து அமர்ந்து கொள்ள முயன்றாள்..
"இருங்கத்தை.."
தன்ணயறியாமல் சொல்லியபடி.. மிருதுளாவின் அருகே விரைந்த சாரதா... கட்டிலில் அமர்ந்து.. மிருதுளாவிற்கு கை கொடுத்து அவள் எழுந்து அமர்ந்து கொள்ள உதவி செய்தாள்... அவள் முதுகிற்கு அனைவாக தலையணைகளை வைத்து விட்டாள்.. மிருதுளா சாய்ந்து அமர்ந்ததும் எழுந்து கொள்ள முயன்ற சாரதாவின் கைபிடித்து தடுத்தாள் மிருதுளா..
"என் பக்கத்திலேயே உட்காரு சாரும்மா.."
'சாரும்மா..' என்ற அழைப்பில் சாரதாவின் விழிகள் விரிந்தன.. அவளது பெயர் பிரதாபவர்மனின் அன்னைக்கு எப்படித் தெரியும் என்ற வியப்பு வந்தபோதே வீட்டில் பிரதாபவர்மனும்.. ரவிவர்மனும் அவளைப் பற்றிப் பேசியிருக்கக் கூடும் என்ற நினைவு வந்தது...
ஆனால் அவள்தான் சாரதா என்று எப்படி அவள் கண்டு பிடித்தாள்..? அதிலும் சாரதா என்ற அழைப்பைச் சுருக்கி 'சாரும்மா' என்று நந்தினி அழைப்பதைப் போலவே இவளும் அழைத்து வைக்கிறாளே.. அது எப்படி..?
அவளது வியப்பை அறிந்து கொண்டவளைப் போல சாரதாவின் முடி கோதி மென்மையாகச் சிரித்தாள் மிருதுளா..
"நீ அப்படியே உன் அப்பாவின் ஜாடையிலே இருக்கிற சாரும்மா.. உன்னைப் பார்த்தா அவருக்கு பெண் வேசம் போட்டதைப் போலவே இருக்கு.. நீதான் பந்தன வாசல் ஜமீன்தாரோட மகள்ன்னு மத்தவங்க சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கனுமா என்ன..? உன் ஜாடையே அதைச் சொல்லிருச்சே..."
"ஆனா.. சாரும்மான்னு..." சாரதா தடுமாறினாள்..
"சாரதாவை சாரும்மான்னுதானே கூப்பிடனும்..? ஏன்.. இதுக்கு முன்னாலே உன்னை யாராவது இப்படிக் கூப்பிட்டிருக்காங்களா..?"
"ஆசிரமத்திலே அம்மா என்னை இப்படித்தான் கூப்பிடுவாங்க..?"
"அம்மான்னா..?"
சாரதா அவளைப் பெற்ற தாயை பார்த்ததில்லையே என்ற நினைவுடன் அதை எப்படிக் கேட்பது என்ற மெலிதான சங்கட உணர்வுடன் பொதுவாகக் கேட்டாள் மிருதுளா..
"ஆசிரமத் தலைவி.. அவங்க எனக்கு மட்டுமில்ல.. அங்கே வளர்ந்த.. வளர்கின்ற எல்லோருக்குமே அம்மாதான்.."
சாரதாவின் குரல் நெகிழ்வுடன் ஒலித்தது.. அந்த நெகிழ்வில் பிரதிபலித்த பக்தியில் மிருதுளா அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவளாக சாரதாவின் விரல்களைப் பற்றி அழுத்தினாள்.. அவளின் அந்த புரிந்து கொள்ளலில் அவள் மீதான சாரதாவின் சிநேகித உணர்வு இன்னும் அதிகமாக பெருகியது...
              "அம்மாவும் நீயே...
                 அப்பாவும் நீயே...
          அன்புடனே ஆதரிக்கும்..
                 தெய்வமும் நீயே..."
அறையில் ஒலித்த பாடலில் மிருதுளா மெலிதாக சிரித்தாள்..
"சிச்சுவேசன் சாங்.." என்றபடி அதை அணைக்க முயன்ற பிரதாபவர்மனை சாரதாவின் குரல் தடுத்தது...
"இருக்கட்டும்.."
"ஏன்..?"
"இதை எங்க ஆசிரமத்தில் அடிக்கடி பாடுவோம்.."
சாரதாவின் வார்த்தைகளில்.. இவள் இன்னும் அந்த ஆசிரமத்தின் நினைவுகளில் இருந்து வெளியே வரவில்லை என்று அனுதாபத்துடன் நினைத்துக் கொண்டாள் மிருதுளா... அது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்று அவளுக்குப் புரிந்துதான் இருந்தது..
இருந்தாலும் பந்தனவாசல் ஜமீன்தாரின் சட்டப் படியான வாரிசாக அவள் ஆகிவிட்ட பின்பும் கிடைத்திருக்கும் கோடிஸ்வர வாழ்வில் மூழ்கித் திளைக்காமல்.. எளிமையான காட்டன் சேலையும்.. கை.. கழுத்தில் எந்தவித அணிகலனும் இல்லாமல் இயல்பாக இருப்பது எப்படி அவளுக்குச் சாத்தியமாகிறது என்று மிருதுளாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.. அவளறிந்த வரையில் பந்தனவாசல் ஜமீன் குடும்பத்தின் பெண்கள் வீட்டில் அணியும் நகைகளாக வைர நகைகளைத்தான் அணிவார்கள்.. உடுத்தும் ஆடைகளாக பட்டு வகையறாக்- களைத்தான் உடுத்துவார்கள்..
அப்படிப்பட்ட பெண்கள் வாழும் வீட்டில்.. பந்தன வாசல் ஜமீன்தாரின் மகள் இத்தனை எளிமையான தோற்றத்துடன் இருக்கிறாளா..?
அந்த எளிமையான தோற்றத்திலும் வெளிப்பட்ட அவளின் பேரழகை வியந்து பார்த்தாள் மிருதுளா..
மண்ணில் புதைந்திருந்தாலும் வைரம்.. வைரம் தானே..!
"தந்தை முகம்.. தாயின் முகம்
             கண்டறியோமே - உயர்
    சாந்தி தரும் இனிய சொல்லை
             கேட்டறியோமே..
    எங்களுக்கும் அன்பு செய்ய
             யாருமில்லையோ..
    இதை அறியாயோ - முருகா..!
             உன் கருணை இல்லையோ.."
மிருதுளாவின் ஆராயும் பார்வையை உணராமல் பாடல் வரிகளில் லயித்திருந்தாள் சாரதா.. அந்தப் பாடலைக் கேட்ட மிருதுளாவின் மனமும் வலித்தது.. ஊருக்கே
உதவி செய்த ஜெயசிம்மன் பெற்ற மகள் தாய்.. தந்தையின் பெயர் அறியாதவளாய் அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த கொடுமையில் அவள் மனம் துயர் கொண்டது...
'பாவம் இவள்..!'
மிருதுளாவின் மனதில் சாரதாவின் மீது அனுதாபம் பெருகியது...
"பூனை நாயும் கிளிகள்கூட
             மனிதரைப் போலவே-பெற்ற
    அன்னையுடன் ஒட்டுறவாய்
             கூடி வாழுதே - ஈ எறும்பும்
    உன் படைப்பில்
             இனிமை காணுதே..
    இதை அறியாயோ - முருகா..
             உன் கருணை இல்லையோ.."
சாரதாவின் விழிகளில் துளிர்த்த நீரை தன் விரல் கொண்டு சுண்டி விட்டாள் மிருதுளா.. அவளது கண்ணசைவில் பிரதாபன் பாடலை நிறுத்தினான்..
"ஊஹீம்.." கண்டிப்புடன் சொன்னாள் மிருதுளா..
"முருகன் உனக்குக் கருணை செய்துட்டார்.. இப்ப நீ நினைத்தா பல பேருக்கு உதவி செய்யலாம்.. அதை விட்டுட்டு கடந்த காலத்திலேயே நிற்கக் கூடாது சாரும்மா.."
"ஆகட்டும் அத்தை.." சாரதா இமைசிமிட்டித் தன்னைச் சரிசெய்து கொண்டாள்..
அங்கும்.. இங்கும் ஏதோ வேலையிருப்பதைப் போன்ற பாவனையுடன் பிரதாபனின் பார்வை வட்டத்துக் குள்ளேயே சுற்றி வந்த அந்த இளம் நர்ஸின் மீது சாரதாவின் பார்வை விழுந்தது.. அதைக் கவனித்த மிருதுளா..
"சுகந்தி.." என்று அழைத்தாள்..
"யெஸ் மேடம்.." படு ஸ்டைலான உச்சரிப்புடன் அருகில் வந்து நின்றாள் அவள்..
"தோட்டத்துப் பக்கமா போகனும்ன்னு சொன்னியே.. போயிட்டு வா.."
"அதை அப்போச் சொன்னேன் மேடம்.." சுகந்தி நகரவில்லை..
"அதுக்கு இப்போ பெர்மிசன் கொடுக்கிறேன்.. போயிட்டுவா.." கண்டிப்புடன் சொன்னாள் மிருதுளா..
படுத்த படுக்கையாய் இருந்த போதிலும் அவளிடம் வெளிப்பட்ட கம்பீரத்திலும்.. நிமிர்விலும் ஆச்சரியப் பட்டுப் போனாள் சாரதா.. பிரதாப வர்மனிடம் தெரிந்த அதே நிமிர்வு அவனுடைய தாயிடமும் தெரிந்ததில் அவள் விழிகளில் மெச்சுதல் வந்தது.. அந்த மெச்சுதலை கண்களில் மின்னலுடன் பிரதாபன் பார்த்த அதே நொடியில்.. வன்மத்தை விழிகளில் தேக்கியவளாக அந்த சுகந்தியும் பார்த்தாள்.. மிருதுளாவின் கட்டளைக்கு கீழ் படிந்து அறையை விட்டு வெளியே போகப் போனவளை தற்செயலாகப் பார்த்த சாரதா.. அவள் விழிகளில் தெரிந்த வன்மத்தில் துணுக்குற்றாள்..
அங்கே வேலை செய்யும் நர்ஸின் பார்வையில் அதற்காக இந்த அளவுக்கு வன்மம் வரவேண்டும்..? சாரதா என்ன அந்த சுகந்தியின் சொத்தை அபகரிக்க வந்திருக் கிறாளா..?
யோசனையுடன் திரும்பியவளின் பார்வையில் பிரதாபவர்மனின் மெச்சுதல் கலந்த பார்வை தென்பட அவள் லேசாகத் தடுமாறிப் போனாள்.. மிருதுளாவின் பார்வையில் அகப்பட்டுவிடாமல் முகச்சிகப்பை மறைக்க அவள் போராடிக் கொண்டிருந்த போதுதான் அவள் அறிவில் மின்னல் வெட்டியது..
சாரதா அபகரிக்க வந்திருப்பது பிரதாபனின் சொந்தத்தை என்று அந்த சுகந்தி நினைத்து விட்டாளோ..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,11,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,94,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,29,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,11,எண்ணியிருந்தது ஈடேற,234,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,25,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,10,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -20
தஞ்சமென வந்தவளே -20
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy