அம்மம்மா.. கேளடி தோழி...! -17

17 ராத்திரி நேரத்து ரகசியக் கனவினில்    உன்முகம் கண்டு உறக்கத்தை தொலைத்தேன்... அந்தக் கேள்வி... கிருஷ்ணமூர்த்தியின் கேள்வியை விட ...


17
ராத்திரி நேரத்து ரகசியக் கனவினில்
   உன்முகம் கண்டு உறக்கத்தை தொலைத்தேன்...

அந்தக் கேள்வி... கிருஷ்ணமூர்த்தியின் கேள்வியை விட ஆழம் நிறைந்தது.. வெளியே கேட்பதற்கு மேம்போக்காய் தோன்றினாலும்.. பல அர்த்தங்கங்களை உள்ளடக்கியது...
நீ யார்...? எந்த ஊர்..? என்ன செய்கிறாய்..? உனக்கும் என் மகளின் தோழிக்கும் என்ன சம்பந்தம்...? இந்த இரவு நேரத்தில் என் மகளை... உன்காரில் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயே.. உன் காரில் ஏறச் சொல்லி நீதான் சொன்னாயா..? இல்லை என் மகளே உன் காரில் ஏறிவந்தாளா...?
இத்தனை கேள்விகளையும் உள்ளடக்கிய கேள்வியை அவனை உட்கார வைத்து.. இதமாக உபசரித்து... கையில் காபிக் கப்பையும் கொடுத்து.. அவன் காபியை பருகிக் கொண்டிருக்கும் போது கேட்டு வைக்கும் அவளின் சாமர்த்தியம் அவனை மனதிற்குள் 'சபாஷ்' போட வைத்தது...
ராதிகாவின் முகம் சிவந்து போனது...
தாயின் கேள்வியின் உட்பொருளை உணர்ந்து கொள்ளாமலிருக்கும் அளவிற்கு அவள் முட்டாளில்லை...
அவன் என்ன நினைப்பான் என்ற நினைவில் அவள் நொந்து போனாள் ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியாது...
அது அவளின் குடும்பம்... இரவு வேளையில் தனியாக ஒரு அந்நிய ஆணுடன் காரில் வந்து இறங்கியிருக்கிறாள்.. இது போல ஒன்றை இதற்கு முன்னால் அவளோ.. கீதாவே செய்ததில்லை... அதை அவர்களது பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள்...
அப்படியிருக்கும்போது... முதல் முறையாக அதைச் செய்திருக்கும் ராதிகா... இதுபோன்ற விசாரணைகளை எதிர் கொண்டு.. பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்..
அவளுக்கு என்ன வென்றால்.. இந்த விசாரணைக் கமிசனை அவளிடம் மட்டும் அவர்கள் வைத்துக் கொண்டால் ஆகாதா என்பது தான்...
அவனை அனுப்பி வைத்துவிட்டு.. அவளை நிற்க வைத்துக் கேள்வி கேட்டால்.. அவள் பதில் சொல்ல மாட்டாளா..? அதை விட்டுவிட்டு.. அவனை உட்கார வைத்து.. கையில் காபிக் கப்பையும் கொடுத்து... அவன் குடித்துக் கொண்டிருக்கும் போதே.. விவரங்களை தொண்டையிலிருந்து தோண்டி எடுக்க வேண்டுமா..?
ராஜேஸ்வரி ராதிகாவின் முகச்சிவப்பையும்.. முகச் சுளிப்பையும் கண்டு கொள்ளவே இல்லை...
என்னவோ காலம் காலமாய் பால முரளியுடன் பழகியவளைப் போல அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
பாலமுரளி காலி காபிக் கப்பை எதிரிலிருந்த டீப்பாயின் மேல் வைத்துவிட்டு... இயல்பாக நிமிர்ந்து அமர்ந்து புன்னகைத்தான்...
"ராதிகாவை நான் டிராப் பண்ணிவிடறேன்னு சொல்லவும் இல்ல.. அவங்களும் என் காரில் லிப்ட் கேட்டு ஏறவும் இல்ல.. ஷோபா.. அதுதான்.. ராதிகாவோட பிரண்டு.. அவதான் என்கிட்ட இவங்களையும்.. இவங்க பிரண்டையும் வீட்டில் டிராப் பண்ணி விடுங்கன்னு கேட்டுக்கிட்டா.. இருட்டின பின்னாலே இவங்களை ஆட்டோவில் தனியாய் அனுப்பனுமேன்னு கவலைப்பட்டா.. வயதுப்பெண்களாச்சே.. சரி.. போகிற வழிதானே.. பாதுகாப்பாய் காரில் கூப்பிட்டுக்கிட்டுப் போய் இறக்கிவிட்டுட்டுப் போகலாமேன்னு நானும் ஓகேன்னு சொல்லிட்டேன்..."
எப்படி ராஜேஸ்வரியின் புத்தி கூர்மையை பாலமுரளிக்கு பிடித்துப் போய் விட்டதோ.. அதைப்போல... பாலமுரளியின் புத்தி கூர்மையும் ராஜேஸ்வரிக்குப் பிடித்துப் போய் விட்டது...
எனக்கும் உங்கள் மகளுக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை.. என் காரில் அவளை ஏறச் சொல்லி நானும் சொல்லவில்லை.. என்கூட வருவதாக அவளும் சொல்லவில்லை.. இது இரவு நேரம்.. அவளும் அவள் தோழியும் வயதுப் பெண்கள்.. நான் விருந்து முடிந்து நான் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.. போகும் வழியில் இவர்கள் இருவரையும் இறக்கிவிட்டுப் போக முடியுமா? என்று என் உறவுக்காரப் பெண் கேட்டாள்... இரவு நேர ஆட்டோப் பயணத்தை இவர்கள் மேற்கொள்ள வேண்டாமே என்று நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்.. மற்றபடி.. இந்த கார் பயணத்தின் பிண்ணணியில் எந்தவித நோக்கமுமில்லை...
பாலமுரளியின் பதில் இத்தனை விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க.. ராஜேஸ்வரி முகம் மலர்ந்து போனாள்...
"தம்பி ரொம்ப யதார்த்தமா பேசறிங்க..."
"நாங்க கிராமத்துக்காரங்க.. எங்க ஊரில வயசுப் பொண்ணுக ராத்திரி நேரத்தில் தனியாய் வந்தா.. அது மாட்டு வண்டியாய் இருந்தாலும் சரி.. காராக இருந்தாலும் சரி... நிறுத்தி அவங்களை ஏற்றிக் கொண்டு போய் அவங்க வீட்டில விட்டுவிட்டுத்தான் வேற வேலையைப் பார்ப்போம்.. அந்தப் பழக்கம்.. இன்னைக்கும் வந்துருச்சு.. மத்தபடி உங்களையெல்லாம் பார்த்ததிலே ரொம்ப சந்தோசம்... குற்றாலம் பக்கம் வந்தா எங்க ஊருப்பக்கமும் வந்துட்டுப் போங்க.. எங்க அம்மா சந்தோசப்படுவாங்க..."
இப்போதும் அவன் சந்தோசப்படுவான் என்று கூறாமல் அவனுடைய அம்மா சந்தோசப்படுவாள்
என்று கூறிய அவனுடைய சாதுர்யத்தைக் கண்டு ராஜேஸ்வரியின் முகம் இன்னும் அதிகமாக விகசித்தது...
அவனுடன் பேசுவதை அவள் விரும்பினாள்.. இவ்வளவு பெரிய கோடிஸ்வரன்.. எந்தவித பந்தாவுமில்லாமல்.. அவர்கள் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து எளிமையாக பேசிப் பழகுவதை அவளால்
நம்பவே முடியவில்லை...
"குற்றாலம் பக்கம் வரனும்னு ரொம்பநாளா நானும் நினைச்சுக்கிட்டுத்தான் இருக்கேன் தம்பி..."
கணவரைப் பார்த்தபடி அவள் சொல்ல.. எதற்கு அவள் அதை அவரைப் பார்த்தபடி சொல்கிறாள்.. என்று அவர் யோசித்தார்...
'எழுமிச்சைப் பழத்தை என் தலையில் தேய்த்து அருவியில் காட்ட வைக்கனும்ன்னு நினைச்சிருந்தாளோ..'
அவளது நினைவின் ஓட்டத்தை அவரால் கணிக்க முடிந்தது.. இதைத்தான் நினைத்தாயா என்று கேட்கத்தான் பாவம்.. அவரால் முடியவில்லை...
'ஆமாம்' என்ற பதில் வந்து விட்டால்.. அவர் கட்டிக்காக்கும் கௌரவத்திற்கு பங்கம் வந்து விடாதா..?
அதனால் வாய்மூடி மௌனியாகி விட்டார்... ஆனால்.. கீதாவும் சுந்தரும் அப்படி மௌனியாகி விடுவார்களா..? அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்து பொங்கிச் சிரித்து வைத்தார்கள்..
"சென்னையில இருக்கிற தண்ணிப் பஞ்சத்துக்கு குற்றால அருவிப்பக்கம் வந்து.. குளிர்ச்சியாய் கண்குளிர அந்த அருவித் தண்ணியை கண்ணாலேயாவது பார்த்துட்டு வரனும்னு ரொம்ப நாளா ஆசைதான் தம்பி.. எங்கே.. நினைப்பையெல்லாம் செயல்ல காட்ட முடியுதா..?"
"ஏன் முடியாது..?"
"நீங்க வேற.. இந்த வீட்டிலே இருக்கிற ஐந்து ஜீவனும் ஐந்து திசையை பார்த்துக்கிட்டு இருக்கும்.. இதில எல்லாத்தையும் ஒன்று சேர்த்து ஒரு இடத்துக்கு கூப்பிட்டுக்கிட்டு போகிறதுக்குப் பதிலா.. மலையைக் கட்டி இழுத்துரலாம் தம்பி..."
ராஜேஸ்வரி சொன்ன விதத்தை ரசித்துச் சிரித்தான் பாலமுரளி...
'வந்தவரின் முன்னாலே.. வீட்டாரின் குணாதிசியத்தை இவங்க படம் பிடிச்சுக்காட்டனுமா..?' ராதிகா மனதுக்குள் வெகுண்டாள்...
அந்த கோபத்தில் ராஜேஸ்வரியுடன் மோதினாள்...
"ஏம்மா இருக்கிறது நான்கு திசை... இதில ஐந்தாவதா ஒரு திசையை நீங்க உருவாக்கினா எப்படிம்மா..?"
"அப்படியாம்மா..? இந்த தென்மேற்கு.. வடகிழக்குன்னு எல்லாம் சொல்வாங்களே.. அதெல்லாம் திசையில சேர்த்தியில்லையா..?"
ராஜேஸ்வரி மடக்க... பாலமுரளியின் முன்னால் தன் புத்திசாலித்தனம் குறைந்து போனதில் ராதிகாவிற்குள் கோபம் எழுந்தது...
அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் அவள் தந்தையை மௌனப் பார்வை பார்க்க...
'அவ அப்படித்தான் மகளே...' என்று கிருஷ்ணமூர்த்தி மகளை தன்னுடன் கூட்டுச் சேர்த்துக் கொண்டு ஆறுதல் பார்வை பார்த்தார்...
"எப்படியோ.. ஐந்து திசையும் ஒன்னாச் சேர்ந்தா எனக்குத் தகவல் சொல்லிட்டு கிளம்பி வாங்க... நான் எங்க ஊருப்பக்கமெல்லாம் சுற்றிக் காட்டறேன்..."
பாலமுரளி எழுந்து நின்று கை கூப்பினான்.. கிருஷ்ணமூர்த்திக்கு ஒருவழியாய் அவன் கிளம்பி விட்டதில் ஏக சந்தோசம்.. அந்த சந்தோசத்தில் வாசலுக்கே போய் அவனை வழியனுப்பி விட்டு வந்தார்...
"ஏம்மா.. வந்தவங்க முன்னாலே இப்படியா என் இமேஜை டேமேஜ் பண்ணுவிங்க..."
அவன் போகும் வரை பல்லைக்கடித்துக் கொண்டு பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்திருந்த ராதிகா.. பொறுமையிழந்தவளாக வெடித்தாள்...
அவளின் அணை உடைந்த கோபத்தை ராஜேஸ்வரி லட்சியமே பண்ணவில்லை... இதைப் போல எத்தனையைப் பார்த்திருப்பேன் என்பதைப் போல ஒரு பார்வையை பார்த்து வைத்தாள்..
"எதுக்குடி இப்ப... குழம்பில போட்ட மீனாட்டம் இந்தத் துள்ளு துள்ளறே...?"
"அம்மா கடுப்பைக் கிளப்பாதீங்க.. ஒருத்தர் ஐயோ பாவமேன்னு பரிதாபப்பட்டு வீட்டில் கொண்டு வந்து விட வந்தா.. இப்படியா பிஹேவ் பண்ணுவீங்க...?"
"அதை என் கிட்டச் சொல்லாதே... உன் அப்பாகிட்டச் சொல்லு... அவர்தான் இங்கிதமில்லாம.. வந்தவரை உட்காரச் சொல்லனும்கிற நாகரிகம் கூட இல்லாம... அவரை நிற்க வைச்சுக்கிட்டே.. அவர் முன்னாலே உன்னைக் கேள்வி கேட்டாரு..."
'எடுத்துக் கொடுக்கிறாளே...'
அப்போது தான் மகளுடன் கூட்டணி அமைந்திருந்த  கிருஷ்ணமூர்த்தி.. அந்தக் கூட்டணி உடைந்து விடுமோ என்ற மனக்கிலேசத்துக்கு ஆளானார்...
"அவரைச் சொல்கிறீங்களே... நீங்க மட்டும் என்னவாம்.. அப்பா அவரை நிற்க வைத்து என்கிட்டக் கேட்ட கேள்வியை... அவரை உட்கார வைத்து.. கையில காபிக் கப்பையும் கொடுத்து.. அவர்கிட்டயே நீங்க கேட்டிங்க.. தானிக்கு பேரு ஏமி...?"
"என்னது..?"
"தானிக்கு பேரு ஏமின்னேன்.."
"ஏண்டி கீதா.. இவ என்னவோ சொல்றாளே.. அதுக்குப் பெயர் என்னடி..?"
"அதைத்தான் சொல்றாம்மா..."
"அப்படின்னா..?"
"அம்மா.. தானிக்கு பேரு ஏமின்னா... அதுக்குப் பெயர் என்னன்னு அர்த்தம்.. அதைத்தான் இவ தெழுங்கில சொல்றா.."
"இப்படிப் பேச எங்கேடி கத்துக்கிட்டா..?"
"இவ கூட தெழுங்குக்காரப் பொண்ணு ஒன்னு படிக்குதாம்.."
"அட்லன்னா..."
"அப்படின்னா...?"
"அப்படியான்னு அர்த்தம்... இவளுக்குத்தான் தெழுங்குக்காரங்க சிநேகிதமா இருப்பாங்களா... எனக்கு இருக்க மாட்டாங்களா..? மூணாம் வீட்டு கோகிலா ஆந்திராக்காரப் பொண்ணுதான்... உன் அக்கா பேசினா... நான் பேச மாட்டேனா..? யாருகிட்ட..?"
"அம்மா.. இப்ப எதுக்கு பேச்சை மாத்தறிங்க... நீங்க செய்தது சரியில்லை... அதை ஒப்புக்குங்க..."
"அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன்... ஆளைப்பாரு.. ஏண்டி... இருட்டின பின்னாலே பங்சனுக்குப் போகிறேன்னு போவை.. யாரோ ஒருத்தன் கூட காரில வந்து இறங்கிற.. அதை என்ன ஏதுன்னு விசாரிக்கலைன்னா.. அவங்க பெத்தவங்களாடி..? அது குடும்பமாடி..? நாங்க அப்படித்தான் இருப்போம்.. நாங்க விசாரிக்கிற அளவுக்கு நீ ஏன் வைச்சுக்கற..?"
கேள்வி கேட்ட மகளிடம் பதில் கேள்வி கேட்டு விட்டு ராஜேஸ்வரி கோபத்துடன் உள்ளே போய்விட... 'நாங்க...' என்று அவரையும் மனைவி கூட்டுச் சேர்த்துக் கொண்டதில் கிருஷ்ணமூர்த்தி.. அவசரமாக கட்சி மாறினார்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -17
அம்மம்மா.. கேளடி தோழி...! -17
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi17.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi17.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy