அம்மம்மா.. கேளடி தோழி...! -12

12 மாலையிலே   நீ   விதைத்த... மயக்கம்   என்னைக்   கொல்லுதடி... பரந்தாமனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது... அன்றைய விழாவின் சிறப்பு விர...


12
மாலையிலே  நீ  விதைத்த...
மயக்கம்  என்னைக்  கொல்லுதடி...

பரந்தாமனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது... அன்றைய விழாவின் சிறப்பு விருந்தினராக சங்கரைத்-தான் அவர் நினைத்துக் கொண்டடிருக்கிறார்..  அந்த நேரத்திலே திடிரென்று வருகை தந்திருக்கும் பாலமுரளியின் வருகையை அவர் ரசிக்கவில்லை...
அதை அவரால் வாய் திறந்து சொல்ல முடியாது.. சுசிலா அவரை ஒருவழி பண்ணி விடுவாள்...
சங்கருக்கு இணையான பணக்காரன்தான் பாலமுரளி... இன்னும் சொல்லப் போனால்.. சங்கரை விடவும் பணக்காரன்.. இருந்தாலும்.. அவன் கிராமத்தில் நிலை கொண்டிருந்தான்...
சென்னை வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட ஷோபாவினால் கிராமத்தில் குப்பை கொட்ட முடியுமா என்ற நினைவு அவருக்கு...
சுசிலாவிடம் சொன்னால்.. இது ஒரு பேச்சா என்று கேட்பாள் என்பதினால்.. சுசிலாவிடம் இதைப்பற்றி அவர் சொன்னதே இல்லை...
பாலமுரளியை வரவேற்க சுசிலா சென்றுவிட... சங்கரின் பக்கத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக... அவர் அங்கிருந்து நகரவில்லை...
"யார்.. அவர்..?" சங்கர் விசாரித்தான்...
"சுசிலாவின் ரிலேடிவ்... குற்றாலம் பக்கத்தில் தேனூத்துங்கிற கிராமத்தில இருக்கார்..."
"ஓ..."
அதற்குள் சுசிலா பாலமுரளியை வரவேற்று அங்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்...
"வணக்கம்... மாமா..." என்றவனிடம்..
"வாங்க மாப்பிள்ளை..." என்று சொல்லாமல் பரந்தாமனால் இருக்க முடியுமா..?
அப்படி இருந்து விட்டால்.. சுசிலாதான் அவரை சும்மா விட்டு விடுவாளா..? எனவே அதைச் சொல்லி வைத்தார்...
தோட்டத்தை வியப்புடன் பார்த்த பாலமுரளி...
"இது கல்யாண வீட்டைப் போல இருக்கே.. உங்க பெண்ணுக்கு கல்யாணமா..? அக்கா எனக்கு சொல்லவே இல்லியே..." என்று கேட்டுவைத்தான்..
ராதிகா சிரிப்பை அடக்கிக் கொள்ள படாதபாடு பட்டுக்கொண்டிருக்க.. ஹேமா வாய்விட்டுச் சிரித்தே விட்டாள்...
அப்போதுதான் அவர்களைப் பார்த்தான் பாலமுரளி...
சிரிப்பை அடக்க முயன்றபடி நின்று கொண்டிருந்த ராதிகாவின் உருவம் அவன் மனதில் பதிய.. மீண்டும் பார்த்தான்...
பார்த்த பார்வையை விலக்கிக் கொள்ள அவனால் முடியவில்லை...
இதுவரை இதுபோன்ற நூதன உணர்வுகளுக்கு அவன் ஆட்பட்டதில்லை... எந்தப் பெண்ணும் அவன் மனதில் இதுபோன்ற சில்லென்ற குளிர் உணர்வை ஏற்படுத்தியதில்லை..
பரந்தாமனோ.. அவனது கேள்வியால் கொதிப்படைந்திருந்தார்...
'பட்டிக்காடு...' பரந்தாமன் பல்லைக்கடிக்க.. சுசிலா தர்மசங்கடமடைந்தாள்.. பாலமுரளி அப்படிக் கேட்டிருக்ககூடாது.. என்றாலும் அவனுடைய ஊரில் இதுபோன்ற விருந்துகள் நடைபெற்றதில்லையே..
"இன்னைக்கு ஷோபாவோட பர்த்டே.." அவள் விளக்கம் சொன்னாள்..
"ஓ.. பிறந்தநாளா..?" பாலமுரளியின் சந்தேகம் விலகியது..
"அதுக்காகத்தான் பார்ட்டி அரேன்ஜ் பண்ணியிருக்கோம்.."
"என்ன... அத்தை இது..? எங்களுக்கும்தான் பிறந்தநாள் வருது... அன்னைக்கு வடைபாயசத்தோடு சாப்பிடுவோம்.. கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணுவோம்.. மத்தபடி எங்க வேலைகளைப் பார்க்கப் போயிடுவோம்.. இப்படியா.. கல்யாணத்தைப் போல ஊரைக் கூட்டுவாங்க..?"
ராதிகாவிற்கு ஆச்சரியமாகி விட்டது...
அவள் சொன்ன வார்த்தைகளை அப்படியே அவனும் சொல்கிறானே...
'யார்... இவன்..'
அவள்.. அவனைப் பார்த்த பார்வையில் சிநேகிதமிருக்க.. பாலமுரளிக்கு மனதில் மழைச்சாரல் அடித்தது...
'எதுக்கு இப்படிப் பார்க்கிறா..?'
அவளது பார்வைக்கான காரணத்தைப் பற்றி அவனுக்கென்ன தெரியும்..?
சங்கருக்கு... பாலமுரளியும்.. ராதிகாவும் பார்த்துக் கொண்டது பிடிக்கவில்லை.. அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.. பரந்தாமன் மனதுக்குள் பதட்டப்பட்டார்...
"தேனூத்து கிராமத்திலிருக்கிறவருக்கு இது மாதிரி பங்சனில் கலந்துக்க நேரமிருக்காது.. ஆனா.. எனக்கு நேரமிருக்கும்... இல்லையா அங்கிள்..?"
அவன் குத்தலாக பரந்தாமனிடம் கேட்டபோது.. அவரால் பதில் சொல்ல முடியவில்லை...
எங்கே.. சங்கர் கிளம்பிப் போய் விடுவானோ என்ற பதட்டத்தில்...
"மாப்பிள்ளையை கூப்பிட்டு ஷோபா.. கேக் வெட்டனும்..." என்று சொல்லி வைத்தார்...
"நான் எதுக்கு கேக் வெட்டனும்..?" சங்கர் புருவங்களை உயர்த்தினான்...
மீண்டும் ஹேமா சிரித்து வைக்க.. ஷோபாவுக்குள் கோபஅலை பரவியது..
அவள் நினைத்தது என்ன..? இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன..?  ராதிகாவின் முன்னால் தன் உயரத்தைக் காட்ட அவள் விரும்பினால் இங்கே எல்லாமே தலைகீழாய் நடந்து கொண்டிருக்கிறதே...
"அப்படியில்லை மாப்பிள்ளை... ஷோபா கேக் வெட்டிட்டான்னா விருந்தை ஆரம்பிச்சிரலாமே..." பரந்தாமன் வழிந்தார்...
"அதுக்கு நான் எதுக்கு அங்கிள்..?" சங்கர் கேட்டான்..
எதற்கென்று அவர் சொல்லுவார்..?
'என் மகள் கேக் வெட்டுவாள்.. நீ பக்கத்தில் நின்று கைதட்ட வேண்டும்.. அவள் கேக்கை வெட்டியதும் உனக்கு ஊட்டுவாள்.. நீ அவளுக்கு ஊட்ட வேண்டும்.. நாங்கள் எல்லோரும் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கை தட்ட வேண்டும்..' என்று அவரால் சொல்லவா முடியும்..?
இதைக் கூடப் புரிந்து கொள்ளாத மாக்கானாய்  அவன் இருந்து வைக்கிறானே என்ற வருத்தம் மேலிட்டது அவருக்கு..
ஷோபா கேக் வெட்டினாள்.. சுற்றியிருந்தவர்கள் கை  தட்டினார்கள்.. தள்ளி நின்று கொண்டிருந்த சங்கருக்கு கேக்கை கொடுக்க முடியாமல் பரந்தாமனுக்கு கேக்கை கொடுத்தாள் ஷோபா.. சங்கரோ.. தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த முயல்களை ரசித்துக் கொண்டிருந்தான்.. அந்தச் சூழல் அவன் மன எரிச்சலைத் தணித்தது...
அந்தச் சூழலில் கவரப்பட்ட சங்கர்...
"யாராவது பாடலாமே.." என்றான்..
"நீங்களே பாட வேண்டியதுதானே..." ஹேமா கேட்டாள்..
"அதுக்கப்புறம் நீங்க ஓட வேண்டியதுதான்... பரவாயில்லையா..?" சங்கர் மிரட்ட..
"வேண்டவே வேண்டாம்.." என்றாள் ராதிகா...
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே.. தோட்டத்தின் மையத்திலிருந்து.. பாடல் கிளம்பி விட்டது..
"ஒரு  பெண்ணைப்  பார்த்து
                நிலவைப்  பார்த்தேன்...
     நிலவில்  ஒளியில்லை..
                அவள்  கண்ணைப் பார்த்து..
     மலரைப்  பார்த்தேன்..
                மலரில்  அழகில்லை..."
யாரென்று அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.. பாலமுரளி வெகு இயல்பாக... பாடிக் கொண்டிருந்தான்...
ராதிகாவின் விழிகளில் ஆச்சரியம் ததும்பியது.. அவனது செயல்கள் எல்லாமே வெகு இயல்பாக இருந்ததில் அவள் வசீகரிக்கப்பட்டாள்...
'யார்.. இவன்..?' என்ற கேள்வி அவள் மனதில் மறுபடியும் தோன்றியது...
அவளின் பார்வையை அவனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.. அவள் புன்னகையுடன் அவன் பாட்டை ரசித்துக் கொண்டிருந்தாள்...
"அவள்  இல்லாமல்  நானில்லை..
                நானில்லாமல்  அவளில்லை..
     லல.. லல்லலாலா.. லல்லலாலா..
                லல்லலாலா..."
ராதிகாவின் முகத்தில் தெரிந்த ஒளிர்வை ரசித்தபடி பாடிக் கொண்டிருந்தான் பாலமுரளி...
அவன்அவனுடைய தாயின் கட்டளைக்காக.. சகோதரியின் உறவினர் வீட்டுக்கு நலம் விசாரித்துப் போவதற்காக வந்திருந்தான்... வந்த இடத்தில் இப்படியொரு அழகான பெண்ணை... அதைவிட அந்த அழகை உணராமல் இயல்பாக இருந்த பெண்ணைச் சந்திப்பான் என்று அவன் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை..
எத்தனையோ ஊர்களில் எத்தனையோ பெண்களைச் சந்தித்திருக்கிறான்... அவனது உறவினர் வட்டாரத்திலேயே ராதிகாவை விடவும் அழகான பெண்கள் பலருண்டு.. அவர்களிடம் இல்லாத ஏதோவொரு வசீகரம் ராதிகாவிடம் இருந்தது.. முதல் பார்வையிலேயே பாலமுரளியை அவள் வசீகரித்தாள்..
எங்கிருந்தோ கிளம்பி வரும் ஆசைகளால்.. எண்ணத்தில் ஏற்படும் ஓசைகளைப் பற்றி யாரால்தான் கணித்துக்கூற முடியும்..?
அவளைப் பார்க்கும் போது.. அவளின் சிரிப்பில் தெறித்து விழும் வசீகரத்தின் துளிகளில் நனைந்து சிலிர்த்துப் போனான் பாலமுரளி...
ஏன் அவன் இந்தநாளில் இங்கு வந்தான்..? அவளைப் போன்ற ஒரு பெண்ணைச் சந்திப்பானென்ற நினைவோடா வந்தான்..? இல்லையே...
'இது எப்படி நடந்தது..?' அவனால் அனுமானிக்கவே முடியவில்லை... இதுதான் கடவுளின் கட்டளையா..? அப்படியில்லையென்றால் அவளை விட்டுப் பார்வையை மீட்க முடியாமல் அவன் திகைத்துப் போவது எதனால்..? அவளின் சிரிப்பில் அவள் பின்னே அவன் மனம் போவது எதனால்..?
      "கொடிமின்னல்  போல்...
                  அவள்  சிரிப்பு...
            மானோ.. மீனோ..
                  என்னென்பேன்...
             குளிர் ஓடை  போல...
                 துடிப்பு..."
அவன் பாடலில் ராதிகாவின் மனம் துடிக்க ஆரம்பித்தது... அவளின் இயல்பான சிரிப்பு அவள் இதழ்களிலே உறைந்து போக.. அவனது பார்வையைத் தாங்க முடியாதவளாக அவள் தொய்ந்து நின்றாள்...
'ஏன் இப்படிப் பார்க்கிறான்..?'
என்னவென்று சொல்லத் தெரியாத இதமான இன்ப உணர்வுகளின் இம்சைக்கு ஆட்பட்டாள் ராதிகா...
"என்னோடு தன்னைச் சேர்த்தாள்..
                தன்னோடு என்னைச் சேர்த்தாள்
     இன்று காதல் ஏக்கம் தந்தாள்... சென்றாள்..
                நாளை.. என் செய்வாளோ..."
பாடல் முடிந்தபோது... கைதட்டல் ஓசை காதைப் பிளந்தது... தன்னையறியாமல் ராதிகாவும் ஆர்ப்பரித்து கைதட்டினால்...
சங்கருக்கு அவளின் அந்தச் செய்கையைப் பிடிக்கவில்லை... அதிலும் அவனால் பாடமுடியாது என்று ராதிகாவின் முன்னால் அவன் சொல்லிக் கொண்டிருந்த போது பாலமுரளி பாடி வைத்ததில் சுத்தமாக அவனுக்கு உடன்பாடு இல்லை.. அதை ராதிகா ரசித்துக் கேட்டதில் அவனுக்குள் எரிச்சல் மூண்டிருந்தது...
"ஏய்ய்.. ராது.. நீ நல்லாப் பாடுவதானே.. நீயும் பாடுடி..." ஹேமா வற்புறுத்தினாள்...
பாலமுரளியே அவ்வளவு இயல்பாக பாடிய போது... தான் மறுத்து வைத்தால் நன்றாக இருக்காது என்ற நினைவில் ராதிகாவும் பாட ஆரம்பித்தாள்...
"நாளை இந்த வேளை பார்த்து..
                ஓடி வா நிலா...
     இன்று எந்தன் தலைவன் இல்லை..
                சென்று வா நிலா...
     தென்றலே..! என் தனிமை கண்டு
                நின்று போய் விடு...."
அவளது பாடலில் சுற்றியிருந்தவர்களின் பேச்சு நின்றுதான் போய் விட்டது... அவளது இனிமையான கானம் அந்தச் சூழலின் ரம்யத்தை இன்னமும் அதிகமாக்குவதை சங்கரும் உணர்ந்தான்.. பாலமுரளியும் உணர்ந்தான்.. கூடவே ஷோபாவும் உணர்ந்து வயிறு எரிந்தாள்...
"வண்ண வெளியின் வாசலில்
                என் தேவன் தோன்றினான்...
     எண்ணமென்னும் மேடையில்
                பொன்மாலை சூடினான்...
     கன்னியழகைக் காணவே
                அவன் கலைஞனாகிறான்...
     பெண்மையே உன் மென்மை கண்டு
                கவிஞனாகிறான்... கவிஞனாகிறான்.."
அவளது பாடலைக் கேட்டு யார் கவிஞனும்.. கலைஞனுமாக ஆகிப் போனார்களோ.. இல்லையோ.. பாலமுரளியும்.. சங்கரும் அப்படி ஆகிப்போனார்கள்..
வெளிநாட்டில் படித்த சங்கருக்கு.. தமிழ்நாட்டுப் பாரம்பர்யத்தின்மீது மிகுந்த மரியாதையும்... ஈர்ப்பும் உண்டு... அவன் கண்ட மேலை நாட்டு நாகரிகத்தின் மறுபக்கம் அவனை அச்சுறுத்தியது.. மணந்தால்..
தமிழ் நாட்டுப் பாரம்பர்யத்தைப் பிரதிபலிக்கும் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற தீவிரமான முடிவுடன் அவன் இருந்தான்...
செயற்கை வெளிச்சத்தில்.. கம்யூட்டர்களின் மத்தியில்.. நுனிநாக்கு ஆங்கிலமும்.. பட்டுக் கொள்ளாத நாகரிகப் பேச்சுமாக நாள் பூராவும் இருந்துவிட்டு வீடு திரும்புகிறவனுக்கு கதவு திறந்துவிட.. மல்லிகை பூ மணத்துடன்.. கண்களில் காதலுடன்.. முகம் பூராவும் பிரியத்துடன் இருக்கும் மனைவியை அவன் தேடிக் கொண்டிருந்தான்...
அவனது எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்ததைப் போல அவன் எதிரே ராதிகா பாடிக் கொண்டிருந்தாள்...
இவள்தான் அவன் தேடிய பெண் என்று அவன் பரவசப் பட்டுப் போனான்.. இவள் தமிழ்பெண்ணின் அடையாளம் என்று அவனுக்குத் தோன்றியது.. அவள் பாடிக் கொண்டிருந்த விதத்தில் வெளிப்பட்ட நாணம் அவனை வசீகரித்தது... யாரையும் பார்க்காமல் நிலம் பார்த்துப் பாடிய அவளின் பாங்கு அவனை ஈர்த்தது...
"சொல்ல  நினைத்த  வார்த்தைகள்...
                சொல்லாமல்  போவதேன்...?
     சொல்லவந்த  வேளையில்..
                பொல்லாத  நாணமேன்..?
     மன்னன்  நடந்த  பாதையில்..
                என் கால்கள்  செல்வதேன்..?
     மங்கையே.. என் கண்கள்  இன்று
                மயக்கம்  கொள்வதேன்..?
                மயக்கம்  கொள்வதேன்..?"
பாடியபடியே விழிகளை உயர்த்தியவளின் பார்வையை பாலமுரளியின் பார்வை சந்தித்தது..
அவள் கண்கள் படபடக்க... பார்வையை விலக்கிக் கொண்ட விதத்தில்.. பாலமுரளியின் கண்களில் மின்னல் வந்தது...






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -12
அம்மம்மா.. கேளடி தோழி...! -12
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy