அழகான ராட்சசியே -31

31 பொய் சொல்லிக் கூட - உன் மெய் தழுவ நான் துடிக்கும்.. அழகான ராட்சசி நீ.... பூங்குழலியின் சாத்வீகமான சாந்த குணத்திற்கும்.. சோம ...


31
பொய் சொல்லிக் கூட - உன்
மெய் தழுவ நான் துடிக்கும்..
அழகான ராட்சசி நீ....

பூங்குழலியின் சாத்வீகமான சாந்த குணத்திற்கும்.. சோம சுந்தரத்தின் கனல்கக்கும் சிகப்புச் சித்தாந்தங் களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்ததில் நரேந்திரன் அந்தக் கேள்வியை ஊர்மிளாவிடம் கேட்டு வைத்தான்..
"உங்கம்மா எப்படி உங்கப்பாவை செலக்ட் பண்ணினாங்க..?"
ஆரம்பத்தில் அந்தக் கேள்வி சொல்ல வருவது எதை என்பதை ஊர்மிளாவால் புரிந்து கொள்ள முடியவில்லை..
"எதுக்குச் செலக்ட் பண்ணினதைச் சொல்கிறிங்க..?" என்றுதான் அவள் கேட்டாள்..
"கல்யாணம் பண்ணிக்கிறதுக்குத்தான்.." என்று நரேந்திரன் சொன்னதும் அவளுக்கு எக்குத்தப்பாக கோபம் வந்து விட்டது..
"என்ன..? எங்கப்பாவை கலாய்க்கறிங்களா..?" அவள் நரேந்திரனிடம் சண்டைக்கு வந்து விட்டாள்..
"உங்கப்பாவை கலாய்க்கிறேனா..? சேச்சே.." நரேந்திரனின் வார்த்தைகளே அவனைக் காட்டிக் கொடுத்தன..
"எங்கப்பாவுக்கு என்ன குறை..? எங்கம்மாகிட்டப் போய் கேட்டுப் பாருங்க.. எங்கப்பாவைப் போல உண்டுமான்னு சொல்லுவாங்க.." அவள் சவால் விட்டாள்..
"என்ன கழுதைக்கு அதைக் கேட்கச் சொல்கிற..? கல்யாணமாகி இத்தனை வருசங்கழிச்சு.. மகளோட கல்யாணத்தப்ப போயி உங்கம்மாகிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டா அவரைப் போல உண்டுமான்னு தான் சொல்லுவாங்க.. அதை விட்டுட்டு தெரியாம மாட்டிக்கிட்டேன் தம்பின்னா சொல்லுவாங்க.." என்று சொல்லி விட்டு நரேந்திரன் ஊர்மிளாவிடம் மொத்து வாங்கினான்..
"எங்கம்மா ஒன்னும் எங்கப்பாவை செலக்ட் பண்ணலை.."
"அதானே பார்த்தேன்.. மாமியார் முகத்தில புத்திசாலிக் களை சொட்டுதே.. அவங்களாவது.. உங்கப்பாவை செலக்ட் பண்றதாவது.."
"என்ன..? திரும்பவும் மொத்தனுமா..?"
"வேண்டாம்.."
"அஃது..! அந்த பயம் இருக்கட்டும்.. எங்கம்மாவுக்கு இந்தக் காதல்.. கத்தரிக்காயெல்லாம் வராது.."
"உங்கப்பா முகத்தப் பார்த்தா எப்படிடீ அவங்களுக்கு இந்தக் காதலும்.. கத்தரிக்காயும் வரும்..?"
"மிஸ்டர் நரேந்திரன்.."
"என்னையா கூப்பிட்ட..?"
"உங்க பேர்தானே நரேந்திரன்..?"
"அடிப்பாவி..! காதலிச்சு.. கல்யாணம் வரைக்கும் வந்து நின்னாச்சு.. இன்னமும் என் பெயர் எதுங்கிறதில உனக்குச் சந்தேகமா..?"
"எங்கப்பாவுக்கும்.. அம்மாவுக்கும் நடந்தது அரேன்ஜீடு மேரேஜ்.."
"அதைச் சொல்லு.. அதனாலதான் உங்கப்பாவுக்கு இப்படிப்பட்ட வொய்ப் கிடைச்சிருக்காங்க.. பாவம் உங்கம்மா.. வீட்டில இருக்கிற பெரியவங்க அவங்களுக்கு நல்லதைத்தான் செய்வாங்கன்னு நம்பி இப்படியொரு கடுவன் பூனைக்கு.. சிவந்த கண்சிவாஜிக்கு.. கழுத்தை நீட்டிட்டாங்களே.."
"உங்களுக்கு எதுக்காக எங்கப்பாமேல இந்தளவுக்கு காண்டு..?"
ஊர்மிளா விசாரித்தாள்.. அந்தக் கண் சிவந்த சோமசுந்தரம் அவரைப் போலவே அவர் மகளையும் வளர்த்து வைத்திருப்பதால் அவன் யாரென்று சொல்ல முடியாமல் பொய் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் நிலையிலிருந்த நரேந்திரனால் எதனால் அந்தக் காண்டு வந்தது என்பதை விளக்கம் சொல்லி விவரிக்க முடியுமா.. என்ன..?
"அவர்மேல எனக்கென்னடி காண்டு..? வருங்கால மாமனார் அவர் மேலே காண்டு வைக்க எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..?"
"அவர் காதலை மதிக்கிறவர்.."
"அதாவது காதலுக்கு மரியாதை கொடுக்கிறவர்ங்கிற.."
"புரிஞ்சாச்சரி.. அவர் பார்த்து இந்தக் காதலை எதிர்த்திருந்தா.. நம்ம கல்யாணமே பிக்ஸ் ஆகியிருக்காது.."
"அதுக்கு..?"
"அடக்கி வாசிங்க.."
ஊர்மிளாவோ அடக்கித்தான் வாசிக்கச் சொன்னாள்.. அவளைப் பெற்ற சோமசுந்தரம் என்னடாவென்றால்..
அவர் கடையிலிருந்த அத்தனை புத்தகங்களையும் வாசிக்கச் சொன்னார்..
"வாசிங்க.. வாசிக்க.. வாசிக்க.. உங்களுக்கு பாட்டாளிவர்க்கத்தின் சிரமங்களைப் பத்திப் புரியும்.."
அதைப் புரிந்து அவன் என்ன செய்யப் போகிறான் என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தாலும்.. எங்கே.. மாட்டேனென்று அவன் சொல்லிவிட்டால்.. அவர் பெண் கொடுக்க மாட்டேனென்று சொல்லி விடுவாரோ என்ற பயத்துடன் அவர் நீட்டிய புத்தகங்கள் அனைத்தையும் அவன் வாங்கிக் கொண்டு போய் அதில் தலை வைத்து உறக்கம் போட்டான்.. அதையறியாத சோமசுந்தரம் அந்தப் புத்தகங்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு நரேந்திரனை உண்டு.. இல்லை.. என்று ஆக்கினார்..
"ஏண்டி.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்க உன் அப்பா என்ன எனக்கு பரிட்சை வைக்கிறாரா..?" நரேந்திரன் ஊர்மிளாவிடம் சீறினான்..
"என்னங்க இது..? உங்களுக்கு ரீடிங் ஹேபிட் இருக்கிறதில எங்கப்பா எவ்வளவு சந்தோசப்பட்டுப் போயிருக்காரு தெரியுமா..? நீங்க படிக்கக் கொண்டு போன புக் எப்படியிருக்குன்னுதானே அவரு கேட்டாரு..? உங்க அகராதியிலே அதுக்குப் பரிட்சை வைக்கிறதுன்னு பெயரா..?" அவளும் பதிலுக்குச் சீறினாள்..
அவளின் அந்தச் சீற்றத்தில் வெளிப்பட்ட பேரழகில் அவன் மயங்கிப் போனான்.. இவளுக்கு இருந்தாலும் இவ்வளவு கோபம் வரக்கூடாது என்று தோன்றினாலும்.. அவள் காட்டிய காதல் அவனைக் கட்டிப் போட்டது..
அவள் நேர்வழியில் காதல் சொன்னாள்.. அவன் காதல் சொல்லியதை பெற்றோரிடம் சொல்லி.. அவளுக்கு அவனைப் பிடித்திருப்பதை உணர்த்தி.. அவர்கள் சம்மதம் சொல்லிய பின்னால் அவனிடம் பதிலுக்கு காதல் சொன்னாள்..
அதில் அவனுக்கு மலையளவு மனத்தாங்கல் இருந்தாலும் அவனைக் கண்டதும் ஊர்மிளாவின் விழிகளில் தோன்றிய மயக்கம் அவனைக் கட்டிப் போட்டது..
கண்டிப்பை மட்டுமே உணர்த்தும் அவன் விழிகள் காதலில் சிக்கி.. ஊர்மிளாவிடம் அடிக்கடி கண்களைச் சிமிட்டின.. புருவங்களை உயர்த்தி அவன் பேசும் வசீகரத்தில் அவள் தன்னை இழந்தாள்.. உதடுகள் சுழிக்க அவன் பேசும் உல்லாசப் பேச்சுக்களில் அவள் உலகை மறந்தாள்.. அவனோ அவளின் ஒர் பார்வையில் வசியமாகி அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தான்.. அவனைத் தேடித் துழாவும் காதல் பார்வையில் அவன் தன்னை ஒப்புக் கொடுத்hன்..
திருமணத்திற்கு நாள் குறித்தார் சோமசுந்தரம்..
"உங்க பக்கத்தில யாருமில்லைங்கிற வருத்தம் வேணாம்.. நாங்க இருக்கோம்.. திருச்சியிலேயே சிம்பிளா கல்யாணத்தை முடித்து வைக்கிறோம்.." என்றார் சோமசுந்தரம்..
'சிம்பிளாவா..?' நரேந்திரனின் புருவங்கள் சுருங்கின..
நரேன் குருப் ஆஃப் கம்பெனிஸின் எம்.டியான அவனுக்கு எளிமையான முறையில் திருமணம் நடப்பதா..?
இதை அவரிடம் அவன் எப்படிச் சொல்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. சோமசுந்தரம் திருமணத்தைப் பற்றிய திட்டத்தை வரையறுத்தார்..
"ஆடம்பரக் கல்யாணம்ங்கிறதில எனக்கு என்னைக்குமே ஒப்புதல் இல்லைங்க.. அந்தப் பணத்தை வைச்சுத் தொழில் ஆரம்பிக்கலாம்.. பேங்கில போட்டு வட்டிப் பணத்தில சாப்பிடலாம்.. இப்படி எத்தனையோ இருக்கு.."
"ஓஹோ.."
"அதனால.. உங்க கல்யாணத்துக்கு முக்கியமான ஆள்களா ஒரு நூறுபேரை மட்டும் கூப்பிடப் போறேன்.."
"அதுசரி.."
"கோவில்ல வைச்சுக் கல்யாணம்.. ரிஜிஸ்டர் ஆபிசில அதை பதிவு பண்ணனும்.. மெஸ்ஸில ஆர்டர் கொடுத்த ஒரு வேளைச் சாப்பாடு.."
"அது யாருக்கு..?"
"கல்யாணத்துக்கு வருகிறவங்களுக்குத்தான்.."
"அவங்க சாப்பாட்டுக்கு இருப்பாங்களா..?"
நரேந்திரன் சிரிக்காமல் கேட்டான்.. ஊர்மிளா அவனை முறைத்தாள். அவளுடைய அப்பாவை அவன் கேலி செய்கிறானா என்று பார்வையால் மிரட்டினாள்.. அவன் முகம் மாறாமல் வருங்கால மாமனாரின் முகத்தையே பருகு.. பருகென்று பார்த்துக் கொண்டிருந்தான்..
"அதிகப் பேர் இருக்க மாட்டாங்க.. கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிப் போயிடுவாங்க.. நமக்கு வாழ்த்துத்தானே முக்கியம்..?"
சோமசுந்தரத்தின் கேள்விக்கு.. "ஆமாமாம்.." என்று பூம்.. பூம் மாட்டைப் போல தலையாட்டியபடி ஊர்மிளாவை கேலிச்சிரிப்புடன் பார்த்தான் நரேந்திரன்.. அவன் விழிகள் கேட்டன..
'இதுக்கு என்ன சொல்ற..?'
அவள் உதட்டை வளைத்துச் சுழித்து அவனுக்கு அழகு காட்டினாள்.. அவன் கண்கள் மின்னின.. அவளுடனான அந்த விளையாட்டை அவன் விரும்பி ரசித்தான்.. அந்தக் காதலர்களின் நயன பாசையையும் உதட்டுச் சுழிப்பையும் கவனிக்காத சோமசுந்தரம் அவர் போக்கில் பேசிக் கொண்டிருந்தார்..
"அதனாலதான் சாப்பாடு மீதமாகி விடக் கூடாதுன்னு அறுபது இலைக்கு மட்டும் ஆர்டர் பண்ணியிருக்கேன்.."
அதற்கும் முகம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்த நரேந்திரன் அடுத்த தனிமைச் சந்திப்பின்போது..
"கெட்டிக்காரர்டி உன் அப்பா.." என்று சிலாகித்தான்.
ஊர்மிளா அவன் முகத்தை சந்தேகப் பார்வையுடன் உற்றுப் பார்த்தாள்..
"என்ன..?" அவன் புருவங்களை உயர்த்திக் கண் சிமிட்டினான்..
"இல்லை.. இது உண்மையான புகழ்ச்சியா.. இல்லை.. வஞ்சப் புகழ்ச்சியான்னு பாக்கறேன்.."
"வஞ்சகப் புகழ்ச்சியா..? சேச்சே.."
நரேந்திரன் அதை மறுத்த விதமே அது வஞ்சகப் புகழ்ச்சிதான் என்பதைக் காட்டிக் கொடுத்தது..
"உங்களை.."
ஊர்மிளா கோபத்துடன் முகம் திருப்பிக் கொண்டாள்.. நரேந்திரன் அவளைச் சமாதானப் படுத்துகிறேன் பேர்வழியென்று அவள் மீது சரிந்து அணைத்து முத்தமிடாத குறையாக உரசித்தீர்த்தான்.
"எதுடா சாக்குன்னு அலைவீங்களே.."
ஊர்மிளா அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு நகர்ந்து உட்கார்ந்தாள்.. அவன் கண்களில் ஏமாற்றம் அப்பியது..
"இப்படி சைவப்பட்சியா இருந்தா எப்படிடீ..?" தாபத்துடன் கேட்டான்..
ஊர்மிளா மறுப்பாக தலையசைத்தாள்.. அவள் கண்களில் காதலுடன் கண்டிப்பு கலந்திருந்தது..
"இந்தப் பட்சி சைவப்பட்சிதான்.. மாத்தனும்னு டிரை பண்ணாதீங்க.."
"எதுவரைக்கும் விரதம் காக்குமாம்..?"
"புரியலை.."
"இல்லை.. உன் கழுத்தில் தாலியைக் கட்டின பின்னாலேயும் சைவப்பட்சியா இருந்தேன்னு வைய்யி.. நான் கொலைகாரனா மாறிருவேன்.."
நரேந்திரனின் சினத்தை ரசித்துச் சிரித்த ஊர்மிளா.. அவன் எதிர்பாராத தருணத்தில் அவன் கன்னத்தில் இதழ் பதித்து விலகினாள்..
"ஏய்ய்ய்.." கண்கள் மின்ன அவளைப் பிடித்து இழுக்க அவன் தாவியபோது அவன் கைகளுக்கு அகப்படாத தொலைவில் தள்ளி நின்று ஒன்றை விரலை உயர்த்தி 'பத்திரம்' என்று எச்சரித்தாள்..
அவளின் அந்த விளையாட்டான எச்சரிக்கையில் அவன் ஈர்க்கப்பட்டான்.. அவள் மீதான காதல் நாளுக்கு நான் அதிகரித்துக் கொண்டே வந்ததில்.. அவளை அடையும் வேட்கை அவனுக்குள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.. ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் உலகத்தைச் சுற்றி வருபவனை திருச்சியை விட்டு நகர விடாமல் ஊர்மிளாவின் காதல் கட்டிப் போட்டு வைத்திருந்தது..
கண்டிப்பை மட்டுமே காட்டும் அவன் விழிகள் காதலைக் காட்டியது அவளிடம்தான்.. சினத்தை வெளிப் படுத்தும் அவன் பார்வை சிருங்காரத்தை வெளிப்படுத்தியது அவளிடம்தான்.. ஊர்மிளாவிடம் மட்டுமே அவன் புருவங்களை உயர்த்தி இறக்கி விளையாடும் உல்லாச விளையாட்டை விளையாடினான்.. அவளிடம் மட்டுமே அவன் குறும்பாக இமை சிமிட்டினான்..
ஊர்மிளாவின் அருகாமையில் இருக்கம்போது நரேந்திரன் வேறொரு உலகில் இருந்தான்.. அவனது அனைத்து அடையாங்களையும் களைந்தவனாக.. ஊர்மிளாவின் காதலனாக மட்டுமே இருந்தான்.. அவனுக்கு அது பிடித்திருந்தது..
"தள்ளி நின்னா பிடிக்க முடியாதா..?"
நரேந்திரன் பாய்ந்தான்.. அவள் விலகி ஓடினாள்.. துரத்திப் பிடித்து அவள் மேல் சரிந்து இருவரும் புல்தரையில் புரண்டு விழுந்தபோது எழுந்த மூச்சிரைப்பை இருவருக்குமே பிடித்திருந்தது..
"அதாவதுடி என் அருமைக் காதலியே..! உன் அப்பாவை நானொன்னும் கேலி பண்ணலே.. அவர் இருக்க வேண்டிய இடம் இதில்லன்னு சொல்றேன்.."
"வேற எந்த இடம்ன்னு நான் கேட்க மாட்டேன்.. வில்லங்கமா பேசறதில நீங்க மன்னனாச்சே.."
"உனக்கு என்மேல நம்பிக்கையே இல்லைடி.."
"என் அப்பா விசயத்தில உங்களை நான் நம்பவே மாட்டேன்.."
"தப்பாவே நினைக்கற பார்த்தியா.. அவர் ரேன்ஜீக்கு அவர் நம்ம கல்யாணத்துக்கு பட்ஜெட் போடக்கூடாது.."
"பின்னே..?"
"இந்தியாவுக்கே பட்ஜெட் போடற நிதியமைச்சரா ஆகணும்.. என்ன ஒரு பட்ஜெட்..! வாவ்..! கல்யாணம்னா இப்படியொரு கல்யாணத்தைத்தான் பண்ணிக்கனும்.."
அவன் கேலியில் ஊர்மிளாவின் முகம் மாறிப் போனது.. அவள் நரேந்திரனைக் கூர்ந்து பார்த்தாள் அவள் பார்வையில் புருவங்கள் சுருங்கின நரேந்திரன்..
"என்னடி..?" என்றான்..
"அப்பாவோட கொள்கையை நீங்க கேலி செய்தா.. அது என்னைக் கேலி செய்வதைப் போல.. ஏன்னா.. நான் அப்பாவின் வளர்ப்பு.. அவரின் கொள்கைகளிலே ஊறினவ.. எனக்கும் ஆடம்பரக் கல்யாணத்தில விருப்பமில்ல.. சிம்பிளா மாலை மாத்தி.. தாலியைக் கட்டி கல்யாணத்தை ரெஜிஸ்ட்டர் பண்ணி வாழ்க்கையை ஆரம்பிக்க ஆடம்பரமாய் ஏன் செலவு பண்ணனும்..?"






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,126,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,43,எண்ணியிருந்தது ஈடேற,245,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,33,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,9,தேரில் வந்த திருமகள்..!,16,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,பனித்திரை,25,புதிதாக ஒரு பூபாளம்..,34,புலர்கின்ற பொழுதில்,11,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,4,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,11,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,விண்ணைத்தாண்டி வந்தாயே..!,5,ஜனனி... ஜெகம் நீ..,1,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -31
அழகான ராட்சசியே -31
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye31.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye31.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy