அழகான ராட்சசியே -41

41 உன் சிற்றிடையில் - எனை சிறை பிடித்த அழகான ராட்சசி நீ.... அவர்களுக்குத் தெரியாது.. பெங்களூருக்கு வந்து திருமண மண்டபத்தில் ந...


41
உன் சிற்றிடையில் - எனை
சிறை பிடித்த
அழகான ராட்சசி நீ....


அவர்களுக்குத் தெரியாது.. பெங்களூருக்கு வந்து திருமண மண்டபத்தில் நுழையும் வரை அவர்களுக்குத் தெரியாது.. நரேந்திரன் ஒரு கோடிஸ்வரன் என்பது..
அவன் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் முதலாளியாக இருப்பானென்று அவர்களுக்குத் தெரியாது.. இவ்வளவு பெரிய.. பிரம்மாண்டமான மாளிகை போன்ற வீட்டிற்குச் சொந்தக்காரனாக இருப்பானென்று அவர்களுக்குத் தெரியாது..
இது அத்தனைக்கும் மேலாக.. அகல்யா போன்ற ஒரு சிற்றன்னையின் மகனாகவும் அவன் இருப்பானென்று அவர்களுக்குத் தெரியாது..
இவை எவையும் இல்லையென்று சொல்லித் தன்னை அடையாளமில்லாதவனாகக் காட்டிக் கொண்டு தான் அவன் ஊர்மிளாவைக் காதலித்தான்.. எதுவும் இல்லாத அநாதையென்று சொல்லித்தான் அவளை பெண் கேட்டு சோமசுந்தரத்திடம் வந்து நின்றான்..
இப்படிப்பட்ட மாப்பிள்ளையை எந்தவித சொல்லிக் காட்டலும் இன்றி காருண்யத்துடன் ஏற்றுக் கொண்ட பரந்த மனது அவர்களுடையது..
அப்படிப்பட்ட மனம் கொண்டவர்களைத்தான் அகல்யா உரசிப் பார்க்கிறாள்.. பணத்துக்கு ஆசைப்பட்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு.. அதையே சாக்காக வைத்து ஒட்டிக் கொள்ள முனைகிறார்கள் என்று ஜாடை பேசுகிறாள்..
"மனசெல்லாம் வலிக்குதுங்க.." பூங்குழலி விம்மினாள்..
"ஏய்ய்.. என்னடி இது..?"
"இல்லைங்க.. எனக்கு மனசே தாங்கலை.. இந்தம்மா பேசின பேச்சுக்கு நான் அப்பவே பஸ்ஸில் ஏறிப் போயிருப்பேன்.. ஊர்மிளாவை தனியே விட்டுட்டு எப்படிப் போறதுன்னுதான் பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுமையா இந்த வீட்டு வாசப்படியை மிதிச்சிருக்கேன்.. பொண்ணு எந்த வீட்டில வாழ்கிறாங்கிற அட்ரஸ்கூடத் தெரியாம விட்டு விட்டுப் போக முடியுமா..?"
"இந்தம்மா இவங்க மகளை அப்படித்தான் விட்டு விட்டு வருவாங்க போல இருக்கு.. இவங்களும் ஒரு பொண்ணைப் பெத்து வைச்சிருக்காங்க.. அந்த நினைப்பில்லாம பேசறாங்க.."
"வேணாங்க.. மனது கஷ்டத்திலே சாபம் கொடுத்துராதீங்க.. பாவம் அந்த அர்ச்சனாப் பொண்ணு.. இந்தம்மா வயித்திலே தப்பிப் பிறந்திருக்கு.. நம்ம பொண்ணுக்கு வாய்ச்சிருக்கிற மாமியாரைப் போல அந்தப் பொண்ணுக்கும் வாய்ச்சிர வேணாம்.. நல்ல வார்த்தையா சொல்லுங்க.."
"இவங்க சொந்த மாமியாரில்லைடி.. சின்ன மாமியார்.. நம்ம ஊர்மிளாவோட புருசனைப் பெத்தவங்களா இருந்திருந்தா.. கொஞ்சமாவது சம்பந்தின்னு நினைச்சுப் பார்த்திருப்பாங்கடி.. இங்கே அப்படியில்லையே.. எதுடா சாக்குன்னுல்ல தேடறாங்க.."
"ஊர்மிகிட்ட நான் எதையும் சொல்லலை.. நீங்களும் எதையும் சொல்ல வேணாம்.."
"ஆகட்டும்.. நீ மட்டும் தனியா அந்தம்மாகிட்ட மாட்டிராதே.. அவங்க பேசறதைத் தாங்கிக்க உன்னால முடியாது.."
"ம்ம்ம்.. நான் வருவேன்னு அந்தம்மா கொஞ்ச நேரம் உலாத்தி பார்த்தாங்க.. நான் ஊர்மிளாவை விட்டு நகரலை.. அதுக்கு மேலே உலாத்த முடியாம ரூமுக்குள்ள போயிட்டாங்க.. அதுக்கப்புறம்தான் நான் ஹால் பக்கமே வந்தேன்.."
"அவங்களைத்தான் அப்பவே அர்ச்சனா வந்து இழுத்துக்கிட்டு போயிட்டாளே.."
"அதுக்கப்புறமா.. நீங்க இங்கே வந்த பின்னாலே அவங்க ரூமை விட்டு வெளியே வந்து உங்களைத் தேடினாங்களே.. அது உங்களுக்குத் தெரியாதா..?"
"தெரியாதே.. தெரிஞ்சிருந்தா ரெஸ்ட் எடுக்காம அந்தம்மா கூட ஹோதாவில் இறங்கியிருப்பேனே.."
"நமக்கு எதுக்குங்க அதெல்லாம்..? நம்ம பொண்ணோட ரிசப்சனுக்கு நம்மள இருக்க விடக் கூடாதுன்னு திட்டம் போட்டு பேசினவங்க அந்தம்மா.. இப்படியெல்லாம் கூட மனுசங்க இருப்பாங்களா..? இவங்க கூடல்லாம் நாம மல்லுக்கு நிக்கனுமா..? நீங்க கிளம்புங்க.. ரிசப்சனுக்கு போக நேரமாச்சு.."
சோமசுந்தரம் யோசித்தார்.. அவர் என்ன யோசிக்கிறார் என்பதை பூங்குழலியால் புரிந்து கொள்ள முடிந்தது.. அதே யோசனைதான் அவளுக்குள்ளும் ஓடியது என்றாலும்.. பெற்றமனம்.. பெண்ணைத் தனியே விட மறுத்தது..
"கட்டாயம் நாம அங்கே போகத்தான் வேணுமா குழலி..."
"ஆமாம்..."
கண்ணீரை அடக்கிக் கொண்டு சொன்னாள் பூங்குழலி.. நிமிர்ந்து நின்று பழகியவளுக்கு அந்த நிலையில் மனம் வலிக்கத்தான் செய்தது.. அந்த வலியை மறைத்துக் கொண்டு உறுதியாக அவள் பேசினாள்..
"இப்ப நாம போகலைன்னா.. அந்தம்மா நினச்சதை நடத்திட்டதா ஆகிரும்.. நீங்கதானே சொன்னீங்க.. அந்தம்மா இதை ஒரு டெக்னிக்கா வைச்சிருக்காங்கன்னு.. அதை கண்டு பிடிச்சு சொன்ன நீங்களே இப்படிக் கேட்கலாமா..?"
சோமசுந்தரம் சொன்ன வார்த்தைகளை வைத்தே அவரை மடக்கி விட்டாள் பூங்குழலி.. அவர் உடை மாற்றி தயாரானார்.. அவர்கள் ஹாலுக்கு வந்த போது.. ஊர்மிளா மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.. அவள் பின்னால் அர்ச்சனாவும் மற்ற உறவுப் பெண்களும் வந்ததில்.. என்னவோ.. அந்தக் காலத்து மகாராணி ஒருத்தி.. உப்பரிகையிலிருந்து இறங்கி வருவதைப் போல அந்தக்காட்சி இருந்தது.. ஊர்மிளாவின் ஒப்பனையும்.. வைர நகைகளும்... அவளின் தோற்றத்தையே மாற்றியிருந்தன..
"என்மக மகாராணியைப் போல இருக்கா.." பூங்குழலி பிரமிப்புடன் சொன்னாள்..
"ம்ம்ம்.. ஆனா.. மகாராணிகளின் வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகம் வரும் பூங்குழலி.. எளிமையான வாழ்க்கையில் கிடைக்கும் நிம்மதி அரண்மனை வாழ்வில் கிடைத்து விடாது.. இங்கே சுவர்களுக்கும் காதிருக்கும்.. சுதந்திரத்துக்கு இங்கே இடமில்லை.. முதுகில் எப்போதும் கத்திகளின் நுனிமுனைகள் நெருடிக் கொண்டிருக்கும்.. சிரித்துக் கொண்டே பழகுபவர்கள் முதுகில் குத்துவதையும் எதிர் கொள்ள வேண்டி வரும்.. சீசரின் கதை தெரியாதா..? அவன் கேட்ட 'நீயுமா புருட்டஸ்..?' என்ற கேள்வி எழுப்பும் மன அதிர்வு இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது குழலி.."
சோமசுந்தரம்.. மேடையில் பேசுவதைப் போல ஏற்ற.. இறக்கத்துடன்.. சொல் நயத்துடன் பேசினாலும் அதை மனதிலிருந்து பேசினார்.. அதிகமான வாசிப்பின் அடையாளமாக அவரிடம் இதுபோன்ற சொற்கள் நயத்துடன் ஒன்று சேர்ந்து அருவிபோல அடிக்கடி கொட்டும்..
எப்போதும் கணவரின் இதுபோன்ற பேச்சுக்களில் பெருமிதப்படும் பூங்குழலி.. அன்று மனவேதனை கொண்டாள்..
உண்மை என்பது எப்போதுமே கசப்பையும்.. வேதனையையும் தருவதாகத்தானே இருக்கிறது..?
"ஏன் இப்படிப் பேசறிங்க..?"
"உண்மையைச் சொன்னேண்டி.."
"அதைத் தூக்கி உடப்பில போடுங்க.. மனசுக்கு கொஞ்சமாவது நிம்மதி வேணாமா..?"
"அப்ப.. உண்மைங்கிறது நிம்மதியை அழிக்கறதுன்னு சொல்ற..?"
"ஒன்னையும் சொல்லலை.. ஊர்மிளா வந்துட்டா..  உங்களுக்குப் புண்ணியமாப் போகும்... பேசாம இருங்களேன்.."
தாய்.. தந்தையின் அருகில் வந்த ஊர்மிளா அவர்களை வணங்கி எழுந்தாள்..
"நல்லா இரும்மா.." நெகிழ்வுடன் மகளை அணைத்துக் கொண்டாள் பூங்குழலி..
"தைரியமா இரு..." அவர் பாணியில் வாழ்த்துச் சொன்னார் சோமசுந்தரம்..
"உங்க பொண்ணாச்சே.. தைரியத்துக்கு என்ன குறைச்சல் இருக்கப் போகுது..? உங்க திமிரையும்.. தெனாவெட்டையும்.. சீதனமா கொடுத்திருப்பீங்கள்ல.. எங்க லெவலுக்கு சீதனமா தர வேற என்ன உங்ககிட்ட இருக்கப் போகுது..?" கேள்வி கேட்டபடி அகல்யா அங்கே வந்தாள்..
ஊர்மிளாவின் முகம் மாறியதில் அவள் கைவிரல்களைப் பிடித்து அழுத்தி.. அமைதிப் படுத்தும் எச்சரிக்கையை உணர்த்தினாள் பூங்குழலி.. இருந்தும் ஊர்மிளாவின் கைவிரல்கள் நடுங்கத்தான் செய்தன.. சுயமரியாதைக்கு பங்கம் வருவதை சகித்துக் கொள்ள முடியாமல் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள போராடுவதை பூங்குழலியால் புரிந்து கொள்ள முடிந்தது..
'ஊர்மிளா..' அவள் மனம் தவித்தது..
இதுபோன்ற மாளிகையில், மகாராணியைப் போல அவள் மகள் வாழவேண்டும் என்று அவள் ஆசைப் பட்டதில்லையே.. எளிமையான வாழ்வாக இருந்தாலும்.. மதிப்பு.. மரியாதையோடு, நிம்மதியாக மகள் வாழ வேண்டுமென்றுதானே அவள் ஆசைப்பட்டாள்..?
"என்ன.. இங்கே டிஸ்கசன் பலமாயிருக்கு.."
ஊர்மிளாவைப் பார்த்தபடியே பொதுவாக கேட்டபடி நரேந்திரன் அங்கே வந்தான்.. அழகு தேவதையாக நின்ற ஊர்மிளாவை விழுங்கி விடுவதைப் போல அவன் பார்த்து வைத்ததில் ஊர்மிளாவின் மன உணர்வுகள் தடம் மாறின.. அவள் வெட்கத்துடன் முகம் சிவந்தாள்.. மகளின் கைவிரல்களில் நடுக்கம் குறைந்து விட்டதை உணர்ந்த பூங்குழலிக்கு நிம்மதி ஏற்பட்டது..
'மாப்பிள்ளை ஊர்மிளாவை பார்த்துக்குவார்..'
அந்த மாப்பிள்ளை கேட்ட கேள்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் ஊர்மிளா அவனை விட்டுப் பிரிந்து பின்னாளில் தாய் தந்தையைத் தேடி ஓடி வந்தாள்..
அது நிகழும் என்பதை அறியாதவளாக பூங்குழலி தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டாள்..
'ஊர்மிமேலே அவருக்கு பிரியம் அதிகம்.. ஒருநாளும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டார்.. கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்குவார்..'
மந்திரத்தை உருப் போட்டதைப் போல அவள் மனம் திரும்பத்திரும்ப இதையே உருப்போட்டது.. அதை ஆட்டிப் பார்ப்பதைப் போல அகல்யாவின் குரல் வெளிப் பட்டது..
"அதுவா நரேன்.. இங்கே ஊர்மிளா அவளோட அப்பாம்மாவைக் கண்டதும் காலில் விழுந்து எழுந்திருச்சா.. அதைப்போல நீயும் என்னைக் கண்டதும் காலில் விழுவேன்னு அருணும்.. அர்ச்சனாவும்.. ஊர்மிளாவோட அப்பாம்மாகிட்ட பெட் கட்டிக்கிட்டு இருக்காங்கப்பா.."
'என்னது..?!!..'
அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. அர்ச்சனாவுக்கும்.. அருண்குமாருக்கும்.. அகல்யாவின் அதுபோன்ற அதிர்வெடிகள் பழக்கப்பட்டுப் போயிருக்க வேண்டும்.. அவர்கள் இருவரும் ஒரு சின்னச் சிரிப்புப் பார்வையோடு நிறுத்திக் கொண்டார்கள்.. சோமசுந்தரமும்.. பூங்குழலியும் அகல்யா அப்படியெல்லாம் பேசக்கூடும் என்பதை அறிந்து உணர்ந்திருந்தால் மனதின் வெறுப்பை முகத்தில் பிரதிபலிக்காமலிருக்கும் பிரயத்தனங்களை மேற்கொண்டபடி மௌனமாக இருந்தார்கள்..
ஊர்மிளாவால்தான் தாள முடியவில்லை.. அவள் மனம் அதிர்ந்தது.. பேசாத ஒரு பேச்சை பேசியதாக அகல்யா இயல்பாகக் கூறியதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.. அதிலும் அவள் பெற்ற பிள்ளைகள் பந்தயம் கட்டியதாக வேறு சொல்கிறாளே... அதை மறுத்துப் பேசாமல்.. அருணும்.. அர்ச்சனாவும் தங்களுக்குள் கேலிச்சிரிப்பை சிரித்துக் கொண்டிருக்கிறார்களே..
இல்லையென்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டாமா..? ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை..?
அகல்யாவின் பாதங்களை நரேந்திரன் பணிவதில் ஊர்மிளாவுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இருக்க வில்லை.. அதை நேரடியாகச் சொல்லியிருக்கலாமே..
பார்த்தாயா நரேந்திரா.. உன் மனைவி அவளைப் பெற்றவர்களிடம் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கினாள்.. அதைப்போல நீயும் உன்தாயான என் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டாமா..?
இப்படிக் கேட்டிருந்தால் அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது.. நியாயம் இருக்கிறது.. உரிமைக்குரல் இருக்கிறது.. அதை விட்டுவிட்டு.. அருணும்.. அர்ச்சனாவும்.. ஊர்மிளாவின் தாய் தந்தையிடம் பந்தயம் வைத்தார்கள் என்று பொய் சொல்வது ஒருவகையான சாகசம் அல்லவா..? அதில் நிர்பந்தம் ஒளிந்திருக்கிறதே..
மாமனார், மாமியாரிடம்.. தம்பியும், தங்கையும் பந்தயம் கட்டிவிட்டார்கள்.. அவர்கள் தோற்றுவிடக்கூடாது என்று அகல்யாவின் கால்களில் நரேந்திரன் விழுந்துதான் ஆகவேண்டும் என்ற சூழலை வெகு கெட்டிக்காரத்தனமாக அகல்யா உருவாக்கி விட்டாளே..
"இந்தம்மா பொய்யை தண்ணியைக் குடிக்கிறதைப் போல ரொம்பவும் இயல்பா பேசி வைக்கிறாங்கடி.." சோமசுந்தரம் முணுமுணுத்தார்..
ஊர்மிளாவின் அதிர்ந்த பார்வையில் எதைக் கண்டானோ.. நரேந்திரனின் முகத்தில் மெலிதான கோபம் வந்தது..
"ஏண்டா.. எதில்தான் பெட் கட்டறதுன்னு அளவு இருக்க வேண்டாமா..?" அருண்குமாரை அதட்டினான்..
"அண்ணா.. அது வந்து.." தாயைக் காட்டி கொடுக்க முடியாமல் தடுமாறினான் அருண்குமார்..
"உன்னையும் சொல்லனும்.. பெரியவங்ககிட்ட பெட் கட்டறோமேன்னு நினைப்பிருக்க வேணாமா..? இதைத்தான் நான் உனக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்தேனா..?" அர்ச்சனாவிடம் அவன் சீறியதில்..
"அண்ணா.." என்று கண்கலங்கி விட்டாள் அர்ச்சனா..
"இதுக்கான பனிஷ்மெண்ட் என்ன தெரியுமா..? நீங்க எதைச் சொல்லி பெட் கட்டினீங்களோ.. அதை நடக்காம செய்கிறதுதான் ..அப்பத்தான் இனிமே இதுபோல அசட்டுத்தனமா பெட் கட்டிக்கிட்டு இருக்க மாட்டிங்க.. நான் அம்மா காலில் விழப் போவதில்லை.. கட்டின பெட்டில தோத்தாத்தான் உங்க ரெண்டு பேருக்கும் புத்தி வரும்.."
நரேந்திரன் ஊர்மிளாவை ஓர் பார்வை பார்த்து விட்டு செல்போனை காதுக்கு கொடுத்தபடி வாசலுக்கு நகர்ந்து விட்டான்.. அவன் பார்வையில் ஏதோ ஒரு செய்தி ஒளிந்திருப்பதைப் போல ஊர்மிளாவுக்குத் தோன்றியது.. இவன் அவளறிந்த நரேந்திரனா..?
அவள் காதலித்த நரேந்திரனின் பின்னால் மர்மங்கள் இருந்ததில்லையே.. இன்று அவளுக்கத் தாலி கட்டியிருக்கும் நரேந்திரனின் பார்வையில் கூட மர்மம் பொதிந்திருக்கிறதே..
"உங்களால்தான் அம்மா.."
அர்ச்சனாவும், அருண்குமாரும் ஒரே குரலில் சீறியதில் அகல்யாவின் முகம் சிறுத்து விட்டது.. இதுபோன்ற திருப்பத்தை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.. எப்போதுமே நரேந்திரனிடம் இது போன்ற யுத்திகளை பயன்படுத்தியே அவள் நினைத்ததை சாதித்துக் கொள்வாள்... இன்றும் அதுபோல்தான் நடந்திருக்க வேண்டும்.. நரேந்திரன் ஊர்மிளாவின் முன்னாலும்.. அவளைப் பெற்றவர்களின் முன்னாலும் அகல்யாவின் கால்களில் விழுந்திருக்க வேண்டும்.. எப்படி அது மாறியது..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,9,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...!,92,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,27,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,9,எண்ணியிருந்தது ஈடேற,232,என்னவென்று நான் சொல்ல ?,1,ஏதோ ஒரு நதியில்...,23,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..!,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,8,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ?,1,யார் அந்த நிலவு ?,33,ராக்கெட்,1,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அழகான ராட்சசியே -41
அழகான ராட்சசியே -41
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s320/Alagana%2BRatchasi_1.jpg
https://1.bp.blogspot.com/-zS8-7mHlqlU/XaNMelrUcvI/AAAAAAAAAtQ/uOJyDiboP3o5NQL7jdOWI6vtuToVHA_XQCPcBGAYYCw/s72-c/Alagana%2BRatchasi_1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-41.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye-41.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy