அம்மம்மா.. கேளடி தோழி...! -13

13 பொன்மாலைப்   பொழுதினிலே.. புதுராகம்   பாடிவந்தாய்... ' இதற்காகவா இத்தனை விரயமும்.. ?' என்று நொந்து போனாள் ஷோபா.. காண...


13
பொன்மாலைப்  பொழுதினிலே..
புதுராகம்  பாடிவந்தாய்...

'இதற்காகவா இத்தனை விரயமும்..?' என்று நொந்து போனாள் ஷோபா..
காணாததைக் கண்டவர்களைப் போல.. சங்கரும்.. பாலமுரளியும் ராதிகாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க.. விழா நாயகி அவளா.. இல்லை ராதிகாவா..? என்ற சந்தேகமே அவளுக்கு வந்து விட்டது...
இப்படி நடக்கக் கூடும் என்று அவள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை...
ராதிகா நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவள்.. அவளிடம் போய்.. சென்னை மாநகரில் இருக்கும் கோடிஸ்வரனான சங்கரும்.. தேனூத்து கிராமத்தில் இருக்கும்.. கோடிஸ்வரனான பாலமுரளியும்.. ஜொள்ளு விடுவார்கள் என்று அவள் கனவா கண்டாள்...?
'இவகிட்ட என்ன இருக்குன்னு இவங்க இரண்டு பேரும் இந்த வழி வழிஞ்சு... இந்த இடத்தையே கழுவி விடறாங்க...?'
அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை...
அழகாக.. வடிவமைக்கப்பட்ட பிரத்யேக பிறந்தநாள் விழாவிற்கான உடையை அவள் அணிந்திருந்தாள்.. ஆங்காங்கே கற்கள் மின்ன.. அந்த உடை அவளது அழகை அதிகப் படுத்திக் காட்டிக் கொண்டிருந்தது...
வங்கிப் பெட்டகத்தில் இருந்த வைர நகைகளை அந்த விழாவிற்காகவே பரந்தாமன் எடுத்து வந்திருந்தார்...
அதை அணிந்திருந்த ஷோபா.. திரும்பும் போதெல்லாம் அந்த வைரங்கள் ஒளிர்ந்து.. அவளை தேவதை போல தோன்ற வைத்துக் கொண்டிருந்தன...
அந்த விழாவிற்காக வீட்டுக்கே வரவழைக்கப்பட்ட ஒப்பனைப் பெண்கள்.. அவளுக்கு பார்த்துப் பார்த்து... ஒப்பனை செய்திருந்தார்கள்.. ஒப்பனை செய்யப்பட்டதைப் போலவே இல்லாமல்.. கெட்டிக்காரத்தனமாக ஒப்பனை செய்வது எப்படி என்பதில் அவர்கள் தேர்ச்சி பெற்றர்களாக இருந்தார்கள்..
அவர்களது ஒப்பனையில்.. ஷோபா.. பேரழகியாக தோற்றமளித்தாள்...
அவளை விட்டுவிட்டு.. சாதாரணமான ஒப்பனையும்.. மெல்லிய செயினும்.. காட்டன் சுடிதாருமாக இருக்கும் ராதிகாவிடம் அந்த சங்கரும்.. பாலமுரளியும் என்னத்தைக் கண்டுவிட்டார்கள் என்ற விவரம் பிடிபடாமல் மண்டைகாய்ந்து போனாள் ஷோபா...
ஒருவழியாக ராதிகா பாடி முடித்ததும்.. விருந்து ஆரம்பித்தது... பஃபே முறையான விருந்தில்.. கையில் தட்டுக்களுடன் ஒரு பூச்செடியின் பக்கமாக ஒதுங்கி நின்று தங்களுக்குள் பேசியபடி ஹேமாவும்.. ராதிகாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்...
அவர்களைப் போலவே.. கையில் தட்டுடன் சங்கர் அருகில் வந்தான்...
"உங்க பாட்டு நல்லா இருந்தது..." என்று ராதிகாவிடம் சொன்னான்..
"தேங்க்ஸ்.." அழகாக சிரித்தாள் ராதிகா...
"ஆக்சுவலா.. இந்த பார்ட்டிக்கு வந்தாகனுமே என்ற தலைவலியோடுதான் வந்தேன்.. உங்க பாட்டு என் தலைவலியையும் விரட்டிருச்சு.. இந்த பார்ட்டியையும் மறக்க முடியாததாக ஆக்கிடுச்சு..."
அதுவரை.. முகத்தில் புன்னகையுடன் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராதிகா முகம் மாறினாள்...
'இது பாட்டை மட்டும் ரசிக்கிற பேச்சாத் தெரியலையே... பேச்சு டிராக் மாறுதே...'
ஹேமா வேறு அவளை குறும்புப் பார்வை பார்த்து வைக்க.. அவளை கண்களால் அதட்டினாள் ராதிகா...
கையில் தட்டுடன் அவன் ராதிகாவைத்தான் தேடிப் போவான் என்று கண்டு வைத்திருந்த
ஷோபா.. பரந்தாமனுக்கு மட்டும் புரியுமாறு லேசாக தொண்டையைச் செருமினாள்...
வந்திருந்த விருந்தினர்களிடம் பேசிக் கொண்டிருந்த பரந்தாமன் நாசுக்காக அவர்களிடமிருந்து கழன்று மகளின் அருகே வந்து ...
"என்னம்மா..?" என்று ரகசியக் குரலில் கேட்டார்..
"அங்கே பாருங்க..."
ஷோபா சுட்டிக் காட்டிய திசையில்.. சங்கர் ராதிகாவுடன் பேசிக் கொண்டிருக்க.. பரந்தாமனுக்கு 'பக்'கென்று ஆகிவிட்டது...
ஏற்கனெவே.. ராதிகாவின் பாடலை சங்கர் ரசித்துக் கொண்டிருந்ததைக் கண்டு வயிறு கலங்கிப் போய் இருந்தார் அவர்...
இப்போது இந்தக் காட்சியும் சேர்ந்து கொள்ள.. அவரது ரத்த அழுத்தம் எகிறியது...
"யாரும்மா இந்தப் பொண்ணுக...?"
"என் கிளாஸ் மேட்ஸ்தான் டாடி.."
"நமக்கு ஈக்குவல் இல்லை போல..."
"யெஸ் டாடி..."
"அப்புறமும் எதுக்காக இவங்களை இந்த பங்சனுக்கு இன்வைட் பண்ணின...?"
"அது வேற கதை டாடி... இப்படி கதை மாறும்ன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை..."
"சங்கர் அந்தப் பெண்ணை ஆர்வமாக பார்க்கிறான்..."
"ஐ நோ..."
"என்ன செய்யலாம்..?"
"இப்போதைக்கு சங்கரை நீங்க திசை திருப்புங்க.. அதுக்குள்ள நான் அவங்களை மூட்டைகட்டி அனுப்பி வச்சிடறேன்..."
"முதலில் அதைச்செய்..."
பரந்தாமன்... சங்கரை நோக்கிப் போனார்.. சுவராஸ்யமாக ராதிகாவிடம் பேசிக் கொண்டிருந்த சங்கரிடம்...
"எக்ஸ்யூஸ்மி மாப்பிள்ளை..." என்று பவ்யமாக சொன்னார்...
"யெஸ்..." அமர்த்தலாக அவரைப் பார்த்தான் சங்கர்...
'இதுகொன்னும் குறைச்சலில்லை.. என் மகளைப் பார்க்க வாடான்னா.. வந்த இடத்தில் என்மக கூடப் படிக்ககிறவங்களை பார்த்துக்கிட்டு... மிதப்பலான பார்வை என்ன வேண்டிக்கிடக்கு..'
"எனக்கும்.. ராமாமிர்தத்திற்கும் பொதுவான பிரண்ட் ஒருத்தர் வந்திருக்கார்.. நீங்க வந்திருக்கிறதைச் சொன்னேன்.. உங்க கூடப்பேச பிரியப்படறார்.. ஒரு செகண்ட் வந்துட்டுப் போக முடியுமா..?"
வேறு வழியின்றி பரந்தாமனைப் பின்பற்றிப் போன சங்கரால் ஒரு நொடியில் திரும்ப முடியவில்லை...
பரந்தாமன் அறிமுகப் படுத்தி வைத்த அந்த நபர்.. ராமாமிர்தத்திற்கு மிகவும் வேண்டியவராக இருந்தார்.. ஒருமணி நேரமானாலும் அவர் பேச்சை நிறுத்தவே மாட்டார் என்று தோன்ற.. விடுபட வழி தெரியாமல் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி பேசிக் கொண்டிருந்தான் சங்கர்...
இங்கே சங்கர் அகன்ற அடுத்த நொடியில் ராதிகாவிடம் விரைந்தாள் ஷோபா...
அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்த ராதிகாவும்.. ஹேமாவும் அவளைப் பார்த்து.. கடமைக்கு சிரித்து வைத்தார்கள்...
"தேங்க்யு ராதிகா.. தேங்க்யு ஹேமா.. என் இன்வைட்டை ரெஸ்பான்ஸ் பண்ணி என் பங்சனில் கலந்துக்கிட்டதுமில்லாம ராதிகா பாட்டுப்பாடி அசத்திட்டா..."
"இட்ஸ் ஆல்ரைட் ஷோபா.. நேரமாச்சு.. நாங்க கிளம்பனும்..."
ராதிகா இதைத்தான் சொல்வாள் என்று ஷோபாவிற்கு நன்றாகவே தெரியும்.. அதிகநேரம் இருக்க மாட்டேன் என்ற நிபந்தனையுடன் வந்தவள்.. அவ்வளவு நேரம் அங்கே நின்றதே பெரியவிசயம்...
ஷோபாவின் கவலை என்னவென்றால்.. இந்த விடைபெறுதலை சங்கரின் முன்னால் ராதிகா சொல்லி வைத்தால்.. அவளை போகும் வழியில் வீட்டில் விடுகிறேன் பேர்வழியென்று அவன் கிளம்பி விடுவானே என்பதுதான்...
அந்த நேரத்தில் ஆட்டோவும் உடனே கிடைக்காது..
அவனது உதவியை மறுத்து ராதிகா வெளியே போய் ஆட்டோவுக்கு நின்றாலும்.. மீண்டும் சங்கரின் கண்களில் பட்டுத் தொலைத்து விடும் அபாயம் இருந்ததால்.. என்ன செய்வது என்று ஏகத்துக்கும் கவலைப் பட்டாள் ஷோபா...
அவள் சுற்று முற்றும் பார்த்த போது... சுசிலாவிடம் பாலமுரளி விடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிந்தது... அவளுக்கு ஒரு வழி தோன்றியது...
அவசரமாக பாலமுரளியிடம் சென்று...
"எக்ஸ்யூஸ் மி..." என்றாள்...
"என்னங்க..?" என்றான் அவன்...
"நீங்க கிளம்பிட்டிங்க போல..."
"ஆமாம்.. காலாகாலத்தில் ஹோட்டல் ரூமுக்குப் போய் ஒரு தூக்கம் போட்டாத்தான் நாளைக்கு வேலைகளை சீக்கிரம் முடிச்சிட்டு ஊரைப் பார்க்க போக முடியும்..."
'நான் இந்தக் கதையையெல்லாம் கேட்டேனா...' என்றிருந்தது அவளுக்கு...
"இல்லை.. என் பிரண்ட்ஸ் அவங்க வீட்டுக்குப் போகனும்... அவங்க தனியாய் ஆட்டோவில வந்தாங்க.. இப்ப நைட்டாகிருச்சு..."
"இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க...?"
"நீங்க போகும் வழியில் அவங்களை டிராப் பண்ணிவிட முடியுமா..?"
"யாரைச் சொல்கிறிங்க..."
"அதோ.. அவங்களைத்தான் சொல்கிறேன்..."
ஷோபா கைகாட்டிய திசையில் ராதிகா நின்று கொண்டிருக்க... பழம் நழுவி பாலில் விழுந்து...
அதுவும் நழுவி வாயில் விழுந்ததைப் போல ஆனது பாலமுரளிக்கு...
ராதிகா பாடி முடித்தவுடன் அவளைப் பாராட்ட வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான்... அதற்கு வழியின்றி சங்கர் ராதிகாவிடம் விடாமல் கடலை போட்டு அடைகாத்துக் கொண்டிருக்க... பாலமுரளியும்.. அவன் இப்போது போவான்... அப்போது போவான் என்று காத்துக் காத்து.. பொறுமையிழந்து போனவனாக.. கிளம்பி விட்டான்...
ஷோபாவின் வகுப்புத் தோழி என்ற விவரம் ஒன்று போதுமே... தேனூத்துக்கு போவதற்கு முன்னால்... ராதிகாவைப் பற்றிய அனைத்து புள்ளி விவரங்களையும் அவன் அறிந்து விடலாமே...
அந்த எண்ணத்துடன் சுசிலாவிடம் விடைபெற்றுக் கொண்டிருந்த போது.. ஷோபா வந்து உதவி கேட்கவும்... இவளின் தோழி... இவளைப் போலத்தானே இருப்பாங்க... என்ற நினைவில் அலட்சியமாக அவன் பார்த்து வைத்த திசையில் ராதிகா நின்றிருந்தால்... அவனுக்கு எப்படி இருக்கும்..?
"அதுக்கென்னங்க... அவங்களை வரச் சொல்லுங்க.." என்று உடனடியாகச் சொல்லிவிட்டான்...
ஷோபா அதைத்தான் எதிர்பார்த்தாள்... என்னதான்.. சங்கரும்.. பாலமுரளியும் சமதையான கோடிஸ்வரர்கள் என்றாலும்.. பரந்தாமனைப் போலவே.. பாலமுரளி கிராமத்துக்காரன்தானே என்ற நினைவு அவளுக்கு...
அதனால்.. கல்யாணக் கனவுகளில் சங்கருக்கு முதலிடத்தைக் கொடுத்து.. பாலமுரளியை அடுத்த இடத்தில்தான் அவள் வைத்திருந்தாள்...
சங்கர் கைநழுவிப் போனால்.. அப்போது பாலமுரளியைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவளுக்கு...
பாலமுரளி அவள் கையிலிருக்கும் நெய்.. அவனை இப்போது விட்டாலும்.. பின்னால் பிடித்துக் கொள்ளலாம்.. சங்கரோ இப்போதுதான் உரையூற்றி வைத்திருக்கும் பால்... அது தயிராகி.. வெண்ணையெடுத்து.. அதை நெய்யாக்கி என்று அடுத்தடுத்து ஆயிரம் வேலைகளை அவள் செய்ய வேண்டியிருந்தது...
அதற்கு அவளுக்கு அவகாசம் வேண்டும்... அது நடந்து முடிவு அவளுக்கு சாதகமாக இருந்தால்.. அவள் திருமதி சங்கர்... பாதகமாக அமைந்தால்... அவள் திருமதி பாலமுரளி..
இந்த நினைவில் அவள் அப்படியே தாயைக் கொண்டிருந்தாள்...
இப்போதைக்கு ராதிகாவை அங்கிருந்து கிளப்புவதற்கு பாலமுரளியின் தலையில் அவளைக்
கட்டி விடுவதுதான் சிறந்த வழியென்று ஷோபாவுக்கு தோன்றிவிட்டது...







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -13
அம்மம்மா.. கேளடி தோழி...! -13
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy