அம்மம்மா.. கேளடி தோழி...! -7

7 ஒரு   சின்னஞ்சிறு   பார்வையிலே.. சிறை   பிடித்தாய்   என் மனதை... பாலமுரளியின் அக்காவான பால சரஸ்வதியை திருநெல்வேலியில் திருமணம் ...


7
ஒரு  சின்னஞ்சிறு  பார்வையிலே..
சிறை  பிடித்தாய்  என் மனதை...

பாலமுரளியின் அக்காவான பால சரஸ்வதியை திருநெல்வேலியில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்.. அவளது மாமியாரின் கூடப்பிறந்த தங்கையான சுசிலாவை சென்னையில் பரந்தாமனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள் அவர்கள் பெற்ற குணக்குன்றான ஷோபாவை பாலமுரளியின் தலையில் கட்டிவிட வேண்டுமென்று பாலசரஸ்வதியும் எத்தனையோ பிரயத்தனங்களைச் செய்து பார்த்து விட்டாள்...
பாலமுரளி அசைந்து கொடுக்கவே இல்லை...
"ஏய்ய்.. அவளுக்கென்னடா குறைச்சல்..? ஆள் பார்க்க மூக்கும்... முழியுமா.. ரதியைப் போலவே இருக்கா.."
"நீ ரதியைப் பார்த்திருக்கியாக்கா...?"
"ஷோபாவைப் பார்த்திருக்கேனே.. இது போதாதா..?"
"ஆனாலும்.. இது ரொம்பவும் அதிகப்படிக்கா.. உன் சின்ன மாமியாரின் மகள்ங்கிறதுக்காக... யார் கூட வேணும்னாலும் அவளை இணை கூட்டிருவியா..?"
சரஸ்வதிக்கு தம்பியின் பேச்சைக் கேட்டு சிரிப்பு வந்துவிடும்.. அவள் அவனருகில் வந்து.. நாடியைப் பிடித்து கெஞ்சுதலாக கேட்பாள்...
"ஏண்டா.... எவ்வளவு நல்லவன் நீ..?"
"போச்சுடா.. ரொம்ம்ப நல்லவன்னு சொல்லிட்ட.. எதை டின்கட்டப் போகிற உத்தேசத்தில இதைச் சொல்ற...?"
"எனக்காக எம்புட்டோ செஞ்சிருக்கே..."
"இப்பவும் கேளு செய்யறேன்..."
"அதைத்தானேடா நானும் கேட்கிறேன்.. எனக்குப் பணம்.. நகையெல்லாம் வேண்டாம்..."
"அடேங்கப்பா.. உன்னை என்னவோ வெறுங்கையோட விரட்டி விட்டதைப் போலல்ல பேசி வைக்கிற.. வண்டி வண்டியாய் சீர்வரிசையோட... வைர நகைகளோட உன்னை அனுப்பி வைச்சேன்.. மறந்து போயிருச்சா..."
பாலமுரளியும் அப்படித்தான்.. அவனுடைய அப்பா மாணிக்க வாசகத்துடன் காடுகரை.. தோப்பு.. வயல் என்று சென்று பழகியவன் அவன்...
வீட்டுக்குள்ளேயே இருந்து பழக்கப்பட்ட மேகலா தடுமாறிப் போனபோது...
"நான் பார்த்துக்கறேம்மா..." என்று சொன்னவன் அவன்...
அப்போது தோப்பு... வயல் என்று விவசாயம் மட்டுமே அவர்களது குடும்பத் தொழிலாக இருந்தது.. கை கொடுக்க வேலையாள்கள் இருந்தார்கள்.. கணக்கைப் பார்க்க கணக்குப்பிள்ளை இருந்தார்..
இருந்தபோதும்.. பாலமுரளி அதிகாலையிலேயே எழுந்து தோப்புப் பக்கம் போய்விடுவான்.. அங்கே காவல் காக்கும் சின்னான் குடும்பத்துடன் பேசியபடியே தோப்பைச் சுற்றிவிட்டு.. வயல்பக்கம் வருவான்.. அங்கே வேலை நடப்பதை பார்வையிட்டு விட்டு வீட்டுக்கு வரும் போது.. சுள்ளென்று வெயில் அடிக்க ஆரம்பித்திருக்கும்...
"நேரமாச்சுடா..."
அவனுடனே பள்ளிக்குச் செல்ல தயாராக கிளம்பி நிற்கும் பதினேழு வயது பாலசரஸ்வதி அவசரப் படுத்துவாள்...
"பொறுக்கா..." என்றபடி குளித்து முடித்து இரண்டு  இட்லிகளை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு.. மோட்டார் சைக்கிளை எடுப்பான்.. தமக்கையை பின்னால் அமர வைத்துக் கொண்டு.. பக்கத்து டவுனிலிருக்கும் பள்ளிக்கு பறந்து விடுவான்...
சாயங்காலம் வந்ததும்.. முகம் கழுவி உடைமாற்றி.. மேகலா கையால் காபி.. பலகாரம் வாங்கி சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்க வேண்டிய கொடுப்பினை பாலசரஸ்வதிக்கு மட்டுமே உண்டு...
பாலமுரளி.. அயர்ந்து உட்காரமாட்டான்.. மீண்டும் தோப்பு... வயல் என்று சுற்றி விட்டு வர கிளம்பிச் சென்றுவிடுவான்...
வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே பள்ளி இருந்ததும்... வாரக் கடைசியான இரண்டு நாள்களில் விடுமுறை என்பதும் அவனுக்கு வசதியாக இருந்தது...
கூடுதலாக காலாண்டு.. அரையாண்டு.. முழுஆண்டு என்று விடுமுறை நாள்கள் வந்து சேர..
அவன் பள்ளியிறுதிவரை எந்த விதத் தடையுமில்லாமல் படித்து முடித்து விட்டான்...
பாலசரஸ்வதியை ப்ளஸ்டூவிற்கு பிறகு வீட்டில் நிறுத்திக் கொள்ள மேகலா முயன்றபோது.. பாலமுரளி அதை வன்மையாக கண்டித்தான்...
"இப்ப எதுக்கு அக்காவோட படிப்பை நிறுத்தறிங்க..?"
"பொம்பளப் புள்ளைக்கு இதுக்கு மேல படிப்பு எதுக்குடா..?"
"பொம்பளப் புள்ளைக்குத்தான் படிப்பு அவசியம்... ஒரு வீட்டின் அச்சாணியே பெண்தான்... அவள் படிப்பறிவோடு இருந்தால் தான் அந்தக் குடும்பம் முன்னேறும்..."
"அவதான் பனிரெண்டாவது வரைக்கும் படிச்சிருக்காளேடா..."
"அது போதுமா..?"
"பின்னே..? இவளை பட்டம் வாங்கவா அனுப்பப் போற...?"
"ஆமாம்..."
பாலமுரளி அதில் உறுதியாக நின்றான்.. பக்கத்து டவுனில் இருக்கும் பெண்கள் கல்லூரியிலேயே பாலசரஸ்வதியை சேர்த்தும் விட்டான்...
"நீ ப்ளஸ் ஒன் படிக்கிற சின்னப் பையன்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்கடா முரளி.. நீ எனக்கு தம்பியில்ல.. அண்ணன்...!"
பாலசரஸ்வதி அழுதுவிட்டாள்.. தமக்கையின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் துளிகளை ஆதரவுடன் துடைத்து விட்டான் பாலமுரளி...
"இதுக்குப் போய் ஏன்க்கா அழுகறே..? இது சின்ன விசயம்.."
"இதுவாடா தம்பி சின்ன விசயம்..? எவ்வளவு பெரிய விசயத்தை நீ சாதிச்சிருக்கிற.. நீ மட்டும் இல்லைன்னா.. அப்பா போன பின்னாலே அம்மா என்படிப்பை நிறுத்தி மூலையிலே உட்கார வைச்சிருப்பாங்க..."
மேகலா அதைத்தான் செய்வதாக இருந்தாள்.. ஊருக்குள்ளே பெரிய குடும்பம் என்று பெயர் வாங்கிவிட்டு.. குடும்பத் தலைவன் இல்லாத போது.. வயதுப் பெண்ணை வெளியே விட்டால்.. அந்தக் குடும்பப் பெருமைக்கு குறைவு வந்து விடுமோ என்று பயந்தாள்...
"நீ ஆம்பளைப் பையன்டா.. நீ படிக்க பக்கத்து டவுனுக்குப் போனா ஒன்னுமில்லை.. அதுவே உன் அக்கா போனா சரிவராதுடா..?"
"ஏன் சரிவராது...?"
"இது ஆம்பளையில்லாத குடும்பம்டா முரளி.. வயசுப் பெண்ணை வெளியே அனுப்பிட்டு வயித்துக்குள்ளே நெருப்பைக் கட்டிக்கிட்டு உட்காரச் சொல்றியா..? அவ படிச்சது போதும்டா.. அடுத்த வருச வாக்கிலே என் தம்பிக்கு அவளை கட்டிக் கொடுத்துட்டு நிம்மதியாய் இருக்கலாம்..."
"என்னது பதினேழுவயசில கல்யாணமா..?" பாலமுரளிக்கு கோபம் வந்துவிட்டது...
"இதுவே அதிகம்டா.. எனக்கு பதினாறு வயசிலேயே கல்யாணம் ஆகிருச்சு..."
"அது உங்க காலம்... இப்ப காலம் மாறிப்போச்க.."
"என்னை என்னதாண்டா பண்ணச் சொல்ற..?"
"என்னைப் பார்த்தா உங்களுக்கு ஆம்பளையா தெரியலையா..?"
பதினைந்து வயது பாலமுரளி கேட்டபோது மேகலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...
தாயின் கண்களுக்கு அவள் பெற்ற பிள்ளைகள் என்றுமே குழந்தைகள்தான்.. அந்த நினைவில்...
"நீ பச்சைப் புள்ளைடா..." என்றாள்...
"ஊஹீம்... பத்தாவது படிக்கிற பிள்ளை... இப்ப உங்க கவலை என்ன..? அக்கா.. பத்திரமாய் ஸ்கூலுக்கு போயிட்டு வரனும்.. அவ்வளவுதானே.. நானும் டவுனுக்குத்தானே படிக்கப் போறேன்..? அக்காவை அதோட ஸ்கூலில் விட்டுட்டு.. நான் என் ஸ்கூலுக்குப் போறேன்.. திரும்பி வரும்போது கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்..."
அவர்கள் வீட்டில் கார் இருந்தது... 'கூட்டு வண்டி' என்று சொல்லப்படம் 'வில் வண்டி..' ஒன்று அலங்காரமாக இருந்தது... மாணிக்கவாசம் உயிரோடு இருந்தவரை அவர்கள் காரிலும்.. அந்த வில் வண்டியிலுமாகத்தான் பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.. கணவனின் மறைவுக்குப் பின்னால் மேகலா.. அவற்றில் மகள் பள்ளிக்குப் போய் வருவதை ஆட்சேபித்தாள்...
"முரளி.. காலம் கெட்டுகிடக்கு.. உனக்கு கார் ஓட்டற வயசில்லை.. மாட்டு வண்டியை நீ ஓட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் போய் வர முடியுமா..?"
"புரியலைம்மா..."
"டிரைவரையும்.. வண்டி ஓட்டுகிறவனையும் நம்பி.. என் பொண்ணை நான் வெளியே அனுப்ப மாட்டேன்..."
"என்னை நம்பி அனுப்புவீங்கள்ல..."
பாலமுரளி மோட்டார் சைக்கிளை வெளியில் எடுத்தான்... அதுநாள் வரை உள்ளூரில் சுற்ற மட்டும் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில்.. பாலசரஸ்வதியை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு பள்ளிக்கு போய்வர ஆரம்பித்தான்...
பாலசரஸ்வதி வெற்றிகரமாக பள்ளியிறுதி வகுப்பை முடித்தாள்... பாலமுரளி ப்ளஸ் ஒன்னில் காலடி வைத்தான்.. பாலசரஸ்வதி கல்லூரியில் சேர்வதற்கு மீண்டும் மேகலா எதிர்ப்பைக் கிளப்ப... அதையும் முறியடித்து.. பாலசரஸ்வதியை பெண்கள் கல்லூரியில் சேர்த்து விட்டு... பட்டப்படிப்பை படிக்கவைத்தான்..
பாலசரஸ்வதி பட்டம் வாங்கிய போது.. பாலமுரளி.. பட்டப் படிப்பின் முதலாண்டை முடித்திருந்தான்.. இப்போது.. அவனால் காரை ஓட்ட முடிந்திருந்தது.. அதனால்... தாயையும்.. தமக்கையையும் காரில் அழைத்துப் போய் வர ஆரம்பித்திருந்தான்.. அவன் தனியாகப் போகும் போது மட்டும் டிவிஎஸ் அப்பாச்சியில் பறப்பான்.. குடும்பத்துடன் போகும் போது.. புதுக்காரில் போய் வருவான்...
பழைய காரும்.. பழைய மோட்டார் சைக்கிளும் போய்.. புதிதாக டிவிஎஸ் அப்பாச்சியும்.. புதுக்காரும் வீட்டில் குடிபுகுந்தன... இதற்கிடையில் மேகலாவின் தம்பியாகப்பட்ட.. அவளுடைய சித்தப்பாவின் மகனான சிவநேசனின் திருமணமும் நடந்து முடிந்திருந்தது...
"இதுக்குத்தான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன்..." மேகலா ஆதங்கப்பட்டாள்...
"படிச்சுப் படிச்சு..? நீங்க சொன்னீங்க...? ம்ஹீம்.. எதை யார் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு..." பாலமுரளி தோளைக் குழுக்கினான்..
"உனக்கு என் கவலை புரியதா..?"
"என்னம்மா உங்க கவலை..?"
"உங்க அக்காவை படிக்க வைக்க வேணாம்ன்னு தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன்.. நீதான் கேட்கலை.. இப்பப் பாரு.. படிச்சபொண்ணு வேணாம்ன்னு என்தம்பி சொல்லிட்டான்..."
"சொல்லாம எப்படி இருப்பாரு... அவரு ஐந்தாவதைத் தாண்டலை.. ஆனாவுக்கு அடுத்த எழுத்து மட்டும்தான் அவருக்குத் தெரியும்... அவருக்கு போயி அக்காவைக் கொடுக்கனுமுன்னு சொன்னா.. மனுசன் பயந்தடிச்சு ஓடிற மாட்டாரா...?"
"அதான் நீ ஓட்டிட்டயே..." மேகலா மனத்தாங்கலுடன் சொல்ல...
"கண்டுபிடிச்சிட்டாங்க..." என்று தமக்கையின் காதோரமாக ஒதினான் பாலமுரளி...
"ம்ஹீம்.. தகப்பனில்லாத பொண்ணு.. அந்நியத்திலே கொடுக்காம சொந்தத்திலே கொடுத்தா அவளுக்கும் ஆதரவிருக்கும்ன்னு நினைச்சேன்..."
மேகலா முணுமுணுத்த போது பாலமுரளிக்கு கோபம் வந்துவிட்டது..
"அதென்ன எடுத்ததுக்கெல்லாம் இதையே சொல்கிறீங்க.. அக்கா தகப்பனில்லாத பெண்தான்.. ஆனால் தம்பியில்லாத பெண்ணில்லை... அதுக்கு தகப்பனுக்கு தகப்பனா நானிருக்கேன்.. அப்பா இருந்திருந்தால் அக்காவுக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ.. அதைவிட பத்துமடங்கு அதிகமா நான் அதுக்குச் செய்வேன்..."
சொன்னதைப் போலவே செய்து காட்டினான் பாலமுரளி...
திருநெல்வேலியிலேயே பெரிய பணக்காரரான கனகராஜின் மகனுக்கு பாலசரஸ்வதியை பேசி முடித்தான்...
"மாப்பிள்ளை பெயர் ராஜ ராஜன்.. இன்ஜினியரிங் படிச்சிருக்கார்.. சொந்தமா அவங்களுக்கு பேக்டரி இருக்கு... அதுக்கு மாப்பிள்ளைதான் எம்டி.."
"ஏண்டா தம்பி.. அந்த கனகராஜ் குடும்பம் பெரிய இடம்ன்னு எல்லாரும் சொல்றாங்களேடா..."
"நாமளும் பெரிய இடம்தான்ம்மா..."
"அவங்களுக்கு இணையா.. நிறக்க சீர் செஞ்சு அனுப்ப நம்மால முடியுமாடா முரளி..."
"முடியும்..."
அவனால் முடிந்தது.. அவனின் சக்தியை அன்றுதான் மேகலா உணர்ந்தாள்.. மாணிக்கவாசகம் இருந்திருந்தால் கூட மகளுக்கு அவ்வளவு சீர் செய்திருக்க மாட்டார்.. அதைவிட பலமடங்கு அதிகமாக சீர்செய்தான் பாலமுரளி...
    



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -7
அம்மம்மா.. கேளடி தோழி...! -7
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammakeladitholi7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammakeladitholi7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy