அழகான ராட்சசியே -29

29 ஓர்நாளின் சிறு மணித்துளியில் ஓர் பார்வையில் எனை வீழ்த்திவிட்ட அழகான ராட்சசி நீ.... அந்த நாளை அவர்கள் வீணாக்கவில்லை.. படபடத்த...


29
ஓர்நாளின் சிறு மணித்துளியில்
ஓர் பார்வையில் எனை வீழ்த்திவிட்ட
அழகான ராட்சசி நீ....

அந்த நாளை அவர்கள் வீணாக்கவில்லை.. படபடத்த அவளின் பார்வையும்.. விலகாத அவனது பார்வையும்.. கிடைத்திருந்த சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை..
அவளின் நாணப் பார்வை நொடிக்கொரு முறை அவன் மீது படிந்து.. படிந்து விலகியது.. அவனது ஆண்மைப் பார்வையோ அசையாமல் அவள்மீதே நிலை கொண்டிருந்தது.. அந்த அசாத்திய தைரியத்தில் அவள் மேலும் ஈர்க்கப் ப்டடாள்..
'கொஞ்சமாது அச்சப்படறானான்னு பாரு..' மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்..
"யாருடி அது..?" அவள்தோழி வீணா கேட்டாள்..
"யாரைச் சொல்ற..?" அறியாதவளைப் போல இமை கொட்டினாள் ஊர்மிளா..
"ஏய்.. ஏய்.."
ஒற்றைவிரலை உயர்த்தி வீணா சிரித்து மிரட்டியதில் மற்ற தோழிகளுக்கும் ஆர்வம் வந்து விட்டது..
"என்னடி.. என்னடி.."
கூட்டுக் குரல்கள் வீணாவை முற்றுகையிட அவள் நரேந்திரனின் பக்கம் கை காட்டி விட்டாள்.. திரும்பிப் பார்த்தவர்கள் நரேந்திரனின் பார்வையைக் கண்டதும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.. அவர்களின் ஓட்டு மொத்த "குபீர்" சிரிப்பு அடிக்கடி கேட்டது.. அப்போதெல்லாம் ஊர்மிளா முகம் சிவந்து.. தோழிகளை கடிந்து கொண்டதில் அவர்களின் கேலி... அவனையும்.. ஊர்மிளாவையும் இணைத்தாக இருந்திருக்கலாம் என்று நரேந்திரன் யூகித்தான்..
ஊர்மிளாவின் படபடத்த பட்டாம்பூச்சி இமைகள் பேசிய கதையில் அவனுக்கு உலகமே மறந்து போனது.. சுற்றுகின்ற பூமியில் மணித்துளிகள் நிற்காமல் நகர்ந்து கொண்டிருக்கும் என்ற உண்மையை மறந்து போனவனாக அவன் அவளையே பார்க்க.. அதில் வெட்கிப் போனவளாக. அவள் நொடிக்கொரு முறை அவனைப் பார்க்க.. இந்த நாடகத்தை அவளின் தோழிகள் பார்க்க என்று இருந்ததில் நேரம் நகர்ந்து போனதை யாரும் கவனிக்கவில்லை.. யதேச்சையாக பக்கத்தில் பார்த்த தோழிகள்..
"அடிப்பாவி.." என்று தலையில் கை வைத்தார்கள்..
"என்னடி..?" ஊர்மிளா புரியாமல் விழித்தாள்..
"உன்னை பார்த்துக்கிட்டே... பக்கத்தில இருந்தவர்களை பாக்காம போனோம் பாரு.."
"அவங்களை ஏண்டி நீங்க பார்க்கனும்.."
"பார்த்தாத்தானே மண்டபத்தில ஆள் இருக்காங்களா.. இல்லையாங்கிறதை கண்டுபிடிக்க முடியும்..?"
"என்னது..?"
"என்னத்தை 'நொன்னது..?' இங்கே பாரு.. மண்டபத்திலே முக்கால்வாசி ஜனம் இல்லே.. மீதமிருக்கிற கால்வாசி ஜனமும் மாப்பிள்ளை வீடு.. பொண்ணு வீடா இருப்பாங்க.. எழுந்திருங்கடி.. சாப்பிடப் போகலாம்.."
அங்கேயும் நரேந்திரன் ஊர்மிளாவுக்கு எதிர் வரிசையில் அமர்ந்து வைத்தான்.. ஊடுறுவும் அவன் பார்வையில் ஊர்மிளா அவள் இலையில் கை வைப்பதாக நினைத்துக்கொண்டு பக்கத்து இலையில் கை வைத்தாள்.. அந்தத் தோழி ஊர்மிளாவின் கையைத் தட்டி விட்டு..
"இலையைப் பார்த்து சாப்பிடுடி.." என்று அதட்டி வைத்தாள்..
'இவனாலே..' ஊர்மிளா லஜ்ஜையுடன் அவனைப் பார்க்கக் கூடாது என்ற சங்கல்பத்துடன் தலை கவிழ்ந்து இலையில் கவனமானாள்..
அவள் இலையில் ரவா கேசரி விழுந்தது..
"நான் கேட்கலையே.." திகைப்புடன் நிமிர்ந்தாள்..
"உங்க மாமா மகன்தான் உங்க இலையில ரவா கேசரியைப் போடச் சொன்னாருங்க.." என்றான் பரிமாறியவன்..
"மாமா மகனா..?" ஊர்மிளா திருதிருத்தாள்..
அவளுக்கு எந்த மாமன்மகன் இருக்கிறான்..? அவளுடைய அம்மா பெற்றோருக்கு ஒற்றைப் பெண்.. கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை.. அவளைப் போலவே ஊர்மிளாவும் ஒற்றைப் பெண்ணாய் பிறந்து விட்டாள் என்று அவளுடைய உறவினர்கள் சொல்வார்கள்.. மற்றபடி ஊர்மிளாவின் ஒன்று விட்ட மாமன் மகன்களெல்லாம் திருமணமாகி குழந்தை.. குட்டியுடன் இருப்பவர்கள்.. இதில் அந்தத் திருமண மண்டபத்திற்கு எந்த மாமன் மகன் வந்திருக்கக் கூடும்..?
"என்னாங்க.. இந்த முழி முழிக்கறிங்க.. அந்தா இருக்காரு பாருங்க.. அவருதான் உங்க மாமன் மகன்.."
பரிமாறுபவன் சுட்டிக் காட்டிய திசையில் நரேந்திரன் கண்சிமிட்டினான்.. ஊர்மிளாவிற்கு குப்பென்று வியர்த்துப் போனது..
"செமத்தியான மாமன் மகன்டி.."
வீணா கட்டை விரலையும்.. ஆள்காட்டி விரலையும் இணைத்து வளையமாக்கி.. 'தூள்' என்ற முத்திரையை காட்டினாள்..
"பாருடி.. இவன் எனக்கு மாமன் மகன்னு சொல்லியிருக்கிறதை.." கோபப்படாமல் கோபம் போலச் சொன்னாள் ஊர்மிளா..
"அட.. அட.. அடா.." வீணா மெச்சிப் போனாள்..
"என்ன வீணா..?"
"உனக்கு இதில ரொம்ப கோபம் போல.."
"இருக்காதா பின்னே.. எவ்வளவு தைரியமிருந்தா அவன் இப்படிச் சொல்லி விடுவான்..?"
"இப்ப.. நீ அவன் தைரியத்தை மெச்சறயா.. இல்ல.. கோபப்படறியா..?"
வீணாவின் கேலிக்குரலில் அகப்பட்டுக் கொண்ட ஊர்மிளா..
"என்.. என்ன..? கோபம்தான் படறேன்.." என்று சமாளித்தாள்..
"தெரியுது.." நம்பாத குரலில் சொன்ன வீணா..
"யாருடி அவன்..?" என்று ஆழ்ந்த குரலில் கேட்டாள்..
'யார் அவன்..?'
ஒரு இனிய கனவு கலைந்ததைப் போல உணர்ந்தாள் ஊர்மிளா..
அவன் யாரோ.. எவரோ.. அவளுக்கு எதுவும் தெரியாது.. அன்று மாலையில் நடந்த இரு சந்திப்புகளை மட்டுமே வைத்து அவனது பார்வையின் சுழலில் ஊர்மிளா மாட்டிக் கொள்வாளா..? அவ்வளவு பலவீனமான மனதா அவள் மனது..?
அவனிடமிருந்த பார்வையை வலுக்கட்டாயமாக இலையின்மீது திருப்பிய ஊர்மிளா அதற்குப் பின்னால் அவனை நிமிர்ந்துபார்க்க முனையவில்லை.. துடிக்கும் மனதிற்கு கடிவாளமிட முயன்றபடி அவனைத் திரும்பிப் பார்க்காமல் தோழிகளுடன் கிளம்பினாள்.. வாசலில் இருந்த ஆட்டோவில் ஏறியபோது அவளையும் அறியாமல் திரும்பிப் பார்த்து விட்டாள்..
அவளது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.. அங்கே.. துளைக்கும் பார்வையுடன் நரேந்திரன் நின்று கொண்டிருந்தான்.. அவளது ஒதுக்கத்தைக் கண்டு கொள்ளாமல் அவன் பின் தொடர்ந்து வந்திருந்ததில் அவளது மனம் கசிந்தது.. அவளது பார்வையைக் கண்டதும் லேசான புன்முறுவலுடன் அவன் தலையை அசைத்தான்.. பதிலுக்கு தன்னையும் அறியாமல் தலை அசைத்த ஊர்மிளா ஆட்டோவில் ஏறிவிட்டாள்.. ஏனோ அவள் மனதில் துக்கம் பொங்கியது..
முகவரியற்ற தபால்கள் சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்து விடுமா..?
அதுபோலதான் இந்தக் கதையும் என்று நினைத்தபடி உறங்கிப் போனாள் ஊர்மிளா..
மறுநாள் திருமண மண்டபத்தில் அவளைத் தேடி ஏமாந்து போனான் நரேந்திரன்.. அவனுக்குத் தெரியாது.. திருமணத்திற்கு வர முடியாது என்பதற்காகத்தான்
முதல் நாளின் மாலையில் ரிசப்சனில் ஊர்மிளா கலந்து கொள்ள வந்திருந்தாள் என்பது.. மணமகளும் அவளும் பள்ளியில் ஒன்றாகப் படித்த தோழிகள்.. பள்ளிப்பருவம் முடிந்தவுடன் ஆளுக்கொரு திசையில் பிரிந்து போய் விட்டார்கள்.. ஆசிரியை வேலையில் விருப்பமுள்ள ஊர்மிளா பட்டப் படிப்பில் சேர்ந்தாள்.. மணப்பெண் மாளவிகாவோ என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தாள்.. திசைமாறிப் பறந்தாலும் பள்ளிப் பருவத்தை மறந்துவிட முடியுமா..?
மறக்காத மாளவிகா அழைப்பு விடுக்க.. ஊர்மிளாவும் மற்ற பள்ளிப்பருவ தோழிகளும் சென்று சேர்ந்து அந்தத் திருமண வரவேற்பிற்குப் போய் வந்தார்கள்..
அந்தத் திருமணத்திற்கு அடுத்த நாளும் போக முடியாத சூழல் ஊர்மிளாவுக்கு.. அவள் எம்.எஸ்ஸி முடித்தவுடன் பி.எட் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள்.. மறுநாள் கல்லூரி இருந்த நிலையில் ஊர்மிளா கல்லூரிக்குக் கிளம்பிப் போய் விட்டாள்.. இரண்டு நாள்கள் வரை நரேந்திரனின் முகம் அவள் மனதில் நிலைத்திருந்தது.. மெல்ல அது புகைப்படலமாக மறையத் தொடங்கியபோது ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானின் சன்னதியில் மீண்டும் அவனைப் பார்த்தாள்..
அவளையே பார்த்தபடி குங்குமத்தை வாங்கிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் அவள் விழிகள் பிரகாசித்தன.. அதைக் கண்கொட்டாமல் பார்த்தபடி
அவன் அவளைப் பின் தொடர்ந்ததில் அவளது மனம் படபடத்தது..
முகவரியில்லாத கடிதம் எப்படி வந்து சேர்ந்தது..?
அவளுக்குத் தலைகால் புரியவில்லை.. அவளுடன் அவளது அம்மாவும் வந்திருந்ததில் தனது ஆர்வத்தை வெளிக் காட்டாமல் அடக்கிக் கொண்டாள்.. மனதின் துள்ளலை மறைத்தபடி அவனை நொடிக்கொரு முறை பார்த்த ஊர்மிளாவின் விழிகள் அந்தத் துள்ளலை மறைக்காமல் அப்பட்டமாக பிரதிபலித்து விட்டன..
தாயுடன் பேசியபடி அவன் பின்தொடர்கிறானா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள அவள் அடிக்கடி திரும்பிப் பார்த்ததில்..
"யாரைப் பார்க்கிற..?" என்று பூங்குழலியும் திரும்பிப் பார்த்துவிட்டாள்..
நரேந்திரன் பக்கத்தில் வந்த வயோதிகருடன் இயல்பாக பேச்சுக் கொடுத்தபடி எங்கோ பார்த்ததில் ஊர்மிளாவின் படபடத்த மனம் கட்டுக்குள் வந்தது..
'தப்பிக்க வைச்சுட்டான்..'
கண்களால் அவனைப் பாராட்டியபடியே..
"யாரைச் சொல்கிறிங்கம்மா..?" என்று அவள் கேட்டு வைத்தாள்..
அன்றிரவு தூங்கும்போது அடுத்து அவனைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமே அவள் மனதில் எழவில்லை.. நிச்சயமாக அவன் அவளைத் தேடி வருவான் என்று அவளது உள்மனது சொல்லியது..
அவனும் தேடி வந்தான்.. ஒரு மழை நாளில் மாலை நேரத்தில் புத்தகக் கடையில் சோமசுந்தரத்துடன் பேசியபடி ஊர்மிளா டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவன் கடைக்குள் பிரவேசித்தான்..
அந்த மழைநேர மாலையில் புத்தகக்கடையைத் தேடி யார் வரப்போகிறார்கள் என்ற அசட்டையுடன் சோம சுந்தரத்திடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஊர்மிளாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.. அவனை அந்த நேரத்தில் அங்கே அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவளது மிரண்ட விழிகள் சொல்லின...
அவனோ அவளை 'யார் நீ..' என்ற பார்வையை பார்த்து வைத்து உயிர்ப்பித்து விட்டான்..
'இவன் இருக்கானே..' அவள் நிம்மதியாக மூச்சு விட்டபடி செல்ல கோபத்துடன் ரகசியமாக அவனை முறைத்தாள்..
"வாங்க சார்.. என்ன வேணும்..?" சோமசுந்தரம் அவனை வரவேற்றார்..
அவன் எதுவும் சொல்லாமல் மௌனபார்வை பார்த்தான்.. அந்தப் பார்வைக்கு என்ன பொருள் என்று சோமசுந்தரம் யோசிக்கும்போதே.. கடைவாசலில் ஒரு பொடியன் வந்து..
"மாமா.. உங்களை மாமி கூப்பிட்டாங்க.." என்று தகவல் சொல்லிவிட்டுப் போய் விட்டான்..
"ஒரு நிமிசம்.."
சோமசுந்தரம் வீட்டைப்பார்த்து நடையைக் கட்டிவிட.. நரேந்திரன் ஊர்மிளாவிடம் கேலிக் குரலில் கேட்டான்..
"புத்தகக் கடைக்கு வந்திருக்கிறவன்கிட்ட என்ன வேணும்ன்னு இவர் கேட்கிறாரே.. ஒருகிலோ சர்க்கரை வேணும்ன்னு கேட்டா என்ன செய்வாரு..?"
"எதிர்க்கால இருக்கிற மளிகைக் கடையில போய் வாங்கிக்கங்கன்னு சொல்லி கையைக் காட்டி விடுவாரு.." என்றாள் ஊர்மிளா..
"கெட்டிக்காரர்தான்.."
நரேந்திரன் அவளை ஏற இறங்க பார்த்த பார்வை அவளது கெட்டிக்காரத்தனத்தை மெச்சுவதாக இருந்தது..
"என்னோட அப்பா.. அப்படித்தான் இருப்பார்.."
பேச்சுவாக்கில் சொல்வதைப் போல அவளுடைய அப்பாவை அவள் அறிமுகப்படுத்தி விட்டதில் அவன் விழிகள் அவளை மெச்சின..
"பெயர் என்ன..?" விசாரித்தான்..
"அதைத்தான் பவிக்குட்டிய கைக்குள்ள போட்டுக் கிட்டு கேட்டுத் தெரிஞ்சாச்சே.." என்றாள் ஊர்மிளா..
"உங்க பெயரைக் கேட்கலை.."
"பின்னே..?"
"உங்க அப்பா பெயரைக் கேட்டேன்.."
"சோமசுந்தரம்.."
"ஈஸிட்..? அவரோட பெயருக்கும்.. இங்கேயிருக்கிற புத்தகங்களுக்கும் சம்பந்தமேயில்லை.. இவரோட பெயருக்கு இவர் தேவாரமும்.. திருவாசகமும் இல்ல விற்கனும்..?"
கடையிலிருந்த இலக்கியப் புத்தகங்களை பார்வையிட்டபடி சொன்னான்.. பெரும்பாலான இலக்கியங்கள் பொதுவுடமையை வலியுறுத்துவனவாக இருந்தன..
"அவரோட பெயரை என் தாத்தா வைச்சாரு.. இந்த புத்தக் கடையை என் அப்பா வைச்சாரு.." என்றாள் ஊர்மிளா..
அவளுடைய அப்பாவைப் பற்றிப் பேசும்போது அவள் முகத்திலும்.. குரலிலும்.. பிரியமும்.. பெருமையும் கலந்து பொங்குவதைக் கவனித்தான் நரேந்திரன்..
"அப்பான்னா ரொம்பப் பிடிக்குமோ..?" என்று கேட்டான்..
"அப்பான்னா எந்தப் புள்ளைக்கும் பிடிக்கத்தான் செய்யும்.. ஏன்.. உங்க அப்பாவை உங்களுக்குப் பிடிக்காதா..?" ஊர்மிளா மடக்கினாள்..
நரேந்திரன் பதில் சொல்லவில்லை.. அவன் மனதில் அவனுடைய அப்பாவின் நினைவு வந்தது.. செழியனை அவனுக்குப் பிடிக்குமா என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.. பிடிக்கும் என்ற பதில் அவன் மனதில் வரவேயில்லை..
சோமசுந்தரம் வந்து விட்டார்.. நரேந்திரன் வாங்கிய புத்தகங்களின் தலைப்புகளில் அவர் முகம் மலர்ந்தது..
அத்தனையும் பொதுவுடைமைக் கொள்கைகளை போதிப்பவை.. சிகப்புச் சித்தாந்தத்தைப் பற்றி அவர் பேச.. நரேந்திரன் அவருக்கு இணையாக பல கருத்துக்களைக் கூற.. அவர்களுக்குள் ஓர் நட்பு உருவானது..
"அடிக்கடி கடைக்கு வந்துட்டுப் போங்க.." என்று அவரை வழியனுப்பி வைத்த சோமசுந்தரத்துக்கு
மட்டும் அவன் அவர் வெறுக்கும் முதலாளித்துவத்தில் முதன்மையானவன் என்று தெரிந்திருந்தால் அந்த வார்த்தைகளை சொல்லியிருப்பாரா..?





Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -29
அழகான ராட்சசியே -29
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye29.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye29.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy