அழகான ராட்சசியே -30

30 பார்வையிலே சாமரத்தை பரிவாக விசிறி விட்ட அழகான ராட்சசி நீ... அணைக்கரையில் நடந்தபடி கூடவந்த நரேந்திரனைப் பார்த்தாள் ஊர்மிளா....


30
பார்வையிலே சாமரத்தை
பரிவாக விசிறி விட்ட
அழகான ராட்சசி நீ...


அணைக்கரையில் நடந்தபடி கூடவந்த நரேந்திரனைப் பார்த்தாள் ஊர்மிளா.. அவனது ஆறடி உயரத்தில் அவள் மனம் சிக்கியது.. அவள் கவனிப்பதை உணர்ந்தவனின் புருவங்கள் உல்லாசமாக உயர்ந்து இறங்கின.. அதில் வெகுவாக வசீகரிக்கப் பட்டாள் ஊர்மிளா.. அவளது பார்வை அவன் முகத்தில் படபடப்புடன் நிலைத்தது..
நரேந்திரன் நின்று விட்டான்.. ஊர்மிளாவின் பார்வை அவனை வசியம் பண்ணியது.. அவளை முதன் முதலாய் உச்சிப் பிள்ளையார் கோவிலில் பார்த்தபோது அவனை கவர்ந்து இழுத்தது அவளின் அந்தப் பார்வைதான்..
ஊர்மிளாவின் பார்வை நேர் கொண்டதாக இருந்தது.. வெட்கத்துடன் பார்க்கும் ஓரவிழியின் கள்ளப் பார்வையிலும் அவள் ஒரு நேர்த்தியயை கடை பிடித்தாள்.. அவளது வட்ட முகமும்.. நீண்ட கூந்தலும்.. பணத்தைப் பெரிதாக எண்ணாத குணமும்.. காணக் கிடைக்காதது என்று அவனுக்குத் தோன்றியது..
அவனை அவளுக்குப் பிடித்திருந்ததை உணர்ந்தவனுக்குள் பரவிய இதத்தை அவன் மட்டுமே உணர்வான்..
ஊர்மிளாவுக்கு அவன் யாரென்று தெரியாது.. அவளுடன் காவேரிக்கரையில்.. கொள்ளிடப் பெருக்கை ரசித்தபடி இணைந்து நடந்து கொண்டிருப்பவன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனான 'தி கிரேட் இன்டஸ்ட்ரியலிஸ்ட் நரேந்திரன்..' என்பதை அவள் அறிய மாட்டாள்..
ஆனாலும் அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது.. அவனிடம் அவள் மயங்கினாள்.. அந்த மயக்கத்தை பிரதிபலித்த அவள் விழிகளில் நரேந்திரன் மயங்கிப் போனான்..
அதுவரை நரேந்திரனிடம் மயங்கிப் போனதாக பாவனை காட்டிய பெண்கள் அனைவரும் அவனுடைய கோடிஸ்வர இமேஜினால்தான் மயங்கிப் போனார்கள்.. முதன் முதலாக அவனிடம் அவனுக்காக ஒருத்தி மயங்கி நிற்கிறாள்.. அதில் அவனது ஆண்மை எல்லைகடந்த கர்வத்தை கொண்டது.. அவளது மயங்கிப் போன பார்வை அவனைக் கவர்ந்து இழுத்தது..
அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.. அவனது தோற்றமும்.. காதலை வெளிப்படுத்திய கம்பீரமான பார்வையும்.. வசீகரமான பேச்சும் அவளைக் கவர்ந்து இழுத்தன.. அவனைத் தேடித் துழாவிய அவளின் அந்தப் பார்வைக்கு தன் சொத்து முழுவதையும் எழுதிக் கொடுத்து விட அவன் தயாராக இருந்தான்..
அந்த அளவுக்கு அவனை வசியம் பண்ணியிருந்தால் அந்த வசியக்காரி..
"உன் அப்பாவுக்கு சிரித்துப் பேசவே தெரியாதா..?"
நடந்து கொண்டிருந்த நரேந்திரன் கேட்டான்.. அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்கள் மனதளவில் நெருங்கி விட்டார்கள்.. ஆனாலும் அவளிடம் அவன் தான் யார் என்ற முழு விவரத்தைச் சொல்லாமலே நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தான்.. அவன் அதைச் சொல்ல முயன்ற ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு குறுக்கீடு வந்து அவன் சொல்ல நினைப்பதை சொல்ல விடாமல் செய்து விடும்..
அன்று அவன் யாரென்பதை சொல்லி விடும் முடிவோடுதான் அவன் அவளை கொள்ளிடக்கரைக்கு வரச் சொல்லியிருந்தான்.. அவன் பெங்களூருக்குத் திரும்ப வேண்டியிருந்தது.. ஊர்மிளாவுக்காக திருச்சியிலேயே அவன் தங்கி விட்டதில் அவனுக்காக காத்திருந்த அலுவல்கள் தேங்கி நின்றிருந்தன.. அவன் போய் கையெழுத்திட்டால்தான் அவை நகரும் என்ற நிலைமையில் அவன் உண்மையை உடைத்துச் சொல்ல ஊர்மிளாவை வரச் சொல்லியிருந்தான்..
'நான் நரேந்திரன்.. தி கிரேட் இன்டர்ஸ்ட்ரியலிஸ்ட்.. நரேன் குருப் ஆஃப் கம்பெனிஸின் எம்.டி... பெங்களூரில் என் மாளிகை இருக்கிறது.. நான் உலகம் சுற்றும் வாலிபன்.. என் ஒவ்வொரு நொடியும் விலை மதிப்பில்லாதது.. உன் ஒருத்திக்காக இந்தத் திருச்சியில் தேங்கி நிற்கிறேன்..'
இதைச் சொல்லத்தான் அவன் வாயெடுத்தான்.. அதைச் சொல்வதற்கான பேச்சின் ஆரம்பமாக சோம சுந்தரத்தின் சிரிக்காத முகத்தைப் பற்றி அவன் கேட்டு வைக்க.. அதற்கு அவள் சொல்லிய பதிலில் அவன் சொல்ல நினைத்ததை சொல்ல முடியாமலே போய் விட்டது..
"அவருக்கு கொள்கைப் பிடிப்பு அதிகம்.. எப்பப் பார்த்தாலும் படித்துக்கிட்டே இருப்பார்.. உலக இலக்கியங்களைப் பற்றிப் பேசிக்கிட்டே இருப்பார்.. அதனாலே சீரியஸா இருக்கிறதைப் போல தோணும்.."
"கொள்கைப் பிடிப்பு இருக்க வேண்டியதுதான்.. அதுக்காக எப்பப் பார்த்தாலும்.. கண் சிவந்தால்.. மண் சிவக்கும்ங்கிற ரீதியில பேசிக்கிட்டே இருக்கனுமா..? புரட்சி பண்ண வேண்டிய தேவையே இப்ப இல்லையே.."
"அப்படின்னு யார் சொன்னது..? அப்பா சார்ந்திருக்கிற அமைப்பில தினமும் ஒரு போராட்டம் நடக்கும்.. அப்பா முதல் ஆளா அதில் போய் கலந்துக்குவார்.."
"எனக்கென்னவோ இதெல்லாம் தேவையில்லாத ஒன்னுன்னு தோணுது.. போராட்டம் எதுக்கு..? அமைதியா வாழ்க்கையை வாழக்கூடாதா..?"
"அப்பா அதை ஏத்துக்க மாட்டார்.. முதலாளிகள் தான் யாரைப் பத்தியும் கவலைப்படாம சுயநலப் பிறவிகளா.. சுரண்டல் பேர்வழிகளா இருப்பாங்க.. தொழிலாளிகள் அப்படி இருக்க முடியுமான்னு கேட்பார்.."
"போச்சுடா.. உங்கப்பாவுக்கு முதலாளிகன்னா பிடிக்காதா..?"
"என்ன இப்படிக் கேட்டுட்டிங்க..?"
ஊர்மிளாவின் ஆச்சரியமான வார்த்தைகளில் அப்படி அவன் என்ன கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டான் என்று யோசித்தான் நரேந்திரன்.. ஒரு மண்ணும் புரியாததினால்..
"என்னத்தைக் கேட்டுட்டேன்..?" என்று அவளிடமே கேட்டான்..
"முதலாளித்துவத்தோட முதல் எதிரியே அப்பாதான்.. அவருக்கு பணக்காரங்களைப் பிடிக்காது.. அவங்களிடம் நேர்மை இருக்காது.. மனித நேயம் இருக்காதும்பார்.."
இலகுவாகச் சொல்லியபடி படித்துறையில் இறங்கி.. ஓடும் காவிரியாற்றில் கால் நனைத்தவளைப் பார்த்தபடி அசையாமல் நின்று விட்டான் நரேந்திரன்..
'நான் நரேந்திரன்..' என்ற சுய அறிமுகத்தைச் சொல்ல ஆரம்பித்த அவனது வார்த்தைகள் தொண்டைக் குழியிலேயே சிக்கி விட்டன..
'இது என்னடா புது சிக்கலா இருக்கு..' அவன் புருவங்கள் முடிச்சிட்டன..
"என்ன.. அங்கேயே நின்னுட்டிங்க..?"
படித்துறையின் ஓரமாக கட்டப் பட்டிருந்த கைப்பிடி சுவரில் அமர்ந்து நதிநீரில் கால்களை அளைந்து விளையாடியபடி நரேந்திரனை அழைத்தாள் ஊர்மிளா..
"ஊம்..? வர்றேன்.."
இறங்கி வந்து அவளுக்கு எதிரேயிருந்த கைப்பிடி சுவரில் உட்கார்ந்தவனின் மனம் எப்படி தன்னைப் பற்றிய விவரங்களை அவளிடம் சொல்வதென அல்லாடியது..
"இப்ப என்ன.. திடிர்ன்னு அப்பாவைப் பத்தி விசாரனை..?"
நீண்டிருந்த பின்னலைத் தூக்கி முன்பக்கமாக போட்டபடி ஒயிலாக அவனைப் பார்த்துக் கேட்டாள் ஊர்மிளா.. நரேந்திரனை அவளின் அந்தத் தோற்றம் வசீகரித்தது.. அழகோவியமாக அவன் முன்னால் அமர்ந்திருந்தவளை எக்காரணம் கொண்டும் கைநழுவ விட அவனுக்கு மனம் வரவில்லை..
"சும்மாதான் கேட்டேன்.. உன் அப்பாதான் முதலாளித்துவத்திற்கு முதல் எதிரி..! நீ எப்படி..?"
இயல்பாக கேட்பதைப் போல அவன் கேட்டான்.. அதற்கான அவளின் பதில் அவனுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறியாத அறியாமையுடன் அவள் மெல்லச் சிரித்தாள்..
"அப்பா எப்படியோ.. அப்படித்தான் நானும்.."
ஒருவரியில் வெளிப்பட்ட அவளின் பதிலில் நரேந்திரனுக்கு தலைவேதனை வந்து விட்டது..
சோமசுந்தரத்தைப் போலவே அவர் மகளும் இருந்து வைத்தால் முதலாளியான அவன் எப்படி அவனின் காதலை அவளிடம் சொல்வான்..?
"சின்ன வயதிலே இருந்தே அப்பாவோட கொள்கைப் பேச்சுக்களை கேட்டு வளர்ந்திருக்கேன்.. அவர் சொல்றதிலயும் ஒரு நியாயம் இருக்குன்னு எனக்குத் தோணிருச்சு.. பணக்காரங்களிடமிருந்து தள்ளித்தான் நிற்பேன்... அதுக்கேத்ததைப் போல... நான் சந்திச்ச பணக்கார ஸ்கூல் பிரண்ட்ஸீம் சரி.. காலேஜ் பிரண்ட்ஸீம் சரி.. மட்டக் கேவலமான குணத்தோடதான் இருந்து வைச்சாங்க.. அவர்களின் அகம்பாவமும்.. ஆணவமும்.. அப்பப்பா..! இப்படிப்பட்டவங்களை என் அப்பா வெறுக்கிறதில தப்பொன்னுமில்லையே.."
"பணக்காரங்க எல்லோருமே திமிர் பிடிச்சவங்கன்னு சொல்லி விட முடியாது ஊர்மிளா.."
"இருக்கலாம்.. ஆனா.. நான் மீட் பண்ணின பணக்கார பிரண்ட்ஸ் அப்படித்தானே இருந்தாங்க..?"
"அவங்களை வைச்சு மத்தவங்க குணத்தை தீர்மானிக்கலாமா..?"
"கூடாதுதான்.. ஆனா.. பேஸிக்கலா.. பணக்காரங்க கிட்ட ஒரு தலைக்கனம் இருக்கத்தானே செய்யுது..? ஏழைகள்ன்னா அவங்க இளப்பமாத்தானே பாக்கிறாங்க..?"
"ஸோ..?"
"எனக்குப் பணக்காரங்களைப் பிடிக்காது.."
முடிவாக சொல்லி விட்டவளிடம் தன்னைப் பற்றிய முழு விவரத்தைச் சொல்லும் எண்ணத்தினைக் கை விட்டான் நரேந்திரன்..
"எனக்கு உங்களைப் பத்தித் தெரிஞ்சாகனும்.. எதுவும் தெரியாம பழகற இந்தப் பழக்கத்தில் அர்த்தமில்லாம போய் விடக் கூடாது.. எங்கப்பா அம்மா கிட்ட நான் இதுவரைக்கும் எதையும் மறைச்சதில்ல.. நீங்க காதல் சொன்னதை மட்டும்தான் மறைச்சிருக்கேன்..
அது என் மனசை பாரமா அழுத்திக்கிட்டு இருக்கு.. குற்ற உணர்ச்சி மனசை அறுக்குது... இதில இருந்து நான் மீளனும்னா அப்பாம்மாகிட்ட உங்களைப் பத்திச் சொல்லியாகனும்.. அதுக்கு முதல்ல உங்களைப் பத்தி எனக்குத் தெரிஞ்சாகனும்.."
ஊர்மிளாவின் விழிகள் உயர்ந்து அவனைப் பார்த்தன.. அவன் முகத்தில் பதிந்த அவள் பார்வையில்.. என்ன விவரத்தைச் சொல்வது என்று அவன் திகைத்தான்.. அவனைப் பற்றிய உண்மையான விவரத்தை சொன்னால் அந்த நொடியிலேயே அவனை விட்டு அவள் பிரிந்து போய் விடுவாள் என்று தோன்றியதால்.. அவன் பொய் சொன்னான்..
"நான் சாதாரண மில் தொழிலாளி.. ஓசுரில வேலை பாக்கறேன்.. என் பிரண்டோட கல்யாணத்துக்கு இங்கே வந்தேன்.. திருச்சியில வேற ஒரு நல்ல வேலை இருக்கிறதா அவன் சொன்னான்.. அதுக்கு டிரை பண்ணலாம்ன்னுதான் இத்தனை நாளா இங்கே இருக்கிறேன்.. வேலை தேடி வந்த இடத்தில உன்னைப் பார்த்தேன்.. மனசில காதல் வந்திருச்சு.. மறைக்காம உன்னிடம் சொல்லிட்டேன் ஊர்மிளா.."
"அம்மா.. அப்பா..?"
"உயிரோடு இல்லை.."
அவனின் வார்த்தைகளில் ஊர்மிளாவின் மனம் கசிந்து விட்டது.. அவளுடைய காதலன் தாய்.. தந்தை இல்லாதவனா..?
"நான் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன்ங் கிறதினால நீ என்னை வெறுத்திருவியா ஊர்மிளா..?"
வரவழைத்துக் கொண்ட உருக்கத்துடன் கேட்ட நரேந்திரனுக்கு சிரிப்புத்தான் வந்தது.. அதை அடக்கிக் கொண்டு பாவமாய் முகத்தை வைத்துக் கொள்ள அவன் படாத பாடு பட்டான்..
"நான் மட்டும் யாராம்..? நானும் பாட்டாளி வர்க்கம் தான்.." என்று அவன் கை பிடித்துக் கொண்ட ஊர்மிளாவிடம் அவன் யார் என்பதைச் சொல்லாமல் மறைத்து விட்டான் நரேந்திரன்..
"கையிருக்கு.. காலிருக்கு.. உழைச்சு வாழ உடலில் தெம்பிருக்கு.. மனசில நேர்மையிருக்கு.. இதுதான் மனுசனுக்கு சொத்து.. இதுக்கு மேலே என்ன வேணும்..?"
மேடையில்லாமல் முழங்கினார் சோமசுந்தரம்..
"எனக்குப் படிப்பும் இருக்குதுங்க.." பவ்யமாய் நரேந்திரன் சொன்னான்..
"கல்விதான் பெரிய சொத்து.. அதுக்கப்புறம் என்ன கவலை..? என் மகளை முதலாளிக்குக் கட்டிக் கொடுக்கிறதுன்னாத்தான் நான் யோசிக்கனும்.. என்னைப் போல ஒரு பாட்டாளிக்குக் கட்டிக் கொடுக்க நான் ஏன் யோசிக்கனும்..?" மீசையை முறுக்கினார் சோமசுந்தரம்..
'இவர் பாட்டாளியா..?'
திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த அவருடைய சொந்த வீட்டையும்.. புத்தகக் கடையையும் ஜாடையாக நோட்டமிட்டான் நரேந்திரன்.. அது போக பக்கத்திலிருந்த கிராமத்தில் சோமசுந்தரத்திற்கு.. வீடு.. வயல்.. தோப்பு.. துரவு என்று ஏகப்பட்ட சொத்து இருக்கிறதாம்.. அவற்றைக் குத்தகைக்கு விட்டிருப்பதாக ஊர்மிளா சொல்லியிருந்தாள்..
'எந்தப் பாட்டாளி.. இப்படி நில புலன்களோடு.. டவுனில் சொந்தவீடு.. கடைன்னு சொகுசு வாழ்க்கை வாழ்கிறான்..?'
கேட்கத்தான் நினைத்தான் நரேந்திரன்.. அந்த ஒரு கேள்வியைக் கேட்பதினால் அவனுடைய காதலுக்கே மோசம் வந்து விடும் அபாயம் இருந்ததினால் வாயை மூடிக் கொண்டான்..
முந்தானையை இழுத்துப் போர்த்தியபடி.. அவன் முன்னே வராமல் சமையலறையின் சுவர் மறைவில் பாதி உருவம் தெரியும்படி ஒளிந்து நின்றிருந்த பூங்குழலிதான் அவனுடைய குடும்பத்தைப் பற்றித் துருவித் துருவி விவரம் கேட்டாள்..
"அப்பா அம்மா இல்லைங்கறிங்க.. அவங்க பக்கத்து சொந்த பந்தமும் இல்லாமலா போயிருச்சு..?"
அவளின் சாதுர்யமான கேள்விக்கு.. அவன்..
"ஆமாங்க.." என்ற பதிலைக் கொடுத்தான்..
"அது எப்படி..?"
"அது அப்படித்தாங்க.. என் அப்பாவும்.. அம்மாவும் காதல் திருமணம் பண்ணிக்கிட்டதாலே இரண்டு
பக்க சொந்தங்களும் அவங்களைத் தள்ளி வைச்சிட்டாங்களாம்.."
வாய்க்கு வந்ததை நரேந்திரன் சொல்லிக் கொண்டிருக்க..
"த்ச்சு.. த்ச்சு.." என்ற சப்தம் கேட்டது..
"இங்கே பல்லி இருக்கா..?" நரேந்திரன் அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தான்..
"ஊர்மிளாவின் அப்பாதான் இருக்கார்.." எரிச்சலுடன் சொன்னாள் பூங்குழலி..
சோமசுந்தரம்தான் அப்படியொரு அனுதாப ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தார்..
'இவர் அனுதாபப்படுகிற அளவுக்கா என் நிலைமை ஆகிவிட்டது..' நரேந்திரன் நொந்து போய் விட்டான்..
எப்படியிருந்த நரேன் குருப் ஆஃப் கம்பெனிஸின் எம்.டியான நரேந்திரன் இப்படி சோமசுந்தரம் 'த்ச்சு.. த்ச்சு..' என்று அனுதாபப் படும் அளவிற்கு ஆகி விட்டானே..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,15,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,14,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -30
அழகான ராட்சசியே -30
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye30.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye30.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy