அழகான ராட்சசியே -33

33 எதை வென்றும்.. உனை வெல்ல வைக்கும்.. அழகான ராட்சசி நீ.... சோமசுந்தரத்துக்கும்.. நரேந்திரனுக்கும் இடையில்   நடக்கும் உரையாடல் ...


33
எதை வென்றும்..
உனை வெல்ல வைக்கும்..
அழகான ராட்சசி நீ....

சோமசுந்தரத்துக்கும்.. நரேந்திரனுக்கும் இடையில்  நடக்கும் உரையாடல் இது போலதான் நீண்டு வைக்கும்.. பூங்குழலிதான் கவலைப்படுவாள்..
"என்னடி ஊர்மி இது.. இவருக்கும்.. அவருக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருக்குது.."
"விடுங்கம்மா.. எனக்கும் நரேனுக்கும் இடையே ஏழாம் பொருத்தம்ன்னாத்தான் நீங்க பயப்படனும்... மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே எங்கேயாச்சும் ஜாதகம் பொருத்தம் பார்ப்பாங்களா..?"
"அப்படிப் பாத்தாங்கன்னு வைய்யி... இந்த ஜென்மத்தில உனக்கு கல்யாணம் நடக்காது... உங்க அப்பாவோட அராஜகத்துக்கு எந்த மாப்பிள்ளையும் பொருந்தி வரமாட்டாங்க.."
"நீங்க மட்டும் அவருக்கு பொருந்தி வர்றீங்களே.. எப்படிம்மா..?"
ஊர்மிளா பூங்குழலியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு வினவினாள்.. அவளுக்கு வெட்கமாகி விட்டது..
"போடி.." மகளைச் செல்லமாக கடிந்தபடி வேலையைப் பார்க்கப் போய் விட்டாள்..
சோமசுந்தரம் மகளின் திருமணத்திற்காக நூ..று பத்திரிக்கைகள் அடித்தார்.. அதில் பெங்களூர் என்று மட்டுமே போடப் பட்டிருந்தது.. எந்த இடம் என்பதைச் சொல்ல நரேந்திரன் நாள் கடத்தியதால் அவர் இடத்தைப் பற்றிக் குறிப்பிடாமலே.. ஊரைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு விட்டார்..
"பாவம்.. ஏதாவது சின்னக் கோவிலா இருக்கும்.. சொல்லக் கூச்சப்பறாரு.. இப்ப என்ன..? நாம கொஞ்ச பேரைத்தானே கூப்பிட்டுக்கிட்டுப் போகப்போறோம்..? அப்பச் சமயத்துக்கு எந்த இடம்ன்னு கேட்டுக்கிட்டாப் போகுது.. என்ன ஊர்மிளா..?"
"ஆமாம்பா.."
நெகிழ்வாக பதில் சொன்னாள் ஊர்மிளா.. அவளுடைய நரேந்திரன் பாவம்.. பொருளாதாரப் பற்றாக்குறையில் சிரமப்படுகிறான் என்ற எண்ணம் அவளுக்கு.. அதை மறைமுகமாக சோமசுந்தரத்திடம் அவள் வெளிப்படுத்தியதில் சோமசுந்தரம் நரேந்திரனை அழைத்துப் பேசினார்..
"உங்களுக்கே தெரியும் நரேந்திரன்.."
"எதைப் பத்தி சார்..?"
எங்கே அவர் பொதுவுடைமைக் கொள்கைகளைப் பற்றி.. உச்சிவெயிலில் பாடம் எடுத்து விடுவாரோ என்ற கவலையுடன் கேட்டான் நரேந்திரன்.. அவர் எதைப் பற்றிக் கேட்கிறார் என்று தெரியாமல் அவனாக வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு விடக் கூடாதே..
அவனது முன்ஜாக்கிரதைக்குப் பலன் இருந்தது..
"என்னுடைய குணத்தைப் பத்தி.."
சோமசுந்தரம் சொன்னபோது.. நல்லவேளை.. நாமாக கொள்கையைப் பற்றிப் பேசிவிடவில்லை என்று சந்தோசப் பட்டுப் போனான் நரேந்திரன்..
"உங்க குணத்துக்கென்ன சார்.. தங்கமாச்சே.."
காதலியின் அப்பாவின் குணத்தைப் பற்றிக் காதலன் வேறு விதமாகவா கூற முடியும்..? அதையறிந்தவர் போல சிரிக்காமல் முகத்தை வைத்துக் கொண்டு மிதப்பாக ஓர் பார்வை பார்த்தார் சோமசுந்தரம்..
அழகான பெண்ணைப் பெற்றவராயிற்றே.. அவர் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாமே என்று அறியாப் பார்வை பார்த்து வைத்தான் நரேந்திரன்..
"இந்த சாஸ்திரம்.. சம்பிரதாயத்திலெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கையில்லை.."
"அதை நம்பி.. பூஜை புனஸ்காரம் பண்ணத்தான் ஊர்மிளாவின் அம்மா இருக்காங்களே சார்.."
என்னதான் யோசித்துப் பேசினாலும்.. இடக்காக வந்து விடும் பதிலை நரேந்திரனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.. அவனும் பார்த்திருக்கிறான்.. பகுத்தறிவு வாதம் பேசும் ஆண்களின் மனைவிகள் புராண காலத்து நாயகிகளின் பிரதி பிம்பங்களாக இருந்தார்கள்.. இவர்கள் நாத்திகம் பேசினால்.. அவர்கள் சாம்பிராணி புகை போட்டு வீட்டை அதில் மூழ்கடித்தார்கள்.. அதை பகுத்தறிவு வாதிகள் ஆட்சேபிப்பதில்லை..
"அவங்க சுதந்திரத்தில நான் தலையிடறதில்ல.."
கெட்டிக்காரத்தனமாக பதில் சொல்வார்கள்.. அதைக் கண்டு உணர்ந்திருக்கும் நரேந்திரன் அதனால்தான் அப்படியொரு இடக்கை எடுத்துவிட்டான்..
"இப்ப என்ன சொல்லவர்றீங்க..?"
"எதுவும் சொல்ல வரலை சார்.. நீங்கதான் ஏதோ சொல்லவந்தீங்க.."
"எங்கே..? நீங்க பேச வந்ததை பேச விட்டால் தானே..?"
'பேசவிடாமல் குரல்வளையையா பிடித்து அமுக்கினேன்..?' என்று கேட்கத்தான் நினைத்தான் நரேந்திரன்.. அதைக் கேட்டு விட்டால் ஊர்மிளாவே அவன் மனதில் அப்படியொரு ஆசை இருக்கிறது என்று சொல்லி விடுவாள் என்பதால் மௌனம் காத்தான்..
"பெண்ணுக்கு கூறைப்புடவை.. தாலி எடுக்க என்று நீங்க சிரமப்பட்டுக்க வேணாம்.."
சோமசுந்தரம் சொல்லவந்தது என்னவென்பதை புரிந்து கொண்ட நரேந்திரனின் பொறுமை காற்றோடு பறந்தது.. சினத்தினால் அவன் முகம் சிவந்தது..
"லுக் சார்.." அவன் கண்டிப்புடன் பேசினான்..
"நான் சிரமப்படறேன்தான்.. அதுக்காக.. கல்யாணம் பண்ணிக்கப் போகிற பெண்டாட்டிக்கு கூறைப்புடவையும்.. தாலியும் வாங்க முடியாம சிரமப்படலை.. உங்களுக்கு வேணுமானா அது சாஸ்திரம்.. சம்பிரதாயம் சம்பந்தப்பட்ட சாதாரண விசயமா இருக்கலாம்.. எனக்கு அப்படியில்லை.. இது என் மரியாதை சம்பந்தப்பட்ட விசயம்.. இவ்வளவு பேசறீங்களே.. உங்க கல்யாணத்தப்ப உங்களைப் பார்த்து உங்க மாமனார் இதே கேள்வியை கேட்டிருந்தா உங்களுக்கு எப்படியிருந்திருக்கும்..?"
"இதுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டா எப்படிங்க..? நான் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.."
"இது எனக்கு நல்லதில்லைங்க.. அவ்வளவுதான் சொல்வேன்.. நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவளுக்கு என்ன வாங்கிக் கொடுக்கனும்.. எப்படிக் கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்குள்ளேயும் கனவிருக்கு.. இந்த நரேந்திரன் யாருன்னு இப்ப உங்களுக்கு தெரியாது.. அது தெரிய வரும்போது.. இப்பப் பேசின வார்த்தைகளுக்காக நீங்க ரொம்பவே வருத்தப்படுவீங்க சார்.."
நரேந்திரன் கோபத்துடன் பேசினான்.. சோமசுந்தரம் எதையோ பேச வாயெடுத்தார்.. சமையலறையிலிருந்து பூங்குழலியின் குரல் வந்தது..
"என்னங்க.. நீங்க கொஞ்சம் வந்துட்டுப் போங்க.."
சோமசுந்தரம் எழுந்து போனார்.. பூங்குழலி அவரை வன்மையாக கண்டித்து அனுப்பி வைத்தாள்.. அவர் வந்து பார்த்தபோது நரேந்திரன் அங்கே இல்லை..
"அவருக்கு கோபமும்.. ரோசமும் அதிகம்ப்பா.." ஊர்மிளா சொன்னாள்..
அது ஆண்மையின் அடையாளமென்று மனைவியிடம் சிலாகித்தார் சோமசுந்தரம்.. நரேந்திரனின் அந்த எழுச்சிக்குப் பின்னர் மறந்தும்கூட அவனிடம் திருமண சம்பந்தமான எந்த விவரங்களையும் சோமசுந்தரம் கேட்கவில்லை.. திருமணத்திற்கு உதவி செய்வதாகவும் சொல்லவில்லை..
திருமணத்திற்கு முன்தினம் அவர்கள் பெங்களூருக்கு கிளம்பினார்கள்.. வீட்டு வாசலில் ஒரு சொகுசு ஏஸி பஸ்ஸீம்.. பென்ஸ்காரும் வந்து நின்றன.. சோமசுந்தரம் புருவங்களை உயர்த்தினார்..
"யாரு இவங்க..? வீடு மாறி வந்திட்டாங்களா..?"
இல்லையென்றான் காரிலிருந்து இறங்கி  வந்த நரேந்திரன்..
"நான் பெங்களூரில் இருந்தப்ப வேலை பார்த்த கம்பெனியின் முதலாளி இந்த பஸ்ஸையும்.. காரையும் அனுப்பி வைச்சிருக்கார்.. அவர் என் தாத்தாவுக்கு வேண்டப்பட்டவர்.." என்று சொன்னான்..
அப்போதும் சோமசுந்தரத்துக்கும்.. ஊர்மிளாவுக்கும் சந்தேகம் வரவில்லை.. பென்ஸ்கார் வைத்திருக்கும் அளவுக்கு நரேந்திரன் கோடிஸ்வரனாக இருப்பான் என்று அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை..
"பரவாயில்லையே ஊர்மிளா.. மாப்பிள்ளைக்கு.. பஸ்ஸீம்.. காரும் கொடுத்து உதவக்கூட ஆளிருக்கே.." என்றுதான் பூங்குழலி சொன்னாள்..
அதற்கும் சோமசுந்தரம் ஆட்சேபித்தாள்..
"அடுத்தவங்க உதவினாலும்.. ஆடம்பரம்.. ஆடம்பரம்தானே..?"
அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. அவருடைய உறவினர்கள் 'நீ பாட்டுக்கு சொல்லிக் கொண்டிரு' என்று அவசரமாக பஸ்ஸில் ஏறி.. ஆளுக்கொரு சீட்டைப் பிடித்து உட்கார்ந்து விட்டார்கள்..
"அக்கட சூடுங்க.." நரேந்திரன் சோமசுந்தரத்தின் முகத்தை திருப்பி விட்டான்..
நீ முந்தி.. நான் முந்தி.. என்று அவருடைய உறவினர்கள் பஸ்ஸை நிரப்பிக் கொண்டிருந்த கண் கொள்ளாக் காட்சியில் சோமசுந்தரம் பல்லைக் கடித்தார்..
'எனக்குப் போய் இப்படியாப்பட்ட சொந்தங்கள் தான் வாய்க்கனுமா..?'
பஸ்ஸையே அவரால் மறுக்க முடியாமல் போன போது பென்ஸ் காரை எப்படி மறுப்பார்..?
பூங்குழலிதான் முதல் வேலையாக பூஜையறையில் விளக்கேற்றி வணங்கி மகளின் நெற்றியில் விபூதி... குங்குமம் இட்டு விட்டு... காரின் பின்சீட்டில் ஏறி உட்கார்ந்து விட்டாளே..
'நல்ல பெண்டாட்டி..! அருமையான மகள்..!'
பல்லைக் கடித்தபடி வீட்டைப் பூட்டிய சோமசுந்தரம் வேறுவழியில்லாமல் காரின் பின்சீட்டில் ஏறி அமர்ந்தார்..
நரேந்திரன் ஏறுவதற்காக காரின் முன்பக்கக் கதவை டிரைவர் படு பவ்யமாக திறந்து விட.. சோமசுந்தரம் ஒரு மார்க்கமாக அவனைப் பார்த்து வைத்தார்..
'காரே ஓசி.. இதில டிரைவர்.. காருக்குச் சொந்தக்காரனை உபசரனை செய்கிறதைப் போல இந்த வளை.. வளைகிறானே.. ம்ஹீம்.. இந்த உலகத்தில அசல் எது.. நகல் எதுன்னு யாருக்குமே தெரிகிறதில்லை..'
படு கம்பீரமாக நரேந்திரன் காரில் ஏறுவதை கேலியாக பார்த்த சோமசுந்தரத்தின் இதழ் வளைவில் கேலிப் புன்னகை உதித்தது.. வழி நெடுக.. நரேந்திரன் பேசிய பேச்சுக்களுக்கு டிரைவர் குரல் உயர்த்தாமல் பதில் சொன்னதை கிண்டல் பார்வையுடன் ரசித்துக் கொண்டு வந்தார் சோமசுந்தரம்.. ஊடே அதைப்பற்றி பூங்குழலியிடம் அவர் ரகசியம் பேச முனைந்தபோது அவள் கனல்கக்கும் பார்வையால் அவர் வாயை மூடவைத்தாள்..
'நடக்கறது மகளோட கல்யாணம்.. இதில மாப்பிள்ளையை கிண்டல் பண்ண வர்றீங்களே.. உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா..?'
பூங்குழலியின் கண்கள் இதைத்தான் கேட்டன.. வாயால் அவள் எதையும் கேட்கமாட்டாள்.. கணவரை அறிவு ஜீவியென்று போற்றி புகழ்வாள்.. அவர் பாதங்களை பூஜை பண்ணாத குறையாக தொட்டு வணங்குவாள்..
அதுநாள்வரை அவள் காட்டி வந்த அந்த பதி பக்தியை கெடுத்துக் கொள்ள வேண்டாமென்று சோமசுந்தரம் வாயின் மீது ஒற்றை விரலை வைக்காத குறையாக மௌனம் காத்தார்..
பஸ்ஸீம் காரும் ஊடே சாப்பாட்டுக்கென்று ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாசலில் நின்றன.. சோமசுந்தரம் கடுப்புடன் சண்டை போடபோன போது நரேந்திரன் செல்போனை காதுக்கு கொடுத்தபடி எல்லோருக்கும் முன்னால் உள்ளே போய் விட்டான்..
"கடன்வாங்கி பணத்தை செலவு பண்றாரோன்னு தோணுது ஊர்மிளா.. இப்படி பெருமைக்கு மாவிடிக்கக் கண்டோமா..?"
மகளிடம் ஆட்சேபித்தார்.. ஊர்மிளாவுக்கும் அதே கவலைதான் என்றாலும்.. மறுநாள் திருமணம் என்ற நிலையில் அவள் எப்படி நரேந்திரனிடம் அதைப் பற்றியெல்லாம் விவாதிக்க முடியும்..?
"என்னன்னு கேட்கலாம்ப்பா.. இப்ப சொந்தக்காரங்க முன்னாலே எதையும் பேச வேணாம்..?" தகப்பனாரை சமாதானப் படுத்தினாள்..
"என்ன சோமு.. பிடிச்சாலும் பிடிச்சே.. புளியங் கொம்பாய் பிடிச்சுட்டே போல.. மாப்பிள்ளை பெரிய இடமா இருக்காரு.."
சோமசுந்தரத்தின் உறவினர்களில் ஒருவர் சொல்லி விட்டுப் போனார்.. சோமசுந்தரத்தின் முகம் இறுகியது..
"வேசம் போடறது எத்தனை நாளைக்கு நிலைக்கும்..? வேசம் கலைகிறப்ப இதெல்லாம் நமக்குச் சொந்தமில்லைன்னு மனசில அதிர்ச்சி வராதா..? இந்த வேசம் தேவைதானா..?" மகளிடம் கண்சிவந்தார்..
பெங்களூரில் காரும்.. பஸ்ஸீம் நுழைந்தவுடன் அவர் ஏதேனும் ஒரு கோவில் மண்டபத்தில் அவை சென்று நிற்கக்கூடும் என்றுதான் எதிர் பார்த்தார்.. மாறாக அவையிரண்டும் பிரம்மாண்டமான பெரியதொரு மண்டபத்தில் பிரவேசித்து நின்றன..
அதன் நுழைவாயிலையும்.. பிரம்மாண்டமான மைதானம் போல இருந்த முன்பக்க வளாகத்தையும்.. அங்கே நின்றிருந்த நூற்றுக் கணக்கான கார்களையும் கண்டவர்களுக்கு இடம் மாறி வந்து விட்டோமோ என்று தோன்றியது..
பெரிய அரண்மனை போல தோற்றமளித்த மண்டபத்தின் நுழைவாயிலில் கார் நின்றதும்.. வாத்தியங்கள் முழங்கின.. காரைவிட்டு இறங்கிய ஊர்மிளாவுக்கு ஆரத்தி எடுத்து பெண்ணழைத்துச் சென்றார்கள்..
'இதுவும் ஓசியா இருக்க முடியாதே..'
தவித்த ஊர்மிளாவுக்கும்.. சினந்த சோமசுந்தரத்திற்கும் அங்கிருந்த திருமண அழைப்பிற்கான பிரம்மாண்டமான பெயர் பலகையைக் கண்டதும் உண்மை விளங்கியது..
'நரேந்திரன் வெட்'ஸ் ஊர்மிளா..'
அழகான வண்ண விளக்குகள் எழுத்துக்களாய் மிளிர்ந்து அவர்களை வரவேற்றதில் பூங்குழலி பதைத்தாள்.. அதுபோன்ற மண்டபத்தை அதுவரை அவர்கள் கண்டதில்லை.. பட்டும்.. வைரங்களும்.. கோட் சூட்டும்.. அவர்களை முற்றிலுமாக அன்னியப் படுத்தி அச்சூழ்நிலையிலிருந்து விலக்கி நிறுத்தி வைத்தன.. பெண் வீட்டாருக்கும்.. மணப்பெண்ணுக்கும் தங்குவதற்காக கொடுக்கப்பட்டிருந்த ஏஸி அறைகளில் சோமசுந்தரத்தின் சொந்தபந்தங்கள் பிரமித்து நின்று விட்டார்கள்..
"ஏன் சோமு.. என்னவோ உனக்கு பணக்காரர்களைக் கண்டாலே பச்சநாவின்னு சொல்லுவே.. இப்ப என்னடான்னா.. இம்மாம்பெரிய கொழுத்த பணக்காரனுக்குப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கப் போற.. கெட்டிக்கார ஆளப்பா நீ.. வாயில வர கொள்கையெல்லாம் வாழ்க்கைக்கு உதவாதுன்னு கத்து வைச்சிருக்கிற காரியக்காரனப்பா நீ.. இம்மாம் பெரிய இடம் உன் பெண்ணுக்கு அமையும்ன்னு கனவு கூட கண்டிருக்க மாட்ட.. உனக்கு அடிச்சிருக்கிறது தான்ப்பா ஜாக்பாட்.. பொழைச்சுக்குவப்பா.. பொதுக் கூட்டத்தில் பேசறதையெல்லாம் நடைமுறையில கொண்டு வாரதுக்கு நீயென்ன புத்தரா.. இல்ல சித்தரா..? கைக்கு எட்டாத மலைச்சிகரம் உன் கண்ணுக்கு முன்னால வந்து நின்னா வேண்டாம்ன்னு சொல்லறதுக்கு நீயென்ன பொழைக்கத் தெரியாத ஆளா..?"
சோமசுந்தரத்தின் மகளுக்கு கிடைக்கப் போகும் வாழ்வைப் பற்றிய வயிற்றெரிச்சலுடன் ஒரு சொந்தக்காரர் மெச்சிப் பேசுவதைப் போல அவரை தேள் கொடுக்காய் கொட்டி விட்டுப் போனார்.. மற்ற உறவினர்களும் அவர் சொன்னதையே மாற்றி மாற்றிப் பேசி அவரை சோதித்தார்கள்.. ஊர்மிளா சரிந்து அமர.. சோமசுந்தரம் கொதித்துப் போனார்..





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -33
அழகான ராட்சசியே -33
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye33.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye33.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy