அழகான ராட்சசியே -34

34 கண்ணி வைத்து நான்பிடித்த.. அழகான ராட்சசி நீ.... "இதில் என்ன மோசடி இருக்கிறது.. ?" நிதானமாக கேட்டான் நரேந்திரன்...


34
கண்ணி வைத்து நான்பிடித்த..
அழகான ராட்சசி நீ....

"இதில் என்ன மோசடி இருக்கிறது..?"
நிதானமாக கேட்டான் நரேந்திரன்.. ஊர்மிளாவின் குற்றம் சாட்டும் பார்வையினையும்.. சோமசுந்தரத்தின் கொந்தளிக்கும் பார்வையினையும் மிக இலகுவாக எதிர்கொண்டான்..
"மோசடி இல்லையா..? இது மேசாடி இல்லையா..? இது மோசடி இல்லைன்னா.. வேறு எதுதான் மோசடி..?"
சோமசுந்தரம் வரிந்துகட்டிக் கொண்டு சண்டைக்குப் போனார்.. நரேந்திரன் அறைக்கு வெளியே பார்த்தான்.. திருமண மண்டபத்துக்கு உரிய அனைத்துப் பரபரப்புகளும் வெளியே கவிந்திருக்க... அறைக்கதவை மூடித் தாழிட்டான்..
"இப்ப எதுக்காக கதவை மூடறிங்க..?" சோமசுந்தரம் ஆட்சேபித்தார்..
"நாம பேசறது நம்மோட இருக்கட்டும் இதை மத்தவங்க கவனிக்கனுமா..?"
"உங்க வண்டவாளமெல்லாம் தண்டவாளத்தில ஏறிரும்ன்னு பயப்படறிங்களா..?"
நரேந்திரனின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. அவன் ஊர்மிளாவைப் பார்த்தான்.. கலங்கிச் சிவந்திருந்த அவள் கண்களைக் கண்டதும் தனது கோபத்தை அடக்கிக் கொண்டான்..
"லுக் சார்.. நான் பணக்காரன்தான்.. கோடிஸ்வரன் தான்.. மல்ட்டி மில்லியனர்தான்.. இல்லேன்னு சொல்லலை.."
"இல்லேன்னு சொல்லித்தானே என் மகளை பெண் கேட்டு வந்தீங்க..?"
"என்ன சார் செய்கிறது..? நீங்கதான் கொலை காரனுக்கும்.. கொள்ளைக்காரனுக்கம் கூட பெண்ணைக் கொடுப்பேன்.. ஒரு பணக்காரனுக்குப் பெண் கொடுக்க மாட்டேன்னு தலைகீழா நின்னீங்களே.."
"அதுக்காக வேசம் போடுவீங்களா..?"
"யார்தான் வேசம் போடலை..? காதல்ன்னு வந்துட்டா எல்லோரும் வேசம் போடுவாங்கதான்.. ஏன்.. புராணத்தையே எடுத்துக்கங்க.. வள்ளியைக் காதலிச்ச முருகன்.. அவங்களைக் கல்யாணம் பண்ணிக்க கிழவர் போல வேசம் போடலையா..? உங்களுக்குத்தான் புராணம் தெரியாது.. ஊர்மிளாவோட அம்மாவுக்குத் தெரியுமே.. கேட்டுப் பாருங்க.."
"இதைக் கேட்கத்தான் நான் பெங்களூருக்கு வந்தேனா..?"
"நீங்க எதையும் கேட்க வேணாம்.. உங்க மனச்சாட்சியைக் கேட்டுப் பாருங்க.. பகுத்தறிவுவாதம் பேசற நீங்க.. கோவிலே கதின்னு இருக்கிற ஊர்மிளாவோட அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கலாம்.. பணக்காரனான நான்.. பொதுவுடமை கொள்கை பேசற உங்க மகளைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா..? நீங்க மட்டும் உங்களைப் பத்தின முழு விவரத்தையும் சொல்லியா ஊர்மிளாவோட அம்மாவைப் பெண் கேட்டிங்க..?"
நரேந்திரன் மடக்கிவிட்டான்.. பூங்குழலியின் முகம் சிவந்து போனது..
சோமசுந்தரமோ.. இந்த விவரம் இவனுக்கு எப்படித் தெரியும் என்று திருதிருத்தார்..
அவருக்குத் தெரியாது.. நரேந்திரனும் ஊர்மிளாவும் சந்தித்துக் கொண்ட பொழுதுகளில் அவருடைய காதல் கதையையும் அலசி ஆராய்ந்தார்கள் என்பது..
"உங்கப்பா ஒரு முசுடு.. அரேன்ஜீடு மேரேஜா இருக்கப்போயி உங்கம்மாவப் போல சாத்வீகமான வொய்ப் உங்கப்பாகிட்ட மாட்டினாங்க.. இதுவே காதல்ன்னு போயிருந்தார்ன்னு வைய்யி.. உங்கம்மா உங்கப்பாவைத் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க.."
ஊர்மிளா சொன்ன அரேன்ஜீடு மேரேஜ் கதையை நம்பி நரேந்திரன் மாமியாருக்காக பரிதாபப்பட்டபோது ஊர்மிளா அவனை மர்மப் பார்வை பார்த்தாள்..
"என்ன.. பார்வையெல்லாம் பலமா இருக்கு..?" என்றான் அவன்..
"அப்பா.. அம்மாவுக்கு நடந்தது அரேன்ஜீடு மேரேஜ்தான்.. ஆனா அவங்க ரெண்டு பேரோட மனசுக்கு மட்டும் தெரியும் அது லவ் மேரேஜ்ன்னு.." ஊர்மிளா குண்டைத் தூக்கிப் போட்டாள்..
"என்னது..? உங்கம்மா.. உங்கப்பாவை லவ் பண்ணினாங்களா..?" நரேந்திரன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்..
"ஸ்ஸ்ஸ்.. சும்மாயிருங்க.." அவனை செல்லமாக அடித்த ஊர்மிளா தொடர்ந்து சொன்னாள்..
"அம்மா ஒன்னும்.. அப்பாவை லவ் பண்ணலை.. அப்பாதான் அம்மாவை லவ் பண்ணியிருக்காரு.. அது அம்மாவுக்குத் தெரியும் அவ்வளவுதான்.."
"அதானே பார்த்தேன்.." என்று சொல்லி விட்டு மீண்டும் ஊர்மிளாவிடம் அடி வாங்கினான் நரேந்திரன்..
"அப்பா ஏதோ கடவுள் மறுப்புக் கூட்டத்துக்குப் போயிட்டு திரும்பி வந்துக்கிட்டு இருந்தாராம்.. அப்போ கோவிலுக்குப் போய்க்கிட்டு இருந்த அம்மாவைப் பார்த்திருக்காரு.."
"என்னவொரு காம்பினேசன்.. தூள்டி.."
"மூச்..! வாயைத் திறக்கக் கூடாது.. அம்மாவோட அழகில் அப்பா சொக்கிப் போயிட்டாராம்.. அப்பவே அம்மாவை ஃபாலோ பண்ணி பின்னாலேயே போயிட்டாராம்.."
"எங்கேடி..?"
"கோவிலுக்குள்ளதான்.."
"ஏண்டி.. கேட்கிற எனக்கே நெஞ்சு கொதிக்குது.. சொல்கிற உனக்கு இது அநியாயம்ன்னு தோணலையா..? கடவுள் இல்லைன்னு பொதுக்கூட்டத்தில பேசிட்டு வர்ற ஒரு மனுசன் பக்திப் பிழம்பா கோவிலுக்குள்ள போகிற பெண்ணை ஃபாலோ பண்ணி கோவிலுக்குள்ளேயே போயிருக்காரே.. இது அடுக்குமா..?"
"அடுக்கும்.. எங்க அம்மாவே அப்பா செஞ்ச அட்டூழியத்தை ரசிச்சிருக்காங்க.. உங்களுக்கு என்ன வந்துச்சு..?"
"என்ன வந்தாலும் இனியென்னடி பிரயோசனம் வரப் போகுது..? அதுதான் உங்கப்பா உங்கம்மாவை மடக்கித் தாலி கட்டி குடும்பம் நடத்தி.. உன்னையும் மகளாப் பெத்து என்னை மடக்கிப் போட்டுட்டாரு.. இனிப் பேசி என்ன ஆகப் போகுது..?"
"தெரியுதில்ல.. வாயில விரலை வைங்க.."
"எதுக்கு..?"
"வாயைத் திறக்காம தாழ்ப்பாழ போட்டுக்கிறதுக்குத் தான்.. எங்கப்பா.. எங்கம்மாவ ஃபாலோ பண்ண.. அவங்க கூட வந்த சிநேகிதிகிட்ட இப்படியெல்லாம் தொடுத்துக் கிட்டு வரக்கூடாது.. பெரியவங்களப் பாத்துப் பேசனும்னு தகவல் சொல்லி விட்டுட்டாங்க..."
"ஓ..! அதான் நீ உன் அம்மா வழியை ஃபாலோ பண்ணி என்னை உங்கப்பாகிட்ட மாட்டி விட்டுட்டயா..?"
"வாயை மூடச் சொன்னேன்.."
"ஓகே.. இனி கேள்வி கேட்கலை.."
"அப்பாவும் பெண் கேட்டுப் போயிருக்காரு.. அம்மாவும் அப்பாவும் தூரத்துச் சொந்தம்ங்கிறதினால அதில ஒன்னும் பிரச்னை வரலையாம்.. என் அப்பாவோட சிநேகிதர் மூலமா எங்க அப்பா வழி தாத்தா பாட்டிக்கு பெண்ணைப் பத்தித் தகவல் கொடுத்திருக்காரு.. அந்தச் சிநேகிதர் வந்து.. தாத்தாகிட்ட மாமா.. மாமா.. இப்படியிப்படி.. இந்த ஊரில.. உங்க சொந்தத்திலே.. அழகான ஒரு பொண்ணிருக்கு.. நம்ம சோமுக்கு கேட்டுப் பார்க்கலாமான்னு தூண்டி விட்டிருக்கார்.. எங்க தாத்தா பாட்டியும் ஊடே இருக்கிற சொந்த பந்தங்ககிட்ட ஜாதகம் கேட்டு விட்டிருக்காங்க.. ஜாதகம் அமோகமா பொருந்தியிருந்துச்சாம்.."
"பார்த்தியா.. உங்க அம்மா வாழ்க்கையிலே ஜாதகம் விளையாடிருச்சு.."
"பேசக்கூடாதுன்னு சொன்னேன்.."
"சரி.. பேசலை.. நீ சொல்லு.."
"எங்க தாத்தா பாட்டிக்கு சந்தோசமாகிருச்சு.. அப்பாவைக் கூப்பிட்டுக்கிட்டு பொண்ணுப் பார்க்கப் போனாங்க.. அப்பாவும்.. அம்மாவைப் பத்தி எதுவும் தெரியாம முத முதலா பொண்ணுப் பார்க்கப் போறதைப் போல கூடப் போயிருக்கார்.."
"உலகமகா நடிகர்டி உங்கப்பா.."
"உஸ்..! எங்கம்மா வீட்டாளுகளுக்கு அப்பாவைப் பிடிச்சுப் போயிருச்சு.."
"வாட் எ பிட்டி..!"
"வாயை மூடுங்களேன்.. அப்பத்தான் அவங்க ஒரு வார்த்தை சொன்னாங்களாம்.."
"என்ன வார்த்தை.. அந்த வார்த்தை..?"
"அவங்க சொன்னாங்களாம்.. ஐயா.. எங்க பொண்ணுக்கு கடவுள் பக்தி ஜாஸ்தி.. எங்களுக்கு
வர்ற மாப்பிள்ளையும் அப்படியே இருக்கனுமுன்னு நாங்க நினைக்கிறோம்.. தம்பிக்கு கடவுள் நம்பிக்கை இருக்கான்னு கேட்டாங்களாம்.."
"பாருடா.. சரியான கேள்வியைத்தான் கேட்டிருக் காங்க.. எப்படி டீ உங்கப்பாவைப் பார்த்து இப்படி
ஒரு கேள்வியைக் கேட்கனுமுன்னு அவங்களுக்குத் தோணுச்சு..?"
"அப்பாதான் பொதுக்கூட்டம் அது.. இதுன்னு ஆக்டிவ்வா இருக்கிறவராச்சே.. யாராச்சும் போட்டுக் கொடுத்திருப்பாங்க.."
"உண்மையைச் சொல்லியிருப்பாங்கன்னு சொல்லு.. அது என்ன போட்டுக் கொடுக்கிறது..? இதில வேற இவளோட அப்பா ஆக்டிவ்வாம்.. முடியலடா சாமி.."
"லுக் மிஸ்டர் நரேந்திரன்.. எங்கப்பாவை இப்படியே தொடர்ந்து கலாய்ச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா நம்ம காதலையே நான் கன்சிடர் பண்ணனுமான்ன யோசிக்க வேண்டியிருக்கும்.."
"அழகாப் பொறந்துட்டியில்ல.. மிரட்டத்தான் செய்வ.. நேரம்டி.. ஆனாலும் பாரு.. உங்கப்பாவைப் போல ஒரு கடுவன் பூனைக்கு இப்படியொரு அழகான ராட்சசி மகளாகப் பிறந்து தொலைத்திருக்கக் கூடாது.. விதி வலியது.."
ஊர்மிளா கதை சொல்வதை விட்டு விட்டு அவனை முறைத்த முறைப்பில் அவன் "அம்பேல்" என்று இரு கைகளையும் உயரத் தூக்கி அவளிடம் சரண்டர் ஆனான்.. ஊர்மிளாவும் கதையைத் தொடர்ந்தாள்..
"எங்க அம்மாவழித் தாத்தாவும் பாட்டியும் கேட்ட கேள்விக்கு இருக்குன்னு என் அப்பாவழித் தாத்தாவும் பாட்டியும் சாதிச்சுட்டாங்களாம்.. பொதுக்கூட்டத்துக்கு போகிறதெல்லாம் வேடிக்கை பார்க்கிறதுக்குன்னு சொன்னாங்களாம்.."
"உங்கப்பா என்ன சொன்னாராம்..?"
"எதுவுமே சொல்லலையாம்.. அதனால பின்னாளிலே எங்கப்பா பேசற கொள்கைப் பேச்சைப் பத்தி எங்க அம்மா வீட்டில கேட்டப்ப நானா அப்படிச் சொன்னேன்..?
எங்க அப்பாம்மாதானே அப்படிச் சொன்னாங்கன்னு மடக்கிட்டாராம்.. உண்மையும் அதுதானே.."
"எதுடி உண்மை..?"
"எங்கப்பா ஒன்னும் பொய் சொல்லலை..."
"அதே சமயம் உண்மையையும் சொல்லலை.. அவரைப் பெத்தவங்க பொய் சொன்னப்ப கேட்டுக்கிட்டுப் பேசாம இருந்திருக்கார்.. இவர் சொல்லி இருந்திருக் கலாமில்ல..? இல்லைங்க.. என்னைப் பெத்தவங்க மாற்றி யோசிக்கிறாங்க.. உண்மையிலேயே நான் கொள்கைப் பிடிப்பானவன்தான்.. பொதுக் கூட்டத்தில பேசறவன்தான்.. அதை வேடிக்கை பாக்க மட்டும் நான் போகலை... மேடையேறி மைக்கைக் கடிச்சுத் துப்பத்தான் போனேன்னு உண்மையைப் பிட்டுப்பிட்டு வைத்திருந்திருக்கலாமில்ல..?"
"அது.. அது.. வந்து.. எங்கப்பாவுக்கு அம்மாவைப் பிடிச்சுப் போயிருந்துச்சா.. அதனால அவர்தான் பொய் சொல்லலையேன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டு பேசாம இருந்திட்டாராம்.."
"அதாவது உண்மையை மறைக்கிறதுக்கு உடந்தையா இருந்தாருன்னு சொல்லு.."
"என்ன நீங்க.. எங்கப்பாவை குறை சொல்றதிலேயே குறிக்கோளாய் இருக்கறிங்க.. எங்க அப்பா ஒன்னும் அம்மாவை கொள்கை மாறச் சொல்லிக் கட்டாயப் படுத்தலையே.. அம்மாவோட கடவுள் பக்திக்கு தடை சொல்லலையே.. உன் கொள்கை உனக்கு.. என் கொள்கை எனக்குன்னு பேசாமத்தானே இருக்கார்..?"
அந்த வார்த்தைகளை நரேந்திரன் அப்போது ஞாபகப் படுத்தினான்..
"அன்னைக்கு நீதானே சொன்ன ஊர்மிளா...? உன்னோட அப்பா அவரோட கொள்கையை உன் அம்மா மேலே திணிக்கலைன்னு... அவங்களோட கடவுள் நம்பிக்கையை தடை செய்யலேன்னு.. அவங்க கொள்கை அவங்களுக்கு.. உங்க அப்பா கொள்கை அவருக்குன்னு வாழ்க்கையிலே எந்தவித காம்ரமைஸீம் பண்ணிக்காம வாழ்கிறாங்கன்னு... நீதானே சொன்ன.? அந்த வாழ்க்கையை நாம வாழ மாட்டோமா..? நான் முதலாளிதான்.. கோடிஸ்வரன்தான்.. இதைத்தவிர என்மேல என்ன குற்றமிருக்கு..? நீயே சொல்லு.."
ஊர்மிளா திணறினாள்.. அடுத்தடுத்த அதிர்ச்சிகளை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.. வெகு சாதாரண மானவன் என்று அவள் நினைத்து பழகிய நரேந்திரன் மிகப்பெரிய கோடிஸ்வரனாக.. அவள் அண்ணாந்து பார்க்கக் கூட முடியாத தொலைவில்.. எட்டாத உயரத்தில் நிற்கிறான்.. திருமணத்தை செய்து முடிக்க அவனிடம் வசதி வாய்ப்பு இருக்கிறதா என்று ஊர்மிளா கவலைப்பட்டுக் கொண்டிருக்க.. அவனுடைய திருமணத்திற்கு வந்து இறங்கும் விருந்தினர்களில் பலர் சொந்த விமானங்களில் வந்து இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.. இதை அவள் என்னவென்று சொல்லுவாள்..?
"என்னை நீங்க ஏமாத்திட்டிங்க.." அவள் குரல் நடுங்கியது..
"இல்லை.. உன்னை நான் ஏமாற்றலை.. உன்மேல ஆசைப்பட்டேன்.. பெண் கேட்டேன்.. இப்பக் கல்யாணம் வரைக்கும் வந்து நிற்கிறேன்.. இதில் உன்னை நான் ஏமாற்றியதாக எப்படி ஆகும்..?"
"பொய் சொன்னீங்க.."
"உண்மையை மறைத்தேன்.. அவ்வளவுதான்.."
"இரண்டும் ஒன்றுதானே.."
"இரண்டுமே வேறுவேறுன்னு சொன்னா நீ கேட்டுக் கொள்ளப்போவதில்லை.. நான் செய்தது தப்புன்னா இதே தப்பை உன் அப்பாவும் உன் அம்மாவுக்காக செய்திருக் கிறார்.. அவரோட தப்பை ரொம்பக் கேசுவலா பேசற நீ.. என்னோட தப்பை ஏன் மிகைப் படுத்திப் பேசற..?"
"அப்பா செய்ததை அம்மா ஏத்துக்கிட்டாங்க.. அதில நான் ஜஸ்ட் ஒரு ஆடியன்ஸ்.. பார்வையாளர்.. அவ்வளவு தான்.. இப்ப அப்படியில்ல.. பாதிக்கப்பட்டது நானாக இருக்கிறேன்.."
"ஊர்மிளா..?"
நரேந்திரன் கண்கள் இடுங்கின.. கோபமான அவனது பார்வை அவள் மனதைத் துளைப்பதைப் போல பார்த்தது..
"என்னைக் காதலித்ததும்.. கல்யாணம் பண்ணிக்கப் போகிறதும் உனக்குப் பாதிப்பா..?"
அவனின் குற்றம் சாட்டும் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.. நிற்க முடியாமல் அவள் கால்கள் வலுவிழந்தன.. ஊர்மிளா தொய்ந்து அமர்ந்தாள்.. அவளருகிலிருந்த பூங்குழலி மகளின் தலைமுடியைக் கோதி அணைத்துக் கொண்டாள்.. தாயின் இடுப்பைச் சுற்றி வளைத்த ஊர்மிளாவின் கரங்கள் நடுங்கின.. அவள் எதிலிருந்தோ தப்பிக்க விழைகிறவளைப் போல பூங்குழலியின் இடுப்பில் முகம் புதைத்துக் கொண்டாள்..
அவளைப் பெற்றவளின் மனம் பதறியது... மகளுக்குத் திருமணம் என்று வெகு சந்தோசமாக கிளம்பி வந்த அந்த தாய் திகைத்து நின்றாள்.. கண் முன்னால் விசுவரூபமெடுத்து நின்ற அந்தப் பிரச்னைக்கான முடிவு சுபமான முடிவாக இருக்க வேண்டுமே என்று அவள் மனம் கடவுளை வேண்டிக் கொண்டது.. பிரார்த்தித்த அந்த பேதை தாயின் நெஞ்சம் மகளின் நல்வாழ்விற்காக இறைவனிடம் இறைஞ்சியது..
சோமசுந்தரம் கொதித்துக் கொண்டிருந்தார்.. நரேந்திரன் மோசடிக்காரன் என்றார்.. அவன் பேசும் வியாக்கினங்களை அவர் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லையென்றார்..
"உங்களுடன் எனக்குப் பேச்சில்லை சார்.." என்று சொல்லி விட்டான் நரேந்திரன்..
"என்னது..? என்கூடப் பேச்சில்லையா..? பின்னே.. வேற யார்கூடப் பேசப் போறிங்க..? மண்டபத்து வாசலில நிக்கிற எவனாவது ஒருத்தனை அழைச்சுக்கிட்டு வர்றேன்.. அவனோட பேசறிங்களா..?"
விதண்டாவாதமாக கேட்டு வைத்தார் சோமசுந்தரம்.. அவர் கொஞ்சம் இறங்கிப் பேசினால் தேவலையென்று பூங்குழலிக்குத் தோன்றியது.. நரேந்திரன் ஒன்றும் இமாலயத் தவறை செய்து விடவில்லையே என்று அவள் நினைத்தாள்.. வசதி அதிகமென்று பொய் சொல்லி அவன் ஏமாற்றியிருந்தால் அதை குற்றமென்று சொல்லலாம்.. அவனோ பணக்காரன் என்பதை மறைத்திருக்கிறான்.. இதில் ஏமாற்றுவேலை எங்கிருந்து வந்தது..?
தாழ்ந்த குரலில் அவள் அதை விளக்க முனைந்த போது சோமசுந்தரம் அவளை எரிப்பதைப் போல பார்த்தார்..
"என்ன பேசற பூங்குழலி..? இல்லாதவன் இருக்கிறவன்னு சொன்னால்தான் அது குற்றமாகுமா..? இருக்கிறவன் இல்லாதவன்னு சொன்னா அது குற்றமில்லையா..?"
"நான் அப்படிச் சொல்லலைங்க.. நம்மளை ஏமாத்தனும்ங்கிறது அவரோட நோக்கமாக இருந்திருக் காது.. ஊர்மிளா மேல ஆசைப்பட்டுட்டார்.. அதனால மாத்திச் சொல்லியிருப்பார்.."
"எந்த நோக்கத்துக்காக சொன்னாலும் பொய்.. பொய்தானே பூங்குழலி..?"
இந்த மனிதர் மகளை உருப்படியாக வாழ வைக்க மாட்டார் என்ற நிராசை பூங்குழலியின் இதயத்தில் தைத்தது.. அவளுக்கு கணவரின் கொள்கைகளின்மீது எந்தவிதமான துவேசமும் இல்லைதான்.. ஆடம்பர வாழ்வின்மீது அவளுக்கு எந்த நாளிலும் ஆசை இருந்த தில்லைதான்.. ஊர்மிளா மகிழ்ச்சியாக வாழ வேண்டு மென்று ஆசைப்பட்டவள்.. அவள் பணக்காரியாக வாழ வேண்டுமென்று ஆசைப்படவில்லைதான்..
அதற்காக.. தானாக வரும் அதிர்ஷ்ட தேவதைகூட மல்லுக்கட்டிக் கொண்ட நிற்பதிலும் அவளுக்கு விருப்பமில்லை..
ஊர்மிளாவின் முன்னால் வளமான வாழ்வு காத்திருக்கிறது.. இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் மகளுக்கு கிடைக்குமென்று பூங்குழலி கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.. சோமசுந்தரத்தின் கொள்கை முழக்கத்தில் அவள் அதுபோன்ற கனவுகளை எல்லாம் காண்பது வீணான வேலை என்ற விட்டு விட்டாள்..
எப்படியும் சோமசுந்தரம் கொள்கை அது.. இது என்று மிகச் சாதாரணமான இடத்திலதான் மகளை மணமுடித்துக் கொடுக்கப் போகிறார் என்று அவள் புரிந்து வைத்திருந்த போதும்.. ஒரே மகளுக்கு அவர்களின் திருச்சி வீடு.. கிராமத்திலிருக்கும் வீடு.. தோப்பு.. துரவுகள்.. வங்கியி லிருக்கும் பணமென்று அனைத்தும் கிடைக்கும் என்பதால்.. பெண்ணைத் திருமணம் செய்கிறவர் எப்படிப் பட்ட வசதியில் இருந்தாலும் ஊர்மிளாவுக்கு கிடைக்கப் போகும் சொத்து சுகங்களை வைத்துக் கொண்டு அவளை நல்ல படியாக வாழ வைத்தால் போதுமென்ற எண்ணம் அவளுக்கு..
நரேந்திரனையும் அது போலதான் அவள் நினைத்திருந்தாள்.. பெற்றோர் இல்லையென்று அவன் சொன்னதும்.. வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து விடுவான் என்பதில் அவளுக்குள் நிம்மதி உண்டானது.. இருப்பதை வைத்து அவனும் ஊர்மிளாவும் நிறைவாக குடும்பம் நடத்தினால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் கண் முன்னே மிகப்பெரிய சாம்ராஜ்யம் வந்து நிற்கிறதே.. அதன் மகாராணியாக அவள் மகளை வரவேற்கக் காத்திருக்கிறதே.. இப்படிப்பட்ட வாழ்வை வாழ அவள் மகளுக்கு.. தடை விதிக்கப் படுவதா..?
பூங்குழலியின் மனம் குமுறியது.. திருமண மேடையைக் காண வந்த பெண்ணின் திருமணத்தை நிறுத்தி.. அவளை திருப்பி அழைத்துக் கொண்டு போவதில் அவளுக்குக் கொஞ்சம்கூட உடன்பாடில்லை..
அவளுக்குத் தெரியும்.. மணமேடை வரை வந்த திருமணம் நின்று போனால் அந்தப் பெண்ணின் வாழ்நாள் முழுவதும் அந்தச் சொல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.. உற்றார்.. உறவினரெல்லாம் வியந்து கொண்டிருக்கும் அந்த வேளையில் திருமணத்தை நிறுத்தினால் ஆளாளுக்கு கதை பினைந்து பேச ஆரம்பித்து விடுவார்கள்..
பூங்குழலி பதைக்கும் மனதோடு கணவரை கெஞ்சுதலாகப் பார்த்தாள்.. அந்த முரட்டு மனிதரோ.. தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள மறுத்தார்..
"பொய்யால் எழும்பியிருக்கிற உங்க காதல் எப்படிங்க உண்மையான காதலா இருக்க முடியும்..?" என்று எகிறினார்..
"அதே பொய்யில் எழும்பிய உங்க காதல் மட்டும் உண்மையானதா இருந்திருக்கிறப்ப.. என் காதலில் எப்படிங்க உண்மை இல்லாமல் போகும்..?" நரேந்திரனும் நறுக்கென்றுதான் பதிலுக்குக் கேட்டான்..
"என்னைப் பத்திப் பேசாதீங்க.."
"நீங்களும் என்னைப் பத்திப் பேசாதீங்க.."
"எப்படிங்க பேசாம இருக்க முடியும்..? பெண்ணைப் பெத்தவன் நான்.. அவளை உண்மையாய் இருக்கிறவன் கையிலதான் என்னால் பிடிச்சுக் கொடுக்க முடியும்.."
"இங்கே யாரும் உருப்படியில்லாம இல்லை சார்.. இந்த நரேந்திரன் 'நரேன் குருப் ஆஃப் கம்பெனி'ஸின் எம்.டி.."
அந்த வார்த்தைகளில் சோமசுந்தரம் கண்சிவந்தார்.. ஊர்மிளா தலையைப் பிடித்துக் கொண்டாள்..
'என்னடா இது வன் கொடுமையாய் இருக்கு..'
நரேந்திரன் வெறியாகிப் போனான்.. அவனுடைய அடையாளம் என்ன அந்த அளவுக்கு மட்டமானதா..? அப்பாவும்... பெண்ணும் இந்த அளவுக்கு ஆட்டம் காண்பிக்கிறார்களே..
"இதை நீங்க முதலிலேயே சொல்லியிருந்தா என் மக உங்களைத் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டா.."
"ஏங்க..? ஒரு கம்பெனிக்கு எம்.டியாய் இருக்கிறது என்ன அவ்வளவு பெரிய குற்றமா..?"
"எங்களுக்கு அப்படித்தாங்க.."
"எங்களுக்குன்னா..? யாரைச் சொல்கிறீங்க..? உங்களையும் ஊர்மிளாவோட அம்மாவையும் சொல் கிறீங்களா..?"
வேண்டுமென்றே கேட்டான் நரேந்திரன்... எதற்கெடுத்தாலும் சோமசுந்தரம்... எங்களுக்கு
என்று ஊர்மிளாவையும் அவருடன் கூட்டுச் சேர்த்துக் கொண்டதில் அவனுக்கு கடுப்பு ஏற்பட்டிருந்தது.. அந்தக் கடுப்பை அதிகரிப்பதைப் போல சோமசுந்தரம் பேசி வைத்தார்..
"இல்லைங்க.. என்னையும்.. என் மகளையும் சொல்கிறேன்..."
"ஏங்க..? நியாயமா நீங்க ஊர்மிளாவோட அம்மாவைத்தான் சொல்லியிருக்கனும்.."
"அது என்ன கழுதைக்கு..? அவள் எந்தக் காலத்திலும் என் கொள்கையைப் புரிஞ்சுக்காதவ..."
"புரிஞ்சுக்காம இருக்கிறதுதான் பெட்டர்ன்னு நினைச்சிருப்பாங்க.. அவங்களை அவங்க போக்கில விட்ட நீங்க.. உங்க மகளையும்.. அவளோட அம்மா வளர்ப்பில விட்டிருக்கலாமே.. அவங்க நல்லதா நாலு குணத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்பாங்க.."
அவனை யாரோ போல பார்த்தபடி கண்ணீரும் கம்பலையுமாக உட்கார்ந்திருந்தவளை சினத்துடன் பார்த்தபடி அவன் சொன்னான்.. அதில் அவர் விழியுயர்த்தி அவனைப் பார்த்தார்..
"ஏங்க..? எப்படிங்க நீங்க இந்த வார்த்தையைச் சொல்லலாம்..? என் மக குணத்துக்கு என்ன குறைச்சல்..? நல்லதா நாலு குணம் மட்டுமில்லைங்க.. நாலாயிரம் குணம் என் மககிட்ட இருக்கு.. உங்களைப் போல நடிச்சு ஏமாத்தற குணம் அவளுக்கில்லை.."
சோமசுந்தரம் காட்டிய ஆவேசம் அவனுக்கும்.. ஊர்மிளாவுக்கும் இடையில் அகலமான அகழியை வெட்டியது.. பேசாமல் அவரை நாடுகடத்தி விடலாமா என்று கூட நரேந்திரன் யோசித்தான்.. அப்படிச் செய்தால் அவன் காதலிக்கும் அழகான ராட்சசி ஆயுள் முழுவதும் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள் என்பதினால் அந்த யோசனையை கைவிட்டான்..
"ஸ்ஸ்ஸ்.. எதுக்குங்க இவ்வளவு சத்தம் போடறிங்க..? இங்கேயென்ன பொதுக்கூட்டமா நடக்குது..? நீங்க என்ன மைக் முன்னாலேயா பேசிக்கிட்டு இருக்கீங்க..? இது கல்யாண மண்டபங்க.. அடக்கி வாசிங்க.."
"என்ன கழுதைக்குண்ணேன்...? ஏன் நான் அடக்கி வாசிக்கணும்னேன்.. பெண்ணைப் பெத்தவன் நாண்ணேன்.. பொய் சொல்லி நடிச்சுப் பெண் கேட்ட உங்களுக்கு என்பெண்ணைக் கொடுக்க மாட்டேன்னு சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவேண்ணேன்..."
சோமசுந்தரம் அடுக்கிய அடுக்கலில் வெகுண்டான் நரேந்திரன்..
"என்னது..? எனக்குப் பெண் கொடுக்க மாட்டேன்னு ஊரைக் கூட்டிச் சொல்வீங்களா...?" கொதிப்புடன் கேட்டான்..
"ஆமாங்க... நீங்க பொய் சொல்லிப் பெண் கேட்டிங்க.. பணக்காரங்க.. கோடிஸ்வரங்கிற உண்மையை மறைச்சுட்டிங்க.."
"இதையே எத்தனை தரம்தான் சொல்லுவீங்க.. உங்களுக்கு வாய் வலிக்கலையா..?"
"உண்மையைச் சொல்ல எதுக்குங்க வாய் வலிக்கனும்...? உங்களுக்கு பொய் சொல்ல வாய் வருகிறப்ப... எனக்கு உண்மை சொல்ல வாய் வலிக்காதுங்க..."
"திரும்பத் திரும்ப எனக்கு பொய்காரன்னு பெயர் வைத்தால் நான் சும்மாயிருக்க மாட்டேன்.."
"என்னங்க செய்வீங்க..? நீங்க செய்ய நினைக் கிறதை செய்துக்கங்க.. எனக்கு அதைப் பத்திக் கவலை யில்லை.. உங்களைப் போல ஒரு உண்மையை மறைத்துப் பேசுகிறவருகிறவருக்கு.. முதலாளித்துவவாதிக்கு.. பாஸிச கருத்துக்களில் ஊறிப் போனவருக்கு... தொழிலாளர் வர்க்கத்தை பூண்டோடு அழிக்கிற சுரண்டல் பேர்வழிக்கு என் பெண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டேங்க... உங்களுக்குப் பெண் கொடுக்க முடியாது.."
சோமசுந்தரம் நரேந்திரனிடம் திட்டவட்டமாக சொல்லி விட்டார்.. அவன் நிதானமாக ஊர்மிளாவைப் பார்த்தான்.. அவனது தீர்க்கமான பார்வை அவளைத் துளைத்தது..
"அதை நீங்க சொல்லாதீங்க... ஊர்மிளா சொல்லட்டும்.. அவள்தான் இதுக்கான பதிலைச் சொல்லனும்.. நான் அவளைக் காதலிக்கிறேன்... அவளும் என்னை காதலிக்கிறா.. இந்தக் காதலில் பொய் இருக்கிறதான்னு அவ சொல்லட்டும்... அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்... ஊர்மிளா உங்களிடம் பெண் கேட்க சொன்னா.. நீங்க முதலாளிக்குப் பெண் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க.. நான் தொழிலாளின்னு சொல்லிப் பெண் கேட்டேன்.. உழைக்கிற எல்லா மக்களுமே தொழிலாளி வர்க்கம்தாங்க.. நான் உழைக்கலையா..? நான் உழைப்பாளி வர்கத்தைச் சேர்ந்தவனில்லையா..? இருபத்தி நான்கு மணி நேரமும் உழைக்கிறேங்க.. என் உழைப்பு ஏன் உங்க கண்ணில் படலை..?"
சோமசுந்தரத்திடம் சினந்தவன் ஊர்மிளாவைப் பார்த்து நேரடியாகக் கேட்டான்..
"ஊர்மிளா.. நான் உன்னைக் காதலிக்கிறேன்.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்க என் பணம் ஒரு தடையாய் இருக்கும் என்பதற்காக மட்டுமே நான் பணக்காரன்ங்கிறதை சொல்லாம மறைச்சேன்.. வேற தப்பு நான் செய்யலை.. நீ என்ன முடிவைச் சொல்லப் போகிற..? என்னை மேரேஜ் பண்ணிக்குவியா.. மாட்டியா..? முடியுமா.. முடியாதா..?"
சோமசுந்தரத்தின் பார்வையும்.. நரேந்திரனின் பார்வையும்.. ஊர்மிளாவின் மீது படிந்தன.. முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் தான் நிற்பதை அவள் உணர்ந்தாள்.. அவள் முன்னால் 'முடியாது' என்று சொல்லி விடச் சொல்லும் வேண்டுகோளை விழிகளில் ஏற்று சோமசுந்தரமும்.. 'முடியும்' என்ற சொல்லை எதிர்பார்த்த நரேந்திரனும் நின்றிருந்தார்கள்...
அவள் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்..


- இரண்டாம் பாகத்தில் தொடரும்...







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,12,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,95,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,30,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,12,எண்ணியிருந்தது ஈடேற,235,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,27,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,11,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -34
அழகான ராட்சசியே -34
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye34.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye34.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy