தஞ்சமென வந்தவளே -33

33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...


33

நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டமான மருத்துவ மனையின் வராந்தாவில் நடந்து வந்து கொண்டிருந்தாள் சாரதா..
வழியில் எதிர்பட்ட சக டாக்டர்களிடமும்.. நர்ஸ்களிடமும் புன்னகையை பரிமாறியபடி நடந்து கொண்டிருந்தவளை..
"சாரு.." என்ற அழைப்பு நிறுத்தியது...
அருகிலிருந்த அறையிலிருந்து வெளிப்பட்டான் விக்ரம்...
"விக்ரம்.. நீங்களா..?" ஆச்சரியத்துடன் கேட்டாள் சாரதா...
"நானேதான்.. ஹவ் ஆர் யு சாரதா..?" விக்ரமின் பார்வை ஆர்வத்துடன் அவள் மீது படிந்தது..
அந்தப் பார்வையில் சங்கடம் கொண்டாள் சாரதா.. உதட்டைக் கடித்தபடி.. தவிர்க்க முடியாமல் அவனிடம் பேசினாள்..
அவன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் மேற்படிப்பை தொடர்ந்திருக்கிறானாம்..
"இங்கே என் ரிலேடிவ் ஒருத்தவங்க அட்மிட் ஆகியிருக்காங்க.. பார்க்க வந்தேன்.. பார்த்தா நீங்களும் இங்கே இருக்கீங்க.. இங்கேதான் பி.ஜி. பண்றிங்களா..?"
"யெஸ் விக்ரம்.."
"பார்த்து டூ இயராச்சு.. இருந்தாலும் அன்னைக்குப் பார்த்த சாரதாவாகத்தான் அப்படியே இருக்கீங்க.."
"ஓ..."
எப்படி அவனிடமிருந்து கழன்று செல்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தவளைக் காக்க வந்த அனாதை ரட்சகனாய் அங்கே வந்து நின்றான் பிரதாபன்..
"போகலாமா சாரதா..? டியூட்டி முடிஞ்சிருச்சில்ல.."
"ஓ.. யெஸ்.. அத்தான் இவர் விக்ரம்.. என் கிளாஸ் மேட்.."
"தெரியுமே.. இங்கே என்ன வேலையாம்..? உன்னைப் பார்க்க வந்தாரா...?" பிரதாபவர்மனின் கேள்வியில் துணுக்குற்றாள் சாரதா..
அன்று அவள் மிகவும் சந்தோசமான மனநிலையில் இருந்தாள்.. பிரதாபவர்மனிடம் பகிர்ந்து கொள்ளவென்று இனிப்பான ஒரு ரகசியத்தை அவள் மனதில் பூட்டி வைத்திருந்தாள்.. எப்போது அவனைப் பார்ப்போமென்று காத்துக் கிடந்தாள்...
அவனைப் பார்க்கும் நேரம் பார்த்தா விக்ரம் வந்து தொலைக்க வேண்டும்..? இதில் வேறு விக்ரம் அவளைப் பார்க்க வந்தானா என்று அவன் கேட்டு வைக்கிறான்..
"இல்லைங்க.. விக்ரத்தோட ரிலேடிவ் இங்கே அட்மிட் ஆகியிருக்காங்களாம்.. அவரைப் பார்க்கத்தான் வந்திருக்கார்.."
"அப்படியே உன்னையும் பார்த்திருப்பார்.. ஆம் ஐ கரெக்ட்..?"
'நீ யென்ன தப்பாவா சொல்லப் போற..?' மனதுக்குள் சலித்துக் கொண்டாள் சாரதா..
அது எப்படித்தான் இனம் இனத்தைக் கண்டு கொள்கிறதோ என்றிருந்தது அவளுக்கு..
பிரதாபனின் கணக்கீடு மிகவும் சரியானது என்று சொல்ல முடியாமல் லேசாக சிரித்து வைத்தாள்.. பதிலுக்கு அவன் சிரிக்கவில்லை..
"போகலாமா..?" கைக்கடிகாரத்தைப் பார்த்தான்..
"ஓ... ஸீ யு விக்ரம்..."
அதற்காகவே காத்திருந்த சாரதா அவசரமாக கையாட்டி விட்டு பிரதாபனுடன் நடந்தாள்.. காரில் ஏறிய பிரதாபனின் முகத்தில் தெரிந்த கடினத்தில் அவள் மனம் கலவரம் கொண்டது.. எந்தெந்த சமயங்களில் அவன் முகம் அப்படி பாறை போல இறுகுகிறதோ.. அந்தந்த சமயங்களில் அவன் பேசும் பேச்சுக்கள்.. பேச்சுக்களாக இருப்பதில்லை என்பதை அவனுடனான அந்த இரண்டு வருட வாழ்க்iயில் தெளிவாக அவள் கணித்து வைத்திருந்தாள்..
"உன்னைப் பார்க்கத்தானே அவன் வந்தான்..?" காரை ஓட்டியபடி அவளைப் பார்க்காமல் அவன் கேட்டதும்.
'ஆரம்பிச்சுட்டானா..?' என்று அவளுக்கு ஆயாசமாக வந்தது..
"இல்லை.. அவருடைய ரிலேடிவ்வை பார்க்க வந்தார்..."
"அது ஒரு சாக்கு.. நீ இங்கே படிக்கிறேன்னு தெரிந்திருக்கும்.. உன்னைப் பார்க்கத்தான் அவன் வந்திருக்கிறான்..."
"எனக்குத் தெரியாது.." எரிச்சலுடன் அவள் பதில் சொன்னாள்...
அவளைத் திரும்பிப் பார்த்த பிரதாபனின் விழிகளில் நெருப்புப்பொறி பறந்தது.. அவளைப் பார்வையினால் அவன் சுட்டான்..
"இரண்டு வருசமாகியும் அப்படியே இருக்கிறேன்னு சொல்றானே.. ஏன் இருக்க மாட்ட..? ஒற்றை மகனுக்கு கல்யாணமானவுடன் பேரன்.. பேத்தியைக் கண்ணில் காண வேண்டும்ன்னுதான் எல்லாப் பெத்தவங்களும் நினைப்பாங்க.. என்னைப் பெத்தவங்க அப்படி நினைக்கலியே.. மருமகள் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்கட்டும்ன்னுல்ல நினைச்சாங்க.. அப்புறம் அன்று கண்ட மேனி அழியாம அப்படியே இருக்காம வேற எப்படிடீ நீ இருப்ப..?"
"ப்ளீஸ்.." அவனிடம் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் சிரமப்பட்டுப் போனாள் சாரதா..
இப்படித் தீயாக சுட்டுக் கொண்டிருந்தால் பேச வந்ததை அவள் எப்படிப் பேசுவாள்..?
"ப்ளீஸா..? அவன் முன்னாலே அத்தான்னு சொன்ன..?"
"அவன் பின்னாலேயும் அத்தான்னுதான் நான் சொல்லுவேன்.. என் புருசனை முறை சொல்லிக் கூப்பிட நான் எதுக்காக.. இடம் பொருள்.. ஏவல்.. சேவலெல்லாம் பார்க்கனும்..?"
"அடேங்கப்பா.. இவ பெரிசா புருசனைக் கொண்டாடறவதான்.."
"பின்னே.. இல்லையா..?"
"இல்லைடி.. பேச வேணாம்ன்னு பார்க்கிறேன்.. புருசனைக் கொண்டாடுகிறவன்னா இந்நேரத்துக்கு என் பிள்ளையைப் பெத்துக் கையில் கொடுத்திருக்கனும்.. எங்கே..? இங்கேதான் அந்த நினைப்பெல்லாம் மனசில இல்லியே..."
"நீங்கதான் படிக்கச் சொன்னீங்க.. அதை மறந்திர வேண்டாம்..."
"வேற என்னத்தடி பண்ணித் தொலைக்க..? எனக்குன்னு வந்து சேர்ந்திருக்காங்களே என் அக்கா.. அவங்க வாழ்க்கையை பங்கு போட்டுக்கிட்ட மூத்த தாரத்தோட மகளை கண்ணுக்குள்ள வைத்துத் தாங்கியில்ல தொலைக்கிறாங்க.. உன்னை ஏதாவது நான் சொல்லித் தொலைத்தா.. என்கூடப் பேசாம மௌன விரதமில்ல இருக்காங்க.. அவங்களுக்குப் பயந்து உன்னை படிக்க அனுப்ப வேண்டியிருக்கே..."
'ஆக எனக்காக எதையும் நீ செய்யலை..' அவள் மனதுக்குள் குமைந்தாள்..
அவன் நிறுத்தாமல் ஐந்தருவியைப் போலக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்.. அந்த விக்ரமை யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தது என்று கேட்டான்.. அது எப்படி மிகச் சரியாக சாரதா படிக்கும் அந்த மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் விக்ரமின் உறவினர் அட்மிட் ஆனார் என்ற கேள்வியை எழுப்பினான்.. கட்டின மனைவியை பிரதாபன் பார்ப்பதைப் போல விக்ரமும் ஏன் பார்த்து வைக்கிறான் என்று கொதித்தான்.. சாரதாவிடம் மாற்றம் தெரியாததில் அவனுக்கென்ன அவ்வளவு மகிழ்ச்சி என்ற கேள்வியை அவள் முன்னிலையில் வைத்தான்...
சாரதா என்ன பதிலைத்தான் சொல்லுவாள்..? வேலை முடிந்து அவள் கிளம்பும் நேரம் பார்த்து விக்ரமை அவள் பார்த்துத் தொலைப்பாள் என்று கனவா கண்டாள்..?
"இன்னும் அவன் உன்னை மறக்கலைடி..." பிரதாபன் பொருமினான்..
"உன் நினைப்பு அவன் மனசில் இருக்கு.. அவன் கண்ணே அதைக் காட்டிக் கொடுக்குது.." பல்லைக் கடித்தான்..
"அதுக்கு நான் என்ன செய்யட்டும்..?" பொறுக்க முடியாமல் பதிலுக்கு கேட்டாள் சாரதா..
"அதையும் நான்தான் சொல்லிக் கொடுக்கனுமா..? அவன் பேச வந்தா நீயேண்டி நின்னு பேசற.. பாக்காததைப் போல வந்துக்கிட்டே இருக்க வேண்டியதுதானே..?" குற்றம் சாட்டினான் அவன்..
"கரெக்ட்.. நீங்க சொல்கிறதைச் செய்திருக்கலாம் தான்.. எனக்கு அப்ப இது தோணாமப் போயிருச்சு.. ஆனா.. இத்தனை அட்வைஸை எனக்குப் பண்ற உங்களுக்கு இது தோணியிருக்கனுமே.. ஊர்மிளா கூப்பிற ஒவ்வொரு முறையும் அவ போனை தட்டிக் கழிக்காம அவ கூப்பிடுகிற இடத்துக்கு ஓடுகிறிங்களே.. அப்ப இந்தப் புத்தி எங்கே புல் மேய போயிருந்தது..?"
சாரதா கேட்டு விட்டாள்.. எத்தனை நேரம்தான் அவளும் அவன் பேசுவதைப் பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பாள்..? பொறுத்தால் பூமியை ஆளலாம்தான்.. ஆனால்.. அந்தப் பூமியை ஆளும் ஆசையை ஆண்கள் தொலைத்து விட்டு பெண்களிடம் மட்டும் அதை விதைக்க வருவார்களேயானால் அந்தப் புவியாளும் பொறுமைதான் பெண்களுக்கு எதற்கு..?
இந்த இரண்ட வருட வாழ்க்கையில் சாரதாவின் மனதில் நெருஞ்சி முள்ளாய் நிரடிக் கொண்டே இருப்பவள் ஊர்மிளா.. அவளிடமிருந்து அழைப்பு வரும் ஒவ்வொரு முறையும் அதை பிரதாபன் நிராகரித்து விட மாட்டானா என்று அவள் மனம் துடிக்கும்.. அவன் அதைச் செய்ய மாட்hன்.. ஊர்மிளாவின் அழைப்பைத் தட்டாமல் ஏற்றுக் கொண்டு அவளைப் போய் பார்த்துப் பேசி விட்டுத்தான் வருவான்..
'என்னைத்தான் உங்களால விரட்டியடிக்க முடியும்.. அந்த ஊர்மிளாவை விரட்ட முடியுமா...'
சுகந்தி அன்று கேட்ட கேள்வியை இன்றும் சாரதா மறக்கவில்லை.. அதற்கேற்றாற்போல ஊர்மிளாவின் அழைப்பை அறிவிக்கும் அந்த..
'ஒன்றா.. இரண்டா.. ஆசைகள்..?' என்ற செல்போனின் பாடலையும் பிரதாபன் மாற்றவேயில்லை..
அவளால் இதையெல்லாம் சொல்ல முடியவில்லை.. மனதில் எந்தவிதமான பகையுணர்வோ.. பழியுணர்வோ இல்லாமல் அவளோடு அவன் வாழ்வதே பெரிய விசயம் என்று தோன்றிப் போனதில் மௌனமாக இருந்து விடுவாள் சாரதா..
இன்று விக்ரமிடம் தெரியாமல் நின்று இரண்டு வார்த்தை பேசி விட்டதற்காக அவன் அந்தக் காய்ச்சு காய்ச்சியதில் மனதுக்குள் இருந்த அத்தனை வலிகளையும் கொட்டி விட்டாள் அவள்..
"என்னடி சொன்ன..?"
"எதைச் சொல்லனும்..? ஒன்னா.. ரெண்டா ஆசைகள்ன்னு அவ கூப்பிடுவா.. நீங்க ஓடுவீங்க.. நான் எதையும் கேட்காம பத்தினிதெய்வம் மாதிரி உங்களுக்காக வாசலில் கால் கடுக்க காத்து நிற்பேன்.. என்னால வேற என்ன செய்யமுடியும்..? பேசினாத்தான் நீங்க பதிலுக்கு பேசுவீங்களே.. என் அம்மா.. உங்க அக்காவோட வாழ்க்கையை பாதிச்சாங்கன்னு பழிபோடுவீங்களே.. என்னை பெத்த மகளா நினைக்கிற உங்க அக்கா புருசனோட மூத்த தாரத்தின் மகளை.. தான் பெத்த மகளா நினைக்கிற முட்டாள்ன்னு திட்டு வீங்களே.. அதான் எதையும் பேசாம வாயை மூடிக்கிட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.."
"ஸோ.. உன் மனசுக்குள்ள இத்தனையையும் வைத்துக்கிட்டு வெளியே என்மேல ஆசையிருக்கிறவ மாதிரி காட்டிக்கிட்டு குடும்பம் நடத்தியிருக்கிற..?" பிரதாபனின் கண்கள் சிவந்தன...
சாரதாவுக்கு அழுகை வந்தது.. அவளுக்கு அவன் மேல் ஆசையில்லையா..? அதைச்சொல்ல வாய்திறந்தவளை கை உயர்த்தி தடுத்து விட்டான் அவன்.
"என் கூடப் பேசாதே..."
ஆணை போல் ஒலித்தது அவன் குரல்.. சாரதா விக்கித்து விட்டாள்.. அன்றிலிருந்து அவளை அவன் புறக்கணித்தான்.. அவளுடன் பேசுவதைத் தவிர்த்தான்.. மருத்துவக் கல்லுரிக்கு அவளை அழைத்துச் செல்ல டிரைவரை அனுப்பி விட்டு வேலையிருக்கிறது என்று கம்பெனிகளைக் கவனிக்கப் போய் விடுவான்.. இரவு நெடுநேரம் கழித்து வருபவன் அவள் முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் படுக்கையில் விழுந்ததும் உறங்கி விடுவான்..
சாரதா தவித்தாள்.. அவன் காட்டிய நெருக்கத்தில் குளிர் காய்ந்தவளுக்கு அவன் காட்டிய அந்த தகிப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அவனைச் சுற்றி அவன் போட்டுக் கொண்டிருந்த நெருப்பு வேலியைத் தாண்டி அவனை நெருங்கவும் அவளால் இயலவில்லை..
இரண்டு மாத காலம் அப்படியே ஓடியது.. ஒருநாள் மாலையில் கம்பெனியை விட்டு நகராமல் உட்கார்ந்திருந்த பிரதாபனுக்கு ரவிவர்மனிடமிருந்து போன் வந்தது...
"பிரதாப்.. உடனே வீட்டுக்கு வா.."
"என்னப்பா..?"
"சாரதா மயக்கம் போட்டுட்டாப்பா.. வீடே களேபரமா இருக்கு.. மிருதுளாவும்.. பிரபாவதியும் அழுதுகிட்டு இருக்காங்க..."
அதற்குப் பின்னாலும் பிரதாபனால் அங்கே அமர்ந்திருக்க முடியுமா..? அவன் மின்னல் வேகத்தில் அரண்மனையை நோக்கிக் காரைச் செழுத்தினான்.. அவன் போனபோது சாரதாவை லேடி டாக்டர் பரிசோதித்துக் கொண்டு இருப்பதாக மிருதுளாவும்.. பிரபாவதியும் சொன்னார்கள்.. பிரதாபனின் திருமணத்திற்குப் பின்னால் உடல்தேறி நடமாட ஆரம்பித்திருந்த மிருதுளாவின் முகத்தில் மீண்டும் நோய் வந்து விடும் அறிகுறி தெரிந்ததில் பிரதாபன் அவளை கடிந்து கொண்டான்..
"எதுக்கும்மா பதட்டப்படறிங்க..? அக்கா உங்களுக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்.. அதான் டாக்டர் பார்த்துக்கிட்டு இருக்காங்கள்ல.. ரெண்டு பேரும் அடங்கி உட்காருங்க சொல்றேன்.."
"உனக்குக் கல்நெஞ்சுடா.."
"இருக்கட்டும்.. உங்க மருமகதான் பூமனசுக்காரி.. நான் கல்நெஞ்சக்காரனாவே இருந்துட்டுப் போறேன்.."
பேச்சு பேச்சாக இருந்தாலும் பிரதாப வர்மனின் மனம் கவலையில் ஆழ்ந்திருந்தது.. சில நாள்களாக சாரதா சரியாக சாப்பிடாமல் இருந்ததை அவன் கவனித்துக் கொண்டு
தான் இருந்தான்.. அதைப்பற்றிக் கேட்க முடியாமல் அவன் போட்டு வைத்திருந்த வேலி அவனைத் தடுத்தது.. அவள் மட்டுமா சரியாகச் சாப்பிடாமல் இருக்கிறாள்..? அவன் தொண்டையிலும் தான் உணவு இறங்க மறுக்கிறதே என்ற நினைவுடன் பேசாமல் இருந்து விட்டான்..
அப்படி இருந்தது தவறோ என்ற குற்ற உணர்வு அவனைப் பிடித்து ஆட்டியது..
'சரியாகசாப்பிடாம எதையாச்சும் மனசுக்குள்ள போட்டு மருகி.. மருகி.. இப்ப எதை இழுத்து விட்டுக்கிட்டு இருக்காளோ..'
இருப்புக் கொள்ளாத தவிப்புடன் அவர்களின் படுக்கையறைக் கதவு எப்போது திறக்கும் என்று அவன் காத்திருந்தான்.. ஒருவழியாக சொர்கக வாசல் கதவு திறந்தது.. வெளிப்பட்ட லேடி டாக்டர் புன்னகையுடன்..
"கங்கிராஜீலேசன்ஸ்.." என்று பிரதாப வர்மனிடம் சொன்னாள்..
அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மிருதுளாவும்.. பிரபாவதியும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து தங்களின் சந்தோசத்தை வெளிப் படுத்திக் கொண்டிருக்க.. பிரதாபன் அறைக்குள் பாய்ந்தான்.. கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த சாரதா அவன் காலடியோசையில் கண் விழித்து அவனை விழிகளில் நீர் மல்க பார்த்தாள்..
"சாரு.." அவன் கைகளை நீட்டினான்..
புயலென அவன் கைகளுக்குள் புகுந்து கொண்டவள் விசும்பி அழுதாள்..
"இதைச் சொல்லத்தான் அன்னைக்கு ஓடி வந்தேன்.. நாள் தள்ளிப் போயிருந்தது.. செக்-அப் பண்ணினேன்.. பிரக்னென்ஸி கன்பர்ம் ஆகிருச்சு.. உங்களிடம் சொல்ல ஆசையாசையாய் வந்தப்ப அந்த விக்ரம் வந்திட்டான்.."
"விடுடி.. கோபத்தில ஏதோ பேசிட்டேன்.. நீ மட்டும ஊர்மிளாவோட என்னை சேர்த்து வைத்துப் பேசலாமா..?"
"இல்லாததையா பேசினேன்..?"
"உண்மையிலேயே எதுவும் இல்லைடி.. அவளோட கால்ங்கிற அறிமுகத்துக்காகத்தான் அந்த ரிங்டோனை மாத்தாம வைச்சிருந்தேன்.. மத்தபடி எதுவும் இல்ல.. என் மாமன் மகடி.. என்மேல நினைப்பை அவதான் வைச்சா.. நான் வைக்கல.. அதனாலதான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க என்னால முடிஞ்சது.. உன் மேலதாண்டி நான் ஆசைப்பட்டேன்.."
"பொய்..."
"மெய்.. உன்னைப் பார்த்ததுமே உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன் சாரும்மா.. என் நினைப்பில கல்யாணம் வேண்டாம்ன்னு ஊர்மிளா சொல்லிக்கிட்டு இருந்தா.. அவளுக்கு.. என்மேல இருந்தது காதலில்லை.. அத்தையின் மகன்.. கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்ங்கிற ஈர்ப்பு மட்டும்தான்னு அவளுக்குப் புரிய வைக்கத்தான் அவ கூப்பிடறப்பல்லாம் நான் அவளைப் பார்த்துப் பேசிட்டு வந்தேன்.."
"இதை நான் நம்பனுமாக்கும்..?"
"நம்பித்தான் ஆகனும்.. ஏன்னா.. இந்த மாதக் கடைசியில ஊர்மிளாவோட கல்யாணம் நடக்கப் போகுது.. மாமா வீட்டில இருந்து முறைப்படி பத்திரிக்கை கொண்டு வருவாங்க.. அவளுக்கு என்ன கல்யாணப் பரிசை கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிச்சொல்லு.."
"நிஜமாகவா..?"
"நிஜமாகத்தான்.. ஐ லவ் யு சாரு.. என்னதான் நான் கோபமா பேசினாலும் அதையெல்லாம் தாங்கிக்கிட்டு நானே தஞ்சம்ன்னு என் கைபிடிச்சு வந்தவ நீ.. உன்னை விட்டு இன்னொருத்தியை மனசால் கூட நான் நினைக்க மாட்டேண்டி.. எனக்கு நீ மட்டும்தான்..."
அந்த வார்த்தைகள் தந்த நிம்மதியில் எல்லையற்ற மனநிறைவுடன் அவன் மார்பில் சாய்ந்தாள்.. அவனையே தஞ்சமென்று நம்பி வந்த அந்தப் பூங்கொடி..

- முற்றும் -







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,35,அம்மம்மா.. கேளடி தோழி...!,179,ஆசையா.. கோபமா...?,24,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,119,ஒற்றையடிப்.. பாதையிலே..,34,கடாவெட்டு,1,கண்ணாமூச்சி.. ரே.. ரே..,15,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,28,சிறுகதைகள்,4,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,34,நிலாச் சோறு,19,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,13,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,10,வார்த்தை தவறியது ஏனோ..?,24,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: தஞ்சமென வந்தவளே -33
தஞ்சமென வந்தவளே -33
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s320/Thanjamena%2Bvanthavale.jpg
https://1.bp.blogspot.com/-7cI-CGVXtVg/Xa3VxrzXwGI/AAAAAAAAAuA/Mw7F7x1DX3gyXlZGEAb-elxwrA-VSiBkwCPcBGAYYCw/s72-c/Thanjamena%2Bvanthavale.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale-33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/thanjamenavanthavale-33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy