அம்மம்மா.. கேளடி தோழி...! -8

8 பூ வாசம் மனம் மயக்கும்.. உன் நினைவை அது இழுக்கும்.. பரம்பரையாய் இருந்த தோப்பு துரவையும் தாண்டி வியாபாரத்தில் அவன் கால் பதித்தபோ...


8
பூ வாசம் மனம் மயக்கும்..
உன் நினைவை அது இழுக்கும்..

பரம்பரையாய் இருந்த தோப்பு துரவையும் தாண்டி வியாபாரத்தில் அவன் கால் பதித்தபோது மேகலா பயந்தாள்...
"வேண்டாம்டா மகனே... தராசுத்தட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்..."
தொட வேண்டும் என்று நினைப்பவன் தொடுவானைக் கூட தொட்டு வருவான்... அஷ்டலட்சுமிகளில் தைரிய லட்சுமி எந்த இடத்தில் இருக்கிறாளோ.. அதே இடத்தில்தான் மற்ற லட்சுமிகளும் வாசம் செய்வார்களாம்...
பாலமுரளி தைரியத்தை தன்வசம் வைத்திருந்தான்.. அவன் தொட்டதெல்லாம் துலங்கியது.. அவன் நினைத்ததை நடத்தியே முடித்தான்...
பட்டப்படிப்பை முடித்ததும்.. முதலில் செங்கல் சூளையில் கால் பதித்தான்.. அதற்கடுத்து டவுனில் ஜவுளிக்கடையை ஆரம்பித்தான்...
'என்னடா இது.. பெரிய வீட்டுப் புள்ள எதையெதையோ செய்ய ஆரம்பிக்குதே...' என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது... அனைவரும் மூக்கின்மீது விரலை வைக்கும் வண்ணம் கரும்புமில்லை ஆரம்பித்து விட்டான்...
மகனின் வெற்றிகளில் மேகலாவுக்கு சந்தோசம் தான்....
ஆனால் உயரே.. உயரே பறக்கும் வேகத்தில் அவன் திருமணத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதைக் கண்டுதான் அவளுக்கு மனம் கொள்ளாத வருத்தமாக இருந்தது...
"ஏண்டா முரளி... ஊருல.. உலகத்திலே.. உன் வயசிலே இருக்கிறவனுக எல்லாம் பெண்டாட்டியைக் கட்டிட்டு.. பிள்ளைகுட்டியை பெத்துக்கிட்டு இருக்கிறப்போ... நீ மட்டும் ஏண்டா இப்படி இருக்கே.."
"அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லைம்மா..."
இப்படிச் சொல்கிற ஆண்மகனை இப்போதுதான் பார்க்கிறாள் மேகலா... அவளறிந்த ஆண்பிள்ளைகள் எல்லாம்... திருமணவயது வந்தஉடனேயே.. தாயிடம்..
'ஏம்மா.. வீட்டுக்கு விளக்கேற்ற உனக்கு ஒரு மருமக வேண்டாமா..?' என்றுதான் கேட்டு வைப்பார்கள்...
வருகிற மகராசி விளக்கேற்றி வைக்காமல்.. வீட்டிலிருக்கும் மாமியாருடன் சரிமல்லுக்கு நிற்பாள்.. அதெல்லாம் வேறுகதை...
இப்படிப்பட்ட ஜீவன்கள் இருக்கும் உலகில்.. ஒரு பெண்ணுக்கு தாலிகட்டி குடும்பம் நடத்த நேரமில்லை என்று சொல்லும் மகனை.. ஏதோ ஒரு விசித்திரப் பிறவியைப் பார்ப்பதைப் போல வினோதமாக பார்த்து வைத்தாள் அவள்...
"உன் தம்பியை நீதான் ஏன்னு கேட்க மாட்டியா சரசு..."
மகளிடம் அவள் முறையிட்டபோதுதான் அவள் தனது சின்ன மாமியாரின் மகளை... தம்பிக்கு மணம் முடித்து வைக்க நினைத்த தன் அபிலாஷையை வெளிப் படுத்தினாள்...
"அம்மா.. நானோ அந்நியத்தில் வாழ்க்கைப் பட்டிருக்கேன்..."
"அதைச்சொல்லு.. உன் மாமன்தான் உன்னைக் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டானே..."
வழக்கமான தனது பிலாக்கணத்தை விசாலாட்சி வெளிப்படுத்த.. பால சரஸ்வதி பல்லைக் கடித்தாள்...
'இந்தம்மாவோட ஐந்தாவது படிச்ச தம்பி என்னைக் கை விட்டுட்டான்னு பெயர் கட்டிக்கிட்டே இருக்கிறாங்களே.. இந்தப் பேச்சை இவங்க விடவே மாட்டாங்களா..?'
"அதை விடுங்கம்மா... என் மாமியாரோட தங்கை பொண்ணை நீங்க பார்த்திருக்கீங்களா..?"
"உன் மகனுக்கு காது குத்தறப்போ பாத்திருக்கேன்.. முடியை வெட்டி விட்டுக்கிட்டு.. ஆம்பளையாட்டம்.. பேன்டு சட்டையிலே அலைஞ்சுச்சே.. அந்தப் பெண்ணுதானே..."
'இந்த ஷோபா.. காதுகுத்துக்கு வந்தப்ப ஜீன்ஸ் பேன்டையும்.. டிசர்ட்டையும் அவாய்டு பண்ணியிருக்கலாம்...'
"அது சென்னையில் பிறந்து வளர்ந்த பொண்ணும்மா... அப்படித்தான் இருக்கும்..."
"அப்படி.. இப்படி இருக்கிறதையெல்லாம் அந்தப் பொண்ணு மெட்ராஸோட விட்டுட்டு வரக்கூடாதோ..? திருநெல்வேலிச் சீமையிலேயும் அப்படி இருந்தா நாடு தாங்குமா சரசு...?"
இப்படிக் கேட்கிறவளிடம் அந்தப் பெண்ணை 'தம்பிக்கு கல்யாணம் பண்ணி வை' என்று சொன்னால்... 'தென்காசி பட்டினத்திலேயும் அப்படி இருந்தா வீடு தாங்குமா..?' என்ற கேள்வியை எழுப்புவாள் என்று தோன்ற பாலசரஸ்வதி பேச்சின் போக்கை மாற்றிவிட்டாள்...
சென்னையில் அவளுடைய சின்ன மாமியார் சீரும்.. சிறப்புமாக வாழ்கிறாள்.. அத்தனை சொத்துக்கும் அந்தப் பெண் ஷோபாதான் ஒரே வாரிசு.. அப்படி.. இப்படி இருந்தால்தான் என்ன.. கல்யாணம் பண்ணி மேகலாவின் மருமகளாக அவள் வந்து விட்டால்.. மேகலா அவளை தென்காசிப் பட்டினத்திற்கு ஏற்ற  பெண்ணாக மாற்றிவிட மாட்டாளா என்ன..? பாலசரஸ்வதி பாவம்... மேகலாவின் தம்பிக்கு வாழ்க்கைப்பட முடியாமல் அந்நியத்தில் வாழ்க்கைப் பட்டிருக்கிறாள்.. அவளுடைய சின்ன மாமியாரின் பெண்ணை தம்பி திருமணம் செய்து கொண்டால் அவளுக்கும் புகுந்த வீட்டில் மரியாதையும் பிடிப்பும் அதிகமாக கிடைக்கும்.. பிறந்த வீட்டிலும் கடைசிவரை அவளுக்கு பிடிமானம் இருக்கும்...
மேகலா கரைந்து விட்டாள்.. அதன் விளைவாக.. அதுவரை ஏதாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மகனை வற்புறுத்தியவள்.. சென்னையில் வசிக்கும் ஷோபாவைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மகனை வற்புறுத்த ஆரம்பித்தாள்...
பாலமுரளி முதலில் அதைக் கேட்டதும் அயர்ந்து விட்டான்... மேகலாவுக்கென்று சில கோட்பாடுகள் உண்டு... அவள் எப்படி ஷோபாவைப் போன்ற பெண்ணொருத்தியை தேர்வு செய்தாள் என்று ஆச்சரியப்பட்டுப் போனான்.. தொடர்ந்து பேசிய மேகலாவின் மனதில் மகளைப்பற்றிய கவலை மலையளவு மண்டியிருப்தைப் புரிந்து கொண்டவனுக்கு தாய் மனம் புரிந்து விட்டது... வரப்போகும் மனைவியைப் பற்றி நினைக்க நேரமில்லாமல் அவன் அலைந்து கொண்டிருந்தாலும்.. அவனுக்கும் சில கனவுகளும்.. எதிர்பார்ப்புகளும் இருந்தன.. அவற்றில் ஒன்றில் கூட அந்த ஷோபா பொருதி வரவில்லை...
"இந்தப் பேச்சை விட்டு விடுங்கம்மா..."
அவன் தீர்மானமாக சொல்லி விட்டபோதும்.. மேகலா அந்தப் பேச்சை விடவில்லை.. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை வலியுறுத்தி மகனிடம் பேசிக் கொண்டுதான் இருந்தாள்...
மேகலா இந்த அளவுக்கு மகனுடன் போராடிக் கொண்டிருக்க.. சென்னையிலிருந்த சுசிலா.. ஆற்றில் ஒரு கால்.. சேற்றில் ஒரு கால் என்ற ரீதியில் மகளுக்கு நாலாபக்கமும் பணக்கார இடங்களில் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தாள்...
அக்கா மகனுக்கு திருமணம் பேசிய போது பெண்ணின் ஊர் தென்காசியின் அருகிலிருக்கும் 'தேனூத்து' கிராமம் என்று கேள்விப்பட்டு..
"ஏன்க்கா நம்ம ராஜராஜனுக்கு பெண்ணே கிடைக்காதா..? இருந்திருந்து ஒரு பட்டிக்காட்டில போய் பெண்ணெடுக்கப் போகிற..?" என்று ஆதங்கப்பட்டாள்...
"பொண்ணோட குடும்பம் அந்த ஊருக்கே பெரிய குடும்பமாம் சுசி... உங்க மாமா சொன்னாரு..." அவளின் அக்கா அகிலா சொன்னாள்...
"அப்போ சுண்டும்.. நண்டும்மா வீடு பூரா கூட்டமிருக்குன்னு சொல்லு..."
"ஊஹீம்.. அக்கா.. தம்பின்னு இரண்டு பேர்தானாம்.. அப்பா இல்லையாம்.. அம்மா மட்டும்தானாம்..."
சுசிலா பிரயோகித்த முதல் அஸ்திரம் பயனற்றுப் போக... அவள் அடுத்த அஸ்திரத்தை பிரயோகித்தாள்...
"தகப்பனில்லாத பெண்ணா..? உனக்கெதுக்கு இந்த தலைவிதி..?"
"தம்பி இருக்கானில்லையா..?"
"அவன் என்னத்தை செய்து கிழித்து விடப் போகிறான்..? பரம்பரை நிலத்தை விற்று சீர் செய்வானாயிருக்கும்.. இப்படி ஒவ்வொரு செய்முறைக்கும் அவன் சொத்தை விற்றுச் செஞ்சா கடைசியில் என்ன மிஞ்சப் போகுது..? அவனுக்கு தகப்பனுக்கு தகப்பனா நம்ம ராஜராஜன்தான் நிற்க வேண்டிவரும்...."
"அப்படியில்லைன்னு உன் மாமா சொல்கிறாரு சுசீ... அவன் அவங்க அப்பாவை விட ஆயிரம் மடங்கு கெட்டிக்காரனாம்.. பத்தாவது படிக்கிற போதே குடும்பப் பொறுப்பை கையில் எடுத்துட்டானாம்.. சொல்வாக்குக்கும்... வசதிக்கும் ஒரு குறைச்சலு மில்லைன்னு உங்க மாமா சொல்கிறாரு..."
சுசிலாவிடம் இல்லாத ஒரு குணம்... அகிலாவிடம் உண்டு...
அது... கணவன் சொன்னால் மிகச் சரியாக இருக்கும் என்று நம்பும் அதீத நம்பிக்கை...
அந்த நம்பிக்கையை உடைத்து காட்ட வேண்டுமென்ற கனவு சுசிலாவுக்கு நிறைய உண்டு.. அதற்காகவே... அவள் ராஜராஜனுக்கு பெண் பார்க்கப் போனபோது.. வேலை மெனக்கெட்டு சென்னையிலிருந்து கிளம்பிவந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்...
"உனக்குத்தான் நம்ம ராஜா மேலே எவ்வளவு பாசம் சுசி..."
அவள் வந்திருக்கும் நோக்கம் புரியாமல் அகிலா மகிழ்ந்து போனாள்.. அவர்கள் பெண் பார்க்க கிளம்பினார்கள்...
தேனூத்து கிராமத்திற்குள் கார்கள் நுழைந்த போதே சுசிலா அசந்து விட்டாள்...
பட்டிக்காடுதானே.. என்ற நினைவோடு வந்த சுசிலாவின் கண்முன்னால்.. அழகான பெரிய வீடுகளோடு.. வரிசையாக இருந்த தெருக்களோடு.. வளமையாக.. நகர்புறத்தின் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியை நினைவுறுத்தும் விதத்தில் அமைந்திருந்தது அந்தக் கிராமம்...
"இவ்வளவு வசதியா இருக்கே..."
"ஊரைச் சுத்திப் பார்த்தியில்ல... பச்சைப் பசேல்ன்னு தோப்பும்.. வயலுமா இருக்கிற ஊர்.. மூணு போகம் நெல்லடிக்கிறாங்க.. வசதிக்கா குறைவிருக்கப் போகுது...?"
அவர்கள் கிளம்பி வந்த ஆறு கார்களும்.... பாலமுரளியின் வீட்டுக் காம்பவுண்டிற்குள் கட்டப் பட்டிருந்த நீண்ட அகன்ற... பெரிய வழுவழுப்பான தூண்களை உடைய போர்டிகோவில் வரிசையாக நின்ற பின்னும்.. நிறைய இடம் மீதமிருப்பதை உணர்ந்து கொண்ட சுசிலாவின் கண்களில் முதன்முதலாக யோசனை வந்தது..
அவள் அந்த வீட்டை பார்வையிட்டாள்... அந்த ஊரில் பாதியாவு அந்த வீடே இருக்கும் என்று அவள் மனம் கணக்கிட்டது...
வாசலின் பிரதானக் கேட்டிலிருந்து.. வீடுவரை.. வழுவழு சிமெண்ட் பாதை போட்டிருந்தாலும்.. வீட்டின் முன்புறம் அகன்று நீண்டு.. நாலுகால் மண்டபம் போல.. நான்கு அகன்ற பெரிய தூண்களுடன் தென்பட்டட போர்டிகோவைப் போன்ற இடம் பூராவும் பளிங்கினால் இழைத்திருந்தார்கள்...
நீண்ட சிமிண்ட் பாதையின் இருபுறமும் தோட்டம் இருந்தது... அதன் ஓரமாக நீச்சல் குளம் அமைந்திருந்தது.. தோட்டத்தின் மையத்தில் செயற்கை நீருற்று இருந்தது..
அவர்களின் சென்னை வீட்டை விட பதினைந்து மடங்கு அதிக விஸ்தீரனத்துடன் அமைந்திருந்த அந்த வீட்டின் அரண்மனை போன்ற அமைப்பில் பிரமித்து விட்டாள் சுசிலா...
பெண் பார்க்க முன்புறமிருந்த ஹாலில் அமர்ந்திருந்த போதே அந்த வீட்டின் செல்வச் செழிப்பை கணக்கில் எடுத்து விட்டாள்.. திருமணம் முடிவாகி.. பாலசரஸ்வதிக்கு செய்யப்பட்ட சீர்வரிசைகளில் அவளது பிரமிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது...
அப்போது ஷோபாவிற்கு பதிமூன்று வயதுதான் இருக்கும்.. இருந்தும்.. இருபது வயதான பாலமுரளியின் மீது அவள் பார்வையை பதித்து வைத்துக் கொண்டாள்...
ஷோபா படிப்பில் கெட்டிக்காரியல்ல.. அதனால்.. படிப்பில் இரண்டு வருடம் இடறி விழுந்து ஒருவழியாக இன்ஜினியரிங் காலேஜில் அடியெடுத்து வைத்தாள்...
பரந்தாமன் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தார்.. சென்னையில் அவர் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த போது.. கிராமத்தில் பாலமுரளி.. வெற்றிகரமான இளம் தொழிலதிபனாக மாறியிருந்தான்.. அவனது அடையாளம் வெகுவாக மாறி.. கரும்புமில்.. ஜவுளிக்கடை என்று அவன் வியாபாரத்தில் கால் பதித்தபோது... தன் மனக்கிடக்கையை அகிலாவின் காதில் போட்டு வைத்துவிட்டாள் சுசிலா...
இன்னொரு பக்கம் பரந்தாமனை தூண்டிவிட்டு அவருடைய நண்பரான ராமாமிர்தத்தின் மகன் சங்கருக்கு ஷோபாவை கொடுக்கும் எண்ணத்தை அவர் மனதில் விதைத்தாள்...








Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,26,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -8
அம்மம்மா.. கேளடி தோழி...! -8
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy