அழகான ராட்சசியே -36

36 சொல்வனத்தில் பூத்து வந்த சொற்களிலே காதல் சொன்ன அழகான ராட்சசி நீ.... நரேந்திரனுக்கு என்று குடும்பம் இருக்கிறதா.. ? அவன் தாய...


36
சொல்வனத்தில் பூத்து வந்த
சொற்களிலே காதல் சொன்ன
அழகான ராட்சசி நீ....


நரேந்திரனுக்கு என்று குடும்பம் இருக்கிறதா..? அவன் தாய்.. தந்தையில்லாத அநாதை என்றல்லவா சொன்னான்..?
ஊர்மிளாவும்.. அவளைப் பெற்றவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. நரேந்திரன் செதுக்கி வைத்த சிலை போல நின்றான்.. அப்போதுதான் கடலைக் கடந்து முடித்தவனின் முன்னால் மலை தோன்றி நின்றதில் மலையேற வேண்டுமே என்ற மலைப்பு அவன் முகத்தில் தோன்றியது.. என்னடா காதல் இது என்று தலையைப் பிடித்துக் கொண்டான்..
"இதை நாங்க செய்யனும்.." என்றார் சோமசுந்தரம்.
"உங்களுக்கு அப்பாம்மா இல்லை.. அநாதைன்னு சொன்னீங்களே..?" ஊர்மிளா வினவினாள்..
"அப்பாம்மா இல்லைன்னுதான் சொன்னேன்.. அநாதைன்னு சொல்லலை.." என்றான் நரேந்திரன்..
"கெட்டிக்காரத்தனமா பேசுகிறாராம்.." இடக்காக சொன்னார் சோமசுந்தரம்..
"உங்ககிட்டக் கெட்டிக்காரத்தனமா பேசிட்டாலும்.. ம்ஹீம்.. நீங்க கேட்டுட்டுத்தான் வேற வேலை பார்ப்பீங்க.." அவரை விட இடக்காக பதில் சொன்னான் நரேந்திரன்..
"இந்த இடக்கு மடக்கு பேச்செல்லாம் இங்கே வேணாம்.. இன்னும் எத்தனை பொய்யை சொல்லியிருக் கார்ன்னு வரிசைகட்டிச் சொல்லிரச் சொல்லு ஊர்மிளா.. மொத்தமா கேட்டுக்கலாம்.. ஒவ்வொன்னாச் சொல்லி மனுசருக்கு ஹார்ட் அட்டாக்கை வர வைக்க வேணாம்ன்னு சொல்லு.." மகளிடம் உறுமினார் சோமசுந்தரம்..
"ஹார்ட் அட்டாக்கெல்லாம் ஹார்ட் இருக்கிறவங் களுக்குத்தான் வரும்.." எரிச்சலோடு சொன்னான் நரேந்திரன்..
"எனோஃப்.." ஊர்மிளாவின் முகம் இறுகிவிட்டது..
"ஊர்மி.."
"பேசாதீங்க.. எங்க அப்பாவுக்கு இதயம் இருக்கா இல்லையாங்கிறதை நீங்க சொல்லக் கூடாது.. முதலில் உங்களுக்கு அது இருக்கா..?"
"ஏய்ய்.."
"இவ்வளவு பெரிய கோடிஸ்வரர்.. ஒன்னுமே இல்லாதவரைப் போல நடிச்சுக் கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க.. காதலிச்சுட்ட கொடுமைக்காக கழுத்தை நீட்ட சம்மதிச்சிருக்கேன்.. அடுத்து என்னடான்னா.. அநாதைன்னு சொல்லிக் கிட்டவருக்கு இங்கே ஒரு குடும்பம் இருக்கு.. இதை எப்படி எடுத்துக்கச் சொல்றீங்க..? இப்படி அடுத்தடுத்து உங்க பின்னாலே இருக்கிற உண்மைகளெல்லாம் வெளிப்பட்டா.. இன்னும் நீங்க எத்தனை பொய்களைச் சொல்லியிருக்கீங்கன்னு எங்கப்பா கேட்பாரா மாட்டாரா..?"
"ஓ..! உங்கப்பாவுக்கு சப்போர்ட் பண்ற..!"
ஒரு தினுசான குரலில் சொன்னவனை எரிச்சலுடன் பார்த்தாள் ஊர்மிளா.. அவன் கோடிஸ்வரன் என்பதில் அவளுக்குத் துளிக்கூட மகிழ்வில்லை.. அதற்கு மாறாக.. அவளைக் காதலித்த.. அந்த சாதாரண நரேந்திரனுக்காக அவள் மனம் ஏங்கியது..
அந்த நரேந்திரனிடம் கேலியும்.. கிண்டலும் இருக்கும்.. இதுபோல பணக்கார மிடுக்கெல்லாம் இருக்காது.. அந்த நரேந்திரனின் கம்பீரம் வேறு வகையானதாக இருக்கும்.. இதுபோல ஆணவத்தை உணர்த்தும் கம்பீரமாக இருக்காது.. அந்த நரேந்திரனும் சோமசுந்தரத்திடம் மோதுவான்.. அந்த மோதல்.. இந்த மோதல் போல இருந்ததில்லை..
"எங்கப்பா பக்கம் உண்மையிருக்கு.. உங்க பக்கம் அது இல்லையே.. நான் என்ன செய்வேன்..?" துக்கத்துடன் சொன்னாள் ஊர்மிளா..
"உண்மையில்லைன்னு சொல்லாதே.. அதை உன்னிடம் இதுநாள்வரைக்கும் சொல்லலை.. அதை மட்டும் சொல்லு.. என்னைக் காதலிச்சது உனக்குக் கொடுமையாப் போயிருச்சில்ல..?"
நரேந்திரனின் தீர்க்கமான பார்வையில் ஊர்மிளா தடுமாறிப் போனாள்.. அவன் பார்வை அவளைக் குற்றம் சாட்டியது.. அவன் மீதான தவறு என்று அந்த நிலையிலும் அவன் காட்டும் நிமிர்வில் அவள் குழம்பிப் போய் நின்றாள்.
"உண்மையை மறைச்சது பொய்க்குச் சமானம் தானே..?" மகளின் தடுமாற்றத்தை ஈடுகட்டிய சோமசுந்தரம் கேட்டார்..
"என்னங்க நீங்க..? உங்க மகளுக்கு எடுத்துக் கொடுத்துக்கிட்டே இருக்கீங்களா..? நான் எங்கேங்க பொய் சொன்னேன்..? எனக்கு உண்மையாகவே அம்மா.. அப்பா உயிருடன் இல்லைங்க.. இங்க இருக்கிறது என் அப்பாவின் இரண்டாவது மனைவியும்.. அவங்களுக்குப் பிறந்த என் தம்பியும்.. தங்கையும் தான்.."
நரேந்திரன் சொன்னதில் பூங்குழலி மிரண்டு போனாள்.. ஒற்றைப் பெண்ணை ஒரு சொல் கேட்க விடாமல் பூவைப்போல பொத்திப்பொத்தி வளர்த்து விட்டு.. இதுபோல ஒரு புகுந்த வீட்டில் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா என்று அவளுக்கு அச்சமாக இருந்தது..
'மாப்பிள்ளைக்கு சித்தின்னா அவங்க என்ன குணத்தில இருப்பாங்களோ.. இதில வேற அவங்களுக்கு ஆணொன்னும்.. பொண்ணொன்னுமா ரெண்டு பிள்ளைக இருக்காங்க.. கடைசியில இப்படியாப்பட்ட இடத்திலா என் மகள் வந்து மாட்டனும்..?'
அவளுக்குக் கண் கலங்கி விட்டது.. மாமியார் என்றால் கூட பெற்ற மகனின் மனைவியென்று பார்ப்பாள்.. இங்கே அப்படியில்iலாமல் சின்ன மாமியார் இருக்கிறாளே.. மாமியார்.. நாத்தனார் என்ற நேரடி உறவுகள்.. மருமகனின் சித்தி.. அவளின் மகள் என்று மாறும் போது இன்னும் கொஞ்சம் கடுமை கூடி வருமே..
பரிதவித்த அவள் விழிகளைப் பார்க்கச் சகிக்காமல் சோமசுந்தரம் யுத்த முழக்கத்தை அதிகப் படுத்தினார்.. அன்று பூங்குழலி அப்படித்தான் சொன்னாள்..
"அவருக்கு வசதியில்லைன்னா என்னங்க..? நம்மகிட்ட இருக்கிற சொத்து சுகம் யாருக்காக..?
எல்லாம் ஊர்மிளாவுக்காகத்தானே.. அவளைக் கட்டிக்கிற மாப்பிள்ளைக்கு அந்தச் சொத்தில் உரிமையில்லையா..? அப்பாம்மா இல்லேங்கிறாரு.. பெண்ணைக் கட்டிக் கொடுத்து வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கிக்கலாம்ங்க.. மாமியார்.. நாத்தனார்ன்னு என் மகள் பயந்துக்கிட்டு குடும்பம் நடத்த வேண்டியிருக்காது பாருங்க.."
பூங்குழலி சந்தோசப்பட்டபோது சோமசுந்தரம் அவளைக் கண்டித்தார்..
"இது பிற்போக்குச் சிந்தனை பூங்குழலி.. நீ பெண்ணை மட்டும் பெற்றிருக்கிறதினாலே இப்படிப் பேசறியா..? இதுவே நமக்கும் ஒரு மகன் இருந்து.. அவனுக்கு கல்யாணம் பேசப் போனா.. அவங்க வீட்டிலே உன்னைப் பத்தியும்.. ஊர்மிளாவைப் பத்தியும் இப்படித்தான் பேசியிருப்பாங்க.. அதை மறந்துராதே.. மாமியாரும்.. நாத்தனாரும் வில்லிகளா..?"
"நான் அந்த அர்த்தத்தில சொல்லலைங்க.. நம்ம ஊர்மிளா வெளியே பார்க்கத்தான் தைரியசாலியைப் போல இருப்பா.. மத்தபடி அவ மனசு பூஞ்சைமனசு.. சொல்லு தாங்க மாட்டா.. அதனால வார்த்தையை விட்டுட்டேன்.."
பூங்குழலி மன்னிப்புக் கேட்டாலும்.. அவள் மனதில் ஊர்மிளா மாமியார்.. நாத்தனார் என்று புகுந்த வீட்டின் உறவுகளிடம் மாட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிம்மதியே விரவியிருந்தது..
அந்த நிம்மதி உடைந்து.. இன்னும் அதிகமான சிக்கலுக்குள்ளே மகள் பிரவேசிக்கப் போகிறாள் என்ற அச்சத்தை உண்டாக்கியதில் அந்தத் தாய்மனம் தவித்தது..
"அப்பாம்மா இல்லைன்னு சொன்னவருக்கு.. அப்பா ரெண்டாம் தாரம் கட்டிக்கிட்டாரு.. அவங்களுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்காங்கன்னு சொல்ல வாய் வரலையாம்.. இது எப்படியிருக்கு..?"
என்னவோ 'பதினாறு வயதினிலே' திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் பேசுவதைப் போல.. படு ஸ்டைலாக இடக்குப் பேசியவரை என்னதான் செய்வது என்ற வெறி நரேந்திரனுக்குள் கிளர்ந்தது..
சோமசுந்தரம் கேட்ட கேள்விகள் அனைத்தும் நெத்தியடிக் கேள்விகளாக.. அவனால் பதில் சொல்ல முடியாத கேள்விகளாக இருந்ததில் அவனுடைய வெறி அதிகரித்தது..
அவனுக்கு மட்டும் அப்பாவின் இரண்டாவது திருமணத்தைப் பற்றியும்.. அந்தக் குடும்பத்தைப் பற்றியும் சொல்லக் கூடாதென்ற ஆசையா என்ன..?
அப்படிச் சொன்னால்.. சோமசுந்தரம் என்ன சொல்லுவார்..? முறைப்படி உங்க சித்தியோடும்.. உங்க குடும்பத்தோடும்.. பெண் கேட்டு வாங்க என்னு சொல்லியிருப்பாரா.. மாட்டாரா..? நரேந்திரனின் கோடிஸ்வர அந்தஸ்து வெளிப்பட்டு விடும் அபாயம் இருந்ததில் நரேந்திரன் அதைச் சொல்வதைத் தவிர்த்து விட்டான்..
தாய்.. தகப்பன் இல்லையென்று சொல்லி விட்டால் மாப்பிள்ளை வீடு பார்க்க என்று அவனது பின்புலத்தை ஆராய்வதை சோமசுந்தரம் தவிர்த்து விடுவார் என்பதால் அவன் கவனமாக வார்த்தைகளைக் கையாண்டான்.. அது இதில் கொண்டு வந்து விடும் என்று நினைத்தா பார்த்தான்..?
"சார்.. மறைக்கனும்னு நான் நினைத்து மறைத்ததில நீங்க குற்றம் கண்டு பிடிக்க எதுவுமில்லை சார்.. நான் சொன்னதும்.. செய்ததும்.. ஊர்மிளாவின் மேலே இருந்த காதலுக்காக மட்டும்தான்.. மற்றபடி உங்களை ஏமாற்றி உங்க சொத்தை கொள்ளையடிச்சிரலை.."
"நீங்க கோடிஸ்வரர்.. நாங்க அப்படியில்லைங் கிறதைச் சொல்லிக் காட்டறிங்களா..?"
"என்னசார்.. நீங்க விதண்டாவாதமாவே பேசிக்கிட்டு இருக்கீங்க..? இப்ப எங்கேஜ்மெண்ட் ஆரம்பமாகப் போகுது.. ஊர்மிளாவை ரெடி பண்ணி அழைத்துக்கிட்டு வருகிற வேலையைப் பாருங்க.."
நரேந்திரன் கோபத்துடன் பேசினான்.. சோமசுந்தரம் ருத்ர அவதாரமெடுத்தார்..
"ஏன் சொல்ல மாட்டிங்க..? பொதுவுடைமை பேசறவனை.. பொண்ணுக்கு அலங்காரம் பண்ணச் சொல்கிறோமேங்கிற எண்ணமில்லாம பேசறவர்கிட்ட என்ன வளமையை எதிர்பார்க்க முடியும்..?"
அப்போதுதான் தவறை உணர்ந்தவனாக நாக்கைக் கடித்துக் கொண்டான் நரேந்திரன்.. உதவி கோரும் பாவனையில் ஊர்மிளாவை அவன் பார்க்க... உனக்கெல்லாம் நான் உதவி செய்வேனா என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஊர்மிளா..
'இவளே அழகான ராட்சசி..! சோமசுந்தரத்தின் வாரிசு.. வேற எப்படி இருப்பா..? இவரைப் போல ஜெராக்ஸ் காபியாத்தானே இருப்பா..?'
நரேந்திரன் பல்லைக் கடித்தபடி பூங்குழலியைப் பார்த்தான்.. அவளோ.. மகளின் சின்ன மாமியாரும்.. அவள் பெற்று வைத்திருக்கும் நாத்தனாரும் என்ன மாதிரியான குணாதிசியத்துடன் இருப்பார்களோ என்ற கலவரத்துடன் கையைப் பிசைந்து கொண்டிருந்தாள்.. அவளின் பயத்தைக் கண்டவனுக்கு ஐயோ பாவம் என்று ஆகிவிட்டது..
அவனுக்குப் பெண் கொடுக்க பூங்குழலி இந்த அளவுக்கு அச்சப்பட வேண்டுமா..?
அவள் முகத்தைப் பார்த்துப் பரிதாபப்படுவதை விட சோமசுந்தரத்தின் முகத்தைப் பார்த்து விடுவதே சாலச் சிறந்தது என்று தோன்றிவிட அவரிடமே சமரசம் பேசினான் நரேந்திரன்..
"உங்க பொண்ணுக்கு அலங்காரமே தேவையில்லை சார்.. அவ சும்மாவே அழகாத்தான் இருப்பா.. ரெடி பண்ணி அழைச்சுக்கிட்டு வாங்கன்னு நான் சொன்னதுக்கு அர்த்தமே வேறு சார்.."
"எங்களுக்கென்னங்க தெரியும்..? நாங்க ஒரு வாசகம் பேசினாலும் திருவாசகமாய் பேசறவங்க..
ஒளிவு மறைவில்லாம நேரடியாய் பேசறவங்க.. ஒரு வார்த்தைக்குள்ள.. ஒன்பத்திரண்டு பொய்யை மறைச்சு வைச்சுப் பேசற சித்து வேலையெல்லாம் எங்களுக்குத் தெரியாது.."
சோமசுந்தரம் மைக்கில்லாமல்.. மேடையில்லாமல் வெளுத்துக் கட்டியதில் நரேந்திரன் ஆயாசப்பட்டுப் போனான்... இந்தப் பேச்சிற்கு முடிவே இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது.. விட்டால் சோமசுந்தரம்.. விடியும் வரை பேச்சை வளர்க்கத் தயாராக இருந்தார்.. ஆனால் வந்திருக்கும் உறவினரையும்.. விருந்தினரையும் வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் நரேந்திரன் அதற்குத் தயாராக இல்லை.
அவன் கல்யாண மாப்பிள்ளை..! அவனைத் தேடுபவர்களின் முன்னிலையில் புன்னைகயுடன் அவன் நின்றாக வேண்டும்.. சோமசுந்தரத்தின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது..
"ஓகே சார்.. நான் பொய்யனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.."
"நீங்க பொய்காரர்தாங்க.. இதில என்ன பெரியமனதா நீங்க விட்டுக் கொடுத்துப் பேசறது..?"
"நான்தான் ஒப்புக்கிட்டேனில்ல..? நான் பொய்க் காரன்தான்.. நீங்க பெரிய உண்மை விளம்பிதான்.."
"நீங்க சொன்னாலும்.. சொல்லாட்டியும்.. நான் உண்மை விளம்பிதாங்க.. திருச்சியில வந்து கேட்டுப் பாருங்க.."
"எதை..?"
"ம்ம்ம்.. கொடிக்கா வெத்தலை அங்கே குறைஞ்ச விலைக்குக் கிடைக்குது.. அதை வந்து கேட்டுப் பார்க்கச் சொன்னேன்.."
எடுத்தெரிந்து பேசிய சோமசுந்தரத்தை நரேந்திரனுக்கு பிடித்திருந்தது.. அவன் கோடிஸ்வரன் என்பதை அறிந்தபின்னால் அவர் காட்டிய கோபத்தில் அவர் மீதான அவனின் பற்றுதல் அதிகரித்தது..
அவனது உயரத்திற்காகவும்.. பணத்திற்காகவும்.. பெண் கொடுக்க நினைத்தவர்களின் மத்தியில்.. அதை அறிந்தவுடன் பெண் கொடுக்க மாட்டேன் என்று வாதம் செய்த அவரின் உண்மையான கொள்கைப் பிடிப்பை மனதுக்குள் அவன் வெகுவாக பாராட்டினான்..
"இங்கே வந்திருக்கிற கெஸ்டுக்கு கொடிக்கால் வெற்றிலையைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது சார்.. அதனால.. கொடிக்கா வெற்றிலையை திருச்சியிலேயே விட்டுட்டு நாம ஆக வேண்டிய வேலைகளைப் பார்க்கலாம்.. ஐ.. மீன்.. கல்யாண ஏற்பாடுகளைப் பார்க்கலாம்ன்னு சொன்னேன்.. நீங்க இதுக்கும் ஒரு வழக்கை ஆரம்பிச்சு வைச்சுராதீங்க.."
சோமசுந்தரம் அடுத்து அதைச் சொல்வதாகத்தான் உத்தேசித்திருந்தார்.. உங்கள் வீட்டுக் கல்யாண வேலைகளைப் பார்க்கத்தான் வேலை மெனக்கெட்டு திருச்சியிலிருந்து கிளம்பி வந்தேனா என்று கேட்பதாக இருந்தார்.. அதை முன் கூட்டியே தடுத்து நிறுத்திவிட்ட நரேந்திரனின் புத்திசாலித்தனத்தை நினைத்தவருக்கு மனதுக்குள் சிரிப்பு அரும்பத்தான் செய்தது..
நரேந்திரன் அவரை சார் என்றுதான் அழைத்தான்.. திருமணத்திற்கு பின்னால் அது மாறிவிடும் என்றுதான் பூங்குழலியும்.. ஊர்மிளாவும் நினைத்தார்கள்.. அது மாறுவதற்குள்.. ஊர்மிளாவின் வாழ்க்கையே மாறிவிட்டதில்.. அவனது 'மாமா' என்ற அழைப்பை சோமசுந்தரத்தால் செவிமடுக்கவே முடியவில்லை..
"நரேன்.. ஆர் யு ஹியர்..?"
நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவனை அழைத்த அந்தப் பெண்மணியின் வயதை.. அவளின் தோற்றத்தை வைத்துக் கணக்கிட முடியவில்லை.. முடியை வாரி.. உயரமாக தூக்கி அமைத்துக் கொண்டையிட்டிருந்த பாணிக்கு அவள் சில மணி நேரங்களையாவது செலவளித்திருக்க வேண்டும் என்று சோமசுந்தரம் நினைத்துக் கொண்டார்.. சிறு
வயதுப் பெண்ணைப் போன்ற அதீத ஒப்பனையுடன் இருந்த அந்தப் பெண்மணியைப் போலவே அங்கிருந்த பெரும்பான்மையான பெண்மணிகள் இருந்தார்கள்.. அழைத்தவள் யாராக இருக்கக் கூடும் என்ற நினைவில் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள.. நரேந்திரன் அறையை விட்டு வெளியேற முனைந்தான்..
'ஒருவேளை.. இந்த அலப்பறைதான் மாப்பிள்ளை யோட சித்தியோ..?' பூங்குழலியின் சந்தேகத்தை நரேந்திரனின்..
"வாங்க ஆண்ட்டி.." என்ற வரவேற்பு நிவர்த்தி செய்து வைத்தது..
'அப்பாடி.. இந்தம்மா மாப்பிள்ளையோட சித்தியில்லை..'
பூங்குழலி அறியவில்லை.. அந்த அதிநவின ஒப்பனையுடன் இருந்த பெண்மணிக்கு கள்ளமிள்ளாத வெள்ளை மனது என்பது..
நரேந்திரனின் சித்தியான அகல்யாவுக்கு அப்படி யில்லை.. எதை வைத்து எதை அடிக்க வேண்டும் என்ற வித்தையைக் கற்றுக் கைக்குள் வைத்திருக்கும் சாகச மனது அவள்மனது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,14,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -36
அழகான ராட்சசியே -36
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye36.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye36.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy