அழகான ராட்சசியே -28

28 இந்த யுகத்தின் அழகையெல்லாம் குத்தகைக்கு எடுத்திருக்கும் அழகான ராட்சசி நீ.... அவள் அதீத அழகோடு இருந்தாள்.. குத்து விளக்கின் ஒ...


28
இந்த யுகத்தின் அழகையெல்லாம்
குத்தகைக்கு எடுத்திருக்கும்
அழகான ராட்சசி நீ....

அவள் அதீத அழகோடு இருந்தாள்.. குத்து விளக்கின் ஒளிச்சுடர்போல பிரகாசித்த அந்தப் பெண்ணின் அழகில் நரேந்திரன் மயங்கிப் போனான்.. அதுபோன்ற அழகுடன் அவன் வேறு எந்தப் பெண்ணையும் பார்த்ததில்லையென்று அவன் மனம் ஜொள்ளியது..
"இவளுக்கு நீங்க ரெக்கமென்டேசனா..?"
அந்தப் பெண் வினவியதில் பேச்சை நீள வைக்க அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது..
அவன் நரேந்திரன்.. ஜெகஜ்ஜால சித்தன்.. சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் அதை உருவாக்கிக் கொள்பவன்.. இப்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுத்து விடுவானா..?
அவன் கப்பென்று பிடித்துக் கொண்டு பேச்சை வளர்த்தான்..
"பாவம் பவிக்குட்டி..! சின்னக் குழந்தை..! பாருங்க.. இது கண்ணு ரெண்டிலயும் மான்குட்டி போல பயம் மின்னுது.. ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன்.. பவிக் குட்டிக்கு நீங்க அக்கா.. நான் உங்களுக்கு அங்கிளா..? என்னங்க அநியாயம் இது.. என்னைப் பார்த்தா உங்களுக்கு அங்கிள் போலவா தோணுது..?"
நரேந்திரனின் கேள்வியில் அவனை மீண்டும் பார்த்த அந்தப் பெண்ணின் கண்களில் ஏதோ வந்து போனது.. வழக்கமான கோட்.. சூட்டைத் தவிர்த்து அன்று நரேந்திரன் ஜீன்ஸ் பேண்ட்டும் கார்கோ சர்ட்டுமாக இருந்தான்.. கூலிங்கிளாஸ் வேறு.. ஆண்மை ததும்பிய அவன் முகத்தில்.. நெற்றியின் மீது படிந்து விழுந்த சிகையில் அவனது முகத்தின் கவர்ச்சி அதிகரிப்பதை உணர்ந்தவள் பார்வையை விலக்கிக் கொண்டாள்..
"நான் பவிக்குத்தான் அங்கிள்ன்னு சொன்னேன்.. எனக்கு அங்கிள்ன்னு சொல்லலை.." அவள் முணுமுணுத்தாள்..
"அப்பச்சரி.. ஏன் பவிக்குட்டி.. இந்த அக்கா உன்மேல ஏன் இவ்வளவு கோபமா இருக்காங்க..?"
அவன் வேண்டுமென்றே 'அக்கா..' என்று குறும்புடன் அழுத்திச் சொன்னதில்.. அவள் முகத்தில் சினம் துளிர்த்தது..
'இவனுக்கு நான் அக்காவா..? நினைப்புத்தான்..'
அவள் பல்லைக் கடித்தபடி பவித்ராவைப் பார்த்தாள்..
"இவர் மட்டும் என்னை அக்கான்னு சொல்லலாமா பவி..?"
"ஹலோ.. யாருங்க உங்களை அக்கான்னு சொன்னது..? நான் பவியோட அக்கான்னுல்ல சொன்னேன்.. இல்ல பவி..?"
அவன் குழந்தையைக் கூட்டுக்குச் சேர்த்துக் கொள்ள.. அதுவும் வெகு இலகுவாக அவனருகில் வந்து விரல் கோர்த்து கூட்டணி போட்டுக் கொண்டது..
"யெஸ் அங்கிள்.."
"அக்காவுக்குத்தான் அது புரியலை.. இல்ல பவி.."
"யெஸ் அங்கிள்.."
"ஆமாம்.. அக்காவுக்குன்னு பெயர் இருக்குமே.. அது என்னவாம் பவிக்குட்டி.."
இயல்பாக அவன் கேட்க.. அதைவிட படு இயல்பாக பதில் சொல்லி விட்டது அந்த பவிக்குட்டி..!
"ஊர்மிளாக்கா அங்கிள்.."
"வெரிகுட்.. ஊர்மிளா..! அழகான பெயர்..! உங்க அக்காவைப் போலவே.."
அவன் ரசித்துச் சொன்ன விதத்தில் ஈர்க்கப்பட்ட ஊர்மிளாவின் முகம் சிவந்து போனது.. அவள் உதட்டைக் கடித்தபடி..
"வா பவி.." என்றாள்..
"என் பெயர் நரேந்திரன்.." என்றான் அவன்..
"நான் கேட்டேனா..?"
அவள் கோபப்பட முயன்று தோற்றாள்.. அவனுடைய பெயரை அவன் சொல்லியதில் அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டானதை மின்னல் வெட்டிய அவள் கண்கள் காட்டிக் கொடுத்திருந்தனவே..
"ஏன் கேட்கலை..? நான் உங்க பெயரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேனா இல்லையா..?" குறும்புடன் அவன் கேட்டான்..
"முன்னே பின்னே தெரியாதவங்ககிட்ட பெயர் சொல்லி.. பெயர் கேட்க முடியாது.." அவளும் நறுக்குத் தறித்தாற்போல பதில் கொடுத்தாள்..
"முன்னே.. பின்னே தெரியாதவனா..? ஏன் பவி.. அப்படியா..? நான் யாரோவா..?" அவன் குழந்தையிடம் கேட்க.. அது..
"இல்லை.." என்று அறிவித்தது.. போதாக்குறைக்கு..
"நீங்க அங்கிள்.." என்று வேறு உறவு கொண்டாடியது..
"கேட்டுக்கிட்டிங்களா..?"
குறும்பு கூத்தாடும் முகத்துடன் அவளிடம் அவன் கேட்டான்..
"மோதி விழுந்த உங்களுக்கு என் பெயரைக் கேட்கனும்னு தோணலை.. அமைதியா நின்ன குழந்தை அங்கிள்ன்னு உறவு கொண்டாடுது.. ம்ஹீம்.. நல்லதுக்கே காலமில்லை.."
"போதும்.. ரொம்பவும்தான் குழந்தையை கொண்டாட வேணாம்.. இவ ஓடினா.. கீழே விழுந்திருவாளோன்னு துரத்திப் பிடிக்கப் போய்.."
அவள் முடிக்க முடியாமல் பாதிப் பேச்சிலேயே முகம் சிவக்க நிறுத்திக் கொண்டாள்.. நரேந்திரன் உதட்டைச் சுழித்து உல்லாசமாக சிரித்தபடி அவள் விட்ட வாக்கியத்தை பூர்த்தி செய்தான்..
"நீங்க என்மேல மோதி கீழே விழப் போனிங்க.. ஆம் ஐ கரெக்ட்..?"
ஆமாம்.. நீ சொல்வது சரியென்று சொல்ல முடியாமல் அவள் பவித்ராவை முறைத்தாள்..
"குழந்தையை ஏங்க முறைக்கறிங்க..? அது என்ன நீங்க என்மேல மோதி கையில சாயனும்னு வேண்டுதலா வைத்திருந்துச்சு..?"
"அது மட்டும்தாங்க குறை.. மத்தபடி இவ செஞ்ச வேலைக்கு.."
"இவ கைக்கு தங்க வளையல் வாங்கிப் போட்டு விடனும்.."
"அதை நீங்க செய்வீங்க.."
"நீங்க என்ன செய்வீங்க..?"
"நாலு மொத்து மொத்துவேன்.."
"ஆளைப் பார்த்தா கொடி போல இருக்கீங்க.. பேச்சைப் பார்த்தா டெர்ரர்தனமா இருக்கு.. யாருங்க நீங்க..?"
"ஊர்மிளா.."
"அப்பாடி.. இப்பவாவது உங்க வாயாலே உங்க பெயரைச் சொல்லனும்னு உங்களுக்குத் தோணுச்சே.."
அவன் பார்வையில் சிறகடிக்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள் ஊர்மிளா..
'இவன் யாரோ.. எவரோ..'
பதில் சொல்லாமல் பவித்ராவின் கையைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டவள்.. நகர்ந்து போய் சற்றுத் தொலைவிலிருந்த கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்டாள்.. பவித்ராவைப் பார்த்து ஒற்றை விரலை உயர்த்தி அவள் கண்டித்துக் கொண்டிருப்பதை வெகு சுவராஸ்யத்துடன் வேடிக்கை பார்த்தபடி அவர்களுக்கு அருகே போன நரேந்திரன் பிரகாரத்தில் அமர்ந்தபடி பவித்ராவை பார்த்தான்.. குழந்தையின் விழிகள் மின்னின.. அதில் திரும்பிப் பார்த்த ஊர்மிளாவின் விழிகளும் மின்னின..
"இங்கேயும் வந்துட்டிங்களா..?" என்றாள்..
"குழந்தைக்கு சரியான மண்டகப்படி போல.. அதான் அதுகிட்ட விசாரிக்கலாம்ன்னு வந்தேன்.." என்றான் அவன்..
"இவர் பெரிய ஜ.ஜி.. விசாரிக்க வந்துட்டார்.. வா.. பவி போகலாம்.."
கோபம் போல பேசியபடி குழந்தையின் கைவிரல்களைப் பிடித்தபடி படியிறங்க ஆரம்பத்தவளைப் பின்தொடர்ந்தான் நரேந்திரன்..
அழகான பட்டுச் சேலையில் இருந்தவளின் நீண்ட பின்னல் அவள் அசையும் போதெல்லாம் அசைந்து ஆடியதில் அவனது மனமும் சேர்ந்து ஆடியது.. உலகத்தையே வலம் வந்து பிஸினெஸ் செய்து கொண்டிருந்தவனின் மனம் அந்தக் காவேரிக் கரையில் பிறந்து வளர்ந்த அழகுப் பெண்ணிடம் நிலை கொண்டது..
நரேந்திரன் படியிறங்கிய போது.. அவள் ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தாள்.. காரில் ஏறிய நரேந்திரன்.. அவள் போன ஆட்டோவைப் பின் தொடரச் சொன்னான்.. அவன் காரில் அவளைப் பின் தொடர்வதை அறியாத ஊர்மிளாவின் விழிகள் படிகளின் மீது அவன் இறங்கிக் கொண்டிருக்கிறானா என்று தேடி ஏமாந்தன.. அதைப் பார்த்தபடி காரில் அவளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த நரேந்திரனின் மனதில் சாரல் அடித்தது..
ஊர்மிளா போன ஆட்டோ.. ஒரு தெருவின் முனையில் நின்றது.. சந்தடி நிறைந்த ரோட்டின் பக்கமாக திரும்பியிருந்த புத்தகக் கடையின் வாசலில் அவள் நின்றாள்.. கடைக்குள் இருந்தவரிடம் பேசினாள்.. பின்பு.. பக்கவாட்டிலிருந்த தெருவில் நுழைந்து.. கடையை ஒட்டியிருந்த கதவைத் திறந்து வீட்டுக்குள் போய் விட்டாள்..
"கார்னர் பிளாட்டுன்னா இந்த வசதி இருக்கும்ங்கய்யா.. இந்தப் பக்கம் சந்தடியான ரோட்டுப் பக்கமா கடையைக் கட்டி விட்டுக்கலாம்.. அந்தப் பக்கம் சந்தடி இல்லாத தெருப்பக்கமா வீட்டு வாசலை விட்டுக்கலாம்.. ஐடியாப் பண்ணிக்கட்டியிருக்காங்க.." என்றான் டிரைவர்..
புன்னகையுடன் தலையை அசைத்த நரேந்திரன் காரை மண்டபத்துக்கு விடச் சொன்னான்.. அவன் போன போது ரிசப்சன் தொடங்கியிருந்தது.. மேடையில் மாப்பிள்ளையாக கோட்.. சூட்டில் நின்றிருந்த தினேஷ் நரேந்திரனைக் கண்டதும் மேடையை விட்டு இறங்கி வந்து விட்டான்.. மணமகனே முக்கியத்துவம் கொடுத்து வரவேற்ற நரேந்திரனை திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.. அவர்கள் வியாபார உலகை அறியாத நடுத்தர வர்க்க மக்கள்..
"மாப்பிள்ளையோட பிரண்டாம்.. கூடப் படிச்சவராம்.."
ஆங்காங்கே கிசுகிசுக்கப்பட.. மணமகனின் தோழன் என்ற அடையாளத்தை மட்டும் சுமந்து கொண்டு.. வேறு எந்த அடையாளங்களும் இல்லாதவனாக முன் வரிசையில் உட்கார்ந்தான் நரேந்திரன்.. தினேஷ் மேடைக்குப் போனான்.. அவர்களுடன் படித்த நண்பர்களில் சிலர் வந்து சேர்ந்தார்கள்.. அவர்கள் நரேந்திரனைக் கண்டதும் ஆவலுடன் பேசினார்கள்.. தினேஷின் திருமணத்திற்கு அவன் வருகை தந்திருந்ததில் வியந்தார்கள்..
"ஹி இஸ் அவர் பிரண்ட்.." இலகுவாக சொன்னான் நரேந்திரன்..
நட்பு என்பதுதான் எப்படிப்பட்ட இணைக்கும் சங்கிலியாக இருக்கிறது என்பதில் அந்த நண்பர்களுக்கு நெகிழ்வு ஏற்பட்டது.. நண்பர்களுடன் பேசியபடியே மேடையைப் பார்த்த நரேந்திரனின் கண்களில் மின்னல் உற்பத்தியானது..
அங்கே மணமக்களுக்கு பரிசைக் கொடுத்து லேசாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா..
சில நிமிடங்களுக்கு முன்புதான் அவன் அவளை உச்சிப் பிள்ளையார் கோவிலில் சந்தித்தான்.. அடுத்த சில நிமிடங்களில் அவள் அவன் கலந்து கொண்ட திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வந்திருக்கிறாள் என்றால் அதை அவன் என்னவென்று சொல்லுவான்..?
ஏதோ ஒரு பந்தம் அவனையும் அவளையும் இணைத்துக் கொண்டிருப்பதைப் போல அவன் உணர்ந்தது அந்த நொடியில்தான்.. அதே நொடியில் அவனைப் பார்த்த அவள் கண்களிலும் மின்னல் வந்து போனது.. அவன் உணர்ந்த அதே உணர்வை அவளும் உணர்ந்தாளா என்று அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.. அந்த இடத்தில் அவளைச் சந்திக்க நேர்ந்திருக்கா விட்டாலும்.. அவளுடைய முகவரியை அறிந்து வைத்திருந்த அவன் ஏதாவது ஒரு விதத்தில் மீண்டும் ஒரு சந்திப்பை உருவாக்கியிருப்பான்தான்.. அப்படி அவன் உருவாக்க வேண்டிய அவசியமில்லாமல் தானாக அந்தச் சந்திப்பு உருவானதை அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை..
நரேந்திரன் அமர்ந்திருந்த முன் வரிசைக்கு அடுத்த வரிசையில் அவளும்.. அவளுடைய சிநேகிதிகளும் உட்கார்ந்தார்கள்.. நரேந்திரன் இயல்பாக நகர்த்துவதைப் போல அவனுடைய சேரை லேசாக திருப்பி நகர்த்திக் கொண்டான்.. ஒருபக்கமாக சாய்ந்து உட்கார்ந்ததில் அவனுடைய நேர் பார்வையில் ஊர்மிளா வந்தாள்.. உதட்டைச் சுழித்து அவள் காட்டிய ரகசிய ஜாடையில் அவன் செய்த தில்லாலங்கடித்தனத்தை அவள் கண்டு கொண்டதை உணர்த்தினாள்.. அதில் அவன் தேன் குடித்த சிங்கமானான்..
'எங்கே இந்தப் பக்கம்..?'
அவனது விழிகள் கித்தாய்ப்பாக வினவின..
'அத நான் கேக்கனும்.. நீங்க எங்கே இந்தப் பக்கம்..?'
அவளது உதட்டுச்சுழிப்பு அவனை கேலி பேசி வம்புக்கு இழுத்து கேள்வி கேட்டு வைத்தது..
சிங்கத்துக்கு முன்னால் மீண்டும் தேனருவி கொட்டியது.. நரேந்திரன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்து விட.. அவள் 'மணமேடை அந்தப் பக்கம்..' என்று விழிகளால் ஜாடை காட்டினாள்.. அதில் நரேந்திரனின் உற்சாகம் அதிகமானது.. அவன் முன்னிலும் அதிகமாக அவளைப் பிய்த்து தின்று விடுவதைப் போல பார்க்க ஆரம்பித்து விட்டான்..
அவன் பார்வையில் அவள் முகம் சிவந்து போனாள்.. தோழிகளிடம் பேசுவதைப் போல பார்வையைத் திருப்பிக் கொண்டவள்.. அவன் இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று அறிய விரும்பிய குறுகுறுப்பில் ஓரக் கண்ணால் அவனை கள்ளப்பார்வை பார்த்தாள்..
நரேந்திரன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந் தான்.. அவளது கள்ளப் பார்வையில் அவன் முகத்தில் வெளிச்சம் வந்தது.. ஊர்மிளா அவன் கண்டு கொண்டானே என்று வெட்கிப் போனாள்..
"நேற்றுவரை நீ யாரோ..
                நான் யாரோ..
     இன்று முதல் நீ வேறோ..
                நான் வேறோ..."
மெல்லிசைக் கச்சேரியில் ஒலித்த பாடலில் ஊர்மிளாவின் பார்வை திரும்பி அவளையே பார்த்துக் கொண்டிருநத நரேந்திரனின் பார்வையை சந்தித்தது.. இருவரின் பார்வைகளும் பிண்ணிப் பிணைந்தன... நரேந்திரனின் பார்வை ஊர்மிளாவின் பார்வையில் இணைந்து பிணைந்ததில் ஊர்மிளாவுக்குள் இனம் புரியாத இதமான இம்சை எழுந்தது..
அதுவரை அது போன்றதொரு உணர்வை அவள் உணர்ந்ததில்லை.. அதை உணர்த்தியவனின் கம்பீரத்தில் அவள் ஈர்க்கப் பட்டாள்.. அந்த பின் மாலை நேரத்தின் மயக்கும் சூழ்நிலையில் ஒரு ஆடவனின் ஆர்வப் பார்வையால் ஈர்க்கப்பட்ட அவளின் கன்னி மனது படபடத்தது..
"அங்கே மாலை மயக்கம்..
                யாருக்காக..?
     இங்கே மயங்கும் இரண்டு
                பேருக்காக..
     இது நாளை வரும்
                என்று காத்திருந்தால்..
     ஒரு நாளல்லவோ..
                வீணாகும்..?"
மெல்லிசையின் பாடல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது..







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,8,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -28
அழகான ராட்சசியே -28
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye28.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye28.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy